புதுப்பேட்டை: நிழல் உலகைக் கொண்டாடும் திரை நிழல்

தமிழ் சினிமாவில் தாதா ஃபார்முலா படங்கள் ஓடும் காலமிது. வாழ்க்கையில் நாடோடிகளாக ஓடிக் கொண்டிருக்கும் இளைஞர்கள் மட்டும் திரையரங்கிற்கு வருவதால் அவர்களைக் கவர விறுவிறுப்பான திரைக்கதை தேவைப்படுகிறதாம். விறுவிறுப்பிற்கு வேறு எந்த ஃபார்முலாவையும் விட தாதாயிசம் பொருத்தமாக இருப்பதால் சித்திரம் பேசுதடி தொடங்கி, பட்டியல், தலைநகரம், கொக்கி, ஆறு வரை நீளும் பட்டியலில் தற்போது புதுப்பேட்டை.

சென்னையின் சேரிப் பகுதியொன்றில் வாழும் குமார் பள்ளி செல்லும் ஒரு விடலைப் பருவ இளைஞன். அப்பா ஒரு குட்டி தாதா. வீட்டுச் சண்டையில் அன்பான அம்மாவைக் கொல்லும் அப்பாவுக்கு அஞ்சி வீட்டை விட்டு ஓடுகிறான். முதலில் பிச்சையெடுக்கிறான். பின்னர் கஞ்சா விற்கும் கும்பலில் சேருகிறான். அடுத்து அந்தக் கும்பலின் தலைவனையே கொலை செய்து கை தேர்ந்த தாதாவாகிறான். ஒன்றுக்கு இரண்டாய் திருமணம் செய்து கொள்கிறான். வெறும் குமார் கொக்கி குமாராக பரிணமிக்கிறான். அரசியலுக்கும் அறிமுகமாகிறான். ஏற்றத்தாழ்வான தாதா வாழ்க்கையில் அடிபட்டு இறுதியில் எம்.எல்.ஏ.வாகவும் சுயநிதிக் கல்லூரிகள் ஆரம்பித்து கல்வி வள்ளலாகவும் செட்டிலாகிறான். படத்தில் இயக்குநர் சொல்லும் நீதி “”சர்வைவல் ஆப் தி பிட்டஸ்ட்” அதாவது வலியதே வெல்லும்.

இந்த நீதி படத்திற்குப் பொருந்துகிறதோ இல்லையோ கோடம்பாக்கத்து இயக்குநர்களுக்கு முற்றிலும் பொருந்தும். ஆறு பாடல், ஐந்து சண்டை, சென்டிமென்ட் என்ற ஃபார்முலாவுக்குள்ளேயே எந்தக் கதை வெற்றி பெறும் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. அப்படி வெற்றி பெறும் படங்களின் வார்ப்படங்களாக ஏனையவை பின் தொடருகின்றன. தனது முந்தையப் படங்களில் காதல் கலந்த சைக்கோத்தனத்தை வெளியிட்ட இயக்குநர் தனக்கு அப்படி ஒரு முத்திரை விழுந்து விடக்கூடாது என்பதற்காக வேறு ஒரு தளத்திற்குச் சென்று புதுப்பேட்டை எடுத்தாராம். இயக்குநர் இந்தப் படத்தின் மூலம் என்ன சொல்ல வருகிறார். ஒரு ரவுடி எப்படி உருவாக்கப்படுகிறான், எப்படி வாழ்கிறான் என்பதை யதார்த்தமாகச் சித்தரித்திருக்கிறாராம்.

கொக்கி குமார் தனியாளாய் நின்று பட்டாக் கத்தியினால் ஐம்பது பேரை வெட்டிச் சாய்ப்பது என்ற வகையில் இந்த யதார்த்தம் மலிவான தெலுங்குப் படத்தைத் தாண்டவில்லை. எந்திர கதியில் ரவுடியாக்கப்படும் குமார் தனது குற்றநடவடிக்கைகள் குறித்து கடுகளவும் குற்றஉணர்வு அடைவதில்லை. பல சமயங்களில் அதை இரசித்தும் செய்கிறான். தனது கட்சித் தலைவரின் மகளை மயக்கி வீடியோ படமெடுத்தவனை வெட்டும் காட்சியில் தனது சகாவிடம் வெட்டுப்படுபவன் சத்தமிடாதவாறு வெட்டுமாறு சாதாரணமாகக் கூறுகிறான். பார்வையாளர்களும் இத்தகைய காட்சிகளை காமடியாக இரசிக்கிறார்கள். அவ்வகையில் இப்படம் ரவுடியிசத்தைக் கொண்டாடுகிறது.

மக்கள் தாதா படங்களை இரசிப்பது போல நிஜ வாழ்க்கையில் ரவுடிகளை ஆதரிக்கிறார் களா? இல்லை, அவர்கள் மீது பயம் கலந்த வெறுப்புணர்வே மக்களிடம் நிலவுகிறது. சந்தைக் கடைகளில் மாமூல் வசூலிக்கவும், வீட்டைக் காலி செய்ய மிரட்டவும் வரும் ரவுடிகளை எங்கும் எவரும் ரசிப்பதில்லை. சென்னை திருவல்லிக்கேணி தொகுதியில் அ.தி.மு.க. வென்றதிலிருந்தே போலீசால் கொலை செய்யப்பட்ட அயோத்திக் குப்பம் வீரமணிஅம்மக்களிடம் பெற்றிருந்த “செல்வாக்கை’ நாம் புரிந்து கொள்ளலாம்.

உடையார், ஜேப்பியார், பங்க் குமார் இன்னபிற முன்னாள் இந்நாள் தாதாக்களின் தனித்தனி வாழ்க்கைச் சம்பவங்களைத் தொகுத்துக் கூறும் புதுப்பேட்டை, ரவுடிகள் உருவாகக் காரணம் ஏதோ வறுமை என்று மலிவுபடுத்தி கருப்பு வெள்ளையாக மட்டும் பார்க்கிறது. எல்லா தாதாப் படங்களும் ரவுடிகளின் பட்டாக்கத்தியின் செயல்பாடுகளை மட்டும் சொல்கின்றனவேயன்றி ரவுடியிசத்தின் சமூகம் தழுவிய நடவடிக்கைகளை பார்ப்பதுமில்லை. பரிசீலிப்பதுமில்லை. விறுவிறுப்பான திரைக்கதைகளுக்கு பட்டாக்கத்தி உதவுவது போல ரவுடிகளின் சமூகப் பரிமாணம் பயன்படுவதில்லை என்பதே காரணம்.

அடி, வெட்டு, குத்து, ரத்தம் முதலானவற்றை நடுங்காமல் செய்வதற்கு யார் தயார் என்ற அளவில் மட்டுமே வறுமையும் சேரிப்பகுதிகளும் ரவுடியிசத்திற்குத் தேவைப்படுகின்றன. ஆனால் ரவுடியிசம் முதன்மையாக ஆளும் வர்க்கத்திற்குத்தான் தேவைப்படுகின்றது. அவ்வகையில் ரவுடிகளை இயக்குபவர்களும், அதன் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களும் அடிதடியில் இறங்குவதுமில்லை; இறங்கத் தேவையுமில்லை. இவர்கள்தான் திரைப்படங்கள் வெளிச்சமிட மறுக்கும் முதல் தரத் தாதாக்கள்.

காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவில் வளாகத்தில் சங்கரராமனைக் கொடூரமாகக் கொலைசெய்தது யார்? செய்ய வைத்தது யார்? அதுவும் பட்டப்பகலில் வெட்டவெளியில் கோவில் வளாகத்திலேயே கொல்லுமளவுக்கு எவர் தைரியம் கொடுத்தார்கள்? சர்வ வல்லமை படைத்த ஜெயேந்திரனின் அதிகாரபலம் அப்படி.

ஆகவே ரவுடிகளின் நடவடிக்கைகளுக்கான “வீரம்’ இத்தகைய பின்புலத்திலிருந்தே எழ முடியும். தமிழ் சினிமா சித்தரிப்பது போல அது கத்தியைச் சுற்றும் வீரக்கலையல்ல. அது ஆயுதபலங்கொண்டு அதிகாரபூர்வமாக மக்களை ஒடுக்கும் ஆளும் வர்க்கம் கள்ளத்தனமாக பெற்றெடுத்த பொறுக்கிக்கலை.

ரவுடியிசத்தின் பின் உள்ள ஆளும் வர்க்கத்தை கவனமாகத் தவிர்த்து விட்டு, அவர்களை அரசியல்வாதி களுடன் மட்டும் முடிச்சுப் போட்டுக் காட்டுவது வெறும் அசட்டுத்தனமல்ல் திராவிட இயக்கத்தால் அரசியல் தூய்மை கெட்டு விட்டதாகப் புலம்பும் பார்ப்பனக் கும்பலுடைய அரசியல் கண்ணோட்டத்தின் கலைப்பதிப்பு தான் இத்தகைய சித்தரிப்பு.

அடிதடிகளை மட்டும் செய்யும் நான்காந்தர ரவுடிகளின் தேவையும், சேவையும் குறைத்து வரும் காலமிது. அவற்றை முதல்தர ரவுடிகளான போலீசாரே பார்த்துக் கொள்கிறார்கள். 1970களில் கம்யூனிஸ்டுகளின் கோட்டையாக இருந்த பம்பாய்த் தொழிற்சங்கத்தை உடைப்பதற்கு காங்கிரசுக்கும், முதலாளிகளுக்கும் சிவசேனா ரவுடிகள் தேவைப்பட்டார்கள். இன்றோ அந்த வேலையை நீதிமன்றமும், போலீசும் பார்த்துக் கொள்கின்றன. இன்றைய உலகமயமாக்கச் சூழலில் நீதிமன்றமே கத்தியின்றி, ரத்தமின்றி தொழிலாளர்களின் உரிமையை பல்வேறு தீர்ப்புகளில் காவு வாங்கியிருக்கிறது. மறுபுறம் அரியானா குரேகானில் ஹோண்டா நிர்வாகத்தின் அடக்குமுறைக்கு எதிராகப் போராடியத் தொழிலாளிகளை அடித்து நொறுக்கும் வேலையைப் போலீசே செய்து விடுகிறது.

முன்பு ரவுடிகளின் வழிப்பறி, கொள்ளை, மாமூலில் பங்கு போட்ட போலீசு இன்று தானே அதைச் செய்து வருகிறது. தாராளமயம் பெற்றெடுத்த இன்றையப் பொருளாதாரச் சூழலில் கருப்புப் பணமும், கள்ளப் பணமும், முறைகேடுகளும் பெருக்கெடுத்து ஓடும்போது அவற்றைச் சுற்றிவளைத்து ரவுடிகள் வழியாக பெறுவதற்குப் போலீசுக்கு பொறுமையிருப்பதில்லை. மேலும் நாலாந்தர ரவுடிகளை உருவாக்கி வளர்த்தெடுப்பதில் போலீசின் பங்கே பிரதானமானது. ஆனால் இந்தப் “போலீசு ரவுடிகளை’ கதையாக எடுக்கும் நேர்மையும் தைரியமும் கோடம்பாக்கத்துக் கடவுளர்களுக்கு இருப்பதில்லை. கள்ளப் பணத்திலிருந்து உயிரையும், விபச்சாரத்திலிருந்து உணர்ச்சியையும் பெறும் திரையுலகம் தன் இயல்பிலேயே ஆளும் வர்க்க எடுபிடியாக இருப்பதில் வியப்பொன்றுமில்லை.

புதுப்பேட்டையில் தாதாக்கள் கஞ்சா விற்றும் விபச்சாரம் செய்தும் பணத்தை அள்ளி அரசியல் கட்சிக்கு கப்பம் கட்டுகிறார்கள். யதார்த்தத்தில் கஞ்சா விற்பவர்கள் மிகச் சாதாரணமானவர்களே. மேட்டுக்குடி விபச்சாரத்தில்தான் இலட்சக்கணக்கில் பணம் புழங்குகிறது. அரசியல் கட்சிகளும் ரவுடிகளை நம்பி பணம் வசூலிப்பதில்லை. தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரசு, பா.ஜ.க. போன்ற பெரிய கட்சிகள் பெரும் முதலாளிகளிடம் தான் பணிவாக நிதி பெறுகின்றன. அதற்குரிய சேவையையும் கடமையோடு செய்கின்றன. ரவுடித்தனத்தின் மூலம் வரும் பணத்தைவிட அதிகாரப்பூர்வமான ரியல் எஸ்டேட், சுயநிதிக் கல்லூரி, மது தயாரிப்பு விற்பனை, மணல் விற்பனை, 24 மணி நேர மருத்துவமனை, கந்துவட்டி பைனான்ஸ் போன்றவற்றிலேயே கொழுத்த இலாபம் கிடைப்பதால் பல முன்னாள் ரவுடிகள் இப்படித்தான் மாறியிருக்கின்றனர்.

பம்பாய் முன்னாள் கடத்தல் மன்னனான ஹாஜி மஸ்தான் பின்னாளில் ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் போது இதிலேயே இவ்வளவு பணம் கிடைப்பது முன்பே தெரிந்திருந்தால் கடத்த தொழிலே செய்திருக்க மாட்டேன் என்றான். இன்று, இறக்குமதி ஏற்றுமதிக்கான தடைகள் அனைத்தும் விலக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் கடத்துவதற்கு என்ன அவசியம் இருக்கிறது? ஆகவே நான்காந்தர ரவுடியிசம் அதன் தேவையை இழக்கும் நிலையில்தான் ரவுடிப்படங்கள் அதிகம் வருகின்றன.

படத்தில் ஒரு காட்சியில் கொக்கி குமார் தனது அடியாள் நண்பனது தங்கையின் திருமணத்தை நடத்தி வைக்கப் போய், அடாவடித்தனமாக இவனே தாலி கட்டி விடுகிறான். “”நான் கற்பனை செய்திருக்கும் பெண்ணை நேரில் பார்க்கும் போது, அவளை எடுத்துக் கொள்ளும் அதிகாரமும் இருக்கும் போது நான் வேறு என்ன செய்யமுடியும்” என்று தத்துவம் வேறு பேசுகிறான்.

உண்மையான ரவுடிகளுக்கு இப்படி யோசித்துப் பேசத்தெரியாது என்பது ஒருபுறமிருக்கட்டும்; ஆனால் முதல்தர ரவுடிகள் இப்படித்தான் நடந்து கொள்கிறார்கள். இல்லையென்றால் சாதாரண குமாஸ்தாவாக வாழ்க்கையை ஆரம்பித்த திருபாய் அம்பானியின் தொழில் சாம்ராஜ்ஜியம் பல்லாயிரம் கோடி சொத்துக்களாக எப்படி மாறியிருக்க முடியும்? உண்மையான ரவுடியிசம் தொடங்கும் இடத்தில் புதுப்பேட்டை முடிந்து விடுகிறது.

வேல்ராஜன்

புதிய கலாச்சாரம் 2006

One thought on “ புதுப்பேட்டை: நிழல் உலகைக் கொண்டாடும் திரை நிழல்

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s