ஒருமணிநேரம் விளக்கணைப்பது புவி சூடேற்றத்தை தடுக்குமா?


கடந்த சனிக்கிழமை இரவு ஒருமணிநேரம் விளக்கணைக்குமாறு அதாவது மின்சார பயன்பாட்டை நிறுத்துமாறு அறிவுத்துறையினரால் கோரிக்கை வைக்கப்பட்டது. இது சுய உதவிகுழுக்கள் போன்றவற்றால் பரப்புரை செய்யப்பட்டு மக்களும் தம்மால் இயன்றவரை புவிசூடேற்றத்தை தடுத்துவிட்டதாகவும், வருங்கால சந்ததிகளுக்கு உதவிவிட்டதாகவும் எண்ணி பெருமிதம் கொண்டன‌ர். 2007ல் ஆஸ்திரேலியாவில் தொடங்கிய இந்த விளக்கணைப்பு வைபவம் இந்த மூன்று ஆண்டுகளில் உலகின் எல்லா நாடுகளையும் மக்களையும் ஈர்த்துள்ளது. தெருவில் பிச்சைகாரனுக்கு பத்துபைசா எறிந்துவிட்டு புண்ணியம் தேடிக்கொண்டதாய் அகமகிழ்வதில்தான் மனிதர்களுக்கு எவ்வளவு ஈடுபாடு.

புவிசூடேற்றம் அல்லது குளோபல் வார்மிங் என்பது இன்று பரவலாக விவாதிக்கப்பட்டு வரும் ஒரு பிரச்சனையாகும். இயல்பான இருப்பை விட தற்போது பூமியின் வெப்பம் உயர்ந்து வருகிறது. இதனால் துருவ பகுதிகளில் உறைந்துகிடக்கும் பனிப்பாள‌ங்கள் உருகி கடலில் கலப்பதால் கடல் நீர்மட்டம் உயர்ந்து இன்னும் சில பத்தாண்டுகளில் உலகில் இருக்கும் சின்னஞ்சிறு தீவுகள் பல கடலில் மூழ்கி காணாமல் போய்விடும். மேலும் கண்டங்களின் பரப்பையும் கடல் விழுங்கும். புவி சூடேறுவதால் கடலில் ஏற்படும் மாற்றங்கள் இவை என்றால் நிலப்பரப்பில் நீர் வறண்டுவிடும். விளைநிலங்கள் பாலையாகும்.இன்னும் புயல்கள் அதிகம் உருவாகும் என அநேக பாதிப்புகள் ஏற்படும். புவி எதனால் சூடேறுகிறது? முன்னர் இருந்ததைப் போன்று அதே தூரத்தில்தான் பூமி சூரியனைச் சுற்றிவருகிறது. பின் எப்படி திடீரென்று பூமியின் வெப்பம் கூடுகிறது. சூரியனிலிருந்து பூமி பெறும் வெப்பமானது குறிப்பிட்ட அளவு வளிமண்டலத்தில் பிரதிபலிக்கப்பட்டு வெளியேற்றப்படுகிறது. தற்போது இப்படி வெளியேற்றப்படுவது குறைந்து வெப்பம் பூமியிலேயே தங்கிவிடுவதால் தான் பூமியின் வெப்பம் அதிகரிக்கிறது. இப்படி வெளியேறாமல் வெப்பம் பூமியிலேயே தங்கிவிடுவதை கிரின்ஹவுஸ் எபெக்ட் என்கிறார்கள். இந்த கிரின்ஹவுஸ் எபெக்ட் எப்படி உண்டானது? கடந்த இருநூறு ஆண்டுகளில் உலகில் தொழிற்சாலைகள் எண்ணிறைந்த அளவில் நிருவப்பட்டிருக்கின்றன. எரிஎண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டு வாகனங்கள் பல்கிப் பெருத்துள்ளன. இவைகளிளெல்லாம் எரிக்கப்பட்டு வெளியேற்றப்படுவது கார்பன்டை ஆக்ஸைடு, அடுத்து குளோரோ புளோரோ கார்பன் என்பன போன்ற வாயுக்கள். இந்த வாயுக்களின் அளவு கூடி ஒரு போர்வை போல பூமியை சுற்றி படிந்திருக்கிறது. இதுதான் பூமியின் வெப்பத்தை வெளியேறவிடாமல் தடுக்கிறது. எழுபதுகளின் பிற்பகுதியில் இது அறியப்பட்டதிலிருந்து இதை தவிர்க்கும் காரணிகள் ஆராயப்பட்டு வருகின்றன. ஆனால் இதற்கு தீர்வுகளாக முன்வைக்கப்பட்டவை முதலாளிகளை, அவர்களின் லாபவெறியை பாதிப்பதாக இருப்பதால் சிக்கல்கள் எழுகின்றன. எதன் பொருட்டும் முதலாளிகளின் லாபம் குறையக்கூடாதல்லவா? தொழிற்சாலை கழிவுகள் மாசு கட்டுப்பாட்டு விதிகளுக்கு உட்பட்டாக வேண்டும் என்பதை எந்த பெருநிறுவனமும் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. அதோடு அமெரிக்க, ஐரோப்பியா போன்ற வளர்ந்த நாடுகள் பெருமளவில் கார்பன்டை ஆக்ஸைடை கழிவாக வெளியில் தள்ளுகின்றன. இந்தியா போன்ற வளர் நாடுகளும் ஆப்பிரிக்கா நாடுகளும் இவற்றில் மிகவும் பின் தங்கியுள்ளன. இவற்றை கன்காணித்து தடுப்பதற்காக ஜப்பானின் கிரியோட்டோ நகரில் ஏற்பட்ட ஒப்பந்தத்தில் உலக நாடுகளுக்கு துப்பாக்கி முனையில் ஜனநாயக பாடம் நடத்தும் அமெரிக்கா ஒப்பமிடாமல் டிமிக்கி கொடுத்து வருகிறது. அடுத்து கரிமத் தள்ளுபடி என்று ஒரு விசயம் வைத்திருக்கிறார்கள். அதாவது அமெரிக்காவில் அதிக அளவில் கார்பனை வெளியேற்றும் ஒரு நிறுவனம் இந்தியா போன்ற நாடுகளில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு தொழில்நுட்பங்களை தந்துதவி கார்பன் வெளியேற்றத்தை குறைப்பதற்கு உதவுமாம். இந்திய நிறுவனம் எவ்வளவு குறைவாக கார்பனை வெளியிடுகிறதோ அந்த அளவுக்கு அமெரிக்க நிறுவனம் வெளியிடும் அதிகப்படியான கார்பன் அளவை தள்ளுபடி செய்து விடுவார்களாம். இந்த அழுகுணி ஆட்டத்திற்கு கரிமத்தள்ளுபடி என்று பெயர். இதைப் போன்ற அழுகுனி ஆட்டங்கள் வெளிப்பட்டு விடகூடாது என்பதற்காகத்தான் வருடம் ஒருநாள் ஒருமணிநேரம் விளக்கணையுங்கள், மரம் நடுங்கள், செடி நடுங்கள், சாதாரண விளக்கை மாற்றி எனர்ஜி சேவரை பயன்படுத்துங்கள் என்றெல்லாம் பிரச்சாரம் செய்கிறாற்கள்.

அடுத்து வாகனங்களை எடுத்து கொள்வோம். உலகின் மொத்த கார்பன் வெளியீட்டீல் குறிப்பிடத்தகுந்த பங்கு வாகனப் புகைக்கு உண்டு. இதை தடுப்பதற்கு தனி போக்குவரத்தை குறைத்து பொது போக்குவரத்தை ஊக்குவிக்க வேண்டும். ஆனால் நடப்பது என்ன? ஏழைகளின் கார்க்கனவை நனவாக்குகிறோம் என்று கூறிக்கொண்டு நானே நீயோ என்று கார்களை உற்பத்தி செய்து தள்ளுகிறார்கள். இப்போதே உலகில் எண்பது கோடி வாகனங்கள் இருப்பதாக கணக்கிட்டிருக்கிறார்கள். இந்நிலையில் இரண்டு பிரச்சனைகள் எழுகின்றன. ஒன்று எரிபொருள் தட்டுபாடு, இரண்டு அவை வெளியேற்றும் கார்பன். இதை தவிர்ப்பதற்கு ஏகாதிபத்திய வாதிகள் கண்டடைந்ததுதான் உயிர்ம எரிபொருள்.கரும்பு, மக்காச்சோழம், கிழங்கு போன்ற உணவு வகைகளிருந்து தயாரிக்கப்படும் எரிபொருள் எண்ணெயைப் போல் (பெட்ரோல், டீசல் போல) அதிகம் கார்பனை வெளியேற்றுவதில்லை.இதன் மூலம் புவி வெப்பமடைவதை தடுக்கலாம் என்பது அவர்களின் வாதம். மேலோட்டமாக பார்க்கும்போது சிறந்த திட்டம் போல் தோற்றமளிக்கும் இது பயங்கரமான விளைவுகளை ஏற்படுதி வருகிறது. உலகிலுள்ள மொத்த உணவு தானிய உற்பத்தியில் பெருமளவு உயிர்ம எரிபொருளுக்காக கொள்முதல் செய்யப்படுவதால் உலகில் பெரும் உணவு பஞ்சம் ஏற்பட்டு வருகிறது. ஒரு காரின் டேங்கை ஒருமுறை நிரப்புவதற்கு தேவையான எரிபொருளை தயாரிப்பதற்கு எடுத்துக்கொள்ளும் உணவு தானியத்தைக்கொண்டு ஒருவரின் ஒரு வருட உணவுத்தேவையை பூர்த்தி செய்து விடலாம். லத்தின் அமெரிக்க நாடுகளின் மொத்த உற்பத்தியில் 40 சதவீதம் உயிர்ம எரிம பொருளுக்காக கொள்முதல் செய்யப்படுவதால் நெருக்கடி ஏற்பட்டு போராட்டம் வெடித்திருக்கிறது. அமெரிக்காவில் கார்கள் ஓடுவதற்கு நாங்கள் பட்டினி கிடக்கவேண்டுமா என்று கேட்கிறார்கள் அவர்கள்.ஏழைநாடுகளையும் அதன் மக்களையும் பட்டினிப்போட்டு தயாரிக்கப்படும் இந்த உயிர்ம எரிபொருள் எரிபொருள் தேவையை ஈடுகட்டுமா? என்றால் அதுதான் இல்லை. உலகின் மொத்த விளைநிலங்களில் விளையும் உணவுத்தானியங்கள் அனைத்தையும் கொண்டு உயிர்ம எரிபொருள் தயாரித்தாலும் மொத்த எரிபொருள் தேவையில் 20 விழுக்காடைத்தான் பெறமுடியும் என்பதை எண்ணிப் பார்த்தால் இதன் பயங்கரம் புரியும்.

இப்படி மக்களை பட்டினிப்போட்டு தயாரிக்கப்படும் இந்த உயிர்ம எரிபொருளால் கார்பன் வெளிப்பாடு குறைந்து விடுமா? உயிர்ம எரிபொருள் தயாரிப்புக்காக வேக வேகமாக காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. காடுகள் என்றால் ஆக்ஸிசன் தொழிற்சாலைகள் என்று பொருள்.அதாவது கார்பன்டை ஆக்ஸைடை உட்க்கொண்டு ஆக்ஸிசனை வெளியேற்றுபவை. அன்று தொடங்கி இன்று வரை மனிதன் காடுகளை அழிப்பதன் மூலம் கார்பன்டை ஆக்ஸைடின் அளவை உயர்த்திக்கொண்டே வந்திருக்கின்றான்.இன்றோ காடுகள் துடைக்கப்பட்டு வருகின்றன. ஒரு ஹெக்டேர் பரப்பில் காடுகளை அழித்து உயிர்ம எரிபொருள் தயாரித்தால் அது 13 டன் கார்பன்டை ஆக்ஸைடு காற்றில் கலப்பதை தடுக்கும். ஆனால் ஒரு ஹெக்டேர் பரப்பிலுள்ள காடு 20 டன் கார்பன்டை ஆக்ஸைடை எடுத்துக்கொண்டு பதிலாக ஆக்ஸிசனை வெளியிடுகிறது. இந்த முட்டாள் தனமான திட்டத்தை தயாரித்துத் தந்து நடைமுறைபடுத்துபவர்களுக்கு அறிஞர்கள் என்று பெயர். முதலாளித்துவம் வளர்தெடுத்திருக்கும் முரண்பாடு இது.

எத்தனை கோடிப்பேர் பட்டினியால் மாண்டு போனாலும் எங்களின் குறிக்கோள் லாபமீட்டுவது மட்டுமே என்பதுதான் முதலாளித்துவத்தின் வக்கிரம். அந்த வக்கிரத்தை மறைப்பதற்குத்தான் சுற்றுச்சூழல் மேம்பாடு, புவி சூடேறுவது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுவது என்றெல்லாம் வேசமிடுகிறார்கள். பில்கேட்ஸ் எய்ட்ஸ் விழிப்புணர்வுக்கு பணம் தருவது, போர்டு அறக்கட்டளை கல்வியில் ஆய்வுகளுக்கு பணம் தருவது போன்றவையெல்லாம் பின்னனியிலிருந்துதான் புரிந்துகொள்ள வேண்டும். மாறாக அவர்களை வள்ளல்களாகவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களாகவும் கொண்டால் நம் இடுப்புத்துணி காணாமல் போய் விடும்.

இயற்கை சூழலியல் விளைவுகளை அதனதன் அறிவியல் பின்னணியோடு விளங்கிக் கொள்ள முன்வரவேண்டும். அப்போதுதான் சரியான தீர்வை நோக்கி நாம் பயனிக்க முடியும். அவ்வாறன்றி சுபலமாக இருப்பதை செய்வோம் என நினைப்பது எங்கோ தொலைத்துவிட்டு இங்குதான் வெளிச்சமாக இருக்கிறது எனவே இங்கு தேடுகிறேன் என்பது போல்தான் அமையும்.

இறுதியாக ஒரு செய்தி: சமீபத்தில் ஆய்வுகளின் படி பூமி சூடேற்றத்திற்கு கிரின்ஹவுஸ் எபெக்ட் என்பது மிகச்சிறிய பங்களிப்பைத்தான் செய்கிறது என்றும் காஸ்மிக் கதிர்களின் தாக்கம் தான் புவி சூடேற்றத்திற்கு பெருமளவு காரணமாக இருக்கிறது என்றும் கண்டறிந்திருக்கிறார்கள். பிரபஞ்சத்தில் ஹைட்ரஜன் நட்சத்திரங்கள் என்றொரு வகை உண்டு. இவை கணம் தாங்காமல் வெடித்து சிதறுவதை சூப்பர் நோவா என்பார்கள். இந்த சூப்பர் நோவாக்களிலிருந்து வெளிப்படும் கதிர்கள் தான் காஸ்மிக் கதிர்கள். பிரபஞ்சத்தில் கோடிக்கணக்கில் சூப்பர் நோவாக்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இவற்றிலிருந்து வெளியாகும் காஸ்மிக் கதிர்கள் பெருமளவில் பூமியை தாக்கினால் அப்போது புவி சூடேற்றம் மெதுவாகவும் காஸ்மிக்கதிர்கள் குறைந்தால் புவிசூடேற்றம் அதிகரிப்பதாகவும் கண்டறிந்திருக்கிறார்கள்.

6 thoughts on “ஒருமணிநேரம் விளக்கணைப்பது புவி சூடேற்றத்தை தடுக்குமா?

  1. ///ஒருமணிநேரம் விளக்கணைப்பது புவி சூடேற்றத்தை தடுக்குமா?///

    மக்கள் தொகையை அதிகரிக்க வேண்டுமானால் உதவும். கடந்த ஆண்டு ஆற்காட்டார் செய்ததைப் போல.

  2. நண்பரே, உலகைக் காப்பாற்ற முதலில் ஜனத்தொகையைக் குறைக்க வேண்டும். நாம் அனைவரும், மரபணு மாற்றப்பட்ட உணவுகள் முலம் 6.8 பில்லியன் சனத்தொகைக்கு சாப்பாடு போட்டு, வளர்த்தால், அவர்களுக்கு விவசாயம், வாழ வசதி என காடுகள் அழிக்கப்பட்டு, மனிதர்க்கு மட்டுமே உலகம் உரித்தாகிவிடும். பிறகு மற்ற விலங்குகள் அழிந்து, நாம் மட்டுமே தனிக்காட்டு ராஜாக்களாக உலகில் வாழ முற்படுவோம்.

    இயற்கையை அழித்து எந்த உயிரும் வாழ முடியாது. எனவே எப்படியும் மனித இனம் அழியத்தான் போகிறது. எனவே நாம் இயற்கையைத் தடுக்கக் கூடாது. மனித ஜனத்தொகையை எப்படியாவது குறைக்க வேண்டும். பின் இயற்கை தானாக உலகத்தினை காப்பாற்றிக்கொள்ளும். எனவே 6.8 பில்லியன் சனத்தொகைக்கு சாப்பாடு போடுவதை விட்டு ஜனத்தொகையை குறைக்க வேண்டும்.

  3. வெளுத்து வாங்கும் பதிவு. முதலாத்துவத்தையும்,அறியாமையும் அருமையாக விளக்கியுள்ளீர்கள். என்னுடைய பார்வை இனி உங்கள் கோணத்திலும் சிந்திக்கும். நானும் உங்கள் கருத்துக்கு உடன் படுகிறேன். ஆனால் தனி மனிதனாகவும் நமக்கொரு கடமை இருக்கிறது..முதலாளி 100 ரூபாய் திருடினால் நாமும் 10 ரூபாய் திருடிக்கொண்டு தான் இருக்கிறோம். தொழிலகங்கள் தண்ணீரில் கழிவைக் கலந்தால் நாமும் தெருவில் குப்பை கொட்டிக்கொண்டு தான் இருக்கிறோம். நாம் திருந்தாமல் எவரையும் தட்டிக்கேட்க நமக்கு உரிமை இல்லை என்றே நம்புகிறேன்.. கார்பன் சுவடுகள் பற்றி நான் கொஞ்சம் எழுதியுள்ளேன்.. உங்கள் கடலில் என் ஒரு துளி நீரையும் செருங்களேன்.. நன்றி…
    http://saamakodangi.blogspot.com/2010/01/1.html

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s