ஓட்டுப்போடப்போகும் சனங்களே! உங்களிடம் சில கேள்விகள்….

பதினைந்தாவது மக்களவைத்தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.  உலக நாடுகள் வியந்து பாராட்டுகின்றன இந்திய தேர்தல் முறையை. நூறு கோடிக்கும் மேல் மக்கட்தொகை கொண்ட மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் அதிகம் வன்முறையின்றி அமைதியாக குறித்த காலத்தில் நடத்திமுடிக்க முடிவதே இந்திய ஜனநாயகத்திற்கு மிகப்பெரும் வெற்றிச்சான்றிதழ். என்றெல்லாம் ஏற்றிப்போற்றப்படும் தேர்தல் இப்போது நடந்துகொண்டிருக்கிறது.  விரலில் அது ஏற்படுத்தும் அழியாத கரையைப்போலவே மக்கள் வாழ்விலும் அழியாத கரையை ஏற்படுத்திக்கொண்டிருப்பது இன்னும் அதிகம் அறியப்படாமலேயே இருக்கிறது.
யாரை தேர்ந்தெடுப்பது எனும் உரிமையை நீங்கள் பெருமிதமாய் கொள்ளலாம், ஆனால் நீங்கள் தேர்ந்தெடுப்பவர் தவறு செய்யும் பட்சத்தில் அவரின் தேர்வை நீக்க உங்களால் முடியாது. தேர்ந்தெடுப்பதற்கு மட்டுமே உங்களுக்கு உரிமை,  தேர்ந்தெடுத்தபின் கொள்ளையடிப்பது அவர்கள் உரிமை. எந்தத்திருடன் உங்களை திருட வேண்டும் என்று தேர்ந்தெடுக்கவா இவ்வளவு ஆரவாரம்! இவ்வளவு செலவு!!
உங்கள் தொகுதியில் உங்களின் தேர்ந்தெடுப்புக்காக காத்திருக்கும் பல வேட்பாளர்களில் யாராவது வென்றபிறகு  உங்களின் கோரிக்கைகளை, உங்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு முயல்வார் என்று உங்களால் உறுதி கூற முடியுமா? ஆக தேர்ந்தெடுத்தபின் உங்களால் திருப்பியழைக்கமுடியாத ஒருவரை உங்கள் பிரச்சனைகளை தீர்த்துவைக்க முயல்வார் என்று உறுதிசொல்லமுடியாத பலரிலிருந்து தேர்ந்தெடுத்தாக வேண்டும் என்பது உரிமையா? நிர்ப்பந்தமா?
ஒரு தொகுதிக்கு அதிகபட்சமாக 25 லட்சம் வரை செலவு செய்யலாம், அதற்குமேல் செலவு செய்தல் கூடாது என்று விதி உண்டு. எந்த வேட்பாளராவது இந்த வரம்புக்குள் நின்று செலவு செய்கிறார் என்று நீங்கள் கருதுகிறீர்களா? தேர்தலில் வென்று மக்களவை உறுப்பினராகும் ஒருவருக்கு மாதச்சம்பளம் 12000 ரூபாய், அலுவலகச்செலவு 14000 ரூபாய், தொகுதிச்செலவு 10000 ரூபாய், பயணச்செலவு தோராயமாக 45000 ரூபாய், மக்களவை நடைபெறும் நாட்களில் தினப்படியாக 500 ரூபாய் இன்னும் சலுகைகள் வசதிகள் எல்லாம் சேர்த்து மாதம் ஒன்றிற்கு ஒரு லட்சம் ரூபாய் கிடைக்கும் என்றால் ஐந்து ஆண்டிற்கு அறுபது லட்சம் ரூபாய். இந்த அறுபது லட்சம் ரூபாய் வருமானத்தில் உங்களுக்கு சேவை(!) செய்வதற்காக பல கோடிகளை செலவுசெய்ய இவர்கள் தயாராக இருப்பதன் பொருள் என்ன?  கொள்ளையடிக்கப்போகிறார்கள் என்று இவ்வளவு வெளிப்படையாக தெரிந்தபின்பும் உரிமை என்ற பெயரில் அவர்களுக்கு ஓட்டுப்போடுவது அந்தக்கொள்ளைக்கு நீங்கள் உடந்தையாக இருக்கிறீர்கள் என்று பொருளாகாதா?
இப்போதெல்லாம் ஜனநாயகம் மிகவும் முன்னேறிவிட்டது. வாக்குச்சீட்டிற்கு பதிலாக எந்திரம் வந்திருக்கிறது. தங்களை ஜனநாயகத்தின் மீது அக்கரை உள்ளவர்களாக காட்டிக்கொள்வோர் ஒரு கோரிக்கை வைக்கிறார்கள், எந்திரத்தின் கடைசியில் யாருக்கும் ஓட்டுப்போட விருப்பமில்லை என்று ஒரு விசையை வைக்கலாம் என்று. பதறிப்போனது தேர்தல் ஆணையம். வெற்றிபெரும் வேட்பாளர்கள் பெறும் ஓட்டு எண்ணிக்கையை விட யாரையும் பிடிக்கவில்லை எனும் எண்ணிக்கை கூடிவிட்டால் என்ன செய்வது? ஜனநாயகத்திற்கே சிக்கல் வந்துவிடாதா? யாரையாவது ஒருவரை தேர்ந்தெடுப்பது மட்டும் தான் உங்கள் கடமை என்றால்,  அவர்களை நீங்கள் நிராகரிக்கக்கூடாது என்றால், இது எப்படி உரிமையாகும்?
யார் ஆளவேண்டும் என்பதை மக்களே தீர்மானிக்கிறார்கள் என்பது சரியா? ஒரு கட்சி ஆட்சியெல்லாம் கானல் நீராகிவிட்டது, கூட்டணி ஆட்சி தான். வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு ஆட்சிசெய்யும் கூட்டணி பெற்ற வாக்குகளை விட அவர்களை நிராகரித்து அளிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை அதிகம். என்றால் இது எப்படி மக்களாட்சி?
கிரிமினல்கள் போட்டியிடுவதை தடுக்க வழியில்லை என்கிறார் தேர்தல் ஆணையர். கிரிமினல்களை தவிர வேறு யாரையும் வேட்பாளர்களாக நிருத்துவதில்லை என்கின்றன ஓட்டுக்கட்சிகள். இன்னும் இதை நீங்கள் ஜனநாயகக்கடமை என்று சொன்னால் உங்களுக்கு என்ன பெயர் வைப்பது?
எல்லா இடங்களிலும் வேலை இழப்பு, ஊதியம் இல்லாததால் பசி பட்டினி. உயிர்வாழத்தேவையான உணவுக்கு வக்கில்லை. எல்லோருக்கும் உணவு என்பது அடிப்படைத்தேவை, ஒவ்வொருவரின் ஜனநாயகக உரிமை. அது எல்லோருக்கும் கிடைக்கவில்லை. குடிநீருக்காக பல கிலோமீட்டர்கள் அலைந்து திரிகிறார்கள் மக்கள். அப்படியே கிடைத்தாலும் அது குடிக்கும் நிலையில் இருப்பதில்லை. சுகாதாரமான குடிநீர் கிடைக்கச்செய்வது ஒவ்வொருவருக்கும் ஜனநாயக உரிமை. அது எல்லோருக்கும் கிடைக்கவில்லை. கொள்ளையடிப்பதற்கென்றே நகர்ப்புறங்களில் தனியார் கல்விக்கூடங்கள், கிராமப்புறங்களிலோ இடிந்த கூரை, மரத்தடி நிழல். கல்வி எல்லோருக்குமான ஜனநாயக உரிமை. அது எல்லோருக்கும் கிடைக்கவில்லை. உயிர்க்கொல்லி நோய்களால் இறப்பவர்களைவிட இந்தியாவில் பூச்சிக்கடிகளாலும், நாய்க்கடிகளாலும்; மகப்பேறின் போதும், சாதாரண நோய்களாலும் தான் அதிகமானோர் இறக்கிறார்கள். மருத்துவ வசதி ஒரு ஜனநாயக உரிமை. அது எல்லோருக்கும் கிடைக்கவில்லை. இந்த ஜனநாயக உரிமைகலையெல்லாம் குழி தோண்டிப்புதைத்துவிட்டு, அது மீண்டும் எழுந்து வந்துவிடக்கூடாது என்று எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டு, ஓட்டுப்போடுவது மட்டும் ஜனநாயக உரிமை என்கிறார்களே, அவர்களை நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?
நீங்கள் தேர்ந்தெடுக்கப்ப்போகும் மக்கள் பிரதிநிதிகள் உங்கள் வாழ்க்கையை தீர்மானிக்கும் எந்த விசயத்திலாவது முடிவெடுக்கும் அதிகாரத்தில் இருக்கிறார்களா? ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை ஆட்சி செய்யும் கட்சி மாறினாலும் அவர்களின் கொள்கை அதாவது உங்களை ஒட்டச்சுரண்டும் கொள்கை மட்டும் மாறுவதேயில்லையே எப்படி? ஆட்சியிலிருப்பவர்கள் கொண்டுவரும் எந்தத்திட்டமும் மக்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க அல்லது மக்களின் தேவைக்கு ஏற்ப வருவதில்லை. அதே நேரம் வந்துவிட்ட திட்டங்களை மக்கள் எவ்வளவுதான் எதிர்த்துப் போராடினாலும் மாற்றப்போவதில்லை. ஐந்து ஆண்டுக்கு ஒருமுறையேனும் உங்களிடம் வந்தே ஆகவேண்டிய ஓட்டுக்கட்சிகளால் எப்படி இப்படி இருக்கமுடியும்? ஏனென்றால் அவர்கள் பொம்மைகள். எழுதிக்கொடுத்ததை வாசிக்கும் அற்பங்கள். அவர்களை முந்தள்ளிவிட்டு பின்னாலிருந்து நம்மை ஆண்டுகொண்டிருக்கிறது ஒரு கும்பல்.  உங்கள் ஊரின் தாசில்தார் உங்களுக்கு விளக்கமளிக்க கடமைப்பட்டவரா? உங்கள் ஊரின் காவல்துறை அதிகாரியை உங்களால் கேள்விக்கு உட்படுத்தமுடியுமா? நீதிபதியின் தீர்ப்பு குறித்து உங்களால் ஐயப்பட முடியுமா? ஒரு வருவாய் கோட்ட அதிகாரியையோ அல்லது வேறு எந்தத்துறை அதிகாரியையோ குறைந்தபட்சம் அவர்கள் பணியினை பார்வையிட முடியுமா உங்களால்? இவர்களையெல்லம் எப்போது ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுத்தீர்கள்? அன்றாடம் உங்களை பாதித்துக்கொண்டிருக்கும் சட்டங்களைச் செய்வதும், ஆழிக்காற்றின் பட்டங்களைப்போல் உங்களை அலையவிடுவதும் இவர்களல்லவா? இவர்களை கேள்விக்கு உட்படுத்தும் எந்த அதிகாரமுமில்லாமல் வாக்காளப்பெருங்குடிமக்களே என்று உங்கள் முன் வருகிறார்களே, அவர்களை என்ன செய்வதாய் உத்தேசம்?
வாயில் உமிழ்நீர் சுரப்பது சீரண வசதிக்காக என்று மட்டுமா நினைக்கிறீர்கள். வேறு பயனும் உண்டு.

4 thoughts on “ஓட்டுப்போடப்போகும் சனங்களே! உங்களிடம் சில கேள்விகள்….

  1. தோட்டத்தில் மேயப்போன சுயமரியாதை சிங்கங்கள்………

    தேர்தல் புறக்கணிப்பு ஒன்றுதான் இந்த அரசினை மறுதலிக்கிறது. இந்த அரசின் வெங்காயத்தனமான சம்பிரதாயத்திற்கு முற்று புள்ளி வைக்க கோருகிறது.மாறாக இவனுக்கு ஓட்டு போடாதே வேறு யாருக்குவேண்டுமானாலும் போடு என்பது இந்த மானங்கெட்ட சனனாயகத்தினை பலபடுத்தவே செய்யும்.

    தோழர் மருதையன் சொன்னது போல“இரண்டு அணிகள் தான் உள்ளன ஒன்று ஈழதுரோகி அணி ,மற்றொன்று ஈழத்தமிழர்களுக்கு எதிரி அணி “ இது தான் இன்றைய நிலவரம்.

  2. மன்னிக்கவேண்டும் இதை இங்கே பதிவுசெய்வதற்காக. ஜெயகாந்தன் குறித்து நான் எழுதியதற்கு நீங்கள் அன்புடன் சுட்டிக்காடியதற்கான பதில் இது.

    அவருடைய எல்லா கருத்துக்களையும், நிலைப்பாடுகளையும் ஏற்றுக்கொள்ளாததால்தான் அவருக்கு நான் முழுநேர சீடனாகிவிடவில்லை. திரும்பவும் நான் வலியுறுத்துவது இதைத்தான், இப்பதிவு அவருடன் எனக்கிருக்கும் அன்பின் பிணைப்பு குறித்தது மட்டுமே, அவர் கொண்டிருக்கும், காட்டிக்கொண்டிருக்கும் கொள்கைகளைப்பற்றியது அல்ல.
    தோழர் செங்கொடி, பார்ப்பனீயம் குறித்த நடத்தப்படவேண்டிய விவாதத்திற்கு அந்த என் பதிவு சரியான தளமாக அமையாது.

  3. ஐயா,

    தவறெனக்கொள்ளவேண்டாம். நான் விவாத நோக்கில் பின்னூட்டமிடவில்லை. தூசு விழுந்தது நண்பனின் கண்களிலென்றாலும் நாம் பதறுவதில்லையா?

    தோழமையுடன்
    செங்கொடி

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s