உயிரைப் பறித்தாலும் நிலத்தைப் பறிக்க முடியாது

போஸ்கோ நிறுவனத்திற்கு எதிரான ஒரிசா மக்களின் போராட்டம் எஃகுறுதியுடன் முன்னேறுகிறது.

இந்தியாவின் மிகப்பெரிய அன்னிய முதலீட்டுத்திட்டமான தென்கொரியாவின் போஸ்கோ எஃகு ஆலைத்திட்டத்திற்கு எதிஎராக, போஸ்கோ பிரதிரோத் சங்கராம் சமிதி (பி பி எஸ் எஸ்) என்ற அமைப்பின் தலைமையில் ஒரிஸ்ஸாவின் ஜெகத்சிங்புர் மாவட்டத்தின் விவசாயிகள் கடந்த ஐந்தாண்டுகளாகப் போராடிவருகின்றனர். கடந்த ஜனவரி 26 முதலாக போஸ்கோ திட்டத்திற்கு எதிராக காலவரையற்ற தர்ணா போராட்டத்தை அவர்கள் நடத்தி வருகின்றனர்.

தென்கொரிய அதிபர் லீ மையூங் பாக் டெல்லியில் கடந்த ஜனவரி 26 அன்று நடந்த ‘குடியரசு’ தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அவர் வருகைக்கு முன்னதாக 3566 ஏக்கர் நிலங்கள் அரசால் கையகப்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. எஞ்சிய நிலங்களை விரைவில் கையகப்படுத்தி விரைவில் திட்டத்தை செயல்படுத்தப்போவதாகவும் அரசு அறிவித்துள்ளது. அதாவது 2006ஆம் ஆண்டில் கலிங்கா நகரில் போராடிய விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 14பேரை கொன்றதைப்போல, மிகக்கொடிய தாக்குதலை கட்டவிழ்த்துவிடத்  துடிக்கிறது.

ஏறத்தாள 52,000 கோடி ரூபாய் மதிப்புள்ள போஸ்கோ திட்டத்தினால் 30,000 க்கும் மேற்பட்ட விவசாயிகள் வாழ்விற்கும் பேரபாயம் ஏற்பட்டுள்ளது. ஒரிசாவின் உயர்தரமான இரும்புக்கனிமத்தில் 60 கோடி டன் அளவிற்கு அளிச்செல்வதோடு, ஆண்டுக்கு 12 கோடி டன் எஃகு உற்பத்தி செய்யும் உருக்காலையும் மின்நிலையமும் தனியார் துறைமுகமும் கொண்ட இத்திட்டம், கடந்த 2005ம் ஆண்டு ஜூன் 22ம் தேதி கையெழுத்திடப்பட்டது. இத்திட்டத்தால் 11 கிராமங்களிலுள்ள 5,000 குடும்பங்கள் ஏறத்தாள 30,000 பேர் வெளியேற்றப்படவுள்ளனர். இதுதவிர ஜடாதாரி ஆற்றையும் அது கடலில் கலக்கும் கழிமுகப்பகுதியையும் போஸ்கோ நிறுவனம் ஆக்கிரமிக்கப்போவதால் 52000 மீனவர்களின் எதிர்கால வாழ்வும் பறிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எஃகு உருக்காலை மற்றும் மின்னிலையத்திற்கு 4004 ஏக்கர் நிலம் தேவை. இதில் 3566 ஏக்கர் புறம்போக்கு மற்றும் காட்டுப்பகுதிகள் அரசால் இன்னிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளன. காட்டு நிலங்களையும் காட்டின் விளை பொருட்களையும் பயன்படுத்திவந்த மக்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். எஞ்சிய 438 ஏக்கர் நிலம் உள்ளூர் சிறு விவசாயிகளுடையது. இவற்றில் வெற்றிலை, முந்திரி சாகுபடியும் முக்கியமாக நெல் சாகுபடியும் செய்துவருகின்றனர். இந்த நிலங்களை பறிப்பதை எதிர்த்து விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்தை ஒடுக்க 25 பிளாட்டூன்  துணை ராணூவப்படைகள் குவிக்கப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியர் மூலம் கிராமப்பஞ்சாயத்துகளில் ஒப்புதல் பெறுவதற்கான கூட்டங்கள் நடத்தப்பட்ட போது, தங்கள் வாழ்வுறிமையை பறிக்கும் போஸ்கோ திட்டத்தை எதிர்த்து அனைத்து விவசாயிகளும் ஏகமனதாக தீர்மானம் நிறைவெற்றியுள்ளனர். ஆனால் அரசோ 15 நாட்களுக்குள் நிவாரணத்தொகையை பெற்றுக்கொள்ளாவிட்டால் பின்னர் எவ்வித நிவாரணமும் தரப்படமாட்டாது என்று கடந்த பிப்ரவரி முதல் நாளன்று அறிவித்து, நிலங்களை பறிக்க கிளம்பியுள்ளது. பாதிக்கப்படும் விவசாயிகளுக்கான மறுகுடியமர்த்தல் மற்றும் நிவாரணத்திட்டம் அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுதான் மிகச்சிறந்த நிவாரணத்திட்டம் என்கிறார் போஸ்கோ இந்தியா நிறுவனத்தின் பொது மேலாளரான மொகந்தி. ஆனாலும் இன்றுவரை எந்த விவசாயியும் நிவாரணத்தொகையை வாங்கவில்லை.

ஜெகத்சிங்புர் மாவட்டத்தின் பட்னா, கொவிந்புர், தின்கியா ஆகிய கிராமங்கள் போராட்டத்தின் முன்னணியில் நிற்கின்றன. விவசாயிகள் போஸ்கோ திட்டம் அமையவுள்ள 4004 ஏக்கர் நிலத்தை சுற்றிவளைத்து 17 இடங்களில் மட்டும் நுழைவு வாயில்களை அமைத்துள்ளனர். அவர்களின் அனுமதி இல்லாமல் அந்த மூங்கில் தடுப்பரண்களை திறக்கமுடியாது. அரசு அதிகாரிகளோ போஸ்கோ நிறுவனத்தினரோ இன்னமும் அந்தப் பகுதிக்குள் நுழைய முடியவில்லை. ஒவ்வொறு கிராமத்திலும் மூங்கில் வேலி போடப்பட்டு அன்னியர்கள் எவரும் நுழைய முடியாதபடி தடுத்துக்கண்காணித்து வருகின்றனர்.

ஏற்கனவே பாரதீப் துறைமுகப்பகுதியில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் இதேபோல விளை நிலங்களைப் பறித்துக்கொண்டு மறுவாழ்வு நிவாரணத்திட்டங்களை அறிவித்தது. அதை அன்று விவசாயிகள் நம்பினர். “அந்த இடத்தை இன்று யார் வெண்டுமானாலும் சென்று பார்க்கட்டும். வெறும் காங்கிரீட் தூண்கள் தான் நிற்கின்றன. அதற்கு மேல் நிவாரணத்திட்டம் நகரவேயில்லை அரசாங்கமே எங்களை வஞ்சித்து விட்ட நிலையில், அன்னியத் தனியார் ஏகபோக நிறுவனமான போஸ்கோ, நிவாரணத் திட்டத்தை நிறைவேற்றும் என்று நம்புவதற்கு நாங்கள் முட்டாள்கள் இல்லை” என்கிறார் தின்கியா கிராமப் பஞ்சாயத்து தலைவரான சிசிரா மகாபத்ரா.

நருசிங்க பெஹரா மற்றும் தேவேந்திர வாய்ன் ஆகியோர் “போஸ்கோவிற்கு மக்களின் எதிர்ப்பு” எனும் ஏழு நிமிடக் காணொளியை தயாரித்து, அதை நாட்டு மக்கள் அனைவரும் காணுமாறும், விவசாயிகளின் நியாயமான இப்போராட்டத்தை ஆதரிக்குமாறும் கோரியுள்ளனர்.

போஸ்கோவை எதிர்த்து வலது கம்யூனிஸ்டு கட்சி உட்பட பல்வேறு அமைப்புகள் விவசாயிகளோடு இணைந்து போராடி வருகின்றன.  தர்ணா போராட்டம் நடத்தியவர்கள் மீது போஸ்கோ நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள குண்டர் படையினர் தாக்குதல் நடத்தியதோடு, குண்டுகளையும் வீசியுள்ளனர். இதில் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தவிர போலீஸ் பலமுறை தடியடித்தாக்குதல் நடத்தி இப்போராட்டத்தை நசுக்க முயற்சிக்கிறது. இத்துணை அடக்குமுறைகளையும் எதிர்கொண்டு ஒரிசா மக்களை போஸ்கோ எதிர்ப்புப் போராட்டம்  பற்றிப்படர்ந்து வருகிறது.

ஒரிசா மக்களின் போஸ்கோ எதிர்ப்புப் போராட்டத்தை ஆதரிப்பதும், அதை மறு காலணியாக்கத்திற்கு எதிரான போராட்டமாக வளர்த்தெடுப்பதும் புரட்சிகர ஜனனாயக சக்திகளின் உடனடிக்கடமை; நம் கடமை.


புதிய ஜனநாயகம் மார்ச் 2010 இதழிலிருந்து.

பிர் அவ்னின் உடல் எனும் கட்டுக்கதை

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே பகுதி 17

இரண்டாம் ரமோஸஸின் உடல்

குரான் ஒரு இறை வேதம் தான் என்பதற்கு திட ஆதாரமாக மதவாதிகள் காட்டும் ஆதாரம் ஒன்றிருக்கிறது. இஸ்லாமிய இலக்கியங்களில் கரைகண்ட மதப்பரப்புரையாளர்கள் என்றில்லை வாசிப்புப் பழக்கம் ஏதுமற்ற ஒரு சாதாரண முஸ்லிமும் விதந்து போற்றும் ஒன்று பிர் அவ்னின் உடல். குரானில் கதை ஒன்று இடம்பெற்றிருக்கிறது.

“மேலும் இஸ்ராயீலின் சந்ததியினரை நாம் கடலைக் கடக்கவைத்தோம். அப்போது பிர் அவ்னும் அவனது படையினரும் கொடுமையும், பகைமையும் கொண்டு அவர்களை பின்தொடர்ந்தார்கள். அவன் மூழ்க ஆரம்பித்ததும் அவன் இஸ்ராயீலின் சந்ததியினர் எந்த நாயன் மீது நம்பிக்கை கொண்டுள்ளார்களோ அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று நானும் ஈமான் வைக்கிறேன். இன்னும் நான் அவனுக்கே முற்றும் வழிபடுபவனாக இருக்கிறேன் என்றும் கூறினான்.

இந்த நேரத்தில் தானா? சற்று முன்வரை திடனாக நீ மாறு செய்துகொண்டிருந்தாய். இன்னும் குழப்பம் செய்பவர்களில் ஒருவனாகவும் இருந்தாய்.

எனினும் உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உம் உடலைப் பாதுகாப்போம். நிச்சயமாக மக்களில் பெரும்பாலானோர் நம் அத்தாட்சிகளைப் பற்றி அலட்சியமாக இருக்கின்றனர்” குரான் 10: 90,91,92

அதாவது, எகிப்தில் முன்னொரு காலத்தில் பிர் அவ்ன் என்றொரு மன்னன் இருந்தான். இந்த கதை நடக்கும் காலம் சற்றேறக்குறைய முகம்மதுவின் காலத்திற்கு 1900 ஆண்டுகளுக்கு முன்னர். அந்த மன்னனிடம் இறைவனின் நேரான மதத்தை எடுத்துச் சொல்வதற்காக மூஸா எனும் தூதர் வருகிறார். (கிருஸ்தவர்கள் இவரை மோசஸ் என்றும், யூதர்கள் மொசையா என்றும் அழைக்கின்றனர்) அவரின் போதனைகளுக்கு செவிகொடுக்காத அந்த மன்னன் அவரையும் அவரின் சீடர்களையும் துன்புறுத்தத்துகிறான். ஒரு கட்டத்தில் தன்னுடைய சீடர்களுடன் நாடுகடந்து செல்கிறார். இதையறிந்த மன்னன் தன் வீரர்களுடன் துரத்திச்செல்கிறான். செங்கடல் குறுக்கிடுகிறது. உடனே மூஸா தன் இறைவனின் கட்டளைப்படி தன் கைத்தடியால் கடலை அடிக்க இது இரண்டாக பிளந்து அவர்களுக்கு வழி விடுகிறது. அந்த வழியே அவர்கள் தப்பிக்க மன்னனும் அதே வழியில் துரத்துகிறான். மூஸா சீடர்களுடன் மறுகரையை பாதுகாப்பாக அடைந்ததும் கடல் பழையபடி மூடிக்கொள்ள மன்னனும் வீரர்களும் கடலில் மூழ்கி இறக்கின்றனர்.

இந்த கதை நடந்து 1900 ஆண்டுகளுக்கு பிறகு முகம்மது சொல்கிறார், பின்னுள்ளவர்களுக்கு அத்தாட்சியாக அந்த உடலை பாதுகாப்போம் என்று. அப்போது யாரும் எங்கே அந்த பாதுகாக்கப்பட்ட உடல்? என்று எதிர்க்கேள்வி எதுவும் கேட்கவில்லை. ஏனென்றால் இது அந்தப்பகுதியில் புராணரீதியாக வழிவழியாக வழங்கப்பட்டு வரும் கதைதான்.

இப்போது அன்மைக்காலங்களுக்கு வருவோம். எகிப்தின் நைல் ஆற்றங்கரை பள்ளத்தாக்கு ஒன்றில் ஒரு உடல் கண்டெடுக்கப்படுகிறது. ஆய்வுகளுக்குப் பின்னர் அது பண்டைய மன்னனான இரண்டாம் ரமோஸஸ் என்பவனின் உடல் தான் அது என கண்டறியப்பட்டு தற்போது கெய்ரோவிலுள்ள ராயல் மம்மி எனும் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. குரானில் குறிப்பிடப்படும் பிர் அவ்னின் உடல்தான் அது, இறைவன் தான் வாக்களித்தபடி பிர் அவ்னின் உடலை கெட்டுப்போகாமல் பாதுகாத்து, உடலை பாதுகாத்து வைக்கும் தொழில் நுட்பம் மனிதர்களுக்கு தெரிந்த காலத்தில் அதை வெளிப்படுத்தி குரான் இறைவனின் வார்த்தை தான் என்பதை ஐயம் திரிபற மெய்ப்பித்துவிட்டான். என்னே அவனின் கருணை என்கிறார்கள்.

இரண்டாம் உலகப்போரின் காலம், இஸ்ரேல் எனும் தேசத்தை பாலஸ்தீன அரேபியர்களின் பகுதிகளில் உருவாக்குவதற்கான திட்டம் தயாராக இருந்தது. அந்தப்பகுதி மெய்யாகவே தங்களின் தாயகம் தான் என யூதர்களை நம்பவைக்க சியோனிச தலைவர்கள் புராணக்கதைகளுக்கு வரலாற்று வடிவம் கொடுக்கும் வேலைகளில் இறங்கினர். தங்களின் கடவுளான மொசையா எகிப்தின் கொடுமைகளில் இருந்து மீட்டுவந்து வாக்களித்து வாழவைக்கப்பட்ட பகுதிதான் பாலஸ்தீனப் பகுதி என்பதற்கு ஆதாரமாக கடலில் மூழ்கி இறந்துபோன மன்னனைத்தேடி, தங்களின் புராணக்கதைக்கு ஆதாரம் தேடி பல மன்னர்களின் சடலங்களை குறிப்பிட்ட அந்த மன்னனாக அடையாளப்படுத்தும் வேலையை செய்தனர். அஹ்மோஸ், தட்மொஸ், அமேன்கொதப், சேத்தி, ரமோஸஸ், மேர்நெப்தா போன்ற மன்னர்களின் சடலங்களை அதுதான் அந்த மன்னனின் சடலம் என்று ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு உடலை அடையாளமாக காட்டமுயன்று பின்னர் கைவிட்டனர். இதில் ஒரு உடலான ரமோஸஸ் உடலைத்தான் இஸ்லாமியர்கள் பிர் அவ்ன் உடலாக, ஆதாரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

முதலில் பிர் அவ்ன் அல்லது பாரோன் அல்லது பரோவா என்பது குறிப்பிட்ட ஒரு மன்னனின் பெயரல்ல, மாறாக அது அரச பரம்பரையின் பெயர். அடுத்து, ஆரம்பத்திலேயே அந்த சடலத்தை வெளிப்படுத்தியிருந்தால் மனிதர்களால் அதை பாதுகாத்து வைக்கமுடியாமல் போயிருக்கும் என்பதால் மனிதர்கள் அந்த தொழில்நுட்பம் தெரிந்ததும் இறைவன் வெளிப்படுத்தியிருக்கிறான் என்பது மோசடியானது. ஏனென்றால் செத்த உடல்களை மம்மிகளாக பதப்படுத்தி வைப்பதை மனிதர்கள் பல ஆயிரம் ஆண்டுகளாகவே செய்துவருகின்றனர். அவர்கள் பதப்படுத்திய உடலும் இன்றுவரை பாதுகாக்கப்பட்டிருக்கிறது.

எகிப்தின் அன்றைய காலகட்டத்தை மூன்றாக பிரிக்கலாம். கிமு 2950லிருந்து கிமு 2150வரையான முதல் காலம். இந்த காலத்தில்தான் மன்னர் குடும்பத்தினரின் உடலை மம்மியாக பதப்படுத்திவைக்கும் முறை தொடங்குகிறது. இந்த மன்னர்களின் மம்மிகள் புதையல் திருடர்களால் சிதைக்கப்பட்டுவிட்டன. கிமு 2150லிருந்து கிமு 1500 வரையான இரண்டாம் காலம். இந்தக்காலத்தில் முறையான அரசமைப்பு இன்றி குழப்பமான நிலை நிலவியது. கிமு 1500லிருந்து கிமு 1000வரையிலான மூன்றாவது காலகட்டத்தில் தான் மேற்கண்ட மன்னர்கள் எகிப்தை ஆண்டார்கள். இந்த மன்னர்களின் மம்மிகள் அனைத்தும் செயற்கையான முறையில் பாதுகாக்கப்பட்ட உடல்கள் தானேயன்றி இயற்கையான முறையில் பாதுகக்கப்பட்டவையல்ல. இவைகளில் அதிகம் சிதையாமல் கிடைத்திருப்பது இரண்டாம் ரமோஸஸ் மம்மிதான்.

மதவாதிகள் இரண்டாம் ரமோஸஸ் மம்மி 1898ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டதாக கூறுகிறார்கள். இரண்டாம் ரமோஸஸ் மம்மி கெய்ரோ அருங்காட்சியகத்தில் இருக்கும் புகைப்படத்தைத்தான் தங்கள் பரப்புரைகளுக்கு பயன்படுத்துகின்றனர். ஆனால் 1898ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டவைகள் இரண்டு உடல்கள். அமேன்கொதப், மேர்நெப்தா ஆகிய இரண்டு மம்மிகள் அந்த ஆண்டில் கண்டெடுக்கப்பட்டன. இரண்டாம் ரமோஸஸ் கண்டெடுக்கப்பட்ட ஆண்டு 1881. இரண்டாம் ரமோஸஸ் கிமு 1279ல் ஆட்சியேறி 67 ஆண்டுகள் ஆட்சி புரிந்து கிமு 1213ல் தனது 90ஆவது வயதில் மூட்டு வலியால் அவதியுற்று மரணமடைந்ததாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

மாரிஸ் புகைல் என்றொரு பிரஞ்சு மருத்துவர், சவூதி அரசரின் தனி மருத்துவராக பணியாற்றியவர். குரானின் அறிவியல் பார்வை என்ற நூலை எழுதியவர். இவர் எகிப்து அரசின் அனுமதியுடன் மேர்நெப்தாவின் மம்மியை ஆராய்ந்தார். ஆராய்ந்து இது நீரில் மூழ்கி இறந்ததற்கான ஆதாரம் இருப்பதாக அறிக்கை தந்தார். அதற்கு அவர் கொடுத்த ஆதாரம் அந்த மம்மியில் உப்புத்தன்மை இருந்தது என்பது தான். ஆனால் உடலை மம்மியாக பதப்படுத்த நேட்ரான் எனும் உப்புதான் அந்தக்கால மக்களால் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதில் நகைக்கக்கூடிய இன்னொரு செய்தி என்னவென்றால், இவரின் வெற்றித்தூண் எனும் கல்வெட்டில் கிமு 1207ம் ஆண்டில் கானான் மீது படையெடுத்து அதை வென்றதாக பொறிக்கப்பட்டிருக்கிறது. அதாவது மேர்நெப்தாவின் ஆட்சியில் அவரால் துன்புறுத்தப்பட்டு மூஸாவால் தன்னை பின்பற்றியவர்களுடன் செங்கடலை பிளந்து மறுகரையில் குடியிருப்பு உருவாக்கப்பட்டதோ அதுதான் கானான் பிரதேசம் எனப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் கடலில் மூழ்கி இறந்துபோன மன்னன், தான் உயிருடன் இருக்கும்போது அந்தப்பகுதியை போரிட்டு வென்றதாக கல்வெட்டு நட்டிருக்கிறான்.

தன் கைத்தடியால் தட்டி கடலை பிளந்தது ஒருபுறம் இருக்கட்டும், இஸ்ரவேலர்கள் பெரும் தொகையில் நாடுகடந்து சென்றதாக வரலாறுகளில் எந்தக்குறிப்பும் இல்லை. கானான் பிரதேசம் அதாவது இன்றைய பாலஸ்தீனப் பகுதி தீவல்ல, தரை வழியாகவே செல்லமுடியும் போது கடலை பிளந்து போகவேண்டிய தேவை என்ன? அன்றைய எகிப்தில் கானான் பிரதேசம், இன்றைய சிரியா, நுபுன்கள் தேசம் எல்லாம் அடக்கம். நாடு கடந்து போகும் மூஸா அதே நாட்டின் இன்னொரு பகுதிக்கு தான் போகிறார்.

ஒட்சியின் உடல்

இன்றைக்கு நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னுள்ள உடல்களை மனிதன் மம்மிகளாக்கி செயற்கையாக பத்திரப்படுத்தியிருக்கிறான். இதே காலகட்டத்திலுள்ள ஒரு உடல் மனிதனால் பத்திரப்படுத்தாமல் இயற்கையாக  பதப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை ரமோஸஸ் விசயத்தில் உண்மை என்றே ஒரு வாதத்திற்காக கொண்டாலும் இதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை. ஆஸ்திரிய இத்தாலிய எல்லையில் உள்ள ஆல்ப்ஸ் மலையில் ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டது. கார்பன் நிர்ணய முறையில் அவ்வுடல் கிமு3300க்கும் 3200க்கும் இடையில் வாழ்ந்த மனிதனுடையது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஓட்சி என்று பெயரளிக்கப்பட்டுள்ள அந்த உடல் ஆஸ்திரியாவிலுள்ள சவுத் டைரோல் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளது. நல்லவேளையாக இந்த ஓட்சிக்கு பின்னால் வேதமோ கதையோ இல்லை.


எல்லோருக்கும் ஓரளவு தெரிந்திருக்கும் அறிவியலையே தங்களுக்கு ஏற்ப வளைத்து தங்கள் வேதவிவகாரங்களை வண்ணம் பூசிக்கொள்ளும் மதவாதிகள், வரலாற்றை விலை பேசாமல் விட்டுவைப்பார்கள் என்று நம்பமுடியுமா?

இத்தொடரின் முந்தைய பகுதிகள்

14. பாலும் தேனும் அல்லாவின் வேதத்தின் பாடுகள்

13.  கோள்களும் அதன் விசையும் அல்லாவின் தேற்றங்கள்

12. விண்வெளி குறித்த அல்லாவின் பண்வெளிகள்.

11. குரானின் மலையியல் மயக்கங்கள்

10. கடல்கள் பற்றிய அல்லாவின் புனைகதைகள்

9.  பூமி உருண்டை என யார் சொன்னது, அல்லாவா? மனிதனா?

8. பிரபஞ்சமும் அதை கட்டுப்பட அழைத்த குரானும்

7. குரான் கூறுவது அறிவியலாகுமா?

6. ஹதீஸ்களும் அதன் பிரச்சனைகளும்.

5. குரானின் பாதுகாப்பில் விழுந்த கேள்விக்குறிகள்.

4. மெய்யாகவே குரான் பாதுகாக்கப்பட்டது தானா?

3. குரானின் சவாலுக்கு பதில்

2. அல்லாவின் ஆற்றலிலுள்ள இடர்பாடுகள்

1. இஸ்லாம். பிறப்பும் இருப்பும்: ஓர் எளிய அறிமுகம்

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே….

கம்யூனிசமே வெல்லும்


கம்யூனிசம் என்றால் என்ன?

நாட்டில் இருக்கும் பல ஓட்டுக்கட்சிகளை போல அதுவும் ஒரு ஓட்டுக்கட்சி. உலகில் இருக்கும் பல கொள்கைகளை போல அதுவும் ஒரு கொள்கை. பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு உலகியல் பார்வை. முதலாளித்துவத்திற்கு எதிரான கூட்டு நடவடிக்கை. இப்படி பலவாறான மதிப்பீடுகள் கம்யூனிசத்தைப் பற்றி மக்களிடம் இருக்கிறது. ஆனால் கம்யூனிசம் என்பது ஒரு இயல்பு. மனிதர்களின் இயல்பான ஒரு உணர்வு. சாலையில் நடந்து செல்லும் ஒருவர் அங்கு ஒருவன் மற்றொருவனை அடித்து உதைத்துக்கொண்டிருப்பதை கண்டால், பாதிக்கப்பட்டவனின் சார்பில் பாதிப்பவனை தடுத்து நிறுத்த முன்வருவாரே அதன் பெயர் தான் கம்யூனிசம். அந்த உணர்வு தான் கம்யூனிசத்தின் சாரம். அந்த உணர்வை பரந்துபட்ட தன்மைகளுடன், பின்னணி, விளைவுகள் குறித்த பார்வையோடு  உலகளாவிய நிகழ்வுகளுடன் பொருத்தி அதற்கான தீர்வுகளை சிந்தித்தால் அதன் பெயர்தான் கம்யூனிசம்.

இருக்கும் பலவிதமான அரசியல் கட்சிகளைப் போல ஆட்சிக்கு வருவதை மட்டுமல்ல யாருக்கான அரசாக இயங்குவது என்பதையே முதன்மைப் படுத்துவதால் இருக்கும் கட்சிகளிடையே கம்யூனிசம் மாறுபாடுடையது. மக்களின் துன்பங்களுக்கும், துயரங்களுக்கும் காரணம் தேடி மருளவைக்கும் சொற்களால் மலட்டுப்பரப்புரை செய்யும் கொள்கைகளிடையே “உலகை வியாக்கியானம் செய்வதல்ல அதை மாற்றியமைப்பதே நோக்கம்“ என்று அறிவித்துச் செயல்படுவதால் கம்யூனிசம் தனித்தன்மையுடையது. மனித இனத்தின் பண்டைய வரலாறு முதல் இன்றைய கலாச்சார வீக்கங்கள் ஈறாக அனைத்தையும் அறிவியல் மேடையில் உரசிப்பார்த்து இனங்காண்பதால் பொருளியல் கொள்கை எனும் தூற்றல்களில் நனையாமல் நிற்பது. மனிதர்களின் முடை நாற்றமெடுக்கும் சிந்தனை ஊறல்களை, அது பல்லூழிகளாக தொடர்ந்திருந்தாலும், சுகந்த மணம் தருவதாக நினைத்துக்கொண்டிருந்தாலும், அவைகளை அகற்றி இறுக்கம் தளர்த்தும் வழிமுறைகளுடன் இருப்பதால்; விமர்சனம் சுயவிமர்சனம் எனும் தளத்தில் நிற்பதால் முதலாளித்துவத்திற்கு மட்டும் எதிரானதாக இதை குறுக்கிவிட முடியாது.

கம்யூனிசம் ஒரு மதமல்ல, இங்கு முன்னாசிகளோ முக்கிய தெய்வங்களோ இல்லை. மார்க்சும், ஏங்கெல்சும் படைத்தவற்றை லெனினும், மாவோவும் மேம்படுத்தினர். எனவே இங்கு வேதமும் இல்லை. உழைப்பே இங்கு விதி, போராட்டமே மகிழ்ச்சி.

எல்லாம் சரி, கம்யூனிசம் ஏன் நீடித்த வெற்றியை பெறமுடியவில்லை?

ரஷ்யா, சீனா என்று சோசலிச நாடுகள் இன்று முதலாளித்துவத்தின் பிடியில், சோசலிச தலைவர்களே முதலாளித்துவத்தை மீள்இறக்குமதி செய்தவர்கள். எப்படி நிகழ்ந்தது இது? கம்யூனிச கொள்கைகளின் கட்டுறுதியான தாக்கமும், மக்களிலிருந்து உருவாகிவந்த தலைவர்களின் ஈடுபாடும் அத்தனை நெகிழ்வானதா? புரட்சியை நடத்திய மக்கள் இவர்களின் பிறழ்தலுக்கு எப்படி மெளன அங்கீகாரம் வழங்கினார்கள்? என்றெல்லாம் அலையலையாய் எழுந்துவரும் கேள்விகள். இவைகள் எல்லாவற்றையும் விட பதிலளிக்கத்தகுந்த கேள்வி ஒன்று உண்டு. மக்களின் மன இயல்புகளை புரிந்து கொள்ளாமல், இயற்கைக்கு அப்பாற்பட்டு வரட்டுக் கற்பனையான சூத்திரமாக கம்யூனிசம் இருப்பதனால் தான் கம்யூனிசத்தை நோக்கி நகராமல் சோசலிசம் பின்னடைந்து விடுகிறதா? என்பது தான் அந்தக் கேள்வி.

இந்தக் கேள்வியின் அடிப்படை எங்கிருக்கிறது? சோசலிச சமுதாயத்தில் அல்லது சோசலிச அரசின் கீழ் இருக்கும் மக்கள் கட்டாயமாக தங்கள் உழைப்பை அரசுக்கு செலுத்தவேண்டும் பகரமாக அரசு தரும் ஊதியத்தை பெற்றுக்கொள்ளவேண்டும், அது போதுமானதாக இல்லாமற் போனாலும் கூட. தனியார்மயம் ஒழிக்கப்பட்டு எல்லாமே அரசுடமையாக இருக்குமாதலால், தனிப்பட்ட தகுதிக்கு உரிய அங்கீகாரம் இல்லாமல் சமஊதியம் என்ற நிலை இருக்கும் என்பதால் முனைப்பு குறைந்து, ஆர்வம் கலைந்து உற்பத்தி குன்றும். நிர்வாகத்தினர், மூளை உழைப்பாளிகளுக்கு தனிப்பட்ட மரியாதை இல்லாமல் தொழிலாளர்களுடன் சமமாக்கப்படுவதால் அவர்களுக்கு மனரீதியான திருப்தியின்மை ஏற்படுவதால் நிர்வாக சீர்கேடு பெருகும், இதனால் ஊழல் அதிகரிக்கும். ஒருபக்கம் உற்பத்தி குறைவு, மறுபக்கம் நிர்வாக சீர்கேடு இரண்டும் சேர்ந்து சோசலிச அரசை பலவீனமாக ஆக்கிவிடுகிறது. இதனால் தான் சோசலிச அரசுகள் நீடிக்க முடிவதில்லை. இதுதான் அந்த கேள்வியை எழுப்புபவர்கள் சொல்லும் விளக்கம். ஒரு நாட்டில் சோசலிச அரசு எழுவதை ஏகாதிபத்திய அரசுகள் சகஅரசாக வாழ்த்தி வரவேற்கின்றன, ஆனால் கம்யூனிசத்தின் உள்ளீடற்ற தன்மையால் தான் அவைகள் வீழ்கின்றன, இது அந்தக் கேள்வியை எழுப்புபவர்கள் சொல்லவரும் நோக்கம்.

ஒரு நாட்டில் புரட்சியை சமைப்பதல்ல, புரட்சிக்கு பிறகு அதை வளர்த்தெடுத்துச்செல்வது தான் புரட்சியை விட பல மடங்கு கடினமான காரியம். இதற்கு கம்யூனிசம் தோற்றுவிட்டதாக உலகம் முழுவதும் பரப்பப்பட்டிருக்கும் இந்தவகை அவதூறுகளே சான்று. ஒரு நாட்டில் புரட்சி ஏற்பட்டாலோ அல்லது ஏற்படும் என அஞ்சினாலோ அந்நாட்டின் மீது எல்லாவித அரசியல் ராணுவ நெருக்கடிகளை ஏற்படுத்துவது ஒருபக்கம், கொலை கொள்ளை அடக்குமுறை; பஞ்சம் பட்டினி என்று அவதூறுகளை பொழிந்து கருத்து நெருக்கடிகளை ஏற்படுத்துவது மறுபக்கம். இந்த உலகில் அதிகாரத்தில் இருக்கும் முதலாளித்துவம் வெகுசில நாடுகளில் ஏற்படும் புரட்சிகர நடவடிக்கைகளுக்கு எதிராக எடுத்துவரும் இத்தகைய நடவடிக்கைகளே கம்யூனிசத்தின் உள்ளீடு குறித்து ஏகாதிபத்தியங்கள் எந்த அளவுக்கு பீதியடைந்திருக்கின்றன என்பதற்கான சான்று.

கம்யூனிசம், சோசலிசம் இரண்டையும் கலந்துகட்டி குழப்பிக்கொண்டு சொல்லப்படுபவது தான் மேற்கண்டது. எந்த ஒரு தனி நாட்டிலும் கம்யூனிசம் ஏற்பட முடியாது. முதலாளித்துவ ஆட்சியை புரட்சிகர நடவடிக்கையின் மூலம் கைப்பற்றி சோசலிச ஆட்சி ஏற்பட்டதும், தனியார் என்று யாருமே இருக்கமாட்டார்கள் என்பது கற்பனைதான். பன்னாட்டு முதலாளிகளின், தரகு முதலாளிகளின் சொத்துகள் பறிக்கப்பட்டாலும் தேசிய முதலாளிகள், குறு முதலாளிகள் நிபந்தனைகளுடன் செயல்பட அனுமதிக்கப்படுவார்கள். அவர்களின் கீழ் தொழிலாளர்கள் வேலைசெய்வார்கள். வித்தியாசம் என்ன? முன்புபோல் வரைமுறையற்று அவர்களால் சுரண்ட முடியாது. சட்டப்பாதுகாப்புடன் தொழிலாளர்கள் இருப்பார்கள். முன்பு சட்டப்பாதுகாப்புடன் முதலாளிகள் தொழிலாளிகளை சுரண்டிய கொடுமை முற்றுப்பெற்று அந்த சட்டப்பாதுகாப்பு தொழிலாளிகளுக்கு இருக்கும் என்பதை சகித்துக்கொள்ள முடியாதவர்கள் தான், தொழிலாலர்களின் ஆர்வம்  குறைந்துவிடும் உற்பத்தி குறையும் உற்பத்தித்திறன் குலைந்து விடும் என்றெல்லாம் கதையளக்கிறார்கள்.

உண்மையில் தொழிலாளர்களின் உற்பத்தித்திறன் குறையும் என்பதைவிட முதலாளிகளின் லாபம் குறையும் என்பதுதான் உண்மை. அதுவரை முதலாளித்துவ நிர்வாக முறையின் கீழிருந்த தொழிலாளர்கள் ஒரு சொடுக்கில் மாறிவிடமுடியாது. இது மேலிருந்து திணிக்கப்படுவதுமில்லை. கீழிருந்து படிப்படியாக ஏற்படும் மாற்றம். இதுவரை தங்களின் லாபத்தை மட்டுமே கருதி ஆட்குறைப்பு செய்துவந்த நிறுவனங்கள் சோசலிசத்தின் கீழ் அதனதன் உற்பத்தி அளவீடுகளின் படி தொழிலாளர்களை சேர்த்துக்கொள்ள நிர்ப்பந்திக்கப்படுவார்கள். இந்தவகையில் வேலையில்லாத் திண்டாட்டம் குறையும். தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் உற்பத்தி பெருகும் என்பது தான் உண்மை. இவ்வாறான நிபந்தனைகளை ஏற்கமறுக்கும் நிறுவனங்கள் அரசால் ஏற்கப்படும். புதிதாக வேலை கிடைத்தவர்கள் உற்சாகத்துடன் வேலை செய்வர் என்பதுடன் முன்பு தனிப்பட்ட முதலாளியின் லாபத்திற்காக உழைத்தவர்கள் தற்போது நாட்டுக்காக தமக்கான முன்னேற்றத்திற்காக உழைப்பர். இந்தப் புரிதலையும், விழிப்புணர்வையும் அரசு செய்யும். அத்தோடு முதலாளிகளின் கொடுமையை நேரடியாக அனுபவித்து எதிர்த்துப் போராடியவர்கள் வெற்றிபெற்ற உற்சாகத்துடன் உழைப்பர் என்பதும் உண்மை. ஜார் ரஷ்யாவில் 2.1 கோடி ரஷ்ய பவுண்டாக இருந்த விவசாய உற்பத்தி 1930களில் 11 கோடி ரஷ்ய பவுண்டாக அதிகரித்தது. தொழில் துறையில் 1928ம் ஆண்டு உற்பத்தியை 100 விழுக்காடு என்று கொண்டால் 1927ம் ஆண்டு 82.4 விழுக்காடும் 1929ம் ஆண்டு 123.5 விழுக்காடும் 1930 ம் ஆண்டு 171.4 விழுக்காடும் உயர்ந்துள்ளது. (இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் – இரயாகரன்) எனவே புரட்சிக்குப் பின் உற்பத்தி கூடியுள்ளதேயன்றி குறையவில்லை.

கூட்டுப்பண்ணைகளிலும், தொழிற்சாலைகளிலும் வேலை செய்பவர்களுக்கு ஒரேமாதிரியான சம்பளம் இருப்பதுதானே நீதியானது. இப்போது ஒரே மாதிரியான வேலையை செய்பவருக்கு ஆணுக்கு ஒரு ஊதியமும் பெண்ணுக்கு அதைவிட குறைவான ஊதியமும் வழங்கப்படுவதை முணுமுணுக்காமல் ஏற்றுக்கொள்பவர்கள், சமவேலைக்கு சமஊதியம் என்பதை குறையாக சொல்கிறார்கள் என்பதைக்கொண்டு அவர்களின் நோக்கத்தை அளவிட்டுக் கொள்ளலாம். உண்மையில் கருங்காலித் தொழிலாலர்களை சலுகைகள் கொடுத்து தங்களுக்கு கைக்கூலியாக செயல்படவைக்க முடியாது என்பதுதான் இப்படி முலாம்பூசி வெளிப்படுகிறது.


தனியார் நிறுவனங்கள் படிப்படியாக பொதுத்துறை நிறுவனங்களாக மாற்றமடைவதை, முதலாளித்துவ நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களுடன் ஒப்பிட்டு வேலை செய்யமாட்டார்கள், ஊழல் பெருகும் என்றெல்லாம் கவலையுறுபவர்கள், பொதுத்துறை நிறுவனங்களின் சீரழிவும், ஊழலும் தனியார்மயத்தின், தனியுடமையின் விளைவுகள் என்பதை மறந்து விடுகிறார்கள். தனியார்மயத்தை மக்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்காகவே பொதுத்துறை நிறுவனங்கள் சீரழிக்கப்படுகின்றன. நல்ல லாபமீட்டும் நிறுவனங்கள் கூட பலநூறு கோடி சொத்துக்களுடன் சில கோடிகளுக்கு விற்கப்படுவது மக்களை காப்பதற்காகவா இல்லை அந்த மக்களை சுரண்டுவதற்காகவா? பொதுத்துறை நிறுவனங்களில் லஞ்ச ஊழல் பெருத்துவிட்டது, தனியாரிடம் இருந்தால் தான் சிறப்பான நிர்வாகம் கிடைக்கும் என்று தனியார்மயத்திற்கு குடைபிடிப்பவர்கள் தனியார் நிறுவனங்களின் ஊழலையும், முறைகேடுகளையும் காட்டி ஒருபோதும் அரசு எடுத்துக்கொள்ளவேண்டும் என்று கோரமாட்டார்கள். காரணம் அவர்களின் கோரிக்கைகள் வர்க்க நலனிலிருந்து வெளிப்படுபவையே அன்றி நிர்வாகச்சிறப்பிலிருந்தல்ல.

என்னுடையது எனும் எண்ணம் இருந்தால்தான் ஒரு பொருளை பாதுகாக்கும் எண்ணம் வரும். அதுவே பொதுச்சொத்தாக இருந்தால் அலட்சியமும், அழிப்பதும் பெருகத்தான் செய்யும் இது இயல்பு என்பவர்களும் இருக்கிறார்கள். ஆம் இது இயல்புதான். யாருக்கான இயல்பு? தன்னுடைய உரிமையில்லாத எதையும் தான் அடையத்துடிக்கும், அதையே தனிமனித உரிமையாக, முன்னேற்றமாக கூறித்திரியும் முதலாளித்துவ வக்கிரம் பிடித்தவர்களின் இயல்பு. ஒரு (கிராமத்து) மனிதன் தனக்கு எந்தவித லாபமும் இல்லையென்றாலும் சின்னஞ்சிறு செடி அழியும் நிலை ஏற்பட்டால் அதை காக்க முனைவான். ஆனால் வேறொரு (நகரத்து) மனிதனோ வளர்ந்த பெரிய மரமானாலும் தனக்கு லாபம் கிடைத்தால் வெட்டி விற்கத்தயங்க மாட்டான். இந்த இருவரின் செயல்பாடுகளின் பேதம் எதை அடிப்படையாகக் கொண்டது? பொதுச்சொத்தை தனதாக்கிக் கொள்ளும் வெறியையல்லவா அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. பொதுச்சொத்துகள் யாரால் அழிகின்றன? ஆக்சிஜன் தொழிற்சாலைகளாக இருந்த உலகின் காடுகளை அழித்தது யார்? வற்றாத ஆறுகளை வரளச்செய்தது யார்? நிலத்தடி நீரை தனது சொந்த லாபத்திற்காக உறிஞ்சிக்குடித்து மக்களை குடிநீருக்காக அலைய வைத்திருப்பது யார்? காற்றை மாசுபடுத்தியது யார்? மக்கள் வாழ்வை நாசப்படுத்தியது யார்? உலகில் பொதுச்சொத்து என்று எதுவுமே இருக்கக் கூடாது எல்லாம் தனதாக இருக்கவேண்டும் என்பதினால் தான் இத்தகைய கோரங்கள். ஆக மக்கள் இயல்பு என்று இவர்கள் கூறுவது தங்களுடைய இயல்பைத்தான். யார் இதுவரை பொதுச்சொத்தை வரைமுறையின்றி அழித்து நாசம் செய்தார்களோ அவர்கள் தான் இப்போது தனியார்மயப் படுத்துவதன் மூலம்தான் பொதுச்சொத்தை காக்கமுடியும் என்பவர்கள். இவர்களின் நோக்கம் காப்பதல்ல, தன்னுடையதாக்கிக் கொள்வது.

தன்னுடைய உழைப்பின் பலன் முழுமையாக தனக்கு கிடைக்கும் என்றால்தான் ஒரு மனிதன் தன்னுடைய ஈடுபாட்டுடன் கூடிய முழுமையான உழைப்பை அதில் செலுத்துவான் என்பது இவர்களுடைய வேதவசனங்களில் ஒன்று. இதைச்சொல்லுவது யார்? உழைக்கும் தொழிலாளிகளின் உழைப்பை யார் ஓட்டச்சுரண்டி தன்னை வளப்படுத்திக் கொள்கிறார்களோ, அவர்கள் தான். இன்றைய தொழிலாளர்கள் காலம் மறந்து தினமும் உண்ணும் உறங்கும் நேரம் தவிர மற்ற நேரமெல்லாம் உழைத்துக் களைப்பது தன் உழைப்பின் பலன் முழுமையாக தனக்கு கிடைக்கிறது எனும் திருப்தியினால் அல்ல. எவ்வளவு உழைத்தாலும் தாங்கள் சுரண்டப் படுவதை அறியாமல் அவர்களை பசியே ஆண்டுகொண்டிருக்கிறது என்பதால். முதலாளித்துவம் மக்களை தின்று கொண்டிருக்கிறது. ஆனாலும் மக்கள் உழைப்பை மறக்கவில்லை. ஆனால் கம்யூனிசம் வந்தால் உழைப்பை மறந்து விடுவார்கள், ஆர்வம் குன்றிவிடும் என்கிறார்கள். இதைத்தான் சாத்தான் வேதம் ஓதுதல் என்பார்களோ.

மக்கள் கம்யூனிசத்தை புரிந்து அதை ஏற்றுக்கொண்டு கம்யூனிஸ்டுகளாக மாறுவதும் அதன்பின்னர் புரட்சியும் சாத்தியமில்லாத ஒன்று என்பது சத்தியமில்லாத கூற்று. புரட்சிக்கு அனைவரும் கம்யூனிஸ்டுகளாக மாறவேண்டிய அவசியமில்லை என்பதுடன், முதலாளித்துவம் மக்களை கம்யூனிசத்தை நோக்கி விரட்டுகிறது என்பதுதான் சாத்தியப்பட்டுக் கொண்டிருக்கிறது.

எனவே கம்யூனிசம் வெல்லும்……..நிச்சயம்.

புரட்சிக்கு முன்னோடி ௧

ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம் பகுதி ௭


மாவோ தனது கடந்த கால வரலாற்றை நினைவுபடுத்தும்போது, இதில் ஆர்வம காட்டிய மற்றொரு ஆய்வாளரும் அங்கு இருந்தார். மாவோவின் மனைவி ஹோ த்சு சென் தான் அவர். மாவோ தன்னைப்பற்றியும் கம்யூனிஸ்ட் இயக்கத்தைப் பற்றியும்  கூறிய உண்மைகளை அவர் முன்பு ஒருபோதும் கேட்டதில்லை என்பது வெளிப்படையாகத்தெரிந்தது. பாவோ ஆண்னில் இருந்த மாவோவின் பல தோழர்களின் நிலையும் அதுதான். நான் ஏனைய கம்யூனிஸ்ட் தலைவர்களின் சுயவாழ்க்கைக் குறிப்புகளை எடுத்தபோது, அவர்களது தோழர்கள் உடனடியாக குழுமி நின்று, ஆர்வத்தோடு இந்த வரலாறுகளை முதற் தடவையாக கேட்டார்கள். வருடக்கணக்காக அவர்கள் ஒருங்கிணைந்த யுத்தத்தில் ஈடுபட்டிருந்தபோதும் அவர்கள் கம்யூனிஸ்டுகளாக மாறுவதற்கு முந்தைய நாட்களைப் பற்றிய விடயங்கள் பற்றி மற்றொருவருக்கும் சிறிதளவும் தெரியாது. அவர்கள் அந்தக் காலகட்டத்தை ஒரு இருண்ட காலமாக கருதினார்கள். ஒருவருடைய உண்மையான வாழ்க்கை ஒருவர் கம்யூனிஸ்டாக ஆகிய பின்புதான் தொடங்குகிறது என்பது அவர்கள் கருத்து.

இது மற்றுமொரு இரவு மாவோ கால்களை குறுக்காகப் போட்டுக்கொண்டு தனது கடிதப்பெட்டியின் முன்பாக இருந்தார். ஒரு மெழுகுதிரியின் ஒளியில் முதல் நாள் நான் வேலை முடித்த இடத்திலிருந்து கதையாடலை தொடங்கினார்.

ஷாங் ஷாவில் நான் முறைமைப் பாடசாலையில் படித்த வருடங்களில் மொத்தமாக 160 டாலர்கள் மட்டுமே செலவிட்டிருந்தேன். இதில் எனது பல்வேறு கல்லூரி பதிவுக்கட்டணங்களும் அடங்கும். இந்தத் தொகையில் மூன்றில் ஒரு பங்கை நான் செய்தித்தால்களுக்கு செலவிட்டிருப்பேன். ஏனென்றால் ஒழுங்குமுறையான சந்தாப்பணமாக மாதம் ஒரு டாலர் இதற்கு செலவாகிறது. அத்தோடு நான் அடிக்கடி புத்தகசாலைகளில் புத்தகங்களையும் சஞ்சிகைகளையும் வாங்கினேன். எனது அப்பா என்னை இதற்காக கண்டித்தார். காகிதத்திற்கு செலவழிக்கப்படும் வீணான பணம் என்று அவர் கூறுவார். ஆனால் நான் செய்தித்தாள் படிக்கும் வழக்கத்தை ஒரு பழக்கமாக்கிக் கொண்டேன். 1911ல் இருந்து 1927 வரை அதாவது நான் சிங் காங் ஷான் செல்லும் வரை ஹூனான், ஷாங்காய், பீக்கிங் செய்தி நாளிதழ்களை படிக்க நான் ஒருபோதும் தவறியதில்லை.

எனது பாடசாலை இறுதி வருடத்தின் போது எனது தாயார் காலமானார். முன்பு எப்போதைக்காட்டிலும் தற்போது வீடு திரும்பும் ஆர்வம் என்னில் குறைந்தது. பீக்கிங் செல்ல நான் முடிவு செய்தேன். ஹூனானில் பல மாணவர்கள் பிரான்சுக்கு செல்ல திட்டங்கள் தீட்டிக்கொண்டிருந்தார்கள். முதலாவது உலக யுத்தத்தில் தனக்கு சார்பான சீன இளைஞர்களை திரட்டுவதற்காக பிரான்ஸ் பயன்படுத்திய வேலை செய்து கொண்டே கல்வி பயிலும் திட்டத்தின் கீழ் கல்வி பயிலவே அவர்கள் பிரான்ஸ் செல்லவிருந்தார்கள். சீனாவை விட்டு வெளியேறுமுன்னர் அவர்கள் பீக்கிங்கில் பிரெஞ்சு மொழி பயிலத் திட்டமிட்டனர். இந்த இயக்கத்தை ஒழுங்குபடுத்த நான் உதவினேன். வெளிநாட்டுக்கு சென்ற இந்தக் குழுக்களில் ஹூனான் முறைமைப் பாடசாலை மாணவர்கள் பலர் இருந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பிற்காலத்தில் புகழ்பெற்ற தீவிரவாதிகள் ஆயினர். ஸூ டேலியும் இந்த இயக்கத்தால் கவரப்பட்டவரே. அவர் நாற்பது வயதை கடந்த பின்பு ஹூனான் முறைமைப் பாடசாலையில் தனது பேராசிரியர் பதவியை துறந்துவிட்டு பிரான்சுக்கு சென்றார். ஆயினும் 1927ம் ஆண்டுவரை இவர் ஒரு கம்யூனிஸ்டாக ஆகவில்லை.

ஹூனான் மாணவர்கள் சிலருடன் நான் பீக்கிங்கிற்குச் சென்றேன். இந்த இயக்கத்தை ஒழுங்கு செய்வதற்கு நான் உதவியிருந்த போதிலும், சின் மின் நு ஹுய் இயக்கத்தின் ஆதரவை இந்த இயக்கம் பெற்றிருந்த போதிலும் நான் ஐரோப்பா செல்ல விரும்பவில்லை. எனது நாட்டைப் பற்றியே நான் சரியாக அறிந்து கொண்டிருக்கவில்லை என்று நான் கருதினேன். அத்தோடு எனது வாழ்க்கையை பயனுள்ள முறையில் சீனாவில் கழிக்க முடியும் என்றும் கருதினேன்.பிரான்ஸ் செல்லவிருந்த அந்த மாணவர்கள் லீ ஷீத் செங் என்பவரிடம் பிரான்சு மொழி பயின்றார்கள். இவர் தற்போது சீன பிரஞ்சு பல்கலைக்கழகத்தின் தலைவராக இருக்கின்றார். நான் பிரஞ்சு மொழி பயிலவில்லை. என்னிடம் வேறு திட்டங்கள் இருந்தன.

என்னைப் பொருத்தவரை பீக்கிங்கில் வாழ்வது செலவு பிடிக்கக்கூடிய வாழ்க்கையாக இருந்தது. எனது நண்பர்களிடம் கடன்பட்டுத்தான் நான் தலைநகருக்கு வந்தேன். நான் உடனேயே வேலை ஒன்றில் சேர்வதற்கு முயற்சி செய்யலானேன். முறைமைப் பாடசாலையில் முன்பு எனது ஆசிரியராக இருந்த யாங் சிங் ஸி அப்போது பீக்கிங் தேசிய பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ஆகியிருந்தார். எனக்கு ஒரு வேலை பெற்றுத்தர உதவுமாறு அவரிடம் கோரினேன். பல்கலைக்கழகத்தின் நூலகப் பொறுப்பாளருக்கு அவர் என்னை அறிமுகம் செய்துவைத்தார். அவரது பெயர் லீ ரா சாவோ. அவர் பிற்காலத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபக உறுப்பினர், பின்பு அவர் சாங் த்சோ லின் (மஞ்சூரியாவில் ராணுவ சர்வாதிகாரியாக இருந்து 1928ல் ஜப்பானியரால் கொல்லப்பட்டவர்) என்பவரால் கொல்லப்பட்டார். லீ ரா சாவோ எனக்கு நூலக துணைப் பொறுப்பாளர் வேலையை தந்தார். எனக்கு சம்பளமாக ஒரு தாராளமான தொகையான மாதம் ஒன்றுக்கு எட்டு டாலர் தரப்பட்டது.

எனது பனி ஒரு சிறிய பணியாக இருந்ததால் மக்கள் என்னை சந்திப்பதை தவிர்த்தனர். செய்தித்தாள்கள் படிக்க வருவோரின் பெயர்களை எழுதுவது எனது பணிகளில் ஒன்றாக இருந்தது. ஆனால் அங்கு வந்த பல பேருக்கு நான் ஒரு மனிதனாகவே படவில்லை. அங்கு படிக்க வந்தோரிடையே மறுமலர்ச்சி இயக்கத்தின் புகழ்பெற்ற பல தலைவர்களின் பெயர்களை என்னால் அறியமுடிந்தது. புசு நியன், லோ சியா லூன் மற்றும் பலர் அவர்களில் அடங்கியிருந்தனர். இவர்களில் நான் ஆர்வமும் ஈடுபாடும் கொண்டேன். அவர்களுடன் அரசியல் கலாச்சார விடயங்களில் கலந்துரையாட முயன்றேன். ஆனால் அவர்கள் ஓய்வு ஒழிச்சலற்ற சுறுசுறுப்பான மனிதர்கள், தென்பகுதி உச்சரிப்பில் பேசுகின்ற ஒரு துணை நூலகரிடம் அளவளாவுவதற்கு அவர்களுக்கு நேரம் இருக்கவில்லை.

ஆனால் நான் நம்பிக்கை இழக்கவில்லை. தத்துவ இயல் சங்கத்தில் சேர்ந்தேன். பத்திரிக்கைத்துறை சங்கத்திலும் உறுப்பினரானேன். இதன் மூலம் பல்கலைக்கழக வகுப்புகளில் பங்குபெற வழி சமைத்தேன். பத்திரிக்கைத்துறை சங்கத்தில் சென் குங் போன்ற சக மாணவர்களை சந்தித்தேன். அவர் தற்போது நான்சிங்கில் ஒரு உயர் அதிகாரியாக உள்ளார். அத்தோடு ராங் பிங் ஷான், (இவர் பின்பு கம்யூனிஸ்ட் ஆகினார், அதற்கும் பின்பு மூன்றாவது கட்சி என்று அழைக்கப்பட்ட ஒரு கட்சியில் உறுப்பினரானார்) சாவ் பியாங் பிங் ஆகியோரையும் இங்கு சந்தித்தேன். இவர்களில் விசேடமாக சாவ் பியாங் பிங் எனக்கு மிகவும் உதவி புரிந்தார். இவர் பத்திரிகைத் துறை சங்கத்தில் விரிவுரையாளராக இருந்தார். அவர் ஒரு மிதவாதி, நல்ல பண்பாலருமாவார். அவர் 1926ல் சாங் த்சோ லின்னால் கொல்லப்பட்டார்.

நூல்நிலையத்தில் வேலை செய்யும்போது நான் சான் குவோ ராவோவைச் சந்தித்தேன். இவர் தற்போது சீன சோவியத் அரசின் உதவித்தலைவராக உள்ளார். காங் பெய் சென் (பின்பு கலிபோர்னியாவில் குக் குளூக்ஸ் கிளான் குழுவில் சேர்ந்தவர்) துவா ஸி பெங் (நாங்கிங்கில் கல்வி உதவி அமைச்சராக உள்ளார்) ஆகியோரையும் இங்கு தான் சந்தித்தேன். இங்கு தான் நான் யாங்காய் ஹுய் யை சந்தித்து அவள் மீது காதல் கொண்டேன். இவள் எனது முன்னால் நீதிசாஸ்திர ஆசிரியர் யாங் சாவ ஸி யின் மகள் ஆவார்.  இந்த ஆசிரியர் எனது இளமைக்காலத்தில் என்மீது ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார். பிற்காலத்தில் பீக்கிங்கில் எனது உண்மையான நண்பனாக இருந்தார்.

எனது அரசியல் ஆர்வம் அதிகரித்துக்கொண்டே வந்தது. எனது சிந்தனை மேலும் மேலும் தீவிரவாத உணர்வுகளைக் கொண்டதாக ஆகிவந்தது. இதற்கான பின்னணியை நான் உங்களிடம் கூறியுள்ளேன். ஆனால் தற்சமயம் நான் இன்னும் குழப்ப நிலையிலேயே இருந்தேன். நாங்கள் கூறுமாப் போல் ஒரு மார்க்கத்தை தேடிக்கொண்டிருந்தோம். அராஜகவாதம் பற்றிய சில துண்டுப் பிரசுரங்களை நான் படித்தேன். இது என்மீது மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. என்னிடம் அடிக்கடி வருகை தரும் சுசுன் பெய் என்ற மாணவனுடன் இது பற்றியும் இதுபோன்ற சித்தாந்தம் சீனாவில் உருவாகக் கூடிய சாத்தியக்கூறுகள் பற்றியும் ஆராய்ந்தோம். அந்த நேரத்தில் அந்தக் கோட்பாட்டின் பல முன்மொழிதல்களை நான் ஆதரித்தேன்.

பீக்கிங்கில் எனது ஜீவிய நிலைமை வெகுமோசமானதாக இருந்தது. அதற்கு மாறாக இந்த பழைய நகரின் அழகு எனக்கு விரிவான உயிரோட்டமுள்ள ஒரு மாற்றீடாக இருந்தது. அங்கு சான் யென் சிங் (மூன்று கண்கள் கிணறு) என்ற இடத்தில் நான் தங்கியிருந்தேன். அங்கு ஒரு சிறிய அரை அதில் ஏழு பேருடன் தங்கியிருந்தேன். சூட்டுப் படுக்கையில் எல்லோரும் ஏறிப்படுத்தால் எனக்கு மூச்சு விடக்கூட இடம் இருக்காது. நான் ஒரு பக்கம் திரும்பிப் படுக்கும் போது எனது இருமருங்கிலும் படுப்போரை நான் எச்சரித்து விட்டே படுப்பேன். ஆனால் பூங்காக்களிலும், பழைய அரச மாளிகை மைதானத்திலும் வடபகுதிக்கு சிறிது முந்தியே வந்துவிடும் வசந்த காலத்தை அனுபவித்தேன். பெய் ஹெய் (வடக்குக் கடல் முற்காலத்தில் வெளியார் நுழைய முடியாத நகரத்திலுள்ள செயற்கை ஏரிகள்) முழுமையாகப் பணியால் மூடப்பட்டிருக்கும் போதே வெள்ளை மலர்கள் பூத்துக்குலுங்குவதைக் கண்டேன். பெய் ஹெய் அருகே வில்லோ மரங்களில் பனிக்கட்டித்துகள்கள் தொங்கிக்கொண்டிருப்பதைக் கண்டேன். கவிஞன் ராங் சென் சாங் இந்தக் காட்சியை  பெய் ஹெய்யின் வெள்ளி நகை அணிந்த மரங்களைப் பற்றி பத்தாயிரம் பீச் மரங்கள் பூத்துக் குலுங்குவது போல என்று வர்நித்ததை நினைவு கூர்ந்தேன். பீக்கிங் நகரின் எண்ணிலடங்கா மரங்கள் எனக்கு ஆச்சரியத்தையும் வியப்பையும் ஏற்படுத்தின.

1919ம் ஆண்டு முற்பகுதியில் பிரான்சுக்கு செல்லும் மாணவர்களுடன் ஷாங்காய்க்கு சென்றேன். ரியன்ட்ஸ் ரின் போவதற்கு மட்டுமே என்னிடம் பயணச்சீட்டு இருந்தது. அதற்கு அப்பால் போவதற்கு எனக்கு வழிவகை இருக்கவில்லை. சொர்க்கம் ஒரு பயணியை தாமதிக்க வைக்காது என்று ஒரு சீனப் பழமொழி சொல்லுவது போல பீக்கிங்கிலுள்ள ஒகச்டே கொம்டே பாடசாலையை சேர்ந்த ஒரு சக மாணவன் வழங்கிய பத்து யுவான் கடன் மூலம் பூகூ வரை செல்வதற்கு பயணச்சீட்டை என்னால் வாங்கமுடிந்தது. நாங்கிங் போகும் வழியில் சூ ழூ வில் இறங்கி கண்பூஷியசின் சமாதிக்கு சென்றேன். கண்பூஷியசின் சீடர்கள் கால்களைக் கழுவும் ஒரு சிறிய நீரோடையை பார்த்தேன். அவர் குழந்தையாக இருந்தபோது வாழ்ந்த சிறிய நகரத்தை பார்த்தேன். அவருக்கென்று அர்ப்பணிக்கப்பட்ட கோவிலுக்கு அருகே அவர் ஒரு மரத்தை நட்டதாக கூறப்படுக்கிறது, அந்த மரத்தையும் பார்த்தேன். கண்பூஷியசின் புகழ்பெற்ற சீடர்களில் ஒருவரான யென் ஹூள் வாழ்ந்த இடத்திலுள்ள ஒரு ஆறு அருகேயும் சென்றேன். ஷான் துங்கிலுள்ள புனித மலையாகிய ராய் ஷான் மலையில் ஏறினேன். இங்கு தான் ஜெனரல் பெங் யூ சியாங் ஓய்வு பெற்ற பிறகு தனது நாட்டுப்பற்று மிக்க ஓலைச்சுவடிகளை எழுதினர்.

இந் நூலின் முந்திய பகுதிகள்

பதிப்புரை

முகவுரை

மாவோவின் குழந்தைப் பருவம் ௧

மாவோவின் குழந்தைப் பருவம் ௨

ஷாங் ஷா வில் வாழ்ந்த நாட்கள் ௧

ஷாங் ஷா வில் வாழ்ந்த நாட்கள் ௨

கருவறை குறித்த அல்லாவின் கதையாடல்கள்

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே பகுதி 16


குரானின் அறிவியல் குறித்த உரையாடல்களில் கருவறை அறிவியலை தவிர்த்துவிட முடியாது. அவ்வளவு விரிவான அளவில் கருவறை குறித்து மதவாதிகள் விதந்தோதியிருக்கிறார்கள். இன்றைய நுண்ணோக்கிகள் நுழைந்து பார்க்கவியலா அறிவியல் கூறுகளை எல்லாம் குரானின் வசனங்கள் படம்பிடித்து காட்டுவதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். கருவரையையும் குழந்தை உருவாவதையும் பற்றி குரான் நிறைய வசனங்களில் குறிப்பிடுகிறது.

அலக் என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான். குரான் 96:2

சொட்டுச்சொட்டாக ஊற்றப்படும் இந்திரியத்துளியாக அவன் இருக்கவில்லையா?, பின்னர் அவன் அலக் என்ற நிலையில் இருந்தான், அப்பால் படைத்து செவ்வையாக்கினான். பின்னர் அதிலிருந்து ஆண், பெண் என்ற இரு ஜோடியை அவன் உண்டாக்கினான். குரான் 75:37-39

……….உங்கள் தாய்மார்களின் வயிறுகளில் ஒன்றன் பின் ஒன்றாக மூன்று இருள்களுக்குள் வைத்து உங்களை படைக்கிறான்……… குரான் 39:6

நிச்சயமாக நாம் மனிதரை களிமண்ணிலிருந்துள்ள சத்திலிருந்து படைத்தோம். பின்னர் நாம் அவனை ஒரு பாதுகாப்பான இடத்தில் இந்திரியத்துளியாக்கி வைத்தோம். பின்னர் அந்த இந்திரியத்துளியை அலக் என்ற நிலையில் ஆக்கினோம். பின்னர் அந்த அலக் கை ஒரு தசைப்பிண்டமாக ஆக்கினோம். பின்னர் அத்தசைப்பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம். பின்னர் அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம். பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாகச் செய்தோம்……… குரான் 23:12-14

……..இன்னும் அவன் உங்களுக்கு பார்வைப் புலன்களையும், செவிப் புலன்களையும், இருதயங்களையும் அமைத்தான்………. குரான் 32:9

ஒவ்வொரு பெண்ணும் சுமந்து கொண்டிருப்பதையும், கர்ப்பப்பைகள் சுருங்கிக் குறைவதையும், அவை விரிந்து அதிகரிப்பதையும் அல்லாஹ் நன்கு அறிவான். ஒவ்வொரு பொருளுக்கும் அவனிடம் அளவு இருக்கிறது. குரான் 13:8

இவ்வளவு வசனங்கள் கர்ப்பப்பை குறித்தும் கரு பற்றியும் குரானில் பேசப்படுகின்றன. இந்த வசனங்களில் இருக்கும் கருத்துகளை தொகுத்துப்பார்த்தால் கரு, கருத்தரிப்பது குறித்து சாதாரணமாக ஒரு மனிதனின் பார்வையை விடுத்து மேம்பட்ட அறிவியல் கருத்துகள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. சொட்டுச்சொட்டாக ஊற்றப்படும் இந்திரியத்துளியாக அவன் இருக்கவில்லையா?, ஆண், பெண் என்ற இரு ஜோடி, தசைப்பிண்டமாக, எலும்புகளாக,  மாமிசமாக ஆக்குவது, பார்வைப் புலன்களும், செவிப் புலன்களும், இருதயங்களும் இருப்பது என்பதெல்லாம் 1400 ஆண்டுகளுக்கு முன் எந்த மனிதனும் அறிந்திராதவைகளா? இந்த வசனங்களுக்குள் அப்படி என்ன அறிவியல் இருக்கிறது? மதவாதிகளின் பார்வையினூடாகவே பார்ப்போம்.

முதலில் அலக் எனும் வார்த்தையை எடுத்துக்கொள்வோம். அநேக மொழிபெயர்ப்புகளில் இந்த அலக் எனும் அரபு வார்த்தை மொழிபெயர்க்கப்படாமல் அப்படியே பயன்படுத்தப்படுகிறது. பிஜே அவர்களின் மொழிபெயர்ப்பில் கருவுற்ற சினைமுட்டை என்று மொழிபெயர்த்திருக்கிறார். பல்நாட்டு அறிஞர்களும் சரிபார்க்கும் வாய்ப்பை பெற்றதாக நண்பர்கள் கருதும் யூசுப் அலி என்பவரின் ஆங்கில மொழிபெயர்ப்பில் உறைந்த இரத்தக்கட்டி (clot of congealed blood) என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஜாகிர் நாயக் என்பவர் இந்தச்சொல்லுக்கு அட்டைப்பூச்சி, தொங்கும் பொருள் என்றெல்லாம் விளக்கங்கள் சொல்கிறார். ஆக அலக் எனும் இந்த அரபுச்சொல்லுக்கு எதுதான் சரியான பொருள்? பொதுவாக பழைய மொழிபெயர்ப்புகளில் இரத்தக்கட்டி என்றுதான் மொழிபெயர்த்திருக்கிறார்கள். கர்ப்பப்பையில் கருவானது இரத்தக்கட்டியாக இருக்கிறதா? எனும் அறிவியல் ரீதியான கேள்வி எழுந்ததும் அதன் பொருள் அட்டைப்பூச்சி, தொங்கும் பொருள் என்றெல்லாம் பயணப்பட்டு நவீன அறிவியலை உள்வாங்கிக்கொண்டு தற்போது கருவுற்ற சினைமுட்டையாக ஆகியிருக்கிறது. இது தான் 1400 ஆண்டுகளுக்கு முன்னரே சொல்லப்பட்ட அறிவியலின் லட்சணம்.

குரான் 75:37-39 வசனங்களில் சொல்லப்படும் கருவின் வளர்ச்சி குறித்து தோராயமான பிம்பம் காட்டப்படுகிறது. இதுவே இன்னும் சற்று விரிவாக குரான் 23:12-14 வசனங்களில் சொல்லப்படுகிறது. பெண்ணின் உடலினுள் செலுத்தப்படும் விந்து தான் குழந்தையாக மாறுகிறது என்று அறிந்துகொண்டபின் அது எப்படி குழந்தையாக உருமாறுகிறது சிந்தித்த ஒரு மனிதனின் கற்பனைதான் இந்தக் காட்சிகள் இரத்தம் தான் விந்தாக உருமாறுகிறது எனும் நினைப்பில் மீண்டும் விந்து உறைந்து இரத்தக்கட்டியாக மாறுகிறது பின்னர் அது சதைக்கட்டியாக மாறுகிறது பின்னர் எலும்பும் அதன் பின்னர் மாமிசமாகவும் மாறி பின்பு குழந்தையாக வெளிவருகிறது. இப்படித்தான் சாதாரணமாக எந்த மனிதனின் கற்பனையும் 1400 ஆண்டுகளுக்கு முன் இருந்திருக்கும், இப்படித்தான் முகம்மதுவும் உருவகித்திருக்கிறார். ஆனால், இன்று உருப்பெருக்கிகள் மூலம் கர்ப்பப்பையின் உள்ளே நடக்கும் மாற்றங்களை பதிவு செய்த பின்பு, ஆகா பாருங்கள் இதை அன்றே முகம்மது சொல்லிவிட்டார், படிக்காதவரான அவரால் எப்படி சொல்லமுடிந்தது? எனவே இது எல்லாவற்றையும் மிகைத்த அந்த சக்தியின் கருணைதான் இது என்று எடுத்துவிடுகிறார்கள்.

இதில் அறிவியலோடு ஒப்பிடும் படிநிலைகள் என்று எதுவுமில்லை என்பது ஒரு புறமிருந்தாலும், பின்னர் அதிலிருந்து ஆண், பெண் என்ற இரு ஜோடியை அவன் உண்டாக்கினான் எனும் வசனமும், பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாகச் செய்தோம் எனும் வசனமும் ஒரு செய்தியை நமக்கு உணர்த்துகிறது. அது என்னவென்றால், கரு உருவாகி ஆரம்பக்கட்ட வளர்ச்சிகள் அடைந்தபின்பு குறிப்பிட்ட ஒரு கட்டத்தில் தான் அந்தக்கரு ஆணா? பெண்ணா? என்பது தீர்மானிக்கப்படுகிறது என்பது தான். ஆனால் அறிவியல் இதை திட்டமாக மறுக்கிறது. உடலுறவு முடிந்து ஆணின் உயிரனுவானது பெண்ணின் சினை முட்டையை எந்தக்கணத்தில் துளைத்து நுழைகிறதோ அந்தக்கணத்திலேயே கருவானது ஆணா? பெண்ணா? என்பது தீர்மானமாகிவிடுகிறது. அதுமட்டுமன்றி அனைத்து விசயங்களும் தோலின் நிறம், அங்கங்களின் அமைப்பு, உயரமா? குள்ளமா? என்பன போன்ற அனைத்து செய்திகளும் டிஎன்ஏ ஏணிகள் மூலம் கருவுக்கு கடத்தப்பட்டு இதன் அடிப்படையிலேயே கருவின் வளர்ச்சி நடைபெறுகிறது.

குரானின் கருவளர்ச்சி நிலைகளோடு அறிவியலை ஒப்பிட்டால் அதுவும் ஒப்பிடக்கூடிய அளவில் இல்லை. அதிலும் முதலில் தசைப்பிண்டம் என்றும் பின்னர் மாமிசம் என்றும் இரண்டு வகையாக குறிப்பிடுவதும் பொருத்தமாக இல்லை. அறிவியல் கருவளர்ச்சியை பின்வருமாறு வகைப்படுத்துகிறது. இரண்டாவது மாதத்தில் ஆண் பெண் இன உறுப்புகள், மூன்றாவது மாதம் ஜீரண உறுப்புகள் எலும்புகள், நான்காவது மாதம் தோல் சுமாரான வடிவம் கண்கள் விரல்கள், ஐந்தாம் மாதம் தலைமுடி நகம் பல்முளைகள் முதுகெலும்பு சீராதல், ஆறாவது மாதம் கண்களில் பார்வை நாவில் ருசி, ஏழாவது மாதம் மூளை சீரடைதல் நரம்புகள் என்று தொடர்ச்சியான வளர்ச்சியில் எட்டு ஒன்பதாவது மாதங்களில் எல்லா உறுப்புகளுமே சீரான இயக்கத்திற்கு வந்து இறுதியில் வெளியேறுகிறது

அடுத்து குரான் 32:9 வசனத்தில் ஒரு வரிசை கூறப்படுகிறது. முதலில் பார்வை பின்னர் செவி அதன்பின்னர் இதயம் இந்த வரிசையில் உறுப்புகள் படைக்கப்படுவதாக அந்த வசனம் சுட்டுகிறது. இதில் முதல் இரண்டு புலன்களை மட்டும் எடுத்துக்கொண்டு பார்த்தீர்களா இன்றைய அறிவிலான முதலில் கண்ணும் பின்னர் காதும் உருவாகிறது என்பதை குரான் அன்றே சொல்லிவிட்டது என்கிறார்கள். ஆனால் இதில் மூன்றாவதாக வரும் இதயத்தை விட்டுவிட்டார்கள். ஏனென்றால் இதயமானது கண், காதுக்கு முன்னரே உருவாகிவிடுகிறது. ஆனால் குரானோ கண் காதுக்கு பின்னர் மூன்றாவதாக இதயத்தை குறிப்பிடுகிறது. இந்த வசனத்தில் இன்னொரு செய்தியும் இருக்கிறது. அவன் உங்களுக்கு பார்வைப் புலன்களையும், செவிப் புலன்களையும், இருதயங்களையும் அமைத்தான் என்கிறது அந்த வசனம். அதாவது பார்வைப் புலன்களையும் என்றால் கண்கள் இரண்டு,  செவிப் புலன்களையும் என்றால் காதுகள் இரண்டு இந்த வரிசையில் அடுத்து இதயங்களையும் என்று குறிப்பிடுகிறது குரான். என்றால் இரண்டு இதயம் என்று குறிப்பிடுகிறதா குரான்? இந்த குழப்பங்களிலிருந்து விடுபடவேண்டும் என்று தான் அண்மைய மொழிபெயர்ப்புகளில் உள்ளங்கள் என்று மொழிபெயர்த்து விட்டார்கள்.

அடுத்து குரான் 13:8 வசனத்தில் ஒவ்வொரு பொருளுக்கும் அவனிடம் அளவு இருக்கிறது என்று ஒரு வரி வருகிறது. அதாவது மனிதனுக்கு கர்ப்ப காலம் பத்து மாதங்கள் என்றால் ஏனைய விலங்குகளுக்கும் இதே காலஅளவு இருப்பதில்லை வெவ்வேறு கால அளவுகளில் அவை பிரசவிக்கின்றன. இதைதான் அந்த வரியில் முகம்மது குறிப்பிடுகிறார். ஆனால் இன்று அந்த வரிகளுக்கு புதிய பொருளை கற்பிக்கிறார்கள். எப்படி என்றால் மனித உடல் அன்னியப் பொருட்களை உடலுக்குள் அனுமதிப்பதில்லை. கண்களில் ஒரு தூசு விழுந்துவிட்டால் கண்கள் ஒரு உருத்துதலை ஏற்படுத்தி கண்ணீரை சுரந்து அதை வெளியேற்றுவதற்கு முயற்சிக்கிறது. மூச்சுக் குழாயில் ஒரு துரும்பு சென்றுவிட்டால் தும்மலின் மூலம் அதை வெளியேற்ற முயற்சிக்கிறது. ஆனால் ஒரு அன்னியப்பொருளான கருவை பத்து மாதங்களாய் உடலுக்குள் தங்க அனுமதித்து அதன் பின்பே வெளியேற்ற முயற்சிக்கிறது. இன்றைய அறிவியலான இதைத்தான் அந்த வசனம் குறிப்பிடுகிறது என்கிறார்கள். இது முழு உண்மையல்ல. எப்படியென்றால் நமது உடல் எல்லா அன்னியப் பொருட்களையும் எதிர்ப்பதில்லை. உடலுக்கு தீங்கு விளைவிப்பதை மட்டும் தான் எதிர்க்கின்றன. நாம் உண்ணும் உணவு உடலுக்கு அன்னியப் பொருள் தான் ஆனால் அதிலுருந்து தான் தனக்கு தேவையான சக்தியை உடல் பெற்றுக்கொள்கிறது. காற்று உடலுக்கு அன்னியப் பொருள்தான் ஆனால் அதிலிருந்து தான் தனக்கு தேவையான ஆக்ஸிஜனை உடல் பெற்றுக்கொள்கிறது. உடல்நலம் பாதிக்கப்பட்டால் வெளியிலிருந்து அன்னியப்பொருட்களான மருந்துகள் உட்செலுத்தப்படுகின்றன, உடல் அவற்றை ஏற்றுக்கொள்கிறது. செயற்கை உறுப்புகள் பொருத்தப்படுகின்றன அவைகளையும் உடல் சில நிபந்தனைகளுக்குட்பட்டு ஏற்றுக்கொள்கிறது. ஒவ்வாமை என்றொரு நோய் உண்டு, உடலுக்கு தீங்கு செய்யாத பொருட்களைக் கூட தீங்கு செய்பவை என்று தவறாக கருதிக்கொண்டு உடல் எதிர்ப்பதற்குத்தான் ஒவ்வாமை என்று பெயர். ஆக உடல் தீங்கு செய்யும் அன்னியப் பொருட்களை மட்டுமே எதிர்க்கிறது. அந்த வகையில் கரு ஒரு அன்னியப் பொருளும் அல்ல. ஒரே மனித இனத்தின் எதிர்பாலின் உயிரணுவை தன்னுடைய அண்டத்துடன் இணைத்துக்கொள்வதை அன்னியப் பொருள் என்று எப்படி வகைப்படுத்த முடியும்?

அடுத்து குரான் 39:6 வசனத்தில் சொல்லப்படும் மூன்று இருள்கள் என்பது எதை குறித்து முகம்மது சொன்னார் என்பது தெரியவில்லை (தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் குறிப்பிடலாம்) ஆனால் அந்த மூன்று இருள் என்பது தாயின் அடிவயிறு, கர்ப்பப்பையின் சுவர், குழந்தையை சுற்றி இருக்கும் சவ்வுப்படலம் என்று அறிவியல் விளக்கம் அளிக்கிறார்கள். ஆனால் முகம்மது அந்த மூன்று இருள்கள் என்பதை இப்படி அறிவியல் பூர்வமாக கூறவில்லை என்பதை உறுதியாக கூறமுடியும். எப்படி என்றால் இதை அறிவியல் விளக்கமறிந்து கூறியவர் இதே வசனத்தில் அவன் உங்களுக்காக கால்நடைகளிலிருந்து எட்டு ஜோடி ஜோடியாக படைத்தான் எனும் பொருளற்ற வசனத்தை சொல்லியிருக்க முடியாது. கால்நடைகளில் எட்டு ஜோடிகள் தான் இருக்கின்றனவா? ஆக ஒரே வசனத்தின் மேல் வரி அர்த்தமற்றதாகவும், கீழ் வரி அறிவியல் பூர்வமாகவும் ஒருவர் கூறியிருக்க முடியாதல்லவா?

ஆக குரானின் வசனங்களில் அறிவியல் உண்மைகள் புதைந்து கிடப்பதாக கூறப்படுவதெல்லாம் வலிந்து ஏற்றப்படும் புனைபுரட்டுக்கள் என்பதை தவிர வேறொன்றுமில்லை.

இத்தொடரின் முந்தைய பகுதிகள்

8. பிரபஞ்சமும் அதை கட்டுப்பட அழைத்த குரானும்

முதலாளிகளின் லாபத்திற்கு முன் மக்களின் உயிர் தூசு: பயங்கரவாதிகளின் சட்டம்

ஆபரேசன் கிரீன் ஹன்ட் என்ற பெயரில் காட்டு வேட்டைக்கு புறப்பட்டிருக்கும் அரசு அதற்கு சொல்லும் காரணம் மாவோயிஸ்டுகள் பயங்கரவாதிகள், அவர்களை ஒழிக்கவேண்டும் என்பது. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்னதாகவே போடப்பட்ட திட்டங்களின்படி அந்தப்பகுதிகளில் கொட்டிக்கிடங்கும் கனிம வளங்களை பன்னாட்டு தரகு முதலாளிகள் கொள்ளையடிப்பதற்கு ஏதுவாக அங்கு காலம் காலமாய் வாழ்ந்துவரும் பழங்குடி மக்களை நாயைப் போல் நரியைப் போல் விரட்டிவிட்டு வசதி செய்து கொடுக்கவேண்டும் என்பது. சுதந்திரமடைந்து விட்டோம் என்று பீற்றிக்கொள்ளும் இந்த அறுபத்திச்சொச்சம் ஆண்டுகளில் சாலை வசதிகளை கூட செய்து தரமுடியாத இந்த அரசு, தங்கள் வாழ் தேவைக்காக வில் அம்புகளை வைத்துக்கொண்டிருக்கும் பழங்குடி மக்களை பல்வேறு நவீன ரக துப்பாக்கி, குண்டுகள், எறிகணைகள் மூலம் போர்விமான வசதிகளுடன் விரட்டியடிக்கவிருக்கிறது. இதை வளர்ச்சித்திட்டம் என்று தன்மானமுள்ள அந்த மக்களின் வாழ்வை ஏளனம் செய்கிறது. நிராயுதபாணியான மக்களிடம் நவீன ஆயுதங்களைக் காட்டி மிரட்டுபவன் பயங்கரவாதி என்றால் இந்த அரசை எப்படி அழைப்பது?

ஆனால் அப்படியெல்லாம் சுற்றிவளைத்து சிரமப்பட்டு புரிந்து கொள்ளவேண்டிய அவசியமின்றி நாங்கள் பயங்கரவாதிகள் தான் என்று ஒரு சட்ட முன்வரைவின் மூலம் வெளிப்படையாகவே அறிவித்துக்கொண்டுள்ளது இந்த ஆளும் கும்பல். அணுமின் எரிசக்தி பதிப்புச் சட்டம் (சிவில் நியூக்ளியர் லயபிலிடி பில்) என்பது அந்த சட்ட முன்வரைவின் பெயர்.

பல்வேறு அறிவுத்துறையினரும், அறிவியலாளர்களும் ஜனநாயக நெறிகளின் படி தங்கள் பலத்தை திரட்டி போராடியும் அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றியே தீருவது என பிடிவாதம் பிடித்து நிறைவேற்றியது மன்மோகன் அரசு. நாடாளுமன்றத்தில் எந்தவித விவாதத்தையும் நடத்தாமல் வாக்கெடுப்புச் செய்யாமல் நிறைவேற்றியது. (அந்த நேரத்தில் நடந்தது அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தானே தவிர ஒப்பந்தத்தின் மீதான வாக்கெடுப்பு அல்ல)

எதிர்காலத்தில் நாம் மிகப்பெரிய அளவில் மின்பற்றாக்குறையை சந்திக்க இருக்கிறோம் என்று கூறி இந்த ஒப்பந்தம் நியாயப்படுத்தப்பட்டது. அதற்கு யுரேனியம் அவசியமில்லை நம்முடைய நாட்டில் தாராளமாக கிடைக்கும் தோரியம் மூலம் அதை செய்யலாம் என்று அந்த ஆய்வில் முக்கால் பங்கு வெற்றியை பெற்றுவிட்ட அறிவியலாளர்களின் கலகக் குரல் செவிமடுக்கப்படவில்லை. இன்றுவரை ஆண்டுக்கொருவராய் அறிவியலாளர்கள் மர்மமான முறையில் செத்துக்கொண்டிருக்கின்றனர்.

ஏற்கனவே நடப்பில் இருக்கும் முறைகளின் மூலமும் வேறு புதிய முறைகளின் மூலமும் மின் உற்பத்தித் திட்டங்களை செயல்படுத்தினால், சூரியமின் உற்பத்தி போன்ற ஆய்வுகளுக்கு நிதி ஒதுக்கினால் இந்த ஒப்பந்தத்திற்கு செலவு செய்வதை விட குறைவான செலவில் இந்த ஒப்பந்தத்தை செயல்படுத்தினால் கிடைக்கும் மின்சாரத்தைவிட அதிக மின்சாரம் பெறலாம் என்று அறிவுத்துரையினரால் எடுத்துக்காட்டப்பட்டது. இதற்கு அரசிடமிருந்தோ அந்த ஒப்பந்தத்தை ஆதரிப்பவர்களிடமிருந்தோ எந்த பதிலும் வரவில்லை. ஆனாலும் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தினால் இந்தியாவின் இறையாண்மை(!) பறிபோய்விடும் என்று இல்லாத ஒன்றைப்பற்றி கவலைப் பட்டனர் சிலர். அமெரிக்காவின் ஹைட் சட்டம் இந்தியாவை கட்டுப்படுத்தாது என்றார்கள். ஆனால் இந்தியாவின் நீண்ட நாள் நண்பனான ஈரானுடன் இதே அணுசக்தி விசயத்தில் அமெரிக்காவின் நலனுக்காக முரண்பட்டார்கள். ஈரானும் அணுசக்தியை ஆக்கபூர்வமாக பயன்படுத்தப் போகிறோம் என்று தான் கூறியது. ஆனாலும் குழாய் எரிவாயு திட்டம் பேச்சுவார்த்தையில் இருக்கும் நிலையிலும் அமெரிக்காவை மீறமுடியாமல் ஈரானுக்கு எதிராக இந்தியா வாக்களித்தது.

இவ்வளவு முரண்பாடுகளுக்கிடையிலும், எதிர்ப்புகளுக்கிடையிலும் இந்திய நலனை விட்டுக்கொடுத்து செய்யப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் படி இதுவரை பணிகள் எதுவும் துவங்கிவிடவில்லை. தொழில்நுட்ப இயந்திரங்கள் அமெரிக்காவிலிருந்து வந்திறங்கி விடவில்லை. ஏன்? அமெரிக்க முதலாளிகள் பயப்படுகிறார்கள். விபத்து என்று ஒன்று நடந்து விட்டால் நட்டஈடு அதிகம் கொடுக்க நேரிடுமோ என்று.

அமெரிக்காவின் மூன்று மைல் தீவு, ரஷ்யாவின் சொர்நோபில் அணுக்கசிவு விபத்துகள் எவ்வளவு கோரமானவை என்று உலகம் கண்டிருக்கிறது. இந்தியாவில் போபால் விசவாயுக்கசிவு நடந்து பல ஆண்டுகள் ஆனபின்பும் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடுகூட மறுக்கப்பட்டு இரக்கமற்று அலையவிடப்பட்டிருக்கும் இந்த நாட்டில் அணுமின் உற்பத்தி செய்து லாபம் என்ற பெயரில் இந்திய மக்களை கொள்ளையிட துடிக்கும் பன்னாட்டு முதலாளிகளுக்கு விபத்து நடந்தால் இழப்பீடு கொடுக்க நேரிடும் என்பது தயக்கமாக இருக்கிறது. அவர்களின் தயக்கத்தைப் போக்கி, வாட்டத்தை நீக்கத்தான் அணுமின் எரிசக்தி பதிப்புச் சட்டம் என்ற பெயரில் ஒரு சட்டத்தை கொண்டுவரவிருக்கிறது.

என்ன சொல்கிறது இந்தச்சட்டம்? அணுமின் உற்பத்தியில் ஈடுபடும் நிறுவனங்கள் இரண்டாக பிரிக்கப்படும். ஒன்று, கனரக இயந்திரங்கள் தொழில்நுட்ப பாத்திரம் வகிக்கும் நிறுவனங்கள். இரண்டு, இவைகளைப் பயன்படுத்தி மின்உற்பத்தி செய்து பகிரும் நிறுவனங்கள். இந்த இரண்டு வகை நிறுவனங்களில் விபத்து ஏற்பட்டால் முதல்வகை நிறுவனங்களுக்கு எந்தப் பொறுப்பும் இல்லை, தொழில்நுட்ப குறைபாடு காரணமாக விபத்து ஏற்பட்டிருந்தாலும் கூட. இரண்டாம் வகை நிறுவனங்கள் விபத்திற்கு பொறுப்பேற்க வேண்டும். பொறுப்பேற்று அதிகபட்ச இழப்பீட்டுத் தொகையாக 2785 கோடியை செலுத்திவிட வேண்டும். அதிலும் 500 கோடி மட்டும் செலுத்தினால் போதும் மீதியை அரசு மக்களின் வரிப்பணத்திலிருந்து ஈடு கட்டிக்கொள்ளும். இது தான் அந்தச்சட்டம். சுருக்கமாக சொன்னால் அமெரிக்க நிறுவனங்கள் இங்கு வந்து மின்சாரம் உற்பத்தி செய்து விநியோகித்து (எந்த விதத்திலும் அரசு தலையிடப்போவதில்லை) மக்களிடம் கோடி கோடியாக கொள்ளையடிக்கலாம், விபத்து நடந்தால் பிச்சைக்காசு 500 கோடியை தூக்கி வீசிவிட்டு போய்விடலாம். அரசு மக்களின் வரிப்பணத்திலிருந்து இழப்பீடு வழங்கிக்கொள்ளும். கேட்பவன் கேனையனாக இருந்தால் எருமை மூத்திரத்தில் ஏரோபிளேன் ஓட்டலாம் என்பது இது தானா?

மக்களுக்கு அரசு கல்வி கொடுக்க முடியாது எனவே தனியார்கள் கல்வியை மேற்கொள்ளலாம். மக்களுக்கு அரசு சுகாதார வசதிகளை செய்து கொடுக்க முடியாது எனவே தனியார்கள் மருத்துவமனைகளை அமைத்துக்கொள்ளலாம். மக்களுக்கு குடிநீர் வசதிகளை செய்து கொடுக்க அரசால் முடியாது எனவே தனியார்கள் குடிநீர் விநியோகம் செய்யலாம். மக்களுக்கு அரசு மிசார வசதிகளை செய்து கொடுக்க முடியாது எனவே தனியார்கள் மின் விநியோகம் செய்து கொள்ளலாம். ஆனால் இவைகளில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் முதலாளிகள்  பணம் தரமாட்டார்கள். ஏனென்றால் லாபம் சம்பாதிக்க மட்டுமே ஆண்டவனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். எனவே அதை மட்டும் அரசு கவனித்துக்கொள்ளும் அதையும் அந்த மக்களின் பணத்திலேயே.

தனியார்மயம் தாராளமயம் உலகமயம் என்பதெல்லாம் திரைபோட்டுக் கொண்டு வந்த காலமெல்லாம் கடந்து விட்டது. தன் கோரமுகத்துடன் நேரடியாகவே வந்து நிற்கிறது. இனியும் மக்கள் வலிக்கவில்லை என்று வாளாவிருக்க முடியாது. எதிர்த்து முறியடிக்க களத்தில் நிற்கவேண்டிய காலமிது.

ஷாங் ஷா வில் வாழ்ந்த நாட்கள் ௨

ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம் பகுதி ௬

பத்திரிகைகளில் விளம்பரங்களைப் படிக்க ஆரம்பித்தேன். அப்போது பல பாடசாலைகள் திறக்கப்பட்டுக்கொண்டிருந்தன. புதிய மாணவர்களைக் கவர்ந்திழுக்க அவை இந்த விளம்பர முறையையே பயன்படுத்தின. பாடசாலைகளின் தராதரங்களை மதிப்பீடு செய்ய என்னிடம் எந்தவித அளவுகோலும் இருக்கவில்லை. காவல்துறைப் பாடசாலை ஒன்றின் விளம்பரம் என் கருத்தைக் கவர்ந்தது. அதில் நுழைவுத் தகுதித்தேர்வை எழுதும் முன்பு சவுக்கார உற்பத்திப் பாடசாலை பற்றிய விளம்பரம் ஒன்றை படித்தேன். இதற்கு போதனை எதுவும் தேவையாக இருக்கவில்லை. உணவும் தங்கும் வசதியும் வழங்கப்பட்டது, ஒரு சிறு சம்பளத்திற்கும் வாக்களிக்கப்பட்டது. இது ஒரு கவர்ச்சியூட்டும் எழுச்சியான விளம்பரமாக இருந்தது. சவுக்கார உற்பத்தியின் பாரிய நன்மைகளை அது எடுத்துக்கூறியது, அத்தோடு அது எவ்வாறு நாட்டையும் மக்களையும் வளமுள்ளதாக்கும் என்றும் எடுத்துக்கூறியது. நான் காவல்துறை பாடசாலை மீதான என் கவனத்தை விட்டுவிட்டு ஒரு சவுக்கார உற்பத்தியாளனாகத் தீர்மானித்தேன். இதற்கு எனது பதிவுக்காட்டணமாக ஒரு டாலரை செலுத்தினேன். இதற்கிடையில் எனது நண்பனொருவன் சட்டக்கல்லூரி மாணவனாயிருந்தான். அவன் என்னைத் தனது பாடசாலையில் சேருமாறு வற்புறுத்தினான். இந்த சட்டப்பாடசாலை பற்றியும் கவர்ந்திழுக்கும் விளம்பரம் ஒன்றை நான் படித்திருந்தேன். பல அற்புதமான விடயங்களுக்கான வாக்குறுதிகளை அந்த விளம்பரம் அளித்திருந்தது. அது மூன்று ஆண்டுகளுக்குள் சட்டம் பற்றிய சகலத்தையும் மாணவர்களுக்கு கற்றுத்தருவதாக விளம்பரப்படுத்தியிருந்தது, அத்தோடு இந்த கல்விக்காலகட்டம் முடிந்து அவர்கள் உறுதியாக அரசு அதிகாரிகளாக வரமுடியும் என்று உறுதியும் அளித்திருந்தது. இந்தப் பாடசாலை பற்றி தொடர்ந்து என் நண்பன் புகழ்ந்து கொண்டே இருந்தான். இந்த விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகளை எல்லாம் குறிப்பிட்டு எனது கல்விக்கட்டனத்தை அனுப்பும்படி கேட்டு இறுதியாக எனது குடும்பத்தினருக்கு கடிதம் எழுதினேன். ஒரு ஜூரியாக அல்லது அரசு அதிகாரியாக திகழப்போகும் எனது வருங்காலத்தைப் பற்றி அவர்களுக்கு ஒரு ஒளிமயமான  தோற்றத்தை உருவாக்கியிருந்தேன். பின்பு சட்டப்பாடசாலையில் பதிவுக்கட்டணமாக ஒரு டாலர் செலுத்திவிட்டு எனது பெற்றோரின் பதிலை எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.

ஒரு வர்த்தகப் பாடசாலையின் விளம்பரம் மீண்டும் என் முடிவில் குறுக்கிட்டது. நாடு தற்போது ஒரு பொருளாதார யுத்தத்தில் ஈடுபட்டுள்ளது. ஆகவே நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பக்கூடிய பொருளாதார நிபுணர்களே நாட்டுக்குத் தேவை என்று மற்றொரு நண்பன் எனக்கு ஆலோசனை வழங்கினான். எனது இந்த நண்பனின் யோசனை மேலாதிக்கம் பெற்றது. அதன் விளைவாக இந்த வர்த்தக நடுத்தரப் பாடசாலையில் பதிவு செய்வதற்காக நான் மேலும் ஒரு டாலரைச் செலுத்தினேன்.  நான் உண்மையில் அந்தப் பாடசாலையில் சேர்ந்துகொண்டேன், அத்தோடு கல்விகற்க அவர்களால் ஏற்றுக்கொள்ளவும் பட்டேன். இதனிடையே நான் தொடர்ந்து விளம்பரங்களைப் படித்துவந்தேன். ஒருநாள் ஒரு உயர்தர வர்த்தகப் பாடசாலையின் வாய்ப்பு வளங்களைப் பற்றிய மற்றொரு விளம்பரத்தைப் படித்தேன். இது அரசினால் நடத்தப்பட்டது. பரந்துபட்ட கற்கை நெறிகளை அது வழங்கியது. அதோடு அதன் போதனாசிரியர்கள் அனைவரும் மிகுந்த திறமைசாலிகள் என்பதையும் நான் அறிந்து கொண்டேன். அந்தப்பாடசாலையில் சேர்ந்து ஒரு வர்த்தக நிபுனனாக வருவது என்று நான் தீர்மானித்தேன். இதற்கும் ஒரு டாலர் செலுத்தி எனது பெயரை பதிவுசெய்துகொண்டு எனது தீர்மானம் பற்றி எனது தந்தையாருக்கு எழுதினேன். அவர் மகிழ்ச்சியடைந்தார். வர்த்தக ரீதியான கல்வியறிவின் வாய்ப்பு வளங்களையிட்டு, அவர் உடனடியாக என்னைப் பாராட்டினார். நான் இந்தப் பாடசாலையில் சேர்ந்து ஒருமாதம் கல்விகற்றேன்.

இந்தப்பாடசாலையில் இருந்த பிரச்சனை என்னவென்றால், இங்குள்ள கற்கை நெறிகள் அனைத்தும் ஆங்கிலத்திலேயே போதிக்கப்பட்டன. அங்கு கற்ற ஏனைய மாணவர்களைப் போலவே எனக்கும் சிறிதளவு ஆங்கிலமே தெரியும். உண்மையில் ஆங்கில எழுத்துகளை விட அதிகமாக ஒன்றும் தெரியாது. இதில் மற்றுமொரு இடையூறு என்னவென்றால், இப்பாடசாலையில் ஆங்கிலம் போதிக்கும் ஆசிரியர்களே இருக்கவில்லை. இந்த நிலைமையால் விரக்தியுற்ற நான் மாதக்கடைசியில் அந்தப் பாடசாலையை விட்டுவிலகி மீண்டும் விளம்பரங்களை படிக்கத்தொடங்கினேன்.

முதலாவது மாகாண நடுத்தரப் பாடசாலையில் எனது அடுத்த முயற்சி தொடங்கியது. நான் ஒரு டாலர் கொடுத்து பதிவு செய்து கொண்டேன். நுழைவுத்தேர்வில் முதல் ஆளாக வந்தேன். அது பலதரப்பட்ட மாணவர்களைக் கொண்ட பெரிய பாடசாலை. அதன் பட்டதாரிகள் எண்ணிலடங்காதவர்கள். அங்கு கற்பித்த ஒரு சீன ஆசிரியர் எனக்கு மிகவும் உதவி புரிந்தார். எனது இலக்கிய ஆர்வப்போக்கு காரணமாகவே என்னால் அவர் கவரப்பட்டார். இவர் யூ பி துங் சியென்(சாம்ராஜ்ய விமர்சனங்களின் வரலாற்றுத் தொகுப்பு) என்ற நூலை எனக்கு வாசிக்கத்தந்தார். இதில் சாம்ராஜ்ய சட்டங்களும், சி யென் லூங்கின் (1736ல் அரியணை ஏறிய மஞ்சு அல்லது சிங் அரச வம்சத்தின் திறமையான நான்காவது சக்கரவர்த்தி) விமர்சனங்களும் அடங்கியிருந்தன. இந்தக் காலகட்டத்தில் ஷாங் ஷாவில் இருந்த அரசின் படைக்கல வெடிமருந்து சாலை ஒன்று வெடித்தது. அங்கு பெரியதொரு தீ ஏற்பட்டது. மாணவர்களாகிய எதிரிகளுக்கு இது ருசிகரமாக இருந்தது. டன் கணக்கான ரவைகளும் வெடிகளும் வெடித்து சிதறின, வெடிமருந்துப்பொருட்கள் கொழுந்து விட்டு எரிந்தன. இதற்கு ஒரு மாதத்திற்குப் பின் ரான் யென் காய், யுவான் ஷூ காய்யால் விரட்டி அடிக்கப்பட்டார். குடியரசின் அரசியல் நிர்வாக எந்திரத்தின் கட்டுப்பாடு தற்போது யுவான் கையிலேயே இருந்தது. ரான் யென் காய்யின் இடத்திற்கு ராங் சியாங் மிங் மாற்றீடு செய்யப்பட்டார். யுவானை அரியணையில் அமர்த்த ராங் சியாங் ஒழுங்குகளைச் செய்யலானார். (மீண்டும் அரசவம்ச ஆட்சி முறையை கொண்டுவர எடுக்கப்பட்ட இந்த முயற்சி விரைவாகத் தோல்வியில் முடிந்தது.)

முதலாவது மாகாண நடுத்தரப் பாடசாலையை நான் விரும்பவில்லை. அதன் கற்கை நெறி வரையறைக்கு உட்பட்டதாக இருந்தது. அதன் சட்டதிட்டங்கள் ஆட்செபத்திற்கு உரியவையாக இருந்தன. யூ பி துங் சி யென் நூலைப் படித்தபின்பு நான் தனியாகவே கற்றுத்தெளிவது நன்மை பயக்கும் என்று முடிவுக்கு வந்தேன். ஏழு மாதங்களின் பின்பு நான் பாடசாலையை விட்டு வெளியேறினேன். எனது சொந்தக்கல்விக்கான நேரத்தை ஒழுங்கு செய்துகொண்டேன். ஒவ்வொரு நாளும் ஹூனான் மாகாண நூல்நிலையத்தில் வாசிப்பதும் இதில் அடங்கும். இந்த விடயத்தில் நான் ஒழுங்காகவும் மனத்திட்பத்துடனும் இருந்தேன். இவ்வாறு நான் செலவழித்த அரை வருடத்தை எனது வாழ்க்கையில் பெறுமதி மிக்க ஒன்றாக நான் கருதுகிறேன். காலையில் நூப்ல்நிளையம் திறக்கும் போது அங்கு செல்வேன். மதிய வேளையில் உணவாக இரண்டு அரிசிப் பலகாரம் உண்ணும நேரம் தான் எனக்கு இடைவேளை. நூல்நிலையத்தில் ஒவ்வொரு நாளும் அது மூடப்படும் வரை நான் அங்கு படித்தேன்.

இந்த சுயகல்வி காலகட்டத்தில் நான் பல புத்தகங்களைப் படித்தேன். உலகப்புவியியல் அமைப்புகள், உலக வரலாறு ஆகியவற்றை அங்கு நான் படித்தேன். முதல்தடவையாக ஒரு உலகப்படத்தை மிகுந்த ஆர்வத்துடன் பார்த்து அதை பயின்றேன். ஆடம் ஸ்மித்தின் வெல்த் ஆப் நேஷன்ஸ், டார்வினின் ஒரிஜின் ஆப் ஸ்பெசிஸ், உயிரினங்களின் தோற்றம் ஜோன் ஸ்டூவர்ட் மில்லியன் ஒழுக்க நெறி பற்றிய நூல், ரூசோவின் படைப்புகள், ஸ்பென்சரின் லாஜிக், மெண்டஸ்க்யூ எழுதிய சட்ட நூல் ஒன்று ஆகியவற்றைப் படித்தேன். கவிதைகள், வீர காவியங்கள், பண்டைய கிரேக்கக் கதைகள் ஆகியவற்றையும், ரஷ்யா, அமேரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் வேறுபல நாடுகளின் புவியியல் வரலாறுகளையும் ஆழ்ந்து படித்தேன்.

சியாங் சியாங் மாவட்ட வாசிகளுக்கான விடுதியில்  வசித்துவந்தேன். அங்கு பல படைவீரர்களும் இருந்தனர். இவர்கள் படையிலிருந்து விலகிய அல்லது படை கலைக்கப்பட்டதினால் வெளியேறிய படை வீரர்களாக இருந்தனர். அவர்களிடம் ஜீவனோபாயத்திற்கான தொழிலோ பணமோ இருக்கவில்லை. இந்த விடுதியில் மாணவர்களும் படைவீரர்களும் எப்போதும் சச்சரவில் ஈடுபட்டு வந்தனர். ஒரு நாள் இந்தப்பிரச்சனை அடிதடியாக உருவெடுத்தது. படைவீரர்கள் மானவர்களைத்தாக்கி அவர்களைக் கொள்ள முயன்றனர். நான் குளியலறைக்கு ஓடி சண்டை முடியும் வரை ஒளிந்திருந்து தப்பினேன்.

அப்போது என்னிடம் பணம் இல்லை. நான் பாடசாலை எதிலாவது சேர்ந்தால் தவிர எனக்கு ஆதரவு வழங்க எனது குடும்பத்தினர் மறுத்துவிட்டனர். நான் தொடர்ந்து விடுதியில் தங்க முடியாமல் போனதால் தங்குவதற்கு ஒரு புதிய இடம் தேடத்தொடங்கினேன். இதனிடையே நான் எனது வருங்காலத் தொழில் பற்றித் தீவிரமாகச் சிந்திக்கத்தொடங்கியிருந்தேன். நான் ஆசிரியத்தொழிலுக்கே அதிகம் பொருத்தமானவன் என்று தீர்மானித்துக்கொண்டேன். மீண்டும் நான் விளம்பரங்களை படித்துக்கொண்டிருந்தேன். ஹூனான் முறைமைப் பாடசாலையில் ஒரு கவர்ச்சிகரமான விளம்பரம் எனது கவனத்திற்கு வந்தது. அதன் வாய்ப்பு வளங்களைப் பற்றி ஆர்வத்துடன் படித்தேன். போதனைக்கான கட்டணம் இல்லை, மலிவான கட்டணத்தில் உணவும் தங்குமிடமும் வழங்கப்படும் என்று இருந்தது. எனது நண்பர்களில் இருவர் இதில் சேருமாறு என்னை வற்புறுத்தினர். நுழைவுத்தேர்வுகளுக்கான கட்டுரைகளை தயாரிப்பதில் அவர்கள் என் உதவியை நாடினர். எனது நோக்கத்தை எனது குடும்ப்பத்தினருக்கு எழுதி அவர்களின் சம்மதத்தையும் பெற்றேன். எனக்காகவும், எனது இரண்டு நண்பர்களுக்காகவும் நானே கட்டுரைகளை தயாரித்தேன். அனைவரும் பாடசாலையில் அனுமதிக்கப்பட்டோம். உண்மையில் சொல்லப்போனால் நான் மூன்றுமுறை அனுமதிக்கப்பட்டேன். எனது நண்பர்களுக்காக நான் கட்டுரை எழுதிய செயற்பாட்டை பிழியானது என்று நான் அப்போது கருதவில்லை. அது வேறும் நட்புறவோடு சம்பந்தப்பட்ட விடயம்.

இந்த முறைமைப் பாடசாலையில் நான் ஐந்து வருடங்கள் மாணவனாக இருந்தேன். பின்பு வெளியான விளம்பரங்களின் வேண்டுகோள்களை தவிர்த்துக்கொல்வதில் வெற்றி பெற்றேன். இறுதியாக நான் எனது பட்டத்தைப் பெற்றேன். ஹூனான் மாகாண முதலாவது முறைமை ஆசிரியர் பயிற்சி பாடசாலையில் நான் பயிலும்போது இடம்பெற்ற நிகழ்வுகள் பல. அத்தோடு இந்தக் காலகட்டத்தில் எனது அரசியல் கருத்துகள் உருப்பெறத் தொடங்கின. சமூக செயல்பாட்டில் பெறப்படும் முதல் அனுபவங்களையும் இங்கு நான் பெற்றுக்கொண்டேன்.

புதிய பாடசாலையில் பல சட்ட நடைமுறைகள் இருந்தன. அவற்றில் சிலவே எனக்கு ஏற்புடையதாக இருந்தது. இயற்கை அறிவியல் கற்கை நெறியை கட்டாயம் பயிலவேண்டும் என்பதை நான் எதிர்த்தேன். நான் சமூக அறிவியலை விசேட கற்கை நெறியாக கற்க விரும்பினேன். இயற்கை அறிவியல் எனக்கு விசேடமான ஆர்வத்தை தூண்டவில்லை. நான் அதைப் படிக்கவும் விரும்பவில்லை. இந்தக் கற்கைநெறியில் நான் குறைந்த மதிப்பெண்களே பெற்றேன்.உயிரினங்களின் தோற்றத்தை ஓவியமாக வரையும் கட்டாய கற்கை நெறியை நான் வெறுத்தேன், முட்டாள்தனமான கற்கைநெறியாக கருதினேன். வரைவதற்கு இலகுவான, எளிமையானவைகளைப் பற்றி சிந்தித்து அதை விரைவாக வரைந்துவிட்டு வகுப்பை விட்டு வெளியேறுவதையே வழக்கமாக கொண்டிருந்தேன். அறிவியல் கற்கைநெறியில் நான் பெற்ற அதி சிறப்பான மதிப்பெண்கள் ஏனைய பாடங்களில் நான் பெற்ற குறைவான மதிப்பெண்களை ஈடு செய்தன.

பெருந்தாடி யுவான் என்று மாணவர்களால் பட்டப்பெயர் சூட்டப்பட்டிருந்த ஒரு சீன ஆசிரியர் எனது படைப்புகளை ஒரு பத்திரிகையாளனின் படைப்பைப் போன்று இருப்பதாக கேலி செய்தார். நான் முன்மாதிரியாக கருதிய லியாங் சி சால்வை அவர் இகழ்ந்ததோடு அவரை ஒரு அரை அறிவிலி என்றும் கருதினார். நான் ஹான யூன் அவர்களின் படைப்புகளைப் படித்தேன்.  அத்தோடு பழைய இலக்கிய பாணியில் சொற்றொடர்களை எழுதும் முறையில் தேர்ச்சிபெற்றேன். இதன் விளைவாக இன்னும் கூட தேர்ச்சிபெற்ற இலக்கியபாணியிலான கட்டுரை ஒன்றை தேவை ஏற்பட்டால் என்னால் எழுத முடியும். இதற்கு நான் பெருந்தாடி யுவானுக்கு நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.

என்மீது மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய ஆசிரியர் இங்கிலாந்தில் கல்வி கற்றுத்திரும்பிய யாங் சாங் சி ஆவார்.இவருடைய வாழ்வோடு எனது வாழ்வு பிற்காலத்தில் வெகு நெருங்கிய உறவை கொண்டிருக்கப் போகிறது. அவர் நீதிநெறி பாடத்தை போதித்தார். அவர் ஒரு யதார்த்தவாதி, உயரிய நீதிநெறியாளர். அவர் தனது நீதி நீரிகளில் மிகுந்த பற்றுறுதி கொண்டிருந்தார். சமூகத்திற்கு பயன்படக்கூடிய நேர்மையான, நீதியான, நற்பன்பாடு உள்ள மனிதனாக வரவேண்டும் என்ற ஆசையை மாணவர்கள் மனதில் பதியவைக்க அவர் முயன்றார். அவரது செல்வாக்கின் கீழ் த்சை யுவான் பெய் மொழிபெயர்த்த ஒரு நீதிநூலை நான் படித்தேன். இதன் காரணமாக ஒரு கட்டுரை எழுத ஊக்கம் பெற்றேன். இதற்கு ‘எண்ணத்தின் சக்தி’ என்று தலைப்பிட்டேன். அப்போது நான் ஒரு கற்பனாவாதியாக இருந்தேன். எனது கட்டுரை பேராசிரியர் யாங் சாங் சி அவர்களால் அவரது கற்பனாவாத நோக்கின் அடிப்படையில் வெகுவாக பாராட்டப்பட்டது. அதற்கு அவர் 100 மதிப்பெண்கள் வழங்கினார்.

ராங் என்ற பெயருடைய ஒரு ஆசிரியர் எனக்கு மின்பாவோ சஞ்சிகையின் பழைய பிரதிகளை வழங்கினார். மிகுந்த ஆர்வத்தோடு அவற்றை நான் படித்தேன். இவற்றிலிருந்து ருங் பெங் ஹுய் அவர்களின் செயற்பாடுகளையும் நடவடிக்கைத் திட்டங்களையும் நான் அறிந்தேன். இரண்டு மாணவர்கள் சீனாவின் ஊடாகப் பயணம் மேற்கொண்டிருப்பதையும் அவர்கள் திபெத் எல்லையிலுள்ள தட்சியன்லூ என்ற இடத்தை அடைந்து விட்டததையும் பற்றி எழுதப்பட்டிருந்த கட்டுரை ஒன்றையும் நான் மின்பாவோ இதழில் நான் படித்தேன். இது எனக்கு மிகுந்த எழுச்சியூட்டியது. இவர்களது உதாரணத்தை பின்பற்ற விரும்பினேன். ஆனால் என்னிடம் பணம் இருக்கவில்லை. முதலில் நான் ஹூனானுக்கு பயணம் மேற்கொள்ள முயலவேண்டும் என்று எண்ணினேன்.

அடுத்த கோடை காலத்தின்போது நான் இந்த மாகாணத்தின் குறுக்காக கால்நடையாக எனது பயணத்தை தொடங்கினேன். ஐந்து மாவட்டங்களினூடாக நடந்து சென்றேன். சியாங் யூ என்ற மாணவரும் உடன் வந்தார். இந்த ஐந்து மாவட்டங்களினூடாகவும் ஒரு செப்புக்காசும் செலவு செய்யாமல் பயணம் செய்தோம். விவசாயிகள் எங்களுக்கு உணவும் உறங்க இடமும் தந்தார்கள். நாங்கள் சென்ற எல்லா இடங்களிளும் அன்புடன் வரவேற்கப்பட்டு உபசரிக்கப்பட்டோம். எனது பயண சகபாடியான சியாங் யூ பின்னாளில் யி பி சியின் கீழ் நாங்கிங்கில் ஒரு கோமிண்டாங் அதிகாரியாக வந்தார். அப்போது ஹூனான் முறைமைப் பாடசாலையில் தலைவராக இருந்த யி பி சி நாங்கிங்க்கில் பெரிய அதிகாரியாக வந்தார்.அவர் சியாங் யூவை பிகிங் அரச மாளிகை அருங்க்காட்சியத்தின் பாதுகாவலர் பதவிக்கு நியமித்தார். இந்த அருங்காட்சியகத்தின் பெறுமதிமிக்க அரும்பெரும் செல்வங்களை விற்றுவிட்டு அந்தப் பணத்துடன் 1934ம் ஆண்டில் தலைமறைவாகிவிட்டார்.

உணர்வுகளை வெளிப்படுத்தும் சுதந்திரமான மனோநிலையும் சில நெருங்கிய நண்பர்களுக்கான தேவையும் ஏற்பட்டதால் தாய்நாட்டுக்கான சேவையில் ஆர்வமுள்ள இளைஞர்களை என்னுடன் தொடர்பு கொள்ளும்படி சாங்கா பத்திரிகை ஒன்றில் ஒரு விளம்பரத்தை வெளியிட்டேன். உடலிலும் உள்ளத்திலும் உறுதிவாய்ந்த தாய்நாட்டுக்காக எவ்வித தியாகங்களையும் செய்யக்கூடிய இளைஞர்களே தேவை என்று அதில் விசேடமாக குறிப்பிட்டிருந்தேன். இதற்கு எனக்கு மூன்று முழுக் கடிதங்களும் ஒரு அரைக்கடிதமும் கிடைத்தன. ஒன்று லு சியாங் லவ் என்பவரிடமிருந்து வந்திருந்தது. இவர் பின்னாளில் கம்யூனிசத் கட்சியில் சேர்ந்து பின்பு அதை காட்டிக்கொடுக்க இருந்தார். ஏனைய இரண்டு கடிதங்கள் இரண்டு இளைஞர்களிடமிருந்து வந்திருந்தது. அவர்கள் பிற்பாடு தீவிர பிற்போக்குவாதிகளாக மாறினர். அந்த அரைக்கடிதம் ஈடுபாடு காட்டாத லிலிசான் என்ற இளைஞரிடமிருந்து வந்திருந்தது. நான் கூறிய அனைத்தையும் கேட்ட லி எவ்வித மறுமொழியும் கூறாமலேயே வெளியேறினார். அதன்பின் எங்கள் நட்பு வளரவில்லை. (லிலிசான் பின்பு சீனக் கம்யூனிசத் கட்சியின் லிலிசான் கோட்பாட்டு வழிக்கு பொறுப்பாக இருந்தார். இதை மாவோ கடுமையாக எதிர்த்தார்)

ஆனால் படிப்படியாக என்னைச்சுற்றி ஒரு மாணவர் குழுவை உண்டாக்கினேன். பின்பு ஒரு சங்கமாக (புதிய மக்கள் ஆய்வு சங்கம்) உருவெடுத்த ஒரு அணிக்கு இந்தக்குழு ஆணிவேராக அமைந்தது. இது பிற்காலத்தில் சீனாவின் பிரச்சனைகளிலும் அதன் விதியிலும் பரந்துபட்ட செல்வாக்கை கொண்டிருக்கப்போகிறது. இது ஒரு கடுமையான, தீவிரமான எண்ணங்களைக் கொண்ட மனிதர்களின் ஒரு சிறிய குழு. அவர்களுக்கு சில்லறை விடயங்களைப் பற்றியெல்லாம் விவாதிக்க நேரமிருக்கவில்லை. அவர்கள் கூறியவை, செய்தவை அனைத்திலும் ஒரு நோக்கம் கட்டாயம் இருக்கும். காதலிக்கவோ வேறு காரியங்களில் ஈடுபடவோ நேரம் இருக்கவில்லை. காலம் மிகவும் இக்கட்டாக இருப்பதையும், அறிவைப்பெறுவது அவசர காரியம் என்பதையும் அறிந்திருந்தனர். அவர்கள் பெண்களைப் பற்றியோ தனிப்பட்ட விடயங்களையோ நினைத்தும் பார்க்கவில்லை. நான் பெண்கள் விடயத்தில் அக்கறை கொள்ளவில்லை. எனது பெற்றோர் எனக்கு 14வயதாக இருக்கும்போது 20வயதுப் பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்திருந்தனர். ஆனால் அந்தப்பென்னோடு நான் ஒருபோதும் வாழவில்லை. அந்தப் பெண்ணை எனது மனைவியாக நான் கருதவில்லை. இந்த நேரத்தில் அந்தப் பெண்மீது நான் சிறிதும் அக்கறை கொள்ளவில்லை. இந்தக்காலகட்டத்து இளைஞர்களின் வாழ்வில் வழமையாக முக்கியப்பங்கு வகித்த பெண்களின் அழகுக் கவர்ச்சி பற்றி இரகசியமாக விவாதிப்பதைவிட, அன்றாட வாழ்க்கையின் சாதாரண விடயங்களை பற்றிக் கதைப்பதைக்கூட எனது சகபாடிகள் தவிர்த்திருந்தது நினைவில் உள்ளது. எனது நண்பர்களும் நானும் பெரிய விடயங்களைப் பற்றி கதைக்கவே விரும்பினோம். மனிதர்களின் இயல்புகள், பிரபஞ்சம், உலகம், சீன மக்கள் சமூகம் ஆகியவை பற்றியே கதைத்தோம்.

நாங்கள் தீவிரமாக உடற்பயிற்சி செய்பவர்களாகவும் மாறினோம். மாரிக்கால விடுமுறையின் போது நாங்கள் வயல்களினூடாக நடந்து திரிந்தோம், மலைகளில் ஏறி இறங்கினோம்,நகர சுற்று மதில்களில் ஏறினோம், ஆறுகள் நீரோடைகளை நீந்திக் கடந்தோம். மழை பெய்தால் எங்களது மேலாடைகளை களைந்து விட்டு மழையில் நனைந்தோம், இதை மழைக்குளிப்பு என்று அழைத்தோம். வெயில் எரிக்கும் போதும் எங்களின் மேலாடைகளை கழற்றிவிட்டு அதை வெப்பக்குளிப்பு என்று அழைத்தோம். வசந்தகாலக் காற்று வீசும் போது காற்றுக்குளிப்பு என்றும் புது விளையாட்டு என்றும் கத்துவோம். பனித்துளிகள் விழும்போது கூட வெளியிலேயே படுத்தோம். நவம்பர் மாதத்தில் கூட குளிர்ந்த ஆறுகளில் நீந்தினோம். உடற்பயிற்சி என்ற பெயரில் இவை அனைத்தும் நடந்தேறின. உடற்கட்டமைப்பை உறுதியாக்கிக்கொள்ள பெருமளவுக்கு இது உதவியது. பிற்காலத்தில் தென்சீனாவின் ஊடாக பல நடைபயணங்கள் மேற்கொள்ளவும், கியாங்ஸியிலிருந்து வடமேற்குப் பகுதிக்கு மேற்கொள்ளப்பட்ட நெடும் பயணத்தின் போதும் இவை எனக்கு மிகுந்த பயனுடையதாக இருக்கப்போகின்றன.

ஏனைய நகரங்களிலும் மாநகரங்களிலும் உள்ள பல மாகானங்கலோடும், நண்பர்களோடும் பரந்த அடிப்படையில் கடிதத்தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டேன். நன்கு நெருக்கமாக ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு நிறுவனத்தின் அவசியத்தை நான் படிப்படியாக உணரலாளேன். 1917ல் சீன நண்பர்களுடன் சேர்ந்து சின் மின் ஷூ ஹுய் அமைப்பை நிறுவ நான் உதவினேன். இதில் 70, 80 உறுப்பினர்கள் இருந்தனர். இவர்களில் பலரின் பெயர்கள் பிற்காலத்தில் சீனக் கம்யூனிச உலகிலும் சீனப்புரட்சியின் வரலாற்றிலும் புகழ் பெற்ற பெயர்களாக இருக்கப் போகின்றன. இந்த அமைப்பில் இருந்த நன்கு அறிமுகமான கம்யூனிஸ்டுகளில் லோமான் (லீ வெய் ஹான்)இவர் தற்போது கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்புக்குழுவில் உறுப்பினராக இருக்கிறார். ஸி யாசி தற்போது இரண்டாவது முன்னணி செம்படையில் இருக்கிறார். ஹோ ஷூ ஹெங் மத்திய சீன சோவியத் பிராந்தியத்தின் உச்சநீதி மன்றத்தின் நீதிபதியாக ஆனவர். பின்பு இவர் ஷியாங் காய் ஷேக்கால் 1935ல் கொல்லப்பட்டார். ஷியாங் ஹூ ஷாங் ஒரு எழுத்தாளராக சோவியத் ரஷ்யாவில் வாழ்கிறார்.த்சை ஹோ சென் கம்யூனிட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர், 1927ல் ஷியாங் காய் ஷேக்கால்  கொல்லப்பட்டார். யே லீ யுன் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினராக வந்தார், பின்பு கோமிண்டாங் கட்சிக்கு காட்டிக்கொடுத்தார், அதோடு முதலாளித்துவ தொழிற்சங்கத்தின் அமைப்பாளரானார். ஸி யாவோ சென் கம்யூனிஸ்ட் கட்சியை அமைப்பதற்கான மூல உடன்படிக்கையில் கையெழுத்திட்ட ஆறு பேர்களில் ஒருவர். சமீபத்தில் சுகவீனமுற்று இறந்தார். 1927ல் இடம்பெற்ற எதிர்புரட்சியில் சின் மின் ஷூ ஹுய் அமைப்பின் உறுப்பினர்களில் பெரும்பான்மையோர் கொல்லப்பட்டனர்.

சின் மின் ஷூ ஹுய் அமைப்பை ஒத்ததாக இதே காலத்தில் அமைக்கப்பட்ட மற்றொரு சங்கம் தான் சமூக நல வாழ்வு சங்கம் ஆகும். இது ஹூ பேயில் அமைக்கப்பட்டது. இதன் உருப்பினர்களிலும் பலர் பின்பு கம்யூனிஸ்டுகள் ஆக்கினார்கள். ஷியாங் காய் ஷேக்கின் எதிர்ப்புரட்சியின் போது கொலை செய்யப்பட்ட யுன் ராய் யிங்கும் இவர்களில் அடங்குவார். தற்போது செம்படை பல்கலைக் கழகத்தின் தலைவராக இருக்கும் லின பிய்யாவ்வும் இதன் உறுப்பினரே. தற்போது வெள்ளை துருப்புகளுக்கான (செம்படையினரால் கைது செய்யப்பட்ட துருப்புகள்) வேலைகளுக்கு பொறுப்பாக இருக்கும் சாங் ஹால்வும் இதன் உறுப்பினரே. ஹூசே என்று ஒரு அமைப்பு பீகிங்கில் இருந்தது. இந்த அமைப்பின் சில உறுப்பினர்களும்  பின்னாளில் கம்யூனிஸ்டுகள் ஆயினர். சீனாவின் வேறு இடங்களில் குறிப்பாக ஷாங்காய், ஷாங் செள, ஹான் கௌ ரியன்சிசின் சில தீவிரவாத இளைஞர்கள் தீவிரவாத அமைப்புகளை நிறுவினார்கள். ரியன்சிசினில் நிறுவப்பட்ட விழிப்புணர்வூட்டும் சங்கத்தில் ஸூ யென் லாய் நிருவன உறுப்பினர்களில் ஒருவர். ரெங் யிங் சாவோ (திருமதி ஸூ யென் லாய்) மாசுண் 1927ல் பீகிங்க்கில் மரணதண்டனைக்கு உள்ளானவர், சன் ஷியா சிங் ஆகியோரும் இதில் உறுப்பினராக இருந்தனர்.

பெரும்பாலான சங்கங்கள் சின் சிங் நியேன்(புதிய இளைஞர்) என்ற புகழ் பெற்ற இலக்கிய எழுச்சி சஞ்சிகையின் செல்வாக்கின் கீழ் உருவாக்கப்பட்டவை. இதன் ஆசிரியர் சென் ரூ சியு ஆவார். நான் முறைமைப் பாடசாலையின் மாணவனாக இருக்கும் போதே இந்த சஞ்சிகையை படிக்கத் தொடங்கியிருந்தேன். ஹூ சி, சென் ரூ சியு ஆகியோரின் படைப்புகளை நான் வியந்து போற்றினேன். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அவை எனது முன்மாதிரியாக இருந்தன. அவை நான் ஏற்கனவே கழித்து விட்டிருந்த லியாங் ஸி சாவ் காங் யூ வேய் ஆகியோரின் படைப்புகளை மாற்றீடு செய்தன.

இந்தக்காலகட்டத்தில் எனது சிந்தனை மிதவாதம் ஜனநாயக மறுமலர்ச்சி வாதம், சோசலிச வாதம் ஆகியவற்றின் ஆச்சரியமான கலப்பாக இருந்தது. 19ம் நூற்றாண்டு ஜனநாயகம், கற்பனைவாதம், பழைய பாணியிலான மிதவாதம் ஆகியவை மீது ஒரு தெளிவற்ற விருப்பம் இருந்தது. அத்தோடு நான் ரானுவமையப்படுத்தல் ஏகாதிபத்தியம் ஆகியவற்றிற்கு நிச்சயமாக எதிர்ப்பாளனாக இருந்தேன்.

இந் நூலின் முந்திய பகுதிகள்

பதிப்புரை

முகவுரை

மாவோவின் குழந்தைப் பருவம் ௧

மாவோவின் குழந்தைப் பருவம் ௨

ஷாங் ஷா வில் வாழ்ந்த நாட்கள் ௧

%d bloggers like this: