சுப்ரமணியபுரம்: ரசிக்கத்தக்க ரவுடித்தனம்?

சுப்பிரமணியபுரம் ஏன் வெற்றி பெற்றது என்பதைப் பற்றி இந்நேரம் கோடம்பாக்கத்து முதலாளிகள் நிச்சயமாக “ரூம் போட்டு’ யோசித்துக் கொண்டிருப்பார்கள். வழக்கம் போல இப்படத்தின் நகல்கள் பல டிஸ்கஷனில் இருக்கவும் வாய்ப்புண்டு. எனினும் ரசிகர்கள் இப்படத்தை மனம் ஒன்றிப் பார்க்கிறார்கள் என்பதை மறுக்கவியலாது.

பருத்தி வீரன் ரகத்தில், அதனைக் காட்டிலும் ரசிகர்களின் மனதுக்கு நெருக்கமாக இருப்பதை உத்திரவாதப்படுத்தும் வகையில் திட்டமிட்டுத் தயாரிக்கப்பட்டிருக்கும் படம் இது.

இந்தப் படத்தில் பார்வையாளர்களைக் கட்டிப்போடும் உணர்ச்சி எது? ஒரு நண்பர் குழாமின் உயிர்த்துடிப்பான உற்சாகமும் நட்பின் அடிப்படையில் அவர்களிடையே நிலவும் விசுவாசமும்தான் அந்த உணர்ச்சி. அழகர், பரமன், காசி, டுமுக்கான், மற்றொருவன் என ஐவரடங்கிய அந்தக் குழாமின் சேட்டைகள், காதல், பிரச்சினைகள், பிரிவு, மறைவு, அனைத்தையும் பார்வையாளர்கள் அவற்றில் தோய்ந்து ரசிக்கின்றார்கள். எல்லோரிடமும் மலரும் நினைவுகளாய்ப் புதைந்திருக்கும் நண்பர் குழாமின் நினைவுகளை இந்தப் படம் மீட்டுத் தருகின்றது.
ஒவ்வொரு நண்பர் குழாமிலும் அப்பாவுக்குத் தெரிந்தே தம் அடிக்கும் வீரர்கள், அப்பாவுக்கு பயந்து ஒளியும் கோழைகள், காதலிக்கும் அதிர்ஷ்டம் வாய்க்கப் பெற்றவர்கள், அதற்காக அலைபவர்கள், காசை ஒளித்து செலவு செய்யும் காரியவாதிகள், மறைக்காமல் செலவு செய்யும் வள்ளல்கள், தோற்றப்பொலிவு இல்லாததைத் தனது நகைச்சுவை மூலம் ஈடு செய்யும் குழுவின் ஜோக்கர்கள் எனப் பலரகம் உண்டு. பாசம், காதல் மட்டுமல்ல, நண்பர் குழாம் சென்டிமென்டைக் கிளறினாலும் காசு எடுக்கலாம் என்பதை இப்படம் நிரூபித்திருக்கின்றது. *

பெற்றோர், உறவினர், ஆசிரியர், தெருக்காரர்கள் ஆகியோரிடம் சில்லறை விவகாரங்களுக்காக முரண்பட்டு, அது தொடர்பாக வருகின்ற தகராறுகளில் தங்களுடைய “வீரத்தை நிலைநாட்டுவது’ நண்பர் குழாம்களுடைய “ஆளுமை’யின் முக்கியக் கூறு. இதனைப் படத்தின் முதல்பாதியில் இயக்குநர் அன்போடு சொறிந்து விடுகின்றார். அந்த இன்பத்தில் ரசிகர்களும் வாட்டமாக முதுகைக் காட்டுகிறார்கள்.
விழிகளால் காதல் பேசும் துளசியை காதலிக்கும் பெருமையில் தனது அசட்டுத்தனத்தை மறந்துவிடும் அழகர், தனது வெறுமையை சிகரெட் பிடித்தும், நண்பர்களின் மேல் கைவைக்கும் நபர்களை ரோசத்துடன் எதிர்த்து சண்டைபோட்டும் போக்கிக் கொள்ளும் பரமன், பெரிய மனிதர்களின் கள்ள உறவை நகைச்சுவையுடன் அம்பலமாக்கும் காசி, கால் முடமாகி “ஐயோ பாவம்’ மாதிரி தெரிந்தாலும் நண்பர் குழாமின் அத்தனை நடவடிக்கைகளிலும் பங்கேற்கும் டுமுக்கான், நண்பர் குழாம் சங்கமிக்கும் அலுவலகமான சித்தன் சவுண்ட் சர்வீஸ்.. என இந்த நட்புக் குழுவின் அன்றாட வாழ்க்கையில் பார்வையாளர்கள் மெல்ல பங்கேற்பாளர்களாகி விடுகின்றார்கள்.

விவசாயம் விளங்காமல், தொழில் வளர்ச்சியும் இல்லாமல் கண்டிப்பாகச் சிறிதுகாலமாவது வேலை வெட்டியில்லாமல் சுற்றுமாறு விதிக்கப்பட்ட சிறுநகரத்து இளைஞர் குழாம்களின் அன்றாட நடவடிக்கைகள் அநேகமாக இப்படித்தான் இருக்கின்றன.

மதகுக் கட்டைகளிலும், சலூன்களிலும், தேநீர்க் கடைகளிலும், மதுக்கடைகளிலும் நேரத்தைக் கழிக்கும் இத்தகைய நண்பர் வட்டங்களில் பங்குபெறாதவர் யாரும் இருக்க முடியாது. பேசுவதற்கு விசயமே இன்றி அக்கப்போர்களையும், அரட்டைகளையும், பாலியல் ஜோக்குகளையும் பகிர்ந்து கொள்ளும் இதுபோன்ற குழுவைத் தாண்டித்தான் நம்மில் பலரும் வந்திருக்கின்றோம்.

ஊரின் நல்லது கெட்டது அத்தனையிலும் இத்தகைய நண்பர்கள்தான் நாயகர்களாக முன் நிற்கிறார்கள். நெருப்பிலும் இறங்கத் துணியும் இளமைப்பருவம் எந்த நோக்கமுமின்றி தெருச்சண்டையிலும். திரையரங்கச் சண்டையிலும், புதுப்பட ரிலீசின் கொண்டாட்டத்திலும், ரசிகர்மன்றச் சண்டையிலும் அழிகின்றது.

சில்லறைத் தகராறுகளில் சிக்கி மீளவழியில்லாத போது, சாதாரண போலீசு கேசிலிருந்து விடுபடுவதற்கு உள்ளூர் அரசியல் தலைவர்களையோ, ரவுடிகளையோ தஞ்சமடைகின்றது. பிறகு அவர்களுக்கு விசுவாசமாக நடக்கத் தொடங்கி, அவர்களுடைய அதிகாரநிழல் அளிக்கும் போதையில் கொஞ்சம் கொஞ்சமாக ஊழல்படத் தொடங்குகின்றது. இதன் ஊடாகத் தற்செயலாக நடக்கும் சில சம்பவங்கள் அவர்களது வாழ்க்கையின் போக்கையே தீர்மானித்து விடுகின்றன. இவ்வாறு சிக்கிச் சீரழியாமல் தப்புபவர்கள் வேலை தொழில் என்று ஒவ்வொருவராகப் பிரிகிறார்கள். நண்பர் குழாமும் கலைகின்றது.

உழைக்கும் வர்க்கமா நடுத்தர வர்க்கமா, நகரமா மாநகரமா என்பதற்கேற்ப அவர்களது சூழலிலும் செயல்பாடுகளிலும் சில வேறுபாடுகள் வேண்டுமானால் இருக்கலாம். இருந்தாலும் இவற்றை இணைக்கும் பொதுஇழை ஒன்று உண்டு. அதுதான் நண்பர்களுக்கிடையே நிலவும் நட்பு. அதில் ஒருவருக்கொருவர் அவர்கள் கொண்டிருக்கும் விசுவாசம். கனவுக்கு ஏற்ற வேலை கிடைக்காமல், பெற்றோரால் தண்டச்சோறு என்று இகழப்படும் நேரத்தில் இவர்களை ஆசுவாசப்படுத்தும் உறவே இந்த நட்புதான்.

சுப்பிரமணியபுரம் நண்பர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள், துன்பங்கள், மகிழ்ச்சிகள் அத்தனையிலும் ரசிகர்கள் தாங்களும் ஒருவராகக் கலந்து விடுகின்றார்கள்.

மற்றவர்களுக்கு பெரிய தீங்கிழைக்காத, ரவுடித்தனம் என்று சொல்லிவிட முடியாத விடலைப்பருவச் சேட்டைகளை விவரிக்கின்றது படத்தின் முதல்பாதி. “கபடமற்றவர்கள் நல்லவர்கள்’ என்ற மதிப்பீட்டுடன் படத்தின் நாயகர்கள் பக்கம் ரசிகர்களை இழுத்து நிறுத்தியும் விடுகின்றது. பின்பாதியில் நண்பர்கள் கொலை செய்யும் ரவுடிகளாக மாறுகிறார்கள். அதற்கு அந்த அப்பாவிகள் பொறுப்பல்ல, சூழ்நிலை தான் அவர்களை அப்படி மாற்றி விடுகின்றது என்று காட்டுகிறார் இயக்குநர்.

அரசியல்வாதியான அண்ணனை மாவட்டத் தலைவராக உயர்த்த நினைக்கும் கனகு, தங்களுக்குச் செய்திருக்கும் உதவிக்கு செய்நன்றியாக முதல் கொலையைச் செய்கிறார்கள் நண்பர்கள். பிறகு சிறையிலிருந்து தங்களைப் பிணையில் எடுக்க உதவியவனுக்கு செய்நன்றியாக இன்னொரு கொலை. பிறகு, தங்களைக் கொல்ல கனகு அனுப்பும் ரவுடிகளை “வேறு வழியின்றி’ தேடிக் கொலை செய்கிறார்கள். இறுதியில் அழகரின் காதலியே தனது சித்தப்பன் கனகுவிடம் அழகரைக் காட்டிக் கொடுக்கிறாள். அழகர் கொலை செய்யப்படுகின்றான்.

காதல் துரோகமிழைத்த போதும் நட்பு தனது விசுவாசத்தை வெறித்தனமாகக் காட்டுகின்றது. கனகுவைத் தேடிப்பிடித்து ஆட்டோவில் தூக்கிப்போட்டு வன்மத்துடன் அவனது கழுத்தை அறுத்துக் கொல்கிறான் பரமன். ரத்தம் தெறிக்கத் தெறிக்க ரசிகர்களின் கையொலி வலுக்கின்றது. பணத்துக்காக நண்பன் பரமனையே காட்டிக் கொடுக்கிறான் காசி. 28 ஆண்டுகள் கழிந்த பின்னரும் இந்தத் துரோகத்தைப் பழிவாங்குகிறது நட்பின் விசுவாசம். “நொண்டி’யாய் இருந்தபோதும் டுமுக்கான் காசியைத் தேடிவந்து கொலை செய்கிறான். நட்பின் மேன்மை காப்பாற்றப்படும் உணர்ச்சி மேலோங்கிடப் பார்வையாளர்கள் அரங்கை விட்டு அகலுகின்றார்கள்.

இந்தப் பின்பாதிக் கதையில் ரவுடிகளைப் போற்றித் துதிக்கும் வழக்கமான தமிழ் சினிமா மரபிற்கு திரைப்படம் மாறிவிடுகின்றது. சில்லறைச் சேட்டைகள் செய்து கொண்டிருக்கும் நண்பர்கள் விசுவாசம் என்ற ஒரே காரணத்துக்காக (அழகரைப் பொருத்தவரை காதலிக்காகவும்), தமக்கு சம்பந்தமே இல்லாத ஒரு தலைவரைக் கொலைசெய்கின்றார்கள். கொலை செய்வது என முடிவெடுத்த பின் நண்பர்களிடையே தயக்கம், பயம், விவாதம், சண்டை எதுவும் இல்லை பரமனின் பார்வையில் தெரியும் சிறிய ஆட்சேபத்தைத் தவிர.

அரசியல் தலைவர்கள்.. சதிகாரர்கள் தொண்டர்கள்.. ஏமாளிகள் என்ற சித்தரிப்பும் உண்மைக்கு மாறானது. அழகிரிக்காக தினகரன் அலுவலகத்தை அட்டாக் பாண்டி கோஷ்டி தாக்கியது வெறுமென உணர்ச்சிவசப்பட்டு நடக்கவில்லை. அடிக்கச் சொன்னவருக்கு மட்டுமல்ல, அடித்தவருக்கும் பொருளாதார நலன்கள் இருப்பதால்தான் இவை நடக்கின்றன. எலும்புத் துண்டைப் போடாமல் எந்தத் தலைவரும் தொண்டர்களைத் தக்கவைத்துக் கொள்ள முடியாது. துண்டு கிடைக்காத இடங்களில் தொண்டர்களும் தமது விசுவாசத்தைக் காட்டுவதில்லை. மக்களுக்குக் கொடுக்கப்படும் வாக்குறுதிகளைத்தான் அரசியல்வாதிகள் காற்றில் பறக்கவிட முடியும். மற்றபடி தனிப்பட்ட விசுவாசத்துக்காக ஊழியம் செய்வதெல்லாம் நடப்பில் இல்லை. கதை நடைபெறும் 80 களிலும் இல்லை.

சின்னச் சின்ன அடிதடிகள் என்பதைத் தாண்டி, ஒரு கொலை என்ற அளவிற்குச் செல்லும்போது, அது நீதியா, நியாயமா என்பதற்காக விவாதம் நடக்கவில்லையென்றாலும், அந்தக் குழுவிலுள்ள ஒவ்வொருவனும் தனது சொந்த எதிர்காலத்தை நினைத்தாவது அது குறித்து விவாதிப்பது என்பது நடந்தே தீரும். அத்தகைய விவாதம் நண்பர் குழுவின் ஒற்றுமையைக் குலைத்து விடும் என்பதால் அதனைத் தவிர்த்திருக்கின்றார் இயக்குநர். “நண்பர்கள் கேள்விக்கிடமற்ற முறையில் கனகுவின் மீது வைத்திருந்த அப்பாவித்தனமான விசுவாசம்’ என்ற சென்டிமென்ட் மூலதனத்தையும் அது காலியாக்கிவிடும் என்பதால் நண்பர் குழுவை ஊமையாக்கி விட்டார் இயக்குநர்

அடுத்தடுத்து கொலைகள் தொடர்கின்றன. நண்பர்களுக்கு கொலை பழகிவிட்டது. கொலைக்கு பணமும் வாங்கிப் பழகிவிட்டார்கள். இதுதான் சீரழிவு தீவிரப்படும் தருணம். ஆத்திரத்தில் ஒரு கொலை செய்துவிட்டு ஆயுள்தண்டனை அனுபவிக்கும் கைதிகளுக்கும் இவர்களுக்கும் பாரிய வேறுபாடு உள்ளது. “சூழ்நிலைகளால் உருவாக்கப்படும்’ இத்தகைய ரவுடிகள், முதல் கொலையில் வேண்டுமானால் சூழ்நிலையின் கைதியாக இருந்திருக்கலாம். அதன்பின் அவர்கள் அதுகாறும் தாங்கள் கொண்டிருந்த விழுமியங்களை ஒவ்வொன்றாக இழக்கத் தொடங்குகிறார்கள். தமது தற்காப்பு, தமது நலன், தமது ஆதிக்கம் இவற்றை நிலைநாட்ட எதையும் செய்யும் பக்குவத்துக்கு வந்து சேருகின்றார்கள். இத்தகைய சூழலில் சிறை பழகி விடும், போலீசும் பழகி விடும், குற்றமும் பழகி விடும்.

ஒரு செயல் நேர்மையானதா, சரியானதா என்பதைச் சீர்தூக்கிப் பார்க்கும் அளவுகோல்கள் மாறிவிடும். இரக்கமின்மையும், குடியும், கூத்தும், கட்டைப் பஞ்சாயத்தும், அதனால் வரும் பணமும், உழைக்காமல் தின்னும் ஊதாரி வாழ்க்கையும் பழகி விடும். பிறகு இந்தச் சொகுசு வாழ்க்கைதான் அவர்களது விழுமியங்களையும், அவர்கள் பேசும் நீதிகளையும் தீர்மானிக்கும்.

இது எப்படி நடக்கிறது, ஏன் நடக்கிறது? கதையின் முன்பாதியில் இனிய இளைஞர்களாக இருந்தவர்கள் எப்படி இதுபோல உருமாறினார்கள்? இவற்றைச் சித்தரிக்க முயன்றிருந்தால், அந்த அப்பாவிகளுக்கு உள்ளே இருந்த காரியவாதிகள், அந்த காமெடியன்களுக்கு உள்ளே இருந்த குரூர மனோபாவங்கள், அவர்களுடைய விசுவாசத்துக்கு உள்ளே ஒளிந்திருந்த காரியவாதம் போன்றவை வெளிவந்திருக்கும். வெளித்தோற்றத்துக்கு ஜாலியானதாகத் தெரியும் இத்தகைய நண்பர் குழுக்களின் வாழ்க்கை, உண்மையில் எத்தகைய விபரீதங்களை தனக்குள்ளே வைத்திருக்கின்றது என்பதும் விளங்கியிருக்கும்.

ஆனால் இவை எதுவும் இயக்குநரின் நோக்கமில்லையே. நண்பர் குழாமின் விசுவாசம் என்ற சென்டிமென்டை மட்டுமே மையப்படுத்தி, அதன் சிதைவை ஒரு அவலச்சுவையாக சித்தரிப்பதே இயக்குநரின் இலக்கு. இந்த இலக்குதான் பார்வையாளர்களின் அறிவை மழுங்கடித்து உணர்ச்சிப்பூர்வமாக அவர்களைப் படத்துடன் ஒன்றச் செய்திருக்கின்றது.

இது வழக்கமான வணிகச்சினிமா உத்திதான் எனினும், எதார்த்தம் என்ற தோற்றத்துக்குள் இது புதைந்திருப்பதால் இதனை அடையாளம் காண்பது பலருக்கு இயலாமல் போகின்றது.

மதுரை மண்ணின் வாழ்க்கையும், மற்ற வட்டார வழக்குகளைக் காட்டிலும் மதுரை மொழியில் வீசும் மண்வாசனையும், எதார்த்தமான காட்சி சித்தரிப்புகள் ஏற்படுத்தும் சொந்த ஊர் குறித்த ஏக்கமும் ரசிகர்கள் இந்தப் படத்தோடு நெருக்கமாவதற்கு இன்னுமொரு காரணமாக இருக்கின்றது.

தமிழ் சினிமாவின் வெற்றி அல்லது தோல்வி மதுரை ரசிகர்களின் எதிர்வினையைப் பொறுத்துதான் என்பார்கள். விசேசம், சாவு, அரசியல் அத்தனைக்கும் விதவிதமான சுவரோட்டிகள் மதுரையில்தான் அதிகம். வெற்றுப் பந்தாவை ஆபாசமாகப் பிரகடனம் செய்யும் கட்அவுட்டுகளும், பிளக்ஸ் பேனர்களும் அங்குதான் அதிகம். எல்லா ரசிகர் மன்றங்களும் தீவிரமாகச் செயல்படும் புண்ணியத்தலமும், தமிழ் சினிமாவுக்கு “மண்வாசனை’ கமழும் இயக்குநர்களைத் தொடர்ந்து அளிக்கும் களஞ்சியமும் மதுரைதான்.

இளைஞர்களின் முடி, உடை, நடை, பாவனை ஆகியவற்றின் புதிய போக்குகளும், நக்மா வளையல், குஷ்பு சேலை, த்ரிஷா ஜிமிக்கி, அசின் மாலை ஆகிய அனைத்துமே மதுரையில்தான் ரிலீஸ். கோவில் திருவிழா, பிரம்மாண்டமான சீரியல் செட், வாணவேடிக்கைகள், நாட்டுபுறக் கலைகள், ரிக்கார்டு டான்சு, நாடகங்கள் அத்தனைக்கும் செறிவான மையம் மதுரைதான். மஞ்சுவிரட்டிலிருந்து, மாமன் மகளைக் கட்டித் தரவில்லை என்பதற்காகக் கொலை செய்யும் வீரத்திற்கும் மதுரைதான் தலைநகரம். குடும்பத் தகராறுக்கு கொலை செய்து ஆயுள் தண்டனையில் சிறையிலிருப்பவர்களும் இங்குதான் அதிகம்.

உதிரிப் பாட்டாளிகளிடமிருந்து தமிழகத்திற்கு தேவையான ரவுடிகளை அளிக்கும் அமுதசுரபியும் மதுரைதான். ஆதிக்கசாதி வெறியின், தேவர்சாதி வெறியின் சிங்காரத் தலைநகரமும் மதுரைதான். கந்து வட்டியிலிருந்து, மீட்டர் வட்டி வரை எல்லா வட்டிகளையும் கண்டுபிடித்து தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தியதும் மதுரைதான். வேலை வெட்டி இல்லாமல் பெண்டாட்டி உழைத்து சம்பாதித்த காசை அடித்துப் பிடுங்கி குடித்துவிட்டு ஆடும் “வீர’த்திலும் மதுரைக்கே முதலிடம்.

சாதிய, நிலவுடைமைச் சமூகத்தின் எல்லா பிற்போக்குகளையும் பொத்திப் போற்றி வளர்க்கும் இந்த மதுரையின் படிமங்கள் அனைத்தும் அழுகிவரும் நிலப்பிரபுத்துவ சமூகத்தின் எச்சங்களே.

சுப்பிரமணியபுரத்தின் நாயகர்களான நண்பர்களின் “வெகுளித்தனமான, வேடிக்கையான, வண்ணமயமான, உயிர்த்துடிப்பான வாழ்க்கை’, தோற்றத்திலும் உள்ளடக்கத்திலும் மதுரையையே ஒத்திருக்கின்றது. இத்தகைய அஞ்சாநெஞ்சர்களுடைய வீரத்தையும், அவர்களுடைய விசுவாசிகளின் அலப்பறைகளையும் சுப்பிரமணியபுரம் மக்கள் இன்றும் அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். சுப்பிரமணியபுரத்தின் நாயகர்கள் ஒருவேளை கொல்லப்படாமல் உயிரோடு இருந்திருந்தால் அவர்களும் மதுரையில் ஒரு ஏரியாவை மடக்கி ஆண்டு கொண்டிருப்பார்கள். அழகிரியின் மகன் துரை தயாநிதியின் தளபதிகளாகவும் வளர்ந்திருக்கக் கூடும்.

· வேல்ராசன்

புதிய கலாச்சாரம் 2008

One Comment Add yours

  1. அம்மா ரசிகன் சொல்கிறார்:

    நல்ல படத்த இப்பிடி போட்டு தாக்கியிருக்கீகளே உக்களுக்கே இது நாயமா படுதா

    அம்மா ரசிகன்

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s