ஓட்டுப்போடப்போகும் சனங்களே! உங்களிடம் சில கேள்விகள்….

பதினைந்தாவது மக்களவைத்தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.  உலக நாடுகள் வியந்து பாராட்டுகின்றன இந்திய தேர்தல் முறையை. நூறு கோடிக்கும் மேல் மக்கட்தொகை கொண்ட மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் அதிகம் வன்முறையின்றி அமைதியாக குறித்த காலத்தில் நடத்திமுடிக்க முடிவதே இந்திய ஜனநாயகத்திற்கு மிகப்பெரும் வெற்றிச்சான்றிதழ். என்றெல்லாம் ஏற்றிப்போற்றப்படும் தேர்தல் இப்போது நடந்துகொண்டிருக்கிறது.  விரலில் அது ஏற்படுத்தும் அழியாத கரையைப்போலவே மக்கள் வாழ்விலும் அழியாத கரையை ஏற்படுத்திக்கொண்டிருப்பது இன்னும் அதிகம் அறியப்படாமலேயே இருக்கிறது.
யாரை தேர்ந்தெடுப்பது எனும் உரிமையை நீங்கள் பெருமிதமாய் கொள்ளலாம், ஆனால் நீங்கள் தேர்ந்தெடுப்பவர் தவறு செய்யும் பட்சத்தில் அவரின் தேர்வை நீக்க உங்களால் முடியாது. தேர்ந்தெடுப்பதற்கு மட்டுமே உங்களுக்கு உரிமை,  தேர்ந்தெடுத்தபின் கொள்ளையடிப்பது அவர்கள் உரிமை. எந்தத்திருடன் உங்களை திருட வேண்டும் என்று தேர்ந்தெடுக்கவா இவ்வளவு ஆரவாரம்! இவ்வளவு செலவு!!
உங்கள் தொகுதியில் உங்களின் தேர்ந்தெடுப்புக்காக காத்திருக்கும் பல வேட்பாளர்களில் யாராவது வென்றபிறகு  உங்களின் கோரிக்கைகளை, உங்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு முயல்வார் என்று உங்களால் உறுதி கூற முடியுமா? ஆக தேர்ந்தெடுத்தபின் உங்களால் திருப்பியழைக்கமுடியாத ஒருவரை உங்கள் பிரச்சனைகளை தீர்த்துவைக்க முயல்வார் என்று உறுதிசொல்லமுடியாத பலரிலிருந்து தேர்ந்தெடுத்தாக வேண்டும் என்பது உரிமையா? நிர்ப்பந்தமா?
ஒரு தொகுதிக்கு அதிகபட்சமாக 25 லட்சம் வரை செலவு செய்யலாம், அதற்குமேல் செலவு செய்தல் கூடாது என்று விதி உண்டு. எந்த வேட்பாளராவது இந்த வரம்புக்குள் நின்று செலவு செய்கிறார் என்று நீங்கள் கருதுகிறீர்களா? தேர்தலில் வென்று மக்களவை உறுப்பினராகும் ஒருவருக்கு மாதச்சம்பளம் 12000 ரூபாய், அலுவலகச்செலவு 14000 ரூபாய், தொகுதிச்செலவு 10000 ரூபாய், பயணச்செலவு தோராயமாக 45000 ரூபாய், மக்களவை நடைபெறும் நாட்களில் தினப்படியாக 500 ரூபாய் இன்னும் சலுகைகள் வசதிகள் எல்லாம் சேர்த்து மாதம் ஒன்றிற்கு ஒரு லட்சம் ரூபாய் கிடைக்கும் என்றால் ஐந்து ஆண்டிற்கு அறுபது லட்சம் ரூபாய். இந்த அறுபது லட்சம் ரூபாய் வருமானத்தில் உங்களுக்கு சேவை(!) செய்வதற்காக பல கோடிகளை செலவுசெய்ய இவர்கள் தயாராக இருப்பதன் பொருள் என்ன?  கொள்ளையடிக்கப்போகிறார்கள் என்று இவ்வளவு வெளிப்படையாக தெரிந்தபின்பும் உரிமை என்ற பெயரில் அவர்களுக்கு ஓட்டுப்போடுவது அந்தக்கொள்ளைக்கு நீங்கள் உடந்தையாக இருக்கிறீர்கள் என்று பொருளாகாதா?
இப்போதெல்லாம் ஜனநாயகம் மிகவும் முன்னேறிவிட்டது. வாக்குச்சீட்டிற்கு பதிலாக எந்திரம் வந்திருக்கிறது. தங்களை ஜனநாயகத்தின் மீது அக்கரை உள்ளவர்களாக காட்டிக்கொள்வோர் ஒரு கோரிக்கை வைக்கிறார்கள், எந்திரத்தின் கடைசியில் யாருக்கும் ஓட்டுப்போட விருப்பமில்லை என்று ஒரு விசையை வைக்கலாம் என்று. பதறிப்போனது தேர்தல் ஆணையம். வெற்றிபெரும் வேட்பாளர்கள் பெறும் ஓட்டு எண்ணிக்கையை விட யாரையும் பிடிக்கவில்லை எனும் எண்ணிக்கை கூடிவிட்டால் என்ன செய்வது? ஜனநாயகத்திற்கே சிக்கல் வந்துவிடாதா? யாரையாவது ஒருவரை தேர்ந்தெடுப்பது மட்டும் தான் உங்கள் கடமை என்றால்,  அவர்களை நீங்கள் நிராகரிக்கக்கூடாது என்றால், இது எப்படி உரிமையாகும்?
யார் ஆளவேண்டும் என்பதை மக்களே தீர்மானிக்கிறார்கள் என்பது சரியா? ஒரு கட்சி ஆட்சியெல்லாம் கானல் நீராகிவிட்டது, கூட்டணி ஆட்சி தான். வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு ஆட்சிசெய்யும் கூட்டணி பெற்ற வாக்குகளை விட அவர்களை நிராகரித்து அளிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை அதிகம். என்றால் இது எப்படி மக்களாட்சி?
கிரிமினல்கள் போட்டியிடுவதை தடுக்க வழியில்லை என்கிறார் தேர்தல் ஆணையர். கிரிமினல்களை தவிர வேறு யாரையும் வேட்பாளர்களாக நிருத்துவதில்லை என்கின்றன ஓட்டுக்கட்சிகள். இன்னும் இதை நீங்கள் ஜனநாயகக்கடமை என்று சொன்னால் உங்களுக்கு என்ன பெயர் வைப்பது?
எல்லா இடங்களிலும் வேலை இழப்பு, ஊதியம் இல்லாததால் பசி பட்டினி. உயிர்வாழத்தேவையான உணவுக்கு வக்கில்லை. எல்லோருக்கும் உணவு என்பது அடிப்படைத்தேவை, ஒவ்வொருவரின் ஜனநாயகக உரிமை. அது எல்லோருக்கும் கிடைக்கவில்லை. குடிநீருக்காக பல கிலோமீட்டர்கள் அலைந்து திரிகிறார்கள் மக்கள். அப்படியே கிடைத்தாலும் அது குடிக்கும் நிலையில் இருப்பதில்லை. சுகாதாரமான குடிநீர் கிடைக்கச்செய்வது ஒவ்வொருவருக்கும் ஜனநாயக உரிமை. அது எல்லோருக்கும் கிடைக்கவில்லை. கொள்ளையடிப்பதற்கென்றே நகர்ப்புறங்களில் தனியார் கல்விக்கூடங்கள், கிராமப்புறங்களிலோ இடிந்த கூரை, மரத்தடி நிழல். கல்வி எல்லோருக்குமான ஜனநாயக உரிமை. அது எல்லோருக்கும் கிடைக்கவில்லை. உயிர்க்கொல்லி நோய்களால் இறப்பவர்களைவிட இந்தியாவில் பூச்சிக்கடிகளாலும், நாய்க்கடிகளாலும்; மகப்பேறின் போதும், சாதாரண நோய்களாலும் தான் அதிகமானோர் இறக்கிறார்கள். மருத்துவ வசதி ஒரு ஜனநாயக உரிமை. அது எல்லோருக்கும் கிடைக்கவில்லை. இந்த ஜனநாயக உரிமைகலையெல்லாம் குழி தோண்டிப்புதைத்துவிட்டு, அது மீண்டும் எழுந்து வந்துவிடக்கூடாது என்று எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டு, ஓட்டுப்போடுவது மட்டும் ஜனநாயக உரிமை என்கிறார்களே, அவர்களை நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?
நீங்கள் தேர்ந்தெடுக்கப்ப்போகும் மக்கள் பிரதிநிதிகள் உங்கள் வாழ்க்கையை தீர்மானிக்கும் எந்த விசயத்திலாவது முடிவெடுக்கும் அதிகாரத்தில் இருக்கிறார்களா? ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை ஆட்சி செய்யும் கட்சி மாறினாலும் அவர்களின் கொள்கை அதாவது உங்களை ஒட்டச்சுரண்டும் கொள்கை மட்டும் மாறுவதேயில்லையே எப்படி? ஆட்சியிலிருப்பவர்கள் கொண்டுவரும் எந்தத்திட்டமும் மக்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க அல்லது மக்களின் தேவைக்கு ஏற்ப வருவதில்லை. அதே நேரம் வந்துவிட்ட திட்டங்களை மக்கள் எவ்வளவுதான் எதிர்த்துப் போராடினாலும் மாற்றப்போவதில்லை. ஐந்து ஆண்டுக்கு ஒருமுறையேனும் உங்களிடம் வந்தே ஆகவேண்டிய ஓட்டுக்கட்சிகளால் எப்படி இப்படி இருக்கமுடியும்? ஏனென்றால் அவர்கள் பொம்மைகள். எழுதிக்கொடுத்ததை வாசிக்கும் அற்பங்கள். அவர்களை முந்தள்ளிவிட்டு பின்னாலிருந்து நம்மை ஆண்டுகொண்டிருக்கிறது ஒரு கும்பல்.  உங்கள் ஊரின் தாசில்தார் உங்களுக்கு விளக்கமளிக்க கடமைப்பட்டவரா? உங்கள் ஊரின் காவல்துறை அதிகாரியை உங்களால் கேள்விக்கு உட்படுத்தமுடியுமா? நீதிபதியின் தீர்ப்பு குறித்து உங்களால் ஐயப்பட முடியுமா? ஒரு வருவாய் கோட்ட அதிகாரியையோ அல்லது வேறு எந்தத்துறை அதிகாரியையோ குறைந்தபட்சம் அவர்கள் பணியினை பார்வையிட முடியுமா உங்களால்? இவர்களையெல்லம் எப்போது ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுத்தீர்கள்? அன்றாடம் உங்களை பாதித்துக்கொண்டிருக்கும் சட்டங்களைச் செய்வதும், ஆழிக்காற்றின் பட்டங்களைப்போல் உங்களை அலையவிடுவதும் இவர்களல்லவா? இவர்களை கேள்விக்கு உட்படுத்தும் எந்த அதிகாரமுமில்லாமல் வாக்காளப்பெருங்குடிமக்களே என்று உங்கள் முன் வருகிறார்களே, அவர்களை என்ன செய்வதாய் உத்தேசம்?
வாயில் உமிழ்நீர் சுரப்பது சீரண வசதிக்காக என்று மட்டுமா நினைக்கிறீர்கள். வேறு பயனும் உண்டு.

புதிய ஜனநாயகம் ஏப்ரல் இதழ்

scannedimage-2

மிரட்டிய உலக‌ தாதாவும் ‘பெப்பே’ காட்டிய வட கொரியாவும்.

          north_korea_missile_143254f1அண்மையில் வடகொரியாவின் சொந்தத்தயாரிப்பான ‘உன் ஹா 2’ என்ற ராக்கெட் மூலம் ‘குவாங் மியோங் சாங்’ எனும் தகவல் தொடர்புக்கான செயற்கைக்கோளை வடகிழக்குப்பகுதியிலுள்ள ‘முஸ்டான்டி’ ஏவுதளத்திலிருந்து விண்ணில் ஏவியது. ஏற்கனவே வடகொரியா ‘டோபோடாங் 2’ போன்ற ஏவுகணைகளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியிருக்கிறது. இதை முன்கூட்ட்யே தெரிந்து கொண்ட அமெரிக்காவும், தென்கொரியா, ஜப்பானும் செயற்கைக்கோள் ஏவுதல் என்ற பெயரில் நீண்ட தூர இலக்கு கொண்ட ஏவுகளையை சோதித்துப்பார்பதாக குற்றம் சாட்டின. அப்படி சோதனை செய்யும் பட்சத்தில் இடையிலேயே அதை சுட்டு வீழ்த்தப்போவதாக மிரட்டின. அப்படி ஏதும் நடந்தால் அதுவே போரை தொடங்குவதற்கான காரணமாக இருக்கும் என வடகொரியா எச்சரித்தது. தொடர்ந்து அமெரிக்காவும் ஜப்பானும் தங்கள் போர்க்கப்பல்களை வடகொரிய கடல் பகுதியில் நிலைநிறுத்தின. வடகொரியாவும் போருக்கு தயாராகுமாறு ராணுவத்திற்கு உத்தரவிட்டது. ஆனால் தற்போது, தங்கள் செயற்கைக்கோள் வெற்றிகரமாக பூமியின் சுற்றுவட்டப்பாதையில் செலுத்தப்பட்டு சுற்றிவருவதாக வடகொரியாவும், பூமியின் சுற்றுவட்டப்பாதையில் எந்தப்போருளும் நுழையவில்லை அது பசிபிக் பெருங்கடலில் விழுந்துவிட்டது, திட்டம் தோல்வி என்று அமெரிக்காவும் அறிக்கை வெளியிட்டுள்ளன.

           மலைப்பாங்கான பிரதேசமும், மொத்தப்பரப்பில் வெறும் 18விழுக்காட்டையே விளைநிலமாவும்; அடிக்கடி வறட்சியும், வெள்ளமும் தாக்கும் நாடாகவும், சொந்த நாட்டு மக்களின் உணவுத்தேவையில் தன்னிறைவை எட்டாத நிலையில் இருக்கும் வடகொரியா தன் நாட்டு மக்களின் பட்டினியை போக்கும் திசையில் தன்னுடைய அறிவியல் ஆய்வுகளை செயல் படுத்தாமல் அணுஆயுத தயாரிப்புக்கும் விண்வெளி போட்டிக்கும் தன்னை உட்படுத்திவருவது சொந்த நாட்டு மக்களுக்கு செய்யும் துரோகம் என்பது ஒருபுறமிருந்தாலும், ஆயுதங்களை நோக்கி தன் ஆய்வுகளை திருப்பியதன் பின்னணியில் தொழிற்படும் அரசியலே முக்கியமான பொருளாக இருக்கிறது. அதைப்பற்றி அறிந்து கொள்ள காலத்தே சற்று நாம் பின்னோக்கி செல்லவேண்டும்.

          இரண்டாம் உலகப்போருக்கு முன்புவரை கொரிய தீபகற்பம் ஜப்பானின் கீழ் இருந்தது. அச்சு நாடுகளின் தோல்வியையும், ஹிரோஷிமா நாகசாகியில் அமெரிக்க அணுகுண்டு வீச்சுக்கு உள்ளான அதிர்ச்சியையும் தொடர்ந்து நேசநாடான அமெரிக்காவின் கீழ் வந்தது கொரியா பின்னர் ரஷ்ய சமூக ஏகாதிபத்தியமும் அதற்கு உரிமை கோரியதால் ஒரு உடன்பாடு ஏற்பட்டு 38வது அட்ச ரேகையின்வடபகுதியை ரஷ்யாவும், தென்பகுதியை அமெரிக்காவும் ஆளுமைப்படுத்த அதுவே வடகொரியா, தென்கொரியா என்று தனித்தனி நாடாகியது. அதுவரை உறவினர்களாக கொரியர்களாக இருந்தவர்களிடம் பகைமை திட்டமிட்டு வளர்க்கப்பட்டது. இதில் 1950ல் வடகொரியா தென்கொரியாமீது தொடுத்த போரும் சேர்ந்து கொள்ள வெற்றிகரமாக தொடங்கியது ஆயுதப்போட்டி. வடகொரியாவுடன் ஒப்பிடுகையில் 20மடங்கு அதிக வளங்களைக்கொண்ட தென்கொரியா அமெரிக்க முதலாளித்துவ பாணியில் முன்னேறியது(!) போதிய விளை நிலமில்லாத வடகொரியாவில் விவசாயத்தில் கொண்டுவரப்பட்ட கூட்டு கம்யூன் முறையும், ரேசன் பகிர்வுத்திட்டங்களும் ஓரளவுக்கு நிலமையை சமாளித்தாலும் போதுமான அளவுக்கு இல்லை. பனிப்போரின், பதிலிப்போரின் இறுதியில் ரஷ்ய சமூக ஏகாதிபத்தியம் சிதறிப்போய்விட , வடகொரியாவின் உணவுத்தேவையை பயன்படுத்தி ஏராளமான அமெரிக்கக்குழுக்கள் உதவி என்ற பெயரில் உள்நுழைந்து பெயரளவுக்கு இருந்த சோசலிசத்தையும் துடைக்கும் திட்டத்துடன் களமிறங்கின.

          தன்னுடைய கட்டுப்பாட்டில் இருந்த தென்கொரியாவிலும், தன்னுடைய மேலாதிக்கத்தை ஒரு வழியில் ஏற்றுக்கொண்ட ஜப்பானிலும் ஏவுகணைகளையும் அணு ஆயுதங்களையும் குவித்தது அமெரிக்கா. இதன் காரணமாக வடகொரியாவும் அணுஆயுத ஏவுகணை ஆராய்ச்சியில் இறங்கியது. தன்னைத்தவிர வேற் யாரும் ராணுவ மேலாதிக்கம் பெற்றுவிடக்கூடாது என்பதில் குறியாக இருக்கும் அமெரிக்கா எந்த ஒரு நாடு ஏவுகணை தொழில்நுட்பத்தையோ, அணு ஆயுத பரிசோதனையோ நடத்தினால் கடுமையாக எதிர்ப்பதுடன் ஐநா சபை மூலம் பொருளாதாரத்தடை உட்பட பல்வேறு தடைகளை ஏற்படுத்தும். இந்த அடிப்படையில் உருவானது தான் அணுஆயுத பரவல் தடைச்சட்ட ஒப்பந்தம். உலகின் வல்லசுகளான ஐந்து நாடுகளைத்தவிர ஏனைய நாடுகள் அணுத்தொழில்நுட்ப ஆய்வில் ஈடுபடுவதை தடுக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டது தான் இந்த ஒப்பந்தம். பல‌ நாடுகளை அதன் பொருளாதார நலைமைகளைக்கொண்டும், உதவி என்ற பெயரில் மிரட்டியும் இந்த ஒப்பந்தத்தை பிற நாடுகள் மீது திணித்து வருகின்றனர். வடகொரியாவும் இதில் 1985ல் ஒப்பமிட்டது. அதற்கு முக்கியமான நிபந்தனையே தென்கொரியாவிலும் ஜப்பானிலும் அமெரிக்க நிறுவி வைத்திருக்கும் அணு ஆயுதங்களை விலக்கிக்கொள்ளவேண்டும் என்பது தான். ஆனால் இன்று வரை உலக சட்டாம்பிள்ளை அமெரிக்க இதை நிறைவேற்றவில்லை. அதோடுமட்டுமல்லாது, வடகொரியாவின் அணுவுடன் தொடர்பில்லாத பிற தொழில்நுட்பங்களையும் சோதனை செய்யவேண்டும் என நிர்ப்பந்தித்தது. இதனால் 2003ல் அணுஆயுத பரவல் தடை ஒப்பந்த்தத்திலிருந்து வடகொரியா விலகியது. அன்றிலிருந்து ஐநா சபை பொருளாதாரத்தடை உட்பட பல்வேறு தடைகளை விதித்து வருகிறது. இவை எல்லாவற்றையும் மீறி தன்னுடைய அணுத்தொழில் நுட்பத்தை மேம்படுத்தி வருவதுடன் தன்னிடம் அணுஆயுதங்கள் இருக்கிறது என்று வெளிப்படையாகவும் அறிவித்திருக்கிறது. அதன் தொடற்சியாகத்தான் ஏவுகணை பரிசோதனைகளும்.

          

north-korea-missleஅணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தமும் அதை மீறினால் ஐநா சபை விதிக்கும் தடைகளும் அணு ஆயுதங்களை கட்டுப்படுத்தும் நோக்கம் கொண்டவையல்ல. மாறாக அமெரிக்காவின் மேலாதிக்க ஏகாதிபத்தியத்தை ஏற்றுக்கொள்ளச்செய்வதை நோக்கமாக கொண்டவை. அமெரிக்காவிடம் மட்டும் சற்றேறக்குறைய 15000க்கும் மேற்பட்ட அணுகுண்டுகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது, இது போன்று ஏனைய வல்லரசுகளிடமும். அமெரிக்க, ரஷ்ய, பிரிட்டன், பிரான்ஸ், சீனா போன்ற வல்லரசுகள் மட்டுமல்லாமல் இஸ்ரேல், இந்தியா, பாக்கிஸ்தான், வடகொரியா ஆகிய ஒன்பது நாடுகள் அணு தொழில்நுட்ப நாடுகளாக அறியப்பட்டிருக்கின்றன. இந்நாடுகளால் வைத்திருக்கும் குண்டுகளை தவிர தேவைப்பட்டால் எந்த நேரத்திலும் உருவாக்கிக்கொள்ளமுடியும். இவை தவிர இன்னும் நாற்பது நாடுகளிடம் அணுகுண்டுகள் இருப்பதாக கணிக்கப்பட்டிருக்கிறது. அணு ஆயுத பரவல் தடைச்சட்டத்தின் மூலம் அமெரிக்க மேலாண்மையை ஏற்றுக்கொள்வது ஆயுதப்போட்டிக்கும் அணு ஆயுதப்பரவலுக்கும் தான் வழிவகுக்குமேயல்லாது அதை அழிப்பதற்கு ஒருபோதும் பயன்படப்போவதில்லை.

          கோடிக்கணக்கான ஆண்டுகளாய் பூமியில் வசித்துவரும் உயிரினங்கள் அனைத்தையும் ஓரிரு மணித்துளிகளில் அழித்துவிடும் வல்லமை கொண்ட அழிவுசக்தியை கட்டிவைத்துக்கொண்டிருக்கிறோம். இந்த நிலையில்தான் ஏகாதிபத்தியங்கள் தங்களின் வணிக நலன்களுக்காக உலகை மறுபங்கீடு செய்யும் தருணத்திற்காக காத்திருக்கின்றன. தனிமனித உரிமை என்ற பெயரில் உலகின் மொத்தவளத்தையும் ஒருவனிடம் குவிக்கும் திசைவழியில் சென்றுகொண்டிருக்கும் ஏகாதிபத்தியத்தின் தலைமையில் இந்த அழிவு சக்திகளை கண்காணிப்பதோ அழிப்பதோ சாத்தியமற்றவை. சமூக நலனை முன்னிலைப்படுத்தும் பொதுஉட‌மைக்கொள்கையை அடிப்படையாகக்கொண்ட சோசலிச நாடுகளின் கூட்டுத்தலைமையில்தான் மனித குலத்தை காப்பது சாத்தியப்படும்.

நச்சுப்புகை குண்டுகளும் வெத்து வேட்டு தேர்தலும்

“சரணடைந்து விடுங்கள். உங்கள் உயிரை காப்பதற்கும் தமிழ் மக்களின் வாழ்வை காப்பதற்கும் இதுவே கடைசி வழி” விடுதலைப்புலிகளுக்கு ராச பக்சேவின் கடைசி எச்சரிக்கை இது. விடுதலை புலிகளுக்கு எதிரான போர் என்பதும் தமிழ் மக்களை கொன்று குவிப்பதும் இரண்டும் ஒன்றுதான் என்ற ஒப்புதல் வாக்கு மூலமும் இது தான். இதன் பொருள் விடுதலைப்புலிகள் சரணடையாவிட்டால் தமிழ் மக்கள் கொல்லப்படுவார்கள் என்பது தான். எவ்வளவு வெளிப்படையான அறிவிப்பு. எந்த நாடும் இதை கண்டு கொள்ளவில்லை. ஐநா சபையில் மீண்டும் ஒருமுறை இலங்கைப்பிரச்சனையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்போகிறார்களாம். பேசிப்பேசி………….. நடவடிக்கை என்ன? ஈழத்தமிழரின் இறுதிச்சடங்கா?

கடந்த சில மாதங்களாகவே இலங்கைப்போரை இந்தியா நடத்திவருவதற்கான ஆதாரங்கள் வெளிவந்தவண்ணமுள்ளன. தொடக்கத்தில் ரேடார் கொடுத்ததாக தகவல்கள் வந்தன. பின்னர், விடுதலைப்புலிகளின் தாக்குதலில் இந்திய ரேடார் நிபுணர்கள் மூவர் காயமடைந்ததாக செய்திகள் வந்தன. இந்திய ராணுவ உயர் அதிகாரிகள் இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்குவது புகைப்பட ஆதாரங்களாக வெளிவந்தது. கல்மடுக்குளம் அணைக்கட்டு தகர்க்கப்பட்டபோது ஏராளமான இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். எந்தவித ஒளிவுமறைவுமின்றி வெளிப்படையாகவே தமிழகம் வழியாக கவசவாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டன. ஆனாலும் இந்திய அரசே போரை நிறுத்துவதற்கு ஏற்பாடு செய் என்று அத்தனை ஓட்டுக்கட்சிகளும் கூட்டணி கட்டிக்கொண்டு ஒப்பாரி வைத்தன. எதற்காக? பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய சுய நிர்ணய உரிமை தமிழினத்திற்கு உண்டு எனும் கோரிக்கையையெல்லம் ஏற்க்கப்படும் பக்குவம் இல்லையென்றாலும் இலங்கையில் தமிழ் மக்கள் கொடூரமாக கொல்லப்படுகிறார்கள் என்ற உண்மை முகத்திலறைவதால் உணர்ச்சிமேலிட தமிழக மக்கள் தன்னெழுச்சியாக பல்வேறு வடிவங்களில் போராடிவருகிறார்கள், அது எல்லை மீறி போய்விடாமலிருக்கவும் தேர்தலுக்கு அவர்களின் முன்னால் தமிழுணர்வு உள்ளவர்களாக காட்டி ஓட்டுப்பொருக்கவும் தினம் ஒரு நாடகத்தை அரங்கேற்றிவருகின்றனர். மக்களோ தேர்தல் திருவிழாவை முன்னிட்டு தங்கள் இரக்க உணர்ச்சியை ஒத்திவைத்துவிட்டு கொண்டாட்டத்திற்கு தயாராகிவருகின்றனர்.

இந்த நிலையில் தான் பிரெஞ்சு செய்தி நிறுவனமொன்று இந்திய ராணுவம் நேரடியாகவே இலங்கை இனப்படுகொலைப் போரில் பங்கெடுத்து வருவதை (உறுதிப்படுத்தப்படாத தகவல்) அம்பலப்படுத்தியிருக்கிறது. இலங்கையில் 58ஆவது ராணூவப்படைப்பிரிவு முழுவதும் இந்திய ராணுவ வீரர்களே நிறைந்திருந்து நேரடியாகவே இன அழிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 59ஆவது படைப்பிரிவிலும் பெரும்பாலும் இந்திய வீரர்களே நிரம்பியிருக்கின்றனர். அதுமட்டுமன்றி இந்திய தேர்தலுக்குமுன் இலங்கையில் மயான அமைதியை ஏற்படுத்திவிடவேண்டுமென்று நச்சுப்புகை குண்டுகளையும் புதுக்குடியிருப்பு பகுதியில் இந்திய ராணுவம் பயன் படுத்தியது அம்பலமாகிய்டிருக்கிறது. இது பொய்ச்செய்தியென்று பொய்சொல்ல்வதற்குக்கூட இங்கே எந்த ஓட்டுக்கட்சிக்கும் துணிவில்லை. இந்திய தமிழருக்கு போரை நிறுத்த ஆவன செய்வோம் என்று தேர்தல் வாக்குறுதி, இலங்கை தமிழர்களுக்கோ நச்சுப்புகை குண்டுவீச்சு.

ஏற்கனவே இந்தப்படுகொலைகளை செய்வதற்கு இலங்கை அரசு 1.9 பில்லியன் செலவழித்து விட்டதாம். கடைசிக்கட்ட போருக்காக 5000 கோடி ரூபாய்யை இந்திய அரசு கடனாக கொடுக்கவிருக்கிறது. இப்படி தமிழர்கள் மேல் விஷக்குண்டுகளை வீசுவதற்கும் அதற்கு செலவு செய்ய பணம் கடனாக கொடுப்பதற்கும் எந்த நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்டது? இலங்கைக்கு ராணுவத்தை அனுப்ப எந்த மக்கள் பிரதிநிதி ஒப்புதல் அளித்தது? நீங்கள் தேர்ந்தெடுக்கப்போகும் எந்த மக்கள் பிரதிநிதியாவது இதைப்பற்றி கேள்வி கேட்க முடியுமா? அதற்கான அதிகாரம் இருக்கிறதா அவர்களுக்கு? பின் எதற்கு இந்த நாடாளுமன்றமும் அதன் உறுப்பினர்களும்? கடந்த சில மாதங்களாகவே தமிழகத்தின் எல்லாத்தட்டு மக்களும் பலவிதத்திலும் போராடியபின்னும் ராஜபக்சேவின் ஒற்றை மயிரைக்கூட அசைக்க முடியாது என்றால் ஜனநாயகம் என்பதன் பொருள் என்ன?

ஆனாலும் பேரணி நடத்திக்கொண்டு உங்கள் முன் வருகிறார்கள், இலங்கை தமிழரை காக்கப்போவதாக வாக்குறுதி அளித்துக்கொண்டு. என்னசெய்வதாய் உத்தேசம்?

ஈராக்கில் மாவீரன் ஜெய்தி தொடங்கிவைத்தான், அதை இந்தியாவில் மறுபதிப்பு செய்தான் ஜார்னைல் சிங். நீங்கள்…..?

காந்தி, பெரியார், அம்பேத்கார்: புனைவுகளும் புரிதல்களும்.

அண்மையில் காந்தியும் காங்கிரசும் ஒரு துரோக வரலாறு என்ற தலைப்பில் இடப்பட்ட பதிவிற்கு மின்னஞ்சலில் வந்த எதிர்வினையையும் அதற்கான பதிலும் கீழே தொகுக்கப்பட்டுள்ளது. மஹாத்மா, தேசத்தந்தை எனும் விதந்தோதல்களெல்லாம் பிம்பங்களின் பின்னே ஒழிந்துகொள்வதை வெளிப்படுத்தவே இவை பதிவிடப்படுகிறது.

நண்பர் செங்கொடி அவர்களுக்கு,

 வணக்கம்.    காந்தியாரைத்  திறனாய்வு செய்யும் போது இந்தியாவின் உயர்ந்த மேதைகளான  இரவீந்திர நாத்  தாகூரையும்விவேகானந்தரையும்பண்டித நேருவையும் இகழ்ந்துள்ளது நியாயமாகத் தெரியவில்லை.   காந்தியின்  மீது நீங்கள் கூறிய 100 மேற்பட்ட குற்றங்கள் படித்த பின் ஒன்று கூட  என் மனதில்  ஒட்ட வில்லை.  காரணம் உங்களுடைய தனிப்பட்ட தீர்ப்பான முழு வெறுப்பு உணர்ச்சியே.   இரு தரப்பார் கருத்தின்றி ஒருவர் மட்டும் இகழ்ச்சியாக இப்படி எழுதுவது பொதுக் கருத்தாகாது.   காந்தியாரின் குறைகள் நிறைகள் இரண்டையும் எடுத்துக் காட்டுவதுதான் எழுத்தாளன் கடமையாக இருக்க வேண்டும் என்பது என் கருத்து. 

 

இந்தியா ஏவிய சந்திராயனை நீங்கள் ஆதரிக்க வில்லை.   1957 இல் ரஷ்யா முதன்முதல் ஏவிய ஸ்புட்னிக் பற்றி என்ன சொல்வீர்கள்?  ஏழை நாடு சைனா முதன்முதல் ஏவிய துணைக்கோளைப் பற்றி என்ன சொல்வீர்கள் ?  

 

இந்தியத் தலைவர்களில் உங்களுப் பிடித்த பெரியாரும், அம்பேத்காரும் எப்படிப்  பட்டவர்கள்  என்று இதே போல் திறனாய்வு செய்தால் நான் அவற்றைப் படிக்க  விரும்புகிறேன்.    

 

அம்பேத்கார் இந்து மதத்தையும் பிராமணரையும் திட்டிக் கொண்டு ஒரு பிராமணப்  பெண்ணை மணந்து கொண்டார்.   அவரைச் சட்ட சபைக்குக் கொண்டு வந்து இந்திய அரசியல் சாசனத்தை எழுத வைத்த பெருமை பண்டித நேருவைச் சார்ந்தது. 

தந்தை பெரியாரைப் பற்றி என் தனிப்பட்ட கருத்துக்கள்:

 

1. தமிழரிடையே இருந்த மூடப் பழக்க வழக்கங்களை எடுத்துக் காட்டினார். ஆனால் அவர் கையாண்ட முறைகள் கடூரமானவை. பிள்ளையார் சிலையை உடைத்தல், கம்ப ராமாயண இலக்கியத்தை எரித்தல், திருக்குறளைப் பார்ப்பனர் நூல் என்று இகழ்தல், தமிழைக் காட்டுமிராண்டிகள் மொழி என்று அவமானப் படுத்தல், பார்ப்பனத் தமிழரை எல்லாவற்றுக்கும் காரணமாகத் திட்டுவது, கடவுளை நம்புவோரை எல்லாம் “முட்டாள்” என்று பட்டம் கொடுப்பது.  இவை அனைத்தும் நாட்டின் ஒருமைப்பாட்டைச் சிதைக்கும்.

 

2. இருபதாம் நூற்றாண்டில் இந்திய விடுதலைப் போரில் பங்கேற்காது பெரியாரும் அவரது சீடர்களும் எதிர்த்து வேலை செய்தார்கள்.  இந்திய சுதந்திர தினத்தைத் “துக்க தினமாகக்” கொண்டாடிய பகுத்தறிவாளி பெரியார் !!! பெரியாருக்கு இந்தியப் பாராளு மன்றக் குடியாட்சி முறையில் நம்பிக்கை இல்லாமல் போனது.

 

3. நாடு விடுதலை பெற்ற பிறகு, எல்லை தெரியாத “திராவிட நாடு” பிரிவினைக்குத் திட்டமிட்டுத் தோல்வி யடைந்தவர்.

 

4. மகள் என்று வெளியே கூறிக் கொண்டு தனக்குப் பணிசெய்த 21 வயது மணியம்மையாரை 70 வயது பெரியார் மணந்து கொண்டது. பெரியாரின் சொத்துக்கள் மணியம்மைக்குச் சேர வேண்டும் என்பது அவரது ஒரு நோக்கம்.

 

5. நாலாவது காரணத்தால் சீடர்கள் குருவை விட்டுப் பிரிந்து அவருக்கு எதிராய் “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்” என்று திருமூலர் பாக்களின் வரிகளை கூறிவந்தார்.

 

பெரியார் 75 ஆண்டுகளுக்கும் மேலாக ஜாதி, மத, இன வகுப்புகளை ஒழிக்க முற்பட்டார்.   எந்த மதம், ஜாதி, இனம் இதுவரைத் தமிழ்நாட்டில் ஒழிந்துபோய் உள்ளது

 

45 ஆண்டுகளாக பெரியாரின் சீடர்கள்தான் தமிழகத்தை ஆண்டு வருகிறார்.   சமூகத்தில் என்ன ஆக்க பூர்வமான புத்துணர்ச்சிகள் பொங்கி யுள்ளன பெரியாரும் அவரது சீடர்களும் எத்தனை உன்னத விஞ்ஞானிகளைகலைமணிகளை, ஓவியரை, அறிஞர்களை உண்டாக்கி இருக்கிறார் ?

 

காந்தியின் சீடர் பண்டித நேரு பிரதமராகி இந்தியாவின் தொழிற்துறைவிஞ்ஞானகல்விக் கலாச்சாரம் யாவும் விருத்தியாகி இந்தியா ஆசியாவில்  முன்னேற  வில்லையா ?   வேறெந்த இந்தியத் தலைவர் நாட்டு முன்னேற்றத்துக்கு  இந்த அளவு வழியிட்டார் ?  

 சி. ஜெயபாரதன், கனடா

 நண்பர் செங்கொடி அவர்களுக்கு

 வணக்கம்

 ரஷ்யப் பொதுடைமைக் கட்சியைப் பற்றிய உங்கள் கட்டுரை ஸ்டானிக்கு ஒரே புகழ் மாலை சூடுவதாக உள்ளது.  அதே போல் காந்தியார் கட்டுரையும் ஒரே இகழ் மாலை சூடுவதாக இருக்கிறது.   இரண்டும் பலதிசைக் கண்ணோட்ட மின்றி ஒற்றைக் கண்  நோக்காக  எனக்குத் தெரிகிறது.  

 மனிதர்கள் பூரண மாந்தர் அல்லர்.   காந்தி எப்படிப் பூரண மனிதர் இல்லையோ அதே போல் லெனினும், ஸ்டாலினும்,  மாசேதுங்கும்பெரியாரும் பூரணத் தலைவர் அல்லர்.  எல்லாரும் சந்தர்ப்ப வாதிகள்.  ஒரு சந்தர்ப்பத்தில் சொல்லியவற்றை வேறிடங்களில் 

காட்டி அவை தவறு என்று வாதிடுவது சரியில்லை.  

 மனிதரின் குறைபாடுநிறைபாடு இரண்டையும் எடுத்துக் காட்டும் நேர்மையான கட்டுரைகளை விருப்பு  வெறுப்பில்லாமல் யாருக்கும் நீதிபதிபோல் தீர்ப்பளிக்காமல்  எழுதுங்கள்.  உங்கள் கண்  பார்வையில் பிடிக்காதவர் எல்லாரது போக்கும் தவறாகத் தெரிவதில் வியப்பில்லை.

 பூரண மனிதரின் பெயர் கொண்ட லெனின்கிராடும், ஸ்டாலின்கிராடும் இப்போது ஏன் ரஷ்யத் தளப் படத்தில் இல்லாமல் போயின ?

 நேபாளம், பாரத நாடுகளில் எப்போது யார் பொதுடைமைப் புரட்சியைக் கொண்டு  வந்து  நிலைநாட்டப் போகிறார் பல மதங்கள், இனங்கள், ஜாதிகள்,மொழிகள்மாநிலங்கள் கட்சிகள் கொண்ட சுதந்திர இந்தியாவைப் பொதுவுடைக் கட்சி கைப்பற்றி விடுமா ?

 ரஷ்யாவில் லெனின் செய்த சீரான புரட்சி வேறு.  இந்திய நாட்டில் நடக்கும் தினக்  கலவரங்கள்  வேறு ?   

 அன்புடன்,

சி. ஜெயபாரதன்.  

****************************************

வணக்கம் ஐயா,

உங்களின் விமர்சனத்திற்கு நன்றி.

காந்தியின் மீது கூறப்பட்ட விமர்சனங்கள் ஒன்று கூட உங்கள் மனதில் ஒட்டவில்லை எனக் கூறியிருந்தீர்கள். எப்படி ஒட்டவைப்பது….கூறப்பட்ட குற்றச்சாட்டுகளில் எதை தனிப்பட்ட வெறுப்பினால் எழுந்ததாக கருதுகிறீர்கள், அல்லது அனைத்துமேவா? என்றால் அதை காந்தி மீது உங்களுக்கிருக்கும் புனித பிம்பத்தினால் கூட இருக்கலாமல்லவா? காந்தியை பாராட்டி அனேகம் பேர் எழுதியிருக்கலாம், காந்தியை விமர்சிக்கும் யாரும் அந்த பாராட்டுரைகளின் பின்னணியில் தான் விமர்சிக்க வேண்டுமா? நாங்கள் காந்தியின் மீது வைத்திருக்கும் குற்றச்சாட்டுகள் கற்பனையில் கூறியவைகளல்ல.பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் தான் கூறியிருக்கிறோம். அவைகளில் தவறிருந்தால் சுட்டிக்காட்டுங்கள். ஆனால் காந்தியின் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் எதையும் நீங்கள் மறுக்கவில்லை என்பதை உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன். ஒரு தேசத்தந்தையை இப்படி விமர்சிக்கலாமா?எனும் ஆதங்கம் தான் உங்களிடமிருந்து வந்திருக்கிறது. யாரும் விமர்சனத்திற்கு அப்பாற்ப்பட்டவர்களல்ல. நாங்கள் ஒரு எழுத்தாளனாக நின்று காந்தியை அணுகவில்லை. அவரின் கொள்கைகளால் பாதிக்கப்பட்ட கோடிக்கணக்கான மக்களின் சார்பில் அவரை அணுகியிருக்கிறோம்.அவர்மீது போர்த்தப்பட்டிருந்த வெற்று மாயையை அகற்றியிருக்கிறோம். அதில் நீங்கள் மாறுபட்டால் உங்களின் மறுப்பை தாருங்கள் பரிசீலிக்கிறோம். மகாத்மாவின் மீதா? எனும் புனித ஆச்சரியம் வேண்டாம்.

 

ஆம். சந்திராயனை ஏவியதில் எங்களுக்கு உடன்பாடில்லை,அறிவியல் முன்னேற்றம் கூடாது என்பதாலல்ல, அறிவியல் மக்களை வாழ வைப்பதற்கு பயன் படவேண்டும் என்பதால். கடந்த பத்தாண்டுகளில் ஒன்றரை லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து மாண்டிருக்கிறார்கள் இந்திய அரசின் பொருளாதாரக் கொள்கையால். சற்றேறக்குறைய அனைத்துதட்டு மக்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதை சிந்திக்காமல், இதை மறைத்துவிட்டு பெரும்பான்மை மக்களின் வாழ்வோடு தொடர்பில்லாத ஒரு திட்டத்திற்கு அவர்களின் வரிப்பணம் கொட்டப்படுவது வீணானதல்லவா?

இதில் இந்திய‌வென்ன‌? ர‌ஷ்யாவென்ன‌? சீனாவென்ன‌? ர‌ஷ்யாவை நாங்க‌ள் ச‌மூக‌ ஏகாதிப‌த்திய‌ம் என்று தான் ம‌திப்பிடுகிறோம். குருஷேவின் சீர‌ழிவுப்பாதை அது. ஸ்டாலினுக்குப்பிற‌கு சோவிய‌த் ச‌ரிவின் தொட‌க்க‌ம்.க‌ம்யூனிச‌ம் என்ற‌தும் ர‌ஷ்யா சீனாவை க‌ண்ணை மூடிக்கொண்டு ஆத‌ரித்தால் அத‌ற்கு மார்க்ஸிய‌ம் என்று பெய‌ரில்லை. அப்ப‌டிப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளை நாங்க‌ள் போலிக‌ள் என்ற‌ழைக்கிறோம்.

 

பெரியாரும் அம்பேத்காரும் சீர்திருத்த‌வாதிக‌ள் தான் புர‌ட்சியாள‌ர்க‌ள் அல்ல‌.

அம்பேத்கார் க‌ம்யூனிஸ்டுக‌ளை எதிர்த்த‌வ‌ர். பார்ப்ப‌னீய‌ எதிர்ப்புப்புள்ளியில் தான் பெரியாரும் அம்பேத்காரும் எங்க‌ளின் இல‌க்குக‌ளோடு ஒன்றிணைகிறார்க‌ள். அம்பேத்கார் இந்திய‌ அர‌சிய‌ல் சாச‌ன‌த்தை எழுதிய‌து ப‌ற்றி நிறைய‌ விள‌க்க‌மளிக்க‌லாம்.அர‌சிய‌ல் சாச‌ன‌த்தை தீவைத்துக்கொளுத்தும் முத‌ல் ஆளாக‌ நானே இருப்பேன் என்று பாராளும‌ன்ற‌த்திலேயே அறிவித்த‌வ‌ர் அம்பேத்கார். அம்பேத்கார் ப‌ணியாற்றிய‌து மூன்றாவ‌து குழுவுக்கு த‌லைவ‌ராக‌. முத‌ல்குழு அப்போதைய‌ நாடுக‌ளில் எந்த‌ நாட்டு சட்ட‌ங்க‌ளை எடுத்துக்கொள்ள‌லாம் என்று அல‌சி இங்கிலாந்து உட்ப‌ட்ட‌ சில‌ நாடுக‌ளின் ச‌ட்ட‌ங்க‌ள் தேர்வு செய்த‌து. இந்த‌க்குழுவில் பார்ப்ப‌ன‌ர்க‌ளைத்த‌விர‌ வேறு யாருக்கும் இட‌மில்லை. இர‌ண்டாவ‌து குழு அந்த‌ச்ச‌ட்ட‌ங்க‌ளில் எதை இந்தியாவுக்காக‌ தெரிவு செய்ய‌லாம், என்னென்ன‌ மாற்ற‌ங்க‌ள் செய்ய‌லாம் என்று வ‌ரைய‌றை உருவாக்கிய‌து. இந்த‌க்குழுவிலும் பார்ப்ப‌ன‌ர்க‌ளைத்த‌விர‌ வேறு யாருக்கும் இட‌மில்லை.இவ‌ற்றிலிருந்து  அர‌சிய‌ல் சாச‌ன‌ முன்வ‌ரைவை உருவாக்கி இந்திய‌ பாராளும‌ன்ற‌த்தில் தாக்க‌ல் செய்து ‌அமலாக்குவ‌து  மட்டும்தான் மூன்றாவ‌து குழுவின் வேலை. இந்த‌க்குழுவில் ம‌ட்டும் பார்ப்ப‌ன‌ர்க‌ளோடு இர‌ண்டு முக‌ம்ம‌திய‌ர்க‌ளும் சேர்க்க‌ப்ப‌ட்ட‌ன‌ர். அத‌ற்க்குத்த‌லைவ‌ராக‌ ஒரு தாழ்த்த‌ப்ப‌ட்ட‌வ‌ர் அதாவ‌து அம்பேத்கார்.

ஏன் அம்பேத்கார் த‌லைவ‌ராக்க‌ப்ப‌ட்டார்? 

தாழ்த்த‌ப்ப‌ட்ட‌ம‌க்க‌ளை பெரும்பான்மையாக‌ கொண்ட‌ நாட்டில் சிறுபான்மை பார்ப்ப‌ன‌ர்க‌ள் கொண்டுவ‌ந்த‌ ச‌ட்ட‌ம் என்று பின்ன‌ர் மாற்ற‌ம் செய்ய‌ப்ப‌ட்டுவிட‌க்கூடாது என்ப‌தால் தான்.

அந்த‌ நேர‌த்தில் தாழ்த‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளின் பிர‌திநிதியாக‌ செய‌ல்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் மூவ‌ர். ஒன்று பெரியார் ஆனால் அவ‌ர் பாராளும‌ன்ற‌ அர‌சிய‌ல் முறையை நிராக‌ரித்தார். இர‌ண்டு பாபுராவ் பூலே இவ‌ர் ம‌ராட்டிய‌த்திற்கு வெளியே அறிய‌ப்ப‌டாத‌வ‌ர். ஆகையினால் அவ‌ர்க‌ளின் நோக்க‌த்திற்கு ப‌ய‌ன்ப‌ட‌மாட்டார். மூன்றாவ‌து அம்பேத்கார், இவ‌ர் ந‌ன்கு அறிய‌ப்ப‌ட்ட‌வ‌ராக‌வும் காங்கிர‌ஸ்கார‌ராக‌வும் இருந்தார். அத‌னால் த‌லைவ‌ரானார். ஆனால் பெரியார் அப்போதே அம்பேத்காரிட‌ம் கூறினார்,பொறுப்பேற்காதீர்க‌ள் ஏமாற்ற‌ப்ப‌டுவீர்க‌ள் என்று. பொறுப்பேற்றார் ஏமாந்தார்.

ச‌ரி, அம்பேத்கார் ஏன் ஏற்க‌வேண்டும்?

 உண்மையிலேயே தாழ்த்த‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளுக்கு ச‌ட்ட‌ரீதியாக‌ ஏதாவ‌து செய்துவிட‌முடியும் என்று ந‌ம்பினார். ஆனால் தாழ்த்த‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளுக்கு ஆத‌ரவாக‌ ஒரு சில திருத்த‌ங்க‌ளை கொண்டுவ‌ருவ‌த‌ற்கு கூட‌ அவ‌ர் போராட‌வேண்டியிருந்த‌து. அத‌னால் தான் அவ‌ர் பாராளும‌ன்ற‌த்திலேயே அறிவித்தார் இதை நான் கொழுத்துவேன் என்று.

அர‌சிய‌ல் சாச‌ன‌த்தின் முத‌ல் வ‌ரி we are the people of india என்று தொட‌ங்கும், அனால் அம்பேத்கார் எழுதிய‌து we are the peoples of india.  இதுதான் அம்பேத்கார் அர‌சிய‌ல் சாச‌ன‌ப் பெருமை. இவைக‌ளுக்கெல்லாம் ஆதார‌ம்? பாராளும‌ன்ற‌ நூல‌க‌த்தில் நூல்க‌ளாக‌ உற‌ங்கிக்கொண்டிருக்கிற‌து.

  அடுத்து பெரியாரைப்பற்றி,

௧) பெரியார் இலக்கியவாதியல்ல, நளினமான தலைவரல்ல,மக்களை கண்டு அவர்களின் மூடப்பழக்கவழக்கங்களைக் கண்டு கோபம் கொண்டவர். ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் மக்களை நாயிலும் கீழாய் இருத்தி வைத்திருப்பதை எதிர்த்து அவர்களை சுய மரியாதை கொள்ளச்செய்தவர். உலகில் பல நாத்தீக அறிஞர்கள் தோன்றியுள்ளனர். ஆனால் உலகின் வேறெங்கும் நாத்தீகம் ஒரு மக்கள் இயக்கமாய் பரிணமிக்கவில்லை தமிழகத்தை தவிர. பெரியார் அதைச்செய்தார். பல அறிஞர்கள் அறிவியல் ரீதியாக மதங்களை கடவுளர்களை விமர்சித்து நூல்கள் எழுதினர். பக்கம் பக்கமாய் விவாதித்தனர். அவை அவர்களைக்கடந்து மக்களிடம் வந்தடையவில்லை, காரணம் மக்கள் பாமரர்களாய் இருந்தனர். இந்தியாவிலோ அவர்களுக்கு கல்வியறிவு மறுக்கப்பட்டிருந்தது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய். அவர்களை திருத்த நினைத்த பெரியார் நூல்களில் விளக்கமெழுதிக்கொண்டிருக்க முடியுமா?பார்ப்பனீய நுகத்தடியில் சிக்கி உழன்று கொண்டிருந்த மக்களுக்கு விளக்க அவர்கள் மொழியிலேயே தான் பேசியாக வேண்டும். எந்த தர்க்க நியாயமுமின்றி, எந்த அறிவியல் ஞானமுமின்றி வெற்று நம்பிக்கையாய் கடவுள் மீது பிடிப்புக்கொண்டிருந்தவர்களை திருத்த,அவர்களின் மூட நம்பிக்கைகளை நொறுக்க அவர்கள் கடவுளாய் நம்பிக்கொண்டிருக்கும் சிலைகளை நொறுக்குவதை தவிர என்ன வழியிருந்தது கூறுங்கள். அவர்களை அடிமைச்சிறையில் வைத்திருந்த பார்ப்பனீய கடவுட் சிலைகளை உடைக்காமல் சேரிகளில் அவரால் பார்பனீய கொடுங்கொன்மையை உடைத்திருக்கமுடியாது. கடூரமானவையாக உங்களுக்கு தெரிந்த நடைமுறைகளால் தான் உலகில் எங்குமே இயலாதிருந்த மக்கள் இயக்கத்தை நாத்தீக இயக்கத்தை தமிழகத்தில் செயல்படுத்திக்காட்டினார். எது முக்கியம் சில சிலைகள் உடைந்ததா? இல்லை மக்கள் அடிமை விலங்கு உடைந்ததா?

கம்பராமாயணம் இலக்கியமா? அழ‌கியல் சார்ந்து வார்த்தைகளை அழபெடை செய்துவிட்டல் அங்கு இலக்கிய மதிப்பு வந்துவிடுமா?இன்றைய திரைப்பாடல்களை விட ஆபாசம் மலிந்து கிடக்கும் அதை எந்த அடிப்படையில் இலக்கியமாக ஏற்பது? பழமை என்பது மட்டும் போதுமா? அதன் பாடு பொருள் எதை நோக்கமாக கொண்டிருந்தது? வால்மீகி ராமாயணத்திற்கும் கம்பராமாயணத்திற்கும் உள்ள வேறுபாடு இலக்கியத்தை நோக்கமாகக் கொண்டது தானா? 

தமிழை நீச பாஷை என்று இழித்தவர்கள், தமிழர்களை காட்டுமிராண்டியாய் நடத்தியவர்கள் பெரியாரை பற்றி பேசும்போது மட்டும் திருக்குறளை இகழ்ந்தார்,தமிழை காட்டுமிராண்டி மொழி என்று கேவலப்படுத்தினார் என்று தொனி மாறிப்பேசுவார்கள்.

திருக்குறளின் பெண்ணடிமைத்தனத்தை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா? அறிவியலோடு அது முரண்படும் இடங்களை நீங்கள் சரி காண்பீர்களா? சில நூற்றாண்டுகளுக்கு முன்புள்ள சொற்களெல்லாம் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்புள்ள திருக்குறளில் இடம்பெற்றிருக்கிறதே அவற்றின் இடைச்சொருகல்களை நீக்க முடியுமா? 

சரியானதை ஏற்று அல்லாததை தள்ளுவது தான் மனிதனின் இயல்பு பெரியார் சுயமரியாதைக்காரர்.

காலத்திற்கேற்ற மாற்றம் செய்யப்படவில்லை என்றால் அது காட்டுமிராண்டி மொழிதான் அதிலென்ன சந்தேகம். வீரமாமுனிவரிலிருந்து பெரியார்வரை தமிழில் மாற்றம் ஏற்பட்டுக்கொண்டே வந்திருக்கிறது. திருவள்ளுவர் எழுதிய தமிழ் தான் இப்போது இருக்கிறதா?

 ௨) இந்திய விடுதலைப்போர் என்று பொதுவாக குறிப்பிட்டிருந்தீர்கள். காங்கிரஸ் தலைமையில் நடந்ததை குறிப்பிடுகிறீர்கள் என எண்ணுகிறேன். அது விடுதலைப்போரும் அல்ல, 47ல் நமக்கு கிடைத்தது விடுதலையும் அல்ல. அதிகார மாற்றம் மட்டுமே. வெள்ளையனின் கையிலிருந்த அதிகாரம் பார்ப்பனர்களின் கைகளுக்கு மாறியதை சுதந்திரம் என்று கூற முடியாது. அதனால் தான் பெரியார் அதை கருப்பு தினமாக அறிவித்தார். அவர் பகுத்தறிவாளராக இருந்ததால் தான் சுதந்திரத்தையும் சுதந்திரம் என்ற பெயரில் வந்ததையும் பிரித்தறிய முடிந்தது. பெரியாருக்கு இந்திய குடியரசு முறையில் நம்பிக்கை இருந்திருக்கவில்லை,எங்களுக்கும் தான். உங்களுக்கு இருக்கிறது என்றால் ஒரே ஒரு கேள்வி உங்களிடம், இந்தியாவின் பெரும்பான்மை மக்களின் கழுத்தில் கத்திவைத்திருக்கும் காட் ஒப்பந்தம் கொல்லைப்புற வழியில் பாராளுமன்றத்திற்கு தெரியாமல் இரண்டு அதிகாரிகள் ஒப்பமிட்டு இந்தியாவின் மீது திணிக்கப்பட்டதே இதற்கு விளக்கம் சொல்ல முடியுமா? 

௩) சுதந்திரக்குழிபறிப்புகளுக்கு மாற்றாக‌ அவர்கண்டடைந்த ஒரு அரசியல் தீர்வு தான் திராவிட நாடு. அது தோல்வியடைந்தது அவருடைய ஆளுமையை கொள்கையை எந்த விதத்திலாவது பாதித்ததாக கருதுகிறீர்களா?. திராவிட நாடு வெற்றி என்பது முழுக்க முழுக்க அவரைச்சார்ந்தது மட்டுமல்ல. 

௪) மணியம்மையை அவர் மணந்தது வெளிப்படையானது, வெளியே மகள் எனக்காட்டிக்கொண்டு உள்ளே மனைவியாக கொண்டிருந்ததாக உங்கள் வாசகங்கள் பொருள் தருகிறது. அது தவறானது. சொத்துகள் மணியம்மைக்கு சேர வேண்டும் என்பதால் தான் மணந்து கொண்டதாக எழுதியுள்ளீர்கள். உங்கள் எண்ணம் என்ன என்று கொஞ்சம் வெளிப்படையாக எழுதினால் வசதியாக இருக்கும். 

௫) சீடர்கள்(!) பிறிந்தது பதவி வெறியில் வாய்ப்பை எதிர்நோக்கி செயல் பட்ட ஒன்று அதுவும் பெரியாரின் கொள்கைகளும் வேறு வெறானது.

வாழ்நாள் முழுவதும் மக்களை பார்ப்பனீயத்திலிருந்தும் மூடத்தனங்களிலிருந்தும் விடுவிக்க போராடினார். அவர் நோக்கம் முழுமையாய் நிறைவேறவில்லை என்பது வேதனையானது தான். என்றாலும் வட மாநிலங்களிலும் தமிழகத்திலும் உள்ள நிலமைகளை ஒப்பிட்டு நோக்கினால் பெரியாரின் வெற்றி பளிச்செனத்தெரியும். உங்களுக்குத்தெரியாதது ஆச்சரியம் தான். 

காந்தியின் சீடர் நேருவின் சாதனை காந்தியின் ஆலோசனைகளை பொருளாதாரத்திட்டங்களை ஏற்றுக்கொள்ளாமல் ஒதுக்கியது தான் என்று சொன்னால் அதில் பிழையொன்றுமில்லை.

முன்பே கூறியது போல் பெரியாரும் அம்பேத்காரும் சீர்திருத்தவாதிகள் தான் புரட்சியாளர்கள் அல்ல. அவர்களின் பார்வையில் இருந்த தவறு இருக்கும் பிரச்சனைகளுக்கு பார்பனீயத்தை மட்டுமே காரணமாக கண்டு வர்க்கத்தை ஒதுக்கியது. ஆனாலவர்கள் இருவருமே தாம் சரியெனக் கண்டதை அடைய சமரசமின்றி போராடினார்கள். நடைமுறையில் ஏற்ப்பட்ட முரண்பாடுகளை எதற்காக போராடினார்களோ அந்த மக்கள் விடுவிப்பதை அடிப்படையாகக் கொண்டே தீர்த்துக்கொண்டார்கள். காந்தியிடம் இல்லாத பண்பு இது தான். 

அஹிம்சையை மக்களுக்கு எதிராகவும் ஏகாதிபத்தியவாதிகளுக்கு ஆதரவாகவும் பயன்படுத்தியது தான் காந்தியின் முத்திரை. காந்தியின் மீது  நாங்கள் வைத்திருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு உங்களின் பதிலை எதிர் நோக்குகிறேன். 

உங்களின் இரண்டாவது கடிதத்தில், புகழ் மாலை இகழ் மாலை என்று குறிப்பிட்டிருந்தீர்கள். இரண்டுமே வரலாற்று ஆதரங்களின் அடிப்படையிலேயே எழுதப்பட்டிருந்தது. ஆதாரமில்லாது புகழ்வது, ஆதாரமில்லாமல் இகழ்வது என்பதை அந்த இரண்டு கட்டுரைகளிலும் எந்த இடத்தில் கண்டீர்கள் என்பதை குறிப்பிட்டால் நாம் தொடர்ந்து இது குறித்து விரிவாக பேச வசதியாக இருக்கும். 

எவருமே பூரண மாந்தர்கள் அல்லர். தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு தான் மனிதன் வரலாற்றை கடந்து வந்து கொண்டிருக்கிறான். ஆனால் ஒரு தவறிலிருந்து ஒருவன் எத்தகைய பாடத்தை கற்றுக்கொள்கிறான்,அவன் கற்றுக்கொண்டதை எந்த விதத்தில் பயன் படுத்துகிறான்?யாருக்காக பயன் படுத்துகிறான்? என்பதில்தான் அவனின் பூரணத்தன்மையின் அளவுகோல் இருக்கிறது. 

ஸ்டாலினிடமும் தவறுகள் இருக்கின்றன ஆனால் அவை முதலாளித்துவங்கள் முன்வைக்கும் அவதூறுகளல்ல. லெனின்கிராடும், ஸ்டாலின் கிராடும் தளப்படத்தில் இல்லை என்பது அங்கு சோசலிசம் பின்னடைவை சந்தித்திருக்கிறது என்பதன் அடையாளங்கள். ஸ்டாலினுக்கு பிறகு அவர்களின் சோசலிசத்தில் கம்யூனிச கொள்கைகள் விடைபெறத்தொடங்கிவிட்டன. அதன் அடையாளம் தான் அவைகள். தினக்கலவரங்கள் தான் புரட்சி என்று யாரும் இங்கு கருத்துக்கொண்டிருக்கவில்லை.

நான் கருதுகிறேன், நீங்கள் கம்யூனிசம் என்றதும் போலிகள் என்று நாங்கள் அழைக்கும் இடது வலது ஓட்டுக்கட்சிகளைப்போல் எங்களை எண்ணிக்கொண்டீர்கள் என்று. நாங்கள் மகஇக எனும் புரட்சிகர பொதுவுடைமை இயக்கத்தை சார்ந்தவர்கள் என்பது உங்கள் கவனத்திற்கு.

மீண்டும் உங்கள் விமர்சனத்திற்கு நன்றி கூறி, தொடருங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.

  தோழமையுடன்

செங்கொடி

 

 

ஒருமணிநேரம் விளக்கணைப்பது புவி சூடேற்றத்தை தடுக்குமா?


கடந்த சனிக்கிழமை இரவு ஒருமணிநேரம் விளக்கணைக்குமாறு அதாவது மின்சார பயன்பாட்டை நிறுத்துமாறு அறிவுத்துறையினரால் கோரிக்கை வைக்கப்பட்டது. இது சுய உதவிகுழுக்கள் போன்றவற்றால் பரப்புரை செய்யப்பட்டு மக்களும் தம்மால் இயன்றவரை புவிசூடேற்றத்தை தடுத்துவிட்டதாகவும், வருங்கால சந்ததிகளுக்கு உதவிவிட்டதாகவும் எண்ணி பெருமிதம் கொண்டன‌ர். 2007ல் ஆஸ்திரேலியாவில் தொடங்கிய இந்த விளக்கணைப்பு வைபவம் இந்த மூன்று ஆண்டுகளில் உலகின் எல்லா நாடுகளையும் மக்களையும் ஈர்த்துள்ளது. தெருவில் பிச்சைகாரனுக்கு பத்துபைசா எறிந்துவிட்டு புண்ணியம் தேடிக்கொண்டதாய் அகமகிழ்வதில்தான் மனிதர்களுக்கு எவ்வளவு ஈடுபாடு.

புவிசூடேற்றம் அல்லது குளோபல் வார்மிங் என்பது இன்று பரவலாக விவாதிக்கப்பட்டு வரும் ஒரு பிரச்சனையாகும். இயல்பான இருப்பை விட தற்போது பூமியின் வெப்பம் உயர்ந்து வருகிறது. இதனால் துருவ பகுதிகளில் உறைந்துகிடக்கும் பனிப்பாள‌ங்கள் உருகி கடலில் கலப்பதால் கடல் நீர்மட்டம் உயர்ந்து இன்னும் சில பத்தாண்டுகளில் உலகில் இருக்கும் சின்னஞ்சிறு தீவுகள் பல கடலில் மூழ்கி காணாமல் போய்விடும். மேலும் கண்டங்களின் பரப்பையும் கடல் விழுங்கும். புவி சூடேறுவதால் கடலில் ஏற்படும் மாற்றங்கள் இவை என்றால் நிலப்பரப்பில் நீர் வறண்டுவிடும். விளைநிலங்கள் பாலையாகும்.இன்னும் புயல்கள் அதிகம் உருவாகும் என அநேக பாதிப்புகள் ஏற்படும். புவி எதனால் சூடேறுகிறது? முன்னர் இருந்ததைப் போன்று அதே தூரத்தில்தான் பூமி சூரியனைச் சுற்றிவருகிறது. பின் எப்படி திடீரென்று பூமியின் வெப்பம் கூடுகிறது. சூரியனிலிருந்து பூமி பெறும் வெப்பமானது குறிப்பிட்ட அளவு வளிமண்டலத்தில் பிரதிபலிக்கப்பட்டு வெளியேற்றப்படுகிறது. தற்போது இப்படி வெளியேற்றப்படுவது குறைந்து வெப்பம் பூமியிலேயே தங்கிவிடுவதால் தான் பூமியின் வெப்பம் அதிகரிக்கிறது. இப்படி வெளியேறாமல் வெப்பம் பூமியிலேயே தங்கிவிடுவதை கிரின்ஹவுஸ் எபெக்ட் என்கிறார்கள். இந்த கிரின்ஹவுஸ் எபெக்ட் எப்படி உண்டானது? கடந்த இருநூறு ஆண்டுகளில் உலகில் தொழிற்சாலைகள் எண்ணிறைந்த அளவில் நிருவப்பட்டிருக்கின்றன. எரிஎண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டு வாகனங்கள் பல்கிப் பெருத்துள்ளன. இவைகளிளெல்லாம் எரிக்கப்பட்டு வெளியேற்றப்படுவது கார்பன்டை ஆக்ஸைடு, அடுத்து குளோரோ புளோரோ கார்பன் என்பன போன்ற வாயுக்கள். இந்த வாயுக்களின் அளவு கூடி ஒரு போர்வை போல பூமியை சுற்றி படிந்திருக்கிறது. இதுதான் பூமியின் வெப்பத்தை வெளியேறவிடாமல் தடுக்கிறது. எழுபதுகளின் பிற்பகுதியில் இது அறியப்பட்டதிலிருந்து இதை தவிர்க்கும் காரணிகள் ஆராயப்பட்டு வருகின்றன. ஆனால் இதற்கு தீர்வுகளாக முன்வைக்கப்பட்டவை முதலாளிகளை, அவர்களின் லாபவெறியை பாதிப்பதாக இருப்பதால் சிக்கல்கள் எழுகின்றன. எதன் பொருட்டும் முதலாளிகளின் லாபம் குறையக்கூடாதல்லவா? தொழிற்சாலை கழிவுகள் மாசு கட்டுப்பாட்டு விதிகளுக்கு உட்பட்டாக வேண்டும் என்பதை எந்த பெருநிறுவனமும் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. அதோடு அமெரிக்க, ஐரோப்பியா போன்ற வளர்ந்த நாடுகள் பெருமளவில் கார்பன்டை ஆக்ஸைடை கழிவாக வெளியில் தள்ளுகின்றன. இந்தியா போன்ற வளர் நாடுகளும் ஆப்பிரிக்கா நாடுகளும் இவற்றில் மிகவும் பின் தங்கியுள்ளன. இவற்றை கன்காணித்து தடுப்பதற்காக ஜப்பானின் கிரியோட்டோ நகரில் ஏற்பட்ட ஒப்பந்தத்தில் உலக நாடுகளுக்கு துப்பாக்கி முனையில் ஜனநாயக பாடம் நடத்தும் அமெரிக்கா ஒப்பமிடாமல் டிமிக்கி கொடுத்து வருகிறது. அடுத்து கரிமத் தள்ளுபடி என்று ஒரு விசயம் வைத்திருக்கிறார்கள். அதாவது அமெரிக்காவில் அதிக அளவில் கார்பனை வெளியேற்றும் ஒரு நிறுவனம் இந்தியா போன்ற நாடுகளில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு தொழில்நுட்பங்களை தந்துதவி கார்பன் வெளியேற்றத்தை குறைப்பதற்கு உதவுமாம். இந்திய நிறுவனம் எவ்வளவு குறைவாக கார்பனை வெளியிடுகிறதோ அந்த அளவுக்கு அமெரிக்க நிறுவனம் வெளியிடும் அதிகப்படியான கார்பன் அளவை தள்ளுபடி செய்து விடுவார்களாம். இந்த அழுகுணி ஆட்டத்திற்கு கரிமத்தள்ளுபடி என்று பெயர். இதைப் போன்ற அழுகுனி ஆட்டங்கள் வெளிப்பட்டு விடகூடாது என்பதற்காகத்தான் வருடம் ஒருநாள் ஒருமணிநேரம் விளக்கணையுங்கள், மரம் நடுங்கள், செடி நடுங்கள், சாதாரண விளக்கை மாற்றி எனர்ஜி சேவரை பயன்படுத்துங்கள் என்றெல்லாம் பிரச்சாரம் செய்கிறாற்கள்.

அடுத்து வாகனங்களை எடுத்து கொள்வோம். உலகின் மொத்த கார்பன் வெளியீட்டீல் குறிப்பிடத்தகுந்த பங்கு வாகனப் புகைக்கு உண்டு. இதை தடுப்பதற்கு தனி போக்குவரத்தை குறைத்து பொது போக்குவரத்தை ஊக்குவிக்க வேண்டும். ஆனால் நடப்பது என்ன? ஏழைகளின் கார்க்கனவை நனவாக்குகிறோம் என்று கூறிக்கொண்டு நானே நீயோ என்று கார்களை உற்பத்தி செய்து தள்ளுகிறார்கள். இப்போதே உலகில் எண்பது கோடி வாகனங்கள் இருப்பதாக கணக்கிட்டிருக்கிறார்கள். இந்நிலையில் இரண்டு பிரச்சனைகள் எழுகின்றன. ஒன்று எரிபொருள் தட்டுபாடு, இரண்டு அவை வெளியேற்றும் கார்பன். இதை தவிர்ப்பதற்கு ஏகாதிபத்திய வாதிகள் கண்டடைந்ததுதான் உயிர்ம எரிபொருள்.கரும்பு, மக்காச்சோழம், கிழங்கு போன்ற உணவு வகைகளிருந்து தயாரிக்கப்படும் எரிபொருள் எண்ணெயைப் போல் (பெட்ரோல், டீசல் போல) அதிகம் கார்பனை வெளியேற்றுவதில்லை.இதன் மூலம் புவி வெப்பமடைவதை தடுக்கலாம் என்பது அவர்களின் வாதம். மேலோட்டமாக பார்க்கும்போது சிறந்த திட்டம் போல் தோற்றமளிக்கும் இது பயங்கரமான விளைவுகளை ஏற்படுதி வருகிறது. உலகிலுள்ள மொத்த உணவு தானிய உற்பத்தியில் பெருமளவு உயிர்ம எரிபொருளுக்காக கொள்முதல் செய்யப்படுவதால் உலகில் பெரும் உணவு பஞ்சம் ஏற்பட்டு வருகிறது. ஒரு காரின் டேங்கை ஒருமுறை நிரப்புவதற்கு தேவையான எரிபொருளை தயாரிப்பதற்கு எடுத்துக்கொள்ளும் உணவு தானியத்தைக்கொண்டு ஒருவரின் ஒரு வருட உணவுத்தேவையை பூர்த்தி செய்து விடலாம். லத்தின் அமெரிக்க நாடுகளின் மொத்த உற்பத்தியில் 40 சதவீதம் உயிர்ம எரிம பொருளுக்காக கொள்முதல் செய்யப்படுவதால் நெருக்கடி ஏற்பட்டு போராட்டம் வெடித்திருக்கிறது. அமெரிக்காவில் கார்கள் ஓடுவதற்கு நாங்கள் பட்டினி கிடக்கவேண்டுமா என்று கேட்கிறார்கள் அவர்கள்.ஏழைநாடுகளையும் அதன் மக்களையும் பட்டினிப்போட்டு தயாரிக்கப்படும் இந்த உயிர்ம எரிபொருள் எரிபொருள் தேவையை ஈடுகட்டுமா? என்றால் அதுதான் இல்லை. உலகின் மொத்த விளைநிலங்களில் விளையும் உணவுத்தானியங்கள் அனைத்தையும் கொண்டு உயிர்ம எரிபொருள் தயாரித்தாலும் மொத்த எரிபொருள் தேவையில் 20 விழுக்காடைத்தான் பெறமுடியும் என்பதை எண்ணிப் பார்த்தால் இதன் பயங்கரம் புரியும்.

இப்படி மக்களை பட்டினிப்போட்டு தயாரிக்கப்படும் இந்த உயிர்ம எரிபொருளால் கார்பன் வெளிப்பாடு குறைந்து விடுமா? உயிர்ம எரிபொருள் தயாரிப்புக்காக வேக வேகமாக காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. காடுகள் என்றால் ஆக்ஸிசன் தொழிற்சாலைகள் என்று பொருள்.அதாவது கார்பன்டை ஆக்ஸைடை உட்க்கொண்டு ஆக்ஸிசனை வெளியேற்றுபவை. அன்று தொடங்கி இன்று வரை மனிதன் காடுகளை அழிப்பதன் மூலம் கார்பன்டை ஆக்ஸைடின் அளவை உயர்த்திக்கொண்டே வந்திருக்கின்றான்.இன்றோ காடுகள் துடைக்கப்பட்டு வருகின்றன. ஒரு ஹெக்டேர் பரப்பில் காடுகளை அழித்து உயிர்ம எரிபொருள் தயாரித்தால் அது 13 டன் கார்பன்டை ஆக்ஸைடு காற்றில் கலப்பதை தடுக்கும். ஆனால் ஒரு ஹெக்டேர் பரப்பிலுள்ள காடு 20 டன் கார்பன்டை ஆக்ஸைடை எடுத்துக்கொண்டு பதிலாக ஆக்ஸிசனை வெளியிடுகிறது. இந்த முட்டாள் தனமான திட்டத்தை தயாரித்துத் தந்து நடைமுறைபடுத்துபவர்களுக்கு அறிஞர்கள் என்று பெயர். முதலாளித்துவம் வளர்தெடுத்திருக்கும் முரண்பாடு இது.

எத்தனை கோடிப்பேர் பட்டினியால் மாண்டு போனாலும் எங்களின் குறிக்கோள் லாபமீட்டுவது மட்டுமே என்பதுதான் முதலாளித்துவத்தின் வக்கிரம். அந்த வக்கிரத்தை மறைப்பதற்குத்தான் சுற்றுச்சூழல் மேம்பாடு, புவி சூடேறுவது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுவது என்றெல்லாம் வேசமிடுகிறார்கள். பில்கேட்ஸ் எய்ட்ஸ் விழிப்புணர்வுக்கு பணம் தருவது, போர்டு அறக்கட்டளை கல்வியில் ஆய்வுகளுக்கு பணம் தருவது போன்றவையெல்லாம் பின்னனியிலிருந்துதான் புரிந்துகொள்ள வேண்டும். மாறாக அவர்களை வள்ளல்களாகவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களாகவும் கொண்டால் நம் இடுப்புத்துணி காணாமல் போய் விடும்.

இயற்கை சூழலியல் விளைவுகளை அதனதன் அறிவியல் பின்னணியோடு விளங்கிக் கொள்ள முன்வரவேண்டும். அப்போதுதான் சரியான தீர்வை நோக்கி நாம் பயனிக்க முடியும். அவ்வாறன்றி சுபலமாக இருப்பதை செய்வோம் என நினைப்பது எங்கோ தொலைத்துவிட்டு இங்குதான் வெளிச்சமாக இருக்கிறது எனவே இங்கு தேடுகிறேன் என்பது போல்தான் அமையும்.

இறுதியாக ஒரு செய்தி: சமீபத்தில் ஆய்வுகளின் படி பூமி சூடேற்றத்திற்கு கிரின்ஹவுஸ் எபெக்ட் என்பது மிகச்சிறிய பங்களிப்பைத்தான் செய்கிறது என்றும் காஸ்மிக் கதிர்களின் தாக்கம் தான் புவி சூடேற்றத்திற்கு பெருமளவு காரணமாக இருக்கிறது என்றும் கண்டறிந்திருக்கிறார்கள். பிரபஞ்சத்தில் ஹைட்ரஜன் நட்சத்திரங்கள் என்றொரு வகை உண்டு. இவை கணம் தாங்காமல் வெடித்து சிதறுவதை சூப்பர் நோவா என்பார்கள். இந்த சூப்பர் நோவாக்களிலிருந்து வெளிப்படும் கதிர்கள் தான் காஸ்மிக் கதிர்கள். பிரபஞ்சத்தில் கோடிக்கணக்கில் சூப்பர் நோவாக்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இவற்றிலிருந்து வெளியாகும் காஸ்மிக் கதிர்கள் பெருமளவில் பூமியை தாக்கினால் அப்போது புவி சூடேற்றம் மெதுவாகவும் காஸ்மிக்கதிர்கள் குறைந்தால் புவிசூடேற்றம் அதிகரிப்பதாகவும் கண்டறிந்திருக்கிறார்கள்.

%d bloggers like this: