சு. சாமி மீது முட்டையடித்தால் சட்டம் ஒழுங்கு நாறும்.

          நீதிமன்றத்தின் மாட்சிமையும், புனிதமும் சில நாட்களாக வீதியில் விவாதப்பொருளாகியிருக்கிறது. அனைவரும் விவாதிக்கிறார்கள் இதுவரை இப்படி நடந்ததில்லை என்று. ஊடகங்கள் அப்படித்தன் சொல்லித்தருகின்றன மக்களுக்கு., ஒரு குண்டுவெடிப்பு என்றால் பயங்கரம், இத்தனை பேர் சாவு, இதற்கு முன் இப்படி நடந்ததேயில்லை என்கின்றன. யார் வருகையையும் முன்னிட்டு பாதுகாப்பை பலப்படுத்தினால் வரலாறு காணாத பாதுகாப்பு என்கின்றன. நடந்த நிகழ்வை அதிர்ச்சியாகவோ, ஆச்சரியமாகவோ பேசிவிட்டு கலைந்து செல், ஆழ நோக்காதே என்பது தான் ஊடகங்கள் மக்களுக்கு நடத்தவிரும்பும் பாடம். கடந்த வாரம் நடந்த சு. சாமியின் மீதான முட்டையடித்தாக்குதலும் அதனைத்தொடர்ந்து நீதிமன்ற வளாகத்தில் வழக்குறைஞர்கள், நீதிபதிகள் மீது காவல்துறையால் நடத்தப்பட்ட மிருகவெறிதாக்குதலும் இப்படித்தான் ஊடகங்களால் முன்வைக்கப்பட்டு, இன்னும் ஓரிரு நாட்களில் வேறொரு நிகழ்வின் துணையுடன் மறக்கடிக்கப்பட்டுவிடும். ஆனால் ஆட்சிமுறையும், மக்களால் நடத்தப்படும் ஆட்சி எனும் மாயையும் வெளிப்படையாக அம்மணமாகி நிற்பது மறப்பதற்கில்லை.

          தமிழ்நாட்டில் நடப்பது திமுக ஆட்சி, அதாவது பார்பனீயஎதிர்ப்பு இயக்கத்தில் வேர்கொண்ட இயக்கத்திலிருந்து கிளைத்துவந்த ஆட்சி. அதன் மூத்த அமைச்சர் ஒருவர் சட்டமன்றத்திலேயே அறிவிக்கிறார், ஒரு ஆசாமியின் மீது முட்டைவீசப்பட்ட சம்பவம் என்று. முட்டை வீசப்பட்ட ஆசாமியோ ஆட்சியிலிருப்பவர்களுக்கு எதிரானவர். ஆனாலும் அவர்களின் பொருப்பிலிருக்கும் அதிகாரம் தான் சில முட்டைகள் உடைந்ததற்காக பல மண்டைகளை உடைத்திருக்கிறது. இந்த முரண்பாடு ஆட்சியிலிருப்பவர்களால் ஏற்பட்டதா? காவல்துறையால் நடத்தப்பட்ட இக்கலவரத்தை விசாரிக்க பென்ச் அமைத்திருக்கும் நீதிமன்றம் தான் சு சாமி ராமாயணம் எனும் புராணக்குப்பையை காட்டியதும் மக்களின் வரிப்பணம் இரைக்கப்பட்டு கிட்டத்தட்ட முடியும் தருவாயிலிருந்த திட்டத்தை முடக்கச்சொல்லியது. ஈழத்தமிழர்களுக்காக மழையில் நனைந்தும், நனையாமலும் மனிதச்சங்கிலி, ராஜினாமா, இயக்கம், விளக்கக்கூட்டம் என்று தொடர்ச்சியாக எதையாவது நடத்தி ஈழத்தமிழர்களுக்காக போராடிக்கொண்டிருப்பதாக போக்குக்காட்டிக்கொண்டிருக்கும் திமுக அரசுதான், ஈழத்திற்காக உணர்வு பூர்வமாக போராடிக்கொண்டிருக்கும் வழக்குறைஞர்களை அடித்து நொருக்கியிருக்கிறது. இவைகளெல்லம் நேர்ந்துவிட்ட முரண்பாடுகளோ, ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத தனித்தனி சம்பவங்களோ அல்ல.

          ஆட்சியிலிருப்பவர்கள் அதாவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தங்களது கொள்கைகளுக்கு ஏற்ப, த‌ங்கள் தீர்மானத்திற்கு ஏற்ப செயல்பட்டுவிட முடியாது என்பதைத்தான் இந்த முரண்பாடுகள் சுட்டிக்காட்டுகின்றன. அதோடு மட்டுமல்லாமல், அதிகாரவர்க்கம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சியிலிருப்பவர்களின் கொள்கைகள் விருப்பங்களை துளியும் சட்டைசெய்யாமல் செயல்பட முடியும் என்பதையும் வெளிப்படுத்திக்காட்டுகின்றன. இயக்குனர் சீமானை கைது செய்ததை வேண்டுமானால் காங்கிரஸின் தயவில்லாமல் ஆட்சியில் நீடித்திருக்கமுடியாது என்ற நிர்ப்பந்தம் காரணமாக இருக்கலாம். நீதிமன்ற கலவரத்திற்கு நிர்ப்பந்தம் ஒன்றுமில்லையே. திட்டமிட்டு வெறியுடன் நடத்தப்பட்ட நீதிமன்ற தாக்குதலுக்கு காரணம், ஈழத்தமிழர்களுக்காக தொடர்ச்சியாக உணர்வுபூர்வமாக வழக்குறைஞர்கள் போராடியதுதான். இயல்பாக உள்ள நீதித்துறையா, காவல்துறையா என்ற போட்டியும் சேர்ந்துகொள்ள , ஒரு கூமுட்டையின் மீது வீசப்பட்ட சில கூமுட்டைகள் உரசிவிட வெந்து தணிந்திருக்கிறது நீதிமன்றம்.

          பெரியாரின் சுயமரியாதை வேட்டியை பிடித்துக்கொண்டு வளர்ந்தவர்கள் ஆட்சியில் இருந்தாலும் பார்பனீயத்திற்கு எதிராக ஒன்றும் செய்துவிட முடியாது, அது அதிகாரவர்க்கமாய் இருக்கும் வரை. கோடிக்கணக்கான மக்களின் வறுமையையும் பசியையும் புறந்தள்ளிவிட்டு ‘காட்’ போன்ற ஒப்பந்தத்தில் கையொப்பமிட ஓரிரு அதிகாரிகள் போதும். விஞ்ஞானிகள், அறிவியலாளர்கள் எதிர்த்தாலும், மக்கள் கேள்வி கேட்டாலும், போலிகள் எகிரிக்குதித்தாலும் அணு ஒப்பந்தம் ஏற்படுவதை தடுக்கமுடியாது. தமிழர்கள் நாளுக்கொரு போராட்டம் நடத்தினாலும், தமிழர்களைக்கொல்ல தமிழ்நாட்டு வழியே கவச வாகனங்கள் அனுப்பப்படுவதை வேடிக்கை பார்க்கமட்டுமே முடியும். ஏனென்றால் இவைகளெல்லாம் அதிகாரவர்க்கத்தின், பார்ப்பனியத்தின் விருப்பமாக இருக்கிறது. ஓட்டுப்போட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்களெல்லாம் பொம்மைகள் தான். அதைத்தான் முகத்தில் தெரித்து நமக்குச்சொல்கிறது வழக்குறைஞர்கள் மண்டை உடைந்து சிந்திய‌ ரத்தம். தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டும் எனும் பழமொழியைப்போல் சு சாமியின் மேல் வீசப்பட்ட முட்டை உடைந்து சட்டம் ஒழுங்கில் நாறுகிறது.

          இன்னும் எத்தனை நிகழ்வுகள் வேண்டும் இந்த உண்மைகளை உணர்ந்து கொள்வதற்கு? இது தான் இன்று மக்கள் முன் எழுந்து நிற்கும் கேள்வி.

கோமாதாவும் மூத்திர வியாபாரிகளும்

சில நாட்களுக்கு முன் நண்பரொருவர் இப்படி ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.

Mr.Senkodi

What is your opinion of following article ?

Is it True ? If it is true can we drink ?

Medically  it is ok ??

please answer it.

byrosekhan

one of the agenda from hindutva.

பெங்களூர்: பெப்சி, கோக் ஆகிய குளிர்பானங்களுக்குப் போட்டியாக, பசுவின்சிறுநீரை (கோமியம்) வைத்து தயாரிக்கப்பட்டுள்ள புதிய குளிர்பானத்தைஆர்.எஸ்.எஸ். அமைப்பு அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த குளிர்பானத்திற்கு கெளஜல் என அது பெயரிட்டுள்ளது.இந்த குளிர்பானம் தற்போது ஆய்வக சோதனையில் உள்ளதாம். விரைவில் இதுமார்க்கெட்டுக்குக் கொண்டு வரப்படவுள்ளதாக இதுதொடர்பான ஆய்வுக்குழுவின் தலைவரான ஓம் பிரகாஷ் என்பவர் கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த குளிர்பானத்தில் கண்டிப்பாக சிறுநீர்வாசனை அறவே இருக்காது. உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. தற்போதுமார்க்கெட்டில் உள்ள கார்போனைட் அடங்கிய குளிர்பானங்களைப் போலஉடலைக் கெடுக்காது. எந்த வகையான நச்சுக் கிருமிகளும் இதில் இருக்காதுஎன்றார் ஓம் பிரகாஷ்.இந்தியாவில் தற்போது வெளிநாட்டு குளிர்பானங்கள்தான் கோலோச்சிவருகின்றன. இவற்றை ஒழித்துக் கட்ட வேண்டும், இந்துத்வாவை இதிலும்புகுத்த வேண்டும் என இந்து அமைப்புகள் கூறி வருகின்றன. அந்த வகையில்இந்துக்கள் புனிதமாக கருதும் பசுவின் சிறுநீரை அடிப்படையாகக் கொண்டகுளிர்பானத்தை ஆர்.எஸ்.எஸ். தயாரித்துள்ளது. 2001ம் ஆண்டுதான் கோமியம், உடல் கோளாறுகளை குறிப்பாக கல்லீரல்பிரச்சினைகளை தீர்க்கும் அருமருந்து என பாஜகவும், ஆர்.எஸ்.எஸ்ஸும்பிரசாரத்தைத் தொடங்கின என்பது நினைவிருக்கலாம். இதுதவிர உடல்பருமனையும் குறைக்கும் அரு மருந்து கோமியம். புற்று நோயைக் கூட இதுகுணப்படுத்தும் எனவும் இந்த அமைப்புகள் கூறி வந்தன.ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்து அமைப்புகள் கடந்த 1994ம் ஆண்டு வெளிநாட்டுகுளிர்பானங்களையும், நுகர்வோர் பொருட்களையும் புறக்கணிக்க வேண்டும்என்று கோரி பெரும் போராட்டத்தையும் மேற்கொண்டது நினைவிருக்கலாம்.புதிய கோமிய குளிர்பானம் குறித்து ஓம் பிரகாஷ் மேலும் கூறுகையில், நாங்கள்தயாரித்துள்ள கெள ஜல் குளிர்பானம் பசுவின் சிறுநீரைக் கொண்டுதயாரிக்கப்படுகிறது. இதில் சில மருத்துவ மூலிகைகள், ஆயுர்வேதமூலிகைகளின் சாறும் சேர்க்கப்படும். இது விலை மலிவானது. விலை குறித்து இப்போது அறிவிக்கும் திட்டம்இல்லை. முறைப்படி தொடங்கப்பட்டவுடன் அனைத்து விவரமும் தெரிய வரும்.தற்போது உள்ள அமெரிக்காவின் குளிர்பானங்களுக்கு எங்களது புதியகுளிர்பானம் கடும் போட்டியைக் கொடுக்கும். அவர்களுக்கு கடும் போட்டியைக்கொடுக்கும் வகையில் நாங்கள் மார்க்கெட்டிங் செய்யவுள்ளோம் என்றார்.உள்ளூரில் மட்டுமல்லாது வெளிநாடுகளுக்கும் இந்த கோமிய குளிர்பானத்தைஏற்றுமதி செய்யப் போகிறதாம் ஆர்.எஸ்.எஸ்.

அண்மையில் தோழர் அரை டிக்கட் வினவு தளத்தில் பின்னூட்டமிடுகையில் கதை ஒன்றை சொல்லியிருந்தார். பிரிட்ஜ் (குளிர் பெட்டி) வாங்குவதற்கு ஒருவர் கடைக்கு செல்கிறார். விற்பனைப்பிரதிநிதியோ அவருக்கு அதை விற்க மறுக்கிறார். பின் அவர் பல நாட்களில் பல்வேறு வேடங்களில் வந்து கேட்டும் அவரை சரியாக அடையாளம் கண்டு ஒவ்வொரு முறையும் “உனக்கு விற்பதற்கில்லை” என மறுத்துவிடுகிறார். கடைசியில் சோர்ந்து போய் அவர் “ஒவ்வொரு முறையும் நான் தான் என்று எப்படி சரியாக அடையாளம் கண்டு கொள்கிறீர்கள்?” என்று விற்பனை பிரதிநிதியிடம் கேட்டார். “யோவ் நீ ஒவ்வொரு முறையும் பிரிட்ஜ் என்று கேட்டது ஒரு வாஷிங் மிஷினை” என்றார். இதைப்போல்தான் பார்ப்பனீய பாசிசங்கள் சுதேசி என்றும் கலாச்சார காவலர்கள் என்றும் பல்வேறு முகமூடிகளுடன் வருகிறார்கள். ஆனாலும் அவர்களால் அவர்களின் சொந்த கோர முகத்தை மறைக்க முடிவதில்லை. அந்த வகையில் இப்போது கோமிய பானம். அதாவது பசுவின் மூத்திரத்திலிருந்து குளிர்பானம் தயாரிக்கிறார்களாம், அதற்கு கோஜல் என்று பெயராம். கோகோகோலா, பெப்சி போன்ற அமெரிக்க மூத்திரத்தில் உட்கொள்ளக்கூடாத அளவில் வேதிப்பொருட்கள் கலந்திருக்கின்றன என்றும், நச்சுத்தன்மை வாய்ந்தது என்றும் ஆய்வகங்களில் சோதனை செய்து நிரூபித்தனர் சில ஆண்டுகளுக்கு முன்பு. அதனைத்தொடர்ந்து பல ஊர்களிலும் அந்த அமெரிக்க மூத்திரத்தில் மின்ட் மிட்டாயை போட்டால் எப்படி பொங்கிச்சீருகிறது என்று பலர் நேரடியாக செய்து காட்டினர். இன்னும் சிலர் கழிப்பறையை கழுவி அதன் கரை நீக்கும் அமிலத்தன்மையை விளக்கிக்காட்டினர். அந்த நேரத்தில் அவைகளின் விற்பனை கொஞ்சம் சரிந்திருந்தது. இதைப்பயன்படுத்தி ஒரேகல்லில் மூன்று மாங்காய்களை அடிக்கத்திட்டமிட்டன பாசிசப்பரிவாரங்கள். அந்தக்கல்தான் கோஜல் எனும் மாட்டு மூத்திரம். அப்படியென்றால் மூன்று மாங்காய்கள்?

உழவர்களின் வாழ்வோடும், கிராமப்புற கால்நடை வளர்ப்போடும் இரண்டறக்கலந்த விலங்கு மாடு. உழவுக்கு காளையும், கால்நடை வளர்ப்புக்கு பசுவும் இன்றியமையாதவை. அறுவடைக்குப்பிறகு வைக்கோல் மாடுகளுக்கு உணவானது, அடுத்த விதைப்புக்கு இடைப்பட்ட காலத்தில் கால்நடை வளர்ப்பு மாற்றுத்தொழில். பால், இறைச்சியை உணவாகக்கொள்வதும், சாணத்தை வீடுகளில் தரை மொழுகவும், அடுப்பெரிக்கவும் என்று அவர்களின் வாழ்வில் பிரிக்கமுடியாத ஒன்றாக இருந்தது. அதனால்தான் அவர்கள் கொண்டாடும் திருநாளில் கூட மாட்டுக்கு உரிய பங்களிப்பை வழங்கியிருந்தனர். ஆனால் இதற்கு நேர் எதிராக வேள்வி நெருப்பில் குதிரையையும் மாடுகளையும் பொசுக்கித் தின்றுதீர்த்த பார்ப்பனக்கூட்டம், பௌத்தத்தை எதிர்கொள்ளமுடியாமல் அதன் கொல்லாமயை தன்னுள் வாங்கிக்கொண்டு புலாலுண்ணாமை என தகவமைத்துக்கொண்டு தன்னை தக்கவைத்துக்கொண்டது. பின்னர் முப்பத்து முக்கோடி தேவர்களும் பசுவின் உடலில் தங்கியிருப்பதாக புழுகி அதையே புராணமாக்கி பசுவை புனிதமாக்கிக்கொண்டது. இன்று அதைக்கொண்டே தாழ்த்தப்பட்டவர்களையும், சிறுபான்மையினரையும் நரவேட்டையாடிவருகிறது. மாட்டை கொன்றார்கள் என்று கூறி மனிதர்களின் தோலை உரிக்கிறது. மாட்டின் உயிரைவிட மனிதனின் உயிர் முக்கியமானதல்ல என்று வெளிப்படையாகவே கொக்கரிக்கிறது. பெரியார் ஒரு முறை சொன்னார், “பஞ்சகவ்யம் என்று பசுவின் சாணி மூத்திரம் போன்றவற்றை கலந்து அதை புனித தீர்த்தமாக குடிக்கச்செய்வது, முகம் சுழிக்காமல் குடிக்கிறானா என்பதை வைத்து இவன் எவ்வளவு ஏமாளியாக இருக்கிறான், எந்த அளவு இவனை ஏமாற்றலாம் என்று அளந்து பார்க்கும் கருவியாக பசுமூத்திரத்தையும் சாணியையும் பயன்படுத்துகிறான்” என்று. இன்று அதே சோதனையை விரிவான அளவில் செய்யப்போகிறார்கள் அதுவும் நம்மிடமே காசு வாங்கிக்கொண்டு. சரி இந்துக்கள் என்று தம்மை நம்பிக்கொண்டிருப்பவர்களுக்கு இது சரிவரும் ஏனையவர்களுக்கு? அதற்க்காகத்தானே பசு மூத்திரம் செல்வளர்ச்சிக்கு உதவுகிறது என்று டாக்டர் சந்திர சேகர் என்பவர் ஆய்வு செய்து கூறியிருக்கிறார். குஜராத்தில் பசுவின் பயபாடுகள் பற்றி கருத்தரங்கம் நடத்தியிருக்கிறார்கள். மைசூரில் பிஞ்சாரேபோல் சொசைட்டி சாந்திலால் சோர்டியா என்பவரின் தலைமையில் இது போன்ற அரிய உண்மைகளை(!) கண்டுபிடித்துச்சொல்வதற்கு முழுமூச்சோடு ஈடுபட்டு வருகிறது. உத்ராஞ்சல் அரசு 20கோடி ரூபாய் செலவில் ஆய்வகம் அமைத்துக்கொடுத்திருக்கிறது. இணையத்தில் தேடினாலோ உலகத்திலுள்ள அத்தனை நோய்களுக்கும் கோமியம் சிறந்த நிவாரணி என்று கட்டுரைகள் கிடைக்கும். ஆக நாம் எவ்வளவு ஏமாளி என்று நம்முடைய காசைக்கொண்டே சோதித்துப்பார்த்து அதில் லாபமும் அடைவது முதல் மாங்காய்.

பெப்சி கோக் போன்ற அன்னியப்பொருட்களை எதிர்ப்பது போலவும், சுதேசியத்தை காப்பது போலவும் போராட்டம் நடத்தியவர்கள் ஆட்சிக்கு வந்ததும் செய்தது என்ன? பொதுத்துறை நிறுவனங்களை அன்னியனிடம் அடிமாட்டு விலைக்கு விற்பதற்கென்றே ஒரு அமைச்சகம் அமைத்தார்கள். பசுவதை தடுப்புச்சட்டம் என்று மாட்டின் புனிதம் பற்றி பாடம் நடத்தியவர்கள், அந்த புனிதமான மாட்டோடு இணைந்த விவசாயிகள் லட்சக்கணக்கில் தற்கொலை செய்து கொள்ள காரணமான கொள்கையை எதிர்த்து ஒரு எழுத்தேனும் பேசமுடியுமா? நாடெங்கும் உள்ள சிறுபான்மையினர் உணவுக்காக கொன்ற மாட்டைவிட பால் பவுடர் இறக்குமதி என்ற ஒரே உத்தரவில் லட்சக்கணக்கான மாடுகளை ஒழித்துக்கட்டினார்களே, இதற்கு பதில் கூற முடியமா? இப்படி பன்னாட்டு நிறுவனங்களுக்கு நாயைப்போல சேவகம் புறிய ஓட்டுப்பொறுக்குவதற்கு, சுதேசி கோமாத என்று கபட நாடகமாடுவதற்கு மாட்டு மூத்திர கோஜல் பயன்படுகிறதே இது இரண்டாவது மாங்காய்.

நாட்டை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் அபாயம் என்று பயங்கர வாதம் குண்டுவெடிப்பு சீன் காட்டி சிறுபான்மையினரை விரக்தியின் விழிம்புக்குத்தள்ளி அதைக்காரணம் காட்டியே இந்து என்ற பட்டிக்குள் எல்லோரையும் அடைத்துக்கொண்டிருக்கிறார்களே பாசிச பயங்கரவாதிகள், அவர்களின் அந்த செயல்திட்டத்தின் வழிமுறைகள் தான் தேசிய நாயகன் தேசிய கலாச்சாரம் என்பது. ஒரே நாடு ஒரேகலாச்சாரம் ஒரே சட்டம் என்று தங்களின் பார்ப்பனிய முகத்தை தேசிய முகமூடியால் மறைத்துக்கொள்ள மருத்துவப்பலன்களை புனைந்து அதைக்காட்டி ஒரு குளிர்பானமாய், விதேசியத்திற்கெதிராய் சுதேசியமாய் விளம்பரம் செய்து, தேசிய வெறியை கிளப்பி தங்களின் அரசியல் இலக்கை நீங்கள் அறியாமலேயே உங்களுக்குள் திணிக்கிறார்களே இது மூன்றாவது மாங்காய்.

நாட்டில் பயங்கரவாதத்திற்கு பலியானவர்களை விட, தொன்னூறுகளின் தொடக்கத்தில் நடைமுறைக்கு வந்த பொருளாதாரக்கொள்கையால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகம். விவசாய நாடான இந்தியாவில் பெருமளவில் வேலைவாய்ப்பை கிராமப்புறங்கள் தான் வழங்கிக்கொண்டிருந்தன. அவர்களை கிராமியச்சூழலிலிருந்து பிய்த்து உதிரித்தொழிலாளர்களாய் நகரங்களில் வீசி எறிந்திருக்கிறது அந்த பொருளாதாரக்கொள்கை. சமூகத்தில் எல்லாத்தட்டு மக்களையும் பாதிக்கும் பொருளாதாரக்கொள்கைகளையும், உலக வங்கியின் உத்தரவுகளையும் எந்தக்கட்சியும் மீறுவதில்லை. இப்படி அன்னியக்கைக்கூலிகளாய், நம் வாழ்வை அன்னியனின் சுரண்டலுக்குள் அடிமைப்படுத்தும் சோரம் போனவர்கள் தான் சுதேசியம் என்றும், தேசியக்கலாச்சாரம் என்றும் கௌஜல் புனிதம் என்று சொல்லிக்கொண்டு உங்கள் முன் வருகிறார்கள். இத சரியான வழியில் புறிந்து கொள்வதற்கும் முறியடிப்பதற்கும் பெப்சி கோக்கை கையில் பிடித்துக்கொண்டு சிந்திப்பவர்களால் முடியாது. பெப்சி கோக்கின் ஒவ்வொரு சொட்டிலும் விவசாயிகளின் கண்ணீரும் ரத்தமும் கலந்திருக்கிறது. அவைகளை புறக்கணிப்பதுடன் ஆரோக்கியமும் ருசியும் நிறைந்த இளநீர் மோர் போன்ற பானங்களுக்கு திரும்புவோம். அதோடு மட்டுமன்றி இயற்கை பானங்களை அழிக்க நினைப்பவர்களுக்கு எதிராகவும், இயற்கை வளங்களை நாசமாக்கி அதை தம் சொத்தாக மாற்றுபவர்களுக்கு எதிராகவும் அணிதிரள்வோம்.

போலிகளையும் காலிகளையும் புறந்தள்ளி தொடர்கிறது தில்லை போராட்டம்.

     தில்லைக் கோவிலை அரசு தன்னுடைய பொறுப்பில் எடுத்துக்கொள்ள வைக்கப்பட்டதிலிருந்து அங்கிருந்து விரட்டப்பட்ட தீட்சிதக் கும்பலைப்போலவே வேறுசில கும்பல்களும் வயிற்றில் அமிலமேறிக் கொதிக்கிறார்கள்.ஆனால் அதை தீட்சித ரவுடிகள் போல் வெளிப்படுத்த முடியாமல் சுவரொட்டிகளில் உமிழ்ந்திருக்கிறார்கள் அரசுக்கு நன்றி என்று.     

    
தில்லை நடராஜரின் காதில் தமிழ் ஓதியதும் ஆலயத்திலிருந்து அயோக்கியர்களை வெளியேற்றியதும் வக்கீல் வைத்து வாதாடிப் பெற்ற வெற்றி மட்டுமல்ல, மக்களை ஒன்றினைத்து போராடிப்பெற்ற வெற்றி. எத்தனை தடைகள்? எத்தனை குள்ள நரித்தனங்கள். அத்தனையையும் மக்களின் துணையால் துடைத்தெறிந்து பெற்ற வெற்றி. முதல் கூட்டத்தில் புலி வேசம் கட்டி உருமிய சிபிஎம் போலிகள் பின் பார்ப்பான் என்று சொல்லாதிர்கள் என்று பூனையாகி ஒதுங்கினர். போராட்டத்திற்கு வராத தேசியவாதிகள் வக்கில் ராஜீவை நாங்கள் தான் அறிமுகப்படுத்தி வைத்தோம் என்று விலகி நின்று துண்டு போடுகிறார்கள். இவர்களின் கூத்துகளைக்கண்ட சிதம்பர மக்களோ இரண்டாம் வாயால் சிரித்துக்கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் முதியவர் ஆறுமுகச்சாமியை அடித்து வீதியில் தள்ளியதையும் கண்டார்கள், யானையில் வந்து தமிழ் பாடியதையும் கண்டார்கள். இந்த இரண்டுக்கும் இடையேயான மாற்றம் சும்மா வந்து விடவில்லை என்பதையும் கண்டார்கள். இதை பொறுக்கமாட்டாமல் தான் பார்ப்பனியத்தில் ஊறித்திழைத்த ஊடகங்கள் புரட்சிகர அமைப்புகளை அவர்களின் போராட்டங்களை இருட்டடிப்பு செய்கின்றன. இரவில் நடை சாத்தப்பட்டப் பிறகு கோயிலின் பிரகாரங்களில் மடைமாற்றிய சல்லாபங்களை தலையங்கமாய் தீட்டாத நாளிதழ்கள் கோயிலை அரசு எடுத்துக்கொண்டதும் தலையங்கம் தீட்டுகின்றன. ஆத்தீகக் கோயிலுக்குள் நாத்தீகச் சதி என்று அலறுகின்றன. கள்வெறி ஆட்டங்களையும் காமக்களியாட்டங்களையும்; சுரண்டியும் திருடியும் வயிறு பெருக்கிய கொட்டத்தை சுற்றியிருந்த மடங்களும் ஆத்திகர்களும் ஏன் கேட்கவில்லை? கடலுக்குள் பயனற்றுக் கிடக்கும் மணல்திட்டை தொட்டபோது புண்பட்ட இந்துக்களின் மனம் கோயிலுக்குள் ஒழுக்கக் கேட்டின் எல்லையையே தொட்டபோது ஏன் புண்படவில்லை? ஏனென்றால் அது ஆத்தீகப் புண்ணல்ல. அரசியல் புண். இந்தப் புண்ணுக்கு நாத்திகர்களான புரட்சிகர இயக்கங்களிடம் தான் மருந்து இருக்கிறது.     

     அன்று மக்கள் முன் அறிவிக்கப்பட்ட இலக்குகள் இன்னும் மீதமிருக்கிறது. நந்தன் நுழைந்த தெற்குச் சுவர் இன்னும் மீதமிருக்கிறது. இது ஆன்மீகமல்ல, தீண்டாமை. இந்த சாதி வெறியை தீண்டாமையை, அரசியல் போலிகளின் கபட நாடகங்களை திரைகிழிப்பது அவசியம். மொட்டை சோ முதல் முட்டை சு.சாமி வரை கோவிலை அரசிடமிருந்து பிடுங்கப் போராடும் இதே கும்பல் தான் சுகாதாரம் முதல் கல்வி வரை மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கான துறைகளைனைத்தையும் அரசிடமிருந்து பிடுங்கப் போராடுகிறது. இந்த மக்கள் விரோதக் கும்பலை விரட்டியடிப்பதும் தீண்டாமையை பக்தியாக காட்டும் ரவுடிக் கும்பலை விரட்டியடிப்பதும் வேறு வேறானதல்ல. அந்த திசை வழியில் தில்லையில் தொடர்கிறது போராட்டம். பிப்ரவரி 21ம் தேதியில் நடைபெறும் பேரணியும் பொதுக்கூட்டமும் இதை விரிவான தளத்தில் உங்களிடம் எடுத்து வைக்கும்.  

 

பேரணி மற்றும் பொதுக்கூட்டம்

நாள்:சனிக்கிழமை பிப்ரவரி 21, சனிக்கிழமை

பேரணி துவங்கும் இடம் காந்தி சிலை அருகி்ல்

பொதுக்கூட்ட இடம் : பெரியார் சிலை,

சிதம்பரம்

இசை சந்தைக்கு இசையும் ஏ ஆர் ரகுமான்.

          90களின் தொடக்கத்தில் தமிழ் திரை இசை உலகிற்கு அறிமுகமான இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான், ஸ்லம்டாக் மில்லியனர் என்ற பிரிட்டீஸ் திரைப்படத்திற்கு இசையமைத்ததன் மூலம் கோல்டன் குளோப் என்ற விருதை பெற்றுள்ளார். இதை தமிழன் என்ற முறையிலும், இந்தியன் என்ற முறையிலும் பெருமிதம் கொள்ளும் ஒன்றாக ஊடகங்கள் பெருமைப்படச்சொல்கின்றன. இலங்கையில் கொத்துக்குண்டுகள் மூலம் தமிழர்களின் உயிரும் உடமையும் குதறப்பட்டுக்கொண்டிருக்கையில் இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றியும், ரகுமானின் குளோப் விருதும் பெருமிதம் கொள்ளும் உணர்வாக முன்னிருத்தப்படுகின்றன. இது ஒரு புறமெனில் மறுபுறம் இப்படம் இந்தியாவை கேவலப்படுத்துவதாக சில அறிஞர்கள்(!) கொதிக்கிறார்கள். சிலர் வழக்குத்தொடுத்திருக்கிறார்கள். தான் ஆராதிக்கும் ஒரு நடிகனின் கையெழுத்தைப்பெற மலத்தில் புறண்டெழுவதும், சேரிகளின் அவலத்தைக்காட்டுவதும் இந்தியாவை கேவலப்படுத்துவதாகும் என்றால், சேரிகளை இன்னும் சேரிகளாகவே வைத்திருப்பதும், ஒரு பிரிவு மக்கள் தாங்கள் வாழ்வதற்காக மலத்தோடு உழன்றுகொண்டிருப்பதும் இந்தியாவிற்கு அவமானமாக தெரியவில்லையா? என்று அவர்கள் சொல்லவில்லை. அவர்கள் சொல்லவும் மாட்டார்கள். ஒரே இரவில் ஏழை கோடீஸ்வரனாகும் கோடம்பாக்கத்துக்குப்பையை ஆங்கிலத்துடைப்பத்தால் வாரியதால் ஆஸ்காரை வெல்லும் என்று இப்போதிருந்தே ரசிகர்கள் கொண்டாடக் காத்திருக்கிறார்கள்.

          பொதுவாக இசை என்பது எல்லாத்தட்டு மக்களாலும் ரசிக்கப்படக்கூடியதாகவும், விரும்பக்கூடியதாகவும் இருக்கிறது. இசை என்றால் பரவலாக அது திரைஇசையையே குறிக்கும். அவ்வாறல்லாமல் திரைப்படமல்லாத இசைப்பாடல்களும் அவ்வப்போது வந்ததுண்டு. இசையை ரசிப்பதாக குறிப்பிட்டாலும் அது பாடலை உள்ளடக்கியதாகவே இருக்கும். இப்படி திரைப்பட இசையானாலும், அதற்கு வெளியிலிருந்து வந்த இசையானாலும் அவை இரண்டு நோக்கங்களை கொண்டிருக்கும். மக்களுக்கு இசையின் மேலுள்ள மோகத்தை பயன்படுத்தி அவர்கலை அந்த மயக்கத்திலேயே தக்கவைப்பதற்கும், அதன் மூலம் இசைத்தட்டு விற்பனையை கூட்டி லாபம் பார்ப்பதற்கும். தங்களின் வாழ்வில் நேரடியாக கண்ட அனுபவங்களை அறிவாக அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதற்கான கருவியாக இசையும் ராகங்களும் தோன்றின. பின்னர் உழைப்பின் பயன் உழைப்பவர்களுக்கு கிடைக்காமல் போனபோது உழைப்பின் மீது ஏற்ப்பட்ட சலிப்பைப்போக்கும் போதையாக பொழுதுபோக்காக உழைப்பை அபகரித்தவர்களால் முன்வைக்கப்பட்டது. இன்றுவரை அதுவே பல்வித வடிவமாற்றங்களுக்கு உள்ளாகி ஆனால் உள்ளடக்கம் மாறாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதோடு மட்டுமன்றி பலகோடிகளை ஈட்டித்தரும் இசைச்சந்தையாகவும் இன்று உருவெடுத்து நிற்கிறது. அந்தவகையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் சோனி நிருவனம் தயாரித்து ஏஆர் ரகுமான் இசையமைத்து பாடி வெளியிட்ட வந்தேஏஏ மாட்ரம் எனும் (இந்து வெறி) தேசபக்தி இசை பத்து லட்சம் குறுந்தகடுகள் விற்கப்பட்டன. இசை என்னும் மயக்கம் அந்த பார்பனிய பாடலை பொழுது போக்கு என்னும் வடிவில் மக்களிடம் கொண்டு சேர்த்ததோடு மட்டுமன்றி பலகோடி லாபத்தையும் குவித்தது. இந்தவகையில் இளையராஜாவின் திருவாசகமும் அடக்கம். மக்களை கருக்கும் நச்சுச்சிந்தனைகளை கலையின் வடிவங்களாகவும், பொழுது போக்காகவும் கொள்பவர்களும், கொண்டாடுபவர்களும் மக்களுக்கு விழிப்புணர்வூட்டும், போராடத்தூண்டும் பாடல்களை பிரச்சாரப்பாடல் என ஒதுக்குவது வேடிக்கையானது.

          தமிழ், இந்தி, ஆங்கிலம் என்று பல படங்களுக்கு இசையமைத்திருந்தும் (ஸ்லம் டாக் மில்லியனரை விட சிறப்பாக சில படங்களுக்கு இசையமைத்திருப்பதாக அவரது இசை ரசிகர்கள் கூறுகிறார்கள்) ஸ்லம் டாக்கின் இயக்குனர் டானி பெய்லேவின் முக்கியத்துவம்விருதுக்குத்தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு தேவைப்பட்டதாக கூறப்பட்டாலும், அமெரிக்க நாளிதழ்கள் இந்தப்படத்தையும் இசையையும் கொண்டாட்டம் என வர்ணித்து கட்டுரைகள் வெளியிடுவதற்கு பின்ன‌ணியிலுள்ள எண்ணம் வேறானது. இந்தியாவில் தமிழ் உட்பட தென்னிந்திய மொழிகளிலும், இந்தியிலும் வடமாநிலங்களிலும் சேர்த்து ஆண்டொன்றுக்கு தோராயமாக 600 படங்களுக்கும் அதிகமாக வெளியாகின்றன. இவற்றின் பாடல்களுக்கும். திரைப்படமல்லாத பாடல்களுக்கும் இந்தியாவில் மிகப்பெரிய சந்தை இருக்கிறது. இவற்றை சில உள்நாட்டு நிறுவனங்களோடு கூட்டு சேர்ந்து பன்னாட்டு நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்திவருகின்றன. இந்நிலையில் இந்தியா முழுவதிலும் ஓரளவு அறிமுகமான ஏஆர் ரகுமானின் இசைக்கு விருது வழ்ங்குவதன் மூலமும், அதைப்புகழ்ந்து கட்டுரைகள் வெளியிடுவதன் மூலமும் அந்த இசைச்சந்தையை கைப்பற்ற களத்தில் குதித்திருக்கின்றன. ஏஆர் ரகுமானின் மேற்கத்திய பாணி இசையமைப்பு இந்திய ரசிகர்களை ஏற்கனவே அதற்கு தயார்படுத்தி வைத்திருக்கிறது. தொடர்ச்சியாக இந்தியர்களுக்கு அழகிப்பட்டம் வழ‌ங்கியதன் மூலம் அழகு சாதனப்பொருட்களின் விற்பனை பல மடங்கு அதிகரித்ததையும், திரையரங்குகளை பெரும் நிறுவனங்கள் கைப்பற்றிவருவதையும் இந்த இடத்தில் நினைவு கூர்ந்து பாருங்கள். மேற்கத்திய இசைக்குப்பைகளையும், உணர்வற்ற கூச்சல்களையும், இந்தியச்சந்தையில் கொட்டி மக்களின் உழைப்பை மேலும் சுரண்ட கூரிய நகங்களுடன் காத்திருக்கின்றன அவைகள்.

          “திருப்பாச்சி அருவாள தீட்டிக்கிட்டு வாடா வாடா” போன்ற பாடல்களை (தாஜ்மஹால் ஏஆர் ரகுமான்) இசையாகவும் கலை வடிவமாகவும் ரசிக்கும் மக்கள் “மக்கள் ஆயுதம் ஏந்துவது சொல்லம்மா வன்முறையா?” (மகஇக வெளியீடு) போன்ற பாடல்களை வன்முறை என்றும் பிரச்சாரப்பாடல்கள் என்றும் ஒதுக்குவது அவர்களை அவர்களே அழித்துக்கொள்வதற்குத்தான் துணைபோகிறது என்பதை உணரவேண்டும். அப்படி உணர்ந்து கொள்ளும் போது எது இசை என்பதை புறிந்து கொள்வதோடு, தினம் தினம் நம்மைச்சுற்றி மக்கள் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கையில் இசை ஒரு பொருட்டல்ல எனும் இங்கிதத்தையும் தெரிந்து கொள்ளமுடியும்.

முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு: ஒரு பார்வை

முதலில் எனது வக்கிர புத்தியை செருப்பால் அடிக்க வேண்டும். ஜனவரி 25ம் தேதி புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி நடத்தும்முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடுக்கு சென்று வரலாம் என புறப்பட்டதில் எந்தவிதமான பிழையும் இல்லை. நிறைந்த அமாவாசை. அதுவும் தை அமாவாசை. எனவே மார்க்ஸ், எங்கல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ ஆகியோருக்கு எள்ளுத்தண்ணி ஊற்றி தர்ப்பணம் செய்துவிட்டு மாநாட்டை ஆரம்பிப்பார்கள் போலிருக்கிறது என நக்கலுடன் சென்றேன் பாருங்கள்அதற்கு சரியான செருப்படியை தோழர்கள் கொடுத்தார்கள்.

இரண்டாவது பத்தியிலேயே குறிப்பிட்டு விடுகிறேன். மக்கள் கலை இலக்கிய கழகம், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணிஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட்லெனினிஸ்ட்) மாநில அமைப்புக் கமிட்டிஎன எந்த அமைப்பை சேர்ந்தவனும் அல்ல நான். ‘இணையத்தில் வினவு தோழர்கள் மாநாட்டை பற்றி அதிகமாக சொல்கிறார்களேஎன்னதான் செய்கிறார்கள் என்று பார்ப்போம்…’ என வேடிக்கை பார்ப்பதற்காகத்தான் சென்றேன்.

சென்னை அம்பத்தூரில் மாநாடு. எஸ்டேட் பேருந்து நிலையத்திலிருந்தே புஜதொமுயை சேர்ந்த ஷேர் ஆட்டோ தோழர்கள், அமைப்பின் கொடி பறக்கும் ஆட்டோக்களுடன் வருபவர்களை வரவேற்றார்கள். இதே நிலமைதான் அம்பத்தூர் ரயில்வே ஸ்டேஷன் அருகிலும். இடம் கண்டுபிடிக்க யாரும் சிரமப்படக் கூடாது என்பதில் தோழர்கள் கவனமாக இருந்தார்கள். சாலைகள் முழுக்க அமைப்பின் சிவப்பு நிற கொடிகள் பறந்தன. எஸ்.வி. நகர் அம்பேத்கர் சிலைக்கு அருகிலுள்ள தேனீர் கடை ஊழியர்கள் உட்பட யாரை விசாரித்தாலும் மாநாடு நடைபெறும் இடத்தை துல்லியமாக குறிப்பிட்டு வழிநடத்தினார்கள்.

தோழர் சந்திப்பு வந்திருந்தால் வயிறு எரிந்திருப்பார். இதுவரை தனது பதிவுகளில் மகஇக, எஸ்ஓசி குறித்து, தான், எழுதிய விஷயங்கள் எந்தளவுக்கு புரட்டல் நிரம்பியது என்பதை நினைத்து குற்ற உணர்வால் குறுகியிருப்பார். அந்தளவுக்கு எஸ்.வி.நகர், அம்பேத்கர் கால்பந்து மைதானமே சிவப்பால் குளித்துக் கொண்டிருந்தது.

இந்தளவுக்கு கூட்டம் வரும் என எதிர்பார்க்காததால் பிரமிப்பு ஏற்பட்டது உண்மை. மாநாட்டு திடலே நிரம்பி வழிந்தது என்றால் அது மிகையில்லை. தமிழகத்தின் மூலை, முடுக்கிலிருந்தெல்லாம் தோழர்கள் கூட்டம் கூட்டமாக வந்திருந்தார்கள்.

பல தோழர்கள் சிவப்பு நிற சட்டையை அணிந்திருந்தார்கள். பெரும்பாலானவர்கள் குடும்பத்துடன், மனைவி குழந்தைகளுடன் வந்திருந்தார்கள். ஒருவரது முகத்தில் கூட சோர்வோ, கடனே என மாநாட்டுக்கு வந்திருக்கும் பாவனைகளோ தெரியவில்லை. அனைவரது கண்களிலும் உறுதி. முக்கியமாக தோழர்களின் மனைவிமார்களை சொல்ல வேண்டும். கணவருக்காக வந்தது போல் தெரியவில்லை. விருப்பத்துடன், மாநாட்டின் தன்மையை உணர்ந்து, நம் குடும்ப விழா என்ற எண்ணத்துடன் கலந்து கொண்டவர்களை போலவே தெரிந்தார்கள். ஒருவரது கால் விரல்களிலும் மெட்டியில்லை. கழுத்தில் நகையில்லை. வீட்டிலிருந்தே தோழர்கள் தங்கள் அமைப்பை கட்டுகிறார்கள் என்பதை புரிந்து கொள்ளவும், உணரவும் இந்த மாநாடு உதவியது.

மாநாட்டில் உரையாற்றிய தோழர்களின் உரைகளை வினவு தோழர்கள் தங்கள் தளத்தில் வெளியிடுவார்கள் என நம்புவதால் அதற்குள் இந்தப் பதிவு நுழையவில்லை. பதிலாக மனதில் பட்ட சில விஷயங்களை குறிப்பிடலாம் என நினைக்கிறேன்.

சொன்னபடி குறித்த நேரத்தில் மாநாட்டு பந்தலுக்கு வெளியே கொடியேற்றத்துடன் முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டை தொடங்கினார்கள். புஜதொமுயின் தலைவரான தோழர் முகுந்தன் கொடியேற்றினார். அதன் பின் செங்கொடிக்கு வணக்கம் செலுத்தியவர்கள் அமைப்பு சார்ந்த தோழர்கள் மட்டுமல்ல. அவர்கள் குடும்பமும்தான். அதுவும் 4, 5, வயதுக்கு உட்பட்ட குழந்தைகள்கூட கை விரல்களை மடக்கி வணக்கம் செலுத்தியதை குறிப்பிட்டேயாக வேண்டும்.

குறித்த நேரத்தில் மாநாட்டை தொடங்கியவர்கள், குறித்த நேரத்தில் மாநாட்டை முடிக்க முயன்றார்கள். மாநாடு முடிந்ததும், ‘மாநாட்டு பந்தலில் இருந்த பிளாஸ்டிக் நாற்காலிகளை ஒன்றின் மீது ஒன்றாக போட்டுவிட்டு செல்லுங்கள்அது எங்களுக்கு உதவியாக இருக்கும் என புஜதொமு தலைவர் தோழர் முகுந்தன் அறிவித்தார். அதற்கு நல்ல ரெஸ்பான்ஸ். என்னருகில் அமர்ந்திருந்த 60 வயதை கடந்த ஒரு அம்மா, தன்னால் முடிந்தளவுக்கு நாற்காலிகளை ஒன்றிணைத்தார்.

மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் 80% பேர் 20 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள். இதே வயதுள்ள பெண் தோழர்களும் கலந்து கொண்டார்கள். ஆனால், யாருமே யாரிடத்திலுமே கேலி, கிண்டல், ஈவ் டீசிங் மாதிரியான நடவடிக்கைகளில் இறங்கவில்லை.

ஆண்களுக்காக தனியாக கழிவறை அமைக்கப்பட்டிருந்தது. அந்த இடத்திலேயே ஆண் தோழர்கள் சிறுநீர் கழித்தார்கள்.

தட்டுப்பாடின்றி நல்ல குடிநீர் கிடைத்தது.

மதியம் 5 ரூபாய் விலையில் உணவை வழங்கினார்கள். முன்னணி தோழர்களில் ஆரம்பித்து என்னைப் போல பார்வையாளராக சென்றவர்கள் வரை அனைவரும் வரிசையில் நின்றே உணவை பெற்றுக் கொண்டார்கள்.

கூட்டத்தை அமைப்பு தோழர்கள் ஒழுங்குப் படுத்தினார்கள்.

குடித்துவிட்டு யாரும் மாநாட்டு பந்தலுக்கு வரவில்லை. (முக்கியமாக பியர்). சிகரெட் பிடிப்பவர்களின் எண்ணிக்கையும் குறைவாகவே இருந்தது.

மாநாட்டு திடலில் யாரும் குப்பை போடவில்லை. அதற்கென அமைக்கப்பட்ட தொட்டியிலேயே பயன்படுத்திய பொருட்களை போட்டார்கள்.

பாப்கார்ன், சமோசா, முறுக்கு, ஸ்நாக்ஸ் மாதிரியான அயிட்டங்கள் மாநாட்டு பந்தலில் விற்கப்படவும் இல்லை. வெளியிலிருந்து அவற்றை வாங்கி வந்து தோழர்கள் மாநாடு நடைபெறும்போது கொறிக்கவும் இல்லை. கைக் குழந்தையுடன் கலந்து கொண்ட தோழர்களின் குடும்பத்தினருக்கு, அறிமுகமில்லாத தோழர்கள் கூட பிஸ்கட் வாங்கி வந்து குழந்தைகளிடம் கொடுத்ததை கண்ணுக்கு நேராக பார்க்க முடிந்தது.

மாநாட்டு திடலிலேயே, பந்தலை ஒட்டிகீழைக்காற்று‘, ‘புதிய ஜனநாயகம்‘, ‘புதிய கலாச்சாரம்‘, ‘புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணிசார்ப்பில் புத்தகக் கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. இது இயல்பானதுதான். எதிர்பார்த்ததுதான். தங்கள் அமைப்பு சார்பில் நடக்கும் மாநாட்டில், அமைப்பின் புத்தகங்களை தானே விற்பார்கள்? என்று நினைத்தால் உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். இவர்கள் அமைப்பை சாராத, இவர்கள் மீது கடுமையான விமர்சனங்களை வைக்கும் மாற்று இயக்க தோழர்களும் தங்கள் வெளியீடுகளை விற்றுக் கொண்டிருந்தார்கள். எந்த தோழர்களும் அவர்களை தடுக்கவும் இல்லை. வெளியேற்றவும் இல்லை. சொல்லப் போனால் உணவு, தேனீர், குடிநீர் போன்றவற்றை அவர்களுடன் இணைந்தே சாப்பிட்டார்கள்.

புதிய ஜனநாயகம்இதழில் இதுவரை ஈழம் தொடர்பாக வெளிவந்த கட்டுரைகள் அனைத்தையும் ஜெராக்ஸ் எடுத்து, ஸ்பைரல் பைண்டிங் செய்து விற்றார்கள். அதேபோல்தான்தேசியம்தொடர்பாக வந்த கட்டுரைகளும். இதில் குறிப்பிட வேண்டிய விஷயம், இதே திடலில்தான்தனித்தமிழ்ஆதரவு தோழர்களும் தங்கள் நூல்களை விற்றார்கள் என்பதுதான். ஜனநாயகம்!

மாநாட்டில் புஜதொமு தலைவர் தோழர் முகுந்தன், புஜதொமு செயலாளார் தோழர் சுப. தங்கராசு, புஜதொமு பொருளாளர் தோழர் விஜயகுமார், மகஇக தோழர் துரை சண்முகம், கர்நாடக உயர்நீதி மன்ற வழக்குரைஞர் தோழர் பாலன் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள். இதில் தோழர் பாலன் தொழிலாளர்களுக்குள்ள சட்டங்களை குறித்து விளக்கினார். அவைகளை முதலாளிகள் எந்தளவுக்கு மீறுகிறார்கள், இருக்கும் சட்டங்களும் எப்படி நிரந்தர தொழிலாளர்களுக்கே சாதகமாக இல்லை என்பதை விளக்கினார். ஒவ்வொருவரும் பேசி முடித்ததும் மைய கலைக்குழுவினர் பாட்டு பாடினார்கள். மாலையில் அம்பத்தூர் ஓடி பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள மார்கெட் பகுதியில் பொது கூட்டம் நடைபெற்றது. மகஇக பொது செயலாளர் தோழர் மருதையன் சிற்றப்புரை ஆற்றினார். வழக்கம் போல் அவரது உரை அழுத்தமாக இருந்தது. குறிப்பிட்ட நேரத்துக்கு பிறகு யார் பேசினாலும் துண்டு சீட்டைக் கொடுத்து பேச்சை முடிக்க சொன்னார்கள். இந்த விதியிலிருந்து தோழர் மருதையனும் தப்பவில்லை.

ஒப்பந்த தொழிலாளர்களாக இருக்கும் பலர், வேன்களில் வந்தார்கள்.

மாநாட்டுக்கான மொத்த செலவும் அமைப்பை சேர்ந்தவர்களுடையது. பல மாதங்களாக பேருந்து, தொழிற்சாலை, தொழிற்பேட்டைகளில் பிரச்சாரம் செய்து, உண்டியல் குலுக்கி முதலாளிகளுக்கு எதிராக தங்கள் வலிமையை காட்டியிருக்கிறார்கள்.

சங்கம் அமைக்க தாங்கள் பட்ட சிரமங்களை, அனுபவங்களை பல தோழர்கள் மாநாட்டில் பகிர்ந்து கொண்டார்கள். குறிப்பாக ஒரிஸாவிலிருந்து பிழைப்பைத் தேடி தமிழகத்துக்கு வந்த தொழிலாளர்கள் தாங்கள் அனுபவித்த, அனுபவிக்கும் துயரங்களையும், புஜதொமு அமைத்த பின் தாங்கள் எப்படி தன்மானத்துடன் வாழ்கிறோம் என்பதையும் விளக்கினார்கள்.

கள்ளச் சாராய வியாபாரியாக இருந்து, இப்போது கல்வி வள்ளலாக இருக்கும் ஜேப்பியாரின் கல்லூரிகளில் சங்கம் அமைக்க தாங்கள் முயன்றதை குறித்து தோழர்கள் சொன்னார்கள். சங்கம் அமைப்பதற்கு முன் ஜேப்பியார் தங்களுக்கு கொடுத்த மரியாதையையும், சங்கம் அமைத்த பின், அதே ஜேப்பியாரே தங்களுக்கு தரும் மரியாதை குறித்தும் தோழர்கள் பகிர்ந்து கொண்டபோது, மனதில் பூரிப்பு எழுந்தது உண்மை.

டிசம்பர் 31ம் தேதியுடன் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் பணிபுரியும் பல தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இருக்கும் தொழிற்சங்கங்கள் எதுவும் அவர்களை காப்பாற்றவில்லை. இந்தத் தகவலை பலரும் உணர்ச்சியுடன் குறிப்பிட்டார்கள்.

மாநாட்டு பந்தலுக்கு வெளியே காவல்துறையினர், ‘எதையோஎதிர்பார்த்து பாதுகாப்புக்காக நின்றார்கள். ஆனால், எதுவும் நடக்கவில்லை.

ஒரு பதிவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருகிறீர்களா என்று கேட்டேன். ‘ஐயோ, வந்தா போலீஸ் பிடிச்சுக்குமேஎன்றார். எப்படியெல்லாம் பயம் விதைக்கப்பட்டிருக்கிறது!

பதிவுலகை சேர்ந்த ஜ்யோராம் சுந்தர், பைத்தியக்காரனுடன் (தோழர் ஏகலைவனை சந்தித்து பேசினீர்களா பைத்தியக்காரன்?) மாநாட்டுக்கும், பொது கூட்டத்துக்கும் வந்திருந்தார். தோழர் வே. மதிமாறன் அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருந்தார். மற்ற பதிவுலக நண்பர்களை எனக்கு தெரியாததால், யார் வந்தார்கள் என்று உறுதியாக சொல்லமுடியவில்லை.

பொதுவாக மகஇக அமைப்பினர் மீது ஒரு குற்றச்சாட்டு உண்டு. கேள்வி கேட்பவர்களை இவர்களுக்கு பிடிக்காது. க்ளீன் ஸ்லேட்டாக இருப்பவர்கள்தான், இவர்களுக்கு தேவைஎன மாற்று அமைப்பினர் அவ்வப்போது இவர்கள் மீது விமர்சனம் வைப்பார்கள். அது எந்தளவுக்கு புரட்டு என்பது இந்த மாநாட்டில் தெரிந்தது. அப்படி மாற்று அமைப்பினர் சொல்வது உண்மையாகவே இருந்தாலும் அதில் தவறும் இல்லை. க்ளீன் ஸ்லேட்டில்தானே அழுத்தமாக எழுத முடியும்?

ஒரு அமைப்பை கட்டுவது என்பது எவ்வளவு கடினமான வேலை என்பது அமைப்பு சார்ந்தவர்களுக்கு நன்றாகவே தெரியும். அப்படி பார்க்கும்போது, இந்த முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு உண்மையிலேயே புஜதொமுக்கு மாபெரும் வெற்றிதான்.

தொடர்ந்து மகஇக, பெண்கள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பாகவும் மாநாடுகளை நடத்த வேண்டும். அமைப்பு பணி, நெருக்கடிகள் காரணமாக தோழர்களால் கலை இலக்கிய அமைப்பில் அதிகமாக கவனம் செலுத்த முடியவில்லை. இனி சிறிது சிறிதாக கலை இலக்கிய அமைப்பையும் அவர்கள் வளர்க்க வேண்டும். செய்வார்கள் என்று நம்புகிறேன்.

பின்குறிப்பு: பதிவை எழுதி முடித்ததும் வழக்கம்போல் படித்துப் பார்த்தேன். மகஇக வுக்கு ஜால்ரா தட்டுவது போல் தெரிந்தது. பதிவை வாசிக்கும் உங்களுக்கும் அப்படியே தோன்றினால்,

நல்லது. அதுகுறித்து எனக்கு வெட்கமேதும் இல்லை.

முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு: ஒரு பார்வை

நன்றி: சூனியம்

குஜராத் அமைச்சரின் தலைமறைவு: நீதிக்கு இன்னும் தூரமிருக்கிறது.

     2002ல் குஜராத்தில் அரசே முன்னின்று நடத்திய இனப்படுகொலையை அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிடமுடியாது. அதை கலவரமாக காட்ட முயன்று வைக்கப்பட்ட கண்துடைப்பு விசாரணை கமிசன்களை கடந்து மீண்டும் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக்குழு குஜராத் மாநில குழந்தைகள் நல அமைச்சர் மாயா கோத்னானிக்கும், விஹெச்பி தலைவர் ஜெயதீப் பட்டேலுக்கும் (மட்டுமா?) தொடர்பு உள்ளதாகவும் விசாரணைக்கு வர மறுப்பதற்காக தலைமறைவுக்குற்றவாளிகள் எனவும் அறிவித்துள்ளது.

     நாட்டில் நடந்த பல்வேறு திட்டமிட்ட கலவரங்களுக்கு மத்தியில் குஜராத்தில் நிகழ்த்தப்பட்டது வேறுபடுத்திக்காட்டப்பட்டது. வேறெந்தக்கலவரங்களிலும்(!) இல்லாத வகையில் குஜராத்தில் குற்றவாளிகள் தாங்களாகவே எப்படி அந்தப்படுகொலைகளை நிகழ்த்தினோம்? எங்கிருந்தெல்லாம் எங்களுக்கு உதவிகள் ஆயுதங்கள் வந்தன? வெளிப்படையாக இயங்குவதற்கான ஊக்கம் எங்களுக்கு எங்கிருந்து கிடைத்தது? விளைவுகளை எண்ணி பயப்படவேண்டாம் என தைரியமூட்டியது யார்? என்றெல்லாம் தெளிவாக பேட்டியளித்து அந்த ஒளிக்காட்சிகள் தெகல்கா இணையதளம் மூலம் அம்பலப்படுத்தப்பட்டது. ஆனாலும் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை, மேன்மக்களாக வலம் வந்தனர்.

    

 

 

 

 

 

 

 

அன்று கரண் தப்பாரின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றிலிருந்து தண்ணீர் குடித்து வெளியேறினார் மோடி. இன்று சிறப்பு விசாரணைக்குழுவின் விசாரணையை எதிர்கொள்ளமுடியாமல் ஓடி ஒழிந்து கொண்டிருக்கிறார் அவரது அமைச்சர் ஒருவர். இதற்கு குஜராத் அரசின் பதில் என்ன? அமைச்சரவைக்கூட்டத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை என்பதுதான். ஓடிப்போன அமைச்சரின் உதவியாளர் ஒருவர் அமைச்சர் சுற்றுப்பயணத்தில் இருக்கிறார் ஆனால் அவர் எங்கிருக்கிறார் எனக்கூறும் அதிகாரம் எனக்கில்லை என்கிறார். வழக்கம்போலவே ஊடகங்கள் இந்தச்செய்தியை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டன. பார்ப்பனீயச்சார்பு என்பது ஊடகங்களுக்கு மட்டுமல்ல இந்திய அதிகாரவர்க்கத்தின் இயல்பாகவும் அமைந்திருக்கிறது. அதோடு மட்டுமன்றி பெரும்பான்மை மக்களின் பொதுப்புத்தியிலும் ஏற்றப்பட்டு வருகிறது.

     குஜ்ஜார்களின் போராட்டத்தைக்கண்டு நாட்டிற்கு இது அவமானம் என்று கொதித்தெழுந்த நீதிபதியோ, நீதித்துறையோ குஜராத் இனப்படுகொலைக் குற்றவாளிகள் எப்படிச்செய்தோம் என நடித்துக்காட்டியதைக்கண்டு கொதித்தெழவில்லையே ஏன்?

     அகமதாபாத் குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரின் தாய் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவனைத்தூக்கில் போடுங்கள் என்றார். இஸ்லாமியர்கள் பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கிறார்கள் அதை அவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும் சாமியாடும் சாமியார்கள், பெண்சாமியார் பிரக்யா சிங் கின் தந்தை நான் பெருமைப்படுகிறேன் என்று கூறியதன் பொருள் என்னவென்று கூறுவார்களா? அதுமட்டுமா? சிவசேனா போன்ற அமைப்புகள் வெளிப்படையாக நிதி திரட்டுகின்றன வழக்கை நடத்துவதற்கு. அத்வானி அந்தப்பயங்கரவாதிக்கு ஆதரவாக அறிக்கை விடுகிறார். பாஜக தலைவர்கள் குரூப் போட்டோ எடுத்துக்கொண்டுள்ளனர். யார் கைது செய்யப்பட்டார்கள்? எந்த அமைப்பு தடைசெய்யப்பட்டது? தடை செய்யபடுவது சிமி க்கு மட்டும் பிறப்புரிமையா?

     ஒரு மாநில அமைச்சர் விசாரணைக்குப் பயந்து தலைமறைவாகியதைக் கண்டு எல்லா வாயையும் பொத்திக்கொண்டு கள்ள மௌனம் சாதிக்கும் வானரங்கள், காவல் துறை அதிகாரி கார்கரேயின் மரணத்தில் ஐயம் உள்ளது அதை தனியே விசாரிக்கவேண்டும் என்ற அந்துலேவின் நியாயமான கோரிக்கைக்கு வானத்துக்கும் பூமிக்குமாக எகிரிக்குதித்தனவே ஏன்? காங்கிரசும் அந்துலேவுக்கு தண்ணீர் தெளித்ததே ஏன்?

     எல்லவற்றிற்கும் மேலாக இந்த பாசிசத்தை மதம் சார்ந்த விசயமாகவே மக்கள் புறிந்து கொள்கிறார்களே எப்படி? சிறுபான்மை மக்களும் கூட தங்கள் மதத்தை அழிக்க பெரும்பான்மை மதவாதிகள் செய்யும் சதிச்செயல் என்பதாகவே புறிந்துகொள்கிறார்களே எப்படி? நாட்டை அடிமைப்படுத்திய வெள்ளை ஏகாதிபத்தியவாதிகளுக்கு கைக்கூலியாக சேவகம் செய்ததற்கு பரிகாரமாக அவர்கள் ஏற்படுத்திக்கொடுத்த ஒருங்கமைப்புதான் இந்து மதம் என்பதை புறிந்துகொள்ள மறுப்பதே அதன் முதற்காரணம். சமண பௌத்த மதங்களோடு போட்டிபோட்டு செரித்த மதம் இந்து மதம் என நம்புவது அதன் புராணங்களைப்போன்றே புழுகு மூட்டை. இஸ்லாமிய கிருஸ்தவ மதங்களைப்போன்று சமூகவியல் தத்துவமாக தோன்றி வந்ததல்ல. மண்ணின் மைந்தர்களை அடக்கியாண்டு, கொன்றொழித்து அரசியல் மேலாண்மை பெறுவதற்கான செயல்திட்டமே பார்ப்பனீயம். அந்த பயங்கரவாத பார்ப்பனீயமே மதமாக இந்துமதமாக வேடம் பூண்டு தன் மனிதகுல விரோதத்தன்மையை மறைத்து நிற்கிறது. இதை சிறுபான்மை மதத்துக்கெதிரான பெரும்பான்மை மதம் எனக்கொள்வதும், தம் மதம் சார்ந்து அதை முறியடிக்க நினைப்பதும் முடிவெட்டிக்கொள்வதாகத்தான் ஆகுமேயன்றி தலைவெட்டுவதாய் ஆகாது. இதை புறிந்து கொள்ளாதவரை தெகல்காவின் அம்பலப்படுத்தலுக்கு மக்கள் ஏன் எதிர்வினையாற்றவில்லை என்பதற்கு விடையளிக்கமுடியாது. இதை புறிந்து கொள்ளாவிட்டால் குண்டுவெடிப்பு என்றதும் பயங்கரவாதம் பொடா வேண்டும் தடா வேண்டும் என ‘சோ’தாக்கள் குதிப்பதையும், பெண்சாமியார் கைது என்றதும் பயங்கரவாதத்திற்கு எதிராய் இப்படி ஒரு திட்டமிருந்தால் அதை ரகசியமாக வைக்கவேண்டும் என்று தொனி மாறுவதையும் சரியான திசையில் விளங்கிக்கொள்ளமுடியாது. மாயா கோத்தானி தலைமறைவானாலும், நாளையே சுற்றுப்பயணம் என்று திரும்பி வந்தாலும் அவர்களை சரியான திசைவழியில் அம்பலப்படுத்தி, தனிமைப்படுத்தி முறியடிப்பதையே இலக்காக கொள்ளமுடியும். அதுதான் மக்களுக்கு தேவையான வெற்றியாய் அமையும்.

வென்றது தில்லைச் சமர்; வீழ்ந்தது தீட்சிதத் திமிர்

தில்லையில் குடிகொண்டிருக்கும் நடராஜர் பார்க்கும் கண்ணுள்ளவராக இருந்திருந்தால் கோவிலுக்குள்ளேயே தீட்சிதர்கள், செய்யும் கொடூரங்களையும் காமக்களியாட்டங்களையும் கண்டு கண்ணீர் வடிப்பதை பக்தர்கள் காண நேர்ந்திருக்கும். சிதம்பரம் நகரின் முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் இளங்கோ பெயர் குறிப்பிட்டு தீட்சிதர்கள் நடத்திய கொலை கொள்ளை கொழுப்பெடுத்த விளையாட்டுக்களை புகார் மனுவாக முதல்வர்க்கு அனுப்பியிருக்கிறார். ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களையும் தங்கம் வேய்ந்த கூரைகளையும் சொத்தாகக் கொண்ட தில்லை நடராஜர் கோயிலையும் உண்டியல் வைக்காமல் பக்தர்களிடம் வசூலித்த பணம் நகைகளையும் பல்லாண்டு காலமாக ஆண்டு அனுபவித்து வந்தனர் தீட்சித பார்ப்பனர்கள். கடவுளையே முகம் சுழிக்கச்செய்யும் இந்த கொட்டங்களை அடக்குவதற்கு நாத்திகர்கள் வரவேண்டியிருந்தது. தேவாரத்திருவாசகம் பாடி மூடிக்கிடந்த கதவை திறந்ததாக நம்பப்படும் கோவிலில் தேவாரத்திருவாசகங்களை பாட அனுமதி மறுக்கப்பட்டது. அப்படி ஒரு முயற்சியில் அடித்து விரட்டப்பட்ட ஆறுமுகச்சாமி என்ற சிவனடியார் வழியாக புரட்சிகர கம்னியூஸ்டுகளில் கைகளுக்கு அந்தப்பிரச்சனை வந்தது முதல் தொடங்கியது போராட்டம். தில்லை மக்களையும், பக்தர்களையும் இணைத்துக்கொண்டு நடந்த அந்த தொடர் போராட்டம் இறுதியில் தீட்சிதர்கள் தமிழுக்கு இடமில்லை என்று யாரை அடித்து விரட்டினார்களோ அந்த ஆறுமுகச்சாமி தீட்சிதர்கள் முன்னால் யானையில் அழைத்துவரப்பட்டு தமிழில் பாடவைக்கப்பட்டார். இதைச் சாதிப்ப‌த‌ற்கு க‌டும் போராட்ட‌ங்க‌ளை ந‌ட‌த்த‌வேண்டியிருந்த‌து.கொடும் ந‌ரித்த‌ன‌ங்க‌ளையும் குயுக்திகளையும் எதிர் கொள்ள‌ வேண்டியிருந்த‌து. ஆனாலும் அதோடு முடிந்துவிட‌வில்லை. தொட‌ர்ந்தது, தொட‌ர்கிற‌து.

க‌ருவ‌றைக்குள் நுழைய‌ முன்ற‌ ந‌ந்த‌னை எரித்துக் கொன்றுவிட்டு ஜோதியில் க‌ல‌ந்துவிட்ட‌தாக‌ க‌தை க‌ட்டி அதையே புராண‌மாகச் சொல்லி ப‌க்த‌ர்க‌ளை ஏமாற்றும் தீட்சித‌ர்க‌ளின் கொட்ட‌த்தை அட‌க்கும் முய‌ற்சியில் அடுத்த‌க்க‌ட்ட‌ வெற்றியாக‌ அமைந்த‌துதான் க‌ட‌ந்த‌ திங்க‌ள‌ன்று வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌ தீர்ப்பு. அத‌ன்ப‌டி இன்னும் ஒருவார‌ கால‌த்திற்குள் சித‌ம்ப‌ர‌ம் ந‌ட‌ராஜ‌ர் கோவிலை நிர்வகிக்க‌ அலுவ‌ல‌ர் ஒருவ‌ர் நிய‌மிக்க‌ப்ப‌டுவ‌த‌ன் மூல‌ம் இதுவ‌ரை தீட்சித‌ர்க‌ளின் கையிலிருந்த‌ கோவில் அர‌சின் கைக‌ளுக்கு போகிற‌து. தீர்ப்பு வ‌ந்த‌ அன்று மாலையே தில்லை ந‌ட‌ராஜ‌ர் கோவிலுக்கான‌ இந்து அற‌நிலைய‌த்துறை நிர்வாக‌ அதிகாரியாக‌ கிருஷ்ண‌குமார் என்ப‌வ‌ர் நிய‌மிக்க‌ப்ப‌ட்டார். அன்று‌ அற‌நிலைய‌த்துறையின் உத்த‌ர‌வுட‌னும் போலிஸ் காவ‌லுட‌னும் த‌மிழ் பாட‌ வ‌ந்த‌ ஆறுமுக‌ச்சாமியை த‌டுக்க‌ கும்ப‌லாக‌ திர‌ண்டு வாச‌லை அடைத்து அடாவ‌டித்த‌ன‌ம் செய்த‌ தீட்சித‌ ச‌ண்டிய‌ர்க‌ள், இன்று அதிகாரியின் நியமன‌ உத்த‌ர‌வை அதிக‌ம் எதிர்ப்புக்காட்டாம‌ல் பெற்றுக்கொண்டிருப்ப‌து அவ‌ர்க‌ள் ஆடிப் போயிருக்கிறார்க‌ள் என்ப‌த‌ற்கான‌ சான்று.

ஆனாலும் இது இறுதி வெற்றியல்ல. சிதம்பரம் கோவில் மட்டுமே இலக்கும் அல்ல. காஞ்சி ஜெயேந்திரனின் ஆபாச லீலைகளும், கேரள கண்டரரு மோகனருவின் அந்தரங்க லீலைகளும் அம்பலப்பட்டு நாறியதைப்போல் பெருங்கோவில்களின் நெடுங்கதவுகளுக்குப்பின்னால் புதைந்து கிடக்கும் அசிங்கங்களும் தீண்டாமைக்கொடூரங்களும், கொலைகளும் அம்பலப்படுத்தப்படவேண்டும். ஒண்டக்குடிசையின்றி கோடிக்கணக்கானோர் சாலையோரம் குடியிருக்கும் நாட்டில் கோவில்களுக்கு ஏக்கர்கணக்கில் நிலமும், பல கோடிக்கணக்கில் சொத்தும் இருப்பதும்; குந்துமணித்தங்கமில்லாமல் திருமணமாகமுடியாமல் பெண்கள் முதிர்கன்னிகளாய் உலாவரும் நாட்டில் கோவிலின் கூரை தங்கத்தால் வேயப்பட்டிருப்பதும் தன்மானமுள்ள மக்கள் முன் விடப்பட்டுள்ள சவால். அந்த சவால்கள் நேர்செய்யப்படுவதுவரை போராட்டங்கள் தொடரும். ஓயாது.

%d bloggers like this: