பஞ்சத்தின் வயிற்றை மழை வந்து தீர்க்காது

நடப்பு ஆண்டில் பருவ மழை சரியாக பெய்யாத்ததால் அரிசி விளைச்சல் ஒரு கோடி டன் வரை குறையும் என வேளாண் அமைச்சர் சரத்பவார் தெரிவித்துள்ளார். இந்தியாவிலிருந்து எந்த ஒரு நாட்டுக்கும் அரிசி ஏற்றுமதி செய்யப்படாது என்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். தினந்தோரும் நாளிதழ்களில் வாசிக்கையில் கண்ணில் பட்டு கடந்து போகும் இந்த செய்திகளின் வீச்சும் தாக்கமும் மக்களிடம் எந்த ஒரு ஆர்வத்தையும் ஏற்படுத்தவில்லை. காரணம் எந்தவித ஈர்ப்பையும் ஏற்படுத்தாத இந்தச்செய்தி சிக்கல் மிகுந்த நூல் கண்டின் ஒரு முனை என்பதும் மறு முனை அவர்களின் கழுத்தில் சுருக்கிடப்பட்டிருப்பதும் அவர்களுக்கு தெரியவில்லை

காவிரியில் தண்ணீர் வராததால் விவசாயிகள் கண்ணீர் வடிக்கிறார்கள். தமிழக அரசு கன்னடம் தண்ணீர் விடவில்லை என்கிறது, கன்னடமோ நடுவர் மன்ற தீர்ப்பின் படி தண்ணீர் விட்டுக்கொண்டிருக்கிறோம் என்கிறது. இல்லை மழை பெய்யும் போது உபரியாக வெளியேறும் நீரை தீர்ப்பின் படி விட்டதாய் கணக்கிடுகிறார்கள் என்று தமிழக அதிகாரிகள். இப்படியே பாலாறு, முல்லைப்பெரியாறு என்று ஆற்றில் வரவேண்டிய நீர் விவசாயிகளின் கண்களில் வழிந்துகொண்டிருக்கிறது.

காவிரி

பருவமழை பொய்த்துவிட்டது இயற்கையின் பிழை என்கிறார்கள், ஆனால் கடந்த முப்பது ஆண்டுகளில் முப்பது லட்சம் ஏக்கர் பரப்புள்ள காடுகள் மாயமாய மறைந்துவிட்டது யார் பிழை? அதனால் தானே மழை பொய்த்துவிட்டது. ரியல் எஸ்டேட் முதலைகளை சுதந்திரமாய் வாலை சுழற்றவிட்டது யார் பிழை? அதனால் தானே ஆறுகள் ஏரிகள் எல்லாம் மனைகளாக்கப்பட்டு விற்க்கப்பட, பெய்யும் மழை நீர் சேகரமாகாமல் குடியிருப்புகளில் தேங்குவதும் கடலில் கலந்து வீணாவதும் ஏற்படுகிறது. காடுகளை ஏப்பம் விட அனுமதித்த அரசு இயற்கையின் பிழையால் உற்பத்தி குறைவு என்கிறது. அதே அரசு தான் ஊக வணிகம் முதல் அனைத்தையும் சூதாடிகளுக்கு திறந்துவிட்டு பதுக்கல்காரர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறது. அரிசி பருப்பு முதலான தானியங்கள் இப்போதே மூச்சை விரட்டும் நிலையில் இருக்க, நடப்பு ஆண்டில் ஒரு கோடி டன் வரை உற்பத்தி குறையும் என்று அறிவித்ததும் பதுக்கல்கள் தொடங்கிவிட்டன. விலையும் காற்றிலேறி விண்ணுடன் விளையாடிக்கொண்டிருக்கிறது. இப்படி ஏற்படுத்தப்படும் செயற்கையான தட்டுப்பாடு இந்தியாவில் மட்டுமல்ல, மூன்றாம் உலக நாடுகள் அனைத்தும் உணவுப்பஞ்சத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக ஐநா அவையே அறிவித்திருக்கிறது.

கெயிட்டி எனும் நாட்டில் ஒரு வகை களிமண்ணையே ரொட்டியாக சுட்டு சாப்பிடுகிறார்கள். லத்தீன் அமெரிக்க நாடுகளில் பெருங்கலவரங்கள் உணவுக்காக வெடித்திருக்கின்றன. இந்தோனேசியாவில் தலைவர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பைப்போல் உணவு தானிய வாகனங்களுக்கு வழங்கப்படுகிறது. இந்தியாவும் வெளிநாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்வதில்லை என அறிவித்திருக்கிறது (பஞ்சத்தால் பீடிக்கப்பட்டவர்களுக்கு அனுப்புகிறோம் என்ற பெயரில் நைஜீரியாவுக்கு அரிசி ஏற்றுமதி செய்த வகையில் 2500 கோடிக்கு ஊழல் நடைபெற்றுள்ளது வேறு விசயம்) இப்படி செயற்கையாக ஏற்படுத்தப்படும் உணவுப்பபஞ்சத்திற்கு மழை பொய்த்தது மட்டும் தான் காரணமா? மழை பொய்க்கவும் இல்லை மழையளவு குறைந்திருக்கிறது அவ்வளவுதான். இதற்க்கான மெய்யான காரங்களை அறியும் போதுதான் நம் ஒட்டிய வயிறுகளில் அடிப்பதை தாளமாக ரசிக்கும் கூட்டத்தை அடையாளம் காண முடியும்.

இதில் முதலாவது எரி எண்ணெய்க்கு(பெட்ரோல், டீசல்) மாற்றாக உருவாக்கப்படும் உயிரி எண்ணெய் எனப்படும் பயோடீசல். இந்த உயிரி எண்ணெய் தயாரிப்புக்கு உணவு தானியங்கள்தான் பயன்படுத்தப்படுகின்றன. இதற்காக ஒப்பந்த விவசாயம் என்ற பெயரில் உணவுதானியங்கள் மொத்தமாக உயிரி எண்ணெய்க்காக கொள்முதல் செய்யப்படுகின்றன. இவை மூன்றாம் உலக நாடுகளில் தான் உற்பத்தி செய்யப்படுகின்றன என்பதோடு மட்டுமல்லாமல் விவசாயிகளை உயிரி எண்ணெய்க்கான தானியங்களை மட்டுமே பயிர் செய்யுமாறு நிர்ப்பந்திக்கவும் செய்கின்றனர். இதை செயல்படுத்துவதற்கு ஏற்றதான ‘காட்’ போன்ற ஒப்பந்தங்களை அரசு செயல் படுத்துவதைத்தான் முன்னேற்றம், நாடு முன்னேறுகிறது என்ற பெயரில் ஏய்க்கிறார்கள்.

அடுத்தது முன்பேர வணிகம் என்ற பெயரில் நடக்கும் சூதாட்டம். அமெரிக்கச்சூதாடிகளின் மோசடிகள் சீட்டுக்கட்டு கோபுரம்போல் அதன் பொருளாதாரத்தை சரியவைத்து, உலகெங்கும் நிதி நெருக்கடி சுழன்றடித்துக்கொண்டிருக்கிறது. இதில் இழந்தவர்களின் கதைகளைத்தாம் நாம் அவ்வப்போது கேட்டு வருகிறோம் ஊடகங்கள் வாயிலாக, ஆனால் இந்த நிதி நெருக்கடியை பயன்படுத்தி கோடிகோடியாய் லாபமடைந்தவர்களும் உண்டு. அவர்களால் தாங்கள் பண‌த்தை தொட‌ர்ந்து டாலராகவே வைத்திருக்க முடியாது. ஏனென்றால் சரிந்து கொண்டிருக்கும் டாலரின் மதிப்பால் அவர்களும் நிதினெருக்கடியில் சிக்கிக்கொள்வார்கள். அதனால் அவர்கள் அதை பங்குச்சந்தைகளில் முதலிடுகிறார்கள். தொடர்ந்து தள்ளாடிக்கொண்டிருக்கும் நிறுவனங்களில் எதில் முதலீடு செய்வது? நிரந்தர மதிப்பைக்கொண்டிருக்கும் தங்கத்தில் முதலீடுகிறார்கள் சிலர் (இதனால் தான் தங்கத்தின் விலை எகிறுகிறது) ஏனையோர் முன்பேர வர்த்தகத்திற்கு தாவுகிறார்கள். இதன்படி நாளைய விலையை இன்றே கணித்து வாங்குவதாக ஒப்பந்தம் செய்து கொள்கிறார்கள். ஒரு டன் அரிசி ஆறு மாதம் கழித்து இன்னவிலையில் விற்கும் என்று கணித்து ஆயிரம் டன் அரிசி வாங்குவதாக ஒப்பந்தம் செய்துகொள்கிறார்கள் என்று கொள்வோம். நடப்பு விலையை விட அதிகம் வைத்து ஒப்பந்தம் செய்ததால் விற்றவருக்கு லாபம். ஆனால் ஆறு மாதம் கழித்து குறித்த விலையை விட குறந்திருந்தால் வாங்கியவருக்கு நட்டமல்லவா? இங்கு தான் அதன் கோரமே வெளிப்படுகிறது. குறித்த விலையை விட சந்தையில் அதிக விலை இருக்கும் படி வாங்கியவர் பார்த்துக்கொள்வார். எப்படி விலையை அதிகம் இருக்கும்படி செய்வது? தட்டுப்பாடு. உணவுதானியங்களை பதுக்கிவைத்து செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்துவதன் மூலம். விற்றவருக்கும் வாங்கியவருக்கும் கொள்ளை லாபம். விளைவித்த விவசாயிக்கும், வாங்கி உண்ணும் மக்களுக்கும் பட்டை நாமம்.

மக்களின் வயிற்றிலடிக்கும் இந்த முன்பேர வணிகத்தை அனுமதித்திருக்கும் அரசுதான் பதுக்கலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்போகிறதாம். உலகெங்கும் அரசுகளுக்கு எதிராய் கலகங்கள் வெடித்துப்பரவுகின்றன. குபேரபுரி(!) அமெரிக்காவில் இலவச ரொட்டி கொடுக்கிறார்கள். இங்கும் வரும் காலங்களில் ஊருக்கு ஊர் கஞ்சித்தொட்டி திறக்கலாம். அது நமக்கு வழக்கமானது தானே, ஆனால் கஞ்சித்தொட்டிகளுக்ளுக்கும் அரிசி கிடைக்காதபோது………

One thought on “பஞ்சத்தின் வயிற்றை மழை வந்து தீர்க்காது

 1. வறுமையும் பட்டினியும்
  விவசாயியின் சேக்காளிகள்
  கொடுமையின் துடிப்புக்கள்
  நிலத்தில் வெடிப்புக்களாய்
  உழுவதற்கு நிலமில்லை
  உழு கருவிகள் அரிக்க
  ஆரம்பித்து விட்டன….

  உழுவோம் முதலாளியின்,
  ஆளும்வர்க்கத்தின் மண்டையில் ஆழமாக
  இன்னும் ஆழமாக
  உண்மையை
  விதைப்போம்…

  பொறுமை அது நம்மை
  உழுகருவிகளோடு சேர்த்து
  அரித்து தின்று விடும்

  கலகம்

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s