நெய்யாறு கேரள அடாவடியும் சிபிஎம் எடுபிடியும் என்ற தலைப்பில் அண்மையில் இட்ட ஒரு பதிவிற்கு விஜிடன் லதிப் எனும் நண்பர் ஒருவர் தனக்கு வந்த ஒரு மின்னஞ்சலை பின்னூட்டமாக இட்டு விளக்கம் கேட்டிருந்தார்.அந்த பதிவையும் மகஇகவே இதோ உனக்கு ஒரு சாவுமணி என்ற தலைப்பிலான பின்னூட்டத்தையும் காண இங்கே சொடுக்கவும்.
மதவாதிகளிடம் பேசும் வாய்ப்புகளில் நாம் எடுத்து வைக்கும் அறிவியல் ரீதியிலான வாதங்களை மறுக்கமுடியாமல் கண்களில் கோபம் தெறிக்கும், உதடுகள் துடிக்கும். ஆனால் வார்த்தைகள் வராது. அது போன்றதொரு நடுக்கம்தான் இந்த பின்னூட்டத்தில் தெரிகிறது. எடுத்துவைக்கும் விமர்சனங்களுக்கு விளக்கமளிக்க வக்கற்றவர்கள் அவர்களை விமர்சியுங்கள் இவர்களை விமர்சியுங்கள் என்றெல்லாம் பிதற்றுவது சிறுபிள்ளைத்தனமானது. போலிகள் ஏன் போலிகளாக இருக்கிறார்கள்? கம்யூனிசத்தின் அடிப்படைக்கூறுகள் எதுவும் இல்லாமல் பெயரில் மட்டும் கம்யூனிசத்தை வைத்துக்கொண்டு இருப்பதால்தான் போலிகள். இந்த கழிசடை ஓட்டுப்பொறுக்கிகளின் செயல்பாடுகளை கண்டு மக்களுக்குள் இயல்பாகவே கம்யூனிசம் ஊற்றெடுத்துக்கொண்டிருக்கிறது. ஆனால் போலிகளுக்கோ அவர்களோடு இருப்பதனால் போலிகளாக வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறதாம். அதுசரி பூவாக இருந்தால் நாரையும் மணக்கச்செய்யும் மூக்கு நீண்ட பிறவிகளல்லவா அதனால் தான் கன்றுகளின் உணவை மாற்றுகிறது. இருந்தாலும் முதல் வரியிலேயே போலிகள் என்று ஒப்புதல் வாக்குமூலம் தந்ததற்கு நன்றி. அடுத்து போலிகள் மாநில உணர்வோடு இருக்கிறார்களா? கேரள போலிகள் மாநில உணர்வோடு இருப்பதனால் தண்ணீர் தர மறுக்கிறார்கள் என்பதை மாநில உணர்வு என்று கொண்டாலும் அதே பிரச்சனையில் இங்குள்ளவர்கள் எந்த மாநில உணர்வோடு இருந்தார்கள்? கேரளமாநில உணர்வோடு அவர்கள் தண்ணீர் தர மறுத்தால் தமிழ்நாடு மாநில உணர்வோடு இவர்கள் தண்ணீர் கேட்டு போராடியிருக்கவேண்டுமல்லவா? சேலம் ரயில்வே கோட்ட விவகாரத்தில் எந்த மாநில உணர்வோடு ஊமையானார்கள்? கடல்சார் பழ்கலைகழக விவகாரத்தில் எந்த மாநில உணர்வோடு பாராளுமன்றத்தில் வாக்களிக்கமறுத்தார்கள்? பெல்லார்மினும் மோகனும் அடுத்தமுறை கொச்சியிலும் கோழிக்கோட்டிலுமா போட்டியிடப் போகிறார்கள்?
எது மண்ணுக்கேற்ற புரட்சி? மேற்குவங்கம் சிங்கூரிலும் நந்திகிராமிலும் போராடிய உழைக்கும் மக்களை கட்சிக்குண்டர்களைக் கொண்டும் போலீஸ் போக்கிரிகளைக் கொண்டும் கொன்றொழித்தார்களே அதுதான் மண்ணுக்கேற்ற புரட்சியா? பார்ப்பன பயங்கரவாதி ஜெயேந்திரனை அரசு மரியாதையுடன் கேரளாவிற்கு வரவேற்றார்களே அதுதான் மண்ணுக்கேற்ற புரட்சியா? இல்லை கோஷ்டிசண்டையில் அழுகி நாறுவதுதான் மண்ணுக்கேற்ற புரட்சியா? குறை சொல்கிறார்கள் என்று ஒப்பாரி வைப்பதை விட கூறப்பட்ட விமர்சனத்திற்கு அறிவு நேர்மையோடு பதில் கூற முயற்சி செய்யுங்கள். இன்னமும் புரட்சியை நேசிக்கின்றவர்கள் போலிகளின் அணியில் இருக்கத்தான் செய்கிறார்கள். அதனால்தான் கூர்மையான விமர்சனங்களினூடாக அவர்களை சிந்திக்கத்தூண்டுகிறோம். அதிமுக, திமுக, மதிமுக, தேமுதிக போன்ற கழிசடைகளை விமர்சிக்கும் அளவிற்குதான் உங்களையும் விமர்சிக்கவேண்டும் என்றால் முதலில் பெயரிலுள்ள கம்யூனிசத்தை எடுத்துவிடுங்கள் அதற்கு பதிலாக கழுதை முன்னேற்ற சங்கம், கட்டெறும்பு முற்போக்கு அணி என்று ஏதாவது பெயர் வைத்துக்கொள்ளுங்கள். அவர்களை விமர்சிக்கும் இதே அளவிற்கு உங்களையும் விமர்சிக்கலாம்.
பெரியாரின் பணியை அவரின் இறப்பிற்கு பிறகும் செய்துவருகின்ற தமிழர் தலைவர் வீரமணியாம். பெரியாரின் சிந்தனைகளையும் குடியரசு இதழில் அவர் எழுதியவற்றையும் பண்டமாக்கி தனது சொத்தாக்கிக்கொண்ட வீரமணிக்கு, பெரியார் தி.கவுக்கு எதிரான வழக்கில் தன்னை ஒரு இந்து என்று குறிப்பிட்ட வீரமணிக்கு (அல்லது கோழைமணிக்கு) பெரியார் பெயரை உச்சரிப்பதற்கு என்ன அருகதை இருக்கிறது? வாழ்வியல் சிந்தனைகள் என்ற பெயரில் நிலபிரபுத்துவ ஒழுக்கநெறிகளை தூசுதட்டி முதலாளித்துவத்திற்கேற்ப துடைத்து மெருகேற்றிக்கொடுப்பதுதான் பெரியார் இட்ட பணியா? பெரியார் திடலில் சுவிசேஷக் கூட்டங்கள் நடத்துவதுதான் பெரியாரின் இயக்கத்தை வளர்க்கும் வழியா?
இயக்கம் என்ற பெயரில் மூளையை கறை படுத்தும் செக்குச் சுழற்சியிலிருந்து விடுபட்டு மார்க்சிய, மெய்யான பெரியாரிய சிந்தனைகளுக்குத் திரும்புங்கள். அது தான் உங்கள் பைத்தியத்திற்கு சிறந்த மருந்து.
அந்தப்போலிகள் கீற்றில் தான் இதை எழுதியிருந்தார்கள்.அதைப்படிக்கும் போதே சிரிப்புதான் வருகிறது.அரசியல் ரீதியில் எப்படி விவாதம் நடத்துவது என்பது கூடத்தெரியாமல் முழிக்கின்றன,ம க இ க க்கு சாவுமணி எனக்கூறிக்கொண்டு தனக்கு தானே சாவு மணி அடித்துக்கொள்ளுகிறார்கள்.
கலகம்
“நகர்ந்து கொண்டிருப்பதே…… நதி!
இயங்கிக் கொண்டிருப்பவனே….. இளைஞன்!”
நதி மட்டுமல்ல சாக்கடையும் நகர்ந்து கொண்டுதானிருக்கிறது
அதில் தான் பன்றிகள் சுகம் காண்கிறார்கள்
பெரியார் திடலில் உள்ள எம்.ஆர்.ராதா மன்றம் பொது மன்றம்.யார் வாடகைக்கு கேட்டாலும் கொடுப்பார்கள்.அது பெரியாரின் உத்தரவு.தனது கருத்தைச் சொல்ல மேடை கிடைக்காமல் திண்டாடியது போன்று,தன் எதிரிக்குகூட அந்த நிலை வரக்கூடாது என்று எண்ணிய பெரியாரின் மனிதாபிமானம் அது.ஒன்றை விமர்சிக்கும் முன் தெளிவாக அறிந்து விமர்சிப்பது நன்றல்லவா?.மற்றபடி வாழ்த்துகள்.