ஓரின ஈர்ப்பும் விவாதங்களும்.

                           gay அண்மையில் தில்லி உயர்நீதிமன்றம் ஓரின ஈர்ப்பாளர்களுக்கு ஆதரவான தீர்ப்பொன்றை அளித்தது. அதன்படி ஓரினச்சேர்க்கையை குற்றமாகக் கருதும் 377ஆவது பிரிவு நீர்த்துப்போனது, அதாவது இனிமேல் விருப்பத்துடன் ஈடுபடும் ஓரினச்சேர்க்கையானது குற்றமாக கருதப்படாது. இதனைத்தொடர்ந்து நாடெங்கும் சூடாக விவாதம் நடைபெற்றுவருகிறது. குறிப்பாக இஸ்லாமிய மத அமைப்புகள் இதை கடுமையாக எதிர்த்து நாள்தோறும் ஆர்ப்பாட்டங்களை நடத்திவருகிறது. பெண்கள் பார்களில் குடிப்பதற்கு எதிராக இந்துத்துவ அமைப்புகள் கலாச்சார காவலர்களானதைப்போல் ஓரினச்சேர்க்கையை எதிர்த்து இஸ்லாமிய அமைப்புகள் கலாச்சார காவலர்களாக அவதாரம் எடுத்துள்ளன.

                             இது மதத்திற்கு எதிரான செயல், ஆண்டவன் மனிதர்களை எதிர்பாலர்களாக படைத்தது ஓரினச்சேர்க்கைக்காக அல்ல என்றும், மனித குலத்திற்கு மாபெரும் அழிவைக்கொண்டுவரக்கூடியது என்றும், சமூகத்தில் தீய விளைவுகளை ஏற்படுத்துவதோடு எய்ட்ஸ் போன்ற நோய்கள் பெருமளவில் பரவுவதற்கும் வழிவகுக்கும் என்பன போன்ற காரணங்களுக்காக எதிர்ப்பதாக இதை எதிர்ப்பவர்களும்;இது ஒன்றும் புதிதான ஒன்றல்ல, இலக்கியங்களில் இதற்கு எடுத்துக்காட்டுகள் உண்டென்றும் மனிதர்கள் தவிர்த்த ஏனைய விலங்குகளிடத்திலும் இது பழக்கத்தில் உள்ளது என்றும், இதை ஒருவகை மனநோய் என்பது அபத்தம் என்றும் இன்னும் பலவித அறிவியல் ஆதாரங்களோடும் இதை ஆதரிப்போர் அவர்களை எதிர்கொள்கிறார்கள். மதவாதிகள் வேதங்களைக்காட்டி எதிர்ப்பது எவ்வளவு அப‌த்தமானதோ அதற்கு சற்றும் குறைந்ததல்ல இதை இலக்கியங்களை அறிவியலைக்காட்டி ஆதரிப்பதும். இதை நாம் வேறொரு கோணத்தில் அணuக வேண்டும்.

      gay2                      இல‌க்கிய‌ங்க‌ளில் இத‌ற்கு ஆதார‌ம் உண்டு என்றால் அப்போதிலிருந்தே ஓரின‌ச்சேர்க்கை இருந்திருக்கிற‌து என்ப‌தைத்தான் அது காட்டுமேய‌ன்றி, அது ச‌ரியான‌து என்ப‌த‌ற்கான‌ ஆதார‌மாக‌ அது ஆகிவிடாது. அதைப்போன்றே வில‌ங்குக‌ளிட‌மும் இந்த‌ப்ப‌ழ‌க்க‌ம் உண்டு என்ப‌தும். ம‌னித‌னின் ச‌மூக‌ வாழ்வில் முர‌ண்பாடுக‌ள் தோன்றிபோதே அது ம‌னித‌ உற‌வுக‌ளில் தொழிற்ப‌ட‌த்தொட‌ங்கிவிட்ட‌து. கலாச்சாரம், உறவுகள் உறவின் வரம்புகள் எல்லாம் சமூகத்தேவையை முன்னிட்டு மாறிக்கொண்டே வந்திருக்கின்றன. ஆனால் மாறும் கலாச்சாரம் சமகாலத்திய சமூகத்தேவைகளை முன்னிலைப்படுத்துகிறதா என்பதே முக்கியமானது. அந்த வகையில் தற்போதைய சமூகத்தேவைகள் ஓரினச்சேர்க்கையை முன்தள்ளவில்லை என்பதே உண்மை. இப்போதுள்ள ஓரின ஈர்ப்பாளர்களின் தேவைகள் தனிமனித உரிமை என்ற அடிப்படையில் எழுந்தவைகளே. சமூகத்தைவிட தனிமனித உரிமைகளை முன்தள்ளப்படுகையில் அதற்கான சட்ட அங்கீகாரம் என்பது அவசியமற்ற ஒன்று தான்.

                             இதற்கான போராட்டங்களில் திருநங்கைகளும் இணைந்திருப்பது இதில் அழத்தை ஏற்படுத்தியிருக்கிறது, ஏனென்றால் திருநங்கைகளின் சமூக அங்கீகாரம் என்பது ஓரின ஈர்ப்பிலிருந்து வேறானது. ஒட்டுமொத்த சமூக புறக்கணிப்பால் தங்களுக்குள் குடும்பமாக இணையும் திருநங்கைகளிலிருந்து எழும் ஓரின ஈர்ப்பையும், அனைத்து சமூக அங்கீகாரத்துடன் வாழும் சாதாரண மனிதன் தன் மனபிறழ்வினால் அல்லது தனக்கேயுறிய தனி இயல்பினால் (அல்லது வக்கிரத்தினால்)ஓரின ஈர்ப்பாளனாக இருப்பதையும் வேறுபடுத்திப்பார்க்கவேண்டும். மறு பக்கத்தில் ஈர்ப்பின் நோக்கமே கலவியாக அதாவது இனப்பெருக்கமாக இருக்கும் போது சதாரண மனிதனின் இனப்பெருக்க தகுதியுடைய மனிதனின் ஓரின ஈர்ப்பு என்பது முரண்பாடாகவே இருக்கிறது. அதே நேரம் திருநங்கைகள் இனப்பெருக்க தகுதியில்லாத நிலையில் சமூக புறக்கணிப்பும் இணைவதாலும் திருநங்கைகளையும் சாதாரண மனிதர்களையும் இந்நிலையில் வேறுபடுத்திப்பார்பது மிக அவசியமான ஒன்றாகவே இருக்கிறது.

                            நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவாக சட்டமியற்றியிருக்கின்றன, அதன் தொடர்ச்சியாகத்தான் இந்தியாவிலும் சட்டபூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் காலம் மாறுவதற்கேற்ப நாமும் மாறவேண்டும் என்பன போன்ற கோசங்களின் பின்னே முதலாளித்துவ நலன்கள் மறைந்திருக்கின்றன. மரபை கடப்பவர்களெல்லாம் மக்கள் நலனை முன்னிட்டு அதை செய்வதில்லை. மாறாக புதிய மரபை படைப்பதாயினும், இருக்கும் மரபை காப்பதாயினும் அதன் பின்னணியில் முதலாளித்துவ நலனே இயங்கிக்கொண்டிருக்கும். கல்வி முதல் கலை வரை அனைத்தையும் தனியார்மயப்படுத்தியிருக்கும் முதலாளித்துவம் கலவியையும் தனியார் மயப்படுத்துவதின் இன்னொரு விளைவுதான் ஓரினச்சேர்க்கை. இனப்பெருக்கத்தை நோக்கமாகக்கொண்டு சமூக அடிப்படையில் இயல்பாக இருந்த ஆண் பெண் உறவை நுகர்வாக மாற்றி அதையும் சந்தைப்படுத்தியதன் வாயிலாக பொது நோக்கம் சிதைந்து தனக்குப்பிடித்த வடிவில் தவறொன்றுமில்லை என்ற முனைப்பின் வெளிப்பாடுதான் இன்று ஓரினச்சேர்க்கை வீங்கி இருப்பதற்கான காரணங்கள். சங்க காலங்களிலும் அதற்கு முன்பேயும் இது இருந்திருக்கிறது என்பது விதிவிலக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன என்ற அளவில் தானேயன்றி சமூகத்தேவை இருந்தது என்பதாலல்ல. கலவியின் சமூகத்தேவை மனித உற்பத்தியேயன்றி வேறில்லை.

                     gay3       பெண்ணுரிமை என்ற‌ அடிப்ப‌டையிலும் இதை அணுகுகிறார்க‌ள். திரும‌ண‌ம் என்ப‌து ஆணாதிக்க‌த்தின் வ‌டிவ‌ம் தான் என்றாலும் ஓரின‌ ஈர்ப்பு பெண்க‌ளுக்கு விடுதலையை அளித்துவிட‌ முடியாது. ஆணுக்கு அடிமைப்ப‌ட‌வேண்டிய‌ அவ‌சிய‌மின்றி தேவைக்கு த‌த்தெடுத்துக்கொண்டால் போயிற்று என்ப‌து த‌னி ம‌னித‌ அள‌வில் தான் ப‌ய‌ன் த‌ருமேய‌ன்றி ச‌மூக‌ அள‌வில் அது பெண்ணை ஆணின் சிறைக்குள் தளைப்ப‌டுத்த‌வே உத‌வும். ஆணோ பெண்ணோ எதிர் பாலின் துணையின்றி வாழமுற்படுவது முதலாளிய, ஆணாதிக்க வாழ்முறையின் தூண்டுதலால் ஏற்படுவது; இதையும் அரிதாக வெகுசிலருக்கு ஏற்படும் தனிப்படையான ஓரின ஈர்ப்புக்கான மன இயல்பையும் ஒன்றிணைத்து ஓரினச்சேர்கையை விரும்பும் அனைவருமே தனிப்படையான மன இயல்புடையவர்களாக சித்தரிக்க முயல்கிறார்கள். பெண்விடுதலை என்பது ஆணை மறுப்பதிலிருந்து தொடங்குவதில்லை. ஆனால் முதலாளியவாதிகள் ஆடைசுதந்திரமும், மேற்கத்திய கலாச்சாரத்தை அப்படியே பின்பற்றுவதையும், குழந்தைகளுக்கு பால் கொடுக்க மறுப்பதையும், குழந்தைபெறுவதையே மறுப்பதையுமே பெண்விடுதலையாக காட்டுகிறார்கள்.

                            த‌னிம‌னித உரிமை பேசிக்கொண்டு ஓரின‌ ஈர்ப்பை ஆத‌ரிப்ப‌வ‌ர்க‌ள் இந்தியாவிலும் உல‌கிலும் ப‌ல‌ கோடி ம‌க்க‌ள் உண்ண‌ உண‌வின்றி, வாழிட‌மின்றி, சுகாதார‌மின்றி குறைந்த‌ப‌ட்ச‌ ம‌னித‌ உரிமைக‌ள் கூட‌ கிடைக்காம‌ல் அல்ல‌ல்ப‌ட்டுக்கொண்டிருக்கும் வேளையில் அதைப்ப‌ற்றிய‌ சிந்த‌னை துளியுமில்லாம‌ல் தங்களின் கலவி பேதத்தை அங்கீகரிக்கக்கோரி போராடுபவர்களையும், அதற்கு சட்ட அங்கீகாரம் வழங்குபவர்களையும், மனிதம் உயிப்புடன் இருக்கும் அனைவரும் புற‌க்கணிக்கவேன்டியது கடமையாகும்.

13 Comments Add yours

 1. www.vinavu.com சொல்கிறார்:

  காலத்தே வந்திருக்கும் அருமையான அலசலுக்கு வாழ்த்துக்கள்.

  வினவு

 2. kalagam சொல்கிறார்:

  மிகச்சிறப்பான கட்டுரை, ஓரினச்சேர்க்கையை பலர் ஆதரிப்பது கூட உலகமயமாக்கலின் விளைவே, உங்கள் ஒவ்வொரு கட்டுரையிலும் இப்படிப்பட்ட ஆராய்ச்சி இருக்கிறது, வாழ்த்துக்கள்.
  மருத்துவர் ருத்ரனின் கட்டுரை கூட இப்படி விரிவாக இல்லை, அவர் சரியா தவறா என்பதற்குள் போகவில்லை. உண்மையில் ஓரினச்சேர்க்கை குறித்த கட்டுரையை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அதிலும் நீங்கள் எழுதியது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.

  உங்கள் கட்டுரையை தமிழ் மணத்தில் இணைக்கிறீர்களா?

  http://kalagam.wordpress.com/

 3. kalagam சொல்கிறார்:

  மிகச்சிறப்பான கட்டுரை, ஓரினச்சேர்க்கையை பலர் ஆதரிப்பது கூட உலகமயமாக்கலின் விளைவே, உங்கள் ஒவ்வொரு கட்டுரையிலும் இப்படிப்பட்ட ஆராய்ச்சி இருக்கிறது, வாழ்த்துக்கள்.
  மருத்துவர் ருத்ரனின் கட்டுரை கூட இப்படி விரிவாக இல்லை, அவர் சரியா தவறா என்பதற்குள் போகவில்லை. உண்மையில் ஓரினச்சேர்க்கை குறித்த கட்டுரையை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அதிலும் நீங்கள் எழுதியது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.

  உங்கள் கட்டுரையை தமிழ் மணத்தில் இணைக்கிறீர்களா?

 4. செங்கொடி சொல்கிறார்:

  நன்றி தோழர்,

  தமிழ் மணத்திலும் இணைத்துவருகிறேன்.

  தோழமையுடன்
  செங்கொடி

 5. கிருட்டிணன் சொல்கிறார்:

  //கலவியின் சமூகத்தேவை மனித உற்பத்தியேயன்றி வேறில்லை//

  அப்புறம் எதற்கு கல்யாணம், கருமாந்திரம், காமசாஸ்திரம் ?
  காலத்திற்கு தகுந்தபடி இவை வந்தது போல் நாமும் ஒருவரின் உணர்வை
  மதிக்க அடுத்த மனிதனை பதிக்காத எதுவும் செய்யலாம்.

  // த‌னிம‌னித உரிமை பேசிக்கொண்டு ஓரின‌ ஈர்ப்பை ஆத‌ரிப்ப‌வ‌ர்க‌ள்
  இந்தியாவிலும் உல‌கிலும் ப‌ல‌ கோடி ம‌க்க‌ள் உண்ண‌ உண‌வின்றி,
  வாழிட‌மின்றி, சுகாதார‌மின்றி குறைந்த‌ப‌ட்ச‌ ம‌னித‌ உரிமைக‌ள் கூட‌
  கிடைக்காம‌ல் அல்ல‌ல்ப‌ட்டுக்கொண்டிருக்கும் வேளையில்
  அதைப்ப‌ற்றிய‌ சிந்த‌னை துளியுமில்லாம‌ல் தங்களின் கலவி பேதத்தை அங்கீகரிக்கக்கோரி போராடுபவர்களையும், அதற்கு சட்ட அங்கீகாரம் வழங்குபவர்களையும், மனிதம் உயிப்புடன் இருக்கும் அனைவரும் புற‌க்கணிக்கவேன்டியது கடமையாகும்.//

  போராடுபவர்கள் பலரும் ஏற்கனவே மேற்சொன்னவைகளுக்கு
  அவர்களுக்கான பங்கை செவ்வனே செய்து கொண்டு தான்
  இருக்கின்றனர். முதலில் ஆண் பெண் புணர்ச்சியில் மட்டும்
  விருப்பமுள்ளவர்கள் மட்டும் மானுடம் உயிப்புடன் இருக்க வைக்க
  பிறந்தவர்கள் அல்ல. சாக கிடக்கும் ஒருவனை இன்னொருவன்
  காப்பவனும், மானுடம் உயிக்க வைக்க வந்தவன்தான். நீங்கள் வைத்த
  சட்டங்கள் பலரை அறைக்குள் அழ வைத்து விட்டது. அவர்கள் சுதந்திரம்
  பெறட்டும். நீங்கள் புறக்கணிப்பதால் அவர்கள் வீட்டு அரிசி என்ன
  வேகாமலா இருக்க போகுது ? இவ்வளவு பேசும் நீங்கள் ஆண் பெண்
  கலவியில் திளைத்துக்கொண்டு இருக்கிறீர்கள். மற்றவர்களையும் குறை
  சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள். அவ்வளவே.

 6. joseph சொல்கிறார்:

  the below lines are good

  //த‌னிம‌னித உரிமை பேசிக்கொண்டு ஓரின‌ ஈர்ப்பை ஆத‌ரிப்ப‌வ‌ர்க‌ள் இந்தியாவிலும் உல‌கிலும் ப‌ல‌ கோடி ம‌க்க‌ள் உண்ண‌ உண‌வின்றி, வாழிட‌மின்றி, சுகாதார‌மின்றி குறைந்த‌ப‌ட்ச‌ ம‌னித‌ உரிமைக‌ள் கூட‌ கிடைக்காம‌ல் அல்ல‌ல்ப‌ட்டுக்கொண்டிருக்கும் வேளையில் அதைப்ப‌ற்றிய‌ சிந்த‌னை துளியுமில்லாம‌ல் தங்களின் கலவி பேதத்தை அங்கீகரிக்கக்கோரி போராடுபவர்களையும், //

 7. bashakavithaigal சொல்கிறார்:

  Good article….the society need to mature and do a lot

 8. ben சொல்கிறார்:

  செங்கொடி உங்கள் கூற்று படி பார்த்தால்,
  சிதம்பரத்தில் ம.க.இ. க. செய்து வரும் போராட்டம் தேவை இல்லாத ஒரு போராட்டம் தானே.
  வருட வருடம் திருவையாறு போராட்டம் தேவையற்ற ஒன்று தான்.

  எப்படி முதலாளித்துவ சமூகம் ஒரு கட்டமைப்பை ஏற்படுத்தி மதம், கலாச்சாரம் போன்ற மாயைகளால் மக்களின் உரிமைகளை மறுக்கிறதோ அதே போன்ற ஒரு கட்டமைப்பை உங்கள் எண்ணம் வழிவகுக்கும்.
  திருமணம் என்பது வெறும் கலவி கொள்வதற்கோ அல்லது பிள்ளை பெற்று கொள்வதற்கோ மட்டும் அல்ல.
  நம் நாட்டில் நிலவும் சகிப்புத்தன்மையற்ற பார்பன சிந்தனையே உங்கள் எழுத்தில் பிரதிபலிக்கிறது.

  தோழமையுடன்

  பென்

 9. செங்கொடி சொல்கிறார்:

  நன்றி திரு பென்,
  தில்லை போராட்ட‌ங்க‌ளும், த‌ஞ்சை த‌மிழ் ம‌க்க‌ள் இசை விழாவும் தேவைய‌ற்ற‌தாகாக‌ எவ்வாறு க‌ருதுகிறீர்க‌ள்? க‌ள‌வாட‌ப்ப‌ட்ட‌ இசையை புனித‌ப்போர்வை போர்த்தி உழைக்கும் ம‌க்க‌ள் மீது திணிப்ப‌தை அம்ப‌ல‌ப்ப‌டுத்துவ‌து மீட்ப‌து தேவைய‌ற்ற‌தா? இல்லை தில்லை திண்டுமுட்டிக‌ளின் கொட்ட‌த்தை க‌ண்டும் க‌ணாம‌ல் போவ‌து தான் கால‌த்தேவையா?

  ஓரின‌ ஈர்ப்பை ஆத‌ரிப்ப‌த‌ற்கு உங்க‌ளுக்கிருக்கும் ச‌மூக‌த்தேவையை விவ‌ரிக்க‌ முடியுமா?

  “எப்படி முதலாளித்துவ சமூகம் ஒரு கட்டமைப்பை ஏற்படுத்தி மதம், கலாச்சாரம் போன்ற மாயைகளால் மக்களின் உரிமைகளை மறுக்கிறதோ அதே போன்ற ஒரு கட்டமைப்பை உங்கள் எண்ணம் வழிவகுக்கும்.”
  இத‌ன் பொருள் என்ன‌? ஓரின‌ ஈர்ப்பை ஆத‌ரிக்க‌ ம‌றுப்ப‌து என்பது மக்கள் உரிமைகளை மறுக்க வழிவகுக்குமா? கொஞ்சம் விரிவாக‌ எழுதுங்களேன்.

  “நம் நாட்டில் நிலவும் சகிப்புத்தன்மையற்ற பார்பன சிந்தனையே உங்கள் எழுத்தில் பிரதிபலிக்கிறது”
  புளுத்துப்போன குற்றச்சாட்டு. முடிந்தால் சான்று தாரவும்.

  தொட‌ர்ந்து வாருங்க‌ள்

  தோழ‌மையுட‌ன்
  செங்கொடி

 10. ben சொல்கிறார்:

  //தில்லை போராட்ட‌ங்க‌ளும், த‌ஞ்சை த‌மிழ் ம‌க்க‌ள் இசை விழாவும் தேவைய‌ற்ற‌தாகாக‌ எவ்வாறு க‌ருதுகிறீர்க‌ள்? க‌ள‌வாட‌ப்ப‌ட்ட‌ இசையை புனித‌ப்போர்வை போர்த்தி உழைக்கும் ம‌க்க‌ள் மீது திணிப்ப‌தை அம்ப‌ல‌ப்ப‌டுத்துவ‌து மீட்ப‌து தேவைய‌ற்ற‌தா? இல்லை தில்லை திண்டுமுட்டிக‌ளின் கொட்ட‌த்தை க‌ண்டும் க‌ணாம‌ல் போவ‌து தான் கால‌த்தேவையா?//

  இதற்கு நீங்கள் எழுதியவாறே

  *இந்தியாவிலும் உல‌கிலும் ப‌ல‌ கோடி ம‌க்க‌ள் உண்ண‌ உண‌வின்றி, வாழிட‌மின்றி, சுகாதார‌மின்றி குறைந்த‌ப‌ட்ச‌ ம‌னித‌ உரிமைக‌ள் கூட‌ கிடைக்காம‌ல் அல்ல‌ல்ப‌ட்டுக்கொண்டிருக்கும் வேளையில்*

  //ஓரின‌ ஈர்ப்பை ஆத‌ரிப்ப‌த‌ற்கு உங்க‌ளுக்கிருக்கும் ச‌மூக‌த்தேவையை விவ‌ரிக்க‌ முடியுமா?//
  தேவை தேவைஇல்லை என்பதை தீர்மானிப்பது யார் என்பது தான் இங்கு நான் சொல்ல விரும்புவது. தீர்மானிப்பது என்பதும் தீர்மானித்ததை பின்பற்ற வேண்டும் என்பதும் பாசிச சமூகத்தை தான் ஏற்படுத்தும்.

  //மறு பக்கத்தில் ஈர்ப்பின் நோக்கமே கலவியாக அதாவது இனப்பெருக்கமாக இருக்கும் போது சதாரண மனிதனின் இனப்பெருக்க தகுதியுடைய மனிதனின் ஓரின ஈர்ப்பு என்பது முரண்பாடாகவே இருக்கிறது//
  இது முழுக்க முழுக்க பிற்போக்கு தனமான கருத்தாக தோன்றுகிறது. வாடிகன் மத பிரச்சருதுக்கும் இந்த கருத்திற்கும் எவித மாறுபாடும் கிடையாது.

  முடிவாக மனிதர்களுக்கு ஆட்டு மந்தை போன்ற உணர்வுகளும், வெளிபாடுகளும் இருக்க வேண்டும் என்று நினைப்பது தவறு. உங்களின் சமூக சார்ந்த சிந்தனைக்கும் இதற்கும் எப்படி பொருந்தும் என்று எனக்கு விளங்கவில்லை. உங்களின் கருத்து ‘moral policing’ போன்று தோன்றுகிறது. முதலாளித்துவம் எல்லா வற்றில்லும் சம்பாதிக்க தான் பார்க்கும் அதற்காக இது எதிர்க்க கூடிய விடயம் ஆகி விட முடியாது.

  p.s: உங்களின் கட்டுரைகளை தொடர்ந்து படிபவன் நான். இந்த கருத்தில் உடன்பாடு இல்லாத காரணத்தால் தான் அவ்வாறு எழுதினேன். தனிப்பட்ட முறையில் எடுத்து கொள்ள வேண்டாம்.

  நன்றி,
  தோழமையுடன்
  பென்

 11. செங்கொடி சொல்கிறார்:

  நண்பர் பென்,

  *இந்தியாவிலும் உல‌கிலும் ப‌ல‌ கோடி ம‌க்க‌ள் உண்ண‌ உண‌வின்றி, வாழிட‌மின்றி, சுகாதார‌மின்றி குறைந்த‌ப‌ட்ச‌ ம‌னித‌ உரிமைக‌ள் கூட‌ கிடைக்காம‌ல் அல்ல‌ல்ப‌ட்டுக்கொண்டிருக்கும் வேளையில்*

  என்ப‌தை எந்த‌ போராட்ட‌த்திற்கும் எதிராக‌ ப‌ய‌ன்ப‌டுத்த‌லாமா? அது த‌ட்டையான‌ சிந்த‌னையாகாதா? என்றால் அடிப்ப‌டை உரிமைக‌ள் த‌விர‌ வேறு எத‌ற்காக‌வும் போராட‌க்கூடாது என்ற‌ல்லவா பொருள்வ‌ரும்.
  ஒரு போராட்ட‌ம் என்றால் அத‌ன் அடிப்ப‌டை என்ன‌வாக‌ இருக்கிற‌து என்ப‌து முக்கிய‌ம். த‌ஞ்சை, தில்லை போராட்ட‌ங்க‌ள் ச‌மூக‌ உரிமையை அடிப்ப‌டையாக‌ கொண்டிருக்கின்ற‌ன‌. மாறாக‌ ஓரின‌ ஈர்ப்பு ஆத‌ர‌வு என்ப‌து த‌னிம‌னித‌ உரிமையை அடிப்ப‌டையாக‌ கொண்டிருக்கிற‌து. ச‌மூக‌த்திற்கு ப‌ய‌ன் த‌ராத‌ த‌னிம‌னித‌ உரிமையும் அத‌ற்கான‌ போராட்ட‌ங்க‌ளும் புற‌க்க‌ணிக்க‌த்த‌க்க‌தே. ஓரின‌ ஈர்ப்பை ஆத‌ரிப்ப‌த‌ற்கான‌ உங்க‌ளின் கார‌ண‌ங்க‌ள் ச‌மூக‌ உரிமை சார்ந்து வ‌ருகிற‌தா? த‌னிம‌னித‌ உரிமை சார்ந்து வ‌ருகிற‌தா? என்று கேள்வி எழுப்பிப்பாருங்க‌ளேன், உங்களுக்குள்.

  *தேவை தேவைஇல்லை என்பதை தீர்மானிப்பது யார் என்பது தான் இங்கு நான் சொல்ல விரும்புவது. தீர்மானிப்பது என்பதும் தீர்மானித்ததை பின்பற்ற வேண்டும் என்பதும் பாசிச சமூகத்தை தான் ஏற்படுத்தும்.*

  யார் தீர்மாமானிப்ப‌து என்றால் நானா? நீங்க‌ளா? யார் என்ப‌தைவிட‌ எதை நோக்க‌மாக‌க்கொண்டு தீர்மானிக்கிறார்க‌ள் என்ப‌து தான் இன்றிய‌மையாத‌து.

  *இது முழுக்க முழுக்க பிற்போக்கு தனமான கருத்தாக தோன்றுகிறது. வாடிகன் மத பிரச்சருதுக்கும் இந்த கருத்திற்கும் எவித மாறுபாடும் கிடையாது.*

  இருக்கலாம், ஆனால் நோக்கம் வேறுபாடுடையதன்றோ.

  *முதலாளித்துவம் எல்லா வற்றில்லும் சம்பாதிக்க தான் பார்க்கும் அதற்காக இது எதிர்க்க கூடிய விடயம் ஆகி விட முடியாது.*

  அது ஒன்று மட்டுமே இந்த எதிர்ப்பின் மையம் அல்ல.
  ஓரின ஈர்ப்பை ஆதரிப்பவர்கள் தனிமனித வாதம் தவிர வேறெதையும் முன்வைப்பதில்லை. உங்களிடம் இருந்தால் பரிசீலிப்போம்.

  நீங்கள் தாராளமாக எது குறித்தும் உங்கள் கருத்துக்களை பதியலாம்.

  தோழமையுடன்
  செங்கொடி

 12. theanarchyfix சொல்கிறார்:

  பல தனி மனிதர்கள் தான் ஒரு சமூகத்தை அமைக்கிறார்கள் என்பது என்னது எண்ணம். சமூகம் என்பது ஒவ்வொரு தனி மனிதனின் சமரசம் தான். அந்த தனி மனிதன் தனக்கு என்று சில சமூகத்திற்கு எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாத செயலில் ஈடுபட்டால் சமூகம் அதை சகித்து கொண்டு போவது தான் நாகரிகம் என்று நான் நம்புகிறேன்.
  இந்த விவாதத்தின் பொழுது மத மற்ற தடை சட்டம் நினைவுக்கு வந்தது. அதை பல பேர் எதிர்த்தார்கள் நீங்களும் எதிர்த்து இருப்பீர்கள் என்ற பட்சத்தில் இந்த சட்டம் எவ்வாறு மாறுபட்டது. எதிர்ப்பதற்கான காரணம் தனி மனிதன் உரிமை மீறல் மேலும் மதம் ஒரு சமூகத்தின் அடையாளமாக முன்னிறுத்த படகூடாது என்பதற்காகவும். அதேபோல் இந்த விடயம் தனி மனித உரிமை சார்ந்தது மற்றும் சமூகத்தின் அடையாளம் அல்ல. இவர்களால் சமூகத்திருக்கு எந்த வித பாதிப்பும் இல்லை. அப்படி இருக்கும்பொழுது எதிர்க்க வேண்டிய அவசியம் என்னக்கு புல படவில்லை.
  Indifference to difference is inhuman
  அவர்கள் அப்படி இருக்கிறார்கள் என்றால் அனுசரித்து போவது தான் பண்பாடு.

  நன்றி
  தோழமையுடன்
  பென்

 13. SARAN சொல்கிறார்:

  Gay sex is as like a sense or character of individuals,

  we could not argue for them need to change or avoid,

  It’s like a one kind of love of same sexes, but it should be limited with protected and prevented,

  Thanks and regards,

  Saran

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s