கருவறை நிலைபாடு டார்வினிசமா? குரானா? தமிழ் முஸ்லிம் தளத்திற்கு விளக்கம்.

கருவறை நிலைபாடு டார்வினிசமா? குரானா? என்ற தலைப்பில் தமிழ் முஸ்லிம் என்ற தளத்தில் ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளார்கள். இது போன்ற கட்டுரைகளுக்கு மறுப்போ பதிலோ கூறுவது என்னுடைய நோக்கமில்லை என்றாலும், எனக்கு இது போன்ற கட்டுரைகளை அறிமுகப்படுத்தும் நண்பர் இது போன்றவைகளுக்கு யாராலும் பதில் கூறமுடியாது என்று கருதிக்கொள்வதால்…. தற்போது கூறுவதோடு நில்லாமல் பதிவிடவும் செய்கிறேன். மற்றப்படி மதம் என்பதை மக்களின் இயலாமைச்சூழல், சமூகச்சூழல் தான் பிணைத்து வைத்திருக்கிறது. அந்த சமூகச்சூழல் புரட்சியின் மூலம் மாற்றமடையும் போது உதிர்ந்துவிடும் என்பதில் எனக்கு அய்யமில்லை.

டார்வினின் கோட்பாடு என்பது கருவறை நிலைபாடுகளிலிருந்தோ அல்லது கரு வளர்ச்சியிலிருந்தோ பெறப்பட்டதல்ல. மாறாக வாழ்வியல், உலகின் சூழலுக்கேற்ற தகவமைவு, பண்டைய உலகின் புதைபடிவுகள், எச்சங்கள் போன்றவற்றிலிருந்து பெறப்பட்டதாகும். டார்வின் கோட்பாட்டில் அய்யமென்றால் இவைகளை ஆராய்வதே சரியானதாக இருக்கும். ஆனால், டார்வின் கோட்பாட்டையும் கருவியலையும் ஒரு கேள்வியின் வாயிலாக இணைத்து அதற்கு பதிலாக கூறப்படுவது போல் மேற்கூறிய கட்டுரையை அமைத்துள்ளனர்.

அவன் உங்களை பல நிலைகளிலிருந்து படைத்தான் என்ற குரான் வசனத்தை எடுத்துக்கொண்டு அதற்கு இசைவாக தற்கால அறிவியல் கூறும் கருவியல் விபரங்களை சில நிலைகளாக பிரித்துக்கொண்டு பின்னர் அதை வேறொரு படைப்பாக்கினோம் என்ற குரான் வசனத்திற்கேற்ப அந்த கருவியல் விபரங்களை திரித்து 1400 ஆண்டுகளுக்கு முன்னரே குரான் கூறியபடியே இன்றைய அறிவியல் ஆய்வுகளும் கூறுகிறது எனவே மனிதனை ஆண்டவன் தான் படைத்தான் அவனை நீங்கள் மறுக்கலாமா? அது தான் அந்தக் கட்டுரையின் கருத்து.

அவன் உங்களை பல நிலைகளிலிருந்து படைத்தான் என்று குரான் வசனம் எழுதியிருந்தார். ஆனால் வேறொரு மொழிபெயர்ப்பில் உங்களை அவன் பல வகைகளாக படைத்தான் என்றிருக்கிறது. இது போன்ற கட்டுரைகளை எழுதுவோர், உரையாற்றுவோரெல்லாம் எதுகுறித்து பேச அல்லது எழுத எடுத்துக்கொண்டுள்ளார்களோ அதற்கு பொருத்தமான வகையிலான வார்த்தைகளை அமைத்துக்கொண்டு விளக்கம் சொல்லுவது வழக்கம். அந்த வகையில் பல நிலைகளிலிருந்து படைத்தான் என்று அந்த வசனத்தை எடுத்துக்கொண்டு அதற்கு ஏற்றது போல் கருவியல் விபரங்களை பல நிலைகளாக பிரிக்கிறார். 1) ஆணின் உயிரணு பெண்ணின் கருமுட்டை 2) உயிரணு உள்ளே நுழைந்ததும் கருவுற்ற முட்டையாக மாறுவது 3) கருவுற்ற முட்டை கருப்பையை அடைந்து இரண்டாக பிரிந்து செல்களை பெருக்கி சதையாவது 4) அந்த சதைத்துண்டு கருவில் உருவாகும் உயிரினத்தின் உறுப்புகளை தீர்மானிக்க மூன்றடுக்கு உயிரியாக மாறுவது 5) ஒவ்வொரு அடுக்கிலிருந்தும் குழந்தையின் உறுப்புகள் வெளிப்படுவது 6) உறுப்புகளின் வளர்ச்சி 7) உடலிலுள்ள மொத்த உறுப்புகளும் அதனதன் தன்மையுடன் சிறப்பியல்களைப்பெறுவது 8) இறுதியாக அது என்ன படைப்பு என்று தீர்மானிக்கப்பட்டு வெளியேறுவது. இப்படி இன்றைய கருவியல் விபரங்களை எட்டு நிலையாக பிரித்திருக்கிறார். இவைகளெல்லாம் நிலைகளா? அறிவியல் கூறும் இந்த தொடர்ச்சியாக நிகழும் மாற்றங்களை ஏன் இவர் நிலைகளாக பிரிக்கவேண்டும். ஏனென்றால், உங்களை பல நிலைகளிலிருந்து படைத்தான் என்று குரான் சொல்லியிருக்கிறதே அதனால் தான். மற்றப்படி அறிவியல் இதை மாறுபட்ட நிலைகளென்று தனித்தனியே பிரித்து வைக்கவில்லை. கருவறையில் தொடர்ச்சியாக நடைபெறும் செயல்கள். குரான் கூறுவதை கேளுங்கள், களிமண் சத்திலிருந்து மனிதனை படைத்தோம், பின்னர் அவைனப்பாதுகாப்பான இடத்தில் விந்துத்துளியாக ஆக்கினோம், பின்னர் விந்துத்துளியினை கருவுற்ற சினை முட்டையாக்கினோம் பின்னர் கருவுற்ற சினைமுட்டையை சதைத்துண்டாக ஆக்கினோம், சதைத்துண்டை எலும்பாக ஆக்கி எலும்புக்கு இறைச்சியையும் அணிவித்தோம், பின்னர் அதை வேறுபடைப்பாக ஆக்கினோம். இந்த வசனங்களில் அலக் என்ற ஒரு வார்த்தை பயன்படுத்தப்படுவதாக சொல்கிறார்கள். தற்போதைய பதிப்புகளில் இந்த அலக் என்ற வார்த்தையை தொங்கும் பொருள் என்று மொழிபெயர்த்திருக்கிறார்கள். ஆனால், முந்தைய வெளியீடுகளை பார்த்தால் ரத்தக்கட்டி என்று மொழிபெயர்த்திருப்பார்கள். அதாவது அரபு மொழியில் கூறப்பட்ட அந்த வார்த்தையை அந்த நேரத்து அறிவியல் விளக்கப்படி ரத்தக்கட்டி என்று மொழிபெயர்த்தார்கள், பின்பு கருவரையில் ரத்தக்கட்டியாக கருவானது இருக்கவில்லை என்ற அறிவியல் தெளிவு வந்த போது அதே வார்த்தையை சதைப்பிண்டம் என்று மொழிபெயர்த்தார்கள் பின்னர் அதுவும் அறிவியலால் மற்றப்பட்ட போது தற்போது தொங்கும் பொருள் என்று மொழிபெயர்க்கிறார்கள். இன்னும் அடுத்தடுத்த வள்ர்ச்சிகளுக்கு ஏற்ப பொருள் மாற்றிக்கொள்வார்கள். இப்படித்தான் அவர்களுடைய அறிவியல் பார்வை இருக்கிறது. இந்த வசனத்திலேயே பின்னர் விந்துத்துளியை கருவுற்ற சினை முட்டையாக ஆக்கினோம் என்று வருகிறது. விந்துத்துளியா சினைமுட்டையாக மாறுகிறது? இன்னும் குரானின் வேறொரு இடத்தில் கலப்பு இந்திரியத்துளியிலிருந்து மனிதனை உண்டாக்கினோம் என்று வருகிறது. இதில் அறிவியல் இருக்கிறதா? அந்த நேரத்து நம்பிக்கை இருக்கிறதா? ஆணுக்கு உயிரணு என்பது வெளிப்படும் திரவத்திலேயே இருக்கிறது. ஆனால் பெண்ணுக்கு வெளிப்படும் திரவத்தில் முட்டை இல்லை. அது தனியானது. பெண்ணில் வெளிப்படும் திரவம் வேறு நோக்கத்திற்கானது. குரானோ அதுவும் விந்தைப்போன்ற திரவம் தானென எண்ணிக்கொண்டு கலப்பு இந்திரியத்துளியிலிருந்து மனிதனைப்படைத்தோம் என்கிறது. இந்த குரானிய வசனங்களில் முக்கியமான ஒன்று பின்னர் அதை வேறொரு படைப்பக்கினோம் என்பது. கட்டுரையாளரின் வாதமும் அதுதான். அதாவது பல்வேறு நிலை என்கிறாரே அதில் கடைசி நிலையில் தான் என்ன உயிரினம் என்று தெரிகிறது அதற்கு முந்தைய நிலைகளில் எல்லா உயிரினங்களின் கருவும் வித்தியாசம் காணமுடியாதபடி இருக்கும் பின்னர் தான் இறைவன் அந்தக் கருவை உரிய உயிரினமாக அதாவது வேறொரு படைப்பாக ஆக்குவதாக குரானும் அதன்வழியே கட்டுரையாளரும் குறிப்பிடுகின்றனர். இதை அறிவியல் மறுக்கிறது. எப்படி? எந்தக்கணத்தில் ஆணின் உயிரணுவும் பெண்ணின் முட்டையும் இணைகிறதோ அந்தக்கணத்தில் உருப்பெறப்போகும் குழந்தை ஆணா? பெண்ணா? உயரமா? குட்டையா?
தோலின் நிறமென்ன? தலைமுடியின் நிறம், கண்களின் நிறம், மூக்கு வளைவா? காது நீளமா? கைகள் கால்கள் உடல் எப்படியிருக்க வேண்டும்? என்பன போன்ற அனைத்து விபரங்களும் தீர்மானிக்கப்பட்டுவிடுகின்றன. அதாவது குரோமோசோம்களில் இருக்கும் டிஎன்ஏ ஏணிகளில் இதுபோன்ற அத்தனை தகவல்களும் பதியப்பட்டு இதன்படியே கருவானது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சியடைந்து அதாவது இரண்டாவது மாதத்தில் ஆண் பெண் இன உறுப்புகள், மூன்றாவது மாதம் ஜீரண உறுப்புகள் எலும்புகள், நான்காவது மாதம் தோல் சுமாரான வடிவம் கண்கள் விரல்கள், ஐந்தாம் மாதம் தலைமுடி நகம் பல்முளைகள் முதுகெலும்பு சீராதல், ஆறாவது மாதம் கண்களில் பார்வை நாவில் ருசி, ஏழாவது மாதம் மூளை சீரடைதல் நரம்புகள் என்று தொடர்ச்சியான வளர்ச்சியில் எட்டு ஒன்பதாவது மாதங்களில் எல்லா உறுப்புகளுமே சீரான இயக்கத்திற்கு வந்து இறுதியில் வெளியேறுகிறது. ஒப்பிட்டுப்பாருங்கள் குரான் கூறும் வரிசைப்படியா அறிவியல் கூறும் வரிசை இருக்கிறது? ஆனால் இன்றைய அறிவியல் கூறுவதை 1400 ஆண்டுகளுக்கு முன்பே குரான் கூறிவிட்டது என்று சத்தியம் செய்வார்கள்.

அறிவியலானது பல்வேறு ஆய்வுகள் சோதனைகள் மூலம் மனித வரலாற்றின், இயங்கியலின் பல்வேறு புதிர்களை அவிழ்த்து வருகிறது. அவற்றில் ஒன்றுதான் மனிதனின் தோற்றம் பற்றிய டார்வின் கோட்பாடு. இத்ற்கு நேர் மற்றமாக மனிதன் இறைவனால் இன்றிருக்கும் நிலையிலேயே படைக்கப்பட்டன் என வேதங்கள் கூறிவருகின்றன. மனிதன் படைக்கப்பட்டன் என்பதில் மதவாதிகள் உறுதியாக இருந்தால் இறைவனால் படைக்கப்பட்டதை அறிவியல் ரீதியாக நிரூபிக்கவேண்டும். மாறாக, டார்வின் கோட்பாடு ஏதோ வகையில் தவறு என்று கூறிக்கொண்டு எனவே ஆண்டவனை நம்புங்கள் என்பது முரண்பாடான வாதம்.

போகட்டும் முக்கியமான விசயத்திற்கு வருவோம்.
இந்த உலகின் பெரும்பான்மையான மக்கள் ஒரு திட்டமிடப்பட்ட உலகச் சூழலின் வழியாக வஞ்சிக்கப்படுகிறார்கள்.உலகின் மொத்த மக்கட்தொகையில் 80விழுக்காடு மக்கள் உலகின் மொத்த வளங்களில் 16விழுக்காடுடன் மோதிக்கொண்டிருக்க மீதமுள்ள 20விழுக்காடினரோ 84விழுக்காடு வளங்களை ஊதாரித்தனமாக அனுபவித்துவருகின்றனர். மிகக்கொடுமையான இந்த அநீதியை உங்களை பின்பற்றுவோரிடம் எடுத்துக்கூறுங்கள். ஒன்றுதிரட்டி அதற்கெதிரான போராட்டத்தில் பங்குகொள்ளுங்கள். அது தான் இப்போதைய அவசிய அவசரத்தேவையாக இருக்கிறது. மாறாக மனிதன் படைக்கப்பட்டானா? அல்லது குரங்கிலிருந்து பரிணமித்தானா? என்பதெல்லம் இப்போதைக்கு முக்கியமில்லாத பிரச்சனைகள்.

மீண்டும் சந்திப்போம்.

Advertisements

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: