இதோ மீண்டும் ஒரு நிரூபணம். ஒவ்வொரு முறை குண்டுவெடிப்பு நிகழும்போதும் ஆயிரக்கணக்கில் முஸ்லீம்கள் கைது செய்யப்படுவார்கள், புதிது புதிதாய் இஸ்லாமிய அமைப்புகளின் பெயர்கள் வெளியிடப்படும், மின்னஞ்சல்கள் வந்ததாய் ஆதாரம் காட்டப்படும், பாக்கிஸ்தான், பங்களாதேஷ் சதி என தலைவர்கள் பேசுவார்கள், உள்நாட்டுப்பாதுகாப்பில் காங்கிரஸ் அரசு அலட்சியம் காட்டுகிறது என பிஜேபி முழங்கும், தடா, பொடா ஆள்தூக்கி சட்டங்களை மீண்டும் கொண்டுவர வேண்டும் என அறிவுறுத்தப்படும், அப்ஸல்குரு தூக்கிலிடப்படாததால் பயங்கரவாதிகளுக்கு பயமில்லை என கண்டுபிடித்து சொல்லப்படும், தாடி தொப்பியுடன் காவல்துறை கணிணி உதவியுடன் வரைபடம் வெளியிடும், விதவிதமாய் யோசித்து நளிதழ்களில் செய்தி வெளியாகும், சாதாரணமக்கள் மனதில் குண்டுவைப்பவர்கள் இப்படித்தான் இருந்தாகவேண்டும் என்ற பிம்பம் ஏற்படுத்தப்படும். பின் மீண்டும் குண்டு வெடிக்கும். நாட்டில் புலனாய்வுத்துறை முதல் காவல்துறை நீதிமன்றங்கள்வரை குண்டுவெடிப்பு என்றதும் இஸ்லாமியர்கள் தான் குற்றவாளிகள் என்ற நோக்கிலேயே செயல்படுகின்றன. ஆனால் உண்மை வேறு மாதிரி இருக்கிறது
கடந்த மாதம் மாலேகானில் நடந்த குண்டுவெடிப்பில் பெண்சாமியார் பிரக்யாவும் இன்னும் இரண்டு முன்னாள் ராணுவ அதிகாரிகளும் கைது செய்யப்பட்டனர். இது மட்டுமா? பட்டியல் வெகு நீளம். 2006ல் நாண்டட்டில் குண்டுகளை தயாரிக்கும்போது ஆர்எஸ்எஸ் காரர்கள் இரண்டுபேர் சாவு ஐந்துபேர் கைது பர்பானி, புர்னா, ஜல்னா குண்டு வெடிப்புகளில் பாபுராவ் சௌத்ரி, ஹிமன்ஸ் பான்சே போன்றவர்கள் கைது. அவர்களிடம் நடத்தப்பட்ட நரம்பியல், மூளை வரைபட சோதனை மூலம் பஜ்ரங்தள் பாலாஜி, விஸ்வ ஹிந்து பரிஷத் உள்ளூர் தலைவன் கோவிந்த் புரானிக் ஆகியோரைப்பற்றி தெரியவந்தது. நாண்டெட் குண்டுவெடிப்பில் காயமடைந்த ஜெய்ராம் சப்டேவர் குண்டுவைப்பதற்காக தனக்கு 50000 தரப்பட்டதாக வாக்குமூலம் அளித்தான். பாபர் மசூதி இடிப்பதற்காக குஜராத்திலுள்ள சர்கேஜ் எனுமிடத்தில் முன்னாள் ராணுவத்தினரைவைத்து பயிற்சியளிக்கப்பட்டதை முன்னாள் அமைச்சர் ராஜேஷ் பைலட் நாடாளுமன்றத்திலேயே தெரிவித்தார். 2002 குஜராத் கலவரத்திற்காக பஞ்சாபிலிருந்தும் உபியிலிருந்தும் லாரிகளில் ஆயுதங்களும் வெடிகுண்டுகளும் வந்ததாக தெகல்காவுக்கு பேட்டியளித்தனர். முக்காலடி சுவர்களைக்கூட துளைத்துச்செல்லும் ராக்கெட்டுகளையும், டீசல் வெடிகுண்டு குழாய் வெடிகுண்டு போன்றைவைகளையும் தன்னுடைய பட்டாசு தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வினியோகிக்கப்பட்டதாக கோத்ரா எம்எல்ஏ ஹரேஷ் பட் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தான். வாஷி பகுதியில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக மங்கேஷ், விக்ரம், சந்தோஷ், அனுமந்த் என்ற நான்கு சங்பரிவார் குண்டர்கள் கைது, ராய்காட் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் சங்பரிவாரத்தினரிடமிருந்து டெட்டனேட்டர்கள், ஜெலட்டின் குச்சிகள் அம்மோனியம் நைட்ரேட், துப்பாக்கிகள், தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன, தென்காசி ஆர்எஸ்எஸ் அலுவலக குண்டுவெடிப்பில் கைதானவனின் வாக்குமூலம். இன்னும் எத்தனை ஆதாரங்கள் வேண்டும்? அத்தனைக்குப்பிறகும் குண்டுவெடிப்பு என்றால் முஸ்லீம்களை நோக்கி விரல் நீள்கிறதே ஏன்?
நாண்டெட்டில் சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்திருந்தும் முதல் தகவல் அறிக்கையில் சேமித்துவைத்திருந்த பட்டாசு மூட்டை வெடித்ததாக பதிவுசெய்தார்களே ஏன்?
இந்த வழக்கு விசாரணைக்கு வரவிருந்த நிலையில் நீதிமன்ற தாக்கீது ஏதுமின்றி மத்திய உளவுத்துறைக்கு கூடுதல் பணிச்சுமை உள்ளதென்றும், போதிய அதிகாரிகள் இல்லையென்றும் வழக்கிலிருந்து ஒதுங்கிக்கொள்ள நினைத்ததே உளவுத்துறை ஏன்?
குண்டுவெடிப்புகள் இரண்டு வகையில் அவர்களுக்கு சாதகமாக அமைகின்றன. ஒன்று, மதவேற்றுமைகளை எண்ணாமல் உறவினர்கள் போல் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்கும் சாதாரண இந்து மக்களிடம் சிறுபாண்மை முஸ்லீம்கள் பெறும்பான்மை இந்துக்களை குண்டு வைத்து கொல்கிறார்கள் என்று நம்பவைத்து அதன் மூலம் வேற்றுமையை ஏற்படுத்தி இன்றுவரை ஜாதியின்பெயரால் தீண்டத்தகாதவர்களாய் வன்கொடுமைக்கு ஆளாக்கி அடிமைப்படுத்தி வைத்திருக்கும் அடித்தட்டு மக்களையெல்லாம் இந்துவாய் ஒருங்கிணைப்பதில் வெற்றிகண்டு வருவது. மற்றொன்று இஸ்லாமியர்களை அன்னியர்களாய், விரோதிகளாய் சித்தரித்து கொடூரத்தாக்குதல்கள், கலவரங்கள் மூலம் உயிர்களுக்கும் உடைமைக்கும் சேதங்களை ஏற்படுத்தி அச்சமூட்டி அடங்கி ஒடுங்கி வாழவைப்பதன் மூலம் தனக்கு எதிர்ப்பில்லாமல் செய்வது.
நாட்டில் இருக்கும் அனைத்து ஓட்டுக்கட்சிகளுக்கும் இந்த திட்டத்தில் உடன்பாடுதான். நாட்டின் எல்ல அமைப்புகளும் இதிலிருந்து விதிவிலக்கு பெற்றதல்ல, இல்லாவிட்டால் குஜ்ஜார்களின் இடஒதுக்கீடு போராட்டத்தை தேசிய அவமானம் என்று பொங்கியெழுந்த நீதிமன்றங்கள் 2002 குஜராத்தில் எத்தனை பேரை கொன்றேன், எத்தனை பெண்களை வன்கொடுமை செய்தேன், எங்கிருந்து ஆயுதங்கள் வந்தன என்று புள்ளீவிபரங்களுடன் வீடியோவாக வெளிவந்த பின்பும் மௌனம் சாதிக்குமா? ஊடகங்கள் கண்டுகொள்ளாமல் விட்டிருக்குமா? பாராளுமன்ற சட்டமன்றங்கள் அமைதியாய் வழமையாய் செயல்பட்டிருக்குமா?
சரி. இதற்கு இஸ்லாமியர்களின் எதிர்வினை என்ன? அவர்களும் ஒன்றிணைகிறார்கள். மத அடிப்படையில். முஸ்லீம்களாக. சர்வதேச பயங்கரவாதம் என இந்துத்துவாக்கள் கூறுவது போல இவர்களும் சர்வதேச அளவில் இஸ்லாத்திற்கு ஆபத்து என்கிறார்கள். அந்த அடிப்படையிலேயே மக்களை ஒன்றிணைக்கிறார்கள். இன்னொருபுறம் வேறு சிலர் நாங்கள் தான் ஐஎஸ்ஓ சான்றிதழ் பெற்ற முஸ்லீம் என கூறிக்கொண்டு குண்டு வைக்கிறார்கள், ஜிஹாத் என்கிறார்கள்.
இத்தனை குண்டுகள் வெடித்தபின்னும் பாதுகாப்பு கிடைத்ததா இஸ்லாமியர்களுக்கு? பாதிக்கப்படுகிறார்கள் மீண்டும் மீண்டும். ஆயிரக்கணக்கான அப்பாவிகள் சிறைகளுக்குள். வழகில்லாமல் விசாரணையில்லாமல் மரணதண்டனை விதிக்கப்படுகிறது, மோடியை கொல்ல வந்தவர்கள் என சுட்டுக்கொல்கிறார்கள். அக்சார்தம் கோவிலில் நுழைந்த தீவிரவாதிகள் என்று குஜராத்தில் சிலரை சுட்டுக்கொன்றார்கள் அதே நாட்களில் அதேகுற்றத்திற்காக காஷ்மீரில் சிலரை கைது செய்து சிறையிலடைக்கிறார்கள். மத அடிப்படையில் ஒன்றுதிரண்டதன் பலன் இது தான். இதைத்தான் சங்பரிவார்களும் எதிர்பார்க்கின்றனர். சங்பரிவார், பாஜ கும்பலை எதிர்ப்பதாய் கூறிக்கொண்டு அவர்கள் போட்டுத்தரும் பாட்டையில் சீராய் பயணிக்கிறார்கள் இஸ்லாமிய மதவாதிகள். இந்துவாய் அவர்கள் ஒன்றிணைவதற்கு ஒரு பொது எதிரி தேவை அந்த பாத்திரத்தில் மிகச்சரியாய் பொருந்துகிறார்கள் இஸ்லாமியர்கள்.
அண்மையில் ஒரிசா கலவரங்களும், தொடர்ந்து கர்னாடகா, கேரளா, தமிழ்நாட்டில் மாதா கோவில்கள் தாக்கப்பட்டதும் இந்த நோக்கில் தான். இஸ்லாமிய மதவாதம் பேசுவதும், முஸ்லீமாய் இணைவதும் ஒருபோதும் இதற்கான தீர்வாகாது. அனைத்து இஸ்லாமியர்களும் ஒன்றாய் இணைந்தாலும் யாரை எதிர்த்து போராடுவார்கள்? எந்த இந்துத்துவம் அடிமுதல் நுனிவரை வியாபித்திருக்கிறதோ, சமூகத்தின், அரசின் அனைத்து அமைப்புகளிலும் நீக்கமற நிறைந்திருக்கிறதோ அதை வீழ்த்துவதற்கு மதவாதம் உதவாது. மாறாக வர்க்கமாய் ஒன்றிணைய வேண்டும். உழைக்கும் மக்களாய் ஒன்றுசேராமல், பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தை வரித்துக்கொள்ளாமல் அதை வீழ்த்துவது கடினம்.
Filed under: கட்டுரை | Tagged: குண்டுவெடிப்பு, பெண்சாமியார், மாலேகான் |
உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்