நேபாளம்: வீழ்த்தும் வரை வீழ்வதில்லை



தலைநகர் காட்மாண்டில் நடக்கும் மேதினப் பேரணியை அடுத்து மே 2 முதல் தொடர் கடையடைப்பு வேலைநிறுத்தப் போராட்டங்கள் நடைபெறவிருக்கின்றன. இந்தியச் சதிகளினால் கவிழ்க்கப்பட்ட மாவோயிஸ்டுகள் சோசலிசத்தை நோக்கி தமது நகர்வை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார்கள். புதிய ஜனநாயகம் ஜனவரி 2010 இதழில் வெளிவந்த இந்தக் கட்டுரை அவர்களை வாழ்த்தும் முகமாக மீள்பதிக்கப்படுகிறது.

தோழர்களுக்கு எனது மேதின வாழ்த்துக்கள்.


நேபாளம்: கிளர்ந்தெழும் மக்கள்திரள் போராட்டங்கள் கந்தலாகி வரும் இந்திய அரசின் சதிகள்!


சுயாட்சிப் பிரதேசங்களை அறிவித்து, நேபாள பொம்மையாட்சியை முடக்கியுள்ளனர் மாவோயிஸ்டுகள்


அண்டை நாடான நேபாளம், கடந்த மூன்று மாதங்களாக மக்கள்திரள் போராட்டங்களால் குலுங்குகிறது. “அந்நிய எஜமானர்களிடம் சரணடையாதே! தேசிய ஜனநாயக நேபாள மக்கள் கூட்டுத்துவ குடியரசு வாழ்க!” என்ற முழக்கங்களுடன், மாவோயிஸ்டுகள் தலைமையில் வீதியெங்கும் மக்கள் நடத்திவரும் ஆர்ப்பாட்டங்கள், தீவட்டி ஊர்வலங்கள், மறியல் போராட்டங்களால் அந்நாடே அதிர்கிறது. இந்திய மேலாதிக்கமும் அதன் சதிகளும் நேபாளம் எங்கும் காறி உமிழப்படுகிறது.

நேபாளத்தின் புதிய இராணுவத் தலைமைத் தளபதி சத்ரமான் சிங் குருங், கடந்த டிசம்பர் மாதத்தில் டெல்லிக்கு வந்து இந்திய இராணுவத் தலைமைத் தளபதி தீபக் கபூரையும் அரசுத் தலைவர் பிரதீபா பட்டீலையும் சந்தித்திருக்கிறார். அரசுமுறை மரியாதை நிமித்தம் இந்தச் சந்திப்பு நடந்ததாகக் கூறப்பட்டாலும், மாவோயிஸ்டுகள் மீது இராணுவத் தாக்குதல் நடத்துவதற்கான திட்டம் பற்றி விவாதிக்கவே அவர் வந்திருக்கிறார்.

2006ஆம் ஆண்டு போடப்பட்ட அமைதி ஒப்பந்தப்படி, மாவோயிஸ்டுகளின் இராணுவப் படை நேபாள இராணுவத்துடன் இணைக்கப்பட்டு, புதிய நேபாள இராணுவம் கட்டியமைக்கப்பட வேண்டும். ஆனால், இந்தியத் தலைமைத் தளபதியோ, அவ்வாறு மாவோயிஸ்டு இராணுவப் படைகள் நேபாள இராணுவப்படைகளுடன் இணைக்கப்படக்கூடாது என்று நேபாள இராணுவத் தளபதியைச் சந்தித்தபோது வெளிப்படையாகக் கூறியிருக்கிறார். பசுபதிநாதர் கோயில் தலைமைப் பூசாரி விவகாரம் போலவே, நேபாள நாட்டின் உள்விவகாரங்களில் அப்பட்டமாகத் தலையிடும் மேலாதிக்கம்தான் இது.

மன்னராட்சிக்கு எதிராக நடந்த மக்கள் எழுச்சியை ஒடுக்கிய, மன்னர் உள்ளிட்ட குற்றவாளிகளைப் பற்றிய விசாரணை நடத்த, மன்னராட்சி வீழ்ந்த பிறகு ரயாமஜ்ஹி கமிசன் நிறுவப்பட்ட போதிலும், தற்போதைய நேபாள கூட்டணி பொம்மை அரசு அந்த அறிக்கையை இன்றுவரை வெளியிடாமல் மறைத்துள்ளது. மேலும், தோரான்ஜங் பகதூர் சிங் என்ற இரண்டாம் நிலையிலுள்ள தளபதிக்குப் பதவி உயர்வு அளித்துள்ளது. காத்மண்டு நகரில் இயங்கிவரும் ஐ.நா. கண்காணிப்புக் குழுவும் பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் இம் முடிவை ரத்து செய்யுமாறு கோரியுள்ள போதிலும், விதிமுறைகளை மீறி அவரைத் தலைமைத் தளபதியாக்க நேபாள அரசு தீர்மானித்துள்ளது. இப்படி, அடுத்தடுத்து நேபாள பொம்மை அரசு அமைதி ஒப்பந்தத்துக்கு எதிராகவும், இந்திய அமெரிக்க மேலாதிக்கத் தலையீட்டுக்கு விசுவாசமாகவும் செயல்பட்டு வருகிறது.

ஈழ விடுதலைப் போரை அழித்தொழிக்க இந்தியா எப்படிச் செயல்பட்டதோ, அதைவிட மூர்க்கமாகவும் வெளிப்படையாகவும் நேபாளப் புரட்சியை அழித்தொழிக்கக் கிளம்பியுள்ளது. ஈழப் போர் போலவே, இந்தியாவின் ஆதரவுடன் நேபாள இராணுவம் மாவோயிஸ்டு அழிப்புப் போரைத் தொடுக்கலாம் என்ற அபாயம் நிலவுகிறது. இந்நிலையில், அத்தகைய போர்த்தாக்குதல் நடத்தப்பட்டால், அதை எதிர்கொண்டு முறியடிக்கவும், எவ்வித அந்நியத் தலையீடுமின்றி நேபாள மக்களின் கூட்டுக் குடியரசைக் கட்டியமைக்கவும் மாவோயிஸ்டுகள் தயாராகி வருகிறார்கள்.

நேபாளத்தில் நெவர், மகர், தரு, மைதிலி, தமாங் முதலான மொழிச் சிறுபான்மையினரின் உரிமைகள் புறக்கணிக்கப்பட்டு, நேபாள மொழியின் மேலாதிக்கம் தான் நிலவுகிறது. இந்தியாவிலிருந்து வந்து குடியேறிய நேபாள மொழி பேசும் பார்ப்பனர்களும் சத்திரியர்களும் அரசியலிலும் பொருளாதாரத்திலும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மாவோயிஸ்டுகள் முன்வைக்கும் கூட்டுத்துவக் குடியரசு என்பது தேசிய இனங்களுக்கு சுயநிர்ணய உரிமையும், சிறுபான்மை இனத்தவருக்கு சுயாட்சி உரிமையும், எவ்வித அந்நியத் தலையீடுமற்ற சுதந்திரமும் சுயாதிபத்திய உரிமையும் கொண்ட குடியரசாகும். இதனடிப்படையில், ஏற்கெனவே 9 மாவட்டங்களில் இணையான அரசை நடத்திவரும் மாவோயிஸ்டுகள், கடந்த நவம்பர் 25 தொடங்கி டிசம்பர் 18க்குள் 13 சுயாட்சிப் பிரதேசங்களை அடுத்தடுத்து அறிவித்துள்ளனர்.
கடந்த டிசம்பர் 16ஆம் தேதியன்று 5000 க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் செங்கொடி ஏந்தி முழக்கமிட்டபடியே வந்து, நாடாளுமன்றக் கட்டடமான தர்பார் அரங்கத்தை முற்றுகையிட்டு காத்மண்டு பள்ளத்தாக்கைத் தனி சுயாட்சிப் பிராந்தியமாக அறிவித்தனர். நேவா சுயாட்சி அரசு என்று அதைக் குறிப்பிட்டு, துப்பாக்கி வேட்டுகள் முழங்க, இந்த அறிவிப்பை மாவோயிஸ்டு கட்சித் தலைவர் தோழர் பிரசந்தா பிரகடனப்படுத்தியுள்ளார். கடந்த டிசம்பர் 20ஆம் தேதியன்று நடந்த மாபெரும் பேரணிக்குப் பின் நடந்த பொதுக்கூட்டத்தில், “”நேபாள காங்கிரசுக் கட்சியுடன் பேசிப் பார்த்தேன்; பலனில்லை. ஆளும் போலி கம்யூனிஸ்டு கட்சியான ஐக்கிய நேபாளப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்டுலெனினிஸ்டு)உடன் பேசிப் பார்த்தேன்; பலனில்லை. இனி அவர்களின் எஜமானர்களான டெல்லியுடன் பேசலாம் என்று கருதுகிறேன்” என்று பெருத்த ஆரவாரத்துக்கிடையே, இந்திய மேலாதிக்கவாதிகளை அம்பலப்படுத்திக் கிண்டலாகக் குறிப்பிட்டார், தோழர் பிரசந்தா. ஏற்கெனவே மூன்று கட்டங்களாக நடந்த போராட்டம், வருமாண்டு ஜனவரி 24 முதலாக நாடு தழுவிய காலவரையற்ற பொது வேலைநிறுத்தப் போராட்டமாகத் தொடரும் என்று மாவோயிஸ்டுகள் அறிவித்துள்ளனர்.

ரஷ்யாவில் 1905 ஆம் ஆண்டில் நடந்த புரட்சியை ஒத்த நிலைமைதான் இன்று நேபாளத்தில் நிலவுகிறது. நேபாள மக்கள் தற்போதைய அரசின் அதிகாரிகளைப் பொருட்படுத்தவில்லை; சட்டத்தைப் பொருட்படுத்தவில்லை; சட்டங்களையும் அதிகாரத்தையும் மக்கள் போராட்டம் மீறுகிறது. சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்படாத செயல்கள் மூலம் புதியதோர் ஏற்பாட்டை, கண்ணெதிரே காணும் உண்மையாக உருவாக்குகிறது. புதிய புரட்சிகர அதிகாரத்தின் மூலம் தங்களைத் தாங்களே ஆண்டுகொள்ளும் ஏற்பாட்டை செய்துகொள்ளுமாறு, அது மக்களின் முன்முயற்சியைக் கட்டவிழ்த்து விடுகிறது. ரஷ்யாவில் எவ்வாறு தொழிலாளர் விவசாயிகளின் சோவியத்துகள் உருவாகியதோ, அதைப்போல மக்கள்திரள் அரசியல் வேலைநிறுத்தங்கள் மூலம், புதிய மக்கள் சோவியத்துகளைக் கட்டியமைக்கும் திசையில் நேபாளம் முன்னேறுகிறது.

இந்தியஅமெரிக்கத் தலையீட்டையும் மேலாதிக்கத்தையும் வீழ்த்த, நேபாள மக்களையும் உலகெங்குமுள்ள புரட்சிகரஜனநாயக சக்திகளை மட்டுமே மாவோயிஸ்டுகள் நம்புகிறார்கள். ஆயுதமேந்திய சாகசச் செயல்கள் மூலமோ அல்லது சந்தர்ப்பவாத பேரங்கள் மூலமோ இதைச் சாதிக்க முடியாது என்பதையும் அவர்கள் நன்கறிந்துள்ளார்கள். விடுதலைப் புலிகளைப் போல, இந்திய ஓட்டுக்கட்சிகளிடம் உறவு கொண்டு, இந்திய அரசை நைச்சியமாகத் தமக்கு ஆதரவாக நிற்குமாறு அவர்கள் பேரங்களை நடத்திக் கொண்டிருக்கவில்லை. அல்லது காங்கிரசு ஆட்சிக்குப் பதிலாக, பா.ஜ.க.வும் ஜெயலலிதாவும் ஆட்சிக்கு வந்தால் தமக்குச் சாதகமாக அமையும் என்று கருதவுமில்லை.

நாடு தழுவிய மக்கள்திரள் அரசியல் போராட்டங்கள் எனும் செயல்தந்திர உத்தியின் வழியாக, மக்களை அரசியல்படுத்துவதன் மூலம், அவர்களின் முன்முயற்சியைக் கட்டவிழ்த்துவிட்டு, மக்கள் தமது செõந்த அரசைக் கீழிருந்து கட்டியமைக்கவும் பாதுகாக்கவும் அவர்கள் போராடி வருகிறார்கள். மேலிருந்து அதிகாரத்தைச் செலுத்திப் புரட்சியைத் தொடருவதற்கான வாய்ப்புகள் கிடைத்தபோது அதைப் பயன்படுத்திக் கொண்ட மாவோயிஸ்டுகள், இப்போது அந்த வாய்ப்பு பறிக்கப்பட்ட நிலையில், கீழிருந்து மக்கள்திரள் போராட்டங்கள் மூலம் புரட்சியைத் தொடர்கிறார்கள்.

One thought on “நேபாளம்: வீழ்த்தும் வரை வீழ்வதில்லை

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s