செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம்16

விண்வெளி குறித்த அல்லாவின் பண்வெளிகள்

 

எடுத்துக் கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு

 

விண்வெளி குறித்த அல்லாவின் பண்வெளிகள் என்ற அந்தப் பதிவில் குரானின் மூன்று வசனங்களை எடுத்துக் கொண்டு அந்த வசனங்களில் அறிவியலும் இல்லை அவியலும் இல்லை என்று காட்டியிருந்தேன். ஆனால் நண்பர் இஹ்சாஸுக்கு அதில் இருப்பது ஏற்பா? மறுப்பா? என்பதே தெரியவில்லையாம். என்ன செய்வது அவர் அணிந்திருக்கும் பச்சைக் கண்ணாடி அவ்வளவு அடர்த்தியாய் இருக்கிறது. எனவே இன்னும் சற்று விரிவாகவே பார்ப்போம்.

 

முதல் வசனமான 86:11 ஐ எடுத்துக் கொள்வோம். “திருப்பித் தரும் வானத்தின் மீது சத்தியமாக” இந்த வசனத்தில் மழையை, பூமியிலிருந்து நீரெடுத்துக் கொண்டு திருப்பித்தருகிறது என்றால் குரானுக்கு முன்பே அதை நப்பூதனார் குறிப்பிட்டிருக்கிறார் என எழுதியிருந்தேன். இந்த வசனத்தில் இரண்டு அம்சங்கள் இருக்கின்றன. 1. வானம், 2. திருப்பித் தருகிறது. இவைகளில் எது வானம்? எதை திருப்பித் தருகிறது? எனும் கேள்விகள் எழுப்பப்பட்டால், வானம் என்பது வழக்கத்தில் பயன்படுத்தும் பொருளில் மேகமும் மேகம் சார்ந்த வெளியும், அது மழையை திருப்பித் தருகிறது. இந்த விளக்கத்தின் படி தான் ஜான் டிரஸ்ட் உட்பட பல உரையாசிரியர்கள் மழையை திருப்பித்தருகிறது எனும் பொருளில் மொழி பெயர்த்திருக்கிறார்கள். இதோ மழை எனும் பொருளில் மொழிபெயர்த்தவர்களின் பட்டியல்.

 

Pickthal: By the heaven which giveth the returning rain,

Arberry: By heaven of the returning rain,

Shakir: I swear by the rain giving heavens

H/K/Saheeh: By the sky which returns [rain]

Malik: By the sky which sends down rain

Literal: And the sky/space that of the rain after rain/benefit

Maulana Ali: By the cloud giving rain

Qaribullah: By the sky with its returning rain

George Sale: By the heaven which returneth the rain

Khalifa: By the sky that returns (the water)

Hilali/Khan: By the sky (having rain clouds) which gives rain, again and again

 

ஆனால் நண்பர் என்ன சொல்கிறார்? அந்த வசனத்தில் மழை என்ற சொல்லே இல்லை, தப்பாக மொழிபெயர்த்திருக்கிறார்கள். பிஜே மொழிபெயர்த்தது மட்டும் தான் சரி. எனவே அந்த வசனம் நவீன அறிவியலைப் பேசுகிறது என்கிறார். இது இரண்டு விதங்களில் தவறு.

 

பிஜே தனது மொழிபெயர்ப்பை இரண்டு குறிக்கோளுடன் செய்திருக்கிறார். ஒன்று, சாதாரணமாக படிக்கும் போது குரானில் எந்த முரண்பாடும் தெரியக் கூடாத விதத்தில் மொழிபெயர்ப்பு இருக்க வேண்டும். இரண்டு, தற்கால அறிவியல் வளர்ச்சிக்கு தகுந்தபடி பொருள் கொள்வதற்கு ஏதுவாக மொழிபெயர்ப்பு இருக்க வேண்டும். அதனால் தான் தற்போது குரானிலிருந்து அறிவியலை பிழிந்து பிழிந்து எடுக்கிறார்கள். அடுத்து, மழை என்ற சொல் இல்லை என்பதால் அந்த வசனம் மழையைக் குறிக்காது வானத்தின் திருப்பித்தரும் தன்மையைத் தான் குறிக்கும் என்றெல்லாம் கதையளக்க முடியாது. எவ்வாறெனில், அதற்கு அடுத்த வசனம் பிளக்கும் / பிளவுபடும் பூமியின் மீது சத்தியமாக என்று வருகிறது. இதன் பொருள் என்ன? பல அறிஞர்கள் இதற்கு தாவரங்கள் முளைப்பதற்காக பிளவுபடும் பூமியின் மீது சத்தியமாக என்று தான் மொழி பெயர்த்திருக்கிறார்கள். முதல் வசத்தின்ல் மழையும் அடுத்த வசனத்தில் தாவரங்கள் முளைப்பதையும் கூறுவதில் தொடர்ச்சி இருக்கிறது. மட்டுமல்லாது விடிவெள்ளி எனும் 86வது அத்தியாயத்தில் மொத்தம் 17 வசனங்கள் இருக்கின்றன. இவற்றில் முதல் மூன்று வசனங்கள் ஒரு தொகுதியாக தாரிக் எனும் நட்சத்திரம் பற்றி குறிப்பிடுகிறது. நான்கிலிருந்து பத்து வரையிலான வசனங்கள் ஒரு தொகுதியாக மனிதர்கள் குறித்து பேசுகிறது. பதிமூன்று பதினான்காம் வசனங்கள் ஒரு தொகுதியாக குரானின் தன்மை குறித்து பேசுகிறது. கடைசி மூன்று வசனங்கள் ஒரு தொகுதியாக நம்பிக்கையில்லாத மனிதர்களைப் பற்றி குறிப்பிடுகிறது. என்றால் இடையிலிருக்கும் பதினொன்று பனிரெண்டாம் வசனங்கள் தொகுதியான வசனங்களா? தனித்தனியான வசனங்களா? இரண்டும் தொகுதியான வசனங்களே. மழை என்ற சொல்லும் அதனால் தாவரங்கள் பூமியில் முழைப்பதும் மறை பொருளாக கூறப்பட்டிருப்பதாக ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது? எனவே முதல் வசனத்தில் மழையை திருப்பித் தருகிறது என்றும் மறு வசனத்தில் அதனால் தாவரங்கள் முளைப்பது பற்றியும் கூறப்பட்டிருப்பதாக பொருள் கொள்ளவே இடமிருக்கிறது. குரானில் பல இடங்களில் மழை பொழிந்து அதனால் பூமியில் தாவரங்கள் முளைப்பது பற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது. அவ்வாறில்லையென்றால் பிளவுபடும் பூமியின் மீது சத்தியமாக என்ற வசனந்த்தின் பொருள் என்ன? ஏன் அந்த இரண்டு வசனங்கள் மட்டும் தனித்தனியாக நிற்கின்றன? இது வரையான  மொழிபெயர்ப்பாளர்களெல்லாம் மழை என்று குறிப்பிட்டிருக்கும் போது மழையை தவிர்த்துவிட்டு ஏதோ வானத்திற்கே திருப்பித்தரும் தன்மை இருப்பதாக பிஜே ஜல்லியடிப்பது ஏன்? ஏனென்றால், குரானுக்குள் அறிவியலை கண்டுபிடித்தே தீர வேண்டிய கட்டாயம் பீஜேவுக்கும் அதையொற்றிய இஹ்ஸாஸ் போன்ற நண்பர்களுக்கும் இருக்கிறது.

 

மெய்யாகவே வானத்திற்கு திருப்பித்தரும் தன்மை இருக்கிறதா? வானம் என்றால் மேகமும் மேகம் சார்ந்த வெளியுமோ, தூரத்தில் தெரியும் நீல நிறப் பின்னணியோ அல்ல. வானம் என்பது விரிந்த பொருளுடையது. வானம் என்பது ஏதோ ஒரு பொருளல்ல, இப்பேரண்டம் முழுவதும் சீராக பரவியிருக்கும் வெளியே வானம் எனப்படுகிறது. இந்த வானத்திற்கென்று தனிப்பட்ட முறையில் ‘திருப்பித் தரும்’ தன்மை இருக்கிறதா? அப்படி இருப்பதாக எந்த மதவாதியாவது நிரூபிக்க முடியுமா? மாறாக மின்காந்த அலைகள் போன்று அலைகள் பரவுகின்றன என்றால் அந்த அலைகள் ஊடகத்தினாலோ, ஊடகமில்லாமலோ பரவும் தன்மையைப் பெற்றிருக்கின்றன என்பது தானேயன்றி வானம் காரணமாக இல்லை.

 

அடுத்த வசனமான 55:33 ல் கடந்து செல்லும் வல்லமை இருந்தால் என்பதை விடுபடு வேகத்துடன் பொருத்தி அறிவியலாக காட்டப்படும் கபடத்தனம் குறித்து எழுதியிருந்தேன். அதை இன்னும் விரிவாகப் பார்ப்போம். இந்த வசனத்தில் வரும் அதிகாரம் எனும் சொல்லுக்கு அறிவியல் கலைச் சொல்லான விடுபடு வேகம் என்பது தான் பொருளா? அல்லா என்பதற்கு இவர்கள் கொடுக்கும் விளக்கத்தில் உலகில் நடக்கும் எந்தச் செயலுக்கும் இந்த வரையறையைப் பொருத்த முடியும். சாலையில் காலாற நடந்து செல்வதாக இருந்தாலும் அல்லாவின் வல்லமை இல்லாமல் செல்ல முடியுமா? பழுத்த இலை கூட அல்லாவின் அனுமதியோ வல்லமையோ இல்லாமல் நிலத்தில் வீழமுடியாது எனும் போது இதை மட்டும் வல்லமை இருந்தால் செல்லுங்கள் என்று கூற வேண்டிய தேவை என்ன? இங்குதான் குரானில் கூறப்படும் ஒரு கதை வருகிறது.

 

பூமியில் மனிதர்களைப் போன்றே ஜின் எனுமொரு இனமும் இருப்பதாக குரான் சத்தியம் செய்து கொண்டிருக்கிறது.  மனிதர்களும், ஜின்களும் ஏன் எல்லை கடந்து செல்ல வேண்டும்? மனிதர்கள் ஏன் கடக்க வேண்டும் என்பதற்கு நேரடியாக இல்லாவிட்டாலும் ஜின்கள் கடப்பதற்கு தேவை இருப்பதாக குரான் வேறொரு இடத்தில் குறிப்பிட்டிருக்கிறது. அல்லாவும் அவன் உதவியாளர்களும் (வானவர்களும்) பேசிக் கொண்டிருப்பதை ஒட்டுக் கேட்பதற்காக சைத்தான்கள் அதாவது ஜின்கள் வானத்தில் ஏறிச் செல்கிறார்கள். அவர்களை விரட்டுவதற்காகவே அல்லா நட்சத்திரங்களைப் படைத்திருக்கிறார். இந்த ஜின் இனத்திற்கு மனிதர்களிலும் நண்பர்கள் இருக்கிறார்கள். இதன் தொடர்ச்சியாக முகம்மதுவும் (ஹதீஸில்) ஒரு கதை சொல்கிறார். ஜின்கள் இப்படி வானத்தில் ஏறிச் சென்று அல்லாவும் உதவியாளர்களும் பேசுவதை ஒட்டுக் கேட்டு பூமியில் தங்கள் நண்பர்களான மனிதர்களிடம் கூறுகிறார்கள். அவர்கள் அதில் ஒன்றுக்குப் பத்தாக பொய்களைக் கலந்து கூறி விடுகிறார்கள். இது தான் ஜோதிடம் என்கிறார் முகம்மது. எந்த அல்லா தாம் பேசுவதை ஒட்டுக்கேட்டு விடக்கூடாது என்பதற்காக சைத்தான்களை விரட்டும் எரி கற்களாக நட்சத்திரங்களைப் படைத்திருக்கிறாரோ, அதே அல்லாதான் குறிப்பிட்டவைகளைக் கேட்பதற்காக அனுமதியும் (பூமியில் குழப்பம் விளைவிப்பதற்கான அனுமதி) கொடுத்திருக்கிறார். இதைத்தான் மேற்கண்ட வசனம் குறிப்பிடுகிறது.

 

இல்லை அந்த வசனம் விடுபடு வேகத்தைத்தான் முன்னறிவிக்கிறது என்று நண்பர் அடம் பிடிப்பாராயின், சில கேள்விகளுக்கு பதில் கூற வேண்டியதிருக்கும். கோள்கள் போன்றவை தனியான ஈர்ப்பு விசையுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்று குரானில் எங்காவது குறிப்பிடப்பட்டிருக்கிறதா? கோள்களுக்கு அப்பால் கடந்து சாதாரணமாக செல்ல முடியாமல் ஒரு தடை இருப்பதாக குரானில் எங்காவது குறிப்பிடப்பட்டிருக்கிறதா? அப்படியெல்லாம் இல்லாத போது இதை விடுபடு வேகத்துடன் எப்படி முடிச்சுப் போடுகிறீர்கள்? தற்கால அறிவியல் கண்டுபிடிப்புகளை சுட்டிக் காட்டுவது போல் எங்காவது ஒரு வசனத்தில் ஏதாவது ஒரு வார்த்தை கிடைத்துவிட்டால் போதும் அது அறிவியல் தான் என்று குருட்டுச் சத்தியம் செய்கிறார்கள் நண்பர்கள். இதை ஏன்னுடைய எண்ணத்திலிருந்து மட்டும் கூறவில்லை. நண்பரே அதற்கொரு சான்றும் தந்திருக்கிறார். \\ தற்காலத்தில் ஒரு பிரபஞ்சமில்லை பல பிரபஞ்சங்கள் உள்ளன என்பதை கண்டுபிடித்திருக்கிறார்கள் // வானங்கள் என்று பன்மையில் வருவதால் அது பல பிரபஞ்சங்கள் குறித்து தற்கால அறிவியல் கூறுவதைத்தான் குரான் குறிப்பிடிகிறது என்று அடித்து விடுகிறார். அறிவியலாளர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பேரண்டங்கள் இருப்பதாக கண்டுபிடித்திருக்கிறார்களா? அல்லது அப்படி இருக்கக் கூடும் என்று யூகிப்பதற்கான சாத்தியங்கள் இருப்பதாக கூறுகிறார்களா? வானங்கள் என்பது பேரண்டமல்ல என்பதற்கு குரான் வசனங்களிலிருந்தே ஆதாரங்கள் காட்ட முடியும். இவைகள் எவை பற்றியும் அவர்களுக்கு சிந்தனை இல்லை. வேண்டியதெல்லாம் அறிவியலோடு ஒட்டுவதற்கு தோதான ஒரு வார்த்தை, அவ்வளவு தான் 1400 ஆண்டுகளுக்கு முன்னே என்று புல்லரித்துவிட வேண்டியது.

 

அடுத்த வசனமான 6:125ல் வானத்தில் ஏறுகிறவர்களைப் போல் அவர்களின் நெஞ்சை இறுகிச் சுருங்கும்படி செய்கிறான் என்று வருகிறது. இதில் என்ன அறிவியல் இருக்கிறது. உயரத்தில் ஏறும்போது, உயரே நின்று தாழப்பார்க்கும் போது ஒருவித அச்ச உணர்வு யாவருக்கும் ஏற்படுவது இயல்பு. இதைத்தான் முகம்மது இஸ்லாத்தை மறுக்கும் போது ஏற்படுவதாக ஒரு குற்ற உணர்வைப் போல சித்தரிக்கிறார். இதில் அறிவியல் இருக்கிறது என முகத்தில் வியப்புக்குறி காட்டுபவர்களே. மெய்யாகச் சொல்லுங்கள் இந்த வசனம் அறியாமையைப் பறைசாற்றுகிறதா இல்லையா? இஸ்லாம் என்பது ஒரு கொள்கை, இந்தக் கொள்கையை ஏற்பதும் மறுப்பதும் எந்த விதத்தில் நெஞ்சோடு அல்லது இதயத்தோடு தொடர்புடையது?

 

இவைகளையெல்லாம் சிந்தித்துப் பார்த்தால் நமக்கு விளங்குவது ஒன்றுதான். அறிவியலோடு ஒட்ட வைக்க இயலவில்லை என்றால், முயலவில்லை என்றால் தம்மால் அதிக காலம் தாக்குப் பிடிக்க முடியாது என்பதை மதவாதிகள் தெளிவாக உணர்ந்திருக்கிறார்கள் என்பதைத் தான். 

 

 

Follow

Get every new post delivered to your Inbox.

Join 327 other followers

%d bloggers like this: