மாவோவின் குழந்தைப்பருவம் ௨

ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம் பகுதி ௪


இறுதியாக எனக்கு 13 வயதாக இருக்கும்போது நான் ஆரம்ப பாடசாலையை விட்டு நீங்கினேன். கூலிக்கு அமர்த்தப்பட்ட தொழிலாளிக்கு உதவியாக நீண்ட நேரம் எங்கள் பண்ணையில் நான் வேலை செய்யத்தொடங்கினேன். பகலில் ஒரு தொழிலாளியின் முழு அளவு வேலையையும் இரவில் தந்தையாரின் கணக்குப்புத்தகம் எழுதும் வேலையையும் செய்தேன். புராதன இலக்கிய நூலைத்தவிர கிடைக்கக்கூடிய அனைத்து நூல்களையும் விரும்பிப்பயின்றேன். இது எனது தந்தையாருக்கு கவலையூட்டியது, அவர் புராதன இலக்கிய நூலில் நான் சிறந்த ஆளூமை பெறவேண்டும் என விரும்பினார். சீன நீதிமன்றம் ஒன்றில் இவர் தொடுத்திருந்த வழக்கொன்றில், இவரது எதிரி புராதன இலக்கியத்திலிருந்து ஒரு பொருத்தமான எடுத்துக்காட்டைக் கூறி வழக்கில் இவரை தோற்கடித்திருந்தான்.

இதனால் தான் விசேடமாக நான் புராதன இலக்கியம் படிக்க வேண்டுமென்று அவர் விரும்பினார். பின்னிரவுகளில் நான் படிப்பதை எனது தந்தையார் பார்க்காமல் இருப்பதற்காக அறையில் ஜன்னல் கண்ணாடிகலை மூடி இருப்பதாக செய்துவிடுவேன். இந்த வழிமுறையில் ஷென்ஷெ வெய் யென் (எச்சரிக்கை வார்த்தைகள்) என்ற நூலைப்படித்தேன். (இந்த நூல் சுங் குவாங் யிங் அவர்களால் எழுதப்பட்டது. இது பல ஜனநாயக சீர்திருத்தங்களை ஆதரித்தது. பாராளுமன்ற அரசு, புதிய கல்விமுறை, தொலைத்தொடர்புகள் ஆகியவற்றையும் வலியுறுத்தியது. துயரார்ந்த முறையில் முடிவுற்ற, 100 நாட்கள் சீர்திருத்தம், கிளர்ச்சி நடந்த1898 ஆம் ஆண்டு இந்த நூல் பிரசுரிக்கப்பட்டபோது, அமோக ஆதரவையும் செல்வாக்கையும் பெற்றது) இந்த நூலை நான் மிகவும் விரும்பினேன். பழைய சீர்திருத்த அறிவியலாளர்களில் ஒருவரான இந்த நூலாசிரியர் சீனாவின் பலவீனம் மேற்கத்திய நவீன உபகரணங்களை பெற்றுக்கொள்ளாமையிலேயே தங்கியிருக்கிறது என்று கருதினார். ரயில் பாதைகள், டெலிபோன்கள், தந்தி சாதனங்கள், நீராவிக்கப்பல்கள் ஆகியவற்றை நாட்டில் அறிமுகப்படுத்த வேண்டும் என்று அவர் விரும்பினார். இத்தகைய புத்தகங்களைப் படிப்பது காலத்தை பாழாக்குவதாகும் என்று தந்தையார் கருதினார். நடைமுறை விடயங்களைக்கொண்டிருக்கும் புராதன இலக்கியம் போன்ற நூல்களை நான் படிக்க வேண்டும் என்று அப்பா விரும்பினார். இது அவர் தொடுக்கும் வழக்குகளை வெல்வதற்காவது பயன்படும்.

இந்தப் பண்டைய வீர வரலாறுகளையும் சீன இலக்கியங்களையும் நான் தொடர்ந்து படித்துவந்தேன். இத்தகைய கதைகளில் வினோதமாக இருக்கும் ஒரு விடயம், ஒரு நாள் எனக்கு தெரியவந்தது. நிலத்தை உழும் விவசாயிகள் எவரும் இக்கதைகளில் இடம்பெறாமையே எனது கருத்தை ஈர்த்த விடயமாகும். கதாபாத்திரங்கள் அனைவரும் போர் வீரர்களாகவும் அதிகாரிகளாகவும் அறிவியலாளர்களாகவுமே இருந்தனர். அவர்களில் ஒரு விவசாயி கூட கதாநாயகனாக இருக்கவில்லை. இது பற்றி இரண்டு வருடங்கள் வரை நான் யோசித்தேன். பின்பு இந்தக்கதைகளின் சாராம்சங்களை நான் ஆய்வு செய்தேன். அக்கதைகள் அனைத்தும் ஆயுதம் தரித்தவர்களையும், மக்களை ஆளுமை செய்யும் ஆட்சியாளர்களையும் மையப்படுத்தியிருந்தது. இவர்கள் வயல் வேலை எதையும் செய்யவில்லை. ஏனென்றால் அவர்கள் இந்தக்கணிகளை தங்கள் உடமையாக தங்கள் கட்டுப்பாட்டினுள்ளும் வைத்திருந்தனர். அத்தோடு இவர்கள் காணிகளில் தங்களுக்காக வேலை செய்வதற்கு விவசாயிகளை வைத்துக்கொண்டவர்கள் என்பது வெளிப்படையாகியது.

எந்து தந்தையார் எனது இளம்பருவத்திலும் மத்திய வயதிலும் இறை நம்பிக்கையற்றவராக இருந்தார். ஆனால் எனது தாயார் மிகுந்த ஈடுபாட்டோடு புத்தரை வணங்கினார். அவர் தனது குழந்தைகளுக்கு சமய போதனை செய்தார். எங்கள் தந்தையார் ஒரு இறை நம்பிக்கையற்றவர் என்பதையறிந்து நாங்கள் அனைவரும் வருந்தினோம். எனக்கு 9 வயதாக இருக்கும்போது எனது தந்தையாரின் பக்தியற்ற தன்மை குறித்து எனது தாயாரோடு தீவிரமாக கலந்துரையாடினேன். அவரை சமயத்திற்கு மாற்ற அப்போதும் பின்பும் பல முயற்சிகளை நாங்கள் மேற்கொண்டோம். அவர் எங்களை ஏச மட்டுமே செய்தார், அவரது தாக்குதல்களால் தோற்கடிக்கப்பட்டு புதிய திட்டங்களை உருவாக்குவதற்காகப் பின்வாங்கினோம். ஆனால் அவர் கடவுளைப்பற்றி எவ்வித அக்கரையும் காட்டவில்லை.

எனது நூல் வாசிப்பு படிப்படியாக என்னை ஆளுமைப்படுத்த ஆரம்பித்தது, நானே இறை நம்பிக்கையற்றவனாக ஆகத்தொடங்கியிருந்தேன். எனது தாயார் என்மீது கவலைப்படத்தொடங்கினார் இறை நம்பிக்கைக்கான தேவைகள் பற்றிய எனது அறிவீனத்தினால் அவர் என்னை ஏசத்தொடங்கினார். ஆனால் இது பற்றி எனது தந்தையார் ஒன்றும் கூறவில்லை. பின்பு ஒருநாள் யாரிடமோ பணம் வாங்குவதற்காக வெளியில் சென்றார் வரும் வழியில் அவர் ஒரு புலியை எதிர்கொண்டார், ஆச்சிரியமாக அந்தப்புலி ஓடி மறைந்தது. எனது தந்தையார் அதைக்காட்டிலும் ஆச்சரியமடைந்தார். அவர் ஆச்சரியமான முறையில் தப்பிப்பிழைத்தது பற்றி அதிகரித்த அளவிலான வெளிப்பாடுகளைக் காட்டினார். தான் கடவுளர்களுக்கு பிழை செய்து விட்டேனா என எண்ணத்தொடங்கினார். அன்று தொடக்கம் அவர் புத்த சமயத்திற்கு கூடுதல் மதிப்பளிக்கத்தொடங்கினார். இதற்கிடையே சாம்பிராணிக்குச்சி கொளுத்தவும் ஆரம்பித்தார். இருப்பினும் சமய நம்பிக்கைகளில் தலையிடவில்லை, கஷ்டங்கள் ஏற்படும்போது மட்டும்தான் அவர் கடவுளை வணங்கினார்.

ஷெங்ஷி வெய் யென் என்ற நூல் எனது கல்வியை தொடருவதற்கான உத்வேகத்தை என்னுள் ஏற்படுத்தியது. அத்தோடு பண்ணையில் எனது உழைப்பின் மீதும் எனக்கு வெறுப்பு ஏற்பட்டது. இயல்பாகவே இதை எனது தந்தையார் எதிர்த்தார். இது பற்றி நாங்கள் இருவருமே பிரச்சனைப்பட்டோம். இறுதியில் நான் வீட்டை விட்டு ஓடினேன், ஒரு வேலையற்ற சட்ட மாணவனின் வீட்டுக்குச்சென்றேன். அங்கு ஆறு மாதங்கள் கல்வி கற்றேன். அதன் பின்பு ஒரு முதிய கல்விமானிடம் புராதன இலக்கிய நூலை மேலும் பயின்றேன். அத்தோடு பல சமகாலக் கட்டுரைகளையும் சில புத்தகங்களையும் படித்தேன்.

இந்த நேரத்தில் ஹூனானில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி என் முழு வாழ்க்கையிலும் செல்வாக்கை ஏற்படுத்தியது. நான் படித்த ஒரு சிறிய சீனப்பாடசாலைக்கு வெளியே பல வியாபாரிகள் சாங்காவில் இருந்து திரும்பி வருவதை மாணவர்களாகிய நாங்கள் அவதானித்தோம். அவர்கள் அனைவரும் ஏன் திரும்பிச்சென்றார்கள் என்று நாங்கள் அவர்களைக் கேட்டோம். நகரில் ஒரு பெரிய கிளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக  அவர்கள் கூறினார்கள். அந்த வருடம் ஒரு கடுமையான பஞ்சம் ஏற்பட்டிருந்தது சாங்காவில் பல்லாயிரக்கணக்கானோர் உண்ண உணவின்றி இருந்தனர். பட்டினி கிடந்தோர் உதவி கேட்டு ஒரு பிரதிநிதிக்குழுவை குடிசார் ஆளுனருக்கு அனுப்பினர்.

ஏன் உங்களிடம் உணவு இல்லை, நகரில் உணவு ஏராளமாக உள்ளது, என்னிடம் எப்போதும் ஏராளமாக உள்ளது என்று அந்த ஆளுனர் இறுமாப்புடன் கூறினார். ஆளுனரின் பதில் மக்களுக்கு கூறப்பட்டபோது அவர்கள் கடுமையாக ஆத்திரமுற்றனர். அவர்கள் பொதுக்கூட்டங்களை ஒழுங்கு செய்து ஒரு ஆர்ப்பாட்டத்தையும் ஒழுங்கு செய்தனர். அவர்கள் ஆளுனரின் அரச பணிமனையைத் தாக்கினர் அரசின் அடையாளச் சின்னமான கொடிக்கம்பத்தை வெட்டினார்கள், ஆளுனரை துரத்தியடித்தார்கள். இதனையடுத்து சாங் என்ற உள்ளூர் விவகார ஆணையாளர் தனது குதிரையில் வெளியே வந்து அவர்களுக்கு உதவு முகமாக  நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும் என்று மக்களிடம் கூறினார். இந்த வாக்குறுதிகளை வழங்கியதில் சாங் நேர்மையாக இருந்துள்ளார் என்பது வெளிப்படை ஆனால் சக்கரவர்த்தி இவரை வெறுத்ததோடு, இந்த மக்கள் கும்பலோடு நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாக இவர்மீது குற்றமும் சாட்டினார். இவர் பதவி விலக்கப்பட்டு ஒரு புதிய ஆளுனர் வந்து சேர்ந்தார். அவர் உடனடியாக இந்தக் கிளர்ச்சியின் தலைவர்களை கைது செய்ய உத்தரவிட்டார். இவர்களில் பெரும்பாலானவர்களின் தலை துண்டிக்கப்பட்டு அவர்களது தலைகள் எதிர்கால புரட்சியாளர்களுக்கு எச்சரிக்கையாக கம்பங்களில் குத்தப்பட்டு மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன. எங்களுடைய பாடசாலையில் இந்த நிகழ்ச்சி பல நாட்களாக விவாதிக்கப்பட்டது. இது என் மனதில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. ஏனைய மாணவர்களில் பெரும்பாலானவர்கள் கிளர்ச்சியாளர்களுக்கு அனுதாபம் காட்டினர். ஆனால் இது ஒரு பார்வையாளரின் நோக்கிலேயே அமைந்தது. தங்களுடைய சொந்த உயிரோடு வாழ்க்கையோடு ஏதாவது தொடர்புடையதாக இந்த நிகழ்ச்சி இருக்கிறதா என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. இதையொரு புரட்சியூட்டும் நிகழ்ச்சியாகவே அவர்கள் ஆர்வம் காட்டினர். இந்த நிகழ்ச்சியை ஒருபோதும் மறக்கவில்லை, புரட்சியாளர்கள் எனது குடும்பத்தைப்போலவே சாதாரண மக்கள் தான் என்பதை நான் உணர்ந்தேன். அவர்களுக்கு வழங்கப்பட்ட அநீதியால் நான் ஆழமாக ஆத்திரமுற்றேன்.

சில நாட்களுக்குப்பிறகு சாவோசான் என்ற இடத்திலே ஓர் ரகசிய சங்கமான கெலாவோ ஹூய் உறுப்பினர்களுக்கும்(ஹோ லுங் உறுப்பினராக இருந்த அதே சமயம்) ஒரு உள்ளூர் நில உரிமையாளர்களுக்குமிடையே ஒரு பிரச்சனை ஏற்பட்டது. அவர் இந்தச் சங்கதினர் மீது வழக்கு தொடர்ந்தார். அவர் ஒரு சக்திமிக்க நில உடைமையாளராக இருந்தபடியால் தனக்கு சாதகமாக ஒரு தீர்ப்பை அங்கு சுலபமாகப் பெற்றர். கெலாவோ உறுப்பினர்கள்  தோற்றுப்போயினர். ஆனால் அவர்கள் அடிபணிவதற்க்குப்பதிலாக அரசுக்கும் அந்த நில உடைமையாளருக்கும் எதிராக கிளர்ச்சி செய்தனர். லியூ ஷான் என்ற ஒரு உள்ளூரிலிருந்து மலைக்கு அவர்கள் பின்வாங்கி அங்கு ஒரு கோட்டையை அமைத்தனர். அவர்களுக்கு எதிராக துருப்புகள் அனுப்பப்பட்டன. கிளர்ச்சிக்காரர்கள் கிளர்ச்சிக்கான பதாகையை தூக்கியபோது ஒரு குழந்தையை பலி கொடுத்ததாக ஒரு கதையை பரப்பிவிட்டனர்.  அந்தப்புரட்சியாளர்களின் தலைவர் மாவரைக்கும் கல் செய்யும் பாங் என்று அழைக்கப்பட்டார். புரட்சியாளர்கள் இறுதியாக அடக்கப்பட்டனர். பாங் ஓடித்தப்ப வேண்டியேற்பட்டது. இறுதியில் அவர் கைது செய்யப்பட்டு தலை துண்டிக்கப்பட்டார். இருப்பினும் மாணவர்கள் கண்களில் அவர் ஒரு மாவீரனாக மிளிர்ந்தார், ஏனென்றால் இந்தப்புரட்சிக்கு அனைவரும் அனுதாபம் காட்டினர்.

அடுத்தவருடம் புதிய நெல் அறுவடை செய்யப்படாமல் இருந்தபோது மாரிக்காலத்திலேயே கையிருப்பு முடிந்து விட்டிருந்தது. இதனால் எங்கள் மாவட்டத்தில் உணவுத்தட்டுப்பாடு ஏற்பட்டது. ஏழைகள் பணக்கார விவசாயிகளிடம் உதவி கேட்டனர். காசு இல்லாமலேயே சோறு சப்பிடுங்கள் என்று ஒரு இயக்கத்தை அவர்கள் தொடங்கினார்கள். இதன் பொருள் பெரிய வீட்டில் அதாவது நில உடைமையாளர்களின் களஞ்சியத்தில் இருந்து உணவைப்பெறுவோம் என்பதே. எனது அப்பா ஒரு அரிசி வியாபாரியாக இருந்ததோடு எங்கள் மாவட்டத்தில் இருந்து நகரத்திற்கு அரிசி ஏற்றுமதி செய்பவராகவும் இருந்தார். இத்தட்டுப்பாட்டின் போதும் அப்படியே செய்துவந்தார். இவ்வாறு அனுப்பப்பட்ட ஒரு தொகுதி நெல் ஏழைகளால் கைப்பற்றப்பட்டது. இதனால் அவர் கோபம் எல்லை கடந்ததாயிற்று. இதற்காக அவர்மீது நான் அனுதாபப்படவில்லை.

ஒரு முற்போக்குத் தீவிரவாத ஆசிரியர் கற்பித்த ஒரு உள்ளூர் ஆரம்பப்பாடசாலையில் நான் இருந்தமையும் இந்தக்காலத்தில் என் மீது செல்வாக்கை ஏற்படுத்தியது. அவர் ஒரு முற்போக்குவாதியாக கருதப்பட்டமை, அவர் புத்த சமயத்திற்கு எதிராக இருந்தமையாலும் கடவுளர்களை அகற்ற அவர் முயன்றமையாலுமேயாகும். கடவுளர் இல்லங்களை பாடசாலைகளாக மாற்றும்படி அவர் மக்களைக் கோரினார். பலரால் பலவாறாக விவாதிக்கப்பட்ட மனிதராக அவர் இருந்தார். அவரை நான் வியந்து பாராட்டினேன், அத்தோடு அவரது கருத்துக்களை நானும் ஏற்றுக்கொண்டேன்.

ஏற்கனவே புரட்சிக்குணம் கொன்டிருந்த  எனது இளம் மனதில் அடுத்தடுத்து நிகந்த இந்த நிகழ்ச்சிகள் அழியாத தாக்கத்தை ஏற்படுத்தின. இந்தக்காலகட்டத்திலும் கூட ஒரு குறிப்பிட்ட அளவு அரசியல் உணர்வை நான் பெற்றுக்கொள்ளத்தொடங்கினேன். விசேடமாக சீனா துண்டாடப்பட்டதை அறிவிக்கும் ஒரு துண்டுப்பிரசுரத்தை படித்த பின்பு  இந்த உணர்வுகள் என்னை ஆட்கொண்டன. கீழ்காணும் வசனங்களோடு தான் அந்த துண்டுப்பிரசுரம் தொடங்கியிருந்தது. இது என் மனதில் இன்னும் பதிந்துள்ளது. அந்தோ சீனா அடிமைப்படுத்தப்படப்போகின்றது என்பதே அந்த வசனம். கொரியா தைவான் ஆகியவற்றை ஜப்பான் ஆக்கிரமித்துள்ளதையும் இந்தோசீனா பர்மா மற்றும் வேறு இடங்களில் இருந்த சீன ஆளுமைப்பிரதேசங்கள் இழக்கப்பட்டிருப்பதையும் இந்தப்பிரசுரம் எடுத்துக்காட்டியது. இதைப் படித்தபின்பு எனது நாட்டின் எதிர்காலம் பற்றி நான் மனம் தளர்ந்து போனேன். நாட்டைக் காப்பாற்றுவது அனைவரது கடமை என்பதை நான் உணரலானேன்.

சியா ரான் என்ற இடத்தில் இருந்த ஒரு அரிசிக்கடையில் பயிலுனர் வேலைக்கு அனுப்ப ஆசிரியர் முடிவு செய்தார். இக்கடையில் அவருக்கு தொடர்புகள் இருந்தன, ஆரம்பத்தில் இதை நான் எதிர்க்கவில்லை. ஏனென்றால் இந்த வேலை ரசிக்கக்கூடியதாக இருக்கும் என்று நான் நினைத்தேன். ஆனால் இதே வேளை ஒரு மாறுபாடான ஒரு புதிய பாடசாலையை பற்றி கேள்விப்பட்டேன். அதில் சேர்வது என்று உறுதி பூண்டேன். எனது தாயாரின் குடும்பம் வாழ்ந்த சியாங் சியாங் சீ யென் கிராமத்தில் இந்தப்பாடசாலை இருந்தது. அங்கு கல்வி பயின்ற எனது மைத்துனன் இந்தப்புதிய பாடசாலையைப் பற்றியும் நவீன கல்வி முறையில் ஏற்பட்டுவரும் மாற்றமான நிலைமைகளைப் பற்றியும் எனக்கு எடுத்துக்கூறினார். அங்கு புராதன இலக்கிய நூலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. மேற்கு நாடுகளின் புதிய அறிவு விடயங்கள் பற்றி அதிகமாக போதிக்கப்பட்டதோடு, கல்வி முறைகளும் மிகுந்த முற்போக்கு தன்மை கொண்டவையாக இருந்தன. நான் மைத்துனரோடு சென்று பாடசாலையில் பெயர் பதிவு செய்துகொண்டேன். நான் சியாங் சியாங் கிராமத்தவன் என்றே என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். ஏனெனில் அந்த பாடசாலை சியாங் சியாங் பகுதி மக்களுக்கு மட்டுமே கல்வி போதிக்கின்ற ஒரு பாடசாலை என்று கேள்விப்பட்டிருந்தேன். அந்தப்பாடசாலையில் எந்தப்பகுதியினரும் கல்வி பயிலலாம் என்று தெரிந்து கொண்ட பின்பு என்னை சியாங் ரான் ஊரவனாக அடையாளம் காட்டிக்கொண்டேன். எனது 5 மாதக்கல்விக்கான அனைத்துப்பொருட்களும் தங்கும் இடம் உணவு வசதிக்கும் 1400 செம்புக்காசுகளை நான் செலுத்தினேன். எனது வருவாயை பெருக்கும் சக்தியை இந்த உயர்தரக் கல்வி அதிகரிக்கும் என்று எனது நண்பர்கள் எனது தந்தையாரிடம் விவாதித்த பின்பு இறுதியாக இந்தக்கல்வியை தொடர்வதற்கு எனது தந்தையார் அனுமதித்தார். எனது வீட்டிலிருந்து 50 வி தூரத்திற்கு அப்பால்  நான் இருப்பது இதுவே முதற்தடவை. அப்போது எனக்கு வயது 16. இந்தப் புதமிய பாடசாலையில் இயற்கை விஞ்ஞானத்தையும் மேற்கத்திய புதிய பாடங்களையும் என்னால் படிக்க முடிந்தது. இந்தக்கல்லூரியில் கற்பித்த ஆசிரியரொருவர் ஜப்பானில் கல்வி பயின்றவராக இருந்தமை இங்கு மற்றொரு குறிப்பிடத்தகுந்த விடயமாகும். அவர் தனது தலைமயிர் பின்னல்களில் போலி முடி அணிந்திருந்தார் அவரது பின்னல் செயற்கை முடியால் ஆனது என்பதை இலகுவாக கூறமுடியும். அனைவரும் அவரைப்பார்த்து நகைத்ததோடு போலி வெளிநாட்டுப் பிசாசு என்று அழைத்தனர். நான் இதற்கு முன்பு இத்தனை அதிக எண்ணிக்கையிலான பிள்ளைகளை ஒருசேரப் பார்த்ததில்லை. இவர்களில் பெரும்பான்மையானவர்கள் நில உடைமையாளர்களின் ஆண் மக்கள். அவர்கள் விலை உயர்ந்த ஆடைகளை அணிந்திருந்தார்கள். அத்தகைய பாடசாலைக்கு தங்கள் குழந்தைகளை அனுப்ப  வெகுசில விவசாயிகளாலேயே முடியும். ஏனையவர்களை காட்டிலும் நான் மோசமான ஆடைகளை அணிந்திருந்தேன். என்னிடம் ஒரே ஒரு அழுக்கான சூட் மட்டும் தான் இருந்தது. கவுண்கள் மாணவர்களால் அணியப்படுவதில்லை, இதை ஆசிரியர்களே அணிந்தனர். வெளிநாட்டுப் பிசாசுகள் மட்டும்தான் அன்னிய ஆடைகளை அணிந்திருந்தனர். பணக்கார மாணவர்களில் பலர் எனது கந்தல் ஆடைக்காக என்னை வெறுத்தனர். இருப்பினும் அவர்களிடையே எனக்கு நண்பர்கள் இருந்தனர். அவர்களில் இருவர் எனது நல்ல தோழர்கள், அவர்களில் ஒருவர் தற்போது எழுத்தாளர். அவர் தற்போது சோவியத் ரஷ்யாவில் வாழ்கிறார். அவர் பெயர் சீயே சான் (எமிசியாவ்)

சியாங் சியாங் பகுதியை சேராதவன் என்பதால் நான் வெறுக்கப்பட்டேன்.சியாங் சியாங் கை சேர்ந்தவனாகவும் ஒரு குறிப்பிட்ட மாவட்டத்தை சேர்ந்தவனாகவும் இருப்பது மிக முக்கியம். அங்கு ஒரு கீழ் மேல் மத்திய மாவட்டங்கள் இருந்தன. இவர்கள் பிராந்திய அடிப்படையில் தொடர்ந்து சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். இன்னொரு பகுதி இருக்கிறது  என்ற விடயத்தில் இரு பகுதியினருமே விட்டுக்கொடுக்க மாட்டார்கள். இந்தப்பெயரில் நான் நடு நிலமை வகித்தேன். ஏனென்றால் நான் இந்தப்பகுதியைச் சார்ந்தவன் அல்லவே. இதன் விளைவாக மூன்று பகுதியினர் என்னை வெறுத்தனர். இதனால் நான் உளரீதியாக மனவருத்தம் அடைந்தேன். ஆசிரியர்கள் என்னை விரும்பினர். விசேடமாக புராதன இலக்கியம் படிப்பித்த ஆசிரியர்கள்  என்னை நேசித்தனர்.  ஏனென்றால் நான் இத்துறையில்  கட்டுரைகளை இலக்கிய நயத்தோடு எழுதினேன். ஆனால் எனது மனம் புராதன இலக்கிய நூலில் நாட்டம் கொள்ளவில்லை. எனது மைத்துனன் அனுப்பிய 2 நூலகளை நான் படித்துக்கொண்டிருந்தேன். ஒன்று காங் யூ வெய்யின் சீர்திருத்த இயக்கம் பற்றியதாகும் மற்றது சின் மின் சுங் பாயோ(நவீன மக்களின் பல்வேறு விடயங்களின் தொகுப்பு) இது லியாங் சீ ஷாவ் எழுதியது( லியாங் சீ ஷாவ் மஞ்சு ஆட்சிக்காலதின் இறுதியில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற கட்டுரையாளர். இவர் ஒரு சீர்திருத்த இயக்கத்திற்கு தலைவராக இருந்ததன் விளைவாக நாடுகடந்து வாழ வேண்டி ஏற்பட்டது. 1911ல் இடம்பெற்ற முதலாவது புரட்சியின் அறிவியல் தந்தையர்களாக இவரும் காங் யூ வெய்யும் இருந்தனர்)

இந்தப்புத்தகங்களை அவற்றின் விடயங்கள் அனைத்தும் மனதில் பதியும் வரை நான் மீண்டும் மீண்டும் படித்தேன். காங் யூ வெய்யையும், லியாங் சீ ஷாவ்வையும் போற்றிப் பணிந்தேன். இதற்காக எனது மைத்துனருக்கு நான் மிகுந்த நன்றியுடையவானாகின்றேன். அப்போது இவரை ஒரு சிறந்த முற்போக்குவாதி என்று கருதினேன், பின்னரோ அவர் ஒரு எதிர்ப்புரட்சியாளராகவும் பிரபுத்துவக் குடும்ப உறுப்பினராகவும் இருந்ததோடு 1925 1927 இல் இடம்பெற்ற  மகத்தான் புரட்சிக்காலத்தில் அவர் பிற்போக்குவாதிகளோடு இணைந்து கொண்டார்.

பெரும்பாலான மாணவர்கள் போலி வெளிநாட்டுப் பிசாசை அவரது போலியான தலை மயிருக்காக வெறுத்தனர். ஆனால் நான் அவர் ஜப்பானை பற்றி அவர் கூறுவதை விரும்பினேன். அவர் இசையும் ஆங்கிலமும் படிப்பித்தார் அவரது ஜப்பானியப்பாடலொன்று மஞ்சள் கடல் சமர் என்று அழைக்கப்பட்டது. அந்தப்பாடலின் சில அழகான வரிகளை நான் தற்போதும் நினைவில் வைத்துள்ளேன்.

பாட்டுப்பாடும் சிட்டுக்குருவி ஆட்டம் ஆடும்

வானம் பாடி

வசந்தத்தின் இனிய பசும் வெளிகள்

செம்மை நிறத்தில் மாதுளை மலர்கள்

பச்சை வண்ண வில்லோ மரங்கள்

புரியுது! இது ஒரு புதிய காட்சி!

அப்போது ஜப்பானின் அழகை என்னால் புரிந்து கொள்ளமுடிந்தது. ரஷ்யா மீதான அதன் வெற்றியில் ஜப்பானின் பெருமையும் பலத்தையும் பற்றி இந்தப்பாடலிலிருந்து சிறிது என்னால் விளங்கிக் கொள்ள முடிந்தது. (ஜப்பானிய ரஷ்யப்போர் முடிவுற்றதையடுத்து பாரிய போர்ட்ஸ் மௌத் ஒப்பந்தம் ஜப்பானில் ஏற்படுத்திய  பாரிய மகிழ்சிப்பிரவாகத்தையும் இந்தப்பாட்டு எடுத்துக்கூறுகிறது) இன்று எங்களுக்குத்தெரிகின்ற ஒரு மிருகத்தனமான ஜப்பான் ஒன்று இருக்கிறது என்ற விடயம் அப்போது எனக்குத் தெரியாது.

இந்தப்போலி வெளிநாட்டுப் பிசாசிடம் நான் கற்றவை எவ்வளவோ, இந்தக்காலகட்டத்தில் தான் நான் முதலாவது பேரரசரும் ஆட்சி அதிகாரம் பெற்று பேரரசி டவாகர் (சுசி) ஆகிய இருவரும் இறங்துவிட்டதாக  கேள்விப்பாட்டேன். புதிய பேரரசர் சுவான் துவ் ஏற்கனவே இரண்டு வருடங்களாக நாட்டை ஆண்டுகொண்டிருந்த போதிலும் எனக்கு மேற்கூறிய விடயம் அப்போது தான் தெரியும். நான் இன்னும் பேரரசர் ஆட்சி முறைக்கு எதிரானவனாக மாறவில்லை. உண்மையில் நான் பேரரசரையும் பெரும்பாலான அரச அதிகாரங்கலைட்யும் நேர்மையான நல்ல விவேகமான மனிதர்கள் என்றே கருதினேன். காவ் யூ வெய்யின் சீர்திருத்தங்களின் உதவி மட்டுமே அவர்களுக்குத் தேவை. பண்டைய சீன ஆட்சியாளர்களின் சாதனைகளால் நான் பெரிதும் கவரப்பட்டேன். குறிப்பாக யா வோ ஷூன், சீன் ஷீஹ்வாங் டி, காள் வூரி ஆகியோரைப்பற்றிய பல புத்தகங்களை படித்திருந்தேன்.

யாவ் ஷூன் ஆகியோர் ஓரளவு இதிகாசப்ப்புகழ் படைத்த சீனாவின் முதல் பேரரசர்கள், வெய் மஞ்சள் ஆறுகளின் சமவெளிகளில் சீன சமுதாயத்தை உருவாக்கியமை, வெள்ளத்தை கட்டுப்படுத்தியமை (ஆறுகளின் பக்கவாட்டில் கட்டப்பட்ட பாதுகாப்பு அணைகள், கால்வாய்கள் மூலம்) ஆகியவற்றிற்கான  பெருமை இவர்களையே சாரும்.சின் ஷீ க்வாங் டி சீனப்பேரரசை ஒருங்கிணைத்தமை, சீனப்பெருங்சுவரை கட்டிமுடித்தவை ஆகியவற்றிற்கான பெருமையை பெருகிறார். ஹான் வூரி, ஹான் அரச வம்சத்தின் அத்திவாரங்களை உறுதிப்படுத்திய சிறப்பை பெற்றிருக்கின்றனர். சின் அரச வம்சத்தை தொடர்ந்து ஆட்சிக்கு வந்த இந்த அரச வம்சம்(பின்பு வந்த வராண் ஆட்சிக்காலத்தையும் சேர்த்து சீனவை 426 வருடங்கள் ஆட்சி செய்தது)

இந்தக்காலத்தில் வெளிநாட்டு வரலாறுகள் சிலவற்றையும் புவியியலையும் நான் கற்றேன். அமெரிக்கப்புரட்சியைப் பற்றி எடுத்துக்கூறிய  ஒரு கட்டுரையை படித்தபோதே நான் முதன் முதலில் அமெரிக்காவைப் பற்றி கேள்விப்பட்டேன். அக்கட்டுரையில் ஒரு சொற்றொடர் இவ்வாறு இருந்தது. எட்டு வருட இடர் மிகுந்த ஒரு போரின் பின்பு வாஷிங்டன் வெற்றி பெற்று தனது நாட்டை கட்டி எழுப்பினார். உலகின் மாவீரர்கள் என்ற புத்தகத்தில் தான் நெப்போலியன், ரஷ்யாவின் காத்ரினா, மகா பீட்டர் வெலிங்டொன், கிளாஸ்ட்ரோன்  ரூசோ மொன்டெச்க்க்யூ, லிங்கன்  ஆகியோரைப்பற்றி படித்தேன்.

இந் நூலின் முந்திய பகுதிகள்

பதிப்புரை

முகவுரை

மாவோவின் குழந்தைப் பருவம் ௧

6 thoughts on “மாவோவின் குழந்தைப்பருவம் ௨

  1. \\அத்தோடு பல சமகாலக் கட்டுரைகளையும் சில புத்தகங்களையும் படித்தேன்//
    செக்ஸ் புக் லாம் படிச்சிருப்பார் போல

  2. டும்மு,

    நீங்க படிச்ச புஸ்தகத்தை எல்லாம் ஏன் இங்கே வந்து சொல்லிக்கிட்டிருக்கீங்க

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s