முல்லைப்பெரியாற்றின் சிக்கல்களுக்கு அணை கட்டுவது எப்போது?

முல்லைப்பெரியாற்று அணைக்குப்பதிலாக வேறு புதிய அணை கட்டியே தீருவது என்று சாத்தியமுள்ள எந்த வழியையும் விட்டுவைக்காமல் கங்கணங்கட்டி செயல்படுகிறது கேரள அரசு. அமெரிக்கப்படங்களுக்கு இணையான வரைகலை உத்திகளுடன் மக்கள் வெள்ளத்தில் தத்தளிப்பதுபோல் குறுந்தகடுகளை வெளியிட்டு மக்களை ஏய்த்தது தொடங்கி இப்போதுஅணையில் நீர்கசிகிறது என்று குழு அமைத்து ஆராய அனுப்பியது வரை அடுக்கடுக்காக அக்கிரமங்கள் புரிந்துவருகிறது. ரப்பருக்கான விலை வீழ்ச்சியடைந்து தோட்டங்களில் வேலையிழந்து மக்கள் தவித்தபோது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அவர்களை அலட்சியப்படுத்திய அரசு, விலை உயர்வு குறிட்ட போராட்டங்களின்போது போராடிய மக்களை குண்டாந்தடிகளைக்கொண்டு அடித்து நொருக்கிய அரசு, முல்லைப்பெரியாற்றில் மக்களுக்காக கவலைப்படுவதாக காட்டுவது அப்பட்டமான நடிப்பு. இதில் காங்கிரஸ் கயவாளிகளுக்கும், போலிகளுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. அன்று நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சட்டம் கொண்டுவந்தது காங்கிரஸ் அரசு, இன்று வழக்கை மேலும் தாமதப்படுத்துவதற்க்காக தனிப்பெஞ்சுக்கு அனுப்பியிருக்கிறது போலிகளின் அரசு.

 

அப்படி என்னதான் காரணம் அந்த அணையை முடக்க நினைப்பதற்கு? மெய்யாகவே அணை பலமிழந்து தான் இருக்கிறதா? அணை உடைந்தால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்படைவார்களா? இவர்கள் மக்களிடம் சொல்லும் காரணங்களைவிட வேறு காரணக்கள் இதன் பின்னால் இருக்கின்றன. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது முல்லைப்பெரியாற்று அணைப்பகுதிகளான தேவிகுளம், பீர்மேடு போன்ற பகுதிகள் கேரளாவோடு இணைக்கப்பட்டன (இதை எதிர்த்து அபோது போராட்டங்களும் நடைபெற்றன) பின்னர் 1976 ல் பெரியாற்று அணைக்கு 40கிமீ கீழே இடுக்கி அணையை 555 அடி உயரத்தில் 800 மெகாவாட் மின் உற்பத்திக்காக கட்டியது கேரள அரசு. ஆனால் அன்றிலிருந்து இன்று வரை ஒரு முறை கூட அந்த அணை முழுக்கொள்ளளவை எட்டவில்லை. இந்த அணை கட்டப்பட்ட பின்னர்தான் கேரள அரசு முழு மூச்சுடன் முல்லைப்பெரியாற்று அணை பழுதடைந்திருப்பதாக பரப்பத்தொடங்கியது. பெரியாற்று அணை இருக்கும்வரை இடுக்கி அணைக்கு நீர்கிடைக்காது என்று உணர்ந்த கேரள அரசு 1979 இல் பீர்மடு எம்.எல்.ஏவான கே.கே.தாமஸ் என்பவர் தலைமையில் அணை பலமின்றி இருப்பதாகவும் நீர்மட்டத்தின் அளவை குறைக்கவேண்டும் எனவும் பெரும் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போதைய மைய அரசு அணை பலமாக இருப்பதாக அறிவித்தது. ஆனாலும் கேரள தமிழக அரசுகளிடையே அணையை பலப்படுத்துவது என்றும் அதுவரை அணையின் நீர்மட்டத்தை 136 அடியாக குறைத்துக்கொள்வது என்றும் ஒப்பந்தமாகியது. தனடிப்படையில் 136 அடியாக நீர்மட்டம் குறைக்கப்பட்டது. அணை கேரளப்பகுதியில் இருந்தாலும் அணையின் நிர்வாகம் தமிழகத்திடம் இருந்தது. இதற்கு வாடகையையும் ஆண்டுதோறும் தமிழகம் கேரளாவுக்கு வழக்கிவருகிறது, இருந்தாலும் மூன்று ஆண்டுகளில் முடியவேண்டிய பலப்படுத்தும் பணி கேரளாவின் பல்வேறு முட்டுக்கட்டைகளால் 1985 வரை நீண்டது. பணி முடிவடைந்த பின்னும், மத்திய நீர்வள ஆணையம், மத்திய மண் விசையியல் ஆராய்ச்சி நிலையம் ஆகியவை நீர்மட்டத்தை உயர்த்துவாதால் பாதிப்பு ஒன்றுமில்லை என சான்றிதழ் வழங்கிய பின்பும் நீர்மட்டத்தை உயர்த்த இதுவரை கேரளா அனுமதிக்கவில்லை. இது தொடர்பாக தொடரப்பட்டவழக்கில் தான் உச்சநீதிமன்றம் நீர்மட்டத்தை 142 அடிவரை உயர்த்த ஆணையிட்டது. அதை கேரள சட்டமன்றத்தில் சிறப்பு சட்டத்திருத்தத்தின் மூலம் முறியடித்தது. இப்போது 136 அடியில் இருக்கும் அணையின் நீர்மட்டம் கடந்த 1924, 1933, 1940, 1943, 1961, 1977 ஆகிய ஆண்டுகளில் முழுக்கொள்ளளவான 152 அடிவரை எந்தப்பாதிப்புமில்லாமல் நிரம்பியிருந்தது, இன்னும் சிற்ப்பாக 1943 ஆம் ஆண்டு கொள்ளளவை விட இரண்டு அடி அதிகமாக அதாவது 154 அடிவரை நிரம்பியிருந்தது. அணை பலமற்று இருப்பதாக கேரளா தொடர்ந்து கூறிவருவதற்கு ஒரே காரணம் அது நூற்றாண்டுப்பழமை வாய்ந்தது என்பது மட்டும்தான். நில நடுக்கம் வந்தால் தாங்காது என்பதெல்லாம் அதிக பட்சம். எந்த கட்டிடத்திற்கு நிலநடுக்கத்தை தாக்குப்பிடிக்கும் என்று உறுதியளிக்கமுடியும்? இந்தியாவின் எந்த அணைக்கு இத்தகைய உறுதியளிக்கப்பட்டுள்ளது? மாறாக தமிழகத்தின் கல்லணை இரண்டாயிரம் ஆண்டுகளை கடந்தும் சிறப்பாக இயங்கிக்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேரளா அணை உடைந்துவிடும் என்று பரப்பியிருப்பது திட்டமிட்ட பொய் என்றாலும், கேரள மக்கள் அணை உடைந்து தாங்கள் கடலில் கரைந்து விடுவதாய் நம்புகிறார்கள் என்பது தெரிகிறது. ஆனால் அதுவும் உண்மையல்ல என்பதுதான் உண்மை. முல்லைப்பெரியாற்று அணையின் உபரி நீர் பாய்ந்தோடும் பகுதிகளைனைத்தும் மக்கள் வசிக்காத அடர்ந்த காட்டுப்பகுதியாகும். இடுக்கி மாவட்டம் உட்பட அணை உடைந்தால் பாதிக்கப்படும் பகுதிகளாக குறிக்கப்படும் ஐந்து மாவட்ட மக்கள் வசிக்கும் பகுதிகள் கடல் மட்டத்திலிருந்து 3500 அடிமுதல் 4600 அடி வரையிலான உயரத்தில் இருக்கின்றன. ஆனால் முல்லைப்பெரியாற்று அணையோ கடல் மட்டத்திலிருந்து 2850 அடி உயரத்தில் இருக்கிறது. அதாவது 2850 அடி உயரத்தில் இருக்கும் அணை உடைந்து அதை விட சற்றேறக்குறைய ஆயிரம் அடி அதிக உயரத்திலிருக்கும் பகுதி மக்கள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்படுவார்களாம். இடுக்கி அணைக்கு நீர் வேண்டும் என்பது மட்டுமல்ல, அணையின் நீர்மட்டம் 136 அடியாக குறைக்கப்பட்டபோது வெளித்தெரிந்த பகுதிகளில் அவசரம் அவசரமாக ரப்பர் முதலாளிகளும் ஊடக முதலாளிகளும் விடுதிகளும், பொழுதுபோக்கு மையங்களும் கட்டுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. அணை உடைந்து மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதல்ல அணையின் நீர்மட்டத்தை உயர்த்தினால் முதலாளிகள் கல்லாக்கட்டும் விடுதிகளும் பொழுதுபோக்கு மையக்களும் மூழ்கிவிடும் என்பதே உண்மை. எதை வைத்து இவர்கள் தங்களை கம்யூனிஸ்டுகள் என்று சொல்லித்திரிகிறார்கள்?

 

தமிழ் தேசியவாதிகள் என்று சிலர் இருக்கிறார்கள். ஈழத்தமிழர்களை இந்தியா படுகொலை செய்வதையே இரண்டு மலையாள அதிகாரிகளின் தவறான வழிகாட்டுதலே காரணம் என்று கூறுபவர்கள் இவர்கள். கன்னடம் ஆந்திரா கேரளம் ஆகியவை தமிழகத்தின் நீராதார உரிமையை மறுப்பது தேசிய இனச்சிக்கலினால் தான் என அடித்துக்கூறுகிறார்கள். ஆனால் தேசிய இனக்கூறுகள் வளராத கேரளாவில், பிராந்தியக்கட்சிகள் ஏதும் இல்லாத கேரளாவில் முல்லைப்பெரியாற்றுச் சிக்கலின் பலன் யாருக்குச் சேர்கிறது? கேரளாவிலிருக்கும் முதலாளித்துவ நலன் பாடும் அரசு இந்தச்சிக்கலை மேலும் மேலும் வளர்த்து புதிய அணையை கட்ட நினைப்பதன் காரணம கேரள தேசியமா? மக்கள் வெள்ளத்தில் அடித்துச்செல்வது போல் காட்டி மக்களை ஏமாற்றி காப்பாற்ற நினைப்பது மக்களையா? முதலாளிகளையா? அன்னிய முதலீட்டில் பின் தங்கி இருக்கும் கேரளாவில் மின் உற்பத்தியை அதிகரிப்பது ஏழைகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதற்கா? அன்னிய தொழிற்சாலைகளுக்கு வழங்குவதற்கா?

 

மைய மாநில அனைத்து அரசுகளுக்கும் திட்டமாக இருப்பது முதலாளிகளின் வளர்ச்சிதானேயன்றி ஒருபோதும் மக்களின் வளர்ச்சியல்ல. தமிழக அரசின் நோக்கமும் ராமனாதபுர மதுரை மாவட்ட விவசாயிகளின் நலனா? உள்நாட்டின் குறுந்தொழில்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்தி வாரத்துக்கு இரண்டு நாட்கள் விடுமுறை விடுங்கள் என அறிவுரை கூறும் அரசு, பன்னாட்டு நிருவனங்களுக்கு ஒரு நொடி நேரம் கூட நிறுத்தாமல் மின்சாரம் வழங்கிவருகிறது. விவசாயிகளை நீரை சிக்கனமாக பயன்படுத்த அறிவுறை கூறும் அரசுகள் அதை ஒருபோதும் பாட்டிலில் அடைத்துவிற்கும் நிருவனங்களுக்கு சொல்வதில்லை. எல்லா இடங்களிலும் அந்ந்தந்த பகுதிமக்களைவிட எல்லாவிதத்திலும் பன்னாட்டு முதலாளிகள் தான் அனைத்து பலன்களையும் பெற்றுக்கொண்டிருக்கின்றனர். இதில் தேசிய நலன்களைக்கூறி ஒரு மாநில மக்களை இன்னொரு மாநில மக்களுக்கு எதிரியாக காட்டுவது அந்த முதலாளிகளுக்குத்தான் சாதகமாக அமையுமேயன்றி எப்போதும் மக்களுக்கு சாதகமானதாக அமையாது. பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டமாக இதை மாற்றாதவரை எந்த ஆற்றுச்சிக்கலையும் தீர்க்கமுடியாது.

2 thoughts on “முல்லைப்பெரியாற்றின் சிக்கல்களுக்கு அணை கட்டுவது எப்போது?

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s