நோபல், ஒபாமா, தகுதி: வெட்கக்கேடு

அமைதிக்கான நோபல் பரிசு அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு வழங்கப்படவிருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன் இப்படி ஒரு செய்தி வெளியானதிலிருந்து, ஒபாமாவின் தகுதி குறித்தும், நோபல் பரிசின் தகுதி குறித்தும் ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு தளங்களிலும் விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன. ஒபாமாவுக்கு அமைதி நாயகன் என்று விருது வழங்குவது சரி என்றாலும் தவறு என்றாலும் ஒரு செய்தி எல்லோரிடமும் நிருவப்படுகிறது, அது நோபல் போன்ற பரிசுகள் தகுதி பார்த்தே வழங்கப்படுகின்றன என்பது. மேற்குலகம் வழங்கும் பரிசுகளோ, சலுகைகளோ, பாராட்டுதல்களோ, பழிதூற்றுதல்களோ எதுவாகினும் அரசியல் காரணங்களுக்காகவே அளிக்கப்படுபவை என்பது கடந்த காலங்களில் பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளன. டைனமெட்டை கண்டுபிடித்த அறிவியலாளரான ஆல்பிரட் நோபலின் மன உளைச்சலிலிருந்து பிறந்த நோபல் பரிசு உலகின் உயரிய விருதாக அங்கீகரிக்கப்படுவதே கபடத்தனமானது என்பதை எந்தெந்த சூழல்களில் யாருக்கெல்லாம் பரிசுகள் வழங்கப்பட்டிருக்கின்றன என்பதைக்கொண்டே கண்டுகொள்ளலாம்.

 “இந்தப்பரிசு என்னுடைய செயல்களுக்கானதல்ல, அமெரிக்கத்தலைமையின் மீது உலகம் வைத்துள்ள நம்பிக்கையின் அடையாளம்” என்று தனக்கு விருது தந்த நோக்கத்தை ஒபாமா மிகத்தெளிவாகவே குறிப்பிட்டுள்ளார். பதவியேற்று ஒரு ஆண்டுகூட நிறையாத ஒரு அதிபர் இதைவிடத் திறமையாக இந்த காமடியை மறைத்திருக்க முடியாது. ஆனால் விருதுக்கான தேர்வுக்கமிட்டியின் தலைவர் டி ஜான் ஜாக்லாண்ட் கூறுகிறார் “மொத்தம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 205 பேர்களில் 204 பேரையும் பின்னுக்குத்தள்ளி தேர்வுக்குழுவின் அனைவராலும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படும் தகுதி ஒபாமாவுக்கு மட்டுமே இருந்தது” பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட மற்றவர்களில் ஒரு சிலரைக்கூட அவர் அடையாளம் காட்டவில்லை. இது ஒருபுறமிருக்க, நோபல் பரிசுக்கு பெயர்களை பரிந்துரைக்க கடைசித்தேதி பிப்ரவரி 1 அதாவது ஒபாமா பதவியேற்று 12 நாட்கள் கழித்து. அதிபருக்கான வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கு முன் யாருக்குமே தெரியாத ஒபாமா, பதவியேற்ற 12 நாட்களில் நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்படுகிறார்.

கடந்த ஒன்பது மாதங்களில் ஒபாமா செய்ததென்ன? நிறைய பேசியிருக்கிறார். அணு ஆயுதம் இல்லாத உலகை கட்டியமைப்போம் என்றார், ஈராக், ஆப்கானிலிருந்து அமெரிக்க ராணுவம் திரும்ப அழைக்கப்படும் என்றார், குவாண்டனோமோ சிறைச்சாலை மூடப்படும் என்றார், எகிப்தில் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் எனும் பொருளற்ற சொல் இனி பயன்படுத்தப்படமாட்டாது இஸ்லாத்திற்கு அமெரிக்கா எதிரியல்ல என்றார். ஆனால் நடப்பதென்ன? அமெரிக்காவைத்தவிர வேறு யாரும் அணு ஆயுதங்கள் வைத்திருக்கக்கூடாது எனும் அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தம் தான் இன்னும் மிரட்டிக்கொண்டிருக்கிறது, பயங்கரவாதத்திற்கு எதிரான(!) போர்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன, சிறைக்கொடுமைகள் இன்னும் கொடூரமாகிக்கொண்டிருக்கின்றன. பின் எதற்குத்தான் ஒபாமாவுக்குப் பரிசு?

ஒபாமா ஏன் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதும் ஒபாமா ஏன் அமைதி நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதும் ஒரே பதிலை கொண்ட இருவேறு கேள்விகள். அமெரிக்காவின் வரலாற்றில் முதன் முதலாக ஒரு கருப்பர் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்றதும், இனி அமெரிக்காவின் செயல்பாடுகளில் தலைகீழ் மாற்றம் இருக்கும் என்று இங்கு ஆரூடம் கூறியவர்கள் அனேகம். ஆனால் ஆப்கான் போர் பாகிஸ்தானின் மீதும் தாக்குதல் நடத்தும் அளவுக்கு விரிவடைந்ததையும், ஈராக்கை தொடர்ந்து ஈரான் மீதும் போர் மேகங்களை சூழவைத்திருப்பதையும் கண்டு அவர்கள் மௌனம் சாதிக்கிறார்கள். யார் அதிபரானாலும் அமெரிக்காவின் போக்கில் ஒரு மாற்றமும் ஏற்படப்போவதில்லை. ஏனென்றால், அமெரிக்காவின் கொள்கைகளை தீர்மானிப்பது அதிபர்களல்ல, பெரு நிறுவனங்களும் அதன் முதலாளிகளும் தான். கண்களின் பார்வையை கண்ணாடி மாற்றுமா என்ன? அப்படி வந்த ஒரு கண்ணாடிதான் ஒபாமா. வெளிநாடுகளுக்கு சென்றவிடமெல்லாம் மக்களிடமிருந்து கடும் எதிர்ப்பை சந்தித்த, தன் கோரப்பற்களை மறைக்கவியலாத அதிபராக வலம்வந்த புஷ் சொந்த நாட்டு மக்களின் வெறுப்பையும் சம்பாதித்தார். இதனால் இற்று விழுந்த அமெரிக்க பிம்பத்தை தூக்கி நிருத்த தேவைப்பட்ட ஒரு பதிலியாகத்தான் முதலாளிகளுக்கு ஒபாமா தேவைப்பட்டார். அந்த பதிலியின் பிம்பத்தைக் காப்பதற்க்குத்தான் நோபல் பரிசும். 12 நாட்களிலேயே நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதன் பொருள் ஒபாமா சொல்வதுதான் அமெரிக்கத் தலைமையின் மீதான நம்பிக்கை அதாவது கருப்பர் எனும் திரையால் அமெரிக்க நிஜத்தை மறைக்கத் தேவைப்படும் அதிகாரத்திற்கான நம்பிக்கை.

பசியால் சுருண்டு கிடக்கும் ஒருவனுக்கு உண்ணவைத்து கைதூக்கி விடுவதற்குப் பதிலாக என்ன கொடுப்பது ரொட்டியா? சோறா? என்று விவாதம் செய்வதைப்போல, ஒபாமாவுக்கு ஏன் பரிசு கொடுத்தார்கள் எனும் காரணத்தை உணர்ந்து எதிர்வினையாற்றாமல் தகுதி குறித்து விவாதம் செய்வது மக்களுக்கு நாம் செய்யும் அவமரியாதையாகும்.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s