சௌதியின் மழைக்கொலைகளை விட யெமனின் எல்லைக்கொலைகள் அடர்த்தியானவை.

குடை என்றதும் நமக்கு மழைதான் நினைவுக்கு வரும் ஆனால் குடையை ‘ஸம்சியாஹ்’ (வெயில் தாங்கி)என அழைக்கும் சௌதியின் பண்பாடு மழைக்கும் அவர்களும் உள்ள உறவை நமக்கு விளக்கும். கடந்த நவம்பர் இறுதியில் சௌதியின் வணிகத்தலைநகரான ஜித்தாவில் மழை கொட்டித்தீர்த்தது. கிடைக்கும் இடங்களிலெல்லாம் மழைநீர் புகுந்தது. ஜித்தாவின் புறநகர்ப்பகுதியில் அந்த இடத்தையே தலைகீழாக புறட்டிப்போட்டதுபோல் உருக்குலைந்து கிடந்தது. பல வீடுகள் இடிந்து சரிந்தன, சாலைகள் இருந்த சுவடின்றி அரித்துச்செல்லப்பட்டன. மழைவெள்ளத்தில் சருகைப்போல் அடித்துச்செல்லப்பட்ட வாகனங்கள் குப்பையைப்போல் குவிந்து கிடந்தன. ஜித்தாவின் அதிமுக்கிய சாலையான தரிக் அல் மதீனா பல நாட்களுக்கு தண்ணீர் வடியாமல் தேங்கிக்கிடந்தது. எழுபது பேர் மரணம் என அரசு தரப்பிலும் நூறுக்கு அதிகமிருக்கும் என அதிகாரபூர்வமற்றும் தகவல்கள்.

நாற்பது, நாற்பத்தைந்து செமீ மழைகளை கண்டும் கடந்தும் சென்ற நமக்கு ஆறு செமீ மழைக்கு நூற்பேர் மரணம் என்பது அதிர்ச்சி தான். பொதுவாக மழைச்சாவுகள் அல்லது இயற்கை சீற்றத்தினாலான சாவுகள் என்பது எல்லோரும் நினைப்பதுபோல் இயற்கை மரணமோ இயற்கையினாலான மரணமோ அல்ல. அவை கொலைகள், இயற்கை சீற்றத்தை கணித்து அதை மக்களை காக்கும் வகையில் பயன் படுத்தவேண்டியது அரசின் கடமை. அந்தக்கடமையை செய்யாத அலட்சியமும், இயற்கையை அதன் இயல்புக்கு மாறாக பணவெறியுடன் சூரையாடுவதும் சேர்ந்து மக்களை செய்யும் கொலைகள் தான் இயற்கைச்சீற்றம் என்ற பொதுவான அடைமொழியில் அடையாளப்படுத்தப்படுகிறது. பாலைவன நாட்டில் மழையை எதிர்பார்த்திருக்க முடியாது என்று சொல்லிவிட முடியாது. ஏனென்றால் 27 ஆண்டுகளுக்கு முன்னர் இதுபோன்றதொரு மழையில் 30பேர் மரணித்ததாக செய்திகள் குறிப்பிடுகின்றன. ஆனால் அப்போதைவிட அறிவியலும் தொழில்நுட்பமும் வளர்ந்த இப்போதோ நூறு பேர். பொருளாதாரத்தில் வளர்ந்த ஒரு நாட்டில் ஆறு செமீ மழைக்கு நூறு பேர் எப்படி மரணமடைந்தார்கள்?

சௌதியில் மக்கள் வாழும் பரப்பைவிட சாலைகளின் பரப்பு அதிகம் என்று விளையாட்டாய் கூறுமளவிற்கு சாலைகளும் கார்களும் அதிகம். எந்த இடத்திற்கும் தடங்கலின்றி வேகமாகச்சென்று வர ஏதுவாக மேம்பாலங்களும் தரைமட்டத்திற்கு கீழிருக்கும் கீழ்ப்பாலங்களும் அதிகம். ஆனால் இப்படியான பாலங்களிலோ ஏன் சௌதியின் பொது உள்கட்டமைப்பு வசதிகள் எதிலும் முறையான வடிகால் அமைப்புகள் கிடையாது. இதனால் கீழ்பாலங்களில் திடீரென மழைவெள்ளம் சூழ்ந்து கொள்ள மீண்டு வெளியேற முடியாமல் போனதுதான் மரண எண்ணிக்கை அதிகரித்ததற்கான முக்கிய காரணம். இதை இயற்கையின் சீற்றம் என்று சொல்வதா? அரசின் அலட்சியம் என்று சொல்வதா? ஆனால் மக்களோ வேறு விதமாக சொன்னார்கள்.

மழை பெய்த இந்த காலம் இஸ்லாமியர்களின் புனிதக்கடமையான ஹஜ்ஜின் காலம். உலகெங்கிலிமிருந்து பல லட்சம் மக்கள் ஹஜ் செய்வதற்காக புனித நகரமான மக்காவில் கூடியிருந்த நேரம். ஜித்தாவிற்கு அடுத்திருக்கும் நகரம் தான் மக்கா. ஜித்தாவில் பெய்த மழை சற்றே தள்ளி மக்காவில் பெய்திருந்தால் ஆயிரக்கணக்கானவர்களல்லவா செத்துப்போயிருப்பார்கள். என்னே ஆண்டவனின் கருணை. இதுதான் மக்கள் எண்ணமாக இருந்தது. ஆண்டுதோறும் பில்லியன் கணக்கான டாலர்களை புனிதப்பள்ளிகளை விரிப்பதற்காக செலவு செய்யும் சௌதி அரசு, அதில் ஒரு விழுக்காட்டை வடிகால் வசதிக்காக செய்திருந்தால் இத்தனை உயிர்கள் மடிந்திருக்கவேண்டிய அவசியமில்லையே. நெருக்கடியான சமயங்களிலெல்லாம் ஆளும் வர்க்கத்தை காக்க கடவுள் ஓடி வருவது எவ்வளவு குரூரம்.

மன்னர் அப்துல்லா வெள்ளச்சேதங்களுக்காக அறிவித்துள்ள நிவாரணத்தொகை இன்னொரு குரூரம். சௌதி சட்டப்படி சௌதியல்லாத யரும் கடைகளுக்கு உரிமையாளராக முடியாது. ஆனால் சௌதியில்  சாலையோர சிறுசிறு வர்த்தகக்கடைகளை நடத்திக்கொண்டிருப்பது பெரும்பாலும் வெளிநாட்டினர் குறிப்பாக இந்தியர்கள். உரிமம் ஒரு சௌதியின் பெயரில் இருக்கவேண்டும் என்பதால் சௌதி ஒருவருக்கு மாதந்தோறு ஒரு குறிப்பிட்ட தொகை தருவதாக ஒப்பந்தம் செய்துகொண்டு கடையை நடத்துவார்கள். ஒருவரே பல கடைகளுக்கான உரிமத்தை வைத்திருப்பதால் எந்த வேலையும் செய்யாமலேயே வாழ்வை கழிக்கும் அளவிற்கு சௌதிகளுக்கு பணம் கிடைத்துவந்தது. இப்படி இருப்பது அரசுக்கும் அதிகாரிகளுக்கும் நன்றாகவே தெரியும். ஆனால் மன்னரோ உரிமையாளர்களுக்கு நிவாரணம் அளித்துள்ளார். வெளிநாட்டினரோ கடைகளையும் இழந்து அதற்கான நிவாரணத்தொகையும் கிடைக்காமல் தலையில் கைவைத்துக்கொண்டுள்ளனர். அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்யமுடியுமா? மூச்…. உயிர் போய்விடும். இவ்வகையில் பாதிக்கப்பட்டவர்களில் மலையாளிகள் அதிகம்.

நூறு பேர் மரணித்திருந்தும், ஜித்தாவின் புறநகர்பகுதி முழுவதுமாக நாசமடைந்திருந்தும், மைய அரசமைப்போ, ராணூவமோ நிவாரணப்பணிகளில் ஈடுபடுத்தப்படவில்லை. உள்ளூர் மெட்ரோ நகரியம் தான் முழுவேலைகளையும் செய்து வருகிறது. ஆனால் இதே நேரத்தில் சௌதி ராணுவம் யெமன் எல்லைக்குள் ஊடுறுவி யெமனியர்களை சுட்டுக்கொண்டிருந்தது. சௌதி எல்லைக்காவல் படையினர் மூவரை யெமனி ஷியா கிளர்ச்சியாளர்கள் சுட்டுக்கொன்றதாக கூறப்படுவதை அடுத்து சௌதி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. ஆனால் இதில் உள்ளாடும் அரசியல் வேறானது.

வட யெமன் தென் யெமன் என்று இரண்டு நாடுகளாக இருந்த யெமன் 1990களில் ஒன்றாக இணைந்தது. தென் யேமன் அரேபியாவின் முதல் மார்க்ஸிய அரசாகும். சோவியத் யூனியன் தென் யெமனுக்கு தேவையான உதவிகளை வழங்கிவந்த நிலையில் பனிப்போரின் உச்சத்தில் உதவிகள் படிப்படியாக நிறுத்தப்பட்டன. இதனுடன் ஆட்சியாளர்களுக்கிடையேயான அதிகாரப்போட்டியும் நாட்டை சீரழிக்க ஒன்றிணைவதை தவிர வேறு வழியில்லாமல் போனது. ஆனால் தொடர்ந்து தென்யெமன் புறக்கணிக்கப்பட்டு எந்தஒரு நலத்திட்டங்களும் தென்யெமனில் செயல்படுத்தப்படவில்லை. இதனால் மீண்டும் பிரிவினை கோரிக்கை தலைதூக்கியது. அல்ஹுத்தி தலைமையில் அஷ்ஷபாப் அல் மூமின் எனும் இயக்கம் பிரிவினைக்கோரிக்கையை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்திவந்தது. இந்த போராட்டங்களை கடுமையாக ஒடுக்கிய அரசு அதன் தலைவரையும் கொன்றது. பின்னர் இதுவே கொரில்லாக்குழுவாக மாறியது. யெமனின் பெரும்பான்மையினர் சன்னி பிரிவனைச்சேர்ந்த முஸ்லீம்கள், போராடும் இயக்கத்தினரோ ஷியாபிரிவினர் இதனால் இப்போராட்டம் ஷியா சன்னி பிரச்சனையாக திரிக்கப்பட்டது. ஆண்டுக்கணக்காக போராடினாலும் அரசால் இவர்களை முழுமையாக அடக்க முடியவில்லை. இவர்களுக்கு ஈரான் உதவுவதாக யெமன் குற்றம் சாட்டிவருகிறது.

சௌதியிலும் அதிகாரத்தில் இருப்பது சன்னி பிரிவினர் தான். இங்கும் யெமனை ஒட்டிய எல்லைப்பகுதியில் ஷியாக்கள் பரவலாக வாழ்கின்றனர். ஏற்கனவே நஜ்ரான் பகுதியில் முன்னர் ஷியாக்கள் கிளர்ச்சியில் இறங்க அரசு மிருகத்தனமாக அடக்கியது. பாலஸ்தீனத்தில் ஷியாக்களின் அமைப்பான ஹிஸ்புல்லா தீவிரமாக இயங்கிவரும் நிலையில் தமது எல்லையில் இன்னுமொரு ஷியா இயக்கம் வலுவடைவதை சௌதி விரும்பவில்லை. இதனால் ஆயுத நிதி உதவிகளை யெமன் அரசுக்கு வழங்கிவந்தது. தற்போது சௌதி ராணுவத்தினரை கொன்றதாக காரணம் கூறி (பாலஸ்தீனர்களை தாக்குவதற்கு இஸ்ரேல் கூறும் அதே காரணம்) நேரடியாகவே களத்தில் இற‌ங்கியுள்ளது. வடயெமனை விட தென்யெமனில் கனிம வளங்களும் எண்ணெய் வளங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், அந்தப்பிரதேசம் அமைதியாக இருக்கவேண்டியது ஆளூம் வர்க்கங்களுக்கும் முதலாளிகளுக்கும் அவசியமாக இருக்கிறது. கடந்த சில வாரங்களாக சௌதியின் பைட்டர் ரக விமானங்கள் குண்டுவீசி வருகின்றன. தற்போது ராணுவமும் எல்லைகடந்து தாக்குதல் நடத்திவருகிறது. பாஸ்பரஸ் குண்டுகள் வீசப்படுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. சௌதி யெமன் எல்லைபகுதிகளான கமீஸ் முஷய்த், அபஹா, ஜிசான், நஜ்ரான், முஹைல் போன்ற பகுதிகள் கடுமையான கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன.

சொந்த நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ள நிலையில் மீட்புக்கு ராணுவத்தை அனுப்பமறுக்கும் அரசு, மூன்று பேர் இறந்ததாக காரணம்கூறி இன்னொரு நாட்டிற்கு ராணுவத்தை அனுப்பி மக்களை கொல்கிறது. எந்த நாட்டு அரசாக இருந்தாலும் அதன் செயல்பாடுகள் மக்களை நோக்கியதாக ஒருபோதும் இருப்பதில்லை. ஜனநாயகமானாலும் மன்னராட்சியானாலும் இதுதான் நிலை. யாருக்கான அரசாக இருப்பது என்பதில் ஆளும் வர்க்கங்கள் தெளிவாகவே இருக்கின்றன. மக்கள் புரியவேண்டியது தான் மிச்சமிருக்கிறது.

5 thoughts on “சௌதியின் மழைக்கொலைகளை விட யெமனின் எல்லைக்கொலைகள் அடர்த்தியானவை.

  1. ” ஜனநாயகமானாலும் மன்னராட்சியானாலும் இதுதான் நிலை. யாருக்கான அரசாக இருப்பது என்பதில் ஆளும் வர்க்கங்கள் தெளிவாகவே இருக்கின்றன. மக்கள் புரியவேண்டியது தான் மிச்சமிருக்கிறது.”

    சிறப்பானவை இந்த வரிகள்,
    மிக்க நேர்த்தியான கட்டுரை,தமிழ் படங்களில் சொல்வார்கள் “சவுதி ரோட்டுல சோத்தை போட்டு தின்னலாம் அப்புடி பள பளன்னு இருக்கும்”. உண்மைதான் போலிருக்கிறது, ஆளும் வர்க்கத்தின் பளபளப்புக்கு பலியாகிப்போனதோ மக்கள்.

    கலகம்

  2. “””””””மிக்க நேர்த்தியான கட்டுரை,தமிழ் படங்களில் சொல்வார்கள் “சவுதி ரோட்டுல சோத்தை போட்டு தின்னலாம் “”””””””””””””””””””

    அது சவுதி ரோடு இல்லீங்கோ துபாய் ரோடு(வெற்றிகொடிகட்டு).
    அது சிங்கப்பூர் ரோடு(நினைத்தாலே இனிக்கும்)—-(சிங்கப்பூரா (அ) மலேசியாவா சரியா தெரியலை)

  3. சரி வுடு
    ஒனக்கு அறிவு ஜாஸ்திதான் ஒத்துக்குறன்

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s