அல்லாவும் அவன் அடிமைகளின் அடிமைகளும் 2

இஸ்லாம் அடிமை முறையை ஒழித்ததா? அடிமை முறையை ஒழித்துக் கட்டும் அவசியமோ தேவையோ முகம்மதுவுக்கு இருக்கவில்லை. மட்டுமல்லாது அடிமை முறையின் வரலாற்றுப் பார்வையோ, அது பின்வரும் காலங்களில் நீக்கப்பட்டு மாறுபாடடையும் என்றோ முகம்மது அறிந்திருக்கவில்லை. ஆனால் சில போதுகளில் தன்னால் போதிக்கப்படும் கட்டளைகளை மீறுபவர்களுக்கான தண்டனையாக, பரிகாரமாக அடிமையை விடுவிப்பது குறித்து பேசியிருக்கிறார். இந்த விடுவிப்பு என்பது அடிமை முறையை நீக்குவதோடு தொடர்புடையதா? முகம்மதோ அல்லது அவரால் இயம்பப்படும் அல்லாவோ அடிமை முறை மனித குலத்திற்கு எதிரானது அநீதியானது என்று எந்த இடத்திலும் கூறவில்லை. எனவே அடிமை முறை நீக்கப்பட வேண்டும் எனும் சிந்தனை அவருக்கு எழுந்திருக்க முடியாது. அடிமைகள் நடத்தப்பட வேண்டிய முறை குறித்து அவர் கூறியிருப்பவைகளும் தன்மை மீறி அவர்கள் கொடுமைப் படுத்தப்படுவதைக் கண்ட இரக்க உணர்ச்சியின் எதிரொலிப்பு தானேயன்றி வேறொன்றுமில்லை.

 

இதை இரண்டு விதங்களில் பார்க்கலாம். 1. அடிமைகள் விடுவிப்பு அவர்களின் விடுதலையாக முகம்மதால் கையாளப்பட்டதா? 2. ஒரு மனிதன் அடிமைகளை வைத்திருப்பதை முகம்மது எந்த அடிப்படையில் அணுகினார்?

 

அடிமைகள் விடுவிப்பு அவர்களின் விடுதலையாக முகம்மதால் கையாளப்பட்டதா?: கீழ் வரும் ஹதீஸைப் பாருங்கள்

 

அடிமையாக இருந்த பரீரா என்ற பெண்மணி விடுதலைப் பத்திரம் எழுதிக் கொள்வதற்காக என உதவியை நாடினார். நீ விரும்பினால் உனக்குறியதை நானே கொடுத்து விடுகிறேன், உரிமை எனக்கு வர வேண்டும் என்று கூறினேன். ஆனால் அப்பெண்ணின் எஜமானர்கள் என்னிடம் நீங்கள் விரும்பினால் பரீரா தர வேண்டியதை தந்து கொள்ளலாம், ஆனால் உரிமை எங்களுக்கு வேண்டும் என்று கூறினார்கள். இது பற்றி நபி அவர்களிடம் நான் கூறிய போது, நீ அவளை விலை கொடுத்து வாங்கி விடுதலை செய்து விடு. விடுதலை செய்தவருக்கே உரிமையுண்டு, என்று கூறிவிட்டு மேடை மீது ஏறி.. .. .. புஹாரி 456

 

முகம்மதின் பிரியத்துக்குறிய மனைவியாகிய ஆய்ஷா அறிவிக்கும் இந்த ஹதீஸில் வரும் உரிமை என்பது என்ன? எஜமானரிடமிருந்து விடுபட விரும்பும் பெண்ணாகிய பரீராவுக்கு அவரின் எஜமானர்கள் குறிப்பிட்ட தொகையை தந்து விட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறார்கள். அந்த தொகைக்காக ஆய்ஷாவின் உதவியை நாடுகிறார். இந்த உதவிக்கு முகம்மதின் மனைவி போடும் நிபந்தனை உரிமை தனக்கு வேண்டும் என்பது. அதாவது விடுதலை பெற்ற பெண் தன் உழைப்பிலிருந்து சேமிக்கும் பணத்துக்கு வாரிசாக தானே இருக்க வேண்டும் என்பது தான் அந்த உரிமை என்பது. இதை பரீராவின் எஜமானர்கள் மறுக்கவே, வழக்கு முகம்மதிடம் வருகிறது முகம்மது நாட்டாமையாக இருந்து கொடுக்கும் தீர்ப்பு தான் வாங்கியவருக்கே உரிமை என்பது. ஒரு பெண் உழைப்பதின் மூலம் ஈட்டும் பணம் விலை கொடுத்து வாங்கிய முகம்மதின் மனைவிக்கு வர வேண்டும். இது தான் முகம்மதின் அகராதியில் விடுதலை என்பதன் பொருள். அடிமைகளின் விடுதலை என்பது நடப்பு எஜமானரிடம் இருந்து வேறொரு எஜமானரை ஏற்படுத்திக் கொள்ளுதல் எனும் பொருளில் தான் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. இதை இன்னோரு ஹதீஸ் மிகத் தெளிவாக விளக்குகிறது.

 

.. .. .. விடுதலை செய்யப்பட்ட அடிமை ஒருவன் தன்னை விடுதலை செய்த எஜமானர்களான காப்பாளர்களின் அனுமதியின்றி பிறரை தன் காப்பாளராக ஆக்கினால் அவன் மீது அல்லாஹ்வின், வானவர்களின் மற்றும் மக்கள் அனைவரின் சாபம் ஏற்படும். அவன் செய்த கடமையான வணக்கம், உபரியான வணக்கம் எதுவுமே ஏற்றுக் கொள்ளப்படாது. புஹாரி 1870

 

முகம்மதிற்குப் பிறகு நான்காவது கலிபாவாக இருந்த முகம்மதின் மகள் பாத்திமாவின் கணவரான அலி அறிவிக்கும் ஹதீஸ் இது. தன்னுடைய காப்பாளரை மாற்றிக் கொள்ள யார் பணம் கொடுக்கிறாரோ அவரே புதிய காப்பாளர். அவர் அனுமதியின்றி எதுவும் செய்யக் கூடாது. என்றால் இது என்ன பொருளிலான விடுதலை? முகம்மது கூறும் இன்னொரு வகையான விடுதலையான பரிகார விடுதலையும் அடிமை முறை விடுதலையாக இல்லாமல் மதக்குற்றம் செய்த ஒருவனுக்கு ஏற்படுத்தப்படும் பொருளதார இழப்பு எனும் அடிப்படையிலேயே இருக்கிறது.

 

அடிமைகளை வைத்திருப்பதை முகம்மது எந்த அடிப்படையில் அணுகினார்? குரானில் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் என்றொரு தொடர் பல இடங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பெண் அடிமைகளைக் குறிக்கும் சொல் இது. திருமணம் ஆனவர்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் இவர்களை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொள்ளலாம் என இஸ்லாம் அனுமதிக்கிறது. இந்த அனுமதியை இன்னும் விரிவாக முகம்மது தன் சீடர்களுக்கு வழங்குகிறார்.

 

.. .. .. இறைத்தூதர் அவர்களே, எங்களுக்கு போர்க்கைதிகள் கிடைக்கிறார்கள். அவர்களை நல்ல விலைக்கு விற்க நாங்கள் விரும்புவதால், நாங்கள் அஸ்ல் செய்யலாமா? என்று கேட்டேன். அதற்கு நபி அவர்கள் அப்படியா நீங்கள் செய்கிறீர்கள்? அப்படி செய்யாமலிருப்பது உங்களுக்கு கடமையல்ல. ஏனெனில் உருவாக வேண்டும் என அல்லாஹ் விதித்துள்ள எந்த உயிரும் உருவாகாமல் இருப்பதில்லை. என்று கூறினார்கள். புஹாரி 2229

 

அஸ்ல் என்ற சொல்லுக்கு கலவியின் உச்சநிலையில் ஆணுக்கு வெளிப்படும் விந்தை பெண்ணுறுப்பில் செலுத்தாமல் வெளியில் வீணாக்குதல் என்பது பொருள். போரில் தோல்வியடைந்த குழுவினரின் சொந்தங்களான பெண்களை அடிமைகளாக வென்றவர்கள் பிடித்து வருகிறார்கள். அவர்களை போரில் கலந்து கொண்டவர்களுக்கு பங்கிட்டு வழங்குகிறார் தலைவர். அப்படி கிடைத்த அடிமைகளை வேண்டியவர்கள் வைத்துக் கொள்வார்கள்: வேண்டாதவர்கள் விற்று பொருளீட்டிக் கொள்வார்கள். அப்படி விற்பனை செய்வதற்கு முன் தங்களின் வெறியை தணித்துக் கொள்ள பயன்படுத்திக் கொள்கிறார்கள். வழமையான கலவியில் ஈடுபட்டு கருத்தரித்து விட்டால் போதிய விலை கிடைக்காது என்பதால் கருத்தரிக்காமல் இருப்பதற்காக இவ்வாறு செய்ய அனுமதி கேட்கிறார்கள். அதற்கு முகம்மது அனுமதி வழங்குகிறார், இது தான் இந்த ஹதீஸின் முழுமையான பொருள். அடிமை முறை தவறு எனும் எண்ணம் கொண்டிருக்கும் ஒருவரால் இப்படியான அனுமதியை வழங்க முடியுமா?

 

அடிமைகளின் விடுதலை குறித்து முகம்மது என்ன கருத்து கொண்டிருந்தார் என்பதை இன்னொரு ஹதீஸ் மிகத் தெளிவாக விளக்குகிறது.

 

நான் ஓர் அடிமைப் பெண்ணை விடுதலை செய்தேன். ஆனால், நபி அவர்களிடம் அதற்காக அனுமதி கேட்கவில்லை. என்னிடம் நபி அவர்கள் தங்குகின்ற முறை வந்தபோது, அல்லாஹ்வின் தூதரே! அடிமைப் பெண்ணை விடுதலை செய்துவிட்டேனே, அறிவீர்களா? என்று கேட்டேன். அதற்கு நபி அவர்கள், நீ விடுதலை செய்து விட்டாயா? என்று கேட்க, நான், ஆம், என்று கூறினேன். நபி அவர்கள், நீ உன் தாயின் சகோதரர்களுக்கு அவளைக் கொடுத்து விட்டிருந்தால் உனக்குப் பெரும் நற்பலன் கிடைத்திருக்கும் என்று கூறினார்கள். புஹாரி 2592

 

ஆதாவது முகம்மதின் மனைவியர்களில் ஒருவர் தன்னிடமுள்ள ஒரு அடிமையை விடுதலை செய்ததை (யாரிடம் விற்று ஈடாக எவ்வளவு பணம் வாங்கினார் என்ற விபரம் இல்லை) விட உன்னுடைய உறவினர்களுக்கு அடிமையாக கொடுத்திருக்கலாமே என்று ஆதங்கப் படுகிறார். அடிமைகள் விடுதலை குறித்து முகம்மது பேசுவதன் உள்ளடக்கம் என்ன என்பது தெரிகிறதா? இப்படிப்பட்டவர் அடிமைகளின் விடுதலைக்கு தொடக்கப் புள்ளியாக இருந்தார் என்று மதவாதிகள் கூசாமல் புழுகிக் கொண்டிருக்கும் போது நாம் நகைத்தால் மட்டும் போதுமா?

 

அடிமை முறை என்பது ஆண்டைகளின் உற்பத்திக் கருவி போன்றது. தங்களுக்கு உற்பத்தியை குவித்துத் தரும் கருவிகளின் மீது ஆண்டைகள் கரிசனம் கொள்வது இயல்பானது தான். ஆனால் அது எல்லைக்கு உட்பட்டது. இந்த அடிப்படையில் முகம்மது கூறியவைகளைத் தான் அடிமைத்தளையை நீக்குதல் என்று நீட்டி முழக்குகிறார்கள் மதவாதிகள். எடுத்துக்காட்டாக ஒன்றை பார்க்கலாம். புஹாரியில் 2552ம் ஹதீஸ் இப்படி கூறுகிறது,

 

உங்களில் எவரும் உன் ரப்புக்கு உணவு கொடு, உன் ரப்புக்கு ஒலுச் செய்ய உதவு, உன் ரப்புக்கு நீர் புகட்டு என்று கூற வேண்டாம். என் எஜமானன் என் உரிமையாளன் என்று கூறட்டும். என் அடிமை, என அடிமைப் பெண் என்று யாரும் கூற வேண்டாம் பணிப்பெண், என் பணியாள் என்றே கூறட்டும்

 

அதாவது, அடிமைகள் தங்கள் ஆண்டைகளை ரப்பு கடவுள் என்று அழைக்கும் வழக்கம் இருந்திருக்கிறது. இதை தடுக்க எண்ணும் முகம்மது அதனுடன் அடிமை என்ற பதத்திற்கு பதிலாக வேலையாள் எனும் பதத்தை பயன்படுத்துமாறு அறிவுறுத்துகிறார். பூ என்றால் என்ன புய்ப்பம் என்றால் என்ன? வேலை நடந்தால் சரி என்பது தான் முகம்மதின் பாலிசியாக இருந்திருக்கிறது. அதையே இன்று மதவாதிகள் அந்த ஹதீஸின் பின்பாதியை மட்டும் பிய்த்துப் போட்டு அஹா.. .. விடுதலை விடுதலை என்கிறார்கள். ஆனால் இஸ்லாம் பிறந்தது முதலின்றுவரை இஸ்லாமியர்களே ஆண்டு கொண்டிருக்கும் அவர்களின் புனித பூமியான சௌதியில் 1960 வரை அடிமை முறை இருந்தது, அதன் பின்னர் தான் சட்டம் போட்டு மாற்றியிருக்கிறார்கள் என்பதும் மதவாதிகளுக்கு புரிவதே இல்லை, அல்லது புரியாதது போல் நடிக்க விரும்புகிறார்கள்.

இத்தொடரின் முந்தைய பகுதிகள்

41. அல்லாவும் அவன் அடிமைகளின் அடிமையும் 1

40. அல்லாவின் பார்வையில் பெண்கள் 5. ஆணாதிக்கம்

39. அல்லாவின் பார்வையில் பெண்கள் 4. மஹ்ர் மணக்கொடை

38. அல்லாவின் பார்வையில் பெண்கள் 3. விவாகரத்து

37. அல்லாவின் பார்வையில் பெண்கள் 2. சொத்துரிமை

36. அல்லாவின் பார்வையில் பெண்கள் 1. புர்கா

35. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 4

34. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 3

33. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 2

32. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 1

31. ஸம் ஸம் நீரூற்றும் குரானும்

30. விண்வெளியைக் கடந்த முதல் மனிதர் முகம்மதின் மிஹ்ராஜ்

29. மீனின் வயிற்றில் மனிதனைப் பாதுகாத்த அல்லா

28. குரான் குறிப்பிடும் பேசும் உயிரினங்கள் இருப்பது சாத்தியமா?

27. தடயமில்லாத அல்லாவின் அத்தாட்சிகள்

26. குரானில் மிதக்கும் சின்னச் சின்னப் பிழைகள்

25. நிலவை உடைத்து ஒட்டிய அல்லா

24. ஆதிமனிதன் மொழியறிந்தவனா? அல்லாவின் பதில் என்ன?

23. கால வெளியில் சிக்கிக்கொண்ட அல்லா

22. குரானின் காலப்பிழைகள்

21. குரான் குறிப்பிடும் நட்சத்திரங்கள்: மனிதப் பார்வையா? இறைப் பார்வையா?

20. மக்காவின் பாதுகாப்பு: குரானின் அறிவிப்புகள் உண்மையா?

19. சூரத்துல் கஹ்புக்கும் புத்தருக்கும் என்ன தொடர்பு?

18. நூஹின் கப்பல் நிறைய புராணப் புழுகுகள்

17. பிர் அவ்னின் உடல் எனும் கட்டுக்கதை

16. கருவறை குறித்த அல்லாவின் கதையாடல்கள்

15. விந்து குறித்த குரானின் விந்தைகள்

14. பாலும் தேனும் அல்லாவின் வேதத்தின் பாடுகள்

13. கோள்களும் அதன் விசையும் அல்லாவின் தேற்றங்கள்

12. விண்வெளி குறித்த அல்லாவின் பண்வெளிகள்.

11. குரானின் மலையியல் மயக்கங்கள்

10. கடல்கள் பற்றிய அல்லாவின் புனைகதைகள்

9. பூமி உருண்டை என யார் சொன்னது, அல்லாவா? மனிதனா?

8. பிரபஞ்சமும் அதை கட்டுப்பட அழைத்த குரானும்

7. குரான் கூறுவது அறிவியலாகுமா?

6. ஹதீஸ்களும் அதன் பிரச்சனைகளும்.

5. குரானின் பாதுகாப்பில் விழுந்த கேள்விக்குறிகள்.

4. மெய்யாகவே குரான் பாதுகாக்கப்பட்டது தானா?

3. குரானின் சவாலுக்கு பதில்

2. அல்லாவின் ஆற்றலிலுள்ள இடர்பாடுகள்

1. இஸ்லாம். பிறப்பும் இருப்பும்: ஓர் எளிய அறிமுகம்

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே….

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

Follow

Get every new post delivered to your Inbox.

Join 327 other followers

%d bloggers like this: