ராஜ் தாக்கரேயும் மாநில தன்னுரிமையும்

அண்மையில் மும்பையில் பீகார், உபி மாநிலத்தை சேர்ந்தவர்களான, தொடர்வண்டித்துறை நடத்தும் தேர்வை எழுத வந்தவர்களை நவ நிர்மாண் சேனா தொண்டர்கள்(குண்டர்கள்) கடுமையாக தாக்கி துரத்தியடித்தனர். மண்ணின் மைந்தர்கள் எனும் முழக்கத்தை கையிலெடுத்துக்கொண்டு தொடர்ந்து இதுபோன்ற வன்செயல்களில் ஈடுபட்டுவருகின்றனர் அவர்கள். இந்தமுறை நாடெங்கிலுமிருந்து ராஜ்தாக்கரேவுக்கு எதிர்ப்புக்குரல் வந்தது. பீகாரில் லாலுவும், நிதீஷ்குமாரும் இணைந்து கைது செய்ய வற்புறுத்தினர். மாயாவதி எச்சரித்தார். ஒருவகையில் இதை ஆதரிக்கும் மாநில அரசும் வேற்வழியின்றி நீதிமன்ற(!)ஆணையின் பேரில் கைது செய்தது. இது போதாதா அதன் தொண்டர்களுக்கு, கலவரத்தில் ஈடுபட்டனர். பல பேரூந்துகள் அடித்து நொருக்கப்பட்டன, தீவைக்கப்பட்டன. இதற்கு நியாயம் கற்பிக்கும் வகையில் மராட்டிய காவல்துறை ராஜ்தாக்கரேயை கொல்ல முயன்றதாக கூறி பீகாரைச்சேர்ந்த ராகுல் ராஜ் என்ற இளைஞனை துப்பாக்கியை காட்டி மிரட்டியதை சாக்காக வைத்து சுட்டுக்கொன்றது. உபியைச்சேர்ந்த கூலித்தொழிலாளி ராம் தேவ்ராய் என்பவரும் ராம் நாரயண்ராய் என்பவரும் அடித்து கொல்லப்பட்டனர். இதற்கு எதிர்வினையாக பீகாரில் புகைவண்டி தீவைக்கப்பட்டு நிலமை மோசமாகியது. மலேசியத்தமிழர்களுக்காகவும் இலங்கைத்தமிழர்களுக்காகவும் கருணாநிதி குரல் கொடுக்கையில் மராட்டியர்களுக்காக நான் குரல் கொடுப்பது தவறா? என்று கேட்டு இன்னமும் எண்ணெய் ஊற்றிக்கொண்டிருக்கிறார் ராஜ்தாக்கரே.

மராட்டியத்தின் வேலைவாய்ப்புகளில் மராட்டியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட‌வேண்டும் என்பது ஒன்றும் தவறான கோரிக்கையல்ல. ஆனால் மும்பையில் நடப்பது மண்ணின் மைந்தர்கள் முழக்கத்தைவைத்து நடத்தப்படும் கழிசடை அரசியல். தொடர்ந்து இதுபோல ஏதாவது காரணங்களை ஏற்படுத்திக்கொண்டு மும்பையில் வசிக்கும் பிற மாநில, வட மாநில மக்களை தாக்கி பிரச்சனைகளை ஏற்படுத்தி அதன்மூலம் மராட்டிய மக்களிடம் தன்னுடைய இருப்பை தக்கவைத்துக்கொள்ளும் கேவலமான முயற்சி. பால்தாக்கரேவில் தொடங்கி மராட்டியத்தின் அனைத்து கட்சிகளும் இதை ஆதரிக்கவே செய்கின்றன. இதை எதிர்த்தால் ஓட்டுப்பொறுக்க முடியாது என்பதே அங்குள்ள நிலை.

ம‌ராட்டிய‌த்தில் ம‌ட்டும‌ல்ல‌ ஏற‌த்தாழ‌ அனைத்து மாநில‌ங்க‌ளிலும் வேறுவேறு வ‌டிவ‌ங்க‌ளில் இருக்க‌வே செய்கிற‌து. த‌மிழ‌க‌ம், க‌ர்நாட‌கா, கேர‌ளா இடையே ஆற்று நீர் ப‌ங்கீடு குறித்த‌ சிக்கல் நீண்ட‌ கால‌மாக‌வே இருக்கிற‌து. பாகிஸ்தான், ப‌ங்க‌ளாதேஷ், நேபாள‌ம் போன்ற‌ நாடுக‌ளுட‌ன் செய்து கொண்ட‌ ஆற்றுநீர் ப‌ங்கீட்டு உட‌ன்பாடுக‌ள் சிக்க‌லில்லாம‌ல் செய‌ல்ப‌ட்டுவ‌ரும்போது, மாநில‌ங்க‌ளிடையே ஏன் ஒத்த‌ க‌ருத்து இல்லை? நீர் ப‌ங்கீடு ம‌ட்டும‌ல்ல‌ ஒக்கேன‌க்க‌லில் க‌ர்நாட‌காவும், க‌ண்ண‌கி கோவிலில் கேர‌ளாவும் எல்லைப்பிர‌ச்ச‌னையை கிள‌ப்பிவ‌ருகின்ற‌ன‌. அஸ்ஸாம் பீகார் இடையேயும் பிர‌ச்ச‌னை உண்டு. பீகாரிக‌ள் அஸ்ஸாமில் குடியேறுவ‌தை எதிர்க்கும் இய‌க்க‌ங்க‌ள் இருக்கின்ற‌ன‌. த‌மிழ‌க‌த்தில் இந்தி எதிர்ப்பு போராட்ட‌ம் நீண்ட‌ வ‌ர‌லாறு கொண்ட‌வை. ப‌ஞ்சாபின் பிரிவினைவாத‌ம் இரும்புக்க‌ர‌ம் கொண்டு அட‌க்க‌ப்ப‌ட்டிருக்கிற‌து. இவைக‌ளெல்லாம் ம‌ண்ணின் மைந்த‌ன் முழ‌க்க‌த்தின் வேறுப‌ட்ட‌ வ‌டிவ‌ங்க‌ளே. அந்த‌ந்த‌ மாநில‌ங்க‌ளின் ஓட்டுக்க‌ட்சிகள் நில‌மைக்கேற்ப‌ இவ‌ற்றை கொம்புசீவிவிடுகின்ற‌ன‌. த‌மிழ‌ர்க‌ளும் இந்திய‌ர்க‌ளே அவ‌ர்க‌ளுக்குறிய‌ நீரைக்கொடுப்போம் என்று ஒரு க‌ட்சி அறிவித்தால் அவ‌ர்க‌ளால் க‌ன்ன‌ட‌த்தில் ஓட்டுவாங்க‌ முடியுமா? பீகாரிக‌ளை வ‌ர‌வேற்கும் ஒரு க‌ட்சியால் அஸ்ஸாமில் வென்றுவிட‌ முடியுமா? அப்ப‌டியென்றால் இது வெறும் ஓட்டு அர‌சிய‌ல் ம‌ட்டும்தானா?

இதுபோன்ற‌ பிர‌ச்ச‌னைக‌ளில் ம‌க்க‌ளின் உண‌ர்ச்சிக‌ளை தூண்டிவிட்டு லாப‌ம்தேடும் ஓட்டுக்க‌ட்சிக‌ளுக்கு ந‌ன்றாக‌வே தெரியும், எந்த‌ப்ப‌க்க‌மும் ஒரு உறுதியான முடிவு எடுக்க‌முடியாது என்ப‌து. பிற‌ மாநில‌த்த‌வ‌ரை மும்பையிலிருந்து வெளியேற்ற‌ முடியாது என்ப‌து தெரிந்திருந்தும் ந‌வ‌ நிர்மாண் சேனா ஏன் இந்த‌ பிர‌ச்ச‌னையை கிள‌ப்ப‌வேண்டும்? ஏன் அதை ஏனைய‌ க‌ட்சிக‌ள் ஆத‌ரிக்க‌வேண்டும்? எல்லா மாநில‌ங்க‌ளிலும் அந்த‌ந்த‌ மாநில‌ங்க‌ளுக்கு சாத‌க‌மான‌ அண்டை மாநில‌ங்க‌ளுக்கு பாத‌க‌மான‌ பிர‌ச்ச‌னையை கிள‌ப்பிவ‌ருவ‌த‌ற்கு இர‌ண்டு வித‌மான‌ கார‌ண‌ங்க‌ள் இருக்கின்ற‌ன‌.

முத‌லாவ‌தாக‌, நாட்டில் அடுத்த‌டுத்து அறிமுக‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்டு வ‌ரும் உல‌க‌ வ‌ங்கியின் திட்ட‌ங்க‌ளால் ம‌க்க‌ள் த‌ங்க‌ள் வாழ்வாதார‌ங்க‌ளை இழ‌ந்து தின‌க்கூலிக‌ளாக‌ பெருந‌க‌ர‌ங்க‌ளை நோக்கி த‌ள்ள‌ப்ப‌டுகின்ற‌ன‌ர். ப‌சுமைப்புர‌ட்சியாலும், ம‌ர‌பீணி விதைக‌ளாலும் விவ‌சாய‌த்தை இழ‌ந்த‌ விவ‌சாயிக‌ள் சிற‌ப்பு பொருளாதார‌ ம‌ண்ட‌ல‌ங்க‌ளால் நில‌த்தையும் இழ‌ந்து ந‌க‌ர‌த்தில் குவிகின்ற‌ன‌ர். போட்டியிருந்தால்தான் த‌ர‌மான‌ பொருட்க‌ள் கிடைக்கும் என்ற‌ பெய‌ரில் காட் போன்ற‌ ஒப்ப‌ந்த‌ங்க‌ள் மூல‌ம் சிறு குறுந்தொழில்க‌ளை இழ‌ந்த‌ ம‌க்க‌ள், புதிய‌ ஜ‌வுளிக்கொள்கையால் நெச‌வுத்தொழிலை இழ‌ந்த‌ ம‌க்க‌ள், இன்னும் மீன‌வ‌ர்க‌ள் விவ‌சாயிக‌ள் என‌ அனைத்துத்த‌ர‌ப்பின‌ரும் பாதிக்க‌ப்ப‌டுவ‌தால் அவ‌ர்க‌ளின் கோப‌த்திலிருந்து அர‌சைக்காக்க‌வும், எதிர்க்க‌ட்சிக‌ள் அர‌சை விம‌ர்சிக்க‌வும், ம‌க்க‌ள் ஆத‌ர‌வை திர‌ட்ட‌வும் பிர‌ச்ச‌னைக‌ள் தேவைப்ப‌டுகின்ற‌ன‌. இத‌ற்காக‌ அவ‌ர்க‌ள் இந்த‌ பொருளாதார‌ கொள்கைக‌ளை எதிர்க்க‌ முடியாது. செய‌ல் ப‌டுத்தியே தீர‌வேண்டும் உல‌க‌வ‌ங்கி க‌ட்ட‌ளை. எதிர்க‌ட்சிக‌ளும் நாளை ஆளும்க‌ட்சிக‌ளாகும் போது இந்த‌ திட்ட‌ங்க‌லை ஒதுக்கி வைக்க‌முடியாது. என‌வே ம‌க்க‌ளின் க‌வ‌ன‌த்தை திசை திருப்ப‌ இது போன்ற‌ உண‌ர்ச்சிக‌ர‌மான‌ பிர‌ச்ச‌னைக‌ள் அவ‌சிய‌மாயிருக்கிற‌து.

அடுத்த‌தாக‌, இந்தியா ஒரு தேச‌ம‌ல்ல‌, ப‌ல‌ தேசியங்க‌ளை‌ உள்ள‌ட‌க்கிய‌ ஒரு நாடு. ஒவ்வொரு தேசிய‌மும் த‌னித்த‌னி மொழியையும் க‌லை, ப‌ண்பாடுக‌ளையும் கொண்டுள‌ன, ஆனாலும் ப‌டைவ‌லிமையால் இணைக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌. மாநில‌ங்க‌ளுக்கேயுறிய‌ நியாய‌மான‌ எந்த‌ உரிமையுமில்லாம‌ல் இணைக்க‌ப்ப‌ட்டுள்ள‌ மாநில‌ ம‌க்க‌ளிட‌ம் ப‌ன்னாட்டு மூல‌த‌ன‌மும், த‌ர‌கு முத‌லாளிக‌ளும் இந்திய‌க்க‌ற்பை வேண்டும் போது உர‌ச‌ல்க‌ள் த‌விர்க‌முடியாத‌தாகின்ற‌ன‌. தேசிய‌ம் சார்ந்த‌ ம‌க்க‌ள் த‌ங்க‌ளுடைய‌ உரிமைக்காக‌ போராடும் போது ம‌க்க‌ளை சுர‌ண்டும் கும்ப‌ல் மேலிருந்து த‌ங்க‌ளின் சுத‌ந்திர‌மான‌ சுர‌ண்டும் உரிமைக்காக‌ ம‌க்க‌ளை ஒன்றிணைக்க‌ விரும்புகின்ற‌ன‌ர். இத‌ன் வெளிப்பாடுதான் ம‌ண்ணின் மைந்த‌ன் கோரிக்கையும் அதை எதிர்க்கும் இந்திய‌ ஒற்றுமையும்.

இதைவைத்து த‌ங்க‌ள் அர‌சிய‌லை அடையாள‌ப்ப‌டுத்திக்கொள்ளும் ஓட்டுப்பொறுக்கி அர‌சிய‌ல்வாதிக‌ள் இதை வ‌ன்முறையாக‌ வ‌ழிமொழிந்து விடுகிறார்க‌ள். இது வெறும் வ‌ன்முறை ம‌ட்டும‌ல்ல‌. ஊட‌க‌ங்க‌ளும் இதை அப்ப‌டியே சித்த‌ரிப்ப‌தால், இந்த‌ வ‌ன்முறையை ஒழித்துவிட்டால் எல்லாம் ச‌ரியாகிவிடும் என்ப‌தாக‌ ம‌க்க‌ள் ந‌ம்ப‌வைக்க‌ப்ப‌டுகிறார்க‌ள். வினையை அப்ப‌டியே பாதுகாத்துக்கொண்டு விளைவை ம‌ட்டும் ஒதுக்கிவிட‌, ஒழித்துவிட‌ முடியுமா? இந்த‌ வ‌ன்முறையை ஒழிக்க‌வேண்டுமென்றால், பிரிந்து போகும் உரிமையுட‌ன் கூடிய‌ சுய‌ நிர்ண‌ய‌த்துக்காக‌வும், ம‌றுகால‌னிய‌திக்க‌த்திற்கெதிராக‌வும் போராட‌வேண்டும். அதுதான் ச‌ரியான‌ இல‌க்கு. அந்த‌ இல‌க்கை நோக்கி ப‌ய‌ண‌ப்ப‌டாம‌ல், இந்த‌ வ‌ன்முறையை ஒழிக்க‌வேமுடியாது.

Advertisements

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: