ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம்

கம்யூனிசம் என்றாலே ஏகாதிபத்திய எடுபிடிகளுக்கும், மதவாதிகளுக்கும்  வேப்பங்காயாய் கசக்கிறது. ரஷ்யாவிலும் சீனாவிலும் புரட்சியை சாதிப்பதற்கும் சமத்துவத்தை கொண்டுவருவதற்கும் கண்ட இழப்புகளும் அதைக்கண்டு கலங்காத லட்சிய வேகமும் சாதாரணமானவையல்ல. அவர்கள் மீது தூற்றப்படும் அவதூறுகளும் கட்டப்படும் கட்டுக்கதைகளும் கொஞ்சமல்ல. அன்றிலிருந்து இன்றுவரை இது தொடர்ந்துகொண்டிருக்கிறது. இவை அத்தனையும் மீறித்தான் மக்கள் மத்தியில் கம்யூனிசம் வேர்விட்டுக்கொண்டிருக்கிறது. ஏகாதிபத்திய சுரண்டலின் வேகமும் தீவிரமும் மக்களை கம்யூனிசத்தை நோக்கி திருப்பியுள்ள‌து. முதலாளியம் வீழ்ந்தே தீரும், கம்யூனிசம் நிச்சயம் வெல்லும். இது வெற்று முழக்கமல்ல வரலாற்று வழியிலான எதிர்கால உண்மை.

இன்று (டிசம்பர் 26) தோழர் மாவோவின் பிறந்தநாள். தோழர் மாவோவைப்பற்றி தெரிந்து கொள்வதும், உள்வாங்கிக்கொள்வதும் இன்றைய காலகட்டத்தின் மிகவும் இன்றியமையாத ஒரு தேவையாகும். 1994 ல் தோழரின் நூற்றாண்டு நினைவாக புதிய பூமி வெளியீட்டகம் வெளியிட்ட “ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம்” எனும் சிறு நூலை (பதிப்புரை, முகவுரை, குழந்தைப்பருவம், சாங் ஷாவில் வாழ்ந்த நாட்கள், புரட்சிக்கு முன்னோடி, தேசியவாத காலகட்டம், சீன சோவியத் இயக்கம், செஞ்சேனையின் வளர்ச்சி, மாசேதுங்குடன் மேலும் சில செவ்விகள் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது) தொடராக இங்கு வெளியிடவிருக்கிறேன். நண்பர்களுக்கு தோழர் மாவோ பற்றிய சிறந்த அறிமுகமாகவும், தோழர்களுக்கு விரிவாக எடுத்துச்செல்ல உதவியாகவும் இருக்குமென நம்புகிறேன்.

தோழமையுடன்

செங்கொடி

ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம்

மூலம்: எட்ஹார் ஸ்னோ

தமிழில்: எஸ். இந்திரன்

சவுத் ஏசியன் புக்ஸ்

புதிய பூமி வெளியீட்டகம்.

பதிப்புரை

மார்க்சிய லெனினிசத்தின் பதிய படிநிலை வளர்ச்சிக்கு சீனப்புரட்சியின் அனுபவங்களை தகுந்த களமாக அமைந்தது. அதனை வளப்படுத்தி முன்னெடுத்ததில் தோழர் மாசேதுங்கின் வரலாற்றுப்பாத்திரம் மகத்தானது. அவரது பங்களிப்பு தனியே சீனதேசத்திற்கு மட்டும் உரியதன்று. உலகப்பாட்டாளி வர்க்கத்திற்கும் சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கும் பெறுமதி மிக்க பொக்கிசமாக அமைந்தது. மேற்கில் தோற்றம் பெற்று ரஷ்யப்புரட்சியின் ஊடாக கிழக்கு உலகிற்குள் புகுந்த மார்க்சிச லெனினிசத்தை கையேற்றுப்பாதுகாத்து அதனை சீன நாட்டின் விசேச நிலைமைகளுக்கு ஏற்ப பிரயோகித்து வெற்றிகண்ட நடைமுறைமைகளின் மூலம் மேலைக்காற்றை கீழைக்காற்று மேவி நிற்கும் நிலைக்கு உந்துவிசை கொடுத்தவர் தோழர் மாசேதுங் ஆவார். அவரது தத்துவார்த்த அரசியல் நடைமுறை வழிகாட்டல்கள் இன்றும் நமது நாடு போன்ற மூன்றாம் உலக நாடுகளின் மீட்சிக்கு ஒளிமிகுந்த வழிகாட்டியாக இருந்துவருகின்றன. அத்தகைய மாமேதையின் நூற்றாண்டு நினைவு(1893-1993) ஆண்டாகும். டிசம்பர் மாதம் 26ம் தேதி அவர் பிறந்த தினமாகும். அவரது நூற்றண்டு தின நினைவாகவே இந்நூல் வெளிவருகிறது. மாசேதுங் பற்றி அவரது காலத்தில் வெளியிடப்பட்ட உலகப்புகழ் பெற்ற நூலிலிருந்து மொழியாக்கம் செய்யப்பட்டதே இந்நூலாகும் எட்ஹார் ஸ்னோ எனும் 30 வயதுடைய அமெரிக்க பத்திரிக்கையாளர் 1937ம் ஆண்டில் மாவோவையும் ஏனைய சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களையும் சந்தித்து சேகரித்த அரிய தகவல்களை ஒன்று திரட்டி “சீனாவின் மீது செந்தாரகை” எனும் நூலினை எழுதி வெளியிட்டார். சீன மக்களின் நன்மதிப்பினையும், சீன கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர்களின் நம்பிக்கையையும் பெற்ற எட்ஹார் ஸ்னோ பற்றி சில வார்த்தைகள் கூறுவது அவசியம்.

எட்ஹார் ஸ்னோ ஒரு அமெரிக்கப்பத்திரிகையாளர். அவர் மாவோவை சந்திப்பதற்கு முன்பாக ஏழு ஆண்டுகள் வரை சீனாவில் தங்கியிருந்து, சீன தேசம் பற்றிய பல விசயங்களை படித்துவந்தார். யென்சிங் பல்கலைக்கழகத்தில் ஒரு விரிவுரையாளராகவும் கடமை புரிந்திருக்கிறார். சிகாகோ ட்ரிபியூன், லண்டன் டெய்லி ஹரால்ட் போன்ற பத்திரிக்கைகளுக்கு ஆசியப்பிரதிநிதியாகவும் கடமையாற்றியிருக்கிறார். இரண்டாவது உலக யுத்தத்தின் போது சாட்டர்டே ஈவினிங் போஸ்ட் பத்திரிக்கையின் இணை ஆசிரியராகவும், யுத்த நிருபராகவும் இருந்திருக்கிறார். யுத்தத்தின் பின்னைய காலப்பகுதியில்  இந்தியா, சீனா, சோவியத் யூனியன் ஆகிய நாடுகளைப்பற்றிய தகவல்களைத் தருவதில் புலமை பெற்ற பத்திரிக்கையாளராகத் திகழ்ந்தார். எட்ஹார் ஸ்னோ பல நூல்களை எழுதியுள்ளார், அவற்றுள் ஆசியாவுக்கான சமர், மக்கள் எமது பக்கம், ஆரம்பத்தை நோக்கிய பயணம், இன்றைய செஞ்சீனா, ஆற்றின் மறுகரை ஆகியன உள்ளடங்கும். ஸ்னோவும் அவரது மனைவியும் பல ஆண்டுகள் சீனாவில் வாழ்ந்தனர்.  சீன மொழியை ஸ்னோ கற்றறிந்து பல்வேறு தகவல்களை ஆதாரப்பூர்வமாக பெற்றுக்கொண்டார். சீன மக்களின் போராட்டங்களை நன்கு விளங்கிக்கொண்டு அதன் தாக்கங்களை மட்டுமன்றி  ஏற்படவிருக்கும் மாற்றங்களையும் அவரால் தெளிவாக உலகிற்கு எடுத்துக்கூற முடிந்தது.

முப்பதுகளில் சீனக் கம்யூனிஸ்டுகளை சிவப்பு வழிப்பறிக் கொள்ளைக்காரர்கள் என ஏகாதிபத்திய பிற்போக்குவாதிகள் பிரச்சாரம் செய்துவந்தனர். இத்தகைய சூழலில் சீன கம்யூனிஸ்ட் தலைமைப்பீடத்துடன் மேற்கத்திய பத்திரிக்கையாளர்களோ அரசியல் அவதானிகளோ தொடர்பு கொள்ளமுடியவில்லை. அன்றைய காலகட்டத்தில் சீனாவில் இடம்பெற்றுவந்த புரட்சிகரப்போராட்டம் பற்றிய உண்மைத்தகவல்களை மேற்குலக மக்கள் பெற்றுக்கொள்ளமுடியாதிருந்தது. இத்தகைய சூழலில் எட்ஹார் ஸ்னோவின் பங்களிப்பு முக்கியத்துவம் பெற்றுக்கொண்டது. அவர் ஒரு மனசாட்சி படைத்த நேர்மையான அமெரிக்கப் பத்திரிக்கையாளர் என்பதை வரலாறு அடையாளப்படுத்தியது.

1936ல் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகம் அமைந்திருந்த புரட்சிகர செந்தளத்திற்கு ஸ்னோ சென்றடைந்தபோது சீன கம்யூனிஸ்ட் கட்சி தனது பதிநைந்தாவது வயதை அடைந்திருந்தது. ஜப்பானியர்களால் முற்றுகையிடப்பட்டிருந்த வடமேற்கு செந்தளத்திற்கு சன்யாட்சென் அம்மையாரின் சிபாரிசுடன் ஜூன் மாதத்தில் எட்ஹார் ஸ்னோ புறப்பட்டார். கம்யூனிஸ்டுகளுடன் ஓர் இலக்கிய முன்னணிக்கு கொள்கையளவில் தயாராக இருந்த காரணத்தினால் அவ்வேளை சியானில் நிலை கொண்டிருந்த மஞ்சூரியப்படையினரின் ஒத்துழைப்புடன் ஸ்னோ எல்லையைக்கடந்து கம்யூனிஸ்ட் தலைநகரான பா ஓ அன் சென்றடைந்து அங்கு தலைவர் மாசேதுங்கை சந்தித்தார்.

எட்ஹார் ஸ்னோ நான்கு மாதங்கள் சீன கம்யூனிஸ்ட்களின் செந்தளத்தில் தங்கியிருந்தார். அவ்வேளை தோழர் மாவோவிடமிருந்து பல்வேறு தகவல்களையும் கொள்கை விளக்கங்களையும் கலந்துரையாடல் போன்றவற்றின் மூலம் சேகரித்துக்கொண்டார். பல இரவுகள் கண்விழித்து மாவோவுடனான பேட்டியை ஸ்னோ பெற்றுக்கொண்டார். இச்சந்திப்பும் ஏனைய தலைவர்களுடனான தொடர்புகளும் ஸ்னோவிற்கு முற்றிலும் புதிய அனுபவமாக அமைந்தது. மாவோவின் வாழ்க்கைக்குறிப்புகளை அவரிடமிருந்தே பெற்றுக்கொண்டமை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தமது சொந்த வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விரும்பாத நிலையிலும் கூட அன்றைய தேவை கருதி மாவோ தனது வாழ்க்கைக்குறிப்புகளை ஸ்னோவிடம் எடுத்துக்கூறினார். அதே போன்று ஏனைய தலைவர்கள் பற்றிய  விபரங்களையும் ஸ்னோ சேகரித்துக்கொண்டார்.

1936 ஆம் ஆண்டு அக்டோபரில் மேற்படி செந்தளத்திலிருந்து திரும்பிய ஸ்னோ தான் நேரடியாகப்பெற்ற தகவல்களையும் விபரங்களையும் தொகுத்து 1939 ஜூலையில் தனித்துவம் மிக்க நூலாக எழுதிமுடித்தார், அதுவே “சீனாவின் மீது செந்தாரகை” எனும் புகழ் பெற்ற ஆங்கில நூலாகும். முதல் தடவையாக சீனக் கம்யூனிஸ்டுகளைப்பற்றியும் தலைவர் மாசேதுங் மற்றும் தலைவர்கள் பற்றியும் தெளிவான ஒரு சித்திரத்தை இந்நூல் வழங்கியது. சீனக்கம்யூனிஸ்டுகளின் உன்னத நோக்கத்தையும் அவர்களது வீரம், தியாகம், அர்ப்பணிப்பு மிக்க வேலை முறை என்பன பற்றிய உணர்வும் உணர்ச்சியும் மிக்க பக்கங்களை இந்நூல் உலகிற்கு படம் பிடித்துக்காட்டியது. ஏகாதிபத்திய வாதிகளும் பிற்போக்கு சக்திகளும் தனது கொள்ளைத்தனமான சுரண்டலையும் அதன் கொடூரங்களையும் மூடி மறைத்து கம்யூனிஸ்டுகளை பயங்கரவாதிகள், பலத்காரவாதிகள், ரத்தவெறிபிடித்தவர்கள் என்று காட்டி நின்றவேளையில் அதனை முறியடிக்கும் ஒரு நேரடிச்சாட்சியாக ஸ்னோவின் கட்டுரைகள் அமைந்தன. எதிர்காலத்தில் சீனக்கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு உலகில் கிடைக்கக்கூடிய் ஆதரவிற்கும் முக்கியத்துவத்திற்கும் இந்நூல் ஆரம்பத்துணையாகியது. இது ஒரு வரலாற்றுக்குறிப்பு மட்டுமன்றி சீன கம்யூனிஸ்ட் கட்சியில் தலைவர் மாவோவின் தெளிவான திசைமார்க்கத்தையும் சுட்டிக்காட்டி நின்றது.

இத்தகைய முக்கியத்துவம் மிக்க “சீனாவின் மீது செந்தாரகை” நூலின் நான்காவது அத்தியாயமாக அமைந்துள்ள ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம்‘ என்ற பகுதியே தமிழாக்கம் செய்யப்பட்டு இந்நூல் உருவம் பெறுகிறது. கம்யூனிசம் கம்யூனிஸ்டுகள் பற்றிய எதிர்நிலை பிரச்சாரங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ள இன்றைய சூழலில் இதுபோன்ற நூல்களின் தேவை மிக அவசியமானதாகும். இந்நூலினை மாவோ அவர்களின் நூற்றாண்டு நினைவு நாட்களிலே வெளியிட்டு உதவுமாறு புதிய ஜனநாயகக்கட்சி கேட்டுக்கொண்டதற்கிணங்க இதனை நூல் உருவில் கொண்டுவருகிறோம். இதில் பெரு மகிழ்ச்சியும் கொள்கிறோம்.

இந்நூலினை தமிழாக்கம் செய்த எஸ்.இந்திரன் அவர்களுக்கும் அதற்கு உதவிய ஏனைய தோழர்களுக்கும் நாம் நன்றியுடையவர்கள். இதனை எம்முடன் இணைந்து வெளியிடும் சவுத் ஏசியன் புக்ஸ் நிருவனத்தினருக்கும் அழகுற அச்சிட்டுத்தந்த அச்சக உரிமையாளர் ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி கூறுகிறோம்.

117, சென் அன்றூஸ் கீழைத்தெரு,

முகத்துவாரம்,

கொழும்பு 15,

இலங்கை.

20/12/1993.

16 thoughts on “ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம்

 1. தோழர் செங்கொடி அருமை,

  மார்க்சிய லெனினிய மாசேதுங் சிந்தனை ஓங்குக!

  கலகம்

 2. கம்யூனிஸம் பற்றி நாம் தெரிந்துகொள்வது மிக மிக அவசியம்.அதிலும் நம் நாட்டில் இருக்கும் கம்யூனிஸ்டுகளைப்பற்றி தெரிந்துகொள்வது மிக மிக அவசியம்.
  http://thamizmani.blogspot.com

 3. அஹ்மதியா முஸ்லிம் பிணத்திற்கு வக்காலத்து வாங்கும் இவர்களின் யோக்கியதை இந்த கட்டுரையில் படியுங்கள்.
  http://thamizmani.blogspot.com/2009/08/blog-post_25.html

  கம்யூனிஸ்டுகள் உடைத்தால் மண்சட்டி கம்யூனிஸ்டுகள் அல்லாதோர் உடைத்தால் மட்டும் பொன்சட்டியா என்ன?
  இவர்களுக்கு ஒரு நியாயம் அடுத்தவர்களுக்கொரு நியாயமா?

 4. மதிப்பிற்குரிய நண்பரே,

  மாவோ ஒரு ஏமாற்றுப்பேர்வழி, குரூர புத்தி பேர்வழி, தன் தனிப்பட்ட சிந்தனையை, பிரச்சினைகளை, பேராசைகளை அனைத்து சீன மக்களின் பிரச்சினைகளாக மாற்றி அவர்களை ஏமாற்றியும், பல ஆயிரக்கணக்கானவர்களை கொலை செய்தும், விலாசம் இல்லாமல் ஆக்கியதும், பொய் புரட்சிகள், பொய் விளம்பரங்கள் செய்து தன் பதவி வெறி ஆசைகளை தீர்த்துக்கொண்ட அயோக்கியன் என்று தெரிந்தும், இன்றும் இந்திய அறியா கீழ்நிலை மக்களை நீங்கள் ஏமாற்றி சுற்றி வலைத்து அடிமையாக்க முயல்வது சரியல்ல. இன்னும் சில ஆண்டுகளில் சீனாவில் கம்யூனிசத்தை எதிர்த்து மிகப்பெரிய உள்நாட்டு வரத்தான் போகிறது. அப்போது தெரியும் உங்களது சீன ஆதரவு வெறி. தயவு செய்து படிப்பறிவில்லா இந்திய தமிழ் கீழ்நிலை மக்களை ஏமாற்றி பிழைக்காதீர்.

  நன்றி.

 5. நண்பர் மாசிலன்,

  உங்கள் அவதூறுகளுக்கான ஆதாரங்களை தரமுடியுமா? குறைந்தபட்ச விளக்கம்? குப்பைகள் கூட வெட்கப்படும் உங்கள் உளரல்களை எங்கு கொட்டிவைப்பது என்பதையும் சொல்லிவிடுங்கள்.

  தோழமையுடன்
  செங்கொடி

 6. மாமனிதன்(ஒரு “மா” தான் நீங்கள் 2 மா போட்டால் அதற்கு நான் பொருப்பல்ல) மாவோ பற்றி தெரிந்துகொள்ள இந்த சுட்டியை அழுத்தவும்
  http://thamizmani.blogspot.com/2008/02/10.html

 7. கம்யூனிஸத்திற்கு இஸ்லாமியர்களை கண்டால் பிடிக்காதோ என்னவோ.சைனாவில் உய்குர் முஸ்லிம்கள் எத்தைனை பேரை கொன்றொழித்திருக்கிறது என்பதை இநத சுட்டியில் கொடுக்கப்பட்டுள்ள தவகல்களை பாருங்கள்.

  —————————————————————-
  ஆஃப்கானிஸ்தானில் எத்தனைபேரை கொன்றிருக்கின்றது என்பதை இந்த சுட்டியை பாருங்கள்.
  http://thamizmani.blogspot.com/2008/01/blog-
  post_24.html
  இப்ப குரானில் தவறு என்ற பெயரில் கட்டுரைகள் எழுதுவதின் நோக்கம் என்னவாக இருக்கும்?
  எப்ப எப்ப என்னென்ன யுத்திகளை கையாளுவதில் கம்யூனிஸ்ட்டுகள் புத்திசாலிகள்தான்(!) இன்னும் எத்தனை உயிர்கள் கம்யூனிஸ்டுகளால் போக தயாராகி கொண்டிருக்கிறதோ தெரியவில்லை.
  கம்யூனிஸத்தின் கொடி சிகப்பு நிற(இரத்த)மாகவும் ஆயுதமும் இருப்பது எதனால் என்பது புரிகிறதா? ஜாக்கிரதையா இருந்துகொள்ளுங்கள் மக்களே.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s