இந்தியா பாக்கிஸ்தான் போர் பீதியின் பின்னால்….

 

    

 இந்தியாவின் வர்த்தக தலைந‌கரான மும்பையில் கடந்த மாதம் நடத்தப்பட்ட தாக்குதலை முன்னிட்டு இந்தியா பாக்கிஸ்தான் இடையே மீண்டும் போர் பீதி ஏற்பட்டிருக்கிறது. தாக்குதல் நடத்தியவர்கள் பாக்கிஸ்தானியர்கள், பாக்கிஸ்தானில் தான் திட்டம் தீட்டப்பட்டது என்றும், ஆதாரங்களை ஒப்படைத்துவிட்டோம் என்றும், ஒரு மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று கெடு விதித்து இந்தியாவும்; தாக்குதல் நடத்தியதில் பாக்கிஸ்தானின் தொடர்பு இல்லையென்றும், ஆதாரம் போதாது என்றும், இந்தியா கொடுத்துள்ள பட்டியலில் இருக்கும் இருபது பேரை இந்தியாவிடம் ஒப்படைக்கத்தேவையில்லை என்று பாக்கிஸ்தானும் மாறிமாறி ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டியதில் பதட்டம் கூடியது. இரண்டு நாடுகளும் போருக்கான தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. இந்த வெறியூட்டும் குற்றச்சாட்டுகளையும், போர்ப்பதட்டத்தையும் தேசபக்தியாய் மொழிமாற்றம் செய்வதில் ஊடகங்கள் முனைப்புடன் செயல்பட்டுவருகின்றன. கடந்த காலங்களில் நடைபெற்ற போர்களில் கூட இப்படித்தான் நடந்தது. அப்படியே ஏற்றுக்கொள்வதும் ஆதரவு தெரிவிப்பதுதான் மக்களின் கடமை என்பதாக முன்மொழியப்படுகிறது. மாற்றுக்கருத்து கொண்டிருந்தாலோ தேசவிரோதி என்பதற்கு வேறு சான்று எதுவும் தேவையில்லை.

 

     மும்பை தாக்குதல் நடைபெற்ற உடனேயே பாக்கிஸ்தானின் தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தும் உரிமை இந்தியாவுக்கு உண்டு என்று முதலில் தொடங்கிவைத்தவர் அமெரிக்க அதிபராகவிருக்கும் ஒபாமா. பின்னர் காண்டலிசா ரைசும் வேறு சில அதிகாரிகளும் தில்லிக்கும் இஸ்லாமாபாத்திற்கும் மாறிமாறி பறந்தனர். இந்தியாவில் இருக்கும்போது தீவிரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்காவிட்டால் சர்வதேசசமூகத்தில் பாக்கிஸ்தான் தனிமைப்படுத்தப்படும் என்று இந்தியாவுக்கு சாதகமாக பாடுவது. பின் பாக்கிஸ்தான் சென்று பாக்கிஸ்தானின் தீவிர‌வாத‌த்திற்கு எதிரான‌ ந‌ட‌வ‌டிக்கை திருப்தியாக‌ இருக்கிற‌து என்று சுதிமாற்றிப்பாடுவ‌து. இத‌ன்மூல‌ம் போரை த‌ணிப்ப‌த‌ற்கான‌ முய‌ற்சியில் ஈடுப‌டுவ‌தாக‌ போக்குகாட்டிக்கொண்டே அதை திணிப்ப‌தில் தீவிர‌மாக‌ இருக்கிற‌து. ஒருக‌ண‌ம் பாக்கிஸ்தானுக்கு எதிராக‌ ராணுவ‌ ந‌ட‌வ‌டிக்கை இல்லை என‌ பிர‌த‌ம‌ர் கூறுகிறார், ம‌றுக‌ண‌ம் மும்பைதாக்குத‌லுக்கு த‌க்க‌ ப‌தில‌டி கொடுக்க‌ப்ப‌டும் என‌ சோனியாகாந்தி முழ‌ங்குகிறார். இத‌ற்கெல்லாம் மேலாக‌ போர் தொடுத்தால் ச‌ந்திக்க‌த்த‌யார் என்றும், எங்க‌ள் ராணுவ‌த்தை குறைத்து ம‌திப்பிட‌வேண்டாம் என்றும் பாக்கிஸ்தான் அதிப‌ர் ச‌வ‌டால் அடிக்கிறார். இவைஎல்லாம் ஒன்றுகூடி இந்த‌ போர் ப‌த‌ட்ட‌த்தை ம‌க்க‌ளிட‌ம் நியாய‌ப்ப‌டுத்துகிற‌து. ஆனால் மும்பைத்தாக்குத‌லின் பின்ன‌ணி என்ன‌? போரின் மூல‌ம் இதுபோன்ற‌ தாக்குத‌ல்க‌ளை நிறுத்திவிட‌முடியுமா? என்ப‌ன‌போன்ற‌ முக்கிய‌மான‌ கேள்விக‌ள் புற‌ந்த‌ள்ள‌ப்ப‌டுகின்ற‌ன‌.

 

     பொதுவாக‌ பாக்கிஸ்தானில் ராணுவ‌ ச‌ர்வாதிகார‌மும் ம‌க்க‌ளாட்சியும்(!) மாறிமாறி வ‌ந்தாலும் நிர்வாக‌த்தில் ராணுவ‌த்தின் கை மேலோங்கியே இருக்கிற‌து. இந்திய‌வுக்கு எதிரான‌ தாக்குத‌ல்க‌ளில் அது முனைப்பு காட்டுகிற‌து என்ப‌தையும் முழுதாக‌ ம‌றுப்ப‌த‌ற்கில்லை. அதேநேர‌ம் இந்திய‌ உள‌வு அமைப்புக‌ளும் பாக்கிஸ்தானுக்கு எதிரான‌ செய‌ல்க‌ளில் ஈடுப‌ட‌வேயில்லை என்றும் கூறிவிட‌முடியாது. இப்ப‌டி இர‌ண்டு நாடுக‌ளும் ஒன்றுக்கு எதிராய் ம‌ற்றொன்று செய‌ல்ப‌டுவ‌த‌ன் வேரான‌து காஷ்மீர் தேசிய‌ விடுத‌லையில் புதைந்திருக்கிற‌து. தொட‌க்க‌த்தில் காஷ்மீர் தேசிய‌ விடுத‌லை போராட்ட‌மாக‌வே இருந்த‌ காஷ்மீர் பிர‌ச்ச‌னையை இரு நாடுக‌ளும் த‌ங்க‌ள் அர‌சிய‌ல் சூழ்நிலைக‌ளுக்கு சாத‌க‌மாக்க‌வேண்டி ம‌த‌ப்பிர‌ச்ச‌னையாக‌ மாற்றின‌. த‌ற்போது இந்திய‌ப்ப‌குதி காஷ்மீரில் ச‌ற்றேற‌க்குறைய‌ ஐந்து பேருக்கு ஒருவ‌ர் என்ற‌ க‌ண‌க்கில் ராணுவ‌ம் அங்கே நிலைபெற்றிருக்கிற‌து. இந்தியா த‌ன் இறையாண்மையை காக்க‌ நாளொன்றுக்கு சுமார் 750 கோடிக‌ளை காஷ்மீரில் செல‌வ‌ழிக்கிற‌து. இதேபோல் பாக்கிஸ்தானிலும். இர‌ண்டு நாடுக‌ளும் ஆண்டுக்கு ஆண்டு த‌ங்க‌ள் ராணுவ‌ச்செல‌வை ஏற்றிக்கொண்டே போவ‌த‌ற்கு காஷ்மீர் சூடு இற‌ங்காம‌ல் இருப்ப‌தே கார‌ண‌ம். இது இந்தியாவுக்கு எதிரான‌ தாக்குத‌ல்க‌ளுக்கு கார‌ண‌மான‌ ஒருப‌க்க‌ம் என்றால் ம‌றுப‌க்க‌மான‌ ம‌த‌த்தீவிர‌வாத‌ம் என்ப‌து அமெரிக்காவால் ஊட்டி வ‌ள‌ர்க்க‌ப்ப‌ட்ட‌து. சென்ற‌ நூற்றாண்டின் தொட‌க்க‌த்தில் அலைய‌லையாய் ப‌ர‌விய‌ க‌ம்யூனிச‌தாக்க‌த்தை எதிர்ப்ப‌த‌ற்காக‌ அமெரிக்காவால் உறுவாக்க‌ப்ப‌ட்ட‌துதான் இஸ்லாமிய‌ ம‌த‌ மீட்டுறுவாக்க‌ம் என்ப‌து. சோவிய‌த்யூனிய‌னுட‌னான ப‌னிப்போரின் போதும் பின்ன‌ர் ப‌திலிப்போர்க‌ளிலும் அமெரிக்காவுக்கு கை கொடுத்த‌து இந்த‌ ம‌த‌ தீவிர‌வாத‌ம்தான். ம‌த்திய‌த்த‌ரைக்க‌ட‌ல் நாடுக‌ளின் எண்ணெய்வ‌ள‌ங்க‌ளை கொள்ளைய‌டிப்ப‌த‌ற்கு இன்றும் அது உத‌விக்கொண்டிருக்கிற‌து. இது ஈரானில் அமெரிக்க‌ கைப்பாவை ம‌ன்ன‌ன் ஷாவை தூக்கிவீசிய‌திலிருந்து அமெரிக்காவுக்கு எதிராக‌ திசைமாற‌த்தொட‌ங்கிய‌து. இந்த‌ இஸ்லாமிய‌ ம‌த‌த்தீவிர‌வாத‌ம் இந்தியாவில் வேறூன்றி வ‌ள‌ர்வ‌த‌ற்கு இந்துத்தீவிர‌வாத‌மே முழுப்பொறுப்பாகும். காஷ்மீர் தொட‌ங்கி மும்பை குஜ‌ராத் வ‌ழியாக‌ இந்தியாவெங்கும் இஸ்லாமிய‌ர்க‌ள் குறிவைத்து தாக்க‌ப்ப‌டும்போது, க‌ல்வி வேலைவாய்ப்பு தொட‌ங்கி அனைத்து துறைக‌ளிலும் நேர‌டியாக‌வும் ம‌றைமுக‌மாக‌வும் இஸ்லாமிய‌ர்க‌ள் புற‌க்க‌ணிக்க‌ப்ப‌டும்போது, எங்கும் மேலோங்கியிருக்கும் இந்துவெறி ஆதிக்க‌த்தால் இஸ்லாமிய‌ர்க‌ள் இர‌ண்டாம்த‌ர‌ குடிம‌க்க‌ளாய் ஆக்க‌ப்ப‌டும்போது இஸ்லாமிய‌ தீவிர‌வாத‌ம் வ‌ள‌ர்வ‌த‌ற்கு வேறு கார‌ண‌ம் தேவையில்லை.

 

     இந்த‌ப்பின்னணிக‌ளை புற‌க்க‌ணித்துவிட்டு போர் ந‌ட‌த்தினால் என்ன‌வாகும்? முத‌லாளித்துவ‌ சூதாட்ட‌த்தால் உல‌க‌ப்பொருளாதார‌மே க‌ண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருக்கும் இந்த‌ச்சூழ‌லில் இந்தியாவும் பாக்கிஸ்தானும் போரில் ஈடுப‌ட்டால் பொருளாதார‌ம் ப‌டுமோச‌மாகும். ஒரு மாத‌த்திற்கு தேவையான‌ உண‌வைக்கூட‌ இற‌க்கும‌தி செய்ய‌முடியாத‌ நிலைக்கு பாக்கிஸ்தான் த‌ள்ள‌ப்ப‌டும் என‌ பொருளாதார‌ நிபுண‌ர்க‌ள் எச்ச‌ரித்துள்ள‌ன‌ர். இந்த‌ அள‌வுக்கு மோச‌மான‌ நிலையில் இந்தியா இல்லை என்றாலும் அத‌ன் விளைவுக‌ள் க‌டுமையான‌தாக‌வே இருக்கும். ஏற்க‌ன‌வே ராணுவ‌ச்செல‌வுக‌ளுக்காக‌வும், அர‌சிய‌வாதிக‌ளின் பாதுகாப்புச்செல‌வுக‌ளுக்காக‌வும் கொட்டிக்கொடுத்து அதை ஈடுக‌ட்ட‌ ம‌க்க‌ளின் அத்தியாவ‌சிய‌த் தேவைக‌ளுக்கான‌ வெட்டிக்குறைத்துவ‌ரும் சூழ‌லில் ம‌க்க‌ளின் த‌லையில் இடியாக‌வே இது இற‌ங்கும். இது ஒருபுற‌மிருக்க‌, இப்ப‌டி முன்சென்று தாக்குத‌ல் ந‌ட‌த்தும் போரால் அத‌ன் நோக்க‌மான‌ தீவிர‌வாத‌ தாக்குத‌ல்க‌ளை முறிய‌டித்துவிட‌முடியாது என்ப‌த‌ற்கு அமெரிக்கா ஈராக்கில் ப‌ட்டுக்கொண்டிருக்கும் செருப்ப‌டிக‌ளே சாட்சி. போர் ந‌ட‌ந்தால் பாக்கிஸ்தானுக்கு ஆத‌ர‌வாக‌ தாலிபான் த‌ற்கொலைப்ப‌டை போராளிக‌ள் க‌ள‌த்தில் இற‌க்கிவிட‌ப்ப‌டுவார்க‌ள் என்று தாலிபான் அறிவித்திருக்கிற‌து. ம‌த‌தீவிர‌வாத‌க் குழுக்க‌ளுக்கும் பாக்கிஸ்தான் ராணுவ‌த்திற்குமிடையே நெருக்க‌த்தை ஏற்ப‌டுத்த‌ கார‌ண‌மாக‌ இருக்க‌ப்போகும் இந்த‌ப்போரான‌து எந்த‌ வித‌த்திலும் தீவிர‌வாத‌ தாக்குத‌ல்க‌ளை க‌ட்டுப்ப‌டுத்தாது, மேலும் அதிக‌ரிக்க‌வே வ‌ழிசெய்யும். ஒரு போரின் மூல‌ம் ம‌த‌தீவிர‌வாத‌க் குழுக்க‌ளை ஒட்டுமொத்த‌மாக‌ அழித்துவிடுவ‌து சாத்திய‌மும் அல்ல‌. ஆக‌ இந்திய‌ அர‌சுக்கும், பாக்கிஸ்தானிய‌ அர‌சுக்கும் ப‌ய‌ன‌ளிக்காத‌, இரு நாட்டு ம‌க்க‌ளுக்கும் ப‌ல‌ன‌ளிக்காத‌ இந்த‌ப்போரினால் கிடைக்கும் ப‌ல‌ன் யாருக்கு‌? எந்த‌ ம‌த‌தீவிர‌வாத‌க்குழுக்க‌ளை ஒழித்துக்க‌ட்ட‌ போர் ந‌ட‌த்த‌ப்ப‌டுமோ அந்த‌ ம‌த‌தீவிர‌வாத‌க்குழுக்க‌ளுக்கு உள‌விய‌ல் ரீதியிலான‌ ப‌ல‌ன்க‌ளை கொடுக்கும். குண்டுக‌ளால் கொன்று, எஞ்சியிருக்கும் ம‌க்க‌ளை விலையேற்ற‌த்தினால் கொல்லும் இந்த‌ப்போரினால் இர‌ண்டு நாடுக‌ளுக்கும் த‌ள‌வாட‌ங்க‌ளை விற்கும் அமெரிக்காவின் லாக்ஹீட்போன்ற‌ நிருவ‌ன‌ங்க‌ள் தான் கொள்ளை லாப‌ம் பார்க்கும். அத‌னால்தான் எல்லோரையும் முந்திக்கொண்டு தாக்கும் உரிமை இந்தியாவுக்கு உண்டு என‌ அறிவிக்கிறார் ஒபாமா, அதோடும‌ட்டும‌ன்றி சீனாவைக்க‌ட்டுப்ப‌டுத்தும் தெற்காசிய‌ப் பிராந்திய‌க் க‌ண்ணோட்ட‌மும் அமெரிக்காவுக்கு உண்டு என்ப‌து த‌னிக்க‌தை.

 

     போர் ந‌ட‌வ‌டிக்கைக‌ளுக்கு மாறாக‌ இந்தியா பாக்கிஸ்தான் இடையே நெருக்க‌த்தை அதிக‌ரிப்ப‌த‌ன் மூல‌மே ம‌த‌ தீவிர‌வாத‌க்குழுக்க‌ளை த‌னிமைப்ப‌டுத்த‌ முடியும். இதுவ‌ரை ஏற்ப‌ட்ட‌ இந்தியா பாக்கிஸ்தான் ந‌ல்லிண‌க்க‌மெல்லாம் வ‌ர்த்த‌க‌த்தை முன்வைத்தே ந‌ட‌ந்த‌ன‌. ஆண்டொன்றுக்கு நாற்ப‌தாயிர‌ம் கோடிக்குமேல் வ‌ர்த்த‌க‌ம் ந‌ட‌த்தும் த‌ர‌குமுத‌லாளிக‌ளின் க‌ன‌வுக‌ளினூடாக‌வே ந‌ட‌த்த‌ப்ப‌ட்டுவ‌ந்த‌ ச‌மாதான‌ முய‌ற்சிக‌ள் மாற்ற‌ப்ப‌ட்டு ம‌க்க‌ள் ந‌ல‌ நோக்கில் உற‌வுக‌ள் மேம்ப‌டுத்த‌ப்ப‌ட‌வேண்டும். ர‌யில் விடுவ‌து ப‌ஸ் விடுவ‌து என்று சென்டிமென்ட் அர‌சிய‌லாக‌ ந‌ட‌க்கும் உற‌வுக‌ளைவிட‌ ராணுவ‌ செல‌வுக‌ளை குறைக்கும் நோக்கில் செய‌ல்ப‌ட‌வேண்டும். அதும‌ட்டும‌ல்லாம‌ல் இஸ்லாமிய‌ தீவிர‌வாத‌ம் நீடிப்ப‌த‌ற்கு முன்தேவையாய் இருக்கும் இந்துப்பாசிச‌வெறி முற்றிலும் த‌க‌ர்க்க‌ப்ப‌ட‌ வேண்டும். அதுவ‌ரை இதுபோன்ற‌ தாக்குத‌ல்க‌ளை த‌விர்த்துவிட‌ முடியாது.

 

     ஆனால் இவைக‌ளெல்லாம் இந்திய‌ அர‌சோ பாக்கிஸ்தானிய‌ அர‌சோ செய்யாது செய்ய‌வும் விடாது என்ப‌து தான் கால‌ம் காட்டும் உண்மைக‌ள். இய‌ற்கை சீற்ற‌மென்றாலும், வ‌லிந்து திணிக்க‌ப்ப‌டும் போர்க‌ள் என்றாலும் ச‌ப்புக்கொட்டிக்கொண்டு லாப‌ம் பார்க்க‌த்துடிக்கும் முத‌லாளித்துவ‌, உல‌க‌ம‌ய‌ சிந்த‌னைக‌ளை மாற்றாம‌ல் இவைக‌ளை சாத்திய‌ப்ப‌டுத்த‌முடியாது என்ப‌தை ம‌க்க‌ள் உண‌ர‌வேண்டும். அது தான் தீவிர‌வாத‌ தாக்குத‌ல்க‌ளிலிருந்து ம‌ட்டும‌ல்லாம‌ல் பொருளாதார‌ தாக்குத‌ல்க‌ளிலிருந்தும் ம‌க்க‌ளை காக்கும் ஒரே வ‌ழி.

%d bloggers like this: