பரிணாம அறிவியலும் நண்பர் சுவனப்பிரியனும்

சுவனப்பிரியனுக்கு மறுப்பு என்ற தலைப்பில் இட்டிருந்த இடுகைக்கு தோழர் செங்கொடியும் பரிணாம அறிவியலும்என்ற தலைப்பில் நண்பர் சுவனப்பிரியன் ஒரு பின்னூட்டத்தை இட்டிருந்தார். அதில் பரிணாமம் குறித்த தனது சந்தேகங்களாக ஏழு கேள்விகளை தொகுத்து இதற்கு பதில் கூறுங்கள் எனக்கேட்டிருந்தார். அவருடைய பின்னூட்டத்தின் தொடக்க வாக்கியங்களே மறுப்புக்குறியவையாக இருப்பதால் முதலில் அதை விளக்கிவிட்டு பின்னர் அவரது கேள்விகளுக்கு வருவோம்.

குழப்பமும் சிக்கலும் நிறைந்த பரிணாமக் கொள்கைஎன்று குறிப்பிட்டிருக்கும் நண்பர் சுவனப்பிரியன், நேரடியாக அப்ப‌டிக்குறிப்பிட்டுவிட்டு விசயத்திற்கு வந்திருந்தால் அது அவரின் சொந்த மதிப்பீடு என்ற அளவில் தள்ளிவிட்டிருக்கலாம். ஆனால் குழப்பமும் சிக்கலும் நிறைந்த பரிணாமக் கொள்கை என்பதற்கு விளக்கம் கொடுக்கும் முகமாக இரண்டு வரிகளை எழுதியிருக்கிறார். அதன்மூலம் குழப்பமும் சிக்கலும் நிறந்த என்பதை ஒரு பொதுமதிப்பீடாக முன்வைக்கிறார். “டார்வினின் பரிணாம அறிவியலுக்குள் புகுந்தால் சில நேரங்களில் படிக்கும் நாமே குழப்பத்தோடு வெளியில் வருவோம். இதுவரை இந்த துறையை அனைவரும் ஒத்துக் கொள்ளும் படியாக விளக்கமளித்த நபர்களே இல்லை எனலாம்” புதிதாக விசயங்களை விளக்கங்களை படிக்கும்போது குழப்பம் வந்தால் மீண்டும் படிக்கலாம், அதன் கூறுகளை நிதானமாக ஆய்வு செய்து, அதன் விளக்கங்களை பகுப்பாய்வு செய்து விளங்கிக்கொள்ள முன்வரலாம். அவ்வாறன்றி ஒருவருக்கு ஒரு விசயத்தை படிக்கும் போது குழப்பம் வருகிறது என்பதாலேயே அது குழப்பமான விசயமாக ஆகிவிடுமா? ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாட்டை நண்பர் நன்கு படிக்கட்டும், போதிய காலநேரம் எடுத்துக்கொண்டு விளங்கிக்கொள்ளட்டும், பின் குழப்பிக்கொள்ளாமல் சார்பியல் கோட்பாடு குறித்து விளக்கமளிக்கமுடியுமா? முடியாது என்றால் ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடு தெளிவில்லாதது, குழப்பமானது என்று கூறிவிடலாமா? அடுத்து அனைவரும் ஒத்துக்கொள்ளும் படியான விளக்கம் என்று ஒன்றை கூறமுடியுமா? சரியான விளக்கம், தவறான விளக்கம் என்று கூறலாம், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படியான விளக்கம் என்றால்…..? எந்தப்பொருளின் விளக்கம் என்றாலும் ஒரு சாரார்தான் ஏற்றுக்கொள்வார்கள், மறுசாரார் மறுக்கத்தான் செய்வார்கள் அது அவர்களின் நிலைப்பாட்டைச்சார்ந்தது. கண்ணால் காணமுடியாத, நேரடியாக அறியமுடியாத எந்த விளக்கம் என்றாலும் எல்லோரையும் ஏற்கவைக்க இயலாது. டார்வின் கோட்பாட்டிற்கு அறிவியல் ரீதியாக எவ்வளவு விளக்கமளித்தாலும் மதவாதிகள் அதை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்றால் அதன் பின்னணி டார்வின் கோட்பாட்டில் இல்லை அவர்களின் மதத்தில் இருக்கிறது. குறிப்பிட்ட ஒரு சாரார் ஒப்புக்கொள்ளவில்லை என்றால் அது சிக்கல் நிறைந்த்தாகிவிடுமா?. குழப்பமும் சிக்கலும் நிறைந்ததென்றால் என்ன குழப்பம் என்று எடுத்துக்காட்டவேண்டும். இன்னின்ன சிக்கல் என்று அடையாளப்படுத்தவேண்டும். அவ்வாறு காட்ட இயலவில்லை என்றால் குழப்பமும் சிக்கலும் நிறைந்த பரிணாமக்கொள்கை என்று சொந்த மதிப்பீடாகக் கூறலாம் தவறில்லை. ஆனால் அதையே ஒரு பொதுக்கருத்தாக காட்ட முயலக்கூடாது. இனி நண்பரின் சந்தேகங்களுக்குள் செல்வோம்.

௧) “ஒரு உயிரிலிருந்துதான் மற்றொரு உயிரினம் உருவாக முடியும்என்பது அறிவியலார் பொதுவாக ஒத்துக் கொண்ட உண்மை. ஆனால் பரிணாமவியலோ உலகம் முழுவதும் உயிரற்றப் பொருட்களான கற்பாறைகள் மண்,வாயு ஆகியன நிரம்பி இருந்த போது காற்று, மழை, மற்றும் மின்னல் ஆகியவற்றின் பல பொருட்களின் கூட்டு விளைவால் உயிர் உண்டானது என்கிறது. இரண்டு கருத்தக்களில் ஏதோ ஒன்றுதான் உண்மையாக இருக்க முடியும். இதற்கான உங்களின் விளக்கம் என்ன?” இதே கேள்வியை நண்பர் டென்தாரா வைத்து அதற்கு விளக்கமாக ஒரு பதிவும் இடப்பட்டுவிட்ட‌படியால், கூறியது கூறலை தவிர்ப்பதற்காக அந்த பதிவிற்கான சுட்டி இதோ படித்துக்கொள்ளலாம்.

௨) “ஜீன்களை ஆராய்ந்த அறிவியலார் மனித இனம் அனைத்தும் ஒரு தாயின் வயிற்றிலிருந்து பிறந்து பிறகு பல்கிப் பெருகியதாக கண்டுபிடித்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பு பற்றி பரிணாமவியல் சொல்வது என்ன?” இது பொய்யான தகவல். மனிதனின் மரபணுக்களை ஆய்வுசெய்த அறிவியலாளர்கள் மனிதன் தோன்றியது ஆப்பிரிக்காக்கண்டத்தில்தான் என்றே கூறியுள்ளனர். ஆப்பிரிக்காவில் தோன்றிய மனித இனம் பலலட்சம் ஆண்டுகளுக்குமுன் பனியுகத்தில் இப்போதைய கடல் மட்டத்தைவிட அறுபது மீட்டர் வரை தாழ்ந்திருந்தபோது, டோபா எரிமலை வெடிப்பு போன்ற சூழலின் தாக்கத்தால் உலகமெங்கும் பரவினர். மூலக்கூறு ஆய்வாளர்களும், டிஎன் ஏ மரபணு அறிவியலாளர்களும் தங்களின் ஆய்வுகளில் கண்டடைந்த முடிவு மனித இனத்தின் தாய் ஆப்பிரிக்கக்கண்டம் என்பது தான். தொன்மப்படிவ ஆய்வாளர்களின் முடிவும் இதுதான். ஆப்பிரிக்காவிலிருந்து மனிதன் ஹெமோ சேப்பியனாக வெளியேறினானா? இல்லை ஹேமோஎரக்டஸாக வெளியேறினானா? என்பதில் அறிவியலாளர்களிடையே கருத்து மோதல் உண்டு. ஆனால் ஆப்பிரிக்காவிலிருந்து வெளியேறினார்கள் என்பதில் கருத்துவேறுபாடு இல்லை. ஆக ஆப்பிரிக்கக்கண்டத்திலிருந்து வெளியேறிப் பரவியவர்கள் என்ற அறிவியலை ஒரு தாயின் வயிற்றிலிருந்து என்று திரித்தது மதவாதிகளின் படைப்புவாதிகளின் சூழ்ச்சி. இது இப்படி இருக்க ஆதாமும் ஏவாளும் (அல்லது ஆதம் ஹவ்வா) இலங்கையில் வாழ்ந்ததாக இன்னும் கட்டுரை எழுதிக்கொண்டிருக்கிறார்கள் சில மதவாதிகள் என்பதை நண்பர் சுவனப்பிரியனின் கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.

௩) “ஆற்றலை ஒரு போதும் உருவாக்கவும் முடியாது. அழிக்கவும் முடியாது. ஆயினும் மாற்றி அமைக்கவே முடியும்’ – ஐன்ஸ்டீன்.ஒரு பொருளைப் படைப்பதற்கு ஆற்றல் மிகவும் இன்றியமையாதது.மனிதனைப் படைத்தது இறைவன் தன்னகத்தே கொண்ட ஆற்றலினால் என்கின்றனர் ஆன்மீகவாதிகள். இல்லைமனிதனாலும் படைக்க முடியும் என்கின்றனர் நாத்திகவாதிகளும் பரிணாமவியலாரும். இது உண்மையானால் அண்டசராசரங்கள் அடங்கிய இப் பேரண்டத்திலிருந்து எந்த ஒன்றையும் எவ்விதத்திலும் பயன்படுத்தாமல் சுத்த சூன்யத்திலிருந்து சுயமாக (இறைவன் படைப்புகளில் கை வைக்காது) சொந்த ஆற்றலைப் பயன்படுத்தி ஒரு சிறிய அணுவையேனும் படைத்துக் காட்ட முடியுமா?” ஆற்றல் மாறாக் கோட்பாடு நியூட்டனின் கோட்பாடு, ஐன்ஸ்டீன் அல்ல. இயற்கையாக உலகில் அல்லது பிரபஞ்சத்தில் கிடைக்கும் பொருட்களை ஒன்றோ அல்லது பலவற்றையோ இணைத்தோ பிரித்தோ பொருட்களை மனிதன் படைக்கிறான். மனிதனின் படைப்பாற்றல் என்பது இதுதான். கடவுள் என்ற கற்பனை கட்டமைப்பை பிரபஞ்சத்தின் பொருட்களையெல்லாம் படைத்த படைப்பாளி என்ற (பொய்த்)தகுதியை போன்று மனிதனாலும் படைக்கமுடியும் என்ற முடிவுக்கு நண்பர் எப்படி வந்தார் என்பதையும் விளக்கியிருந்தால் பதில் கூறுவதற்கு வசதியாய் இருந்திருக்கும். ஆகுக என்ற ஒற்றைச்சொல்லின் மூலம் எல்லாவற்றையும் படைத்ததாக நம்பப்படுவது போல் மனிதன் ஒரு குண்டூசியையும் படைக்கமுடியாது. இந்த பிரபஞ்சத்தில் ஏற்கனவே இருக்கும் ஆற்றலைத்தான் மற்றொன்றாய் மாற்ற முடியும். ஒரு அணுவையேனும் உருவாக்கிக்காட்டவேண்டுமென்றால் அது பிரபஞ்சத்தில் இருந்துதான் ஆகவேண்டும். இந்தப்பிரபஞ்சத்தில் எந்தப்பொருள் என்றாலும் அது கடவுளின் படைப்பு என்று உரிமை கொண்டாடியபின் வேறு பொருள் எங்கிருந்து வரும்? இந்த பிரபஞ்சத்திலுள்ள பொருட்களனைத்தும் பெருவெடிப்பிலிருந்து வெளிப்பட்டும், உருமாறியும் இருப்பவைதான். இவைகளை கடவுள் உண்டாக்கினார், அதுவும் ஆகு என்ற வார்த்தையை கூறி உண்டாக்கினார் என்பதே கற்பனையாக இருக்கும்போது அதை ஒப்புக்கொண்டு, அதற்கு வெளியிலிருந்து பொருட்களை உருவாக்கச்சொல்கிறீர்கள் இது மோசடியல்லவா? வேண்டுமானால் நண்பர் சுவனப்பிரியனிடம் இப்படிக்கேட்கலாம். கடவுள் என்பது ஆற்றலா? பொருளா? ஆற்றல் என்றால் எப்படி அது தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறது? பொருள் என்றால் இந்த பிரபஞ்சத்தை படைப்பதற்கு முன்னால் அது எப்படி இருந்தது எங்கிருந்தது? விடை சொல்ல முடியுமா உங்களால்?

௪) “நமக்குள் இருக்கும் உயிர் எங்கிருந்து வருகிறது? உயிரின் உதயம் எவ்வாறு நிகழ்கிறது? மனிதனின் இறப்புக்குப் பின் எங்கு செல்கிறது?” இதற்கு சுவனப்பிரியனுக்கு மறுப்பு என்பதிலேயே ஓரளவு பதில் கூறப்பட்டிருக்கிறது. உயிர் என்பது பொருளல்ல, தன்மை. தாயின் உடலிலுள்ள புரதங்களைப்பெற்று புதிய உயிர் செயல்பாட்டுக்கு வருகிறது. அதன் வளர்ச்சிகள் குரோமோசோம்களில் உள்ள மரபணு ஏணிகளில் பொதிந்திருக்கும் தலைமுறைச்செய்திகளின் வழியில் நடக்கின்றன. பின் ஒருகட்டத்தில் இயங்கமுடியாதபோது இயக்கம் நின்றுபோய் மரணம் என்ற நிலை ஏற்படுகிறது. வேறு எங்கிருந்தோ அது உடலுக்குள் கொண்டுவரப்படவும் இல்லை, உடலில் தங்கியிருக்கவும் இல்லை, மரணத்திற்குப்பின் வேறு எங்கோ செல்வதும் இல்லை. உயிருடன் இருக்கும்போதே கோடிக்கணக்கான செல்கள் இறந்து உதிர்கின்றன, புதிய செல்கள் முளைக்கின்றன. வேறு வார்த்தைகளில் சொல்வதானால் குழந்தையின் உடலாக இருக்கும் அதே செல்கள் வளர்ந்த பின் இருப்பதில்லை. அவை முற்றிலும் புதிய செல்களால் நிற‌ப்பப்பட்டிருக்கும். தெளிவாகச்சொன்னால் வாலிபத்தில் அல்லது வயோதிகத்தில் இருக்கும் உடல் குழந்தைப்பருவத்தில் இருந்த அதே உடல் அல்ல, வேறு உடல். உடலே வேறு என்றான பின் உயிர் என்பது என்ன? இனி விளக்கம் சொல்வது உங்கள் முறை.

௫) “மனிதனுக்குப் பிறகு பரிணாமம் அடைந்து நாம் என்னவாகப் போகிறோம்? அது எப்போது என்பதையும் தெரிவிக்க முடியுமா?” பரிணாமம் என்பதன் முழு பரிமாண‌த்தையும் புரிந்துகொள்ளாமல் குருட்டுப்பூனை விட்டத்தில் பாய்ந்ததாம் என்பது போன்ற கேள்விதான் இது. பரிணாமம் என்பது யாரோ ஒருவரின் கட்டளைப்படி நடப்பதல்ல தேதி குறிப்பிட்டுச்சொல்வதற்கு. சூழலையும் அதுசெலுத்தும் தாக்கத்தையும் பொருத்தது. மையலின்எனும் மூளையை சுற்றிய மெல்லிய உறையை பெறுவதற்கு மனிதனுக்கு சற்றேறக்குறைய நாற்பதாயிரம் ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது. அண்மைப்பரிணாமமாகப்போகும் உடலின் மயிர்களை இழப்பதற்கு இன்னும் பல ஆயிரம் ஆண்டுகள் ஆகலாம். அதுவும் மனிதன் தன் விருப்பப்படி சூழலை மாற்றும் வசதியை பெற்றிருப்பதால் இன்னும் கூட தாமதமாகலாம். காலம் குறித்தெல்லாம் பரிணாமத்தை தீர்மானிக்க முடியாது.

௬) “எந்த ஒரு கோட்பாடும் நிரூபிக்கப் பட்டதாக இருக்க வேண்டும். டார்வினின் கோட்பாடுகளில் எத்தனை கோட்பாடுகள் அறிவியல் ரீதியாக நிரூபிக்கப் பட்டுள்ளன?” இதற்கும் மேலே தொடுப்பு கொடுக்கப்பட்டுள்ள பதிவிலேயே பதில் கொடுக்கப்பட்டுள்ளது. டார்வின் கோட்பாட்டிற்கு அறிவியல் நிரூபணம் தேடும் மதவாதிகளின் நோக்கம் அறிவியல் ஆர்வமல்ல. மீண்டும் மீண்டும் கேட்பது இதைத்தான், ஆனால் பதில் சொல்லத்தான் ஆளில்லை. டார்வின் கோட்பாட்டை நிரூபிக்கப்படாதது என்று கூறும் மதவாதிகள் எந்த அடிப்படையில் பெருவெடிப்புக்கோட்பாட்டை, சார்பியல் கோட்பாட்டை ஏற்றுக்கொள்கிறார்கள்? அறிவியல் மீதான காதலால் அல்ல. குறிப்பிட்ட ஒன்று குரானோடு உடன்படுகிறதா? முரண்படுகிறதா? என்பதுதான். உடன்பட்டால் அது அறிவியல், ௧௪00 (1400) ஆண்டுகளுக்கு முன்பே குரான் கூறிவிட்டது என்று ஆச்சரியப்படுவது; முரண்பட்டால் அது அறிவியலில்லை, நிரூபிக்கப்படாதது என்று தூற்றுவது. இதுதான் படைப்புவாதிகளின் அறிவியல். சுலபமான கோட்பாடு.

௭) “மனிதன் தனது உடல் அமைப்பால் மனிதன் என்ற பெருமையைப் பெறவில்லை. பகுத்தறிவால்தான் பெறுகிறான்.

உடல் வளர்ச்சி, உடல் அமைப்பில் மாறுதல் என்பதற்குத்தான் டார்வின் காரண காரியங்களைக் கூறுகிறார். பகுத்தறிவு இல்லாத உயிரினம் பகுத்தறிவு உள்ளதாக மாறுவதற்குரிய சூழல் நிர்பந்தம் எது என்று பரிணாமவியல் கூறும் தத்துவம் என்ன?” முதலில் ஒரு கதை, நண்பர் சுவனப்பிரியனும் கேட்டிருக்கக்கூடும். பீர்பால் ஒருமுறை பூனை பால் குடிக்காது என்று கூறிவிடுகிறார். நிரூபிக்குமாறு மன்னன் ஆணையிட அரசவையும் நாள் குறிக்கிறது. வீட்டுக்கு வந்த பீர்பால் பூனை வாங்குகிறார். முறையான உண்வுவைக்காமல் வேளைக்கு வேளை சூடான பாலையே ஊற்றிவைக்கிறார். ஒருமுறை இருமுறை குடித்து வாயை பொசுக்கிக்கொண்ட பூனை பாலைக்கண்டாலே காததூரம் ஓடுகிறது. அரசவை கூடுகிறது, சூடில்லாத பால் வைக்கப்பட்டிருந்தும் பீர்பாலின் பூனை குடிக்காமல் ஓடுகிறது. இந்தக்கதையில் அந்தப்பூனை எந்த அறிவைப்பயன்படுத்தி பாலைக்குடிக்க மறுக்கிறது? இதை கதை என்று ஒதுக்கிவிடமுடியுமா? இரண்டு நாள் ரொட்டி போட்டால் மூன்றாம் நாள் நம்மைக்கண்டதும் வாலைக்குழைத்துக்கொண்டு நம் பின்னால் வருகிறதே நாய், இது எந்த அறிவைக்கொண்டு? இலை தழைகளை மேயும் ஆடு குறிப்பிட்ட சில நச்சுச்செடிகளின் இலையை உண்ணாமல் தவிர்க்கிறதே, எப்படி? பகுத்தறிவு இல்லாத உயிரினம் எது என்று நண்பர் சுவனப்பிரியன் கருதுகிறார்? மனிதன் அளவுக்கு பகுத்தறிவு இல்லாத உயிரினம் என்றுதான் கூற முடியுமே தவிர பகுத்தறிவற்ற உயிரினம் என்று கூற முடியாது. அந்தந்த உயிர்களின் தேவை அனுமதிக்கும் வரை அந்தந்த உயிர்களுக்கு பகுத்தறிவு உண்டு. சிந்தனை உண்டு. ஏனென்றால் மூளை உண்டு. மனிதன் அதை வளர்த்து மேம்படுத்திக்கொண்ட உயிரினம். அதன் மூலம் கருவிகள் செய்யக்கற்றுக்கொண்ட உயிரினம். அந்தக்கருவிகள் வழி நாகரீகமடைந்த உயிரினம். மனிதன் தன்னை விட தாழ்ந்த நிலையிலுள்ள உயிரினங்களும் பகுத்தறிவு கொண்டவை என ஏற்றுக்கொள்ள வெட்கப்படலாம். ஆனால் உண்மை வெட்கப்படாது.

கடைசியாக தினமலரில் வந்த கேள்விபதில் ஒன்றையும் கொடுத்துள்ளார். அதில் பதிலின் சாரமாக வரும் ஒருவரி “ஒரு செய்முறை தகவலின் அடிப்படையில் அவை செய்து கொள்கின்றன என்று அறிவியல் சொல்வதால்…. இயற்கைப் பொருட்கள் தோன்றுவதற்கு முன்பாகவே ஒரு தகவல்இருந்திருப்பது உறுதியாகிறது.” இப்படித்தான் மதவாதிகள் அறிவியலை வளைக்கிறார்கள், திரிக்கிறார்கள். ஒரு பாறை மணலாக வேண்டுமானால் அது தன்னுள் இருக்கும் தகவலினால் அல்ல அந்த பாறையின் மீது செயல்படும் வினைகளின் தாக்கத்தால் தான் மணலாக மாறுகிறது. ஒரு வேர் கூட பாறையை பிளந்துவிடலாம். அடித்துவரும் வெள்ளம் பாறையை உருட்டி நொருக்கலாம். இந்த தகவல் என்ற ஒரு சட்டகத்துக்குள் அடைத்து, அந்த தகவல் பொருள் தோன்றுவதற்கு முன்னால் இருப்பதாக உருவகப்படுத்தி, அந்த தகவல் எது அல்லது யார் என்று கேள்வி கேட்பது. இது தான் கடவுள் என்ற ஒன்று இருப்பதன்அடித்தளம். இதை புரியாதிருப்பது வரைதான் கடவுளின் மகத்துவம்.

தரப்பட்டிருக்கும் இந்த பதில்களிலோ அல்லது வேறு தலைப்புகளிலோ நண்பர் சுவனப்பிரியனுக்கு ஐயமிருப்பின் தொடரலாம் (இப்பதில்களின் தன்மையை உள்வாங்கிக்கொண்டு) நண்பருக்கு ஆசான் ஏங்கல்ஸின் ஒரு மேற்கோளை அறிமுகப்படுத்த விரும்புகிறேன். இருக்கும் எதுவும் அறிவியலின் மேடையில் தன்னை நிரூபித்தாக வேண்டும். அவ்வாறு நிரூபிக்கப்படாதவை நிராகரிக்கப்படும்.

Advertisements

2 பதில்கள்

  1. மிகச்சரியான பதில்கள் நண்பரே…உங்கள் பதிவை படித்ததும் எனக்கும் சில நினைவுகள்…முடிந்தால் பதிவிடுகிறேன்….

    நல்லதொரு பதிவிற்கு நன்றி!

  2. very nice and i need historical proof for hindu relegion

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: