இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையில் கடந்த மாதம் நடத்தப்பட்ட தாக்குதலை முன்னிட்டு இந்தியா பாக்கிஸ்தான் இடையே மீண்டும் போர் பீதி ஏற்பட்டிருக்கிறது. தாக்குதல் நடத்தியவர்கள் பாக்கிஸ்தானியர்கள், பாக்கிஸ்தானில் தான் திட்டம் தீட்டப்பட்டது என்றும், ஆதாரங்களை ஒப்படைத்துவிட்டோம் என்றும், ஒரு மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று கெடு விதித்து இந்தியாவும்; தாக்குதல் நடத்தியதில் பாக்கிஸ்தானின் தொடர்பு இல்லையென்றும், ஆதாரம் போதாது என்றும், இந்தியா கொடுத்துள்ள பட்டியலில் இருக்கும் இருபது பேரை இந்தியாவிடம் ஒப்படைக்கத்தேவையில்லை என்று பாக்கிஸ்தானும் மாறிமாறி ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டியதில் பதட்டம் கூடியது. இரண்டு நாடுகளும் போருக்கான தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. இந்த வெறியூட்டும் குற்றச்சாட்டுகளையும், போர்ப்பதட்டத்தையும் தேசபக்தியாய் மொழிமாற்றம் செய்வதில் ஊடகங்கள் முனைப்புடன் செயல்பட்டுவருகின்றன. கடந்த காலங்களில் நடைபெற்ற போர்களில் கூட இப்படித்தான் நடந்தது. அப்படியே ஏற்றுக்கொள்வதும் ஆதரவு தெரிவிப்பதுதான் மக்களின் கடமை என்பதாக முன்மொழியப்படுகிறது. மாற்றுக்கருத்து கொண்டிருந்தாலோ தேசவிரோதி என்பதற்கு வேறு சான்று எதுவும் தேவையில்லை.
மும்பை தாக்குதல் நடைபெற்ற உடனேயே பாக்கிஸ்தானின் தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தும் உரிமை இந்தியாவுக்கு உண்டு என்று முதலில் தொடங்கிவைத்தவர் அமெரிக்க அதிபராகவிருக்கும் ஒபாமா. பின்னர் காண்டலிசா ரைசும் வேறு சில அதிகாரிகளும் தில்லிக்கும் இஸ்லாமாபாத்திற்கும் மாறிமாறி பறந்தனர். இந்தியாவில் இருக்கும்போது தீவிரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்காவிட்டால் சர்வதேசசமூகத்தில் பாக்கிஸ்தான் தனிமைப்படுத்தப்படும் என்று இந்தியாவுக்கு சாதகமாக பாடுவது. பின் பாக்கிஸ்தான் சென்று பாக்கிஸ்தானின் தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை திருப்தியாக இருக்கிறது என்று சுதிமாற்றிப்பாடுவது. இதன்மூலம் போரை தணிப்பதற்கான முயற்சியில் ஈடுபடுவதாக போக்குகாட்டிக்கொண்டே அதை திணிப்பதில் தீவிரமாக இருக்கிறது. ஒருகணம் பாக்கிஸ்தானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை இல்லை என பிரதமர் கூறுகிறார், மறுகணம் மும்பைதாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என சோனியாகாந்தி முழங்குகிறார். இதற்கெல்லாம் மேலாக போர் தொடுத்தால் சந்திக்கத்தயார் என்றும், எங்கள் ராணுவத்தை குறைத்து மதிப்பிடவேண்டாம் என்றும் பாக்கிஸ்தான் அதிபர் சவடால் அடிக்கிறார். இவைஎல்லாம் ஒன்றுகூடி இந்த போர் பதட்டத்தை மக்களிடம் நியாயப்படுத்துகிறது. ஆனால் மும்பைத்தாக்குதலின் பின்னணி என்ன? போரின் மூலம் இதுபோன்ற தாக்குதல்களை நிறுத்திவிடமுடியுமா? என்பனபோன்ற முக்கியமான கேள்விகள் புறந்தள்ளப்படுகின்றன.
பொதுவாக பாக்கிஸ்தானில் ராணுவ சர்வாதிகாரமும் மக்களாட்சியும்(!) மாறிமாறி வந்தாலும் நிர்வாகத்தில் ராணுவத்தின் கை மேலோங்கியே இருக்கிறது. இந்தியவுக்கு எதிரான தாக்குதல்களில் அது முனைப்பு காட்டுகிறது என்பதையும் முழுதாக மறுப்பதற்கில்லை. அதேநேரம் இந்திய உளவு அமைப்புகளும் பாக்கிஸ்தானுக்கு எதிரான செயல்களில் ஈடுபடவேயில்லை என்றும் கூறிவிடமுடியாது. இப்படி இரண்டு நாடுகளும் ஒன்றுக்கு எதிராய் மற்றொன்று செயல்படுவதன் வேரானது காஷ்மீர் தேசிய விடுதலையில் புதைந்திருக்கிறது. தொடக்கத்தில் காஷ்மீர் தேசிய விடுதலை போராட்டமாகவே இருந்த காஷ்மீர் பிரச்சனையை இரு நாடுகளும் தங்கள் அரசியல் சூழ்நிலைகளுக்கு சாதகமாக்கவேண்டி மதப்பிரச்சனையாக மாற்றின. தற்போது இந்தியப்பகுதி காஷ்மீரில் சற்றேறக்குறைய ஐந்து பேருக்கு ஒருவர் என்ற கணக்கில் ராணுவம் அங்கே நிலைபெற்றிருக்கிறது. இந்தியா தன் இறையாண்மையை காக்க நாளொன்றுக்கு சுமார் 750 கோடிகளை காஷ்மீரில் செலவழிக்கிறது. இதேபோல் பாக்கிஸ்தானிலும். இரண்டு நாடுகளும் ஆண்டுக்கு ஆண்டு தங்கள் ராணுவச்செலவை ஏற்றிக்கொண்டே போவதற்கு காஷ்மீர் சூடு இறங்காமல் இருப்பதே காரணம். இது இந்தியாவுக்கு எதிரான தாக்குதல்களுக்கு காரணமான ஒருபக்கம் என்றால் மறுபக்கமான மதத்தீவிரவாதம் என்பது அமெரிக்காவால் ஊட்டி வளர்க்கப்பட்டது. சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் அலையலையாய் பரவிய கம்யூனிசதாக்கத்தை எதிர்ப்பதற்காக அமெரிக்காவால் உறுவாக்கப்பட்டதுதான் இஸ்லாமிய மத மீட்டுறுவாக்கம் என்பது. சோவியத்யூனியனுடனான பனிப்போரின் போதும் பின்னர் பதிலிப்போர்களிலும் அமெரிக்காவுக்கு கை கொடுத்தது இந்த மத தீவிரவாதம்தான். மத்தியத்தரைக்கடல் நாடுகளின் எண்ணெய்வளங்களை கொள்ளையடிப்பதற்கு இன்றும் அது உதவிக்கொண்டிருக்கிறது. இது ஈரானில் அமெரிக்க கைப்பாவை மன்னன் ஷாவை தூக்கிவீசியதிலிருந்து அமெரிக்காவுக்கு எதிராக திசைமாறத்தொடங்கியது. இந்த இஸ்லாமிய மதத்தீவிரவாதம் இந்தியாவில் வேறூன்றி வளர்வதற்கு இந்துத்தீவிரவாதமே முழுப்பொறுப்பாகும். காஷ்மீர் தொடங்கி மும்பை குஜராத் வழியாக இந்தியாவெங்கும் இஸ்லாமியர்கள் குறிவைத்து தாக்கப்படும்போது, கல்வி வேலைவாய்ப்பு தொடங்கி அனைத்து துறைகளிலும் நேரடியாகவும் மறைமுகமாகவும் இஸ்லாமியர்கள் புறக்கணிக்கப்படும்போது, எங்கும் மேலோங்கியிருக்கும் இந்துவெறி ஆதிக்கத்தால் இஸ்லாமியர்கள் இரண்டாம்தர குடிமக்களாய் ஆக்கப்படும்போது இஸ்லாமிய தீவிரவாதம் வளர்வதற்கு வேறு காரணம் தேவையில்லை.
இந்தப்பின்னணிகளை புறக்கணித்துவிட்டு போர் நடத்தினால் என்னவாகும்? முதலாளித்துவ சூதாட்டத்தால் உலகப்பொருளாதாரமே கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருக்கும் இந்தச்சூழலில் இந்தியாவும் பாக்கிஸ்தானும் போரில் ஈடுபட்டால் பொருளாதாரம் படுமோசமாகும். ஒரு மாதத்திற்கு தேவையான உணவைக்கூட இறக்குமதி செய்யமுடியாத நிலைக்கு பாக்கிஸ்தான் தள்ளப்படும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இந்த அளவுக்கு மோசமான நிலையில் இந்தியா இல்லை என்றாலும் அதன் விளைவுகள் கடுமையானதாகவே இருக்கும். ஏற்கனவே ராணுவச்செலவுகளுக்காகவும், அரசியவாதிகளின் பாதுகாப்புச்செலவுகளுக்காகவும் கொட்டிக்கொடுத்து அதை ஈடுகட்ட மக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கான வெட்டிக்குறைத்துவரும் சூழலில் மக்களின் தலையில் இடியாகவே இது இறங்கும். இது ஒருபுறமிருக்க, இப்படி முன்சென்று தாக்குதல் நடத்தும் போரால் அதன் நோக்கமான தீவிரவாத தாக்குதல்களை முறியடித்துவிடமுடியாது என்பதற்கு அமெரிக்கா ஈராக்கில் பட்டுக்கொண்டிருக்கும் செருப்படிகளே சாட்சி. போர் நடந்தால் பாக்கிஸ்தானுக்கு ஆதரவாக தாலிபான் தற்கொலைப்படை போராளிகள் களத்தில் இறக்கிவிடப்படுவார்கள் என்று தாலிபான் அறிவித்திருக்கிறது. மததீவிரவாதக் குழுக்களுக்கும் பாக்கிஸ்தான் ராணுவத்திற்குமிடையே நெருக்கத்தை ஏற்படுத்த காரணமாக இருக்கப்போகும் இந்தப்போரானது எந்த விதத்திலும் தீவிரவாத தாக்குதல்களை கட்டுப்படுத்தாது, மேலும் அதிகரிக்கவே வழிசெய்யும். ஒரு போரின் மூலம் மததீவிரவாதக் குழுக்களை ஒட்டுமொத்தமாக அழித்துவிடுவது சாத்தியமும் அல்ல. ஆக இந்திய அரசுக்கும், பாக்கிஸ்தானிய அரசுக்கும் பயனளிக்காத, இரு நாட்டு மக்களுக்கும் பலனளிக்காத இந்தப்போரினால் கிடைக்கும் பலன் யாருக்கு? எந்த மததீவிரவாதக்குழுக்களை ஒழித்துக்கட்ட போர் நடத்தப்படுமோ அந்த மததீவிரவாதக்குழுக்களுக்கு உளவியல் ரீதியிலான பலன்களை கொடுக்கும். குண்டுகளால் கொன்று, எஞ்சியிருக்கும் மக்களை விலையேற்றத்தினால் கொல்லும் இந்தப்போரினால் இரண்டு நாடுகளுக்கும் தளவாடங்களை விற்கும் அமெரிக்காவின் ‘லாக்ஹீட்‘ போன்ற நிருவனங்கள் தான் கொள்ளை லாபம் பார்க்கும். அதனால்தான் எல்லோரையும் முந்திக்கொண்டு தாக்கும் உரிமை இந்தியாவுக்கு உண்டு என அறிவிக்கிறார் ஒபாமா, அதோடுமட்டுமன்றி சீனாவைக்கட்டுப்படுத்தும் தெற்காசியப் பிராந்தியக் கண்ணோட்டமும் அமெரிக்காவுக்கு உண்டு என்பது தனிக்கதை.
போர் நடவடிக்கைகளுக்கு மாறாக இந்தியா பாக்கிஸ்தான் இடையே நெருக்கத்தை அதிகரிப்பதன் மூலமே மத தீவிரவாதக்குழுக்களை தனிமைப்படுத்த முடியும். இதுவரை ஏற்பட்ட இந்தியா பாக்கிஸ்தான் நல்லிணக்கமெல்லாம் வர்த்தகத்தை முன்வைத்தே நடந்தன. ஆண்டொன்றுக்கு நாற்பதாயிரம் கோடிக்குமேல் வர்த்தகம் நடத்தும் தரகுமுதலாளிகளின் கனவுகளினூடாகவே நடத்தப்பட்டுவந்த சமாதான முயற்சிகள் மாற்றப்பட்டு மக்கள் நல நோக்கில் உறவுகள் மேம்படுத்தப்படவேண்டும். ரயில் விடுவது பஸ் விடுவது என்று சென்டிமென்ட் அரசியலாக நடக்கும் உறவுகளைவிட ராணுவ செலவுகளை குறைக்கும் நோக்கில் செயல்படவேண்டும். அதுமட்டுமல்லாமல் இஸ்லாமிய தீவிரவாதம் நீடிப்பதற்கு முன்தேவையாய் இருக்கும் இந்துப்பாசிசவெறி முற்றிலும் தகர்க்கப்பட வேண்டும். அதுவரை இதுபோன்ற தாக்குதல்களை தவிர்த்துவிட முடியாது.
ஆனால் இவைகளெல்லாம் இந்திய அரசோ பாக்கிஸ்தானிய அரசோ செய்யாது செய்யவும் விடாது என்பது தான் காலம் காட்டும் உண்மைகள். இயற்கை சீற்றமென்றாலும், வலிந்து திணிக்கப்படும் போர்கள் என்றாலும் சப்புக்கொட்டிக்கொண்டு லாபம் பார்க்கத்துடிக்கும் முதலாளித்துவ, உலகமய சிந்தனைகளை மாற்றாமல் இவைகளை சாத்தியப்படுத்தமுடியாது என்பதை மக்கள் உணரவேண்டும். அது தான் தீவிரவாத தாக்குதல்களிலிருந்து மட்டுமல்லாமல் பொருளாதார தாக்குதல்களிலிருந்தும் மக்களை காக்கும் ஒரே வழி.
போர் என்பது ஒரு தீர்வாகாது. அந்தப் போரினால் இருநாட்டுமக்களும் பயன் அடைய போவதில்லை.
ஆனால் பாகிஸ்தான் என்ன செய்திருக்க வேண்டும் இந்தியா கேட்ட தீவிரவாதிகளை கைது செய்து கொடுத்திருக்க வேண்டுமல்லவா. ஆனால் அவர்கள அதை செய்ய வில்லை. இப்பொழுது நாமும் அங்கு சென்று அவர்களை பிடிக்க முடியாது.
இப்படி பாகிஸ்தான் நடந்து கொண்டால் எந்த நாட்டு மக்களுக்கு லாபம். யாருக்கும் இல்லை.
தீவிரவாதிகளுக்குத்தான் லாபம்.மேலும் அவர்களுக்கு புத்துணர்ச்சியைத்தான் கொடுக்கும்.
அதனால் முடிந்தவரை பாதுக்காப்பான போரை நடத்தி தீவிரவாதிகளின் முகாம்களை அழித்தால் தான் அவர்களின் ஓரளவு தீவிரவாதச் செயல்களை கட்டுப்படுத்த முடியும்.
அப்பொழுதுதான் பாகிஸ்தான் மக்களின் மனநிலையும் மாறி தீவிரவாதிகளுக்கு ஆதரவான நடவடிக்கைகளை குறைத்து கொள்ளவார்கள்.பாகிஸ்தானின் எதிர்கட்சியை சேர்ந்தவர்கள் உண்மை நிலையை மக்களுக்கு எடுத்துரைப்பார்கள் அல்லது ஆளுங்கட்சியின் மீது எதிரான நிலைப்பாட்டையாவது எடுப்பார்கள்.
நீங்கள் சொல்வதைப் போல இந்துத்வா தீவிரவாதிகளை முதலில் கட்டுப்படுத்த வேண்டும் அப்பொழுதுதான் உள்நாட்டுப் பிரச்னைகள் சற்று குறையும்.
பின்னர் நீங்கள் சொல்வதைப் போல உலகதாரள மயமாக்களை செய்யாமல் இருக்க முடியாது.ஏனென்றால் எல்லொரும் முன்நோக்கிச் செல்லும் போது நாம் மட்டும் பின்நோக்கிச் செல்லவேண்டும் என்பதைப் போல நீங்கள் சொல்வது இருக்கிறது .
கட்டுப்பாடான உலகதாராள மயமாக்களை செய்யவேண்டும். நாம் கடுமையான சில சட்டத்திட்டங்களை வகுத்து அதற்க்கேற்றர் போல செயல்படவேண்டும்.
நாம் அமெரிக்காவின் பொருளாதர கொள்கையிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு தரமான கொள்கைகளை வகுத்து செயல்பட வேண்டும் அது தான் முன்னேற்றப் பாதைக்கு இட்டுச்செல்லும்.
வணக்கம் பிரதிபலிப்பான்,
இந்தியா கேட்டபடி இருபது பேர்களை ஒப்படைப்பது என்பது பாக்கிஸ்தானைப் பொருத்தவரை அரசியலில் தற்கொலைக்கு ஒப்பானது. இரு நாடுகளுக்கு இடையே குற்றவாளிகளை பரிமாறிக்கொள்ளும் ஒப்பந்தம் எதுவும் இல்லை, எனவே ஒரு அளவுக்குமேல் இதை வற்புறுத்தவும் முடியாது. சமாதான காலங்களில் இதுபோன்ற ஒப்பந்தங்களுக்கு முயலவும் இல்லை. ஐரோப்பாவிலுள்ள நாடுகளுடனெல்லம் அதுபோன்ற ஒப்பந்தம் செய்துகொண்டுள்ள இந்தியா அவசியம் வாய்ந்த பாக்கிஸ்தானுடன் அதை செய்துகொள்ள முயலவில்லை என்பதன் பின்னுள்ள அரசியல் குறித்து சிந்தித்துப்பாருங்களேன். இந்தோ பாக் சமாதான முயற்சிகளெல்லாம் வணிகக்கவலைகளினால் எழுந்தவைகளேயன்றி பிரச்சனையை தீர்க்கும் நோக்கினாலல்ல.
பாதுகாப்பான போர் நடத்துவது எப்படி என்பதையும், தீவிரவாத முகாம்களை அழிப்பது அவர்களின் நடவடிக்கைகளை எப்படி கட்டுப்படுத்தும் என்பதையும் உங்களால் விளக்க முடியுமா? இது போன்ற தாக்குதல்கள் அவர்களை தூண்டுமேயல்லாது ஒருபோதும் கட்டுப்படுத்தாது. கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்குமான வழி அவர்களை செயல்படத்தூண்டும் அடிப்படையை இல்லாமல் செய்வதுதான். அதற்கு இந்தோ பாக் நெருக்கம்தான் கைகொடுக்குமேயல்லாது போரல்ல.
உலகமயம், தாராளமயம் என்பதெல்லாம் முன்னேற்றமல்ல, மக்களை ஒட்டச்சுரண்டும் பொருளாதார வடிவம். உலகத்தின் சீர்கேடுகள் அனைத்தின் தொடக்கப்புள்ளி. அதை எதிர்த்துப்போராடுவதுதான் முன்னேற்றம். முதலில் நீங்கள் ஒன்றை புரிந்துகொள்ளவேண்டும் முதலாளித்துவம், உலகமயம், தாராளமயம் என்பதெல்லாம் பரந்துபட்டசெல்வங்களை ஓரிடத்தில் குவிப்பதை நோக்கமாக கொண்டவைகள். நீங்கள் சொல்வதைப்போல் சட்டதிட்டங்களை மாற்றினால் அவற்றின் செயல்திசையில் வேண்டுமானல் மாற்றங்களை ஏற்படுத்தலாம். நோக்கமே தவறாக இருக்கையில் செயல்திட்டங்களை மாற்றி ஆவதென்ன? எனவே அவற்றை தகர்ப்பதில் முன்னிற்போம். அதுவே உண்மையானதும், தேவையானதுமான முன்னேற்றம்.
தோழமையுடன்
செங்கொடி
இஸ்லாமியர்கள் இந்தியாவில் இரண்டாம்தர குடிமகன்கள் என்று சொல்வது கொஞ்சமும் சரி அல்ல. அதனால்தான் இஸ்லாமியர்கள் தீவேரவாதத்தில் ஈடுபடுகிறார்கள் என்று சொல்வது பெரும் தவறு. ஒரு சில முஸ்லிம்கள் தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபடுவதால் இஸ்லாமியர்களுக்கு தீவிரவாதத்தை தவிர வேறு வழி இல்லை என்று சொல்வதை வன்மையாக கண்டிக்கிறேன். அதுவும் பாகிஸ்தானிகள் இந்தியாவில் நுழைந்து ரயில்வே ஸ்டேஷன்களையும் ஹோட்டல்களையும் மருத்துவமனைகளையும் தாக்குவதற்கு எந்த வித சமாதானமும் சொல்ல முடியாது. தாக்கியவர்கள் இந்திய முஸ்லிம்களாக இருந்தாலாவது இந்த சப்பைக்கட்டு புரிந்துகொள்ளக்கூடியது – ஒத்துக்கொள்ளக்கூடியது அல்ல, புரிந்துகொள்ளக்கூடியது. – அயல் நாட்டவர் நம் நாட்டில் நுழைந்து அப்பாவிகளை கொல்வது தவிர நம் நாட்டு இஸ்லாமியர்களுக்கு உய்வு அடைய வேறு வழி இல்லை என்று சொல்வது மகா அபத்தமாக இருக்கிறது. இதை எல்லாம் பற்றி எடுத்து சொல்ல வேண்டிய நிலைமை கேவலம்.
தலித்கள் இஸ்லாமியரைவிட பல மடங்கு மோசமாக பல நூற்றாண்டுகளாக நடத்தப்படுகிறார்கள். யாரும் தலித்களுக்கு தீவிரவாதத்தைத் தவிர வேறு வழி இல்லை என்று சொல்கிறார்களா என்ன? இல்லை தலித்கள் கொஞ்சம் கூட முன்னேற்றம் அடையவில்லையா? இன்னும் நிறைய முன்னேற்றம் அடைந்திருக்கலாம் என்றுதான் நினைக்கிறோம். அப்படி இருக்கும்போது நீங்கள் இஸ்லாமியர்களுக்கு மட்டும் ஏன் புதிய விதி படைக்கிறீர்கள்?
வணக்கம் ஆர்வி
நீங்கள் மீண்டும் ஒருமுறை கட்டுரையை வாசிக்க வேண்டும். இஸ்லாமிய தீவிரவாதத்தை நியாயப்படுத்தியோ, இந்திய இஸ்லாமியர்களை காக்க தீவிரவாதம்தான் சரியான வழி என்றோ சொல்லப்படவில்லை. இந்துத்தீவிரவாதம் ஒழிக்கப்படாதவரை இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒழிக்கமுடியாது. தலித்துகள் அடங்கிக்கிடக்கிறார்களே இஸ்லாமியர்கள் தீவிரவாதத்தின் பக்கம் ஏன் போகிறார்கள் என்பது சரியான வாதமல்ல. தலித்துகள் இன்னும் எழுச்சி பெறவேண்டியுள்ளது, இஸ்லாமியர்களும் மதரீதியாகவே சிந்திக்கிறார்கள் இவைகள் மாறி பொருளியல் உள்கட்டுகளை புரிந்துகொண்டு முதலாளிய கொள்கைகளான உலகமய, தனியர்மய, தாராளமயத்திற்கெதிரான போராட்டங்களின் மூலமாகவே தீவிரவாத தாக்குதல்களையும், பொருளாதார தாக்குதல்களையும் முறியடிக்கமுடியும் மாறாக போர் நடந்தால் அதனால் பலனும் இல்லை கூடுதல் சுமையையும் சுமக்கநேரிடும் என்பதுதான் உண்மை.
தோழமையுடன்
செங்கொடி
//காஷ்மீர் தொடங்கி மும்பை குஜராத் வழியாக இந்தியாவெங்கும் இஸ்லாமியர்கள் குறிவைத்து தாக்கப்படும்போது, கல்வி வேலைவாய்ப்பு தொடங்கி அனைத்து துறைகளிலும் நேரடியாகவும் மறைமுகமாகவும் இஸ்லாமியர்கள் புறக்கணிக்கப்படும்போது, எங்கும் மேலோங்கியிருக்கும் இந்துவெறி ஆதிக்கத்தால் இஸ்லாமியர்கள் இரண்டாம்தர குடிமக்களாய் ஆக்கப்படும்போது இஸ்லாமிய தீவிரவாதம் வளர்வதற்கு வேறு காரணம் தேவையில்லை.//
உங்கள் போஸ்டில் உள்ள இந்த வாக்கியத்துக்கு வேறு எப்படி பொருள் கொள்வது என்று தெரியவில்லை. நான் சரியாக புரிந்துகொள்ளவில்லை என்றால் மன்னிக்கவும்.
//இஸ்லாமிய தீவிரவாதத்தை நியாயப்படுத்தியோ, இந்திய இஸ்லாமியர்களை காக்க தீவிரவாதம்தான் சரியான வழி என்றோ சொல்லப்படவில்லை.// மிக்க மகிழ்ச்சி.
// இந்துத்தீவிரவாதம் ஒழிக்கப்படாதவரை இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒழிக்கமுடியாது. // “அவனை திருந்த சொல்லு அப்புறம் நான் திருந்தறேன்” என்ற வசனம் எல்லாம் சினிமாவில் ரசிக்கலாம். ஒரு நீலக்கொடியோ, பச்சைக்கொடியோ இதையே திருப்பி “இஸ்லாமிய தீவிரவாதம் ஒழிக்கப்படாதவரை ஹிந்து தீவிரவாதத்தை ஒழிக்க முடியாது” என்று சொல்வார். அவர் சொல்வதும் தவறுதான். கவனிக்கவும், நீங்களோ அவரோ சொல்வது வருந்தத்தக்க உண்மை என்று நான் சொல்லவில்லை, இது தவறு என்று சொல்கிறேன். சமீப காலத்திலேயே சீக்கிய தீவிரவாதம் தானாக ஒழியவில்லையா?
// தலித்துகள் அடங்கிக்கிடக்கிறார்களே இஸ்லாமியர்கள் தீவிரவாதத்தின் பக்கம் ஏன் போகிறார்கள் என்பது சரியான வாதமல்ல. // தலித்கள் தீவிரவாதத்தின் பக்கம் போகாமல் முன்னேற முயற்சிக்கிறார்கள். இஸ்லாமியர்களே நாற்பது ஐம்பது வருடங்களாக இரண்டாம் தர குடிமகன்கள் என்றால் தலித்கள் நூறாம் தர குடிமகன்களாக பல நூற்றாண்டுகளாக இருக்கிறார்கள். அவர்கள் இன்று முன்னேற்ற பாதையில் நடக்கவில்லையா? (மெதுவாக நடக்கிறார்கள் என்று நானும் சொல்கிறேன்). இஸ்லாமியர்களுக்கும் வேறு பல பாதைகள் இருக்கின்றன.
எல்லா குழுக்களுக்கும் அநியாயங்கள் நடந்துகொண்டேதான் இருக்கின்றன. முஹம்மத் கஜினிக்கும், முஹம்மத் கோரிக்கும், அவுரங்கசீப்புக்கும், ஜின்னாவுக்கும், நவகாளிக்கும், இன்றும் ஹிந்துக்கள் பழி வாங்க துடித்தால் அதை சரி என்பீர்களா? நாம் இங்கிலாந்து மேல் படை எடுக்க வேண்டுமா? இன்னும் நூறு வருஷங்கள் கழித்து பிராமணர்கள் இட ஒதுக்கீட்டுக்கு பழி வாங்க துடித்தால் அதை சரி என்பீர்களா?
ஒரு தவறுக்கு விடை இன்னொரு தவறு அல்ல. நீங்களும் இதை உணர்ந்துதானே //இஸ்லாமிய தீவிரவாதத்தை நியாயப்படுத்தியோ, இந்திய இஸ்லாமியர்களை காக்க தீவிரவாதம்தான் சரியான வழி என்றோ சொல்லப்படவில்லை.// இப்படி சொல்லி இருக்கிறீர்கள்?
நானும் போர் சரியான வழி இல்லை என்று நினைக்கிறேன். ஆனால் உங்கள் கருத்தில் எது சரியான வழி என்று தெரிந்துகொள்ள விருப்பம்.
நண்பர் ஆர்வி,
இருக்கும் தீவிரவாத பிரச்சனைகளை பழிக்குப்பழி வாங்கும் உணர்ச்சியாக குறுக்குவதற்கு இரண்டு மனநிலையில் தான் சாத்தியம்.
௧) பிரச்சனையின் ஆழ அகலங்களை புரிந்துகொள்ளாமல் மேம்போக்காக, நிகழ்வுகளைக்கொண்டு தனக்கு சாதகமாக திரித்துக்கொள்வது,
௨) பிரச்சனையின் மீது அக்கரையற்றிருப்பது.
இதில் நீங்கள் எந்த மனநிலையில் இருக்கிறீர்கள்? இவைகளை நீங்கள் பழி வாங்கும் பிரச்சனையாகவோ, சட்டம் ஒழுங்கு பிரச்சனையாகவோ கருதினால், மன்னிக்கவும் உங்கள் பார்வையில் பிழையுண்டு. அதை திருத்திக்கொள்ள முனையுங்கள்.
இந்தியாவும் பாக்கிஸ்தானும் வணிக நோக்கிலல்லாது மக்கள் நல நோக்கில் இணைந்து உலகமயச்சூழலுக்கு எதிரான நடிவடிக்கைகளினூடாகத்தான் இதுபோன்ற தாக்குதல்களை தடுக்கமுடியும். உலகமயத்திற்கு முட்டுக்கொடுக்கும் போர்களால் அல்ல.
தோழமையுடன்
செங்கொடி
அரசோ செய்யாது செய்யவும் விடாது என்பது தான் காலம் காட்டும் உண்மைகள். இயற்கை சீற்றமென்றாலும், வலிந்து திணிக்கப்படும் போர்கள் என்றாலும் சப்புக்கொட்டிக்கொண்டு லாபம் பார்க்கத்துடிக்கும் முதலாளித்துவ, உலகமய சிந்தனைகளை மாற்றாமல் இவைகளை சாத்தியப்படுத்தமுடியாது என்பதை மக்கள் உணரவேண்டும். அது தான் தீவிரவாத தாக்குதல்களிலிருந்து மட்டுமல்லாமல் பொருளாதார தாக்குதல்களிலிருந்தும் மக்களை காக்கும் ஒரே வழி.”
சிறப்பான பதிவு,
பாக் ஐ இந்தியாவிலும்,இந்தியா ஐ பாக் ல் எதிரியாக காட்டிக் கொண்டு இருக்கும் வரை தான் மறு காலனியாக்கம் சிறப்பாக தன் ஆளுமையை நிரூபிக்க முடியும்.
மக்களிடம் எதிரி உணர்ச்சியை தோற்றுவித்து அவர்களின் வர்க்க உணர்வை மறுக்கின்றார்கள்
கலகம்
மும்பை நகரம் தாக்கப்பட்டு சுமார் 300 பேருக்கு மேல் இறந்த போது, பாகிஸ்தானின் தீவிரவாத பயிற்சி முகாம் மீது தாக்குதல் நடத்தி, பாகிஸ்தானுக்கு தக்க பாடம் கற்பித்திருக்க வேண்டும். ஆனால் செங்கொடி என்ற மூளை மழுங்கிய கம்யூனிஸ்டுகளுக்கு இது தெரியாது. அவர்கள் மாஸ்கோவில் மழை பெய்தால் மாம்பலத்தில் குடை பிடிக்கும் ஞான சூனியங்கள்.
சுயமான சிந்தனை என்பது கம்யூனிஸ்டுகளுக்கு கிடையாது. அதனால் தான் ஒபாமா என்ன சொல்கிறார் என்பதை மட்டும் வைத்து குழப்புகிறார். ரஷ்யாவின் உள்ளே புகுந்து , மும்பை போல சுமார் 300 பேரை வேறு வெளிநாட்டுக்காரன் கொன்றிருந்தால், இதே செங்கொடி இப்படி எழுதாது. பாவம் செங்கொடி.