அஹ்மதியாக்களின் பிணமும் அசல் முஸ்லீம்களின் ஊர்வலமும்

அண்மையில் வினவு தளத்தில் புதிய ஜனநாயகம் ஆக 09 இதழில் வெளிவந்த அஹ்மதியாக்களின் பிணத்தைக்கூட அனுமதிக்க மறுக்கும் முஸ்லீம் மதவெறி என்ற கட்டுரை பதியப்பட்டிருந்தது. அதை விமர்சித்து பல முஸ்லீம் நண்பர்கள் பின்னூட்டம் இட்டிருந்தனர். அதில் நண்பர் ஷேக் தாவூத் அவர்களின் பின்னூட்டமும் ஒன்று

அன்புள்ள சகோதர சகோதரிகள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்,

மதங்களிலேயே மிகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட மதம் இஸ்லாம் தான் என்பது இங்கு பின்னூட்டமிடும் மாற்று மதத்தினரின் கருத்துக்களை வைத்து மீண்டும் ஒரு முறை நிரூபணமாகியிருக்கிறது. ஒரு நிகழ்வைப் பற்றி கருத்து சொல்வதென்றால் அதைப் பற்றிய முழுமையான செய்திகளை தொகுத்து கொண்டு கருத்து வெளியிடல் வேண்டும். தான்தோன்றித்தனமாக கருத்துக்களை வெளியிடுவது என்பது ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்காது. இஸ்லாமியர்களுக்கு சொந்தமான ஒரு சுடுகாட்டில் புதைத்த அஹமதிய மதத்தை சார்ந்த ஒரு பெண்மணியின் உடலை இஸ்லாமியர்கள் தோண்டி எடுத்து கிருஷ்ணாம் பேட்டை சுடுகாட்டில் மறு அடக்கம் செய்து விட்டார்கள். எனவே இவர்கள் இஸ்லாமிய மத வெறியர்கள் என்பது வினவின் (அதாவது ம.க.இ.க தோழர்களின் ) வாதம். முஸ்லிம்கள் குறித்த ஒரு செய்தி என்றால் அதைப்பற்றிய பத்து சதவிகித உண்மையை கூட அறிந்து கொள்ளாமல் செய்தி வெளியிடும் ஊடகங்களின் மத்தியில் வினவு ஒன்றும் விதிவிலக்கில்லை என்பது இந்த கட்டுரையின் மூலம் இன்னும் தெளிவாகிறது.

தங்களுக்கு சொந்தமான சுடுகாட்டில் வேறொருவரின் பிணத்தைக் கூட இவர்கள் புதைக்க விட மாட்டார்கள். அந்தளவுக்கு இஸ்லாமியர்கள் மதவெறியர்கள் என்ற ஒரு கருத்தையும் இக்கட்டுரை முன்வைக்கிறது. ஆனால் உண்மையோ வேறு விதமாக இருக்கிறது. தூய இஸ்லாத்தை பொறுத்தவரை ஒருவர் இறந்து விட்டால் அவர் எந்த மதத்தை சார்ந்தவராக இருந்தாலும் அதற்கு உரிய மதிப்பளிக்க சொல்கிறது. உதாரணமாக ஒரு யூதரின் பிணம் நபிகள் நாயகத்தை கடந்து செல்கையில் அமர்ந்திருந்த நபிகள் எழுந்து நின்றதாக தான் உண்மையான வரலாறு சொல்கிறது. இதை கட்டுரை எழுதிய சகோதரர் கவனத்தில் கொள்ளல் வேண்டும்.

நாங்கள் 1400 வருடங்களுக்கு முன்னர் உள்ளதை எல்லாம் கவனத்தில் கொள்ள மாட்டோம். தற்காலத்தை மட்டும் தான் கவனத்தில் எடுப்போம் என்று நம்முடைய காம்ரேடுகள் சொன்னால் அவர்களுக்கு இதோ ஓர் நிகழ்கால உதாரணம். நாகூர் என்ற ஒரு ஊர் கண்டிப்பாக பலபேருக்கு தெரிந்திருக்கும். சுனாமி என்னும் ஆழிப்பேரலை கடலோர மக்களை எல்லாம் காவு கொண்ட போது அதற்கு பலியான பல மாற்று மத சகோதரர்களின் உடல்கள் மாற்று மத சகோதரர்கள் என்று தெரிந்தே நாகூர் இஸ்லாமிய சுடுகாட்டில் புதைக்கப்பட்டது. வேண்டுமானால் நாகூரில் வசிக்கும் மாற்றுமத சகோதரகளிடத்தில் யார் வேண்டுமானாலும் இது குறித்து விசாரித்து கொள்ளலாம். அப்படி புதைக்கப்பட்ட பிணங்களை எல்லாம் வெளியே ஏன் இஸ்லாமியர்கள் தோண்டவில்லை? உண்மையில் இஸ்லாமியர்கள் வெறியர்களாக இருந்தால் அந்த பிணங்களையுமல்லவா தோண்டியிருக்க வேண்டும்?

பிரச்சனை பிணத்தை புதைத்ததில் இல்லை. மாறாக அது இஸ்லாமிய பெண்மணியின் உடல் என்று பொய்யான ஆதாரங்களை கொடுத்து அதை புதைத்ததில் தான் ஆரம்பிக்கிறது. அஹ்மதியாக்களை பொறுத்தவரை அவர்கள் இஸ்லாமியர்கள் இல்லை. குர்ஆணையும் நபிவழியையும் (ஹதீஸ்களையும்) நம்புவர்கள் தான் இஸ்லாமியர்கள். அந்த வகையில் அஹமதியாக்கள் இஸ்லாத்தை சாராத ஒரு புது மதத்தை சார்ந்தவர்களாகவே கருதப்படல் வேண்டும். அவர்கள் தங்களுக்கு சூட்டிக்கொண்ட பெயர்கள் இஸ்லாமிய பெயர்களாக இருப்பதால் எல்லாம் அவர்கள் இஸ்லாமியர்களாக முடியாது. அதைப்போல
இஸ்லாத்தின் சாயல் அவர்களிடம் மிகுதியாக காணப்படுவதால் அவர்கள் இஸ்லாமியர்கள் என்றும் எவ்வாறு முடிவு செய்ய இயலும்? சீக்கியர்களிடத்தில் இந்து மதத்தின் சாயல் மிகுதியாக காணப்படுகிறது. அதற்காக அவர்களை இந்துக்கள் என்றா முடிவு செய்கிறோம்? ஒரு வகையில் சீக்கியர்களிடத்தில் இருக்கின்ற தைரியம் இந்த அஹமதியாக்களிடத்தில் இல்லை என்றே சொல்லலாம். ஏனெனில் சீக்கியர்கள் தங்களை இந்துக்களின் சாயல் அதிகமாக இருப்பதால் இந்துக்கள் என்று அழைத்துக் கொள்ளவில்லை. புதுமதத்தினராகவே (சீக்கியர்களாகவே) அழைத்துக் கொண்டனர்.

பொய்யான ஆதாரத்தை காட்டி முஸ்லிம்களின் சுடுகாட்டில் உடலை புதைத்த அஹாமதியாக்களின் இந்த செயல் , இஸ்லாமிய சமூகத்தில் பொய்யை சொல்லி குழப்பத்தை ஏற்படுத்த நினைத்த சதியாகவே முஸ்லிம்கள் இதைப் பார்த்தனர். எத்தனையோ பிறமத உடல்களை புதைக்க இடம் கொடுத்த முஸ்லிம்கள் இந்த விடயத்தை பெரிதுபடுத்த காரணமும் இதுவே. அஹமதியாக்கள் இஸ்லாமியர்கள் அல்ல என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் பாபர் பள்ளிவாசலை உடைக்க சென்ற குழுவில் அவர்களும் இடம் பெற்றிருந்தனர் என்பதே.

புதைக்கப்பட்ட பிணத்தை தோண்டி எடுத்திருக்க வேண்டுமா என்றும் சிலர் கேட்கின்றனர். பிரச்சினைகள் இனி தொடராமல் தீர்க்கும் எனில், அதில் தவறொன்றும் இல்லை. தனி மதமான அவர்கள் தங்களுக்கு தனி மயானம் அமைத்துக் கொள்வதை எந்த ஒரு இஸ்லாமியனும் தடுக்க போவதில்லை. பின்னர் எதற்கு இஸ்லாமியர் என்று பொய்யான சான்றிதழ்கள் கொண்டு வந்து பிரச்சனையாக்க வேண்டும். காவல் துறை எத்துனையோ பிணங்களை எடுத்து சோதனை செய்கிறது. அது பிரச்சனையோடு தொடர்புடையதே தவிர , மனிதாபிமானத்தோடு முடிச்சுப் போடுகிற செய்தி அல்லவே.

சி.பி.ஐ. , சி.பி.எம். போன்ற கம்யூனிஸ்ட் கட்சிகளையும் அக்கட்சியை சார்ந்தவர்களையும் பார்த்து போலி கம்யூனிஸ்ட்கள் என்றும், அவர்கள் போலிகள் நாங்கள் தான் உண்மை கம்யூனிஸ்ட்கள் என்று கொக்கரித்து காட்டு கூச்சல் போடும் வினவு வகையறாக்கள் அதுவும் உளுத்துப் போன கம்யூனிச சித்தாந்தத்திற்காக இத்தகைய வகைப்படுத்துதலை (அசல்கள் , போலிகள் என்று ) நிலைநிறுத்த முயலும் போது இந்த உலகம் அழியும் நாள் வரை நிலைத்து நிற்கும் இஸ்லாத்தில் போலிகளை அடையாளப்படுத்தும் போது வினவு சினம் கொள்வது ஏனோ?

அவருக்கு பதிலளிக்கும் விதமாக நானும் ஒரு பின்னூட்டம் இட்டிருந்தேன்

நண்பர் ஷேக் தாவூத் அவர்களே,

அஹ்மதியாக்களுக்கும், உங்களுக்கும் யார் இறுதி நபி என்பதில்தான் பிரச்சனை, முக்காலமும் தெரிந்த, உள்ளும் புறமும் அறிந்த, மறைவானவற்றின் சாவியை கையில் வைத்திருக்கும் உங்கள் ஏக இறைவன் முகம்மது தான் இறு நபி என்று சொல்லாமல் போனதேனோ? குழப்பமான வசனங்களுக்கு நீங்கள் உங்கள் விருப்பப்படி பொருள் கூறுகிறீர்கள், அவர்கள் அவர்கள் விருப்பப்படி பொருள் கூறுகிறார்கள். இதில் போலி என்ன? அசல் என்ன?

உளுத்துப்போன கம்யூனிச சித்தாந்தம் என்று எப்படிச்சொல்கிறீர்கள்? ரஷ்யா நொருங்கிவிட்டதாலா? அப்படி என்றால் இன்று இஸ்லாத்தை முழுமையாக கடைப்பிடிக்கும் ஒரு நாட்டை காட்டமுடியுமா உங்களால்? அறுபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் அப்படி ஒன்று இல்லையென்றால், இஸ்லாம் புழுத்துப்போன ஒன்று என்று சொல்லலாமா?

சிபிஎம், சிபிஐ போன்றவற்றை போலிகள் என்று கூற அனேக காரணங்கள் உண்டு. இலக்கையே தொலைத்து நிற்பவர்கள் அவர்கள்; நீங்களோ ஒரே ஏகத்துவக் குட்டையில் நின்று கொண்டு கிழக்குக்கும் மேற்கிற்கும் அர்த்தம் தேடிக்கொண்டிருப்பவர்கள்.

அதற்கு நண்பர் ஷேக் தாவூத் கீழ்க்கண்டவாறு பதிலளித்திருந்தார்

அன்புள்ள செங்கொடி அவர்களே,

இஸ்லாத்தைப் பற்றி ஒரு விமர்சனம் வைக்கும்போது அந்த கருத்தைப் பற்றி இஸ்லாத்தின் மூல ஆதாரங்களான குர்ஆன் ஹதீஸில் என்ன சொல்லியிருக்கிறது என்பதைப் பற்றி (முழுக் குர்ஆணையும் வாசிக்க வேண்டும் என்று சொல்லவில்லை. விமர்சனத்தின் விடயத்தை பற்றிய செய்திகளைத் தான் அறிந்து கொள்ள சொல்கிறேன்.) அறியாமலே கருத்து சொல்லுவது என்பது கண் தெரியாதவன் சரியான வழி காட்டுகிறேன் என்று சொல்லி காட்டுப் பாதையில் மக்களை அழைத்துச் செல்வதற்கு ஒப்பானது. முக்காலமும் தெரிந்த, உள்ளும் புறமும் அறிந்த, மறைவானவற்றின் சாவியை கையில் வைத்திருக்கும் அகிலத்தின் ஏக இறைவன் மிகத்தெளிவாகவே முகம்மது நபி தான் இறுதி நபி என்று குர்ஆனில் சொல்லியிருக்கிறான். பகுத்தறிவோடு படித்துப் பார்த்தால் கண்டிப்பாக இந்த உண்மை விளங்கும். அத்தியாயம் 33 வசன என் 40 மிகத் தெளிவாகவே சொல்லுகிறது. ஹாத்தமுன் நபி என்று மிகத்தெளிவாகவே முஹம்மது நபியைப் பற்றி இந்த வசனம் சொல்லுகிறது. “ஹாத்தமுன்” என்ற வார்த்தைக்கு (sealed) அதாவது முத்திரை என்பது பொருளாகும். இங்கு சிலர் முத்திரை என்ற தமிழ் வார்த்தைக்கு இன்னொரு அர்த்தமும் உண்டு. அதாவது சிறப்பானவர் என்ற பொருளை முன்வைக்கின்றனர். ஆனால் மூலமொழி எந்த பொருளை தருகிறது என்று பார்ப்பதே அறிவுடமையாகும். ஹாத்தமுன் என்ற அரபி வார்த்தைக்கு “(sealed)” என்பதே சரியான அர்த்தமாகும்.

மேலும் இவ்வுலகில் இறைத்தூதராக தெரிவு செய்யப்படுபவருக்கு வேதங்களை கொடுக்காமல் இருந்ததில்லை என்னும் கருத்தை வலியுறுத்தும் வசனமும் குர்ஆனில் இருக்கிறது. அத்தியாயம் 35 வசன என் 25 ல் போய் தாராளமாக பார்த்துக்கொள்ளலாம். எனவே அஹமதியாக்கள் நபி என கூறும் மிர்சா குலாம் எந்த ஒரு வேதத்தையும் கொண்டு வரவில்லை. இந்த குர்ஆண் வசனங்களை வைத்தே அஹமதியாக்கள் போலிகள் என்பதை எவரும் விளங்கிக்கொள்ளலாம். அசலையும் போலியையும் கண்டுபிடிக்க குர்ஆன் மற்றும் ஹதீஸை தெளிவாக படித்தாலே போதுமானது.

விருப்பபடி குர்ஆனுக்கு பொருள் கூறுகிறீர்கள் என்ற ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கும் செங்கொடி அவர்களே, எந்த அடிப்படையில் இந்த குற்றச்சாட்டை வைக்கிறீர்கள்? உதாரணமாக ஒரு தமிழ் நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஒருவர் சுய விருப்பபடி பொருள் கூறுகிறார் என்ற குற்றச்சாட்டு வைக்க வேண்டுமானால் குற்றச்சாட்டு வைத்தவருக்கு கண்டிப்பாக தமிழும் ஆங்கிலமும் தெரிய வேண்டும். இரண்டு மொழியையும் தெரிந்த ஒருவர் தான் அத்தகைய குற்றச்சாட்டை வைக்க முடியும். ஏனெனில் மூலமொழியும் மொழிபெயர்க்கப்பட்ட மொழியும் தெரிந்தால் தான் அது சரியான விளக்கமா அல்லது இல்லையா என்பதை அறிந்து கொள்ள இயலும். அந்த அடிப்படையில் அரபி மொழி தெரிந்தால் மட்டுமே இத்தகைய குற்றசாட்டை நீங்கள் வைக்க இயலும்? அரபி மொழியில் எத்தகைய அறிவை நீங்கள் கொண்டிருக்கிறீர்கள் என்பதையும் கொஞ்சம் விளக்குங்களேன். அல்லது உங்களுக்கு அரபி மொழி தெரியவில்லை என்றால் எடுத்தேன் கவிழ்த்தேன் என்றே நீங்கள் கருத்து சொல்லியிருப்பதாகவே எடுத்துக் கொள்ள முடியும்.

உளுத்துப்போன கம்யூனிச சித்தாந்தம் என்று சொல்ல எனக்கு என்ன உரிமை இருக்கிறதோ அதே உரிமை எதிர்வினையாற்ற உங்களுக்கும் உரிமையிருக்கிறது. ஆனால் நாம் வைக்கும் குற்றச்சாட்டு வெறுமனே யூகங்களின் அடிப்படையில் இருக்க கூடாது. அது ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்காது. நான் உளுத்துப்போன சித்தாந்தம் என்று கம்யூனிசத்தை சொல்வதற்கான காரணத்தை எம்மால் ஒரே வரியில் சொல்லிவிட முடியும்.
“நடைமுறைப் படுத்தியதால் தோற்றுப்போன சித்தாந்தம் கம்யூனிசம்’. அதனால் தான் இன்று கம்யூனிசம் அதல பாதாளத்தில் போய்க்கொண்டிருக்கிறது. கம்யூனிசம் என்று சொல்லி உருவாகிய நாடுகளான ருஷ்யாவின் , சீனா மியான்மரின் இன்றைய நிலை என்ன? உருவாகிய காலத்திலேயே மனித உரிமைகளை காலில் போட்டு மிதித்து தானே அது உருவாகியது. தனிமனிதனின் உணர்வுகளுக்கு எத்தகைய முக்கியத்துவமும் கொடுக்காத இந்த சித்தாந்தம் எப்படி மக்களின் வாழ்வில் மலர்ச்சியை ஏற்படுத்தும்? அதனால் தான் மீண்டும் சொல்கிறேன் கம்யூனிசம் உளுத்துப்போன சித்தாந்தம் என்று. ஆனால் இஸ்லாத்தின் கொள்கைகளை பொறுத்தவரை அது நடைமுறைப் படுத்திய காலங்கள் வரலாற்றின் பொற்காலமாகவே எல்லோருக்கும் இருந்தது. நபிகள் நாயகம் இஸ்லாமிய பேரரசின் ஆட்சியாளராக இருந்தபோது இஸ்லாத்தின் மிகப் பெரிய எதிரிகளாக இருந்த யூதர்கள் பாதுகாப்புடனேயே வாழ்ந்தார்கள். அப்படி அவர்கள் வாழ்ந்ததற்கு ஒரு மிகச் சிறந்த உதாரணம் நபிகள் நாயகத்தின் பாதுகாப்புக் கவசம் கூட ஒரு யூதரிடம் தான் அடமானம் வைக்கபட்டிருந்தது. அதேபோல நபிகளாரின் காலத்திற்குப் பிறகு அவரின் தோழர் உமருடைய ஆட்சிக்காலத்தில் பறந்து விரிந்த இஸ்லாமிய சாம்ராஜ்யத்தில் யூதர்களும் கிறித்தவர்களும் மிகவும் பாதுகாப்புடனும் கண்ணியமாகவும் வாழ்ந்தனர் என்பதை வரலாற்றை படித்தாலே விளங்கும். அதனால் தான் காந்தி அவர்களும் உமருடைய ஆட்சி போலவே இந்தியாவில் ஆட்சி மலர வேண்டும் என்று ஆசைப்பட்டார். இன்று இஸ்லாத்தின் பெரும்பான்மையான கொள்கைகளை அமுல்படுத்தும் சவூதி அரேபியா மற்ற நாடுகளை விட மிகவும் தரமாக தானே இருக்கிறது. அது முழுமையாக இஸ்லாமிய கொள்கைகளை அமுல்படுத்தினால் இன்னும் சிறப்பாகவே முன்னேறும். இஸ்லாமிய நாடு என்று வெறுமையாக பெயர் சூட்டிக் கொண்டு கொள்கைகளை அமுல்படுத்தாத நாடுகளான பாகிஸ்தான் , ஆப்கானிஸ்தான், இராக் போன்ற நாடுகள் சீரழிவதற்கு காரணம் இஸ்லாத்தை சரியாக கடைபிடிக்காததே. இஸ்லாமிய கொள்கைகளை கடைபிடிக்காததால் தோற்றுப்போன நாடுகளை வேண்டுமானால் பட்டியலிடலாமே தவிர நடைமுறைப்படுத்தியதால் தோற்றுப்போன ஒரு நாட்டையும் உங்களால் காட்ட இயலாது.

சி.பி.ஐ., சி.பி.எம் போன்ற கட்சியை சார்ந்தவர்களால் போலி கம்யூனிஸ்டுகள் என்று அழைக்கப்படும் உங்களுக்கும் (ம.க.இ.க., மாவோயிஸ்டு போன்ற இயக்கங்கள் ) , உங்களால் போலி கம்யூனிஸ்டுகள் என்று அழைக்கப்படும் சி.பி.ஐ., சி.பி.எம் போன்ற கட்சிகளுக்கும் இடையே அசல் போலியை எவ்வாறு நாங்கள் கண்டுபிடிக்க இயலும் என்பதை எங்களுக்கு கொஞ்சம் விளக்கினால் நன்றாக இருக்கும் செங்கொடி அவர்களே. இதற்கு காரல் மார்க்ஸ் , லெனின், ஸ்டாலின் , மா. சே போன்றவர்கள் ஏதாவது விளக்கம் அளித்திருக்கிறார்களா? இலக்கு இலக்கு என்று சொல்கிறீர்களே அந்த இலக்கு தான் என்ன?

சகோதரத்துவத்துடன,
பி.ஏ. ஷேக் தாவூத்.

அவருக்கு முழுமையான பதிலை அளிக்கவேண்டும் எனக்கருதி எழுதத்தொடங்கினேன், அது மிக நீண்ட பின்னூட்டமாய் வந்துவிட்டது. எனவே அதை ஒரு பதிவாக செங்கொடி தளத்தில் இடுகிறேன்.

அஹ்மதியாக்கள் முஸ்லீம்களல்ல அவர்களை தனி மதமாகவே கருதவேண்டும் என்பது முஸ்லீம்களின் நிலைப்பாடு. ஆனால் அவர்கள் தனி மதத்தவர்களல்ல. முஸ்லீம்களில் அவர்களும் ஒரு கிளைதான்.

அஹ்மதியாக்கள் தங்கள் ஹஜ் கடமையை நிறைவேற்ற ஆண்டுதோறும் மக்காவுக்கு செல்கின்றனர். சௌதி அரசும் அதை அனுமதிக்கிறது. குரான் 9:28 ஆம் வசனம் இப்படிக்கூறுகிறது, “இவ்வாண்டுக்குப்பிறகு முஸ்லீம்களை தவிர வேறு யாரையும் மக்காவுக்குள் அனுமதிக்கக்கூடாது.” மக்காவில் மாற்றூ மதத்தவர்கள் நுழைந்துவிடக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருக்கும் சௌதி அரசு (இந்திரா காந்தி கூட ஒருமுறை மக்கா செல்ல விரும்பிய போது அப்போதைய சௌதி அரசு அதை அனுமதிக்கவில்லை) அ-மதியாக்களை ஆண்டுதோறும் அனுமதித்துக்கொண்டுதான் உள்ளது. அஹ்மதியாக்கள் தனிமதம் என்பவர்கள், தங்கள் அல்லாஹ்வின் ஆணை சௌதி அரசால் செயல்படுத்தப்படவில்லை என்பதை ஏற்கிறார்களா?

‘ஹாத்தமுன்நபி’ முத்திரை நபி என்பதற்கு இறுதி நபி என்றும் பொருள் கொள்ளலாம் என நண்பர் தெரிவித்திருக்கிறார். ஆனால் அவரின் வாதத்திற்கு எதிராக ஹதீஸ்கள் இருக்கின்றன என்பது அவர் கவனத்திற்கு வரவில்லை போலும். புஹாரி பாகம்1 அத்தியாயம் 4 எண் 190 நபியின் முத்திரை( ஹாத்தம்) என்பது சிறப்புத்தகுதியோ, இறுதி நபி என்ற விளக்கமோ அல்ல அது உடலிலுள்ள ஒரு மரு அல்லது மச்சம் போன்ற ஒன்று என்று சொல்கிறது. இதே ஹதீஸ் ‘முஸ்லீமிலும்’ பதிவு ச்ய்யப்பட்டுள்ளது(எண்: 5793). புஹாரியிலும் முஸ்லீமிலும் பதியப்பட்டுள்ளதால் அதிகாரபூர்வமற்றது என அந்த ஹதீஸ்களை தள்ளிவிட முடியாது.

எல்லா நபிக்கும் வேதம் உண்டா? குரான் வேதம் எனக்குறிப்பிடுவது நான்கை மட்டுமே, அதிலும் மூசாவுக்கு கொடுத்தது மட்டுமே ஏட்டு வடிவில் குரானும் ஏனையவையும்(?) ஒலிவடிவில். இந்த நான்கைத்தவிர ஏனைய தூதர்களுக்கு வழங்கப்பட்ட வேதம் பற்றி குரான் ஒன்றும் சொல்லவில்லை. இபுறாஹீம், அய்யூப், சுலைமான் என அனேக நபிகலைப்பற்றி குறிப்பிடும் குரான், அவர்களுக்கான வேதம் பற்றி எதையும் குறிப்பிடவில்லை. ஒரே நேரத்தில் வந்த நபிகளுக்கும் வேதம் வழங்கப்படவில்லை. மூசாவுக்கு தவ்ராத் வேதம், ஹாரூனுக்கு எது வேதம்? மூசாவும் கூட குறிப்பிட்ட கால அதாவது ஃபிர் அவ்னை வெல்லும் வரை வேதம் இல்லாமலேயே செயல்பட்டார். ஒரே ஊரில் மூன்று நபிகள் இருந்துள்ளனர், அவர்களுக்கு தனித்தனியாய் வேதம் வந்ததா? “எந்த ஒரு தூதரையும் அவர் விளக்கிக்கூறுவதற்காக அந்த சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம். குரான் 14:4” என்று பொதுவாக கூறினாலும், குரானில் அனேக இடங்களில் வேதம் வழங்கப்பட்டோர் என்று சிலரைத்தான் குறிப்பிடுகிறது. வேதம் வழங்கப்பட்டோர் எனும் குரானின் அழைப்பிற்கு உலகிலுள்ள அனைத்து சமுதாயத்தினரும் என்றா பொருள்?

அதாவது எல்லாம் அறிந்த உங்கள் இறைவன் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட வசனங்களுக்கு மத்தியில் “முகம்மது தான் இறுதி நபி அவரைத்தவிர வேறு யாரும் இல்லை அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்” என அறுதியிட்டு ஒரு வசனத்தை கூறியிருந்தால், அஹ்மதியாக்களோ இலை அவரைப்போன்றவர்களோ தோன்றுவதற்கான அடிப்படையே இல்லாமல் போயிருக்குமல்லவா? அதை மறந்ததேன்? என்பதே கேள்வி. ‘ஹாத்தமுன் நபி’ என்பதை உங்களுக்கு சாதகமாக நீங்கள் பொருள் கொண்டீர்கள். அறுதியிட்டு கூறப்படாததை அவர்கள் அவர்களுக்கு சாதகமாக எடுத்துக் கொண்டார்கள் அவ்வளவுதான். இதில் நாங்கள் அசல் அவர்கள் போலி என்று கூறுவதற்கு அடிப்படையே இல்லை.

விருப்பத்திற்கேற்றவாறு பொருள் கூறுகிறீர்கள் என்று சொல்வதற்கு, அரபு மொழி இலக்கணத்தில் ஆய்வு முனைவர் பட்டம் பெற்றிருக்கவேண்டும் என்பது ஒன்றும் அவசியமில்லை. உதாரணத்திற்கு ஒன்று, “அவர்களின் இதயத்தில் முத்திரையிடப்பட்டுள்ளது, அவர்களின் இதயம் திகிலால் சூழப்பட்டுள்ளது” என்பது போன்ற வசனங்கள் குரானில் சில இடங்களில் மனம் எனும் பொருளில் வருகிறது.முன்னர் உள்ள மொழிபெயர்ப்பில் இதயம் என்றே அதை மொழிபெயர்த்திருந்தார்கள். ஆனால் தற்போது இதயத்திற்கும் மனதிற்கும் தொடர்பில்லை, இதயம் என்பது இரத்தத்தை உடலின் எல்லா இடத்திற்கும் அனுப்புகிற ஒரு உறுப்பு என்பது தெளிவானதும், உள்ளம் என்று மொழிபெயர்க்கிறார்கள். குறிப்பிட்ட அந்த வசனங்களில் அரபு மொழியில் இதயம் என்று இருக்கிறதா? உள்ளம் என்று இருக்கிறதா? உள்ளம் என்று இருந்திருந்தால் இதயம் என்று பெயர்க்கவேண்டிய அவசியம் என்ன? இதயம் என்று இருந்தால் இப்போது உள்ளம் என்று எழுதுவது ஏன்? உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப அறிவியல் வளர்ச்சியை ஒப்பி நீங்கள் செய்யும் மொழிபெயர்ப்பை எடுத்துக்காட்டுவதற்கு அரபு மொழிப்புலமையை கேட்பதேன்

கம்யூனிசம் நடைமுறைபடுத்தப்பட்டு தோற்றது, இஸ்லாம் நடைமுறைபடுத்தப்படாமல் தோற்றது என நீங்கள் எழுதியிருந்த வாய்ப்பாடு உங்கள் அறியாமையை தான் காட்டுகிறது. இஸ்லாமிய உலகத்திற்கு வெளியே உங்கள் அறிவுத்தேடலை நீங்கள் கொண்டிருந்தீர்கள் என்றால் இப்படிக்கூறும் நிலை உங்களுக்கு ஏற்பட்டிருக்காது. சோசலிசம் கம்யூனிசம் இவற்றுக்கிடையே வேறுபாடு உண்டு. இவைபற்றி புரிந்து கொள்ள கம்யூனிசம் பறியும் கொஞ்சம் படியுங்கள். உலகில் எந்த நாட்டிலும் இதுவரை கம்யூனிசம் செயல்படுத்தப்படவில்லை. தனியொரு நாட்டில் கம்யூனிசத்தை செயல்படுத்தவும் முடியாது. முதலாளிதுவத்தை தரைத்தலமாக கொண்டால் கம்யூனிசம் மேல்தளம், மேல்தளத்திற்கு செல்ல பயன்படும் படிக்கட்டுகள் தான் சோசலிசம். ஓரிரு படிக்கட்டுகளை கடக்கும்போதே குரல்வளை நெறிக்கப்பட்டது என்பது தான் ரஷ்யா, சீனாவின் நிகழ்வுகள். சூழ இருந்த முதலாளித்துவ நாடுகள், உள்ளிருந்த முதலாளித்துவ சக்திகள் ஆகியவற்றின் சதியால் சில பத்தாண்டுகளில் பின்னடைவுக்கு உள்ளாகிய சோசலிசத்தால் அளப்பரிய சாதனைகள் நிகழ்த்திக்காட்டப்பட்டுள்ளன. அத்தியாவசியப்பொருட்கள் அனைத்தும் விலை உயர்வையே சந்திக்காத நிகழ்வை அண்மைக்கால உலக வரலாற்றில் நீங்கள் செவியுற்றதுண்டா? சோசலிசம் நிலவில் இருந்த சில பத்தாண்டுகளில் அது நடைமுறைப்படுத்திக்காட்ட‌ப்பட்டது. விவசாய கூட்டுப்பன்ணைகளை ஏற்படுத்தி குடிமக்கள் அனைவருக்கும் வேலை வழங்கப்பட்டு, அறிவியலை மக்களுக்கான உற்பத்தி நோக்கி திருப்பிவிட்டு, உற்பத்தி பெருக்கப்பட்டு தன்னிறைவை அடைந்தது. புறக்கணிக்கப்பட்ட சைபீரியா போன்ற தூரப்பிரதேசங்களுக்கும் அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டன. ஜார் மன்னர்கள் கால ரஷ்ய உற்பத்திக்கும் சோவியத் ரஷ்யாவின் உற்பத்திக்கும் இடையில் உள்ள தலைகீழ் வித்தியாசத்தை வரலாற்றின் பக்கங்களிலிருந்து தெரிந்துகொள்ளுங்கள். எழுத்துறுவில்லாத அனைத்து மொழிகளுக்கும் எழுத்துறு ஏற்படுத்தப்பட்டது. பிரிந்து போக விருப்பப்பட்ட ஒரு இன மக்களை அனுமதித்து அந்நாட்டிற்கு அங்கீகாரமும் வழங்கியது சோசலிசத்தை தவிர உலகின் வேறெந்தக்கொள்கையாலும் சாத்தியப்படாத ஒன்று. இவை சோசலிசத்தை நடைமுறைப்படுத்தியதன் பலன்களில் சில. பின்னர் சோவியத்திலிருந்து சோசலிசம் நீக்கப்பட்டது. இன்றோ அது ஒரு அப்பட்டமான சமூக ஏகாதிபத்திய நாடு.

ஆனால் இஸ்லாமிய சௌதியின் வரலாறு இப்படிப்பட்டதல்ல. இஸ்லாம் தோன்றிய காலத்திலிருந்து இன்றுவரை இஸ்லாமியக்கொள்கையே அதன் ஆட்சி அதிகாரத்தில் இருந்துவருகிறது. அடிமை முறையை சட்டவிரோதமாக்கியது நிர்ப்பந்தத்தாலோ, புறக்காரணிகளாலோ அல்ல. இனிமேலும் அடிமை குறித்த இஸ்லாமிய சட்டத்தை நடைமுறையில் வைத்திருக்க முடியாது என்பதால். 1980களில்  ஜித்தாவில் இஸ்லாமிய அறிவியல் மாநாடு கூட்டி, அறிவியலாலர்கள் விஞ்ஞானிகளை விலைக்கு வாங்கி இஸ்லாத்தின் (குரானின்) அறிவியல் கூற்றுகளை நவீன அறிவியல் நிரூபிப்பதாக புழுகுமூட்டை அறிக்கைகள் வாங்கி, அதையே ஆதாரங்களாக இன்றுவரை பயன்படுத்திவருவது இஸ்லாமுக்கு நவீன அறிவியல் குறித்த போதாமையால். ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்லாமிய சட்டமே அதிகாரத்தில் இருந்தும் ஜாதி மனப்பான்மையை ஒழிக்க முடியாதது (ஒரு ஷம்மரி வீட்டுப்பெண்ணையோ அல்லது கஹ்தானி வீட்டுப்பெண்ணையோ ஒரு அஹ்மரி வீட்டுப்பையனோ அல்லது காம்தி வீட்டுப்பையனோ மணந்துவிட முடியுமா?) இஸ்லாமிய சட்டங்களின் இயலாமையால். அட்டைப்பூக்களை முகர்ந்துவிட்டு வசந்தராகம் பாடவேண்டாம் நண்பரே

கம்யூனிசம் மனித உரிமைகளை காலில் போட்டு மிதித்ததா? இது போன்ற கூப்பாடுகள் நாஜி காலத்தில் தொடங்கி இன்றுவரை கம்யூனிசத்திற்கும் சோசலிசத்திற்கும் எதிராக பேசப்பட்டு வருகின்றன. இப்படி வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் பிரிட்டனின் ரகசிய உளவாளி கான்குவஸ்ட், அமெரிக்க பத்திரிக்கையாளர் வில்லியம் ஹெர்ஸ்ட், ரஷ்ய எழுத்தாளர் சோல்ஜெனித்சின் ஆகிய மூவர் தான். அனைத்து ஊடகங்களையும் கையில் வைத்திருந்த மேற்க்கத்திய முதலாளித்துவ நாடுகள், ராணுவ நடவடிக்கைகலால் சோவியத்தை வீழ்த்தமுடியாது என்று தெரிந்து செய்தி ஊடகங்கள் மூலம் தொடர்ந்து கட்டுக்கதைகளை புனைந்து பரப்பின. சோவியத்தின் மறுப்புகள் புறக்கணிக்கப்பட்டன. பின்னர் கனடா நாட்டு பத்திரிக்கையாளர் டக்ளஸ் டோட்டிலும் ‘தி நேசன்’ என்ற அமெரிக்க பத்திரிக்கையின் நிரூபர் லூதிஸ் பிஷ‌ரும் இவை அனைத்தும் கட்டுக்கதைகள் என நிரூபித்தனர். இந்த கட்டுக்கதைகளுக்கு புகைப்பட ஆதாரங்கள் வழங்கிய தாமஸ் வாக்கர் என்ற ராபர்ட் கிரீன் அமெரிக்க நீதிமன்றத்திலேயே தான் மாஸ்கோவில் ஐந்து நாட்கள் மட்டுமே தங்கியிருந்ததாகவும், உக்ரைனுக்கு செல்லவே இல்லை என்றும் குட்டை உடைத்தான். ஜார்ஜ் ஆர்வெல், ஸ்டீபன் ஸ்பென்டர், ஆர்தர் கீஸ்லர் போன்ற எழுத்தாளர்களுக்கு பணம் கொடுத்து எழுதச்செய்ததாக பிரிட்டன் உளவுத்துறையே பின்னர் ஒப்புக்கொண்டது. எல்லாவற்றிற்கும் மேலாக சோவியத்தின் ஆவனக்காப்பகத்தில் இதற்கான ஆதாரங்கள் இருக்கிறது எனப் புழுகியவர்கள், கோர்பசேவ் ரகசிய ஆவண காப்பகத்தை ஆய்வுக்கு திறந்து விட்டதும் எல்லாவற்றையும் பொத்திக்கொண்டு அமைதியாகிவிட்டார்கள். ஆனால் அவர்கள் எழுதியதை படித்தவர்கள், படித்தவர்களை படித்தவர்கள், படித்தவர்களை படித்தவர்கள் மட்டும் இன்னும் கூப்பாடு போட்டுக்கொண்டிருக்கிறார்கள். பல்லி செத்த பின்பும் அறுந்து போன வால் துடித்துக்கொண்டிருப்பதைப்போல.

சரி. நண்பர் கூறும் இஸ்லாமிய பொற்காலத்தின் மனித உரிமைகளை கொஞ்சம் எட்டிப்பர்ர்க்கலாமா?

1) மெக்காவில் முகம்மதின் பக்கத்து வீட்டுக்காரன் உக்பத் இப்னு அபுமுஐத். முகம்மதின் ஏகத்துவப்பிரச்சாரத்திற்கு எதிராக செயல்பட்டவன். ஒரு முறை முகம்மது தொழுது கொண்டிருக்கும்போது ஒட்டகக்குடலால் முகம்மதின் கழுத்தில் மாலை போட்டுவிடுகிறான். பின்னர் பத்ரு போரின் போது தோற்றுப்போய் சிறைபிடிக்கப்படுகிறான். முகம்மது இவனைக்கண்டதும் கொல்ல உத்தரவிடுகிறார். “முகம்மதே நான் பெண்மக்களின் தந்தை, என்னைக்கொன்றுவிட்டால் அவர்களுக்குத்துணை யாருமில்லை” என்று கெஞ்சுகிறான். ஆனாலும் அவன் தலை துண்டிக்கப்படுகிறது.

2) நூறு வயதிற்கும் மேற்பட்ட முதியவர் அபு அஃபக் மதீனாவில் முகம்மதின் பிரச்சாரத்தை எதிர்த்து எதிர்பிரச்சாரம் செய்கிறார். முகம்மது கோபப்பட்டு உத்தரவிட சலீம் உமர் என்பவன் அபு அஃபக்கை தூங்கிக்கொண்டிருக்கும்போது கத்தியால் குத்திக்கொல்கிறான். இந்தச்சம்பவத்தைக்கண்டித்து கவிதை எழுதிய அஸ்மா பி மார்வான் என்ற பெண் கவிஞ‌ரும் ப‌டுகொலை செய்யப்ப‌டுகிறார்.

3) மதீனாவில் மக்காவினருக்கு எதிராக நடந்த அகழிப்போரில் மக்காவினருக்கு ஆதரவாக நடந்து கொண்டார்கள் எனக் குற்றம்சாட்டப்பட்டு மதீனாவின் குரைஜா என்ற யூதக்குழுவினருக்கு முகம்மது மரண தண்டனை வழங்குகிறார். அறுநூறு ஆண்களின் தலை துண்டிக்கப்படுகிறது, அவர்களின் குடும்பத்தார்களான பெண்களும் குழந்தைகளும் அடிமைகளாக்கப்படுகின்றனர். இவைகளெல்லாம் பானை சோற்றுக்கு பருக்கை பதங்கள்.

கடைசியாக, அரசு என்பது சர்வாதிகார வடிவமே. ஆளும் வர்க்கத்திற்கு ஜனநாயகமாகவும், எதிர்வர்க்கத்திற்கு சர்வாதிகாரமுமாக இருப்பதே அரசின் இயல்பு. இன்றைய நிலையில் அரசு என்பது முதலாளித்துவத்திற்கு ஜனநாயகமாகவும், பாட்டாளிவர்க்கத்திற்கு சர்வாதிகாரமாகவும் செயல்பட்டுவருகிறது. சிறுபான்மையினரான முதலாளிகளுக்கு சாதகமாகவும், பெரும்பான்மை உழக்கும் மக்களுக்கு எதிராகவும் இருக்கும் அரசு வடிவத்தை மக்கள் புரட்சியின் மூலம் கைப்பற்றி பாட்டாளிவர்க்கத்தின் அரசை அதாவது உழைக்கும் வர்க்கத்திற்கு ஆதரவான சுரண்டும் வர்க்கத்திற்கு எதிரான அரசை அமைப்பது தான் கம்யூனிஸ்டுகளின் முதல் இலக்கு. இதையே நான் இலக்கு எனக்குறிப்பிட்டிருந்தேன். ஆனால் போலிகளோ இந்த முதலாளித்துவ அரசிலேயே அங்கம் வகிப்பதற்கு தெர்தல் பாதையிலேயே புரட்சி(!) நடை போட்டுக்கொண்டிருப்பதாலேயே அவர்கள் போலிகள். புரட்சிகர இடதுசாரிக்குழுக்களை நாங்கள் போலிகள் என அழைப்பதில்லை. ஆகவே சிபிஐ, சிபிஎம் போன்றவற்றை போலிகள் என நாங்கள் அழைப்பதற்கும், பிணத்தை தோண்டி எடுத்தது பிரச்சனையானவுடன் அஹ்மதியாக்களை போலிகள் என நீங்கள் குறிப்பிடுவதற்கும் மிகுந்த வேறுபாடுண்டு.

எனவே, நண்பர் ஷேக் தாவூத் அவர்களுக்கும், பொதுவாக இஸ்லாமியர்களுக்கும், குரானையும் ஹதீஸையும் மட்டுமே படிப்போம், வேறெதுவும் எங்களுக்கு தேவையில்லை என்று பக்கப்பட்டையால் மறைக்கப்பட்ட குதிரையைப் போலில்லாமல் கம்யூனிசத்தையும் உலக வரலாற்றையும் படிக்க வருமாறு வேண்டுகிறேன்.

8 thoughts on “அஹ்மதியாக்களின் பிணமும் அசல் முஸ்லீம்களின் ஊர்வலமும்

 1. ariumikka nanbare,
  neengal sollum kutrachattukalai nirubika mdiuma? appadi kandarintha unmaihalai engalukum ariathandhal nan adutha kaname en maarkathai vittu ungal pinne varathayaar. ennudaia mobile no: 00971559010660 neengal neerubithal nan mattumalla ennal en akkam pakkam en oor makkal en distric makkal varai ungal pinne alaithuvara ennal mudium, neengal kandarinthathai nangalum kana avaludan ullom. nandri vaalthukkal. sulthan

 2. அன்புமிக்க நண்பர் சுல்தான் அவர்களுக்கு,

  நீங்கள் எதை நிரூபிக்கவேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள் என்பதுபுரியவில்லை. முகம்மது ஆத்சிக்காலத்தில் நிகழ்ந்த படுகொலைகளைத்தான் கூறுகிறீர்கள் என நினைக்கிறேன்.

  ௧) உகப‌த் இப்னு சம்ப‌வ‌த்திற்கு விடிய‌ல் இத‌ழ் ந‌வ‌ம்ப‌ர் 2007 ஐ பாருங்க‌ள்.

  ௨) அபு அஃப‌க் ச‌ம்ப‌வ‌த்திற்கு இபின் இஷாக் அவ‌ர்க‌ளின் சீராத் ர‌சூலுல்லாஹ் வும்
  அலி ர‌ஸ்தியின் 23 வ‌ருட‌ங்க‌ள் ஐயும் பாருங்க‌ள்

  ௩)அகழிப்போர் யூத‌ர்க‌ளின் ச‌ம்ப‌வ‌த்திற்கு குரான் 33:26 லேயே ஒப்புத‌ல் இருக்கிற‌து.

  தொட‌ர்ந்து உங்க‌ள் ஐய‌ங்க‌ளை தெரிவிக்க‌லாம்.

  தோழ‌மையுட‌ன்
  செங்கொடி

 3. //பிரச்சனை பிணத்தை புதைத்ததில் இல்லை. மாறாக அது இஸ்லாமிய பெண்மணியின் உடல் என்று பொய்யான ஆதாரங்களை கொடுத்து அதை புதைத்ததில் தான் ஆரம்பிக்கிறது. //

  Shame on these religious fanatics

 4. 1,2,3 ….வரிகலில் வரும் வரலாறை ஆதாரதுடன் தரவும்

 5. நன்பர் செங்கொடி அவர்களுக்கு,
  ///அஹ்மதியாக்கள் முஸ்லீம்களல்ல அவர்களை தனி மதமாகவே கருதவேண்டும் என்பது முஸ்லீம்களின் நிலைப்பாடு. ஆனால் அவர்கள் தனி மதத்தவர்களல்ல. முஸ்லீம்களில் அவர்களும் ஒரு கிளைதான்//
  கிடையாது எப்போது தங்களுக்கென்று தனி நபியை ஏற்படுத்தி கொண்டார்களோ அப்போதே அவர்களுடைய மார்க்கம் வேறு முஹம்மது நபியை இறுதி தூதராக கொண்டவர்களின் மார்க்கம் வேறு ///அஹ்மதியாக்கள் தங்கள் ஹஜ் கடமையை நிறைவேற்ற ஆண்டுதோறும் மக்காவுக்கு செல்கின்றனர். சௌதி அரசும் அதை அனுமதிக்கிறது. குரான் 9:28 ஆம் வசனம் இப்படிக்கூறுகிறது, “இவ்வாண்டுக்குப்பிறகு முஸ்லீம்களை தவிர வேறு யாரையும் மக்காவுக்குள் அனுமதிக்கக்கூடாது.” மக்காவில் மாற்றூ மதத்தவர்கள் நுழைந்துவிடக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருக்கும் சௌதி அரசு (இந்திரா காந்தி கூட ஒருமுறை மக்கா செல்ல விரும்பிய போது அப்போதைய சௌதி அரசு அதை அனுமதிக்கவில்லை) அ-மதியாக்களை ஆண்டுதோறும் அனுமதித்துக்கொண்டுதான் உள்ளது. அஹ்மதியாக்கள் தனிமதம் என்பவர்கள், தங்கள் அல்லாஹ்வின் ஆணை சௌதி அரசால் செயல்படுத்தப்படவில்லை என்பதை ஏற்கிறார்களா?/// எந்த அஹமதியாரும் தன்னை அஹமதியார்(காதியானி) என்று அடையாளப்படுத்திக்கொண்டு விசாவுக்கு விண்ணப்பிப்பது இல்லை அப்படி அடையாளப்படுத்தி விண்ணப்பித்தால் மறுக்கப்படலாம் /////ஹாத்தமுன்நபி’ முத்திரை நபி என்பதற்கு இறுதி நபி என்றும் பொருள் கொள்ளலாம் என நண்பர் தெரிவித்திருக்கிறார். ஆனால் அவரின் வாதத்திற்கு எதிராக ஹதீஸ்கள் இருக்கின்றன என்பது அவர் கவனத்திற்கு வரவில்லை போலும். புஹாரி பாகம்1 அத்தியாயம் 4 எண் 190 நபியின் முத்திரை( ஹாத்தம்) என்பது சிறப்புத்தகுதியோ, இறுதி நபி என்ற விளக்கமோ அல்ல அது உடலிலுள்ள ஒரு மரு அல்லது மச்சம் போன்ற ஒன்று என்று சொல்கிறது. இதே ஹதீஸ் ‘முஸ்லீமிலும்’ பதிவு ச்ய்யப்பட்டுள்ளது(எண்: 5793). புஹாரியிலும் முஸ்லீமிலும் பதியப்பட்டுள்ளதால் அதிகாரபூர்வமற்றது என அந்த ஹதீஸ்களை தள்ளிவிட முடியாது.///
  இந்த ஒரு ஹதீஸ் மட்டும்தான் இறுதி நபி என்பதற்கு ஆதாரம் என்று நினைக்கீறீர்கள் இன்னும் நிறைய ஹதீஸ்கள் இருக்கின்றன
  உதராணத்திற்கு முஹம்மது நபி(ஸல்) கூறினார்கள் நபிமார்கள் வருகை என்பது முழுமையாக கட்டி முடிக்கப்பட்டு ஒரே ஒரு செங்கல் கல் வைத்தால் முழுமையாகிவிடும் என்ற நிலையில் உள்ள கட்டிடத்துக்கு ஒப்பானது அந்த இறுதி செங்கல் கல் நான் தான் என்னோடு நபிமார்கள் வருகை என்பது முற்று பொற்று விட்டது என்றார்கள் இது போண்ற ஹதீஸ்களையும் வாசியுங்கள் உண்மை புரியும் ///எல்லா நபிக்கும் வேதம் உண்டா?//ஆம் உண்டு(அல்லாஹ்வையும், எங்களுக்கு அருளப்பட்டதையும், இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக்,யஃகூப், மற்றும் (அவரது) வழித்தோன்றல்களுக்கு அருளப்பட்டதையும் மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் வழங்கப்பட்டதையும், ஏனைய நபிமார்களுக்கு தமது இறைவனிடமிருந்து வழங்ப்பட்டதையும் நம்பினோம் அவர்களுக்கிடையே பாகுபாடு காட்ட மாட்டோம், அத்:2, வச:136) என்ற வசனத்தை பார்க்கவும் குரான் ///வேதம் எனக்குறிப்பிடுவது நான்கை மட்டுமே,/// எப்படி பல லட்சம் நபிமார்களை பூமிக்கி அனுப்பி வேறும் 25 நபிமார்கள் பெயர்கள் மட்டும் குர்ஆனிள் குறிப்பிடப்பட்டுள்ளதோ அது போன்று தான் பல வேதங்களை வழங்கிய இறைவன் நான்கு வேதங்களின் பெயரை மட்டும் குர்ஆனில் குறிப்பிட்டுள்ளான் ///ஒலிவடிவில். இந்த நான்கைத்தவிர ஏனைய தூதர்களுக்கு வழங்கப்பட்ட வேதம் பற்றி குரான் ஒன்றும் சொல்லவில்லை//. சொல்லி இருக்கிறது பார்க்கவும் 2:136-3:184-57:25.26-19:12-35:25-87:18.19-3:81-2:213 இந்த என்களில் பல வேதங்கள் வழங்கப்பட்டதாக இறைவன் கூறுகிறான் ///வேதம் வழங்கப்பட்டோர் எனும் குரானின் அழைப்பிற்கு உலகிலுள்ள அனைத்து சமுதாயத்தினரும் என்றா பொருள்?/// ஆம்
  மிகவும் நீளமாகி விட்டது மற்ற கேள்விகளுக்கும் பதில் கண்டிப்பாக தருகிறோன் இந்த முழு பதிவுக்கும் கண்டிப்பாக பதில் தருகிறோன் நாளை

 6. ////எந்த அஹமதியாரும் தன்னை அஹமதியார்(காதியானி) என்று அடையாளப்படுத்திக்கொண்டு விசாவுக்கு விண்ணப்பிப்பது இல்லை அப்படி அடையாளப்படுத்தி விண்ணப்பித்தால் மறுக்கப்படலாம்///

  அவ்வாறாயின் ஒரு இந்து அல்லது கிறித்து அல்லது ஒரு யூதன் தன்னை முஸ்லீம் என்று விண்ணப்பித்தால் மக்காவிற்குள் செல்லலாம்தானே.

  ///சொல்லி இருக்கிறது பார்க்கவும் 2:136-3:184-57:25.26-19:12-35:25-87:18.19-3:81-2:213 இந்த என்களில் பல வேதங்கள் வழங்கப்பட்டதாக இறைவன் கூறுகிறான்///

  வேதங்களின் பெயர்கள் சொல்லப்படவில்லையே. அவர் வாழ்ந்த பகுதியில் இருந்த மதங்களின் பெயர்களை மட்டும் கூறியிருக்கிறார். இதிலென்ன பிரமாதாம் இருக்கிறது. இதிலிருந்தே தெரிகிறதே குரான் முஹம்மதின் சொந்த புருடா என்று.

 7. ///இதிலிருந்தே தெரிகிறதே குரான் முஹம்மதின் சொந்த புருடா என்று///
  அனைத்தும் சொந்த புருடா என்றும் சொல்லிட முடியாது. மற்ற வேதநூல்களின் சரக்கையும் சேர்த்து சொந்தமாக புருடாவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும்.

 8. நண்பர் ஹைதர் அலி,

  அஹ்மதியாக்கள் முஸ்லீம்களிடமிருந்து என்னென்ன விதங்களில் வேறுபடுகின்றனர்? கடைசி நபி யார் என்பதில்தான் வேறுபாடு. ஏனைய அனைத்து விவகாரங்களிலும் இருவரின் நிலைபாடும் ஒன்றுதான். கலிமா, தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் இஸ்லாத்தின் முதன்மையான கடமைகளான இதில் முஸ்லீம்களுக்கும், அஹ்மதியாக்களுக்கும் வேறுபாடு இருக்கிறதா? முகம்மதை அவர்களும் நபியாக ஏற்கிறார்கள், ஆனால் கடைசி நபியாக அல்ல. முகம்மதுவிற்குப்பின் மிர்ஸா குலாம் என்பவரை நபியாக கொள்கிறார்கள். ஷியாக்கள் முகம்மதை நபியாக ஏற்றாலும் அவருக்குப்பின் அலியை முக்கியமானவராகக் கொள்கிறார்கள், அதுபோலவே அஹ்மதியாக்கள் முகம்மதின்பின் மிர்ஸாவை முக்கியமானவராக கருதுகிறார்கள். ஆனால் ஷியாக்கள் அலியை நபியாக கொள்வதில்லை, அஹ்மதியாக்கள் மிர்ஸாவை நபியாக கொள்கிறார்கள் அதுதான் வித்தியாசம். இஸ்லாத்தில் பல பிரிவுகள் இருக்கின்றன. ஹதீஸ்களை முழுமையாக நிராகரித்து குரான் மட்டுமே போதும் என்பது தொடங்கி இமாம்களை முதன்மைப்படுத்தும் மத்ஹபுகள் வரை. அதில் அஹ்மதியாவும் ஒன்று வித்தியாசம் கடைசி நபி என்பதில் மட்டுமே உள்ளது.

  ஆபிரஹாமிய மதங்களில் இந்த வேறுபாடுதான் பிரதானம். யூத மதத்தில் மோஸஸுக்குப்பிறகு நபியில்லை, கிருஸ்தவத்தில் ஏசுவுக்குப்பிறகு நபியில்லை, இஸ்லாத்தில் முகம்மதுக்குப் பிறகு நபியில்லை. ஆனால் அடுத்த நபியை சொன்னதால் தனி மதம் என்பது அஹ்மதியாக்களுக்குப் பொருந்துமா? மேற்கூறிய மதங்களிடையே நபி மட்டுமே வித்தியாசம் அல்ல. கடவுளிலிருந்து வேதம் ஊடாக மதச்சடங்குகள், கலாச்சாரம், புனிதத்தலங்கள், கடமைகள், வணக்கமுறைகள் என அனைத்திலுமே வேறு வேறு நிலை கொண்டவை. அஹ்மதியாக்களோ கடைசி நபி என்பதைத்தவிர அனைத்திலும் ஒரே நிலை கொண்டவர்கள். தூய இஸ்லாமிய மதத்தை உள்வட்டம் என்று கொண்டால், ஒவ்வொரு பிரிவும் அந்த உள்வட்டத்திற்கு வெளியே தனி வட்டமாக இருக்கின்றன. இதில் அஹ்மதியாவை வேண்டுமானால் கடைசி வட்டமாக வைத்துக்கொள்ளலாம், ஆனால் அது வட்டமே இல்லை என்பது பொருந்தாது.

  எனக்குப்பின் என் உம்மத்துக்கள் 73 பிரிவாகப் பிரிவார்கள். அவர்களில் ஒரு பிரிவினரைத்தவிர ஏனைய அனைவரும் நரகம் செல்வர் எனும் பொருளில் ஒரு ஹதீஸ் உண்டு அந்த 72 பிரிவினர் யாவர் என்பதற்கு குரானிலோ ஹதீஸிலோ விளக்கமோ குறிப்போ இல்லை. இதை ஆய்வாக(!) எடுத்துக்கொண்டு ஆய்ந்திருக்கிறார்கள் சிலர். அவர்கள் பகுத்த பகுப்பில் அஹ்மதியாவும் உண்டு.

  முகம்மதுதான் இறுதி நபி என்பதற்கு ஒரே ஒரு ஹதீஸ்தான் இருக்கிறது என நான் கூறவில்லை. நான் பதில் கூற எடுத்துக்கொண்ட பின்னூட்டத்தில் ஹாத்தமுன்நபி எனும் ஹதீஸ் குறித்து பேசப்பட்டதால், அதற்கு நான் விளக்கமளித்தேன். பொதுவாக ஹதீஸ்களை ஒரு துணை ஆதரமாக கொள்ளலாமேயன்றி முழுமையான ஆதாரமாக கொள்லவியலாது. மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பிரச்சனையை குரான் தெளிவாகக் கையாளவில்லை. கடைசி நபி என்பது குறித்து குரான் சுற்றிவளைத்தே கருத்து தெரிவிக்கிறது, அறிவியல் கூறும் வசனங்களைப் போல, நேரடியாக ஒன்றுமில்லை. எனவே கடைசி நபி என்பது முழுக்க முழுக்க ஹதீஸை மட்டுமே ஆதாரப்பட்டு நிற்கிறது. இது ஒரு பலவீனமே.

  எல்லா நபிக்கும் வேதம் வழங்கப்படவில்லை என்பதற்கு அந்த இடுகையிலேயே சில நபிகளைக் குறிப்பிட்டிருந்தேன். மூஸாவுக்கு நபித்துவத்தின் பெரும்பகுதி வேதமில்லாமலேயே கழிந்திருக்கிறது. மட்டுமல்லாது வேதம் கொடுக்கப்படாத நபிகளும் இருக்கிறார்கள் என்பதற்கு குரானிலேயே ஆதாரம் இருக்கிறது. “…….எவர்களுக்கு உமக்கு முன் அச்சமூட்டி எச்சரிப்பவர் வந்ததில்லையோ அந்த சமூகத்தாருக்கு அவர்கள் நேர் வழியில் செல்லும் பொருட்டு நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக உம்முடைய இறைவனிடமிருந்து வந்துள்ள உண்மை” குரான் 32:3 ஆக குரான் முகம்மதுக்கு பின் வரும் சமுதாயத்திற்கு மட்டுமல்ல முகம்மதுவுக்கு முன் தூதர் அனுப்பப்படாமல் விடப்பட்ட சமுதாயத்துக்கும் குரானே வேதம்.

  வினவு பின்னூட்டத்தில் முஸ்லீமின் குழந்தைகல் முஸ்லீமல்ல என்று கூறியது போல வேதம் வழங்கப்பட்டோர் என்பது உலகிலுள்ள அனைத்து சமுதாயத்தினரையும் குறிக்கும் என கூறியிருக்கிறீர்கள். அல்ல, வேதம் வழங்கப்பட்டோர் என்பது யூதர்களையும் கிருஸ்தவர்களையும் மட்டுமே குறிக்கும். அதிலும் குறிப்பாக மத்திய தரைக்கடல் பகுதியிலுள்ள யூதர்களையும் கிருஸ்தவர்களையும் மட்டுமே குறிக்கும் ஏனைய பகுதியிலுள்ளோரை அல்ல என பிஜே விளக்கம் கொடுத்ததாக நினைவு.

  செங்கொடி

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s