ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம் பகுதி ௭
மாவோ தனது கடந்த கால வரலாற்றை நினைவுபடுத்தும்போது, இதில் ஆர்வம காட்டிய மற்றொரு ஆய்வாளரும் அங்கு இருந்தார். மாவோவின் மனைவி ஹோ த்சு சென் தான் அவர். மாவோ தன்னைப்பற்றியும் கம்யூனிஸ்ட் இயக்கத்தைப் பற்றியும் கூறிய உண்மைகளை அவர் முன்பு ஒருபோதும் கேட்டதில்லை என்பது வெளிப்படையாகத்தெரிந்தது. பாவோ ஆண்னில் இருந்த மாவோவின் பல தோழர்களின் நிலையும் அதுதான். நான் ஏனைய கம்யூனிஸ்ட் தலைவர்களின் சுயவாழ்க்கைக் குறிப்புகளை எடுத்தபோது, அவர்களது தோழர்கள் உடனடியாக குழுமி நின்று, ஆர்வத்தோடு இந்த வரலாறுகளை முதற் தடவையாக கேட்டார்கள். வருடக்கணக்காக அவர்கள் ஒருங்கிணைந்த யுத்தத்தில் ஈடுபட்டிருந்தபோதும் அவர்கள் கம்யூனிஸ்டுகளாக மாறுவதற்கு முந்தைய நாட்களைப் பற்றிய விடயங்கள் பற்றி மற்றொருவருக்கும் சிறிதளவும் தெரியாது. அவர்கள் அந்தக் காலகட்டத்தை ஒரு இருண்ட காலமாக கருதினார்கள். ஒருவருடைய உண்மையான வாழ்க்கை ஒருவர் கம்யூனிஸ்டாக ஆகிய பின்புதான் தொடங்குகிறது என்பது அவர்கள் கருத்து.
இது மற்றுமொரு இரவு மாவோ கால்களை குறுக்காகப் போட்டுக்கொண்டு தனது கடிதப்பெட்டியின் முன்பாக இருந்தார். ஒரு மெழுகுதிரியின் ஒளியில் முதல் நாள் நான் வேலை முடித்த இடத்திலிருந்து கதையாடலை தொடங்கினார்.
ஷாங் ஷாவில் நான் முறைமைப் பாடசாலையில் படித்த வருடங்களில் மொத்தமாக 160 டாலர்கள் மட்டுமே செலவிட்டிருந்தேன். இதில் எனது பல்வேறு கல்லூரி பதிவுக்கட்டணங்களும் அடங்கும். இந்தத் தொகையில் மூன்றில் ஒரு பங்கை நான் செய்தித்தால்களுக்கு செலவிட்டிருப்பேன். ஏனென்றால் ஒழுங்குமுறையான சந்தாப்பணமாக மாதம் ஒரு டாலர் இதற்கு செலவாகிறது. அத்தோடு நான் அடிக்கடி புத்தகசாலைகளில் புத்தகங்களையும் சஞ்சிகைகளையும் வாங்கினேன். எனது அப்பா என்னை இதற்காக கண்டித்தார். காகிதத்திற்கு செலவழிக்கப்படும் வீணான பணம் என்று அவர் கூறுவார். ஆனால் நான் செய்தித்தாள் படிக்கும் வழக்கத்தை ஒரு பழக்கமாக்கிக் கொண்டேன். 1911ல் இருந்து 1927 வரை அதாவது நான் சிங் காங் ஷான் செல்லும் வரை ஹூனான், ஷாங்காய், பீக்கிங் செய்தி நாளிதழ்களை படிக்க நான் ஒருபோதும் தவறியதில்லை.
எனது பாடசாலை இறுதி வருடத்தின் போது எனது தாயார் காலமானார். முன்பு எப்போதைக்காட்டிலும் தற்போது வீடு திரும்பும் ஆர்வம் என்னில் குறைந்தது. பீக்கிங் செல்ல நான் முடிவு செய்தேன். ஹூனானில் பல மாணவர்கள் பிரான்சுக்கு செல்ல திட்டங்கள் தீட்டிக்கொண்டிருந்தார்கள். முதலாவது உலக யுத்தத்தில் தனக்கு சார்பான சீன இளைஞர்களை திரட்டுவதற்காக பிரான்ஸ் பயன்படுத்திய வேலை செய்து கொண்டே கல்வி பயிலும் திட்டத்தின் கீழ் கல்வி பயிலவே அவர்கள் பிரான்ஸ் செல்லவிருந்தார்கள். சீனாவை விட்டு வெளியேறுமுன்னர் அவர்கள் பீக்கிங்கில் பிரெஞ்சு மொழி பயிலத் திட்டமிட்டனர். இந்த இயக்கத்தை ஒழுங்குபடுத்த நான் உதவினேன். வெளிநாட்டுக்கு சென்ற இந்தக் குழுக்களில் ஹூனான் முறைமைப் பாடசாலை மாணவர்கள் பலர் இருந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பிற்காலத்தில் புகழ்பெற்ற தீவிரவாதிகள் ஆயினர். ஸூ டேலியும் இந்த இயக்கத்தால் கவரப்பட்டவரே. அவர் நாற்பது வயதை கடந்த பின்பு ஹூனான் முறைமைப் பாடசாலையில் தனது பேராசிரியர் பதவியை துறந்துவிட்டு பிரான்சுக்கு சென்றார். ஆயினும் 1927ம் ஆண்டுவரை இவர் ஒரு கம்யூனிஸ்டாக ஆகவில்லை.
ஹூனான் மாணவர்கள் சிலருடன் நான் பீக்கிங்கிற்குச் சென்றேன். இந்த இயக்கத்தை ஒழுங்கு செய்வதற்கு நான் உதவியிருந்த போதிலும், சின் மின் நு ஹுய் இயக்கத்தின் ஆதரவை இந்த இயக்கம் பெற்றிருந்த போதிலும் நான் ஐரோப்பா செல்ல விரும்பவில்லை. எனது நாட்டைப் பற்றியே நான் சரியாக அறிந்து கொண்டிருக்கவில்லை என்று நான் கருதினேன். அத்தோடு எனது வாழ்க்கையை பயனுள்ள முறையில் சீனாவில் கழிக்க முடியும் என்றும் கருதினேன்.பிரான்ஸ் செல்லவிருந்த அந்த மாணவர்கள் லீ ஷீத் செங் என்பவரிடம் பிரான்சு மொழி பயின்றார்கள். இவர் தற்போது சீன பிரஞ்சு பல்கலைக்கழகத்தின் தலைவராக இருக்கின்றார். நான் பிரஞ்சு மொழி பயிலவில்லை. என்னிடம் வேறு திட்டங்கள் இருந்தன.
என்னைப் பொருத்தவரை பீக்கிங்கில் வாழ்வது செலவு பிடிக்கக்கூடிய வாழ்க்கையாக இருந்தது. எனது நண்பர்களிடம் கடன்பட்டுத்தான் நான் தலைநகருக்கு வந்தேன். நான் உடனேயே வேலை ஒன்றில் சேர்வதற்கு முயற்சி செய்யலானேன். முறைமைப் பாடசாலையில் முன்பு எனது ஆசிரியராக இருந்த யாங் சிங் ஸி அப்போது பீக்கிங் தேசிய பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ஆகியிருந்தார். எனக்கு ஒரு வேலை பெற்றுத்தர உதவுமாறு அவரிடம் கோரினேன். பல்கலைக்கழகத்தின் நூலகப் பொறுப்பாளருக்கு அவர் என்னை அறிமுகம் செய்துவைத்தார். அவரது பெயர் லீ ரா சாவோ. அவர் பிற்காலத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபக உறுப்பினர், பின்பு அவர் சாங் த்சோ லின் (மஞ்சூரியாவில் ராணுவ சர்வாதிகாரியாக இருந்து 1928ல் ஜப்பானியரால் கொல்லப்பட்டவர்) என்பவரால் கொல்லப்பட்டார். லீ ரா சாவோ எனக்கு நூலக துணைப் பொறுப்பாளர் வேலையை தந்தார். எனக்கு சம்பளமாக ஒரு தாராளமான தொகையான மாதம் ஒன்றுக்கு எட்டு டாலர் தரப்பட்டது.
எனது பனி ஒரு சிறிய பணியாக இருந்ததால் மக்கள் என்னை சந்திப்பதை தவிர்த்தனர். செய்தித்தாள்கள் படிக்க வருவோரின் பெயர்களை எழுதுவது எனது பணிகளில் ஒன்றாக இருந்தது. ஆனால் அங்கு வந்த பல பேருக்கு நான் ஒரு மனிதனாகவே படவில்லை. அங்கு படிக்க வந்தோரிடையே மறுமலர்ச்சி இயக்கத்தின் புகழ்பெற்ற பல தலைவர்களின் பெயர்களை என்னால் அறியமுடிந்தது. புசு நியன், லோ சியா லூன் மற்றும் பலர் அவர்களில் அடங்கியிருந்தனர். இவர்களில் நான் ஆர்வமும் ஈடுபாடும் கொண்டேன். அவர்களுடன் அரசியல் கலாச்சார விடயங்களில் கலந்துரையாட முயன்றேன். ஆனால் அவர்கள் ஓய்வு ஒழிச்சலற்ற சுறுசுறுப்பான மனிதர்கள், தென்பகுதி உச்சரிப்பில் பேசுகின்ற ஒரு துணை நூலகரிடம் அளவளாவுவதற்கு அவர்களுக்கு நேரம் இருக்கவில்லை.
ஆனால் நான் நம்பிக்கை இழக்கவில்லை. தத்துவ இயல் சங்கத்தில் சேர்ந்தேன். பத்திரிக்கைத்துறை சங்கத்திலும் உறுப்பினரானேன். இதன் மூலம் பல்கலைக்கழக வகுப்புகளில் பங்குபெற வழி சமைத்தேன். பத்திரிக்கைத்துறை சங்கத்தில் சென் குங் போன்ற சக மாணவர்களை சந்தித்தேன். அவர் தற்போது நான்சிங்கில் ஒரு உயர் அதிகாரியாக உள்ளார். அத்தோடு ராங் பிங் ஷான், (இவர் பின்பு கம்யூனிஸ்ட் ஆகினார், அதற்கும் பின்பு மூன்றாவது கட்சி என்று அழைக்கப்பட்ட ஒரு கட்சியில் உறுப்பினரானார்) சாவ் பியாங் பிங் ஆகியோரையும் இங்கு சந்தித்தேன். இவர்களில் விசேடமாக சாவ் பியாங் பிங் எனக்கு மிகவும் உதவி புரிந்தார். இவர் பத்திரிகைத் துறை சங்கத்தில் விரிவுரையாளராக இருந்தார். அவர் ஒரு மிதவாதி, நல்ல பண்பாலருமாவார். அவர் 1926ல் சாங் த்சோ லின்னால் கொல்லப்பட்டார்.
நூல்நிலையத்தில் வேலை செய்யும்போது நான் சான் குவோ ராவோவைச் சந்தித்தேன். இவர் தற்போது சீன சோவியத் அரசின் உதவித்தலைவராக உள்ளார். காங் பெய் சென் (பின்பு கலிபோர்னியாவில் குக் குளூக்ஸ் கிளான் குழுவில் சேர்ந்தவர்) துவா ஸி பெங் (நாங்கிங்கில் கல்வி உதவி அமைச்சராக உள்ளார்) ஆகியோரையும் இங்கு தான் சந்தித்தேன். இங்கு தான் நான் யாங்காய் ஹுய் யை சந்தித்து அவள் மீது காதல் கொண்டேன். இவள் எனது முன்னால் நீதிசாஸ்திர ஆசிரியர் யாங் சாவ ஸி யின் மகள் ஆவார். இந்த ஆசிரியர் எனது இளமைக்காலத்தில் என்மீது ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார். பிற்காலத்தில் பீக்கிங்கில் எனது உண்மையான நண்பனாக இருந்தார்.
எனது அரசியல் ஆர்வம் அதிகரித்துக்கொண்டே வந்தது. எனது சிந்தனை மேலும் மேலும் தீவிரவாத உணர்வுகளைக் கொண்டதாக ஆகிவந்தது. இதற்கான பின்னணியை நான் உங்களிடம் கூறியுள்ளேன். ஆனால் தற்சமயம் நான் இன்னும் குழப்ப நிலையிலேயே இருந்தேன். நாங்கள் கூறுமாப் போல் ஒரு மார்க்கத்தை தேடிக்கொண்டிருந்தோம். அராஜகவாதம் பற்றிய சில துண்டுப் பிரசுரங்களை நான் படித்தேன். இது என்மீது மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. என்னிடம் அடிக்கடி வருகை தரும் சுசுன் பெய் என்ற மாணவனுடன் இது பற்றியும் இதுபோன்ற சித்தாந்தம் சீனாவில் உருவாகக் கூடிய சாத்தியக்கூறுகள் பற்றியும் ஆராய்ந்தோம். அந்த நேரத்தில் அந்தக் கோட்பாட்டின் பல முன்மொழிதல்களை நான் ஆதரித்தேன்.
பீக்கிங்கில் எனது ஜீவிய நிலைமை வெகுமோசமானதாக இருந்தது. அதற்கு மாறாக இந்த பழைய நகரின் அழகு எனக்கு விரிவான உயிரோட்டமுள்ள ஒரு மாற்றீடாக இருந்தது. அங்கு சான் யென் சிங் (மூன்று கண்கள் கிணறு) என்ற இடத்தில் நான் தங்கியிருந்தேன். அங்கு ஒரு சிறிய அரை அதில் ஏழு பேருடன் தங்கியிருந்தேன். சூட்டுப் படுக்கையில் எல்லோரும் ஏறிப்படுத்தால் எனக்கு மூச்சு விடக்கூட இடம் இருக்காது. நான் ஒரு பக்கம் திரும்பிப் படுக்கும் போது எனது இருமருங்கிலும் படுப்போரை நான் எச்சரித்து விட்டே படுப்பேன். ஆனால் பூங்காக்களிலும், பழைய அரச மாளிகை மைதானத்திலும் வடபகுதிக்கு சிறிது முந்தியே வந்துவிடும் வசந்த காலத்தை அனுபவித்தேன். பெய் ஹெய் (வடக்குக் கடல் முற்காலத்தில் வெளியார் நுழைய முடியாத நகரத்திலுள்ள செயற்கை ஏரிகள்) முழுமையாகப் பணியால் மூடப்பட்டிருக்கும் போதே வெள்ளை மலர்கள் பூத்துக்குலுங்குவதைக் கண்டேன். பெய் ஹெய் அருகே வில்லோ மரங்களில் பனிக்கட்டித்துகள்கள் தொங்கிக்கொண்டிருப்பதைக் கண்டேன். கவிஞன் ராங் சென் சாங் இந்தக் காட்சியை பெய் ஹெய்யின் வெள்ளி நகை அணிந்த மரங்களைப் பற்றி பத்தாயிரம் பீச் மரங்கள் பூத்துக் குலுங்குவது போல என்று வர்நித்ததை நினைவு கூர்ந்தேன். பீக்கிங் நகரின் எண்ணிலடங்கா மரங்கள் எனக்கு ஆச்சரியத்தையும் வியப்பையும் ஏற்படுத்தின.
1919ம் ஆண்டு முற்பகுதியில் பிரான்சுக்கு செல்லும் மாணவர்களுடன் ஷாங்காய்க்கு சென்றேன். ரியன்ட்ஸ் ரின் போவதற்கு மட்டுமே என்னிடம் பயணச்சீட்டு இருந்தது. அதற்கு அப்பால் போவதற்கு எனக்கு வழிவகை இருக்கவில்லை. சொர்க்கம் ஒரு பயணியை தாமதிக்க வைக்காது என்று ஒரு சீனப் பழமொழி சொல்லுவது போல பீக்கிங்கிலுள்ள ஒகச்டே கொம்டே பாடசாலையை சேர்ந்த ஒரு சக மாணவன் வழங்கிய பத்து யுவான் கடன் மூலம் பூகூ வரை செல்வதற்கு பயணச்சீட்டை என்னால் வாங்கமுடிந்தது. நாங்கிங் போகும் வழியில் சூ ழூ வில் இறங்கி கண்பூஷியசின் சமாதிக்கு சென்றேன். கண்பூஷியசின் சீடர்கள் கால்களைக் கழுவும் ஒரு சிறிய நீரோடையை பார்த்தேன். அவர் குழந்தையாக இருந்தபோது வாழ்ந்த சிறிய நகரத்தை பார்த்தேன். அவருக்கென்று அர்ப்பணிக்கப்பட்ட கோவிலுக்கு அருகே அவர் ஒரு மரத்தை நட்டதாக கூறப்படுக்கிறது, அந்த மரத்தையும் பார்த்தேன். கண்பூஷியசின் புகழ்பெற்ற சீடர்களில் ஒருவரான யென் ஹூள் வாழ்ந்த இடத்திலுள்ள ஒரு ஆறு அருகேயும் சென்றேன். ஷான் துங்கிலுள்ள புனித மலையாகிய ராய் ஷான் மலையில் ஏறினேன். இங்கு தான் ஜெனரல் பெங் யூ சியாங் ஓய்வு பெற்ற பிறகு தனது நாட்டுப்பற்று மிக்க ஓலைச்சுவடிகளை எழுதினர்.
இந் நூலின் முந்திய பகுதிகள்
2 thoughts on “புரட்சிக்கு முன்னோடி ௧”