ஷாங் ஷா வில் வாழ்ந்த நாட்கள் ௨

ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம் பகுதி ௬

பத்திரிகைகளில் விளம்பரங்களைப் படிக்க ஆரம்பித்தேன். அப்போது பல பாடசாலைகள் திறக்கப்பட்டுக்கொண்டிருந்தன. புதிய மாணவர்களைக் கவர்ந்திழுக்க அவை இந்த விளம்பர முறையையே பயன்படுத்தின. பாடசாலைகளின் தராதரங்களை மதிப்பீடு செய்ய என்னிடம் எந்தவித அளவுகோலும் இருக்கவில்லை. காவல்துறைப் பாடசாலை ஒன்றின் விளம்பரம் என் கருத்தைக் கவர்ந்தது. அதில் நுழைவுத் தகுதித்தேர்வை எழுதும் முன்பு சவுக்கார உற்பத்திப் பாடசாலை பற்றிய விளம்பரம் ஒன்றை படித்தேன். இதற்கு போதனை எதுவும் தேவையாக இருக்கவில்லை. உணவும் தங்கும் வசதியும் வழங்கப்பட்டது, ஒரு சிறு சம்பளத்திற்கும் வாக்களிக்கப்பட்டது. இது ஒரு கவர்ச்சியூட்டும் எழுச்சியான விளம்பரமாக இருந்தது. சவுக்கார உற்பத்தியின் பாரிய நன்மைகளை அது எடுத்துக்கூறியது, அத்தோடு அது எவ்வாறு நாட்டையும் மக்களையும் வளமுள்ளதாக்கும் என்றும் எடுத்துக்கூறியது. நான் காவல்துறை பாடசாலை மீதான என் கவனத்தை விட்டுவிட்டு ஒரு சவுக்கார உற்பத்தியாளனாகத் தீர்மானித்தேன். இதற்கு எனது பதிவுக்காட்டணமாக ஒரு டாலரை செலுத்தினேன். இதற்கிடையில் எனது நண்பனொருவன் சட்டக்கல்லூரி மாணவனாயிருந்தான். அவன் என்னைத் தனது பாடசாலையில் சேருமாறு வற்புறுத்தினான். இந்த சட்டப்பாடசாலை பற்றியும் கவர்ந்திழுக்கும் விளம்பரம் ஒன்றை நான் படித்திருந்தேன். பல அற்புதமான விடயங்களுக்கான வாக்குறுதிகளை அந்த விளம்பரம் அளித்திருந்தது. அது மூன்று ஆண்டுகளுக்குள் சட்டம் பற்றிய சகலத்தையும் மாணவர்களுக்கு கற்றுத்தருவதாக விளம்பரப்படுத்தியிருந்தது, அத்தோடு இந்த கல்விக்காலகட்டம் முடிந்து அவர்கள் உறுதியாக அரசு அதிகாரிகளாக வரமுடியும் என்று உறுதியும் அளித்திருந்தது. இந்தப் பாடசாலை பற்றி தொடர்ந்து என் நண்பன் புகழ்ந்து கொண்டே இருந்தான். இந்த விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகளை எல்லாம் குறிப்பிட்டு எனது கல்விக்கட்டனத்தை அனுப்பும்படி கேட்டு இறுதியாக எனது குடும்பத்தினருக்கு கடிதம் எழுதினேன். ஒரு ஜூரியாக அல்லது அரசு அதிகாரியாக திகழப்போகும் எனது வருங்காலத்தைப் பற்றி அவர்களுக்கு ஒரு ஒளிமயமான  தோற்றத்தை உருவாக்கியிருந்தேன். பின்பு சட்டப்பாடசாலையில் பதிவுக்கட்டணமாக ஒரு டாலர் செலுத்திவிட்டு எனது பெற்றோரின் பதிலை எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.

ஒரு வர்த்தகப் பாடசாலையின் விளம்பரம் மீண்டும் என் முடிவில் குறுக்கிட்டது. நாடு தற்போது ஒரு பொருளாதார யுத்தத்தில் ஈடுபட்டுள்ளது. ஆகவே நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பக்கூடிய பொருளாதார நிபுணர்களே நாட்டுக்குத் தேவை என்று மற்றொரு நண்பன் எனக்கு ஆலோசனை வழங்கினான். எனது இந்த நண்பனின் யோசனை மேலாதிக்கம் பெற்றது. அதன் விளைவாக இந்த வர்த்தக நடுத்தரப் பாடசாலையில் பதிவு செய்வதற்காக நான் மேலும் ஒரு டாலரைச் செலுத்தினேன்.  நான் உண்மையில் அந்தப் பாடசாலையில் சேர்ந்துகொண்டேன், அத்தோடு கல்விகற்க அவர்களால் ஏற்றுக்கொள்ளவும் பட்டேன். இதனிடையே நான் தொடர்ந்து விளம்பரங்களைப் படித்துவந்தேன். ஒருநாள் ஒரு உயர்தர வர்த்தகப் பாடசாலையின் வாய்ப்பு வளங்களைப் பற்றிய மற்றொரு விளம்பரத்தைப் படித்தேன். இது அரசினால் நடத்தப்பட்டது. பரந்துபட்ட கற்கை நெறிகளை அது வழங்கியது. அதோடு அதன் போதனாசிரியர்கள் அனைவரும் மிகுந்த திறமைசாலிகள் என்பதையும் நான் அறிந்து கொண்டேன். அந்தப்பாடசாலையில் சேர்ந்து ஒரு வர்த்தக நிபுனனாக வருவது என்று நான் தீர்மானித்தேன். இதற்கும் ஒரு டாலர் செலுத்தி எனது பெயரை பதிவுசெய்துகொண்டு எனது தீர்மானம் பற்றி எனது தந்தையாருக்கு எழுதினேன். அவர் மகிழ்ச்சியடைந்தார். வர்த்தக ரீதியான கல்வியறிவின் வாய்ப்பு வளங்களையிட்டு, அவர் உடனடியாக என்னைப் பாராட்டினார். நான் இந்தப் பாடசாலையில் சேர்ந்து ஒருமாதம் கல்விகற்றேன்.

இந்தப்பாடசாலையில் இருந்த பிரச்சனை என்னவென்றால், இங்குள்ள கற்கை நெறிகள் அனைத்தும் ஆங்கிலத்திலேயே போதிக்கப்பட்டன. அங்கு கற்ற ஏனைய மாணவர்களைப் போலவே எனக்கும் சிறிதளவு ஆங்கிலமே தெரியும். உண்மையில் ஆங்கில எழுத்துகளை விட அதிகமாக ஒன்றும் தெரியாது. இதில் மற்றுமொரு இடையூறு என்னவென்றால், இப்பாடசாலையில் ஆங்கிலம் போதிக்கும் ஆசிரியர்களே இருக்கவில்லை. இந்த நிலைமையால் விரக்தியுற்ற நான் மாதக்கடைசியில் அந்தப் பாடசாலையை விட்டுவிலகி மீண்டும் விளம்பரங்களை படிக்கத்தொடங்கினேன்.

முதலாவது மாகாண நடுத்தரப் பாடசாலையில் எனது அடுத்த முயற்சி தொடங்கியது. நான் ஒரு டாலர் கொடுத்து பதிவு செய்து கொண்டேன். நுழைவுத்தேர்வில் முதல் ஆளாக வந்தேன். அது பலதரப்பட்ட மாணவர்களைக் கொண்ட பெரிய பாடசாலை. அதன் பட்டதாரிகள் எண்ணிலடங்காதவர்கள். அங்கு கற்பித்த ஒரு சீன ஆசிரியர் எனக்கு மிகவும் உதவி புரிந்தார். எனது இலக்கிய ஆர்வப்போக்கு காரணமாகவே என்னால் அவர் கவரப்பட்டார். இவர் யூ பி துங் சியென்(சாம்ராஜ்ய விமர்சனங்களின் வரலாற்றுத் தொகுப்பு) என்ற நூலை எனக்கு வாசிக்கத்தந்தார். இதில் சாம்ராஜ்ய சட்டங்களும், சி யென் லூங்கின் (1736ல் அரியணை ஏறிய மஞ்சு அல்லது சிங் அரச வம்சத்தின் திறமையான நான்காவது சக்கரவர்த்தி) விமர்சனங்களும் அடங்கியிருந்தன. இந்தக் காலகட்டத்தில் ஷாங் ஷாவில் இருந்த அரசின் படைக்கல வெடிமருந்து சாலை ஒன்று வெடித்தது. அங்கு பெரியதொரு தீ ஏற்பட்டது. மாணவர்களாகிய எதிரிகளுக்கு இது ருசிகரமாக இருந்தது. டன் கணக்கான ரவைகளும் வெடிகளும் வெடித்து சிதறின, வெடிமருந்துப்பொருட்கள் கொழுந்து விட்டு எரிந்தன. இதற்கு ஒரு மாதத்திற்குப் பின் ரான் யென் காய், யுவான் ஷூ காய்யால் விரட்டி அடிக்கப்பட்டார். குடியரசின் அரசியல் நிர்வாக எந்திரத்தின் கட்டுப்பாடு தற்போது யுவான் கையிலேயே இருந்தது. ரான் யென் காய்யின் இடத்திற்கு ராங் சியாங் மிங் மாற்றீடு செய்யப்பட்டார். யுவானை அரியணையில் அமர்த்த ராங் சியாங் ஒழுங்குகளைச் செய்யலானார். (மீண்டும் அரசவம்ச ஆட்சி முறையை கொண்டுவர எடுக்கப்பட்ட இந்த முயற்சி விரைவாகத் தோல்வியில் முடிந்தது.)

முதலாவது மாகாண நடுத்தரப் பாடசாலையை நான் விரும்பவில்லை. அதன் கற்கை நெறி வரையறைக்கு உட்பட்டதாக இருந்தது. அதன் சட்டதிட்டங்கள் ஆட்செபத்திற்கு உரியவையாக இருந்தன. யூ பி துங் சி யென் நூலைப் படித்தபின்பு நான் தனியாகவே கற்றுத்தெளிவது நன்மை பயக்கும் என்று முடிவுக்கு வந்தேன். ஏழு மாதங்களின் பின்பு நான் பாடசாலையை விட்டு வெளியேறினேன். எனது சொந்தக்கல்விக்கான நேரத்தை ஒழுங்கு செய்துகொண்டேன். ஒவ்வொரு நாளும் ஹூனான் மாகாண நூல்நிலையத்தில் வாசிப்பதும் இதில் அடங்கும். இந்த விடயத்தில் நான் ஒழுங்காகவும் மனத்திட்பத்துடனும் இருந்தேன். இவ்வாறு நான் செலவழித்த அரை வருடத்தை எனது வாழ்க்கையில் பெறுமதி மிக்க ஒன்றாக நான் கருதுகிறேன். காலையில் நூப்ல்நிளையம் திறக்கும் போது அங்கு செல்வேன். மதிய வேளையில் உணவாக இரண்டு அரிசிப் பலகாரம் உண்ணும நேரம் தான் எனக்கு இடைவேளை. நூல்நிலையத்தில் ஒவ்வொரு நாளும் அது மூடப்படும் வரை நான் அங்கு படித்தேன்.

இந்த சுயகல்வி காலகட்டத்தில் நான் பல புத்தகங்களைப் படித்தேன். உலகப்புவியியல் அமைப்புகள், உலக வரலாறு ஆகியவற்றை அங்கு நான் படித்தேன். முதல்தடவையாக ஒரு உலகப்படத்தை மிகுந்த ஆர்வத்துடன் பார்த்து அதை பயின்றேன். ஆடம் ஸ்மித்தின் வெல்த் ஆப் நேஷன்ஸ், டார்வினின் ஒரிஜின் ஆப் ஸ்பெசிஸ், உயிரினங்களின் தோற்றம் ஜோன் ஸ்டூவர்ட் மில்லியன் ஒழுக்க நெறி பற்றிய நூல், ரூசோவின் படைப்புகள், ஸ்பென்சரின் லாஜிக், மெண்டஸ்க்யூ எழுதிய சட்ட நூல் ஒன்று ஆகியவற்றைப் படித்தேன். கவிதைகள், வீர காவியங்கள், பண்டைய கிரேக்கக் கதைகள் ஆகியவற்றையும், ரஷ்யா, அமேரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் வேறுபல நாடுகளின் புவியியல் வரலாறுகளையும் ஆழ்ந்து படித்தேன்.

சியாங் சியாங் மாவட்ட வாசிகளுக்கான விடுதியில்  வசித்துவந்தேன். அங்கு பல படைவீரர்களும் இருந்தனர். இவர்கள் படையிலிருந்து விலகிய அல்லது படை கலைக்கப்பட்டதினால் வெளியேறிய படை வீரர்களாக இருந்தனர். அவர்களிடம் ஜீவனோபாயத்திற்கான தொழிலோ பணமோ இருக்கவில்லை. இந்த விடுதியில் மாணவர்களும் படைவீரர்களும் எப்போதும் சச்சரவில் ஈடுபட்டு வந்தனர். ஒரு நாள் இந்தப்பிரச்சனை அடிதடியாக உருவெடுத்தது. படைவீரர்கள் மானவர்களைத்தாக்கி அவர்களைக் கொள்ள முயன்றனர். நான் குளியலறைக்கு ஓடி சண்டை முடியும் வரை ஒளிந்திருந்து தப்பினேன்.

அப்போது என்னிடம் பணம் இல்லை. நான் பாடசாலை எதிலாவது சேர்ந்தால் தவிர எனக்கு ஆதரவு வழங்க எனது குடும்பத்தினர் மறுத்துவிட்டனர். நான் தொடர்ந்து விடுதியில் தங்க முடியாமல் போனதால் தங்குவதற்கு ஒரு புதிய இடம் தேடத்தொடங்கினேன். இதனிடையே நான் எனது வருங்காலத் தொழில் பற்றித் தீவிரமாகச் சிந்திக்கத்தொடங்கியிருந்தேன். நான் ஆசிரியத்தொழிலுக்கே அதிகம் பொருத்தமானவன் என்று தீர்மானித்துக்கொண்டேன். மீண்டும் நான் விளம்பரங்களை படித்துக்கொண்டிருந்தேன். ஹூனான் முறைமைப் பாடசாலையில் ஒரு கவர்ச்சிகரமான விளம்பரம் எனது கவனத்திற்கு வந்தது. அதன் வாய்ப்பு வளங்களைப் பற்றி ஆர்வத்துடன் படித்தேன். போதனைக்கான கட்டணம் இல்லை, மலிவான கட்டணத்தில் உணவும் தங்குமிடமும் வழங்கப்படும் என்று இருந்தது. எனது நண்பர்களில் இருவர் இதில் சேருமாறு என்னை வற்புறுத்தினர். நுழைவுத்தேர்வுகளுக்கான கட்டுரைகளை தயாரிப்பதில் அவர்கள் என் உதவியை நாடினர். எனது நோக்கத்தை எனது குடும்ப்பத்தினருக்கு எழுதி அவர்களின் சம்மதத்தையும் பெற்றேன். எனக்காகவும், எனது இரண்டு நண்பர்களுக்காகவும் நானே கட்டுரைகளை தயாரித்தேன். அனைவரும் பாடசாலையில் அனுமதிக்கப்பட்டோம். உண்மையில் சொல்லப்போனால் நான் மூன்றுமுறை அனுமதிக்கப்பட்டேன். எனது நண்பர்களுக்காக நான் கட்டுரை எழுதிய செயற்பாட்டை பிழியானது என்று நான் அப்போது கருதவில்லை. அது வேறும் நட்புறவோடு சம்பந்தப்பட்ட விடயம்.

இந்த முறைமைப் பாடசாலையில் நான் ஐந்து வருடங்கள் மாணவனாக இருந்தேன். பின்பு வெளியான விளம்பரங்களின் வேண்டுகோள்களை தவிர்த்துக்கொல்வதில் வெற்றி பெற்றேன். இறுதியாக நான் எனது பட்டத்தைப் பெற்றேன். ஹூனான் மாகாண முதலாவது முறைமை ஆசிரியர் பயிற்சி பாடசாலையில் நான் பயிலும்போது இடம்பெற்ற நிகழ்வுகள் பல. அத்தோடு இந்தக் காலகட்டத்தில் எனது அரசியல் கருத்துகள் உருப்பெறத் தொடங்கின. சமூக செயல்பாட்டில் பெறப்படும் முதல் அனுபவங்களையும் இங்கு நான் பெற்றுக்கொண்டேன்.

புதிய பாடசாலையில் பல சட்ட நடைமுறைகள் இருந்தன. அவற்றில் சிலவே எனக்கு ஏற்புடையதாக இருந்தது. இயற்கை அறிவியல் கற்கை நெறியை கட்டாயம் பயிலவேண்டும் என்பதை நான் எதிர்த்தேன். நான் சமூக அறிவியலை விசேட கற்கை நெறியாக கற்க விரும்பினேன். இயற்கை அறிவியல் எனக்கு விசேடமான ஆர்வத்தை தூண்டவில்லை. நான் அதைப் படிக்கவும் விரும்பவில்லை. இந்தக் கற்கைநெறியில் நான் குறைந்த மதிப்பெண்களே பெற்றேன்.உயிரினங்களின் தோற்றத்தை ஓவியமாக வரையும் கட்டாய கற்கை நெறியை நான் வெறுத்தேன், முட்டாள்தனமான கற்கைநெறியாக கருதினேன். வரைவதற்கு இலகுவான, எளிமையானவைகளைப் பற்றி சிந்தித்து அதை விரைவாக வரைந்துவிட்டு வகுப்பை விட்டு வெளியேறுவதையே வழக்கமாக கொண்டிருந்தேன். அறிவியல் கற்கைநெறியில் நான் பெற்ற அதி சிறப்பான மதிப்பெண்கள் ஏனைய பாடங்களில் நான் பெற்ற குறைவான மதிப்பெண்களை ஈடு செய்தன.

பெருந்தாடி யுவான் என்று மாணவர்களால் பட்டப்பெயர் சூட்டப்பட்டிருந்த ஒரு சீன ஆசிரியர் எனது படைப்புகளை ஒரு பத்திரிகையாளனின் படைப்பைப் போன்று இருப்பதாக கேலி செய்தார். நான் முன்மாதிரியாக கருதிய லியாங் சி சால்வை அவர் இகழ்ந்ததோடு அவரை ஒரு அரை அறிவிலி என்றும் கருதினார். நான் ஹான யூன் அவர்களின் படைப்புகளைப் படித்தேன்.  அத்தோடு பழைய இலக்கிய பாணியில் சொற்றொடர்களை எழுதும் முறையில் தேர்ச்சிபெற்றேன். இதன் விளைவாக இன்னும் கூட தேர்ச்சிபெற்ற இலக்கியபாணியிலான கட்டுரை ஒன்றை தேவை ஏற்பட்டால் என்னால் எழுத முடியும். இதற்கு நான் பெருந்தாடி யுவானுக்கு நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.

என்மீது மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய ஆசிரியர் இங்கிலாந்தில் கல்வி கற்றுத்திரும்பிய யாங் சாங் சி ஆவார்.இவருடைய வாழ்வோடு எனது வாழ்வு பிற்காலத்தில் வெகு நெருங்கிய உறவை கொண்டிருக்கப் போகிறது. அவர் நீதிநெறி பாடத்தை போதித்தார். அவர் ஒரு யதார்த்தவாதி, உயரிய நீதிநெறியாளர். அவர் தனது நீதி நீரிகளில் மிகுந்த பற்றுறுதி கொண்டிருந்தார். சமூகத்திற்கு பயன்படக்கூடிய நேர்மையான, நீதியான, நற்பன்பாடு உள்ள மனிதனாக வரவேண்டும் என்ற ஆசையை மாணவர்கள் மனதில் பதியவைக்க அவர் முயன்றார். அவரது செல்வாக்கின் கீழ் த்சை யுவான் பெய் மொழிபெயர்த்த ஒரு நீதிநூலை நான் படித்தேன். இதன் காரணமாக ஒரு கட்டுரை எழுத ஊக்கம் பெற்றேன். இதற்கு ‘எண்ணத்தின் சக்தி’ என்று தலைப்பிட்டேன். அப்போது நான் ஒரு கற்பனாவாதியாக இருந்தேன். எனது கட்டுரை பேராசிரியர் யாங் சாங் சி அவர்களால் அவரது கற்பனாவாத நோக்கின் அடிப்படையில் வெகுவாக பாராட்டப்பட்டது. அதற்கு அவர் 100 மதிப்பெண்கள் வழங்கினார்.

ராங் என்ற பெயருடைய ஒரு ஆசிரியர் எனக்கு மின்பாவோ சஞ்சிகையின் பழைய பிரதிகளை வழங்கினார். மிகுந்த ஆர்வத்தோடு அவற்றை நான் படித்தேன். இவற்றிலிருந்து ருங் பெங் ஹுய் அவர்களின் செயற்பாடுகளையும் நடவடிக்கைத் திட்டங்களையும் நான் அறிந்தேன். இரண்டு மாணவர்கள் சீனாவின் ஊடாகப் பயணம் மேற்கொண்டிருப்பதையும் அவர்கள் திபெத் எல்லையிலுள்ள தட்சியன்லூ என்ற இடத்தை அடைந்து விட்டததையும் பற்றி எழுதப்பட்டிருந்த கட்டுரை ஒன்றையும் நான் மின்பாவோ இதழில் நான் படித்தேன். இது எனக்கு மிகுந்த எழுச்சியூட்டியது. இவர்களது உதாரணத்தை பின்பற்ற விரும்பினேன். ஆனால் என்னிடம் பணம் இருக்கவில்லை. முதலில் நான் ஹூனானுக்கு பயணம் மேற்கொள்ள முயலவேண்டும் என்று எண்ணினேன்.

அடுத்த கோடை காலத்தின்போது நான் இந்த மாகாணத்தின் குறுக்காக கால்நடையாக எனது பயணத்தை தொடங்கினேன். ஐந்து மாவட்டங்களினூடாக நடந்து சென்றேன். சியாங் யூ என்ற மாணவரும் உடன் வந்தார். இந்த ஐந்து மாவட்டங்களினூடாகவும் ஒரு செப்புக்காசும் செலவு செய்யாமல் பயணம் செய்தோம். விவசாயிகள் எங்களுக்கு உணவும் உறங்க இடமும் தந்தார்கள். நாங்கள் சென்ற எல்லா இடங்களிளும் அன்புடன் வரவேற்கப்பட்டு உபசரிக்கப்பட்டோம். எனது பயண சகபாடியான சியாங் யூ பின்னாளில் யி பி சியின் கீழ் நாங்கிங்கில் ஒரு கோமிண்டாங் அதிகாரியாக வந்தார். அப்போது ஹூனான் முறைமைப் பாடசாலையில் தலைவராக இருந்த யி பி சி நாங்கிங்க்கில் பெரிய அதிகாரியாக வந்தார்.அவர் சியாங் யூவை பிகிங் அரச மாளிகை அருங்க்காட்சியத்தின் பாதுகாவலர் பதவிக்கு நியமித்தார். இந்த அருங்காட்சியகத்தின் பெறுமதிமிக்க அரும்பெரும் செல்வங்களை விற்றுவிட்டு அந்தப் பணத்துடன் 1934ம் ஆண்டில் தலைமறைவாகிவிட்டார்.

உணர்வுகளை வெளிப்படுத்தும் சுதந்திரமான மனோநிலையும் சில நெருங்கிய நண்பர்களுக்கான தேவையும் ஏற்பட்டதால் தாய்நாட்டுக்கான சேவையில் ஆர்வமுள்ள இளைஞர்களை என்னுடன் தொடர்பு கொள்ளும்படி சாங்கா பத்திரிகை ஒன்றில் ஒரு விளம்பரத்தை வெளியிட்டேன். உடலிலும் உள்ளத்திலும் உறுதிவாய்ந்த தாய்நாட்டுக்காக எவ்வித தியாகங்களையும் செய்யக்கூடிய இளைஞர்களே தேவை என்று அதில் விசேடமாக குறிப்பிட்டிருந்தேன். இதற்கு எனக்கு மூன்று முழுக் கடிதங்களும் ஒரு அரைக்கடிதமும் கிடைத்தன. ஒன்று லு சியாங் லவ் என்பவரிடமிருந்து வந்திருந்தது. இவர் பின்னாளில் கம்யூனிசத் கட்சியில் சேர்ந்து பின்பு அதை காட்டிக்கொடுக்க இருந்தார். ஏனைய இரண்டு கடிதங்கள் இரண்டு இளைஞர்களிடமிருந்து வந்திருந்தது. அவர்கள் பிற்பாடு தீவிர பிற்போக்குவாதிகளாக மாறினர். அந்த அரைக்கடிதம் ஈடுபாடு காட்டாத லிலிசான் என்ற இளைஞரிடமிருந்து வந்திருந்தது. நான் கூறிய அனைத்தையும் கேட்ட லி எவ்வித மறுமொழியும் கூறாமலேயே வெளியேறினார். அதன்பின் எங்கள் நட்பு வளரவில்லை. (லிலிசான் பின்பு சீனக் கம்யூனிசத் கட்சியின் லிலிசான் கோட்பாட்டு வழிக்கு பொறுப்பாக இருந்தார். இதை மாவோ கடுமையாக எதிர்த்தார்)

ஆனால் படிப்படியாக என்னைச்சுற்றி ஒரு மாணவர் குழுவை உண்டாக்கினேன். பின்பு ஒரு சங்கமாக (புதிய மக்கள் ஆய்வு சங்கம்) உருவெடுத்த ஒரு அணிக்கு இந்தக்குழு ஆணிவேராக அமைந்தது. இது பிற்காலத்தில் சீனாவின் பிரச்சனைகளிலும் அதன் விதியிலும் பரந்துபட்ட செல்வாக்கை கொண்டிருக்கப்போகிறது. இது ஒரு கடுமையான, தீவிரமான எண்ணங்களைக் கொண்ட மனிதர்களின் ஒரு சிறிய குழு. அவர்களுக்கு சில்லறை விடயங்களைப் பற்றியெல்லாம் விவாதிக்க நேரமிருக்கவில்லை. அவர்கள் கூறியவை, செய்தவை அனைத்திலும் ஒரு நோக்கம் கட்டாயம் இருக்கும். காதலிக்கவோ வேறு காரியங்களில் ஈடுபடவோ நேரம் இருக்கவில்லை. காலம் மிகவும் இக்கட்டாக இருப்பதையும், அறிவைப்பெறுவது அவசர காரியம் என்பதையும் அறிந்திருந்தனர். அவர்கள் பெண்களைப் பற்றியோ தனிப்பட்ட விடயங்களையோ நினைத்தும் பார்க்கவில்லை. நான் பெண்கள் விடயத்தில் அக்கறை கொள்ளவில்லை. எனது பெற்றோர் எனக்கு 14வயதாக இருக்கும்போது 20வயதுப் பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்திருந்தனர். ஆனால் அந்தப்பென்னோடு நான் ஒருபோதும் வாழவில்லை. அந்தப் பெண்ணை எனது மனைவியாக நான் கருதவில்லை. இந்த நேரத்தில் அந்தப் பெண்மீது நான் சிறிதும் அக்கறை கொள்ளவில்லை. இந்தக்காலகட்டத்து இளைஞர்களின் வாழ்வில் வழமையாக முக்கியப்பங்கு வகித்த பெண்களின் அழகுக் கவர்ச்சி பற்றி இரகசியமாக விவாதிப்பதைவிட, அன்றாட வாழ்க்கையின் சாதாரண விடயங்களை பற்றிக் கதைப்பதைக்கூட எனது சகபாடிகள் தவிர்த்திருந்தது நினைவில் உள்ளது. எனது நண்பர்களும் நானும் பெரிய விடயங்களைப் பற்றி கதைக்கவே விரும்பினோம். மனிதர்களின் இயல்புகள், பிரபஞ்சம், உலகம், சீன மக்கள் சமூகம் ஆகியவை பற்றியே கதைத்தோம்.

நாங்கள் தீவிரமாக உடற்பயிற்சி செய்பவர்களாகவும் மாறினோம். மாரிக்கால விடுமுறையின் போது நாங்கள் வயல்களினூடாக நடந்து திரிந்தோம், மலைகளில் ஏறி இறங்கினோம்,நகர சுற்று மதில்களில் ஏறினோம், ஆறுகள் நீரோடைகளை நீந்திக் கடந்தோம். மழை பெய்தால் எங்களது மேலாடைகளை களைந்து விட்டு மழையில் நனைந்தோம், இதை மழைக்குளிப்பு என்று அழைத்தோம். வெயில் எரிக்கும் போதும் எங்களின் மேலாடைகளை கழற்றிவிட்டு அதை வெப்பக்குளிப்பு என்று அழைத்தோம். வசந்தகாலக் காற்று வீசும் போது காற்றுக்குளிப்பு என்றும் புது விளையாட்டு என்றும் கத்துவோம். பனித்துளிகள் விழும்போது கூட வெளியிலேயே படுத்தோம். நவம்பர் மாதத்தில் கூட குளிர்ந்த ஆறுகளில் நீந்தினோம். உடற்பயிற்சி என்ற பெயரில் இவை அனைத்தும் நடந்தேறின. உடற்கட்டமைப்பை உறுதியாக்கிக்கொள்ள பெருமளவுக்கு இது உதவியது. பிற்காலத்தில் தென்சீனாவின் ஊடாக பல நடைபயணங்கள் மேற்கொள்ளவும், கியாங்ஸியிலிருந்து வடமேற்குப் பகுதிக்கு மேற்கொள்ளப்பட்ட நெடும் பயணத்தின் போதும் இவை எனக்கு மிகுந்த பயனுடையதாக இருக்கப்போகின்றன.

ஏனைய நகரங்களிலும் மாநகரங்களிலும் உள்ள பல மாகானங்கலோடும், நண்பர்களோடும் பரந்த அடிப்படையில் கடிதத்தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டேன். நன்கு நெருக்கமாக ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு நிறுவனத்தின் அவசியத்தை நான் படிப்படியாக உணரலாளேன். 1917ல் சீன நண்பர்களுடன் சேர்ந்து சின் மின் ஷூ ஹுய் அமைப்பை நிறுவ நான் உதவினேன். இதில் 70, 80 உறுப்பினர்கள் இருந்தனர். இவர்களில் பலரின் பெயர்கள் பிற்காலத்தில் சீனக் கம்யூனிச உலகிலும் சீனப்புரட்சியின் வரலாற்றிலும் புகழ் பெற்ற பெயர்களாக இருக்கப் போகின்றன. இந்த அமைப்பில் இருந்த நன்கு அறிமுகமான கம்யூனிஸ்டுகளில் லோமான் (லீ வெய் ஹான்)இவர் தற்போது கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்புக்குழுவில் உறுப்பினராக இருக்கிறார். ஸி யாசி தற்போது இரண்டாவது முன்னணி செம்படையில் இருக்கிறார். ஹோ ஷூ ஹெங் மத்திய சீன சோவியத் பிராந்தியத்தின் உச்சநீதி மன்றத்தின் நீதிபதியாக ஆனவர். பின்பு இவர் ஷியாங் காய் ஷேக்கால் 1935ல் கொல்லப்பட்டார். ஷியாங் ஹூ ஷாங் ஒரு எழுத்தாளராக சோவியத் ரஷ்யாவில் வாழ்கிறார்.த்சை ஹோ சென் கம்யூனிட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர், 1927ல் ஷியாங் காய் ஷேக்கால்  கொல்லப்பட்டார். யே லீ யுன் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினராக வந்தார், பின்பு கோமிண்டாங் கட்சிக்கு காட்டிக்கொடுத்தார், அதோடு முதலாளித்துவ தொழிற்சங்கத்தின் அமைப்பாளரானார். ஸி யாவோ சென் கம்யூனிஸ்ட் கட்சியை அமைப்பதற்கான மூல உடன்படிக்கையில் கையெழுத்திட்ட ஆறு பேர்களில் ஒருவர். சமீபத்தில் சுகவீனமுற்று இறந்தார். 1927ல் இடம்பெற்ற எதிர்புரட்சியில் சின் மின் ஷூ ஹுய் அமைப்பின் உறுப்பினர்களில் பெரும்பான்மையோர் கொல்லப்பட்டனர்.

சின் மின் ஷூ ஹுய் அமைப்பை ஒத்ததாக இதே காலத்தில் அமைக்கப்பட்ட மற்றொரு சங்கம் தான் சமூக நல வாழ்வு சங்கம் ஆகும். இது ஹூ பேயில் அமைக்கப்பட்டது. இதன் உருப்பினர்களிலும் பலர் பின்பு கம்யூனிஸ்டுகள் ஆக்கினார்கள். ஷியாங் காய் ஷேக்கின் எதிர்ப்புரட்சியின் போது கொலை செய்யப்பட்ட யுன் ராய் யிங்கும் இவர்களில் அடங்குவார். தற்போது செம்படை பல்கலைக் கழகத்தின் தலைவராக இருக்கும் லின பிய்யாவ்வும் இதன் உறுப்பினரே. தற்போது வெள்ளை துருப்புகளுக்கான (செம்படையினரால் கைது செய்யப்பட்ட துருப்புகள்) வேலைகளுக்கு பொறுப்பாக இருக்கும் சாங் ஹால்வும் இதன் உறுப்பினரே. ஹூசே என்று ஒரு அமைப்பு பீகிங்கில் இருந்தது. இந்த அமைப்பின் சில உறுப்பினர்களும்  பின்னாளில் கம்யூனிஸ்டுகள் ஆயினர். சீனாவின் வேறு இடங்களில் குறிப்பாக ஷாங்காய், ஷாங் செள, ஹான் கௌ ரியன்சிசின் சில தீவிரவாத இளைஞர்கள் தீவிரவாத அமைப்புகளை நிறுவினார்கள். ரியன்சிசினில் நிறுவப்பட்ட விழிப்புணர்வூட்டும் சங்கத்தில் ஸூ யென் லாய் நிருவன உறுப்பினர்களில் ஒருவர். ரெங் யிங் சாவோ (திருமதி ஸூ யென் லாய்) மாசுண் 1927ல் பீகிங்க்கில் மரணதண்டனைக்கு உள்ளானவர், சன் ஷியா சிங் ஆகியோரும் இதில் உறுப்பினராக இருந்தனர்.

பெரும்பாலான சங்கங்கள் சின் சிங் நியேன்(புதிய இளைஞர்) என்ற புகழ் பெற்ற இலக்கிய எழுச்சி சஞ்சிகையின் செல்வாக்கின் கீழ் உருவாக்கப்பட்டவை. இதன் ஆசிரியர் சென் ரூ சியு ஆவார். நான் முறைமைப் பாடசாலையின் மாணவனாக இருக்கும் போதே இந்த சஞ்சிகையை படிக்கத் தொடங்கியிருந்தேன். ஹூ சி, சென் ரூ சியு ஆகியோரின் படைப்புகளை நான் வியந்து போற்றினேன். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அவை எனது முன்மாதிரியாக இருந்தன. அவை நான் ஏற்கனவே கழித்து விட்டிருந்த லியாங் ஸி சாவ் காங் யூ வேய் ஆகியோரின் படைப்புகளை மாற்றீடு செய்தன.

இந்தக்காலகட்டத்தில் எனது சிந்தனை மிதவாதம் ஜனநாயக மறுமலர்ச்சி வாதம், சோசலிச வாதம் ஆகியவற்றின் ஆச்சரியமான கலப்பாக இருந்தது. 19ம் நூற்றாண்டு ஜனநாயகம், கற்பனைவாதம், பழைய பாணியிலான மிதவாதம் ஆகியவை மீது ஒரு தெளிவற்ற விருப்பம் இருந்தது. அத்தோடு நான் ரானுவமையப்படுத்தல் ஏகாதிபத்தியம் ஆகியவற்றிற்கு நிச்சயமாக எதிர்ப்பாளனாக இருந்தேன்.

இந் நூலின் முந்திய பகுதிகள்

பதிப்புரை

முகவுரை

மாவோவின் குழந்தைப் பருவம் ௧

மாவோவின் குழந்தைப் பருவம் ௨

ஷாங் ஷா வில் வாழ்ந்த நாட்கள் ௧

2 thoughts on “ஷாங் ஷா வில் வாழ்ந்த நாட்கள் ௨

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s