உயிரைப் பறித்தாலும் நிலத்தைப் பறிக்க முடியாது

போஸ்கோ நிறுவனத்திற்கு எதிரான ஒரிசா மக்களின் போராட்டம் எஃகுறுதியுடன் முன்னேறுகிறது.

இந்தியாவின் மிகப்பெரிய அன்னிய முதலீட்டுத்திட்டமான தென்கொரியாவின் போஸ்கோ எஃகு ஆலைத்திட்டத்திற்கு எதிஎராக, போஸ்கோ பிரதிரோத் சங்கராம் சமிதி (பி பி எஸ் எஸ்) என்ற அமைப்பின் தலைமையில் ஒரிஸ்ஸாவின் ஜெகத்சிங்புர் மாவட்டத்தின் விவசாயிகள் கடந்த ஐந்தாண்டுகளாகப் போராடிவருகின்றனர். கடந்த ஜனவரி 26 முதலாக போஸ்கோ திட்டத்திற்கு எதிராக காலவரையற்ற தர்ணா போராட்டத்தை அவர்கள் நடத்தி வருகின்றனர்.

தென்கொரிய அதிபர் லீ மையூங் பாக் டெல்லியில் கடந்த ஜனவரி 26 அன்று நடந்த ‘குடியரசு’ தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அவர் வருகைக்கு முன்னதாக 3566 ஏக்கர் நிலங்கள் அரசால் கையகப்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. எஞ்சிய நிலங்களை விரைவில் கையகப்படுத்தி விரைவில் திட்டத்தை செயல்படுத்தப்போவதாகவும் அரசு அறிவித்துள்ளது. அதாவது 2006ஆம் ஆண்டில் கலிங்கா நகரில் போராடிய விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 14பேரை கொன்றதைப்போல, மிகக்கொடிய தாக்குதலை கட்டவிழ்த்துவிடத்  துடிக்கிறது.

ஏறத்தாள 52,000 கோடி ரூபாய் மதிப்புள்ள போஸ்கோ திட்டத்தினால் 30,000 க்கும் மேற்பட்ட விவசாயிகள் வாழ்விற்கும் பேரபாயம் ஏற்பட்டுள்ளது. ஒரிசாவின் உயர்தரமான இரும்புக்கனிமத்தில் 60 கோடி டன் அளவிற்கு அளிச்செல்வதோடு, ஆண்டுக்கு 12 கோடி டன் எஃகு உற்பத்தி செய்யும் உருக்காலையும் மின்நிலையமும் தனியார் துறைமுகமும் கொண்ட இத்திட்டம், கடந்த 2005ம் ஆண்டு ஜூன் 22ம் தேதி கையெழுத்திடப்பட்டது. இத்திட்டத்தால் 11 கிராமங்களிலுள்ள 5,000 குடும்பங்கள் ஏறத்தாள 30,000 பேர் வெளியேற்றப்படவுள்ளனர். இதுதவிர ஜடாதாரி ஆற்றையும் அது கடலில் கலக்கும் கழிமுகப்பகுதியையும் போஸ்கோ நிறுவனம் ஆக்கிரமிக்கப்போவதால் 52000 மீனவர்களின் எதிர்கால வாழ்வும் பறிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எஃகு உருக்காலை மற்றும் மின்னிலையத்திற்கு 4004 ஏக்கர் நிலம் தேவை. இதில் 3566 ஏக்கர் புறம்போக்கு மற்றும் காட்டுப்பகுதிகள் அரசால் இன்னிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளன. காட்டு நிலங்களையும் காட்டின் விளை பொருட்களையும் பயன்படுத்திவந்த மக்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். எஞ்சிய 438 ஏக்கர் நிலம் உள்ளூர் சிறு விவசாயிகளுடையது. இவற்றில் வெற்றிலை, முந்திரி சாகுபடியும் முக்கியமாக நெல் சாகுபடியும் செய்துவருகின்றனர். இந்த நிலங்களை பறிப்பதை எதிர்த்து விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்தை ஒடுக்க 25 பிளாட்டூன்  துணை ராணூவப்படைகள் குவிக்கப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியர் மூலம் கிராமப்பஞ்சாயத்துகளில் ஒப்புதல் பெறுவதற்கான கூட்டங்கள் நடத்தப்பட்ட போது, தங்கள் வாழ்வுறிமையை பறிக்கும் போஸ்கோ திட்டத்தை எதிர்த்து அனைத்து விவசாயிகளும் ஏகமனதாக தீர்மானம் நிறைவெற்றியுள்ளனர். ஆனால் அரசோ 15 நாட்களுக்குள் நிவாரணத்தொகையை பெற்றுக்கொள்ளாவிட்டால் பின்னர் எவ்வித நிவாரணமும் தரப்படமாட்டாது என்று கடந்த பிப்ரவரி முதல் நாளன்று அறிவித்து, நிலங்களை பறிக்க கிளம்பியுள்ளது. பாதிக்கப்படும் விவசாயிகளுக்கான மறுகுடியமர்த்தல் மற்றும் நிவாரணத்திட்டம் அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுதான் மிகச்சிறந்த நிவாரணத்திட்டம் என்கிறார் போஸ்கோ இந்தியா நிறுவனத்தின் பொது மேலாளரான மொகந்தி. ஆனாலும் இன்றுவரை எந்த விவசாயியும் நிவாரணத்தொகையை வாங்கவில்லை.

ஜெகத்சிங்புர் மாவட்டத்தின் பட்னா, கொவிந்புர், தின்கியா ஆகிய கிராமங்கள் போராட்டத்தின் முன்னணியில் நிற்கின்றன. விவசாயிகள் போஸ்கோ திட்டம் அமையவுள்ள 4004 ஏக்கர் நிலத்தை சுற்றிவளைத்து 17 இடங்களில் மட்டும் நுழைவு வாயில்களை அமைத்துள்ளனர். அவர்களின் அனுமதி இல்லாமல் அந்த மூங்கில் தடுப்பரண்களை திறக்கமுடியாது. அரசு அதிகாரிகளோ போஸ்கோ நிறுவனத்தினரோ இன்னமும் அந்தப் பகுதிக்குள் நுழைய முடியவில்லை. ஒவ்வொறு கிராமத்திலும் மூங்கில் வேலி போடப்பட்டு அன்னியர்கள் எவரும் நுழைய முடியாதபடி தடுத்துக்கண்காணித்து வருகின்றனர்.

ஏற்கனவே பாரதீப் துறைமுகப்பகுதியில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் இதேபோல விளை நிலங்களைப் பறித்துக்கொண்டு மறுவாழ்வு நிவாரணத்திட்டங்களை அறிவித்தது. அதை அன்று விவசாயிகள் நம்பினர். “அந்த இடத்தை இன்று யார் வெண்டுமானாலும் சென்று பார்க்கட்டும். வெறும் காங்கிரீட் தூண்கள் தான் நிற்கின்றன. அதற்கு மேல் நிவாரணத்திட்டம் நகரவேயில்லை அரசாங்கமே எங்களை வஞ்சித்து விட்ட நிலையில், அன்னியத் தனியார் ஏகபோக நிறுவனமான போஸ்கோ, நிவாரணத் திட்டத்தை நிறைவேற்றும் என்று நம்புவதற்கு நாங்கள் முட்டாள்கள் இல்லை” என்கிறார் தின்கியா கிராமப் பஞ்சாயத்து தலைவரான சிசிரா மகாபத்ரா.

நருசிங்க பெஹரா மற்றும் தேவேந்திர வாய்ன் ஆகியோர் “போஸ்கோவிற்கு மக்களின் எதிர்ப்பு” எனும் ஏழு நிமிடக் காணொளியை தயாரித்து, அதை நாட்டு மக்கள் அனைவரும் காணுமாறும், விவசாயிகளின் நியாயமான இப்போராட்டத்தை ஆதரிக்குமாறும் கோரியுள்ளனர்.

போஸ்கோவை எதிர்த்து வலது கம்யூனிஸ்டு கட்சி உட்பட பல்வேறு அமைப்புகள் விவசாயிகளோடு இணைந்து போராடி வருகின்றன.  தர்ணா போராட்டம் நடத்தியவர்கள் மீது போஸ்கோ நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள குண்டர் படையினர் தாக்குதல் நடத்தியதோடு, குண்டுகளையும் வீசியுள்ளனர். இதில் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தவிர போலீஸ் பலமுறை தடியடித்தாக்குதல் நடத்தி இப்போராட்டத்தை நசுக்க முயற்சிக்கிறது. இத்துணை அடக்குமுறைகளையும் எதிர்கொண்டு ஒரிசா மக்களை போஸ்கோ எதிர்ப்புப் போராட்டம்  பற்றிப்படர்ந்து வருகிறது.

ஒரிசா மக்களின் போஸ்கோ எதிர்ப்புப் போராட்டத்தை ஆதரிப்பதும், அதை மறு காலணியாக்கத்திற்கு எதிரான போராட்டமாக வளர்த்தெடுப்பதும் புரட்சிகர ஜனனாயக சக்திகளின் உடனடிக்கடமை; நம் கடமை.


புதிய ஜனநாயகம் மார்ச் 2010 இதழிலிருந்து.

One thought on “உயிரைப் பறித்தாலும் நிலத்தைப் பறிக்க முடியாது

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s