ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம் முகவுரை

ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம் பகுதி ௨

முகவுரை

சர்வதேச கம்யூனிச இயக்கத்தின் உன்னதத் தலைவர்களான மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் போன்றவர்களுக்கு அடுத்தபடியாக விளங்கிய தலைவரான மாவோ அவர்களின் நூறாவது ஜனன தினமாகிய 1993 டிசம்பர் 26ம் தேதியை நினைவு கூறுமுகமாக மாவோவின் வாழ்க்கை வரலாற்றை தமிழில் உங்களுக்குத்தருவதில் மகிழ்ச்சியடைகிறோம். மாவோவை பற்றிய தகவல்களை உள்ளடக்கிய வெளியீடுகள் பெருமளவில் பல்வேறு மொழிகளில் வெளிவந்துள்ள போதிலும் தமிழில் அவ்வாறான வெளியீடுகள் வந்தனவா என்பது கேள்விக்குறியே. தேசியப்பத்திரிக்கைகள் என்று கூறிக்கொள்ளும் தமிழ்ப்பத்திரிக்கைகளில் வெளிவந்த, வெளிவரும் கட்டுரைகள், செய்திகள் பெரும்பாலானவை மாவோவின் சாதனைகளை கொச்சைப்படுத்துபவையாகவும் திரிபுபடுத்துபவையாகவும் இருக்கின்றன. தலைவர் மாவோவை நினைவு கூறும்போது அவர் சாதித்தவை எவை, அவர் எத்தகைய சூழ்நிலைகளில் இவற்றை சாதித்தார். அவர் சீன மக்களுக்கும், உலக மக்களுக்கும் காட்டிச்சென்ற பாதை என்ன என்பவற்றை நாம் கற்றுணர்ந்தால் மட்டுமே நமது நாட்டிலும் ஒரு சுரண்டலற்ற, இன அடக்குமுறை இனப்பாகுபாடு அற்ற சகல மக்களுக்கும் சமத்துவமான  சுபீட்சமான மக்கள் சமுதாயமொன்றை கட்டியெழுப்பும் பணியில் முன்னேறுவதற்கு அடித்தளம் அமைத்தவர்களாவோம்.

ஏனைய கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் ஒப்பிடுகையில் தலைவர் மாவோ அவர்கள் மார்க்சிய லெனினிசத்தை மிகவும் இலகுவான முறையில் சீனாவிற்கும் உலகிற்கும் விளக்கினார். சீனாவில் ஒரு சக்திமிகு கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கி, அதன் தலைமையில் ஒரு கட்டுப்பாடான விடுதலைப்படையை உருவாக்கி, பல்வேறு கருத்துகளையும் கொள்கைகளையும் கொண்டிருந்த மக்களையும் கட்சிகளையும் பொது எதிரிக்கு எதிராக ஒரு பரந்த ஐக்கிய முன்னணி மூலம் அணிதிரட்டி  ஏகாதிபத்தியத்தையும், பிரபுத்துவத்தையும், தரகு முதலாளித்துவத்தையும் இறுதியில் தோற்கடித்தமை ஓர் அளப்பறிய சாதனையாகும்.

ஒரு நீண்ட மக்கள் யுத்தத்திற்கு தேவையான மூல உபாயங்களையும், தந்திரோபாயங்களையும் வகுத்து கிராமங்களை முதலில் விடுவித்து இறுதியில் நகரங்களை கைப்பற்றி முழுத்தேசத்தையும் விடுதலை செய்து மக்கள் ஜனநாயகத்தை ஏற்படுத்தியது மற்றுமொரு சாதனையாகும்.

அரைக்காலனித்துவ, அரை நிலப்பிரபுத்துவ நாடொன்றில் சகல ஏகாதிபத்திய விரோத சக்திகளையும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலமையின் கீழ் ஐக்கியப்படுத்தி ஜனநாயகப்புரட்சியை வென்றெடுத்து, அதன் அடுத்தகட்டமான சோசலிசத்தை ஏற்படுத்த வழிவகுத்தமை விடுதலைக்காக போராடும் அனைத்துலக மக்களுக்கும் ஒரு பாடமாக அமைகிறது.

சீனாவை சுயசார்பின் மூலம் ஒரு பலம் மிக்க சோசலிச நாடாக்க நடவடிக்கை எடுத்தமை, சோவியத் யூனியன் தலமையில் உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தில் உருவெடுத்த நவீன திரிபுவாதத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்தமை என்பன மூலம் மாக்சிய லெனினியத்தையும், புரட்சிகர இயக்கங்களையும் வளர்த்தெடுத்து உலகின் அடக்கியொடுக்கப்பட்ட மக்களுக்கு வழிகாட்டியாக மாவோ விளங்கினார்.

இலங்கை வாழ் தமிழ் மக்கள் என்றும் இல்லாத இன ஒடுக்கு முறைக்கு ஆளாக்கப்பட்டு பேரினவாதப் போக்கு அதன் உச்சகட்டத்தை அடைந்துள்ள இவ்வேளையில் இந்த நாட்டு மக்களின் இனப் பிரச்சனைக்கான தீர்வுக்கு என்ன வழியென்பதை மாவோ அவர்கள் காட்டிய பாதை மூலமே கற்றுக்கொள்ள முடியும். இலங்கையின் இனப்பிரச்சனைக்கான தீர்வு தமிழ் மக்கள் பாரம்பரியமாக வாழும் வடக்கு கிழக்கிற்கு சுயாட்சி அமைப்பு வழங்குவதன் மூலமே சாத்தியமென புதிய ஜனநாயக கட்சியும் அதன் முன்னோடியான கம்யூனிஸ்ட் கட்சியும் 1955 இல் இருந்தே வலியுறுத்தி வந்துள்ளன. இனங்கள் யாவும் சமமானவை என்ற நிலைபாட்டிலேயே  தீர்வு ஒன்று அமையவேண்டும்.

சீனாவில் அரசியல் அமைப்பின் முகவுரையிலேயே சீனா பல இனங்களைக்கொண்ட ஒரு நாடு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இனங்கள் யாவும் சமமானவை என்றும் ஓர் இனம் வேறு ஓர் இனத்தை அடக்கக்கூடாது என்றும் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் சிறுபான்மை இனத்தவர்கள் முழுச்சனத்தொகையில் 8.04 வீதமானவர்கள் மட்டுமே. இந்த 8.04 வீதத்தினருள் 55 இனங்கள் உள்ளன. பெரும்பானமை இனத்தைச் சேர்ந்த  மாவோ அவர்கள் பெரும்பான்மை ஹான் இனத்தின் தலைவராக மட்டுமல்லாமல் சீனாவின் சகல இன மக்களின் ஒப்பற்ற தலைவராகவும், உலகின் சகல அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவராகவும் விளங்கினார்.

சீனாவின் யதார்த்தத்திற்கு ஏற்ற வகையில் சிறுபான்மை இனங்களுக்கான சுயநிர்ணய உரிமையை உத்திரவாதப்படுத்தும் வகையில் சுயாட்சி அமைப்புகளை உருவாக்கியதன் மூலம் இனங்களுக்கிடையேயான ஐக்கியத்திற்கு வழி சமைக்கப்பட்டது.

சீனாவில் சிறுபான்மை இனத்தவர்கள் சனத்தொகையில் 8.04 வீதம் மட்டுமே என்ற போதிலும் சுயாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்பட்ட பிரதேசங்களின் நிலப்பரப்பானது 62 மூ (அறுபத்தியிரண்டு வீதம்) என்பது குறிப்பிடத்தக்கதாகும். வடக்கு கிழக்கு இணைந்த சுயாட்சிக்கு எதிர்ப்புத்தெரிவிக்கும் பித்தலாட்டக்காரர்கள் சீனாவைப்பார்த்து தமது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வார்களா?

சீனாவின் சிறுபான்மை இனங்களை கிண்டல் செய்யும் அவமானம் செய்யும் முகவரிகள், இடப்பெயர்கள், குறியீடுகள் யாவும் முழுச்சீனாவிலிருந்தும் அகற்றப்படவேண்டுமென்ற கட்டளையை சீன மத்திய அரசாங்கம் 1951ம் ஆண்டிலேயே விடுத்திருந்தது. சகல அரசாங்க அமைப்புகளிலும் சகல சிறுபான்மை இனப்பிரதிநிதிகளும் அங்கம் வகிக்கின்றனர். ஆகச்சிறிய சிறுபான்மை இனமான ஷெஷான் (சுமார் இரண்டாயிரம் பேர்) தேசிய மக்கள் காங்கிரசில்  ஒரு பிரதிநிதியை கொண்டிருக்கிறது.

சீனா முழுமையாக விடுதலையடையுமுன்பே உள்மங்கோலிய சுயாட்சிப்பிரதேசம் 1947 மே மாதம் 1ம் தேதியே நிறுவப்பட்டது இங்கு கவனிக்கத்தக்கது. சீனாவின் சிறுபான்மை இனங்கள் மாவோ தலைமையிலான சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பால் கொண்டிருந்த நம்பிக்கையை இது காட்டுகிறது. கிங்கியாங் உய்குர் சுயாட்சிப்பிரதேசம் பதினாறு லட்சம் கிலோமீட்டர் பரப்புடையது. அதாவது சீனாவின் நிலப்பரப்பில் ஆறில் ஒன்று, சனத்தொகை ஒன்றரைக்கோடி அளவேயாகும். திபெத் சுயாட்சிப்பிரதேசத்தின் நிலப்பரப்பு பன்னிரண்டு லட்சம் சதுர கிலோமீட்டராகும், இது சீனாவின் நிலப்பரப்பில் எட்டில் ஒன்றாகும், அதன் சனத்தொகையோ சுமார் இரண்டு கோடியாகும். சீனாவில் ஐந்து சுயாட்சிப்பிரதேசங்கள் உள்ளன. அவற்றிற்கு வெளியேயும் குறிப்பிட்ட ஐந்து இனங்களும் பரந்து வாழ்கிறார்கள். அங்கும் கூட இவர்களுக்கு சுயாட்சி அமைப்புகள் உள்ளன. இது தான் சோசலிசத்திற்கும் முதலாளித்துவ ஜனநாயகத்திற்கும் இடையேயான வித்தியாசம்.

எனவே சீனாவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டியது அதிகம் உள்ளது. மாவோவின் வழிகாட்டலில் சீனக்கம்யூனிஸ்ட் தலைமையில் உருவாக்கப்பட்ட சுயாட்சி அமைப்புக்கான சட்டத்தை நாம் கற்றறிந்து நமது நாட்டின் சூழலுக்கு ஏற்ற வகையில் நமது நாட்டின் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண முயல்வது நமது நாட்டின் முன்னேற்றத்திற்கும் ஐக்கியத்திற்கும் வழிவகுக்கும்.

நா. சிறி மனோகரன்

இலங்கை சீன நட்புச்சங்கம்.

இந் நூலின் முந்திய பகுதிகள்

பதிப்புரை

%d bloggers like this: