ஷாங் ஷா வில் வாழ்ந்த நாட்கள் – ௧

ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம் பகுதி ௫

நான் ஷாங் ஷா செல்வதற்கு விருப்பம் கொள்ளத் தொடங்கினேன். மாகாணத் தலைநகரான இந்தப் பெருநகரம் எனது ஊரிலிருந்து 120லி தூரத்தில் இருந்தது. இது ஒரு மாபெரும் நகரம், பெருமளவிலான மக்களையும் பாட சாலைகளையும் ஆளுநரின் ஆட்சிப் பணிமனைகளையும் தன்னகத்தே கொண்டது. இந்த நேரத்தில் அங்கு சென்று சியாங் சியாங் மக்களுக்கான நடுத்தரப் பாடசாலையில் சேர்ந்துகொள்ள நான் பெருவிருப்பமுடையவனாக இருந்தேன். அந்த மாரிக்காலத்தில் உயர் ஆரம்பப் பாடசாலையில் உள்ள ஒரு ஆசிரியரிடம் என்னை அங்கு அறிமுகப்படுத்துமாறு வேண்டினேன். அதற்கு அந்த ஆசிரியர் ஒத்துக்கொண்டார். மிகுந்த உற்சாகத்தோடு ஷாங் ஷா வுக்கு நடந்தே சென்றேன். இந்தப் பெரிய பாடசாலையில்  எனக்கு அனுமதி கிடைக்காமல் போகலாம் என்ற பயத்துடனும், அந்தப் பாடசாலையில் மாணவனாகும் வாய்ப்புக்கிட்டும் எனும் நம்பிக்கை இல்லாமலும்தான் அங்கு சென்றேன். ஆச்சரியத்திற்குரிய வகையில் எவ்வித சிரமமுமின்றி நான் அப் பாடசாலையில் அனுமதிக்கப்பட்டேன். ஆனால் அரசியல் நிகழ்வுகள் விரைவாக நகர்ந்து கொண்டிருந்தன. அந்த பாடசாலையில் நான் ஆறு மாதங்கள் மட்டுமே கல்வி பயின்றேன்.

ஷாங் ஷாவில் ஒரு செய்தித்தாளை முதன்முறையாக படித்தேன். மின் லி பாவோ(மக்கள் பலம்) என்ற இந்த தேசிய புரட்சிகர சஞ்சிகை, மஞ்சு அரச வம்சத்திற்கு எதிராக நடைபெற்ற காண்டான் எழுச்சி பற்றியும் ஹீவாங் சிங் என்ற ஹூனான்வாசியின் தலைமையில் 72 மாவீரர்கள் இறந்தது பற்றியும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியால் நான் வெகுவாகக் கவரப்பட்டேன், அத்துடன் மில் யூ யென் (பின்பு ஒரு புகழ் பெற்ற கோமிண்டாங் தலைவரானவர்). இதே காலத்தில் நான் சுன் யாட் சென்னைப் பற்றியும் ருங் மென் ஹுய் திட்டத்தைப் பற்றியும் தெரிந்து கொண்டேன். (ருங் மென் ஹுய் என்பது ஒரு ரகசியக்குழு. சுன் யாட் சென்னால் ஆரம்பிக்கப்பட்ட இந்தக்குழு தான் கோமிண்டாங் கட்சிக்கான முன்னோடி. இதன் பெரும்பாலான உறுப்பினர்கள் நாடு கடத்தப்பட்டவர்களாக ஜப்பானில் வாழ்ந்தார்கள். சீர்திருத்த அரச வம்ச கட்சியின் தலைவர்களான சி சாவ், காங் யூ வெய் ஆகியோருக்கு எதிராக  இவர்கள் ஜப்பானில் இருந்துகொண்டு பேனா முறையில் கடும் யுத்தம் நடத்தினார்கள்) நாடு முதலாவது புரட்சிக்கு தயாரான நிலையில் இருந்தது. எனக்கு ஏற்ப்பட்ட மனக்குமுறல் காரணமாக நான் ஒரு கட்டுரை எழுதினேன். அதை பாடசாலை சுவரில் ஓட்டினேன். ஒரு அரசியல் கருத்து(நோக்கு) பற்றிய எனது முதல் வெளிப்பாடு அதுதான். ஆனால் அந்தக் கட்டுரை ஒரு குழப்பமானதாக இருந்தது. நான் அப்போதும் லியாங் சி சாவ், காங் யூ வெய் ஆகியோர் மீதான வியந்து போற்றுதலைக் கைவிடவில்லை. அவர்களிடையே உள்ள வித்தியாசங்களை நான் தெளிவாக விளங்கிக்கொள்ளவில்லை. ஆகவே எனது கட்டுரையில் சுன் யாட் சென் ஜப்பானிலிருந்து புதிய அரசின் ஜனாதிபதியாக்கப்பட வேண்டும், காங் யூ வெய் பிரதமராக்கப்பட வேண்டும், லியாங் சி சாவ் வெளிநாட்டரசராக்கப்பட வேண்டும் என்று நான் முன்மொழிந்திருந்தேன். இது ஒரு பொருத்தமற்ற கூட்டணி, காங்கும் லியாங்கும் முடியாட்சி ஆதரவாளர்கள், சுன் யாட் சென் முடியாட்சி எதிர்ப்பாளர்.

சிச்சுவான் ஹான் கௌ ரயில்வே கட்டமைப்பு சம்மந்தமான அந்நிய முதலீட்டு எதிர்ப்பு இயக்கமும், ஒரு பாராளுமன்றத்தை அமைக்குமாறு  எழுந்த பொதுமக்களின் கோரிக்கையையும் பரவலான முறையில் எழுந்தது. இதற்கான பதிலாக, ஒரு ஆலோசனைக்குழு அமைக்க மட்டுமே பேரரசர் ஆணையிட்டார். எனது பாடசாலை மாணவர்கள் மேலும் மேலும் தீவிர விவாதங்களில் ஈடுபட்டனர். தங்களின் தலைமயிர்ப் பின்னலுக்கு எதிராக ஒரு புரட்சியை நடத்தியதன் மூலம் தங்களுடைய மஞ்சு எதிர்ப்பு உணர்ச்சிகளை மாணவர்கள் வெளிக்காட்டினர். ஒரு நண்பரும் நானும் எங்களுடைய பின்னல்களை வெட்டிவிட்டோம். ஆனால் அவ்வாறு வெட்டுவதாக முன்பு உறுதியளித்திருந்த ஏனைய மாணவர்கள், பிற்பாடு தங்களுடைய வாக்குறுதியை காப்பாற்றத் தவறிவிட்டனர். எனது நண்பனும் நானும் அவர்களை ரகசியமாகத் தாக்கி அவர்களுடைய பின்னல்களை வலுக்கட்டாயமாக வெட்டினோம். எங்களுடைய கத்திரிக்கோலுக்கு பத்திற்கும் மேற்பட்ட பின்னல்கள் பலியாயின.

இதன் மூலம் ஒரு குறுகிய காலத்திற்குள் ‘போலி வெளிநாட்டுப் பிசாசின்’ போலிப்பின்னல்களை கேலி செய்வதிலிருந்து பின்னல்களை பொதுவாகவே ஒளிக்கவேண்டுமேன்று கோருமளவிற்கு நான் முன்னேறியிருந்தேன். ஒரு அரசியல் சிந்தனை ஒரு எண்ணக்கருத்தை எவ்வாறு மாற்றமுடியும் என்பதற்கு எடுத்துக்காட்டு இது.

சட்டக்கல்லூரியில் பயின்ற ஒரு நண்பனுடன் இந்த பின்னல் விடயத்தில் நான் பிரச்சனைப்பட்டேன். இந்த விடயத்தில் நாங்கள் இருவரும் எதிரெதிர் கோட்பாடுகளை முன்வைத்தோம். உடல், தோல், நகங்கள் ஆகியவை ஒவ்வொருவரது பெற்றோராலும் வழங்கப்பட்ட ஒரு பரம்பரை சொத்து. ஆகவே அவை அழிக்கப்படக்கூடாது என்று புராதன இலக்கிய நூலை உதாரணம் காட்டி தனது வாதத்தை வென்றெடுக்க அந்த சட்ட மாணவன் முயன்றான். ஆனால் நானும் பின்னல் எதிர்ப்பாளர்களும் மஞ்சு எதிர்ப்பு அரசியல் அடிப்படையில் ஒரு எதிர்க்கோட்பாட்டை உருவாக்கி அவனை முழுமையாக வாயடைக்க வைத்தோம்.

வியுவான் ஹாங் தலைமையில் சாகன் கிளர்ச்சி நடைபெற்றதும் (1911ஆம் ஆண்டு மஞ்சு முடியாட்சியை தூக்கியெறிந்த புரட்சியின் தொடக்கம்) ஹூனானில் ரானுவச்சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அரசியல் சூழ்நிலை விரைவாக மாறியது. ஒரு நாள் ஒரு புரட்சிவாதி நடுத்தரப் பாடசாலையில் தோன்றி பாடசாலை அதிபரின் அனுமதியுடன் ஒரு கிளர்ச்சியான சொற்பொழிவை நிகழ்த்தினார். இந்தக்கூட்டத்தில் இருந்த ஏழு அல்லது எட்டு மாணவர்கள் ஆட்சியை கடுமையாக தாக்கினார்கள். அத்தோடு குடியரசை உருவாக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரினார்கள். அனைவரும் முழுமையான கவனத்தோடு சொற்பொழிவை கேட்டார்கள். கிளற்சியுற்றிருந்த மாணவர்கள் முன்னால் வியுவான் ஹாங்கின் அதிகாரிகளில் ஒருவரான அந்த புரட்சிச்சொற்பொழிவாளர் உரையாற்றியபோது ஒரு சிறு ஓசையும் எழவில்லை.

இந்த சொற்பொழிவைக் கேட்டு நான்கு அல்லது ஐந்து நாட்களுக்குப் பின்பு லி யுவான் ஹாங்கின் புரட்சிகர ராணுவத்தில் சேர நான் உறுதிபூண்டேன். வேறுபல மாணவர்களோடு ஹன் கோவுக்கு செல்ல நான் முடிவு செய்தேன். வகுப்புத்தோழர்களிடமிருந்து சிறிதளவு பணத்தை நாங்கள் சேகரித்தோம். ஹன் கோவின் வீதிகள் மிகுந்த ஈரமானவை என்றும் மழைக்கால சப்பாத்துகள் அங்கு அவசியம் என்றும் கேள்விப்பட்டு, நகரத்திற்கு வெளியே தங்கியிருந்த ராணுவத்தில் உள்ள ஒரு நண்பனிடம் சில சப்பாத்துகள் கடனாக பெறச்சென்றேன். ராணுவத்தின் கொத்தளக்காவலர்களால் நான் தடுத்து நிருத்தப்பட்டேன். இந்த இடம் சந்தடிமிக்கதாக இருந்தது. முதற்தடவையாக துருப்புகளுக்கு துப்பாக்கிக்குண்டுகள் வழங்கப்பட்டிருந்தன. அவர்கள் தெருக்களுக்குள் பெரும் எண்ணிக்கையில் நுழைந்துகொண்டிருந்தனர்.

காண்டான் ஹன்கோ ரயில் பாதையினூடாக புரட்சியாளர்கள் நகரத்தை நெருங்கிக் கொண்டிருந்தனர். சண்டை அங்கு தொடங்கிவிட்டது. ஷாங் ஷாவின் நகர மதில்களுக்கு அப்பால் ஒரு பெரிய சமர் இடம்பெற்றுள்ளது. அதேவேளை நகரினுள்ளே ஒரு கிளர்ச்சி ஏற்பட்டது, அத்தோடு நகர வாயிற்கதவுகள் தாக்கப்பட்டு சீனத்தொழிலாளர்களால் கைப்பற்றப்பட்டன. இந்தக் கதவுகளில் ஒன்றின் வழியாக நான் நகரினுள் நுழைந்தேன். பின்பு ஒரு உயரமான இடத்தில் நின்று சமரை அவதானித்தேன். இறுதியாக ஆளுநரின் அரசுப் பணிமனையின் மீது ஹான் கொடி ஏற்றப்படுவது வரையில் இருந்தேன். அதில் ஹான் என்ற எழுத்து இருந்தது. நான் பாடசாலைக்கு திரும்பினேன், அது ரானுவக்காவலர்களினால் காவல் காக்கப்பட்டிருந்தது.

அடுத்த நாள் ஒரு ராணுவ அரசு நிறுவப்பட்டது (டுட்டு என்பது ராணுவ ஆளுனரைக் குறிக்கும்) கீ வாவோ ஹுய்(மூத்த சகோதரர் சங்கம்) சங்கத்தை சேர்ந்த பிரபல இரண்டு உறுப்பினர்கள் ஆளுனர்களாகவும், சென் சோ சிங் உதவி ஆளுனராகவும் பதவியேற்றனர். மாகாண ஆலோசனைக்குழுவில் முன்னைய கட்டிடத்தில் புதிய அரசு நிறுவப்பட்டது. இதன் தலைவராக இருந்த ரான் யென் காய் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அந்த ஆலோசனைக்குழுவும் கலைக்கப்பட்டது. புரட்சிவாதிகளால் கண்டுபிடிக்கப்பட்ட மஞ்சு ஆவணங்களிடையே  பாராளுமன்றம் ஒன்றை திறக்குமாறு கோரும் ஒரு கோரிக்கை கடிதத்தின் பிரதிகள் காணப்பட்டன. இதன் மூலப்பிரதி சுடேலியினால் இரத்தத்தில் எழுதப்பட்டிருந்தது. அவர் தற்போது சீன சோவியத் அரசின் கல்வி ஆணையாளராக கடமையாற்றுகிறார். தனது உறுதிப்பாட்டையும் நேர்மையையும் எடுத்துக்காட்டும் விதமாக தனது கை விரலின் முன்பகுதியை வெட்டித்தான் இக்கடிதத்தை எழுதினர். அவரது கோரிக்கைக்கடிதம் பாராளுமன்றம் திறக்கப்படவேண்டுமேன்று கோரி, எனது விரலை வெட்டுவதுடன் நான் விடைபெறுகிறேன் (பீகிங்கின் மாகாணப் பிரதிநிதிகளிடம்) என்று முடிந்திருந்தது.

புதிய ராணுவ ஆளுநர்களும் உதவி ஆளுநரும் நீண்ட நாட்கள் இருக்கவில்லை. அவர்கள் கெட்ட மனிதர்கள் அல்ல, அத்தோடு அவர்களுக்கு புரட்சிகர நோக்குகளும் இருந்தன. ஆனால் அவர்கள் ஏழைகள் அத்தோடு அடக்கப்பட்டவர்களின் நலன்களை அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தினார்கள். நில உடமையாளர்களும் வர்த்தகர்களும் இவர்களோடு அதிருப்தி கொண்டிருந்தனர். சில நாட்களுக்குள் நான் ஒரு நண்பனைக் காணச்சென்றபோது வீதியிலே அவர்களது சடலங்களைப் பார்த்தேன். ரான் யென் காய், ஹூனான் நில உடைமையாளர்கள், ராணுவத்தினரின் பிரதிநிதியாய் செயல்பட்டு அவர்களுக்கெதிராக ஒரு கிளர்ச்சியை ஏற்பாடு செய்திருந்தான்.

தற்போது பல மாணவர்கள் ராணுவத்தில் செர்ந்துகொண்டிருந்தார்கள். ஒரு மாணவ ராணுவம் நிறுவப்பட்டிருந்தது. இந்த மாணவர்களிடையே ராங்  செங் சியும் இருந்தார் (1972 இல் வாங் சிவ் வெய்யின், ஷகான் அரசினுடைய தேசியவாதிகளின் ரானுவத்தினுடைய கமாண்டராக பின்பு ராங் செங் சி இருந்தார். அவர் வாங்கையும் கம்யூனிஸ்டுகளையும் காட்டிக்கொடுத்து ஹூனானின் விவசாயப்படுகொலையை தொடங்கினார்) நான் மாணவ ராணுவத்தை விரும்பவில்லை. இந்தக்கட்டமைப்பின் அத்திவாரம் குழப்பமானதாக இருப்பதை நான் உணர்ந்தேன். இதற்கு மாறாக மரபுமுறை ராணுவத்தில் சேர நான் விரும்பினேன். அதன் மூலம் புரட்சியை முழுமையாக்க நினைத்தேன். சிங் பேரரசர் இன்னும் பதவி துறக்கவில்லை. அத்தோடு போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தன.

எனது சம்பளம் மாதத்திற்கு ஏழு யுவானாக இருந்தது, இருப்பினும் அது தற்போது நான் செஞ்சசேனையில் வாங்கும் சம்பளத்தை விட அதிகமாகும். நான் இப்பனத்தில் உணவுக்காக மாதம் ஒன்றுக்கு இரண்டு யுவான் செலவழித்தேன். தண்ணீரையும் விலை கொடுத்தே வாங்கவேண்டியதிருந்தது. படைவீரர்கள் நகருக்கு வெளியிலிருந்தே தண்ணீர் எடுத்து வந்துகொண்டிருந்தார்கள். நான் மாணவனாக இருந்தபடியால் தண்ணீரை அவ்வாறு கொண்டுவர முடியவில்லை. தண்ணீர் விற்பவர்களிடம் வாங்கினேன். எனது சம்பளத்தில் மிகுதிப்பணம் செய்தித்தாள் வாங்குவதில் செலவழிந்தது. நான் செய்தித்தாள் வாசிப்பதில் பற்றுள்ள வாசகனாகினேன். அப்போது புரட்சியோடு தொடர்புடைய சஞ்சிகைகளில் சியாங் சியாங் ஜிபவோ (சியாங் நதி தினச்செய்தி) இருந்தது. அதில் சோசலிசம் பற்றி விவாதிக்கப்பட்டது, இதிலிருந்த செய்திப்பத்திகளில் தான் சோசலிசம் எனும் சொல்லை நான் அறிந்துகொண்டேன். நானும் சோசலிசத்தைப் பற்றி விவாதித்தேன். உண்மையில் சமூக சீர்திருத்தம் பற்றிய விடயத்தை ஏனைய மாணவர்களுடனும், படைவீரர்களுடனும் விவாதித்தேன். சோசலிசம் பற்றியும் அதன் கொள்கைகள் பற்றியும் சியாங் காங் ஹூ எழுதிய சில துண்டுப் பிரசுரங்களையும் நான் படித்தேன். இந்த விடயம் குறித்து எனது வகுப்பு மாணவர்களில் பலருக்கு உற்சாகத்துடன் எழுதினேன். ஆனால் அவர்களில் ஒருவர் மட்டும்தான் எனக்கு ஆதரவாக விடையளித்தார்.

எனது குழுவில் ஒரு ஹூனான் சுரங்கத்தொழிலாளியும், ஒரு இரும்பு வேலைத் தொழிலாளியும் இருந்தனர். அவர்களை நான் மிகவும் நேசித்தேன். ஏனையோர் வெகு சாதாரணமானவர்கள், அவர்களில் ஒருவன் கெட்டவன். மேலும் இரண்டு மாணவர்களை நான் ராணுவத்தில் சேர தூண்டினேன். எனது பிளாட்டூன் கமாண்டருடனும் பெரும்பாலான படைவீரர்களுடனும் நான் நட்புவைத்திருந்தேன். என்னால் எழுத முடியும் அத்தோடு புத்தகங்களைப்பற்றி எனக்கு சிறிது அறிவு இருந்தது. எனது ‘மகத்தான கல்வியை’ அவர்கள் கௌரவித்தார்கள். அவர்களுக்கு கடிதங்கள் எழுதி உதவுவதிலும் அது போன்ற வேறு பணிகளிலும் என்னால் உதவ முடிந்தது.

புரட்சியின் பெறுபேறு இன்னமும் தீர்க்கமாக முடிவுசெய்யப்படாத நிலையில் இருந்தது. தலைமைத்துவம் சம்பந்தமாக இன்னமும் கோமிண்டாங் கட்சிக்குள் வேறுபாடுகள் இருந்தன. அதேவேளை சிங்(பேரரசர்) தனது அதிகாரத்தை முழுமையாக கைவிட்டுவிடவுமில்லை. மேலும் போர் நடப்பது சாத்தியமே என்று ஹூனானில் கூறப்பட்டது. மஞ்சு ஆட்சியினருக்கும் யுவான் ஷூ காய்க்கும் எதிராக பல ரானுவங்கள் திரட்டப்பட்டன.

(யுவான் ஷூ காய் மஞ்சு ஆட்சியாளர்களின் ராணுவத்தின் பிரதம தளபதியாக இருந்தவர். 1911ம் ஆண்டு மஞ்சு ஆட்சியாளர்களை பதவியிறங்க வைத்தவர்) இதில் ஹூனான் படை நடவடிக்கையில் இறங்குவதற்கு தயாராகிக்கொண்டிருந்தபோது சுன் யாட் சென்னும் யுவான் ஷூ காயும் ஒரு உடன்பாட்டுக்கு வந்தனர். ஏற்பட இருந்த யுத்தம் இதனால் தவிர்க்கப்பட்டது. வடக்கும் தெற்கும் இணைக்கப்பட்டன. நான்கிங் அரசு கலைக்கப்பட்டது. புரட்சி முடிந்துவிட்டதாக எண்ணிய நான், ராணுவத்திலிருந்து விலகி எனது கற்கை நெறிக்கு திரும்பத் தீர்மானித்தேன். நான் ஆறு மாதங்கள் படைவீரனாக இருந்தேன்.

இந் நூலின் முந்திய பகுதிகள்

பதிப்புரை

முகவுரை

மாவோவின் குழந்தைப் பருவம் ௧

மாவோவின் குழந்தைப் பருவம் ௨

3 thoughts on “ஷாங் ஷா வில் வாழ்ந்த நாட்கள் – ௧

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s