தெலுங்கானா: அன்றோடு இன்று பொருந்துமா?

கடந்த ஒரு மாதமாக ஆந்திரா எரிந்துகொண்டிருக்கிறது. போராட்டம் என்பது எவ்வளவு ஆற்றல் மிக்கது என்பது மீண்டுமொரு முறை வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் போராடியவர்களின் நோக்கம்…? தெலுங்கானா தனிமாநில கோரிக்கை அண்மையில் எழுந்ததல்ல. சந்திரசேகர ராவ் பதினோரு நாள் உண்ணாவிரதமிருந்ததால் தெலுங்கானா கிடைத்ததாக அவரது பக்தர்கள் புளகமடைந்து கொண்டிருந்தபோது, பிற மாநிலங்களிலும், ஆந்திராவின் பிற பகுதிகளிலும் தனிமாநில கோரிக்கைகள் திட்டமிட்டு வெளிப்படுத்தப்பட்டன. ஆந்திராவில் பின்னர் அதுவே தெலுங்கானாவிற்கு எதிர்ப்பாகவும், ஒருங்கிணைந்த ஆந்திரா என்றும் மடைமாற்றப்பட்டது. மக்கள் ஒரு பிரச்சனையை உணர்ந்து கிளர்ந்தெழுந்து போராடுவது என்பது வேறு, சீரழிந்த அரசியல்வாதிகள் தங்கள் ஆதாயத்திற்காக ஒன்றை மக்கள் போராட்டமாக போக்குக்காட்டுவது என்பது வேறு. இந்த உண்ணாவிரத நாடகத்தை முன்பே சிலமுறை கையாண்டிருக்கிறார் சந்திரசேகர ராவ், ஆனால் இந்தமுறை அதை அவரால் முடிக்கமுடியாமல் தொடர்ந்தாக வேண்டிய கட்டாயத்தை உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் ஏற்படுத்தினார்கள்.

தனி தெலுங்கானாவிற்கு உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் தொடக்கம் முதலே தனிப்பெரும் பங்காற்றிவருகிறது. 1969 முதலே உஸ்மானியா மாணவர்கள் தனி தெலுங்கானாவிற்காக போராடிவருகிறார்கள். 69 ல் நடந்த தீர‌மிக்க போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தங்களை ஈந்தது மொத்த இந்தியாவையும் திரும்பிப்பார்க்கவைத்தது. ஆனாலும் சென்னாரெட்டி போன்றவர்கள் அதனை அறுவடை செய்துகொண்டனர். சந்திர சேகர ராவும் தெலுங்கானாவை வைத்து கட்சியை வளர்த்துக்கொண்டார். அதனையே தன் வெற்றிக்காகவும் வெற்றிகரமான பேரத்திற்க்காகவும் பயன் படுத்திக்கொண்டார், அவ்வப்போது பதவியை துறந்தும் தன்னை போராளியாக காட்டிக்கொண்டார். அந்தவழியிலேயே உண்ணாவிரதமும் தொடங்கினார், இரண்டாவது நாளே மருத்துவமனையில் சேர்ந்து உண்ணாவிரதத்தை முடிக்கும் நிலையில் இருந்தார் (குளுகோஸ் ஏற்றியும் கொண்டார்) ஆனால் மாணவர்களோ தங்கள் போராட்டத்தை தொடர்ந்ததுடன் அதை ராவ்விற்கு எதிராக திருப்பவும் செய்தார்கள். வேறுவழியின்றி உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். ஆக தெலுங்கானாவை அங்கீகரிக்க மைய அரசு செய்த முடிவில் தீர்மானகரமான பங்காற்றியவர்கள் உஸ்மானியா மாணவர்கள், பங்குபோட்டவர் ராவ்.

தெலுங்கானவை மையமாக வைத்து தன் அரசியலை நகர்த்திவரும் ராவ் பாஜக கூட்டணியிலும் காங்கிரஸ் கூட்டணியிலும் இடம்பெற்றிருக்கிறார். அப்போதெல்லாம் பாஜகவும் காங்கிரஸும் அவரது தெலுங்கானா கோரிக்கையை ஆதரிக்கவே செய்தன. ஆந்திராவுக்குள்ளும், தெலுங்கு தேசம் முதல் இன்றைய பிரஜாராஜ்யம் வரை ஆதரிக்கவே செய்தன. ஆனால் மைய அரசு அங்கீகரிப்பதாக அறிவித்ததும் காட்சிகள் மாறிவிட்டன. காங்கிரஸின் விஜயவாடா ராஜகோபால் தொடங்கி பதவிவிலகல்கள் அனைத்து கட்சிகளையும் தொற்றிக்கொள்ள ஒருங்கிணைந்த ஆந்திராவுக்காக எல்லோரும் தியாகம்(!) செய்தார்கள். நேற்றுவரை ஆதரித்த ஒன்றை இன்று எதிர்ப்பதன் காரணம் குறித்து யாரும் விளக்கமளிக்கவில்லை. இன்று ஒருங்கிணைந்த ஆந்திராவுக்காக குரல்கொடுப்பதற்கு இவர்கள் முன்வைக்கும் வாதங்களென்ன? தெலுங்கு பேசும் மக்களை பிரிக்க அனுமதிக்கமாட்டோம் என்பதும் மொத்த ஆந்திர மக்களின் வரிப்பணத்தில் உருவான ஹைதராபாத்தை விட்டுக்கொடுக்கமாட்டோம் என்பதும் தான். இந்த இரண்டிலேயே ஒன்றுடன் ஒன்று முரண்படுகிறது என்பது ஒருபுறமிருந்தாலும், ஹைதராபாத்தில் உருவாக்கக்கப்பட்டுள்ள ஐடி வளாகங்களும் அவற்றின் முதலாளிகளும் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதுதான் அதாவது தங்களுக்கு படியளக்கும் முதலாளிகளின் எதிர்காலம் பாதிக்கப்படக்கூடாது என்பதுதான் இதன் பின்னாலிருக்கும் அரசியல்.

தனி தெலுங்கானா கோரிக்கையின் காரணங்களென்ன? கடலோர ஆந்திரா, ராயலசீமா ஆகியவை தெலுங்கானாவை புறக்கணிக்கின்றன என்பதுதான் மையமானது. தெலுங்கானாவின் வளங்கள் தெலுங்கானாவைவிட ஆந்திராவிற்குத்தான் அதிகம் பயனளிக்கிறது என்றாலும், இன்றைய உலகமய சூழலில் எந்தஒரு பகுதியின் வளங்களும் சூரையாடப்படுவதும் அந்தப்பகுதி மக்கள் புறக்கணிக்கப்படுவதும் தான் நடைபெற்றுவருகிறது. இதில் பொது எதிரியான உலகமயச்சூழலை விட்டுவிட்டு தனித்தெலுங்கானா கோரிக்கை எந்தவிதத்தில் அதன் மக்களுக்கு வளங்களை கொண்டுவரும்? தெலுங்கானா மாநிலம் அமைந்துவிட்டாலும் அந்த அரசால் உலகமயச்சூரையை மீறி செயல்படமுடியுமா? இன்று போராடுவதாய் காட்டிக்கொள்ளும் எந்தஒரு ஓட்டுக்கட்சிக்கும் இதை எதிர்கொள்ளும் பார்வை இருக்கிறதா? என்றால் மக்கள் போராட்டமாக உருவகப்படுத்துவதற்கும் அதனை அறுவடை செய்வதற்கும்தான் தெலுங்கானாவா? ஜார்க்கண்ட், உத்திராஞ்சல் மக்கள் பெரிய அளவில் போராடாவிட்டாலும் தனி மாநிலம் கிடைத்தது எப்படி? போராட்டங்கள் நடந்தாலும் போடோலாந்து, கூர்க்காலாந்து மாநிலக்கோரிக்கைகள் புறக்கணிக்கப்படுவதன் காரணமென்ன? பொதுவாக நிர்வாக வசதி என்று கூறப்படுவது என்னவகையிலான நிர்வாக வசதி என்பதில் தான் சுழிவே இருக்கிறது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் கிடைக்கும் கனிம வளங்களை பன்னாட்டு நிறுவனங்களும், தரகு முதலாளிகளூம் சுரண்டிக்கொள்ளையடிப்பதற்கு உகந்த வசதியை செய்வது தான் நிர்வாக வசதி எனும் பொருளில் ஆளப்படுகிறது. அதற்கு ஏற்றவாறு செயல்படமுடியுமா என்பதுதான் தனிமாநிலமாக பிரிவதற்கும், பிரிக்காமல் ஒன்றாகவே இருப்பதற்குமான காரணியை தீர்மானிக்கிறது. இதில் தேசிய உணர்வோ, பிராந்தியப்பிணைப்போ ஒன்றுமில்லை.

ஆந்திர மாநிலம் உருவாவதற்கு முன்பே தனி மாநிலமாக இருந்த தெலுங்கானா, 1956 ல் மொழிவாரி மாநிலமாக சென்னை ராஜதானியிலிருந்து ஆந்திரா பிரிந்தபோது அதனுடன் மக்களின் விருப்பமின்றியே இணைக்கப்பட்டது. பாகிஸ்தான் பிரிவினையின் பிறகு முஸ்லீம்கள் பெருவாரியாக இருந்த பகுதியான தெலுங்கானா தனி மாநிலமாக நீடிப்பது அன்றைய சூழலில் காங்கிரஸின் நலன்களுக்கு உகந்ததாக இல்லாததால் அந்திராவுடன் கட்டாயமாக இணைக்கப்பட்டது. அது இன்னமும் தொடரவேண்டுமா? என்பதைவிட தெலுங்கானா எனும் சொல்லுக்கு தனிச்சிறப்பான முக்கியத்துவமும் வழிகாட்டுதலும் ஒன்றிருக்கிறது. 1946 லிருந்து 1951வரை நடந்த மாபெரும் தெலுங்கானா போராட்டம் தான் அந்த வழிகாட்டுதல். அது வெறும் குறுகிய மாநிலப்பிரச்சனையாகவோ, தேசியப்பிரச்சனையாகவோ நடக்கவில்லை. மக்களே நேரடியாக பங்காற்றிய தங்களின் வாழ்க்கைக்கு எதிரான மிட்டா மிராசுகளின் கொடுமைகளுக்கு எதிராகவும், நிலப்பிரபுத்துவத்தை திணித்த இந்திய அரசுக்கு எதிராகவும் நடைபெற்ற தீரமிக்க போர். அன்றைய சூழலைவிட இன்றைய உலகமயச்சூழல் தீவிரமாகவும் கடுமையாகவும் மக்களின் வாழ்வையும், உயிர் உடமைகளையும் சுரண்டிவருகிறது. அன்றைய அரசைவிட இன்றைய அரசு வெளிப்படையாகவே மக்களை சுரண்டுவதற்கு அனைத்துவகையிலும் துணை நிற்கிறது. எனவே தனிமாநில கோரிக்கையைவிட அனைத்துவிதத்திலும் முதலாளிய, உலகமய கொள்ளைகளை எதிர்ப்பது எனும் திசை வழியில் போராடுவது காலத்தின் தேவையாக நம்முன் நிற்கிறது.

தொடர்புடைய இடுகை

வீரம் செறிந்த மாபெரும் தெலுங்கானா போராட்டம்

ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம்

கம்யூனிசம் என்றாலே ஏகாதிபத்திய எடுபிடிகளுக்கும், மதவாதிகளுக்கும்  வேப்பங்காயாய் கசக்கிறது. ரஷ்யாவிலும் சீனாவிலும் புரட்சியை சாதிப்பதற்கும் சமத்துவத்தை கொண்டுவருவதற்கும் கண்ட இழப்புகளும் அதைக்கண்டு கலங்காத லட்சிய வேகமும் சாதாரணமானவையல்ல. அவர்கள் மீது தூற்றப்படும் அவதூறுகளும் கட்டப்படும் கட்டுக்கதைகளும் கொஞ்சமல்ல. அன்றிலிருந்து இன்றுவரை இது தொடர்ந்துகொண்டிருக்கிறது. இவை அத்தனையும் மீறித்தான் மக்கள் மத்தியில் கம்யூனிசம் வேர்விட்டுக்கொண்டிருக்கிறது. ஏகாதிபத்திய சுரண்டலின் வேகமும் தீவிரமும் மக்களை கம்யூனிசத்தை நோக்கி திருப்பியுள்ள‌து. முதலாளியம் வீழ்ந்தே தீரும், கம்யூனிசம் நிச்சயம் வெல்லும். இது வெற்று முழக்கமல்ல வரலாற்று வழியிலான எதிர்கால உண்மை.

இன்று (டிசம்பர் 26) தோழர் மாவோவின் பிறந்தநாள். தோழர் மாவோவைப்பற்றி தெரிந்து கொள்வதும், உள்வாங்கிக்கொள்வதும் இன்றைய காலகட்டத்தின் மிகவும் இன்றியமையாத ஒரு தேவையாகும். 1994 ல் தோழரின் நூற்றாண்டு நினைவாக புதிய பூமி வெளியீட்டகம் வெளியிட்ட “ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம்” எனும் சிறு நூலை (பதிப்புரை, முகவுரை, குழந்தைப்பருவம், சாங் ஷாவில் வாழ்ந்த நாட்கள், புரட்சிக்கு முன்னோடி, தேசியவாத காலகட்டம், சீன சோவியத் இயக்கம், செஞ்சேனையின் வளர்ச்சி, மாசேதுங்குடன் மேலும் சில செவ்விகள் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது) தொடராக இங்கு வெளியிடவிருக்கிறேன். நண்பர்களுக்கு தோழர் மாவோ பற்றிய சிறந்த அறிமுகமாகவும், தோழர்களுக்கு விரிவாக எடுத்துச்செல்ல உதவியாகவும் இருக்குமென நம்புகிறேன்.

தோழமையுடன்

செங்கொடி

ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம்

மூலம்: எட்ஹார் ஸ்னோ

தமிழில்: எஸ். இந்திரன்

சவுத் ஏசியன் புக்ஸ்

புதிய பூமி வெளியீட்டகம்.

பதிப்புரை

மார்க்சிய லெனினிசத்தின் பதிய படிநிலை வளர்ச்சிக்கு சீனப்புரட்சியின் அனுபவங்களை தகுந்த களமாக அமைந்தது. அதனை வளப்படுத்தி முன்னெடுத்ததில் தோழர் மாசேதுங்கின் வரலாற்றுப்பாத்திரம் மகத்தானது. அவரது பங்களிப்பு தனியே சீனதேசத்திற்கு மட்டும் உரியதன்று. உலகப்பாட்டாளி வர்க்கத்திற்கும் சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கும் பெறுமதி மிக்க பொக்கிசமாக அமைந்தது. மேற்கில் தோற்றம் பெற்று ரஷ்யப்புரட்சியின் ஊடாக கிழக்கு உலகிற்குள் புகுந்த மார்க்சிச லெனினிசத்தை கையேற்றுப்பாதுகாத்து அதனை சீன நாட்டின் விசேச நிலைமைகளுக்கு ஏற்ப பிரயோகித்து வெற்றிகண்ட நடைமுறைமைகளின் மூலம் மேலைக்காற்றை கீழைக்காற்று மேவி நிற்கும் நிலைக்கு உந்துவிசை கொடுத்தவர் தோழர் மாசேதுங் ஆவார். அவரது தத்துவார்த்த அரசியல் நடைமுறை வழிகாட்டல்கள் இன்றும் நமது நாடு போன்ற மூன்றாம் உலக நாடுகளின் மீட்சிக்கு ஒளிமிகுந்த வழிகாட்டியாக இருந்துவருகின்றன. அத்தகைய மாமேதையின் நூற்றாண்டு நினைவு(1893-1993) ஆண்டாகும். டிசம்பர் மாதம் 26ம் தேதி அவர் பிறந்த தினமாகும். அவரது நூற்றண்டு தின நினைவாகவே இந்நூல் வெளிவருகிறது. மாசேதுங் பற்றி அவரது காலத்தில் வெளியிடப்பட்ட உலகப்புகழ் பெற்ற நூலிலிருந்து மொழியாக்கம் செய்யப்பட்டதே இந்நூலாகும் எட்ஹார் ஸ்னோ எனும் 30 வயதுடைய அமெரிக்க பத்திரிக்கையாளர் 1937ம் ஆண்டில் மாவோவையும் ஏனைய சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களையும் சந்தித்து சேகரித்த அரிய தகவல்களை ஒன்று திரட்டி “சீனாவின் மீது செந்தாரகை” எனும் நூலினை எழுதி வெளியிட்டார். சீன மக்களின் நன்மதிப்பினையும், சீன கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர்களின் நம்பிக்கையையும் பெற்ற எட்ஹார் ஸ்னோ பற்றி சில வார்த்தைகள் கூறுவது அவசியம்.

எட்ஹார் ஸ்னோ ஒரு அமெரிக்கப்பத்திரிகையாளர். அவர் மாவோவை சந்திப்பதற்கு முன்பாக ஏழு ஆண்டுகள் வரை சீனாவில் தங்கியிருந்து, சீன தேசம் பற்றிய பல விசயங்களை படித்துவந்தார். யென்சிங் பல்கலைக்கழகத்தில் ஒரு விரிவுரையாளராகவும் கடமை புரிந்திருக்கிறார். சிகாகோ ட்ரிபியூன், லண்டன் டெய்லி ஹரால்ட் போன்ற பத்திரிக்கைகளுக்கு ஆசியப்பிரதிநிதியாகவும் கடமையாற்றியிருக்கிறார். இரண்டாவது உலக யுத்தத்தின் போது சாட்டர்டே ஈவினிங் போஸ்ட் பத்திரிக்கையின் இணை ஆசிரியராகவும், யுத்த நிருபராகவும் இருந்திருக்கிறார். யுத்தத்தின் பின்னைய காலப்பகுதியில்  இந்தியா, சீனா, சோவியத் யூனியன் ஆகிய நாடுகளைப்பற்றிய தகவல்களைத் தருவதில் புலமை பெற்ற பத்திரிக்கையாளராகத் திகழ்ந்தார். எட்ஹார் ஸ்னோ பல நூல்களை எழுதியுள்ளார், அவற்றுள் ஆசியாவுக்கான சமர், மக்கள் எமது பக்கம், ஆரம்பத்தை நோக்கிய பயணம், இன்றைய செஞ்சீனா, ஆற்றின் மறுகரை ஆகியன உள்ளடங்கும். ஸ்னோவும் அவரது மனைவியும் பல ஆண்டுகள் சீனாவில் வாழ்ந்தனர்.  சீன மொழியை ஸ்னோ கற்றறிந்து பல்வேறு தகவல்களை ஆதாரப்பூர்வமாக பெற்றுக்கொண்டார். சீன மக்களின் போராட்டங்களை நன்கு விளங்கிக்கொண்டு அதன் தாக்கங்களை மட்டுமன்றி  ஏற்படவிருக்கும் மாற்றங்களையும் அவரால் தெளிவாக உலகிற்கு எடுத்துக்கூற முடிந்தது.

முப்பதுகளில் சீனக் கம்யூனிஸ்டுகளை சிவப்பு வழிப்பறிக் கொள்ளைக்காரர்கள் என ஏகாதிபத்திய பிற்போக்குவாதிகள் பிரச்சாரம் செய்துவந்தனர். இத்தகைய சூழலில் சீன கம்யூனிஸ்ட் தலைமைப்பீடத்துடன் மேற்கத்திய பத்திரிக்கையாளர்களோ அரசியல் அவதானிகளோ தொடர்பு கொள்ளமுடியவில்லை. அன்றைய காலகட்டத்தில் சீனாவில் இடம்பெற்றுவந்த புரட்சிகரப்போராட்டம் பற்றிய உண்மைத்தகவல்களை மேற்குலக மக்கள் பெற்றுக்கொள்ளமுடியாதிருந்தது. இத்தகைய சூழலில் எட்ஹார் ஸ்னோவின் பங்களிப்பு முக்கியத்துவம் பெற்றுக்கொண்டது. அவர் ஒரு மனசாட்சி படைத்த நேர்மையான அமெரிக்கப் பத்திரிக்கையாளர் என்பதை வரலாறு அடையாளப்படுத்தியது.

1936ல் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகம் அமைந்திருந்த புரட்சிகர செந்தளத்திற்கு ஸ்னோ சென்றடைந்தபோது சீன கம்யூனிஸ்ட் கட்சி தனது பதிநைந்தாவது வயதை அடைந்திருந்தது. ஜப்பானியர்களால் முற்றுகையிடப்பட்டிருந்த வடமேற்கு செந்தளத்திற்கு சன்யாட்சென் அம்மையாரின் சிபாரிசுடன் ஜூன் மாதத்தில் எட்ஹார் ஸ்னோ புறப்பட்டார். கம்யூனிஸ்டுகளுடன் ஓர் இலக்கிய முன்னணிக்கு கொள்கையளவில் தயாராக இருந்த காரணத்தினால் அவ்வேளை சியானில் நிலை கொண்டிருந்த மஞ்சூரியப்படையினரின் ஒத்துழைப்புடன் ஸ்னோ எல்லையைக்கடந்து கம்யூனிஸ்ட் தலைநகரான பா ஓ அன் சென்றடைந்து அங்கு தலைவர் மாசேதுங்கை சந்தித்தார்.

எட்ஹார் ஸ்னோ நான்கு மாதங்கள் சீன கம்யூனிஸ்ட்களின் செந்தளத்தில் தங்கியிருந்தார். அவ்வேளை தோழர் மாவோவிடமிருந்து பல்வேறு தகவல்களையும் கொள்கை விளக்கங்களையும் கலந்துரையாடல் போன்றவற்றின் மூலம் சேகரித்துக்கொண்டார். பல இரவுகள் கண்விழித்து மாவோவுடனான பேட்டியை ஸ்னோ பெற்றுக்கொண்டார். இச்சந்திப்பும் ஏனைய தலைவர்களுடனான தொடர்புகளும் ஸ்னோவிற்கு முற்றிலும் புதிய அனுபவமாக அமைந்தது. மாவோவின் வாழ்க்கைக்குறிப்புகளை அவரிடமிருந்தே பெற்றுக்கொண்டமை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தமது சொந்த வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விரும்பாத நிலையிலும் கூட அன்றைய தேவை கருதி மாவோ தனது வாழ்க்கைக்குறிப்புகளை ஸ்னோவிடம் எடுத்துக்கூறினார். அதே போன்று ஏனைய தலைவர்கள் பற்றிய  விபரங்களையும் ஸ்னோ சேகரித்துக்கொண்டார்.

1936 ஆம் ஆண்டு அக்டோபரில் மேற்படி செந்தளத்திலிருந்து திரும்பிய ஸ்னோ தான் நேரடியாகப்பெற்ற தகவல்களையும் விபரங்களையும் தொகுத்து 1939 ஜூலையில் தனித்துவம் மிக்க நூலாக எழுதிமுடித்தார், அதுவே “சீனாவின் மீது செந்தாரகை” எனும் புகழ் பெற்ற ஆங்கில நூலாகும். முதல் தடவையாக சீனக் கம்யூனிஸ்டுகளைப்பற்றியும் தலைவர் மாசேதுங் மற்றும் தலைவர்கள் பற்றியும் தெளிவான ஒரு சித்திரத்தை இந்நூல் வழங்கியது. சீனக்கம்யூனிஸ்டுகளின் உன்னத நோக்கத்தையும் அவர்களது வீரம், தியாகம், அர்ப்பணிப்பு மிக்க வேலை முறை என்பன பற்றிய உணர்வும் உணர்ச்சியும் மிக்க பக்கங்களை இந்நூல் உலகிற்கு படம் பிடித்துக்காட்டியது. ஏகாதிபத்திய வாதிகளும் பிற்போக்கு சக்திகளும் தனது கொள்ளைத்தனமான சுரண்டலையும் அதன் கொடூரங்களையும் மூடி மறைத்து கம்யூனிஸ்டுகளை பயங்கரவாதிகள், பலத்காரவாதிகள், ரத்தவெறிபிடித்தவர்கள் என்று காட்டி நின்றவேளையில் அதனை முறியடிக்கும் ஒரு நேரடிச்சாட்சியாக ஸ்னோவின் கட்டுரைகள் அமைந்தன. எதிர்காலத்தில் சீனக்கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு உலகில் கிடைக்கக்கூடிய் ஆதரவிற்கும் முக்கியத்துவத்திற்கும் இந்நூல் ஆரம்பத்துணையாகியது. இது ஒரு வரலாற்றுக்குறிப்பு மட்டுமன்றி சீன கம்யூனிஸ்ட் கட்சியில் தலைவர் மாவோவின் தெளிவான திசைமார்க்கத்தையும் சுட்டிக்காட்டி நின்றது.

இத்தகைய முக்கியத்துவம் மிக்க “சீனாவின் மீது செந்தாரகை” நூலின் நான்காவது அத்தியாயமாக அமைந்துள்ள ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம்‘ என்ற பகுதியே தமிழாக்கம் செய்யப்பட்டு இந்நூல் உருவம் பெறுகிறது. கம்யூனிசம் கம்யூனிஸ்டுகள் பற்றிய எதிர்நிலை பிரச்சாரங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ள இன்றைய சூழலில் இதுபோன்ற நூல்களின் தேவை மிக அவசியமானதாகும். இந்நூலினை மாவோ அவர்களின் நூற்றாண்டு நினைவு நாட்களிலே வெளியிட்டு உதவுமாறு புதிய ஜனநாயகக்கட்சி கேட்டுக்கொண்டதற்கிணங்க இதனை நூல் உருவில் கொண்டுவருகிறோம். இதில் பெரு மகிழ்ச்சியும் கொள்கிறோம்.

இந்நூலினை தமிழாக்கம் செய்த எஸ்.இந்திரன் அவர்களுக்கும் அதற்கு உதவிய ஏனைய தோழர்களுக்கும் நாம் நன்றியுடையவர்கள். இதனை எம்முடன் இணைந்து வெளியிடும் சவுத் ஏசியன் புக்ஸ் நிருவனத்தினருக்கும் அழகுற அச்சிட்டுத்தந்த அச்சக உரிமையாளர் ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி கூறுகிறோம்.

117, சென் அன்றூஸ் கீழைத்தெரு,

முகத்துவாரம்,

கொழும்பு 15,

இலங்கை.

20/12/1993.

கடல்கள் பற்றிய அல்லாவின் புனைகதைகள்

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே: பகுதி 10

நாம் வசிக்கும் பூமியில் முக்கால் பகுதி கடலாகவும் கால்பகுதி மட்டுமே நிலமாகவும் இருக்கிறது. முக்கால் பாகமுள்ள கடலை நம்முடைய வசதிக்காக கடல்களாகவும், பெருங்கடல்களாகவும் பிரித்திருக்கிறோம். சில கடல்கள் நாற்புறமும் நிலத்தால் சூழப்பட்டு எல்லைகளுடைய தனிக்கடலாக இருக்கும் மத்திய தரைக்கடலைப்போல. இன்னும் சில கடல்கள் மூன்றுபுறமும் நிலங்களாலும் ஒருபுறம் மற்றொரு கடலாலும் சூழப்பட்டிருக்கும் வங்காள விரிகுடா போல. பொதுவாக கடல்களின் எல்லை என்றால் நிலப்பரப்பு தான். நிலப்பரப்பு அல்லாமல் கடல்களுக்கு எல்லை என்று ஒன்றில்லை. பசுபிக் பெருங்கடலும், அட்லாண்டிக் பெருங்கடலும் தனித்தனி பெயர்களால் குறிக்கப்பட்டாலும் இவற்றிற்கிடையே எல்லை என்று ஒன்றில்லை, அந்தந்த பகுதியைக்கொண்டு அட்லாண்டிக் பெருங்கடல் என்றும் பசுபிக் பெருங்கடல் என்றும் அழைக்கிறோம். இரண்டு நாடுகளுக்கிடையே எல்லைக்கோடு இருப்பதைப்போல் இரண்டு கடல்களுக்கிடையே எல்லைக்கோடு இருப்பதில்லை. ஆனால் குரானின் இந்த வசனங்களை கேளுங்கள், “அவனே இரண்டு கடல்களையும் ஒன்றோடொன்று சந்திக்கச்செய்தான்” “அவற்றிற்கிடையே ஒரு தடுப்பும் இருக்கிறது அதை அவை மீற்மாட்டா” குரான் 55:19; 55:20. இந்த வசனங்கள் இரண்டு கடல்களுக்கிடையே ஒரு தடுப்பு இருப்பதாக கூறுகிறது. ஆனாலும் அவை என்ன வகையினாலான தடுப்பு? என்ன பண்புகளினாலான தடுப்பு? அவற்றின் செயல்பாடு? எதுவும் விளக்கப்படவில்லை.

இதுபற்றி மதங்கற்ற அறிவியலாளர்கள் கூறுவதைக்கேட்கலாமா? ஆரம்பத்தில் மனிதனுக்கு கடல்கள் எல்லாம் ஒன்று தான் அவற்றினிடையே வித்தியாசம் ஒன்றுமில்லை என்று தான் நினைத்துக்கொண்டிருந்தான். பின்னர்தான் விஞ்ஞானிகள் ஒரு கடலுக்கும் இன்னொரு கடலுக்கும் இடையே வித்தியாசம் இருப்பதை கண்டுபிடித்துச் சொன்னார்கள். எல்லாக்கடல் நீரும் உப்பாக இருந்தாலும் அவற்றின் அளவுகள் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஆனால் பிற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த மாபெரும் அறிவியல் உண்மை 1400 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த முகம்மது நபிக்கு எப்படி தெரிந்தது? அதிலும் அவர் படிக்காதவர். இதிலிருந்து நமக்கு தெரிவதென்ன? அனைத்தும் அறிந்த அல்லாஹ்தான் முகம்மது நபியின் வழியாக குர் ஆனை இறக்கியிருக்கிறான் என்பது உறுதியாகிறதல்லவா? இப்படிப்போகிறது மதம் படித்த விஞ்ஞானிகளின் விஞ்ஞானம்.

பண்டைய கடலாடிகளுக்கு இது தெரிந்தே இருந்திருக்கிறது. பலநாடுகளுக்கு கடல்கடந்து வணிகம் செய்த வணிகர்களுக்கும் மாலுமிகளுக்கும் கடல் நீரின் தன்மை எல்லா இடத்திலும் ஒரே மாதிரி இருக்காது என்பது நன்றாகவே தெரிந்திருந்தது. அவர்கள் கண்களாலும் நாவினாலும் அறிந்து வைத்திருந்த அதை அறிவியலும் உறுதி செய்தது. எல்லா இடத்திலும் கடல் நீரின் உவர்ப்புத்தன்மை ஒரே திறத்தில் இருப்பதில்லை. அந்தந்த இடத்திற்கு ஏற்ப வளரும் கடற்றாவரங்கள் வசிக்கும் கடல் உயிரிகள் மண்ணின் தன்மை நீரோட்டங்களின் விளைவு கலக்கும் ஆற்றுநீரின் அளவு இவைகளின் அடிப்படையில் அந்த கடலின் உப்பு தாதுக்கள் மட்டுமல்லாது நீரின் தெளிவுத்தன்மை உட்பட பல மாறுதல்கள் இருக்கும். இவை வேறு வேறு கடல்களுக்கு என்று மட்டுமில்லை ஒரே கடலிலும் கூட பலப்பல மாறுதல்கள் இருக்கின்றன. வங்காள விரிகுடாவில் தான் சென்னையும், போர்ட் பிளேரும் (அந்தமான் நிகோபர் தீவுகள்) இருக்கின்றன, ஆனால் சென்னை மெரினாவிலும் போர்ட் பிளேர் கடற்கரையிலும் நீரின் தெளிவுத்தன்மை உட்பட எவ்வளவு வித்தியாசங்கள்? ஒரே கடலில் உள்ள வேறுபட்ட தன்மைகளையோ அல்லது வேறு கடல்களின் மாறுபட்ட தன்மைகளையோ தான் குரானின் வசனங்கள் தடுப்பு என குறிப்பிடுகிறதா? குரானின் வசனங்கள் தெளிவாகவே கடல்களின் எல்லை குறித்தே பேசுகின்றன. வசனம் 25:53 இன்னும் தெளிவாகவே இதனை குறிப்பிடுகிறது, “அவன் தான் இரண்டு கடல்களையும் ஒன்று சேர்த்தான். ஒன்று மிக்க இனிமையும் சுவையுமுள்ளது, மற்றொன்று உப்பும் கசப்புமானது. இவ்விரண்டிற்குமிடையே வரம்பையும், மீற முடியாத ஒரு தடையையும் ஏற்படுத்தியிருக்கிறான்” கடல் நீரின் சுவை குறித்து கூறினாலும் இரண்டு கடல்களுக்கும் ஒரு வரம்பு இருக்கிறதென்றும், இரண்டினிடையே இருக்கும் தடைய அவைகளால் மீறமுடியாதென்றும் ஐயத்திற்கிடமின்றியே அறிவிக்கிறது.

கடலுக்குள் யாரும் எல்லைக்கோடு பிரித்து வைக்கவில்லை என்பது ஒருபுறமிருக்கட்டும், கடலுக்குள் நீரோட்டங்கள் இருக்கின்றன, இந் நீரோட்டங்கள் நிலத்தில் ஓடும் ஆறுகளைப்போல் கடலுக்குள் ஓடுகின்றன. ஒருகடலிலிருந்து மற்றொரு கடலுக்கு, ஒரு கண்டத்திலிருந்து மற்றொரு கண்டத்திற்கு பாயும் பல கடலடி நீரோட்டங்களை கண்டுபிடித்திருக்கிறார்கள். இரண்டு கடல்களுக்கிடையே மீற முடியாத தடுப்பு இருக்கிறதென்றால் நீரோட்டங்கள் எப்படி நகர்கின்றன? இனப்பெருக்கத்திற்காகவும், பருவ மாற்றங்களுக்காகவும் சிலவகை மீன்கள் இடம்பெயர்கின்றன, ஒரு கடலிலிருந்து மற்றொரு கடலுக்கு சர்வ சாதாரணமாக வந்து போகின்றன? கடல்களுக்கு இடையே இருக்கும் தடையை மீன்களால் எப்படி தகர்க்க முடிந்தது? ஒன்று தெளிவாகிறது கடலாடி அனுபவமில்லாத முகம்மது, கடலாடிகளிடமிருந்து கடல்நீரின் சுவை வேறுபாடுகளைப்பற்றி அரைகுறையாக செவியுற்று அதையே தன்னுடைய குரானில் தடையாக அரங்கேற்றிவிட்டார். அதையே இவர்கள் மாபெரும் அறிவியல் உண்மையாக அளந்துவிடுகிறார்கள்.

கடலைப்பற்றிய இன்னொரு மாபெரும் அறிவியல் உண்மையும் குரானில் காணக்கிடைக்கிறது. வசனம் 24:40 “அல்லது ஆழ்கடலில் பல இருள்களைப் போன்றதாகும் அதனை ஓர் அலை மூடுகிறது. அதற்கு மேல் மற்றோர் அலை. அதற்கும் மேல் மேகம். பல இருள்கள். சில சிலவற்றிற்கு மேல் இருக்கின்றன. அவன் தன் கையை வெளியே நீட்டினால் அவனால் அதை பார்க்க முடியாது. எவனுக்கு அல்லாஹ் ஒளியை ஏற்படுத்தவில்லையோ அவனுக்கு எந்த ஒளியுமில்லை”

இஸ்லாத்தை ஏற்காதவர்களின் நிலையை விவரிக்கும் இந்த வசனம். ஒருவனை அல்லா நேர் வழியில் செலுத்தவில்லை என்றால் அவனுக்கு எந்த நேர்வழியும் இல்லை என எச்சரிக்கிறது. இந்த வசனத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஆழ்கடலில் பல இருள்களைப் போன்றதாகும் எனும் வாக்கியம் தான் அந்த மாபெரும் அறிவியல் உண்மை.

கடலில் ஆழத்தில் செல்லச்செல்ல வெளிச்சம் குறைந்து உள்ளங்கைகளை கூட பார்க்கமுடியாத அளவுக்கு இருட்டாகிவிடும். இது ஒன்றும் யாருக்கும் தெரியாத சங்கதி அல்ல. கடலோடு மனிதனுக்கு தோடர்பு ஏற்பட்ட பிறகு எளிதாக இதை மனிதன் கண்டிருக்கமுடியும். ஆனால் இதையும் பிற்கால அறிவியல் கண்டுபிடிப்பான கடல் நீரில் ஒளியின் நிறமாலை நிறங்கள் ஊடுருவும் ஆழம் பற்றிய தகவல்களை ஒன்றிணைத்து பிற்கால அறிவியல் கண்டுபிடிப்பை குரான் 1400 ஆண்டுகளுக்கு முன்பே கூறிவிட்டது என்கிறார்கள்

இதில் இன்னொரு வேடிக்கையும் இருக்கிறது. அமெரிக்காவின் கடலாய்வு அறிவியலாளரான பேராசிரியர் வில்லியம் ஹை என்பவர் 1980 களின் தொடக்கத்தில் தாம் ஜித்தா பல்கலைக்கழகத்தில் அறிக்கை சமர்ப்பிக்க அழைக்கப்பட்ட கதையை விளக்குகையில், தாம் குரானில் கூறப்பட்டிருக்கும் ஆழ்கடல் இருளை அறிவியல் ஆதாரங்களுடன் மெய்பிக்கும் தகவல்களுடன் கூடிய அறிக்கையை சமர்ப்பிக்குமாறு தன்னிடம் கோரப்பட்டதை விவரிக்கிறார். ஆனால் தான் அவ்வாறான அறிக்கையை அளிக்காமல் குரானில் கூறப்பட்டிருப்பதும் நிறங்களின் ஊடுறுவும் ஆழமும் தொடர்பில்லாதது என சொற்பொழிவாற்றியதாகவும், பின்னர் தன்னுடைய கட்டுரை மலரில் சேர்க்கப்படவில்லை என்றும் அதற்குப்பதிலாக அதே தலைப்பில் பேராசிரியர் துர்க்கா ராவ் என்பரின் கட்டுரை இடம்பெற்றிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இன்னொரு விசயத்தையும் நீங்கள் கவனிக்கலாம், அறிவியல் உண்மை என மதவாதிகள் ஆராதிக்கும் விசயங்களையெல்லாம் அராய்ந்தால் அவைகளெல்லாம் சௌதி அரேபியாவில் பெறப்பட்ட ஆய்வுக்கட்டுரைகளாக மட்டுமே இருப்பதைக்காணலாம். ஆக அனைத்து ஆற்றல்களையும் கொண்ட அவர்களின் அல்லாவைவிட அறிவியல் நிரூபணம் இஸ்லாத்தின் பரவலுக்கு அவசியம் என்பதை அவர்களும் உணர்ந்தே இருக்கிறார்கள்.

சௌதியின் மழைக்கொலைகளை விட யெமனின் எல்லைக்கொலைகள் அடர்த்தியானவை.

குடை என்றதும் நமக்கு மழைதான் நினைவுக்கு வரும் ஆனால் குடையை ‘ஸம்சியாஹ்’ (வெயில் தாங்கி)என அழைக்கும் சௌதியின் பண்பாடு மழைக்கும் அவர்களும் உள்ள உறவை நமக்கு விளக்கும். கடந்த நவம்பர் இறுதியில் சௌதியின் வணிகத்தலைநகரான ஜித்தாவில் மழை கொட்டித்தீர்த்தது. கிடைக்கும் இடங்களிலெல்லாம் மழைநீர் புகுந்தது. ஜித்தாவின் புறநகர்ப்பகுதியில் அந்த இடத்தையே தலைகீழாக புறட்டிப்போட்டதுபோல் உருக்குலைந்து கிடந்தது. பல வீடுகள் இடிந்து சரிந்தன, சாலைகள் இருந்த சுவடின்றி அரித்துச்செல்லப்பட்டன. மழைவெள்ளத்தில் சருகைப்போல் அடித்துச்செல்லப்பட்ட வாகனங்கள் குப்பையைப்போல் குவிந்து கிடந்தன. ஜித்தாவின் அதிமுக்கிய சாலையான தரிக் அல் மதீனா பல நாட்களுக்கு தண்ணீர் வடியாமல் தேங்கிக்கிடந்தது. எழுபது பேர் மரணம் என அரசு தரப்பிலும் நூறுக்கு அதிகமிருக்கும் என அதிகாரபூர்வமற்றும் தகவல்கள்.

நாற்பது, நாற்பத்தைந்து செமீ மழைகளை கண்டும் கடந்தும் சென்ற நமக்கு ஆறு செமீ மழைக்கு நூற்பேர் மரணம் என்பது அதிர்ச்சி தான். பொதுவாக மழைச்சாவுகள் அல்லது இயற்கை சீற்றத்தினாலான சாவுகள் என்பது எல்லோரும் நினைப்பதுபோல் இயற்கை மரணமோ இயற்கையினாலான மரணமோ அல்ல. அவை கொலைகள், இயற்கை சீற்றத்தை கணித்து அதை மக்களை காக்கும் வகையில் பயன் படுத்தவேண்டியது அரசின் கடமை. அந்தக்கடமையை செய்யாத அலட்சியமும், இயற்கையை அதன் இயல்புக்கு மாறாக பணவெறியுடன் சூரையாடுவதும் சேர்ந்து மக்களை செய்யும் கொலைகள் தான் இயற்கைச்சீற்றம் என்ற பொதுவான அடைமொழியில் அடையாளப்படுத்தப்படுகிறது. பாலைவன நாட்டில் மழையை எதிர்பார்த்திருக்க முடியாது என்று சொல்லிவிட முடியாது. ஏனென்றால் 27 ஆண்டுகளுக்கு முன்னர் இதுபோன்றதொரு மழையில் 30பேர் மரணித்ததாக செய்திகள் குறிப்பிடுகின்றன. ஆனால் அப்போதைவிட அறிவியலும் தொழில்நுட்பமும் வளர்ந்த இப்போதோ நூறு பேர். பொருளாதாரத்தில் வளர்ந்த ஒரு நாட்டில் ஆறு செமீ மழைக்கு நூறு பேர் எப்படி மரணமடைந்தார்கள்?

சௌதியில் மக்கள் வாழும் பரப்பைவிட சாலைகளின் பரப்பு அதிகம் என்று விளையாட்டாய் கூறுமளவிற்கு சாலைகளும் கார்களும் அதிகம். எந்த இடத்திற்கும் தடங்கலின்றி வேகமாகச்சென்று வர ஏதுவாக மேம்பாலங்களும் தரைமட்டத்திற்கு கீழிருக்கும் கீழ்ப்பாலங்களும் அதிகம். ஆனால் இப்படியான பாலங்களிலோ ஏன் சௌதியின் பொது உள்கட்டமைப்பு வசதிகள் எதிலும் முறையான வடிகால் அமைப்புகள் கிடையாது. இதனால் கீழ்பாலங்களில் திடீரென மழைவெள்ளம் சூழ்ந்து கொள்ள மீண்டு வெளியேற முடியாமல் போனதுதான் மரண எண்ணிக்கை அதிகரித்ததற்கான முக்கிய காரணம். இதை இயற்கையின் சீற்றம் என்று சொல்வதா? அரசின் அலட்சியம் என்று சொல்வதா? ஆனால் மக்களோ வேறு விதமாக சொன்னார்கள்.

மழை பெய்த இந்த காலம் இஸ்லாமியர்களின் புனிதக்கடமையான ஹஜ்ஜின் காலம். உலகெங்கிலிமிருந்து பல லட்சம் மக்கள் ஹஜ் செய்வதற்காக புனித நகரமான மக்காவில் கூடியிருந்த நேரம். ஜித்தாவிற்கு அடுத்திருக்கும் நகரம் தான் மக்கா. ஜித்தாவில் பெய்த மழை சற்றே தள்ளி மக்காவில் பெய்திருந்தால் ஆயிரக்கணக்கானவர்களல்லவா செத்துப்போயிருப்பார்கள். என்னே ஆண்டவனின் கருணை. இதுதான் மக்கள் எண்ணமாக இருந்தது. ஆண்டுதோறும் பில்லியன் கணக்கான டாலர்களை புனிதப்பள்ளிகளை விரிப்பதற்காக செலவு செய்யும் சௌதி அரசு, அதில் ஒரு விழுக்காட்டை வடிகால் வசதிக்காக செய்திருந்தால் இத்தனை உயிர்கள் மடிந்திருக்கவேண்டிய அவசியமில்லையே. நெருக்கடியான சமயங்களிலெல்லாம் ஆளும் வர்க்கத்தை காக்க கடவுள் ஓடி வருவது எவ்வளவு குரூரம்.

மன்னர் அப்துல்லா வெள்ளச்சேதங்களுக்காக அறிவித்துள்ள நிவாரணத்தொகை இன்னொரு குரூரம். சௌதி சட்டப்படி சௌதியல்லாத யரும் கடைகளுக்கு உரிமையாளராக முடியாது. ஆனால் சௌதியில்  சாலையோர சிறுசிறு வர்த்தகக்கடைகளை நடத்திக்கொண்டிருப்பது பெரும்பாலும் வெளிநாட்டினர் குறிப்பாக இந்தியர்கள். உரிமம் ஒரு சௌதியின் பெயரில் இருக்கவேண்டும் என்பதால் சௌதி ஒருவருக்கு மாதந்தோறு ஒரு குறிப்பிட்ட தொகை தருவதாக ஒப்பந்தம் செய்துகொண்டு கடையை நடத்துவார்கள். ஒருவரே பல கடைகளுக்கான உரிமத்தை வைத்திருப்பதால் எந்த வேலையும் செய்யாமலேயே வாழ்வை கழிக்கும் அளவிற்கு சௌதிகளுக்கு பணம் கிடைத்துவந்தது. இப்படி இருப்பது அரசுக்கும் அதிகாரிகளுக்கும் நன்றாகவே தெரியும். ஆனால் மன்னரோ உரிமையாளர்களுக்கு நிவாரணம் அளித்துள்ளார். வெளிநாட்டினரோ கடைகளையும் இழந்து அதற்கான நிவாரணத்தொகையும் கிடைக்காமல் தலையில் கைவைத்துக்கொண்டுள்ளனர். அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்யமுடியுமா? மூச்…. உயிர் போய்விடும். இவ்வகையில் பாதிக்கப்பட்டவர்களில் மலையாளிகள் அதிகம்.

நூறு பேர் மரணித்திருந்தும், ஜித்தாவின் புறநகர்பகுதி முழுவதுமாக நாசமடைந்திருந்தும், மைய அரசமைப்போ, ராணூவமோ நிவாரணப்பணிகளில் ஈடுபடுத்தப்படவில்லை. உள்ளூர் மெட்ரோ நகரியம் தான் முழுவேலைகளையும் செய்து வருகிறது. ஆனால் இதே நேரத்தில் சௌதி ராணுவம் யெமன் எல்லைக்குள் ஊடுறுவி யெமனியர்களை சுட்டுக்கொண்டிருந்தது. சௌதி எல்லைக்காவல் படையினர் மூவரை யெமனி ஷியா கிளர்ச்சியாளர்கள் சுட்டுக்கொன்றதாக கூறப்படுவதை அடுத்து சௌதி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. ஆனால் இதில் உள்ளாடும் அரசியல் வேறானது.

வட யெமன் தென் யெமன் என்று இரண்டு நாடுகளாக இருந்த யெமன் 1990களில் ஒன்றாக இணைந்தது. தென் யேமன் அரேபியாவின் முதல் மார்க்ஸிய அரசாகும். சோவியத் யூனியன் தென் யெமனுக்கு தேவையான உதவிகளை வழங்கிவந்த நிலையில் பனிப்போரின் உச்சத்தில் உதவிகள் படிப்படியாக நிறுத்தப்பட்டன. இதனுடன் ஆட்சியாளர்களுக்கிடையேயான அதிகாரப்போட்டியும் நாட்டை சீரழிக்க ஒன்றிணைவதை தவிர வேறு வழியில்லாமல் போனது. ஆனால் தொடர்ந்து தென்யெமன் புறக்கணிக்கப்பட்டு எந்தஒரு நலத்திட்டங்களும் தென்யெமனில் செயல்படுத்தப்படவில்லை. இதனால் மீண்டும் பிரிவினை கோரிக்கை தலைதூக்கியது. அல்ஹுத்தி தலைமையில் அஷ்ஷபாப் அல் மூமின் எனும் இயக்கம் பிரிவினைக்கோரிக்கையை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்திவந்தது. இந்த போராட்டங்களை கடுமையாக ஒடுக்கிய அரசு அதன் தலைவரையும் கொன்றது. பின்னர் இதுவே கொரில்லாக்குழுவாக மாறியது. யெமனின் பெரும்பான்மையினர் சன்னி பிரிவனைச்சேர்ந்த முஸ்லீம்கள், போராடும் இயக்கத்தினரோ ஷியாபிரிவினர் இதனால் இப்போராட்டம் ஷியா சன்னி பிரச்சனையாக திரிக்கப்பட்டது. ஆண்டுக்கணக்காக போராடினாலும் அரசால் இவர்களை முழுமையாக அடக்க முடியவில்லை. இவர்களுக்கு ஈரான் உதவுவதாக யெமன் குற்றம் சாட்டிவருகிறது.

சௌதியிலும் அதிகாரத்தில் இருப்பது சன்னி பிரிவினர் தான். இங்கும் யெமனை ஒட்டிய எல்லைப்பகுதியில் ஷியாக்கள் பரவலாக வாழ்கின்றனர். ஏற்கனவே நஜ்ரான் பகுதியில் முன்னர் ஷியாக்கள் கிளர்ச்சியில் இறங்க அரசு மிருகத்தனமாக அடக்கியது. பாலஸ்தீனத்தில் ஷியாக்களின் அமைப்பான ஹிஸ்புல்லா தீவிரமாக இயங்கிவரும் நிலையில் தமது எல்லையில் இன்னுமொரு ஷியா இயக்கம் வலுவடைவதை சௌதி விரும்பவில்லை. இதனால் ஆயுத நிதி உதவிகளை யெமன் அரசுக்கு வழங்கிவந்தது. தற்போது சௌதி ராணுவத்தினரை கொன்றதாக காரணம் கூறி (பாலஸ்தீனர்களை தாக்குவதற்கு இஸ்ரேல் கூறும் அதே காரணம்) நேரடியாகவே களத்தில் இற‌ங்கியுள்ளது. வடயெமனை விட தென்யெமனில் கனிம வளங்களும் எண்ணெய் வளங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், அந்தப்பிரதேசம் அமைதியாக இருக்கவேண்டியது ஆளூம் வர்க்கங்களுக்கும் முதலாளிகளுக்கும் அவசியமாக இருக்கிறது. கடந்த சில வாரங்களாக சௌதியின் பைட்டர் ரக விமானங்கள் குண்டுவீசி வருகின்றன. தற்போது ராணுவமும் எல்லைகடந்து தாக்குதல் நடத்திவருகிறது. பாஸ்பரஸ் குண்டுகள் வீசப்படுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. சௌதி யெமன் எல்லைபகுதிகளான கமீஸ் முஷய்த், அபஹா, ஜிசான், நஜ்ரான், முஹைல் போன்ற பகுதிகள் கடுமையான கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன.

சொந்த நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ள நிலையில் மீட்புக்கு ராணுவத்தை அனுப்பமறுக்கும் அரசு, மூன்று பேர் இறந்ததாக காரணம்கூறி இன்னொரு நாட்டிற்கு ராணுவத்தை அனுப்பி மக்களை கொல்கிறது. எந்த நாட்டு அரசாக இருந்தாலும் அதன் செயல்பாடுகள் மக்களை நோக்கியதாக ஒருபோதும் இருப்பதில்லை. ஜனநாயகமானாலும் மன்னராட்சியானாலும் இதுதான் நிலை. யாருக்கான அரசாக இருப்பது என்பதில் ஆளும் வர்க்கங்கள் தெளிவாகவே இருக்கின்றன. மக்கள் புரியவேண்டியது தான் மிச்சமிருக்கிறது.

பூமி உருண்டை என யார் சொன்னது: அல்லாவா? மனிதனா?

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே: பகுதி 9
தாலமியின் உலகப்படம்

தாலமியின் உலகப்படம்

குரான் அறிவியல் என்ற சொற்களை நாம் கேட்டவுடன் பூமி உருண்டையா? தட்டையா? எனும் வாதம் தான் நம்முள் எழும். அந்த அளவுக்கு இஸ்லாமிய அறிஞர்கள் இதற்கு விளக்கம் விளக்கமாக தந்துகொண்டிருக்கிறார்கள். பூமி உருண்டை என்பது அண்மைக்கண்டுபிடிப்பு அதற்கு முன்னர் பூமி தட்டையானது என எண்ணிக்கொண்டிருந்தனர். ஆனால் 1400 ஆண்டுகளுக்கு முன்பே குரான் பூமி உருண்டை எனக்கூறியிருப்பது இன்றும் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. 1400 ஆண்டுகளுக்கு முன்னுள்ள ஒரு மனிதனால் இப்படி கூறியிருக்க முடியுமா? எனவே முகம்மது கூறியது இறைவனின் வாக்கைத்தான் என்பது நிரூபணமாகிறது என்பது இஸ்லாமியர்களின் வாதம். மெய்யாகவே பூமி உருண்டை வடிவம் என்பதை  மனிதன் கண்டுபிடிக்கும் முன்னரே கடவுள் சொல்லிவிட்டாரா?

பூமி உருண்டை என்பதை குறிக்கும் குரானின் வசனங்கள் என்று இஸ்லாமிய அறிஞர்கள் கூறுவதை பார்ப்போம். வசனம் 3:27 நீதான் இரவை பகலில் புகுத்துகின்றாய், நீதான் பகலை இரவிலும் புகுத்துகின்றாய்…………… (22:61;31:29;35:13;57:6) இந்த வசனத்தில் பூமியின் வடிவம் குறித்து ஏதாவது சொல்லப்பட்டிருக்கின்றதா? ஒன்றுமில்லை. ஆனாலும் இதை பூமியை உருண்டை எனக்கூறுவதற்கு பயன் படுத்துகிறார்கள் எப்படி? இரவையும் பகலையும் ஒன்றின் மீது மற்றொன்றை புகுத்தும் செயல் எப்படி நிகழமுடியும்? புகுத்துதல் என்றால் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் நடைபெற முடியும் முதலில் தலை பின் உடல் பிறகு கால் இப்படி ஒவ்வொரு பகுதியாகத்தான் புகுத்தமுடியும். இந்த புகுத்துதல் எனும் சொல்லை மிகச்சரியாக கையாண்டு தான் இறைவன் இரவை பகலிலும் பகலை இரவிலும் புகுத்துவதாக கூறுகிறான். இரவிலிருந்து பகலோ, பகலிலிருந்து இரவோ திடும் என நிகழ்ந்துவிடுவதில்லை. படிப்படியாக மெதுவாக நிகழ்கிறது. ஏன் அப்படி நிகழ்கிறது என்றால் பூமி கோள வடிவத்தில் உருண்டையாக இருப்பதால். பூமி சதுர வடிவில் இருந்தால் பகலும் இரவும் மாறுவது திடுமென்று ஒரு நொடிப்பொழுதுடையதாக இருக்கும், இதிலிருந்து பூமி உருண்டை என்பதை தான் குரான் புகுத்துதல் எனும் பதத்தின் மூலம் தெளிவு படுத்துகிறது என்று கூறுகிறார்கள். 1400 ஆண்டுகளுக்கு முன்னுள்ள மனிதன் மட்டுமல்ல 2800 ஆண்டுகளுக்கு முன்னுள்ள மனிதனும் கூட இப்படி கூறியிருக்க முடியும். ஏனென்றால் மனிதன் தோன்றிய காலம் முதல் இன்று வரை இரவு பகல் மாற்றம் மெதுவாக கொஞ்சம் கொஞ்சமாகத்தான் நிகழ்கிறது. அறிவியலின் வாசம் கூட இல்லாத இந்த ஒன்றுமற்ற வசனத்தை தான் மாபெரும் அறிவியல் கொண்டதாக புழுகுகிறார்கள். இரவையும் பகலையும் புகுத்துவதாக மட்டும் தான் குரான் கூறியிருக்கிறதா? வசனம் 7:54 பகலை இரவால் மூடுகிறான் என்றும் இரவு பகலை பிந்தொடர்கிறது என்றும் வருகிறது. வசனம் 24:44  இரவும் பகலும் மாறி மாறி வருகின்றன. வசனம் 25:62 இரவும் பகலும் அடுத்தடுத்து வருகின்றன.வசனம் 39:5 இரவின் மீது பகல் சுற்றுகிறது பகலின் மீது இரவு சுற்றுகிறது, என்றெல்லாம் இரவு பகல் மாறி மாறி வந்துகொண்டே இருப்பதை பல்வேறு வார்த்தைகளில் குரான் குறிப்பிடுகிறது. இந்த வசனங்களிலெல்லாம் அறிவியல் இருக்கிறதா? உலகில் வாழ்ந்து இரவு பகல் மாறுவதை கண்ட எவராலும் சொல்லிவிட முடிகிற இவைகளை மாபெரும் அறிவியல் உண்மை என எப்படி இவர்களால் கதைவிட முடிகிறது?

வசனம் 79:30 இதன் பின்னர் அவனே பூமியை விரித்தான். என்றொரு வசனம், இதில் விரித்தான் என்னும் சொல் இருக்கும் இடத்தில் அரபியில் தஹாஹா என்னும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த தஹாஹா எனும் சொல்லுக்கு நெருப்புக்கோழியின் முட்டை என்ற பொருளும் உண்டு. பூமியை குறிப்பதற்கு இந்தச்சொல்லை பயன்படுத்தியிருப்பதன் மூலம் பூமி உருண்டை வடிவமானது என்று குரான் தெளிவுபடுத்திவிட்டது என்றும் கூறுகிறார்கள். ஆனால் எந்த ஒரு குரான் மொழிபெயர்ப்பிலும் குறிப்பிட்ட இந்த வசனத்தை யாரும் நெருப்புக்கோழியின் முட்டை என மொழிபெயர்க்கவில்லை. விரித்தான் என்று சிலரும், பிரித்தான் என்று சிலரும் தான் மொழிபெயர்த்துள்ளனர். அப்படியிருக்க நெருப்புக்கோழியின் முட்டை என்னும் பொருள் எங்கிருந்து வந்தது? உலகில் பரவலாக உள்ள எந்த‌ மொழியிலும் ஒரு உயிரினத்தின் முட்டையை குறிப்பிடுவதற்கு தனிச்சொல் இருப்பதாக தெரியவில்லை (குட்டியை குறிப்பதற்கு தனிச்சொற்கள் உள்ளன) பெயரோடு சேர்த்துத்தான் குறிப்பார்கள், கோழி முட்டை, குயில் முட்டை என்று. அரபிலும் அதே போல் தான் முட்டை என்பதற்கு பேத் எனும் பொதுச்சொல்லும் நெருப்புக்கோழியை குறிப்பதற்கு நஆம் எனும் தனிச்சொல்லும் இருக்கின்றன. இவர்களுக்கு எங்கிருந்து தஹாஹா எனும் வார்த்தைக்கு நெருப்புக்கோழியின் முட்டை என்று பொருள் கிடைத்தது?

பூமி உருண்டை என்பதற்கு குரானில் இன்னொரு ஆதாரம் இருப்பதாக கூறுகிறார்கள். குரானில் 18 ஆவது அத்தியாயம் வசனங்கள் 84 லிருந்து 98 வரை துல்கர்னைன் என்ற ஒரு மன்னனின் பயணத்தைப்பற்றி விவரிக்கிறது. அதாவது  அந்த மன்னன் ஒரு வழியில் பயணிக்கிறான், வழியில் ஒரு சமுதாய மக்களை காண்கிறான் அங்கு சூரியன் சேறு நிறைந்த நீரில் மூழ்குகிறது, தொடர்ந்து செல்கிறார் மீண்டும் சூரியன் உதிப்பதை காண்கிறார். இது தான் அந்த பதினைந்து வசனங்களின் சாரம். பூமியில் நேர்கோட்டில் பயணம் செய்தால் ஒரே திசையில் சூரியன் உதிப்பதையும் மறைவதையும் காண்கிறாரென்றால் பூமி உருண்டையாய் இருந்தால் மட்டுமே சாத்தியம் எனவே இந்த வசனங்கள் பூமி உருண்டை என்பதை உணர்த்தி நிற்கிறது என்கிறார்கள். பூமி உருண்டையாக இருந்தாலும் நேர் கோட்டில் பயணம் செய்யும் ஒருவரால் ஒரே திசையில் சூரியன் உதிப்பதையும் மறைவதையும் காணமுடியாது என்பது ஒருபுறமிருந்தாலும், அந்த மன்னர் நேர் கோட்டில் தொடர்ந்து சென்றதால் பூமி உருண்டையாயிருக்கும் பட்சத்தில் அவ்வாறு காணமுடிந்தது என்று சாதிக்கிறார்கள். ஆனால் குரானில் அவர் ஒரே திசையில் சென்றார் என கூறவில்லை என்பதே உண்மை. 18:85 ம் வசனம் அவர் ஒரு வழியில் சென்றார் என்றும் 18:89 ம் வசனம் பின்னர் ஒரு வழியில் சென்றார் எனவும் இருக்கிறது.

பூமி உருண்டை என்று குரான் கூறியிருக்கிறது என்று நிரூபிப்பதற்காக தோதுப்பட்ட வசனங்களிலெல்லாம் வலிந்து அறிவியலை ஏற்றியிருக்கிறார்கள். பூமியின் வடிவத்தைப்பற்றி நேரடியாக எதுவுமே கூறாத வசனங்களை, சாதாரண காட்சிகளை விவரிக்கும் வசனங்களை பூமி உருண்டை என ஐயந்திரிபற நிரூபிக்கப்பட்டபின்னான் காலத்தில் நின்றுகொண்டு பூமி உருண்டையாக இருந்தால் தான் இப்படி இருக்கமுடியும் எனவே இவ்வசனங்கள் பூமி உருண்டை என கூறுவதாக டம்பமடிக்கும் இவர்கள்; பூமியின் வடிவம் பற்றி கூறும் குரான் வசனங்களுக்கு வேறு விதமாக விளக்கமளிக்கிறார்கள். ஒன்றல்ல இரண்டல்ல அனேக இடங்களில் பூமியின் வடிவத்தை ஒரே மாதிரியாக வர்ணிக்கிறது குரான். 2:22; 13:3; 15:19; 20:53; 43:10; 50:7; 51:48; 55:10; 71:19; 78:6; 79:30; 84:3; 88:20; 91:6 குரானில் வரும் இந்த வசனங்களெல்லாம் ஒரே மாதிரியாக பூமியை தட்டை என பொருள் கொள்ளும்படி பூமியை விரித்திருப்பதாக கூறுகிறது. இவைகளையும் பூமி உருண்டை எனக்கூறுவதாக திரிக்கிறார்கள்.  விரிப்பு என்பதன் பொருளை பூமிக்கு எப்படி பொருத்துகின்றனர்?  விரிப்பு என்றால் அவை சமதளத்தில் மட்டுமல்ல கோளத்தின் மீதும் பரப்பலாம் எனவே விரிப்பு என்ற உவமையின் மூலம் பூமி தட்டை என்பதை அல்ல உருண்டை என்பதையே மறைமுகமாக உணர்த்துகிறது என்று ஜல்லியடிக்கின்றனர்.  பூமி அதன் புவியியல் அமைப்பில் மூன்று அடுக்குகளை கொண்டிருக்கிறது அ) இன்னர் கோர் எனப்படும் உட்கரு ஆ) அவுட்டர் கோர் எனப்படும் வெளிக்கரு இ) மேண்டில் எனப்படும் மேலோடு. இதில் உட்கரு திடப்பொருளாகவும், வெளிக்கரு எரிமலைக்குளம்பாக திரவப்பொருளாகவும் இருக்கிறது. மேலோடு நாம் காணும் கடல், மலை, நிலம் என்று மேற்பரப்பாகவும் இருக்கிறது. இந்த மேலோட்டைதான் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற விரிப்பாக ஆக்கியிருப்பதாக பொருள் சொல்கிறார்கள். பூமியின் மேலோட்டை குரான் விரிப்பாக குறிப்பிடுவதாகவே கொள்வோம். எந்த வடிவத்தில் அந்த விரிப்பு விரிக்கப்பட்டிருக்கிறது? சமதளத்திலா? அல்லது உருண்டை வடிவத்திலா? என்ற கேள்விக்கு குரானில் விடை இருக்கிறதா? பூமி உருண்டையாக இருப்பதனால் அதன் மேலும் விரிப்பை பரப்ப முடியும் என்ற முடிவுக்கு வரமுடிகிறது. பூமி உருண்டையா தட்டையா என்று தெரியாது எனக்கொண்டால் குரானிய வசனங்களின் படி உருண்டை தான் என எப்படி உறுதிப்படுத்துவது?

மேற்கூறிய விவரங்களெல்லாம் குரான் இறங்கிய வேளையில் மக்களுக்கு பூமி உருண்டை எனும் அறிவியல் தெரியாமல் இருந்ததாகவே எடுத்துக்கொண்டு விளக்கப்பட்டவை. ஆனால்  பூமி உருண்டை எனும் அறிவு பன்னெடுங்காலத்திற்கு முன்பே மக்களிடம் இருந்தது என்பது தான் மெய். கிரேக்கர்கள் சீனர்கள் இந்தியர்கள், அராபியர்கள் கடலாடிய செய்திகள் பண்டைய இலக்கியங்களில் விரவிக்கிடக்கின்றன. கடலில் செல்லும் கப்பலும், கரைக்கு திரும்பும் கப்பலும் கரையிலிருந்து பார்க்கையில் கடலுக்குள் கீழ் வளைந்து செல்வதுபோலவும், கீழ் வளைவாக மேலேறி வருவதையும் கண்டு பூமியின் வடிவம் உருண்டை என்பதை பட்டறிவாகவே விளங்கி வைத்திருந்தனர். மட்டுமன்றி அறிவியல் ரீதியாக பூமி உருண்டை என‌ முத‌லில் கூறிய‌வ‌ர் பைலோலாஸ் எனும் கிரேக்கர் ஆண்டு கிமு 450. கிமு இர‌ண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த‌ எரோட்ட‌ஸ்த‌னிஸ் எனும் கிரேக்கர் பூமியின் சுற்ற‌ள‌வை தோராய‌மாக‌ க‌ண‌க்கிட்டு 25000 மைல் என்று கூறினார். இன்றைய‌ துல்லிய‌மான‌ க‌ண‌க்கீடு 24902.4 மைல். அதே கிமு இரண்டாம் நூற்றாண்டில் ஹிப்பார்க்கஸ் என்பவர்  பூமியை அட்சரேகை கடகரேகை எனும் கற்பனைக்கோடுகளால் பூமியை பிரித்தார். கிபி இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்த தாலமி எனும் எகிப்திய மாலுமி பூமியை வரைபடமாக வரைந்தார். இதன் பிறகு கிபி ஆறாம் நூற்றாண்டில்தான் அரேபியாவில் முகம்மது பிறக்கிறார். ஆனால் இஸ்லாமிய அறிஞர்களோ முகம்மதுவின் காலத்தில் பூமி உருண்டை எனும் அறிவு மக்களுக்கு இல்லை என்று இன்றும் வெட்கமில்லாமல் கூறித்திரிகிறார்கள்.

அறிவியலை மதவாதிகள் பயன்படுத்துவது கேட்கும் பாமரர்களை வியப்படையச்செய்வதன் மூலம் மதம் மாற்றுவதற்காகவும் ஏற்கனவே இருப்பவர்களை இன்னும் இறுக்கப்படுத்துவதற்குத்தானேயன்றி தேடலுக்காகவல்ல. தொடர்ந்து அவர்களின் அறிவியல் வாதங்களூடே பயணிப்போம்.

அனைவருக்கும் அருள் பாலித்த‌ லிபரான் அறிக்கை

மாட்சிமை தாங்கிய ஆட்சிமை வழங்கும்(!) பெருமை மிகு பாராளுமன்றத்தில் வெளியிடும் முன்பே நாளிதழ்களில் வெளியாகி விட்டது லிபரான் அறிக்கை. அடுக்குமா இது, இந்தியாவுக்கே தலைகுனிவல்லவா எகிரிக்குதிக்கின்றன ஓட்டுக்கட்சிகள். காட் ஒப்பந்தம் முதல் இப்போதைய அணு ஒப்பந்தம் வரை நாடாளுமன்றத்தில் வைக்காமலேயே நடப்புக்கு வந்தபோதெல்லாம் அடங்கியிருந்த கோபம் லிபரான் அறிக்கையில் பொங்கி வழிகிறது. 17 ஆண்டுகள் 48 முறை கால நீட்டிப்பு சற்றேறக்குறைய 8 கோடி ரூபாய் செலவு இவ்வள‌வையும் செரித்துவிட்டு லிபரான் அறிக்கை தந்திருக்கும் சாறு வாஜ்பாய், அத்வானி, பால் தாக்கரே, மற்றும் காங்கிரஸ் அமைச்சர் வகேலா உட்பட அறுபதிற்கும் மேற்பட்டோர் மசூதி இடிப்பில் தொடர்புடைய குற்றவாளிகள் என அறிவித்திருப்ப‌து. 92 டிசம்பர் 6க்கு மறுவாரத்தில் தேனீர்கடைகளில் பேசப்பட்ட உண்மையை கண்டுபிடிக்க 17 ஆண்டுகள்; கோபம் வரவேண்டிய இந்த இடத்தில் யாருக்கும் கோபம் வரவில்லை. ஆனால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முதல் நாள் நாளிதழ்களில் வந்துவிட்டதால் இரு அவைகளும் அமளியில் அதிர்ந்தது. ஏன்? ஏனென்றால் மெய்யாகவே இது கோபமில்லை, கோபமாக வெளிப்படுத்தப்படும் மகிழ்ச்சி.

லாலு பிரசாத் ரயில்வே அமைச்சராக இருந்தபோது ரயில்வேதுறையில் ஊழல் நடந்திருக்கிறது, அதை விசாரிக்கவேண்டும் என்று தற்போதைய அமைச்சர் மம்தா பானர்ஜி நேரடியாக சிபிஐ க்கு கடிதம் எழுதியதால் காங்கிரசுக்கு  என்ன செய்வது என்று தர்மசங்கடம். தங்கவிலை எகிறுவது போல் நாளுக்கு நாள் மது கோடாவின் சொத்துக்கணக்கு எகிறுவதால் ஏதாவது செய்து திசைதிருப்பியாக வேண்டிய நிர்ப்பந்தம். அலைவரிசை ஊழலில் திமுகவை எதிர்த்து நடவடிக்கை எடுக்கவும் முடியாமல் எதிர்ப்பையும் சமாளிக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கும் சூழல்,  இவைகளை மந்திரம் போட்டாற்போல் மறக்கடிக்க வைக்கும் ஒன்றாக கிடைத்தது அறிக்கை கசியவிடப்பட்டது. எனவே ஆளும் கும்பலுக்கு மகிழ்ச்சி.

ஆர் எஸ் எஸ் மோகன் பகவத்தை நேரடியாக எதிர்த்து அறிக்கை விட்ட ராஜ்நாத், தேர்தல்களில் அடிக்கு மேல் அடிவாங்கிய கலக்கத்திலும் பிரதமர் கனவு தகர்ந்து போன அதிர்ச்சியிலும் அத்வானி. இனியும் ராமன் பயன்படமாட்டான் என்று பரணில் வீசியாயிற்று வேறு யாரைச்சொல்லி  நடத்திச்செல்வது என்ற குழப்பத்தில் கட்சி. ஒரு வழியாக அடுத்த தலைவரை தேர்வு செய்து விட்டாலும் மல்லுக்கு நிற்கும் சுஷ்மாவையும் மனோகர் ஜோஷியையும் என்ன செய்வது என்ற கவலை. எல்லாவற்றுக்கும் மேலாக லிபரானை காரணம் காட்டி காங்கிரஸ் பழி வாங்கினால் அதை எப்படி கட்சிக்கான ஓட்டாக மாற்றுவது என்ற யோசனை. இவ்வளவிலிருந்தும் ஆசுவாசப்பட அருமணியாய் வாய்த்தது அறிக்கை கசியவிடப்பட்டது. எனவே காவிக்கும்பலுக்கு மகிழ்ச்சி

ஆண்டு தோறும் டிசம்பர் 6 நினைவு நாளைப்போல் கொண்டாட மக்களை பழக்கி விட்ட போதிலும் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கு இத்தனை ஆண்டுகளாக சட்டரீதியாகவே இழுத்தடிக்கப்பட்டபோதிலும், பாபர் பள்ளியை சொல்லியே அரசியல் விழிப்புணர்வு என்ற பெயரில் மதரீதியாக  ஓரளவு ஒன்று திரட்டிவிட்ட போதிலும்; இன்னும் எத்தனை காலத்திற்கு இந்த ஆதரவை இப்படியே தக்கவைக்க முடியும் எனும் வேளையில் மிகச்சரியாய் வந்த லிபரான் அறிக்கையும், எதிர்பார்த்தது போலவே இந்து பாசிசங்களை குற்றம் சாட்டி வந்ததும் மதவாத கும்பல்களுக்கு மகிழ்ச்சி

லிபரான் அறிக்கையுடனேயே தாக்கல் செய்யப்பட்ட மேல் நடவடிக்கை திட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் மீது எடுக்கப்படவிருக்கும் நடவடிக்கை குறித்த எந்த உருப்படியான திட்டமும் இல்லை. ஆனால் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது வழக்கு உறுதி என்று நாளிதழ்கள் வாயிலாக சவடால் அடிப்பதில் எந்தக்குறைவும் இல்லை. ஆக திட்டமிட்ட நாடகம் வெற்றிகரமாக அரங்கேற்றப்பட்டுவிட்டது. இதில் பார்வையாளர்களான மக்கள் தான் வழக்கம் போல் பாதிப்புக்கு உள்ளாகி நிற்கிறார்கள்.

நடப்பு ஆண்டில் மட்டும் பல‌முறை சர்க்கரை விலை  உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் கரும்பு கொள்முதல் விலையோ உயர்த்தப்படுவதில்லை. கரும்பு கொள்முதல் விலை சட்டத்தை எதிர்த்து கரும்பு விவசாயிகள் ஒன்றுகூடி தலைந‌கரில்  போராட்டம் ஒன்றை நடத்திக்காட்டினார்கள். லிபரான் அறிக்கை சுனாமியில் கரும்பு கட்டுமரங்கள் தூக்கிவீசப்பட்டன. ஒட்டுக்கட்சிகளின் ஒவ்வொரு நடவடிக்கையும் மக்களின் ஒருங்கிணைவையும் தளராத போராட்டத்தையுமே கோரி நிற்கின்றன. அதை நோக்கி நகர்வது தான் மக்களின் முன்னுள்ள ஒரே தெரிவாக இருக்கிறது. இதையும் தன் லிபரான் அறிக்கை கசிவு உணர்த்தி நிற்கிறது.

%d bloggers like this: