தெலுங்கானா: அன்றோடு இன்று பொருந்துமா?

கடந்த ஒரு மாதமாக ஆந்திரா எரிந்துகொண்டிருக்கிறது. போராட்டம் என்பது எவ்வளவு ஆற்றல் மிக்கது என்பது மீண்டுமொரு முறை வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் போராடியவர்களின் நோக்கம்…? தெலுங்கானா தனிமாநில கோரிக்கை அண்மையில் எழுந்ததல்ல. சந்திரசேகர ராவ் பதினோரு நாள் உண்ணாவிரதமிருந்ததால் தெலுங்கானா கிடைத்ததாக அவரது பக்தர்கள் புளகமடைந்து கொண்டிருந்தபோது, பிற மாநிலங்களிலும், ஆந்திராவின் பிற பகுதிகளிலும் தனிமாநில கோரிக்கைகள் திட்டமிட்டு வெளிப்படுத்தப்பட்டன. ஆந்திராவில் பின்னர் அதுவே தெலுங்கானாவிற்கு எதிர்ப்பாகவும், ஒருங்கிணைந்த ஆந்திரா என்றும் மடைமாற்றப்பட்டது. மக்கள் ஒரு பிரச்சனையை உணர்ந்து கிளர்ந்தெழுந்து போராடுவது என்பது வேறு, சீரழிந்த அரசியல்வாதிகள் தங்கள் ஆதாயத்திற்காக ஒன்றை மக்கள் போராட்டமாக போக்குக்காட்டுவது என்பது வேறு. இந்த உண்ணாவிரத நாடகத்தை முன்பே சிலமுறை கையாண்டிருக்கிறார் சந்திரசேகர ராவ், ஆனால் இந்தமுறை அதை அவரால் முடிக்கமுடியாமல் தொடர்ந்தாக வேண்டிய கட்டாயத்தை உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் ஏற்படுத்தினார்கள்.

தனி தெலுங்கானாவிற்கு உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் தொடக்கம் முதலே தனிப்பெரும் பங்காற்றிவருகிறது. 1969 முதலே உஸ்மானியா மாணவர்கள் தனி தெலுங்கானாவிற்காக போராடிவருகிறார்கள். 69 ல் நடந்த தீர‌மிக்க போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தங்களை ஈந்தது மொத்த இந்தியாவையும் திரும்பிப்பார்க்கவைத்தது. ஆனாலும் சென்னாரெட்டி போன்றவர்கள் அதனை அறுவடை செய்துகொண்டனர். சந்திர சேகர ராவும் தெலுங்கானாவை வைத்து கட்சியை வளர்த்துக்கொண்டார். அதனையே தன் வெற்றிக்காகவும் வெற்றிகரமான பேரத்திற்க்காகவும் பயன் படுத்திக்கொண்டார், அவ்வப்போது பதவியை துறந்தும் தன்னை போராளியாக காட்டிக்கொண்டார். அந்தவழியிலேயே உண்ணாவிரதமும் தொடங்கினார், இரண்டாவது நாளே மருத்துவமனையில் சேர்ந்து உண்ணாவிரதத்தை முடிக்கும் நிலையில் இருந்தார் (குளுகோஸ் ஏற்றியும் கொண்டார்) ஆனால் மாணவர்களோ தங்கள் போராட்டத்தை தொடர்ந்ததுடன் அதை ராவ்விற்கு எதிராக திருப்பவும் செய்தார்கள். வேறுவழியின்றி உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். ஆக தெலுங்கானாவை அங்கீகரிக்க மைய அரசு செய்த முடிவில் தீர்மானகரமான பங்காற்றியவர்கள் உஸ்மானியா மாணவர்கள், பங்குபோட்டவர் ராவ்.

தெலுங்கானவை மையமாக வைத்து தன் அரசியலை நகர்த்திவரும் ராவ் பாஜக கூட்டணியிலும் காங்கிரஸ் கூட்டணியிலும் இடம்பெற்றிருக்கிறார். அப்போதெல்லாம் பாஜகவும் காங்கிரஸும் அவரது தெலுங்கானா கோரிக்கையை ஆதரிக்கவே செய்தன. ஆந்திராவுக்குள்ளும், தெலுங்கு தேசம் முதல் இன்றைய பிரஜாராஜ்யம் வரை ஆதரிக்கவே செய்தன. ஆனால் மைய அரசு அங்கீகரிப்பதாக அறிவித்ததும் காட்சிகள் மாறிவிட்டன. காங்கிரஸின் விஜயவாடா ராஜகோபால் தொடங்கி பதவிவிலகல்கள் அனைத்து கட்சிகளையும் தொற்றிக்கொள்ள ஒருங்கிணைந்த ஆந்திராவுக்காக எல்லோரும் தியாகம்(!) செய்தார்கள். நேற்றுவரை ஆதரித்த ஒன்றை இன்று எதிர்ப்பதன் காரணம் குறித்து யாரும் விளக்கமளிக்கவில்லை. இன்று ஒருங்கிணைந்த ஆந்திராவுக்காக குரல்கொடுப்பதற்கு இவர்கள் முன்வைக்கும் வாதங்களென்ன? தெலுங்கு பேசும் மக்களை பிரிக்க அனுமதிக்கமாட்டோம் என்பதும் மொத்த ஆந்திர மக்களின் வரிப்பணத்தில் உருவான ஹைதராபாத்தை விட்டுக்கொடுக்கமாட்டோம் என்பதும் தான். இந்த இரண்டிலேயே ஒன்றுடன் ஒன்று முரண்படுகிறது என்பது ஒருபுறமிருந்தாலும், ஹைதராபாத்தில் உருவாக்கக்கப்பட்டுள்ள ஐடி வளாகங்களும் அவற்றின் முதலாளிகளும் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதுதான் அதாவது தங்களுக்கு படியளக்கும் முதலாளிகளின் எதிர்காலம் பாதிக்கப்படக்கூடாது என்பதுதான் இதன் பின்னாலிருக்கும் அரசியல்.

தனி தெலுங்கானா கோரிக்கையின் காரணங்களென்ன? கடலோர ஆந்திரா, ராயலசீமா ஆகியவை தெலுங்கானாவை புறக்கணிக்கின்றன என்பதுதான் மையமானது. தெலுங்கானாவின் வளங்கள் தெலுங்கானாவைவிட ஆந்திராவிற்குத்தான் அதிகம் பயனளிக்கிறது என்றாலும், இன்றைய உலகமய சூழலில் எந்தஒரு பகுதியின் வளங்களும் சூரையாடப்படுவதும் அந்தப்பகுதி மக்கள் புறக்கணிக்கப்படுவதும் தான் நடைபெற்றுவருகிறது. இதில் பொது எதிரியான உலகமயச்சூழலை விட்டுவிட்டு தனித்தெலுங்கானா கோரிக்கை எந்தவிதத்தில் அதன் மக்களுக்கு வளங்களை கொண்டுவரும்? தெலுங்கானா மாநிலம் அமைந்துவிட்டாலும் அந்த அரசால் உலகமயச்சூரையை மீறி செயல்படமுடியுமா? இன்று போராடுவதாய் காட்டிக்கொள்ளும் எந்தஒரு ஓட்டுக்கட்சிக்கும் இதை எதிர்கொள்ளும் பார்வை இருக்கிறதா? என்றால் மக்கள் போராட்டமாக உருவகப்படுத்துவதற்கும் அதனை அறுவடை செய்வதற்கும்தான் தெலுங்கானாவா? ஜார்க்கண்ட், உத்திராஞ்சல் மக்கள் பெரிய அளவில் போராடாவிட்டாலும் தனி மாநிலம் கிடைத்தது எப்படி? போராட்டங்கள் நடந்தாலும் போடோலாந்து, கூர்க்காலாந்து மாநிலக்கோரிக்கைகள் புறக்கணிக்கப்படுவதன் காரணமென்ன? பொதுவாக நிர்வாக வசதி என்று கூறப்படுவது என்னவகையிலான நிர்வாக வசதி என்பதில் தான் சுழிவே இருக்கிறது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் கிடைக்கும் கனிம வளங்களை பன்னாட்டு நிறுவனங்களும், தரகு முதலாளிகளூம் சுரண்டிக்கொள்ளையடிப்பதற்கு உகந்த வசதியை செய்வது தான் நிர்வாக வசதி எனும் பொருளில் ஆளப்படுகிறது. அதற்கு ஏற்றவாறு செயல்படமுடியுமா என்பதுதான் தனிமாநிலமாக பிரிவதற்கும், பிரிக்காமல் ஒன்றாகவே இருப்பதற்குமான காரணியை தீர்மானிக்கிறது. இதில் தேசிய உணர்வோ, பிராந்தியப்பிணைப்போ ஒன்றுமில்லை.

ஆந்திர மாநிலம் உருவாவதற்கு முன்பே தனி மாநிலமாக இருந்த தெலுங்கானா, 1956 ல் மொழிவாரி மாநிலமாக சென்னை ராஜதானியிலிருந்து ஆந்திரா பிரிந்தபோது அதனுடன் மக்களின் விருப்பமின்றியே இணைக்கப்பட்டது. பாகிஸ்தான் பிரிவினையின் பிறகு முஸ்லீம்கள் பெருவாரியாக இருந்த பகுதியான தெலுங்கானா தனி மாநிலமாக நீடிப்பது அன்றைய சூழலில் காங்கிரஸின் நலன்களுக்கு உகந்ததாக இல்லாததால் அந்திராவுடன் கட்டாயமாக இணைக்கப்பட்டது. அது இன்னமும் தொடரவேண்டுமா? என்பதைவிட தெலுங்கானா எனும் சொல்லுக்கு தனிச்சிறப்பான முக்கியத்துவமும் வழிகாட்டுதலும் ஒன்றிருக்கிறது. 1946 லிருந்து 1951வரை நடந்த மாபெரும் தெலுங்கானா போராட்டம் தான் அந்த வழிகாட்டுதல். அது வெறும் குறுகிய மாநிலப்பிரச்சனையாகவோ, தேசியப்பிரச்சனையாகவோ நடக்கவில்லை. மக்களே நேரடியாக பங்காற்றிய தங்களின் வாழ்க்கைக்கு எதிரான மிட்டா மிராசுகளின் கொடுமைகளுக்கு எதிராகவும், நிலப்பிரபுத்துவத்தை திணித்த இந்திய அரசுக்கு எதிராகவும் நடைபெற்ற தீரமிக்க போர். அன்றைய சூழலைவிட இன்றைய உலகமயச்சூழல் தீவிரமாகவும் கடுமையாகவும் மக்களின் வாழ்வையும், உயிர் உடமைகளையும் சுரண்டிவருகிறது. அன்றைய அரசைவிட இன்றைய அரசு வெளிப்படையாகவே மக்களை சுரண்டுவதற்கு அனைத்துவகையிலும் துணை நிற்கிறது. எனவே தனிமாநில கோரிக்கையைவிட அனைத்துவிதத்திலும் முதலாளிய, உலகமய கொள்ளைகளை எதிர்ப்பது எனும் திசை வழியில் போராடுவது காலத்தின் தேவையாக நம்முன் நிற்கிறது.

தொடர்புடைய இடுகை

வீரம் செறிந்த மாபெரும் தெலுங்கானா போராட்டம்

11 thoughts on “தெலுங்கானா: அன்றோடு இன்று பொருந்துமா?

 1. “””””””””””””””””மக்கள் ஒரு பிரச்சனையை உணர்ந்து கிளர்ந்தெழுந்து போராடுவது என்பது வேறு, சீரழிந்த அரசியல்வாதிகள் தங்கள் ஆதாயத்திற்காக ஒன்றை மக்கள் போராட்டமாக போக்குக்காட்டுவது என்பது வேறு. இந்த உண்ணாவிரத நாடகத்தை முன்பே சிலமுறை கையாண்டிருக்கிறார் சந்திரசேகர ராவ், ஆனால் இந்தமுறை அதை அவரால் முடிக்கமுடியாமல் தொடர்ந்தாக வேண்டிய கட்டாயத்தை உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் ஏற்படுத்தினார்கள்.””””””””””””””””””””””””
  என்ன பண்றது செங்கொடி தங்களுடைய சுயலாபத்திற்க்காக தலைமை தாங்கும் தலைவர்கள் மக்களை கேடயமாக் பயன்படுத்திகொள்கிறார்கள்.இப்போது சந்திரசேகர ராவ்,இதற்கு முன் ஈழ தமிழர்களுக்காக கலைஞர் அவர்கள் உண்ணாவிரதமிருந்தது.தாங்கள்தான் மக்களின் பாதுகவலன் போல் மக்கள் முன் வேடமிடுகிறார்கள்.இவர்களை பார்த்து பொது மக்கள் ஏமாந்து விடுகிறார்கள்.
  இவர்களாவது பரவாயில்லை மக்களை மடையர்களாகத்தான் ஆக்குகிறார்கள்.
  இவர்களை மிஞ்சிய ஒரு கூட்டம் இருக்கிறது.மக்களுக்கு ஆசை வார்த்தைகள் கூறி பலியிட்டது.
  புரட்சி(!) செய்கிறோம் என்ற பெயரில் மக்களை உசுப்பிவிட்டு மக்களை பலியிட்டது வரலாற்றில் பெரும் வடுவாக இருக்கிறது.இவர்களை வழிநடத்திய தலைவர்களும்,முக்கிய ஆட்களும் தங்களுடைய ஆதாயத்துக்காக மக்களை கேடயமாக பயன்படுத்திகொண்டார்கள்.பாதிக்கப்பட்டது என்னவோ மக்கள்தான்.
  தலைவர்களுக்கு ஒரு சிறு காயங்கள்கூட ஏற்படவில்லை.
  வறுமையாலும்,பட்டினியாலும் மக்கள்தான் இறந்தார்களே தவிர தலைவர்கள் ஒருவரும் இறக்கவில்லை.
  தலைவர்கள் தங்களுடைய ஆதாயத்துக்காகத்தான் எல்லாமே செய்கிறார்கள் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.
  120 மில்லியன்(12 கோடிக்கும் மேலான) அப்பாவி மக்களை இந்த புரட்சி கும்பல்தான் கொன்றொழித்தது.
  எந்த புரட்சி(!) கும்பல் கொன்றது என்பதை நான் உங்களுக்கு சொல்லி தரவேண்டியதில்லை என கருதுகிறேன்.அது உங்களுக்கே தெரிந்திருக்கும்.

 2. நண்பர் கார்திக்,

  வெறுமனே அவதூறுகளை மட்டுமே அள்ளிவீசாமல், உங்கள் விசயங்களோடு வாருங்கள் நாம் பேசலாம். பொதுவாக நின்று போக்குக்காட்டாமல் வெளிப்படையாக உங்கள் வாதங்களை எடுத்துவையுங்கள். நாம் தொடர்வோம் மாறாக உளரல்களால் உருவாவது ஒன்றுமில்லை.

  தோழமையுடன்
  செங்கொடி

 3. அன்பின் செங்கொடி அவர்களே,

  அவதூறு என்று சொல்லி “முழு பூசனிக்காயை சோற்றில் மறைக்க” முயலாதீர்கள்.அப்பாவி மக்களை கொலை செய்ததில் கம்யூனிஸ்டுகள் முதலிடத்தில் இருப்பதை இந்த சுட்டியை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
  http://www.scaruffi.com/politics/dictat.html
  பயங்கரவாதிகள் என்று கருதப்படும் ஹிட்லர்,முசோலினி,ஒஸாமா பின் லேடன்,சதாம் உசேன் etc etc இவர்கள் செய்த கொலைகளை விட கம்யூனிஸ்டுகளின் கொலைகள் எவ்வளவு என்பதை எண்ணி கொள்ளுங்கள்.
  சும்மா அவதூறுகளை அள்ளி வீசுவதாக எண்ண வேண்டாம் செங்கொடியாரே ஆதாரத்தோடுதான் கூறுகிறேன்.

 4. நண்பர் கார்திக்,

  நீங்கள் கூறுவது இன்று நேற்றல்ல, அன்றே தொடங்கிய அவதூறு. இதை பலமுறை பலரும் ஆதார பூர்வமாகவே அவதூறு என நிரூபித்து விட்டனர். அவ்வளவு ஏன், நீங்கள் குறிப்பிடும் இந்த கொலைகள் எங்கு நடந்தன? யாரால் நடத்தப்பட்டன? என்ன ஆதாரங்கொண்டு இவற்றை கூறுகிறீர்கள் என்று உங்களை கேட்டல் உங்களால் பதில் கூற முடியாது. கம்யூனிசத்தை எதிர்க்கவேண்டும் என்பது உங்கள் குறிக்கோள் அதற்குத்தோதாக யாராவது எதையாவது சொன்னால் அதைப்பிடித்துக்கொண்டு கொலை என்று அலறுவீர்களே தவிர அதன் உண்மைத்தன்மை என்ன என்பதை நீங்களோ உங்களைப்போன்றவர்களோ கொஞ்சமும் சிந்திப்பதில்லை. காரணம் உங்களுக்கு கம்யூனிசத்தை எதிர்க்கவேண்டும் அவ்வளவுதான், அதற்காக நீங்கள் கூறுவது உண்மையாக இருக்கவேண்டுமென்ற அவசியம் கூட உங்களுக்கில்லை.

  நீங்கள் குறிப்பிடும் இந்த அவதூறு குறித்து நானும் இரண்டு பதிவுகளில் லேசாக விளக்கியிருக்கிறேன். படித்துப்பாருங்கள்,

  https://senkodi.wordpress.com/2008/12/11/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A/

  https://senkodi.wordpress.com/2009/08/30/%E0%AE%85%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/

  தோழமையுடன்
  செங்கொடி

 5. அன்பின் செங்கொடி அவர்களே
  தங்களின் கட்டுரைகளை நிதானத்துடன் படித்தேன்.
  தாங்கள் கம்யூனிஸத்தைப்பற்றி தவராக எழுதிவிட்டோம் என்று சொன்னவர்கள்.தாங்கள் காசு வாங்கி கொண்டு கம்யூனிஸத்தைப்பற்றி தவராக எழுதிவிட்டோம் என்று ஒப்பு கொண்டவர்கள்,புகைப்படத்தை வெளியிட்ட நபர் ரொமேனியாவுக்கு சென்றதேயில்லை என்று எங்கே சாட்சியம் அளித்துள்ளார்கள் என்பதற்க்கான ஆதாரங்களை எங்கிருந்து பெற்றுகொண்டீர்கள் என்பதை குறிப்பிடவும்.

 6. நண்பர் கார்திக்,

  கட்டுரைகளை நிதானமாக படித்துப்பார்த்ததற்கும், கம்யூனிசம் பற்றி அறிய முன்வந்ததற்கும் நன்றி.

  நார்த் ஸ்டார் காம்பஸ் எனும் அமெரிக்கப் பத்திரிக்கையில் மரியோ சூசா என்பர் எழுதிய கட்டுரையை பிராண்டியர் எனும் இந்திய ஆங்கில வார இதழ் 9‍‍‍‍‍‍‍,15 ஜனவரி 2000 ல் மறு பதிப்பு செய்தது. அதை “ஸ்டாலின் மீதான அவதூறு இட்லர் முதல் இலக்கிய வாதிகள் வரை” என்ற தலைப்பில் சி. மாணிக்கவாசகம் என்பவர் மொழிபெயர்த்த கட்டுரையில் இருந்து எடுக்கப்பட்ட தகவல்கள் அவை.

  தோழர் ஸ்டாலின் மீதான அவதூறுகளை தோலுறிக்கும் பல நூல்கள் தமிழில் வெளிவந்துள்ளன. அவற்றுள் தோழர் ரயாகரனின் “இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம்” எனும் நூல் இணையத்திலேயே கிடைக்கிறது. அதற்கான சுட்டி இதோ

  http://puthagapiriyan.blogspot.com/2007/11/blog-post_29.html

  நிதானமாக ஆழ்ந்து படித்து விளங்கிக்கொள்வீர்கள் என எதிர்பார்க்கிறேன், அதோடு உங்களைப்போன்றவர்களுக்கும் அறிமுகம் செய்து படிக்கச்செய்யுங்கள்.

  தோழமையுடன்
  செங்கொடி

 7. தமிழ்மணம் விருதுகள் 2009 முதற்கட்ட முடிவுகளில் உங்கள் “மிரட்டிய உலக தாதாவும் ‘பெப்பே’ காட்டிய வட கொரியாவும்” இடுகையை பார்த்தேன்.

  வெற்றி பெற வாழ்த்துக்கள் செங்கொடி.

 8. அன்பின் செங்கொடி அவர்களே
  நீங்கள் கொடுத்த இணைப்பிலுள்ள சுட்டிகள் எதுவுமே open-ஆகவில்லை.
  (புத்தக பிரியன் பக்கம் open-ஆகுது ஆனால் அதில் கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகள் எதுவுமே open ஆகவில்லை)

 9. அய்யா நாம் மூடத்தனமாக கம் யூனிசத்தை எதிர்ப்பவர்களை ஏற்றுக் கொள்ள வில்லை என்றாலும் வட கொரிய அதிபரின் மகனே கம்யூனசக் க்ட்சிக்குத் தலைமை வகிபபது எப்படி பின் கருணாநிதியை பகடி செய்ய முடியும்- அதுவும் அவன் சினிமா எடுப்பவனாமே…? மாவோகூட ஒரு நடிகையை தன் இரண்டாம் மனைவியாக வைத்துக் கொண்டிருந்தார்.. லெனின்கூட தன் மனைவியை கல்வி மந்திரி ஆக்கியிருந்தார்… இதெல்லாம் களையமல் மக்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்…?

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s