ஓரிரு மாதங்களுக்கு முன்பு நண்பர் பிறைநதிபுரத்தான் ஹாருன் யஹ்யாவின் மொழிபெயர்க்கப்பட்ட இரண்டு பாகங்களை மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார்.அது குறித்து ஒரு பதிவு இட வேண்டும் என எண்ணியிருந்தேன்.பின்னர் பல்வேறு தளங்களில் மொழிபெயர்க்கப்பட்ட அந்த இரண்டு பாகங்கள் குறித்து விதந்த்தோதி பல இடுகைகளை காணனெர்ந்த்தது குறிப்பாக இஸ்லாமிய தளங்களில். 1850களின் இறுதியில் டார்வின் தனது கோட்பாட்டை முன்வைத்தபோது எவ்வளவு தூற்றப்பட்டாறோ அதே போல் தற்போது (அந்த அளவுக்கு இல்லாவிட்டலும்) மீண்டும் தூற்றப்படுகிறார். இஸ்லாமிய மீட்டுறுவாக்கத்திற்கு எப்படி அமெரிக்கா காரணமாக இருந்ததோ அதே போல இப்போதும் பரிணாமக் கொள்கையின் மீது அவதூறு பரப்பலையும் அமெரிக்காவே தொடங்கிவைத்துள்ளது. முந்தைய இஸ்லாமிய மீட்டுறுவாக்கத்திற்கு கம்யூனிச எழுச்சியை தடுக்க்கவும் அது மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தாதிருக்கவும் வேண்டிய தேவை இருந்தது. ஏகாதிபத்தியத்தின் உச்சியில் எல்லாத்தரப்பு மக்களும் தங்களின் வாழ்தளங்களிலிருந்து பிய்த்தெறியப்படும் சூழலில் தன்னிச்சையாக ஏகாதிபத்திய எதிர்ப்பு மக்களிடம் மீண்டும் ஒன்று திரண்டு விடக்கூடாது என்பதற்கு முதலாளியம் பல்வேறு உத்திகளை கையாண்டு வருகிறது.அவற்றில் ஒன்றாகவே படைப்புக் கொள்கைக்கு ஒரு செயற்கையான எழுச்சியை ஏற்படுத்தும் வண்ணம் கெண்டகி நகரில் பல மில்லியன் டாலர் செலவில் ஒரு அருங்காட்சியத்தை ஏற்பாடு செய்திருக்கிறது. அதில் பல்வேறு வரைகலை உத்திகளின் மூலம் மனிதனின் தோற்றம் குறித்த பைபிளின் கருத்தாக்கத்தை காண்பவர் ஏற்கும்வண்ணம் காட்சிபடுத்தியுள்ளனர். அது மட்டுமின்றி பரிணாமவாதிகள் சிலரை வைத்தே பரிணாமக்கொள்கைக்கு எதிராக பல நூல்களை எழுதவைத்து வெளியிட்டுவருகின்றனர்.(இந்த இடத்தில் இடதுசாரி எழுத்தாளர்களை கொண்டே கம்யூனிசத்தையும், ரஷ்யாவையும், ஸ்டாலினையும் அவதூறு செய்து பல நூல்கள் எழுதி வெளியிடப்பட்டதை நினைவு கூறுங்கள்). இந்த அமைப்பினர் துருக்கியில் பிஏவி விஞ்ஞான ஆய்வுமையம் என்ற அமைப்பையும் இன்னும் ஆஸ்திரேலியா, பிரிட்டன் போன்ற நாடுகளிலும் இது போன்ற அமைப்புகளை ஏற்ப்படுத்தி கருத்தரங்குகள் காட்சியகங்கள் போன்றவற்றை நடத்திவருகின்றனர். இது போன்ற ஒரு அமைப்பிலிருந்து தான் ஹாருன் யஹ்யா என்பவர் ஒரு நூலை எழுதியிருந்தார். அதன் சில பகுதிகளை கொண்டுதான் பரிணாமவாதிகளின் இடுப்பெலும்பை முறித்துவிட்டதாக பிதற்றித்திரிகின்றனர். எனக்கு அனுப்பபட்ட இரண்டு பகுதிகளையும் இங்கே காணலாம்.
அதன் முதல் பகுதியே பொய்யோடும் அவதூறோடும் தொடங்குகிறது. “பரிணாமவளர்ச்சி….காப்பாற்றப்படவேண்டும்”. இப்படிப்பட்ட பொய்களுக்கும் ஆதாரமற்ற உளறல்களுக்கும் பதில் கூறி நேரத்தை வீணடிக்காமல் சாரத்திற்குள் செல்லலாம். அதற்கு முன்னால் டார்வினின் பரிணாமக்கோட்பாட்டைக் குறித்து ஒரு சிறிய அறிமுகம். பிரிட்டனில் வைதீககிறிஸ்தவக் குடும்பத்தில் பிறன்த் சார்லஸ் டார்வின், பாதிரியாறாக வேண்டும் என்ற குடும்பத்தினரின் எதிர்பார்பையும் எதிர்பையும் மீறி எம் எஸ் பீகிள் என்ற கப்பற்பயண்த்தின் மூலம் ஏராளமான தொல்படிவங்களையும், பின்ச் குருவி போன்ற உயிரினங்களின் பல்வேறு கிளைகளையும் ஆராய்ந்து பல தலைப்புகளில் தன்னுடைய ஆய்வுகளை வெளியிட்டார். படைக்கப்பட்டதாகவும், எப்போதும் அதே நிலையில் இருந்து வருவதாகவும் கருதப்பட்ட உயிரினங்கள் அவ்வாறல்லாமல் சூழ்நிலைகளின் தாக்கத்தால் மாறக்கூடியவை என்பதுதான் டார்வினின் பரிணாமக்கோட்பாட்டின் அடிப்படை. டார்வின் தன்னுடைய ஆய்வுகளை வெளியிடுவதற்கு முன்பே அல்பிரட் ரஸ்ஸல் வாலஸ் என்பவரும் மலேயத் தீவுகளில் ஆய்வுசெய்து இதே போன்ற கருத்துகளை வெளியிட்டிருந்தார். தன்னுடைய ஆய்வேடுகளை டார்வினிக்கும் அனுப்பி வைத்திருந்தார். இப்படி பல அறிவியலாளர்களின் பங்களிப்புடன் தன்னுடைய ஆய்வை மேற்க்கொண்ட டார்வின் பல கேள்விகளை பதிலில்லாமல் விட்டுச்சென்றார். தனக்குப்பின்னால் வருபவர்கள் இதை மெய்பிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன். அவ்வாறே பல அறிவியலாளர்கள் டார்வின் கோட்பாட்டை ஆய்வுகள் மூலம் மெய்ப்பித்தனர். என்றாலும் டார்வின் கொண்டிருந்த தவறுகளும் சுட்டிக்காட்டப்பட்டன. மாற்றியமைக்கப்பட்டன. சர்வைவல் ஆப் பிட்னஸ் வலியதே வாழும் என்ற என்பது மறுக்கப்பட்டு மாற்றப்பட்டது. ஆனாலும் அடிப்படையில் மாற்றமில்லை. உயிரினங்கள் பரிணமிக்கின்றன என்ற புரட்சிகரமான சிந்தனை அறிவியல் ஆய்வுகள் மூலம் மேலும் மேலும் மெய்ப்பிக்கப்பட்டுக்கொண்டே வருகிறது. எல்லா மாற்றங்களையும் உள்ளடக்கி இன்று அது “மாடர்ன் சின்தசிஸ் எவல்யூசன்” என்று அழைக்கப்படுகிறது.
டார்வின் தியரியில் விடுபட்ட இணைப்பு என்றொரு தலைப்பு உண்டு. அதாவது உயிர்கள் ஒன்றிலிருந்து மற்றொன்றாக பரிணமிக்கும் காலங்களில் இடைப்பட்ட உயிரினமாக இருப்பது. டார்வின் சேகரித்த தொல்படிவங்களில் இதற்கான சான்றுகள் போதுமான அளவில் கிடைக்கவில்லை. அதனாலயே அவர் விடுபட்ட இணைப்புகள் என்று அதைக் குறித்தார். பின்னர் வந்த அறிவியலாளர்களால் அவை உறுதி செய்யப்பட்டன. அந்த வகையில் குரங்கின் மூதாதைக்கும் நமக்கும் இடையிலுள்ள விடுபட்ட இணைப்புகளாக பிந்திகாந்திரோப்பஸ், ஹோமோஎரக்டஸ், ஹோமோசெபியன், நியாண்டர்தாலிஸ் போன்றவைகளை சொல்லலாம். இது போல தற்கால யானைக்கும் அதன் மூதாதைக்கும் ஆன விடுபட்ட இணைப்பாக மாமதம் எனப்படும் மயிரடர்ந்த யானைகள் இருந்தன. தற்கால குதிரைக்கும் அதன் மூதாதைக்குமான இணைப்பாக இயோஹிப்பஸ் இருந்தன. ஆனால் இருக்கும் ஒவ்வொரு உயிர்க்கும் இது போன்று விடுபட்ட இணைப்பைக் கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதான செயலில்லை என்றாலும் தொடர்ந்து ஆய்வுகள் நடந்து வருகின்றன. இவ்வாறு விடுபட்ட இணைப்பு தொடர்பான ஆய்வுகளில் ஏற்பட்ட ஒரு சில தவறுகளைத்தான் ஹாருன்யஹ்யா தன்னுடைய கருவாக எடுத்துக்கொண்டிருக்கிறார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு ஆர்டிக் பகுதியில் ஒருவகை மீனின் படிவம் கண்டெடுக்கப்பட்டது. டக்டாலிக் ரோஸியா என்று உயிரியல் பெயர் கொடுக்கப்பட்ட அந்த படிவம் ஒரு மீனாக இருந்தாலும் மீனின் தன்மையிலிருந்து மாறுபட்டு அதன் எலும்புகள் உறுதியான அமைப்புடன் வலுவாக எடைதாங்கும் விதத்தில் அமைந்திருந்தை கண்ட ஆய்வாளர்கள் அதன் பரிணாம சாத்தியங்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறார்கள். இன்னும் எந்த முடிவையும் அறிவிக்காத இந்த ஆய்வைபற்றிய கட்டுரைகள் தங்களை பரிணாம வாதிகளாக காட்டிக்கொள்ளும் நேச்சர், சீட் போன்ற இதழ்களில் வெளிவந்தன. இதை எடுத்துக்கொண்ட ஹாருன் யஹ்யா, இதேபோல் இதற்கு முன்பு ஆய்வு செய்து கைவிடப்பட்ட கொஎலகான்த் என்று உயிரியல் பெயரிடப்பட்ட படிவம் ஒன்றுடன் ஒப்பிட்டு கைவிடப்பட்ட கொஎலகான்த் போலவே டக்டாலிக் ரோஸியாவும் கைவிடப்படும் என்றும் விடுபட்ட தொடர்பு என்று எதுவும் இல்லை என்றும் எல்லா உயிரினங்களும் அவ்வவ்வாறே படைக்கப்பட்டு தொடர்கின்றன என்றும் தன்னுடைய கைச்சரக்கை எழுதியிருந்தார். டக்டாலிக் ரோஸியா போன்றே கொஎலகான்த்தும் சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டெடுக்கப்பட்ட ஒரு மீனின் படிவம். அதை ஆய்வு செய்த ஆய்வாளர்கள் மீனின் தன்மையிலிருந்து மாறுபட்டு காற்றுப்பைகள் அதில் இருந்திருக்கக்கூடும் என்ற கணிப்பில் கடலிலிருந்து கரைக்கு மாறியதன் விடுபட்ட இணைப்பாக இருக்ககூடும் என்று கருதினர். ஆனால் ஏதேச்சையாக உயிருள்ள கொஎலகான்த் மீன் ஒன்று பிடிபட பரிணாம இணைப்பிலிருந்து கொஎலகான்த் நீக்கப்பட்டது. இதில் ஹாருன் யஹ்யாக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விசயம் ஒன்று உள்ளது. பரிணாமவாதிகள் எலும்புகளை மட்டும் வைத்துக்கொண்டு மெல்லிய திசுக்கள் இல்லாத நிலையிலயே கற்பனை செய்துகொள்கிறார்கள் என்று கூறும் ஹாருன் யஹ்யா, கொஎலகான்த்தில் அவ்வாறு எலும்புகளை மட்டும் வைத்துக்கொண்டு காற்றுபைகள் இருக்ககூடும் என்று ஆய்வாளர்கள் செய்த யூகம் மிகச் சரியானது தான் என்பதை உயிருடன் பிடிபட்ட கொஎலகான்த் மீன் மெய்ப்பித்தது. ஆம் காற்றுபைகளாக யூகம் செய்யப்பட்டவைகள் உயிருள்ள மீனில் கொழுப்புபைகளாக இருந்தன. உயிருள்ள மீன் பிடிபடாமல் போயிருந்தாலும் ஏதாவது ஒரு ஆய்வில் அவை காற்றுபைகளாக இல்லாமல் கொழுப்புபைகளாக இருக்கலாம் என்பது பின்னால் வெளிப்பட்டிருக்ககூடும். ‘இயோந்த் ரோபஸ்‘ என்ற அறிவியல் பெயர் கொடுக்கப்பட்ட ஆதிமனித மண்டை ஓடு பின்னர் வந்த ஆய்வுகள் மூலம் நீக்கப்பட்டதை போல் உயிருள்ள மீன் பிடிபட்டிருக்காவிட்டாலும் தொடர்ந்து நடத்தப்படும் ஆய்வுகளால் கொஎலகாந்த் நீக்கப்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. ஒன்றை தெளிவாகச் சொல்லலாம். பரிணாம அறிவியலாளர்கள் மதவாதிகளை போல் ஒரு முடிவை எடுத்துக்கொண்டு அதை மெய்பிக்கும் விதமாக பேசவோ எழுதவோ செய்வதில்லை. புறநிலை ஆய்வுகள் மூலம் கண்டடையும் உண்மைகளையே கோட்பாடுகளாக முன்வைக்கிறார்கள்.
இடைநிலை உயிரினங்கள் என்று நிறைய இருக்கின்றன. நீரிலும் நிலத்திலும் வாழக்கூடிய தவளை, முதலை போன்ற உயிரினங்கள், பறவையாக இருந்தும் பறக்க முடியாத (அல்லது அதிகம் பறக்கமுடியாத) கோழி, வான்கோழி, மயில், ஹெமு, தீக்கோழி போன்றவைகள். பறவையாகவும் ஊர்வனவாகவும் இருந்த ஆர்க்கியோடெரிக்ஸ், முட்டையிட்டுப்பாலூட்டும் பிளாடிபஸ், நீரில் வாழ்ந்தாலும் சுவாசிக்க வெளிக்காற்றை தேடிவரும் திமிங்கலங்கள் என உயிருடன் வாழ்ந்துகொண்டிருக்கும் எண்ணற்ற (விடுபட்ட) இணைப்புகள் இருக்கின்றன உலகில். மொசாயிக் பண்புகளுள்ள உயிரினங்களை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்று அடம்பிடிக்கும் யஹ்யாக்கள் இப்படி மாறுபட்ட பண்புகளுக்கு காரணம் கூற முடியுமா? உறுப்புகள் ஒரேநாளில் அல்லது ஒரே உயிரில் மாறவேண்டுமென எதிர்பார்ப்பது சிறுபிள்ளைத்தனமானது. மரபணுக்களின் பிழைச்செய்திகள் கற்பனையானது என்று மறுக்கும் யஹ்யாக்கள் இன்றுவரை உலகில் பிறந்துகொண்டிருக்கும் டிஎன்ஏ மரபணு ஏணிகளின் பிழைச்செய்திகளால் உறுப்புகள் இடம்மாறியும் குறைபாடுடனும் கூடுதல் உறுப்புகளுடனும் பிறக்கும் எண்ணற்ற உயிரினங்கள் அப்படி தவறுகளோடு பிறக்கும் காரணத்தை கூறிவிட்டு மறுக்கவேண்டும். அது தான் அறிவு நேர்மையானது.
இரண்டாவது பகுதியில் ஹாரூன் யஹ்யா குறிப்பிட்டுள்ளது முழுக்கமுழுக்க ஆதாரமற்ற யூகமும் நகைப்புக்கு இடமானதும் புறந்தள்ளக்கூடியதுமாகும். டார்வினிஷ்டுகளை ஒரு மதத்துக்குள் அடைக்கும் முயற்சி கேலிக்குறியது. கிருஸ்துவத்தையோ, இஸ்லாமியத்தையோ எதிர்க்கவேண்டுமென்பதற்காக டார்வின் தன்னுடைய ஆய்வுகளை தொடங்கவில்லை. மாறாக அவர் கண்டடைந்த ஆய்வின் உண்மைகள் பொய்களை சுட்டெரிக்கிறது. தங்கள் மதங்களின் ஆணிவேரை அசைக்கிறது என்பதற்காக அறிவியலை பொய்ப்பிக்கமுயலும் மதவாதிகளை கேட்ப்பதெல்லாம் ஒன்றுதான். நீங்கள் டார்வின் கோட்ட்பாட்டை ஆராய்ந்தது போதும் கடவுள்தான் படைத்தார் என்பதற்கு ஒரேஒரு அறிவியல் ஆதாரமாவது கொண்டுவாருங்கள் பிறகு பேசிக்கொள்ளலாம்.
நண்பர்களே! தனியார்மயம், தாராளமயம், உலகமயம் எனும் ஏகாதிபத்தியக்கொள்கைகள் உலகின் அனைத்துத்தரப்பு மக்களையும் தாக்கி அழித்துக்கொண்டிருக்கிறது. நம்முடைய உழைப்பின் ஒரு குறிப்பிட்ட பகுதி நம்மிடமிருந்து தந்திரமாய் பிடுங்கப்பட்டு ஏகாதிபத்தியங்களின் கைகளில் சென்றுசேர்கிறது என்பதை புறிந்துகொள்வதற்கு பெரிய பொருளாதார அறிவோ, அன்றாடவேலைகளை முடக்கும் ஆராய்ச்சியோ தேவையில்லை. கொஞ்சம் சிந்தித்துப்பார்த்தால் போதும், நாம் ஏன் இப்படி இருக்கிறோம் என்பதும், நாம் சந்திக்கும் பிரச்சனைகள் எங்கிருந்து தோற்றம் பெறுகின்றன என்பதும் தெளிவாக விளங்கும். அப்படி நாம் சிந்தித்துவிடக்கூடாது என்பதற்காகவே பொழுதுபோக்கு என்ற பெயரில் நம் நேரத்தை விழுங்குகிறார்கள். அப்படி நாம் சிந்தித்துவிடக்கூடாது என்பதற்காகவே கலை, இலக்கியம், மதம் என்பன போன்ற அனைத்தையும் பயன்படுத்துகிறார்கள். அப்படிப்பட்ட ஒன்றுதான் இது போன்ற மதநம்பிக்கைகளை விசிரிவிட்டு அதில் தங்கள் சுரண்டலை மறைத்துக்கொள்ளும் உத்தி. அவர்கள் போட்டுத்தந்த பாட்டையிலேயே சோணமிட்ட குதிரைகள் போல் நுரைதெரிக்க ஓடிக்கொண்டிருக்கிறோம் ஆனால் நாம் எப்போதும் இப்படியே இருந்துவிட முடியாது. நம்முடைய சமூகச்சூழல் நம்மை போராடத்தூண்டுகிறது, சிந்திக்கத்தூண்டுகிறது நாம் சிந்தித்தேஆகவேண்டும், ஒன்றிணைந்தே தீரவேண்டும் அதுதான் வரலாறு நமக்கு இடும் கட்டளை. வரலாறு நம்மை முதுகைப்பிடித்து தள்ளும்வரை காத்திருக்கவேண்டுமா? வெறும் தீக்குச்சியா நாம் தீப்பட்டிவந்து உரசும்வரை காத்திருப்பதற்கு மனிதர்களல்லவா பற்றியெரிய வேண்டாமா? உலகமயம் நமக்குத்தந்திருக்கும் துன்பங்களையும் துயரங்களையும் துடைத்தெரிவதற்கு வேறு எந்த அமைப்பும் போதுமானதல்ல. எனவே புரட்சிகர அமைப்புகளில் அணிதிரள்வோம். சுரண்டும் ஏகாதிபத்தியங்களை தீய்ப்போம்.