ஒரு மாணவனின் தோல்வி


இன்னும் சில நாட்களில் +2 தேர்வுமுடிவுகள்வெளிவரவிருக்கின்றன. தேர்வை எழுதிய அனைவரும் ஒருவித பதைப்புடன் காத்திருக்கின்றனர்.  இந்தப் பதைப்பு மாணவப் பருவத்திற்கேயான இயல்பா? அப்படித்தான் தோன்றுகிறது. வினவு தளத்தில் வெளிவந்த கட்டுரையை படித்தபோது அந்தபதைப்பான அனுபவத்தை மீண்டும் ஒருமுறை பருகிப் பார்க்கத்தூண்டியது.

நான் நன்றாக படித்த மாணவன்தான். எட்டாவது படிக்கும்வரை முதல் மூன்று இடங்களுக்கு மூவருக்குள் போட்டிநடக்கும்.  நான்,  ராமச்சந்திரன்,  அசோகன்.  இதில் அதிக முறை அசோகன் முதலிடத்திலும்,  நான் இரண்டாமிடத்திலும்,  ராமச்சந்திரன் மூன்றாமிடத்திலும் வருவதுவழக்கம் என்றாலும் எங்களிடையே ஓரிரு மதிப்பெண்கள் தான் வித்தியாசம் இருக்கும்.  பெரும்பாலான நேரத்தில் ஆங்கிலத்தை தவிர்த்து விட்டுப் பார்த்தால் நானே முதல்மாணவனாக இருப்பேன். ஆங்கிலத்தில் எனக்கு கிடைத்த மதிப்பெண்களில் நன்றாக படிக்கும் மாணவன் என்ற ஆசிரியரின் பிம்பத்தின் விளைவுகளின் பங்களிப்பு அதிகமிருக்கும் என்றேநான் எண்ணுகிறேன்.  ஆங்கில எழுத்துகளைப் பார்த்தாலே கண்கள் இருள்வது போலிருக்கும். வடமாநில பாடகர்கள் தமிழில்பாடும்போது அவர்கள் மொழியிலேயே எழுதிவைத்துக்கொண்டு பாடுவார்கள் என்று செவியுற்றிருக்கிறேன். ஆனால் இதை என்னுடைய சிறுவயதில் எந்தமுன்அனுபவமுமின்றி செயல்படுத்தினேன்.  ஸ்கேலின் பின்புறம் அ – A;  ப – B  என்று எழுதிவைத்திருப்பேன். தமிழில் எழுதிவைத்து படித்துவிட்டு ஸ்கேலைப்பார்த்து ஆங்கிலத்திற்கு மாற்றுவேன், நான் தப்பும் தவறுமாக எழுதுவதையெல்லாம் ஆசிரியர்கள் நல்ல மாணவன் எனும் அடிப்படையிலேயே மன்னித்தனர். எட்டாம் வகுப்பு முடித்து கோடைவிடுமுறை நாட்களில் தான் ஸ்கேலின் துணையில்லாமல் எழுதுவதற்கு படித்தேன்.

எட்டாம் வகுப்பு வரை அரசு உதவி பெறும் மேனேஜ்மென்ட் பள்ளியில் படித்த நான் ஒன்பதாம் வகுப்பிற்கு அரசு பள்ளிக்கு மாறினேன்.  அங்கும் இதேநிலைதான், மற்ற அனைத்துப் பாடங்களிலும் சிறப்பாக இருக்கும் நான் ஆங்கிலத்தில் மட்டும் ஏன் என்னால் முடியவில்லை என்பதற்கான காரணம் கடைசிவரை எனக்கு புரியவில்லை. ஒருவித தாழ்வுமனப்பான்மைதான் அதற்கு காரணமாக இருந்திருக்கும் என நான் கருதுகிறேன்.  அறிவியல் பாடத்தில் ஆசிரியர் கேள்விக்கு விடைதெரியாமல் அனைவரும் எழுந்து நிற்க நான் விடைசொல்லி கைவலிக்க கர்வத்துடன் அனைவரையும் கொட்டியது பசுமையாய் இருக்கிறது,  ஆனால் ஆங்கிலம் என்றால் ஆமையை போல் ஓட்டிற்குள் சுருங்கிக்கொள்வேன்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வும் வந்தது. தேர்வு எழுதும் முன்பே எனக்கு முடிவு தெரிந்து விட்டது. நான் தேர்ச்சி பெற முடியாது, ஏனென்றால் ஆங்கிலத்தில் ஒரு வாக்கியத்தை  பார்த்து எழுத வேண்டும் என்றாலே எனக்கு ஐந்து நிமிடத்திற்கு மேல் ஆகும். அதுவும் பாராமல் எழுதி இதுவரை எனக்கு அறிமுகமில்லாத யாரோ ஒரு ஆசிரியரால் திருத்தப்பட்டு நான் தேர்ச்சி பெறவேண்டும் என்றால் அது குதிரைக்கொம்பாகத்தான் இருக்கும் என்பது எனக்கு தெளிவாகிவிட்டது. எனக்கு இன்னொரு பிரச்சனையும் இருந்தது. என்னையும் சேர்த்து நாங்கள் ஏழுபேர் பொதுத் தேர்வை எழுதவிருந்தோம். தெருவிலிருக்கும் பெருசுகள் “இரண்டு பாஸ், ஒன்று ஊசலாட்டம், நான்கு பெயில்” என்று முடிவுகட்டியிருந்தார்கள். ‘இரண்டு பாஸில்’ முதலாம்வன் நான். வெளியில் தேர்வை தைரியமாக எதிர்கொள்ளவிருப்பவன் போல் காட்டிக்கொண்டாலும், உள்ளூர நடுங்கிக்கொண்டிருந்தேன். என்னுடைய உம்மா (அம்மா) வேறு பார்ப்பவர்களிடமெல்லாம் “எம்புள்ள பாஸாகலன்னா வேறு யார் பாஸாவா?” என்று அளந்து கொண்டிருந்தது.

தேர்வு என்பதை இவ்வளவு எதிர்கொள்ளமுடியாத பயங்கொள்ளும்படியான ஒன்றாக மாற்றியிருப்பதில் நுகர்வுக்கலாச்சாரத்திற்கும், உலகமயத்திற்கும் பெரும் பங்கிருக்கிறது. எதிர்காலம் கடலில் தத்தளிப்பது என்றால் கல்வி ஒரு மரப்பலகையை தரும் என்பதுதான் பொதுவான நம்பிக்கையாக இருக்கிறது. வேறு எதைச் செய்தாலும் அது வாழ்வை கடக்க உதவுவதில்லை. படிப்பது ஒன்று தான் வழி, அதுவும் அதிகமான மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெருவது தான் நல்ல கல்லூரிக்கு செல்ல உதவும். நல்ல கல்லூரிப்படிப்பு தான் நல்ல வேலைக்கு உதவும், நல்ல வேலைதான் வாழ்க்கைக்கு உதவும். இவைகளுக்கெல்லாம் முதல் படி பொதுத்தேர்வுதான். இதில் தேர்ச்சி பெறுவது மட்டுமே நேரானது, தவறிவிட்டால் கோணலாகிவிடும், அதுவே முழுவதையும் கோணலாக்கிவிடும். இந்த எண்ணம் ஒரு புறமென்றால், மறுபுறம் இந்த எண்ணங்களை மாணவர்களுக்குள் திணிப்பதற்க்காக கூறப்படும் அறிவுரைகள். நடப்பு வாழ்வை விட்டு அன்னியமாய் இருக்கும் பாடங்களை விட மாணவர்களை அதிகம் மிரட்டுவது இந்த அறிவுரைகள் தான். தொட்டாலே உடைந்துவிடும் கண்ணாடிக்குடுவையை கையிலேந்திக்கொண்டு பனிப்பாறையை கடக்கும் அனுபவமாக பொதுத்தேர்வை இந்த அறிவுரைகள் மாற்றிவிடுகின்றன. எப்படி தேர்ச்சி பெறுவது என்பதை விட, எப்படி தவறிவிடாமலிருப்பது என்பதே முக்கியமானதாகி விடுகிறது. நானும் அந்த எண்ணத்துடனே உறங்கினேன்.

இதிலிருந்து மீள்வதற்கு நான் இருவரிடம் யோசனைகள் கேட்டேன். ஒன்று எட்டாம் வகுப்பில் எனக்கு ஆசிரியராக இருந்து, எனக்கு அனேக உதவிகள் செய்த ஆசிரியர் நாகூர் மீறான். ஸ்கேலின் பின்புறம் ஆங்கில உச்சரிப்பை எழுதிவைத்துக்கொள்ளும் யோசனையை கூறியது இவர் தான். அடுத்தது என் பெத்தம்மா (அம்மாவின் அம்மா – பாட்டி). பெத்தம்மா எனக்காக பொட்டல்புதூர் முஹைதீன் ஆண்டவரிடம் சேவல் நேமிதம் செய்வதாக வேண்டிக்கொண்டது. நான் வழக்கம்போல ஜென்னி எஸ்ஸேவை தமிழில் எழுதிவைத்துக்கொண்டு மனப்பாடம் செய்ய ஆரம்பித்தேன். இது நாகூர் மீறான் ஆசிரியர் சொல்லியது, “ஜென்னி ஒரு முக்கியமான பாடம், கடந்த வருடம் ஜென்னி பாடத்திலிருந்து கேள்விகளோ, எஸ்ஸேவோ கேட்க்கப்படவில்லை எனவே இந்த வருடம் ஜென்னி எஸ்ஸே கண்டிப்பாக கேட்பார்கள், பதினைந்து மார்க் உறுதி” எனக்கு கொஞ்சம் தைரியம் வந்தது போல் தெரிந்தது.

பிட் அடிக்கும் யோசனை எனக்குள் எழவே இல்லை. அதெல்லாம் தைரியமானவர்கள் செய்வது. ஏற்கனவே நான் நோஞ்சான் போலிருப்பேன். அந்த நேரத்தில் எனக்கு இடப்பட்டிருந்த பட்டப்பெயரே ‘பயந்தாரி’ என்பது தான். ஆங்கிலம் முதல் தாள்  கேள்வித்தாளை வாங்கி கண்ணை மூடி இரண்டு நிமிடம் பிரார்த்தனை செய்தேன், “யா அல்லா நான் படித்திருந்த பத்துக்கேள்விகளில் நான்காவது வந்திருக்கவேண்டும், கண்டிப்பாக ஜென்னி எஸ்ஸே கேட்டிருக்கவேண்டும்” மெதுவாக கண்களை கேள்வித்தாளில் விரித்தேன். கண்கள் இருண்டன. தோல்வியின் அவமானம் கண்ணீராய் திரண்டு கண்களில் கொதித்தது. நான் படித்திருந்த பத்துக்கேள்விகளில் ஒன்று கூட கேட்கப்பட்டிருக்கவில்லை, புரட்டிப் புரட்டிப் பார்த்தும் ஜென்னி எஸ்ஸேவை காணவில்லை. அரை மணி நேரம் அப்படியே உட்கார்ந்திருந்தேன். கண்காணிப்பாளராக வந்திருந்த ஆசிரியர் கூர்மையாக என்னையே பார்த்தார். எனக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை , ஜென்னி எஸ்ஸேவையும் பத்துக்கேள்விகளையும் எழுத ஆரம்பித்தேன். நேரம் கடந்து கொண்டிருந்தது. தேர்வை எழுதுவதற்குத்தான் படிக்கவில்லை, எதிரிலிருக்கும் மங்களசுந்தரி திரையரங்கில் படமாவது பார்ப்போம் என்று தீர்க்கமாக முடிவு எடுக்கத்தெரிந்திருந்த சிலர் விடைத்தாளைக் கொடுத்துவிட்டு வெளியேறியிருந்தனர். நானோ தெரிந்ததை எழுதிவிட்டு பேந்தப் பேந்த விழித்துக்கொண்டிருந்தேன். நன்றாக பந்து போல் கசக்கப்பட்ட ஒரு தாள் திடீரென் என் மடியில் விழுந்தது, உலாவிக்கொண்டிருந்த கண்காணிப்பாளர் லேசாக தலையசைத்துவிட்டுச்சென்றார். எனக்கு மயக்கம் வருவது போலிருந்தது. அன்று கேட்கப்பட்டிருந்த ஒரு எஸ்ஸேயும் இரண்டு கேள்விகளும் அதில் இருந்தன. கைகள் நடுங்க ஆரம்பித்தன. எனக்குள் இருந்த அத்தனை உத்வேகத்தையும் திரட்டிக்கொண்டு எழுத ஆரம்பித்தேன். எழுதி முடிப்பதற்கும் நேரம் முடிவதற்கும் சரியாக இருந்தது. வழியில் என்னென்ன நடந்தது, எப்படி வீட்டுக்கு வந்தேன் என்றே தெரியாது, ஆனால் வீட்டுக்கு வந்தபின், அடடா அந்த ஆசிரியருக்கு ஒரு நன்றியாவது கூறியிருக்கலாமே என்று தோன்றியது. அதன் பின் அந்த ஆசிரியரை சந்திக்கவே இல்லை, அவர் யாரென்றும் தெரியாது. ஆங்கிலம் இரண்டாம் தாள் குறித்து முன்னாள் மாணவர்கள் ஏற்கனவே எங்களிடம் உதவி செய்யப்படும் என்று தெரிவித்திருந்தனர். அதுபோலவே வெளியிலிருந்து நிரப்புதல் பொருத்துதல் தெரிவு செய்தல் போன்ற பகுதிகளுக்கான விடைகளை இலக்கவடிவில் வெளியிலிருந்து கத்திச்சொன்னனர். ஆங்கிலம் தவிர்த்த ஏனைய பாடங்களில் நான் எந்தக்கேள்வியையும் விட்டுவைக்கவில்லை, அவைகளில் நான் புலி.

நான் தேர்ச்சி பெற்றுவிடுவேன் என்பதில் யாருக்கும் ஐயமில்லை, என்னைத்தவிர. ஆங்கிலம் முதல் தாளில் எஸ்ஸேவுக்கு 15 மதிப்பெண்களும் கேள்விகளுக்கு 4 வீதம் 8 மதிப்பெண்களும் ஆக முழுமையாய் அப்படியே கிடைத்தாலும் 23 மதிப்பெண்கள், இரண்டாம் தாளிலும் அதிகபட்சம் ஒரு 25 மதிப்பெண்கள் ஆக ஆங்கிலப்பாடத்தில் நான் தேர்ச்சி பெறமுடியாது என்பது உறுதி. எனக்கு இருந்த கவலையெல்லாம் எனக்கு இருக்கும் நல்ல பெயரை நன்றாக படிப்பவன் நல்ல மாணவன் என்று தெருவில் இருக்கும் பெயரை எப்படி காப்பது? முடிவு வந்தபின் எனக்கான மதிப்பு எப்படி இருக்கும்? என்ன செய்வது? என்பவைகள் தான் என் மனதை அரித்துக்கொண்டிருந்தது. இதற்கிடையில் என் உம்மாவுக்கும், மாமாவுக்கும் (அம்மாவின் தம்பி) ஒரு நீண்ட விவாதமே நடந்து கொண்டிருந்தது, மாமா என்னை தொடர்ந்து ஊரிலேயே +1 ல் சேர்க்கலாம் என்றும், உம்மாவோ வெளியூரில் பாலிடெக்னிக்கில் சேர்க்கலாம் என்றும் நிலைப்பட்டிருந்தார்கள். ஆனால் இருவருமே நான் தவறிவிடக்கூடும் என்பதை ஒரு யூகமாகக் கூட கொண்டிருக்கவில்லை. முடிவில் வெளிநாட்டிலிருக்கும் வாப்பாவிடம் (அப்பா) கேட்கலாம் என முடிவு செய்து கடிதம் எழுதப்பட்டது. வாப்பாவும் பாலிடெக்னிக்கை உறுதிசெய்தது. முடிவு வெளியாகும் நாளும் வந்தது, அதுவரை போலியாக அலட்டிக்கொள்ளாதவன் போல் முகத்தை அணிந்துகொண்டிருந்த நான் அன்று காலையிலிருந்தே பிய்ந்து போனவன் போலானேன். எல்லா நாளிலும் காலை நாளிதழ்களுக்கு இருக்கும் மவுசு இதுபோன்ற நாட்களில் மாலை முரசு போன்ற மாலை நாளிதழ்களுக்கு இருக்கும். நான் மதியம் சாப்பிட்டுவிட்டு மக்தூம் ஞானியார் பள்ளிவாசலின் உள்ளே போய் படுத்துக்கொண்டேன். கண்களிலிருந்து நான் தடுக்க நினைத்தும் முடியாமல் வழிந்தது கண்ணீர். யாரும் கண்டு கொள்ளக்கூடாதே என்று கைக்குட்டையால் முகத்தை மூடிக்கொண்டு பாய்க்குச்சிகள் கன்னத்தில் பதியுமளவிற்கு ஒடுங்கிக்கொண்டேன். “ஏல, உங்கும்மா அங்க எல்லாருக்கும் முட்டாய் கொடுத்திட்டிருக்கு நீ என்னல இங்க வந்து படுத்துக்கெடக்கே” என்று ஒரு குரல். எங்கு என்ன தவறு நடந்து நான் பாஸானேன் என்று எனக்கு தெரியாது, ஆனால் தவறு நடந்திருக்கிறது என்பது மட்டும் உறுதி.

அன்று நான் தேர்ச்சிபெற்றுவிட்டேன் என்பதைவிட தெருவில் எனக்கிருந்த பெயர் காக்கப்பட்டது என்பதில் தான் அன்றைய என் மகிழ்வு அடங்கியிருந்தது. முடிவுகள் வெளியாகும் நாள் வரை எனக்குள் நான் குமைந்து கொண்டிருந்தேன். இரட்டை வேடம் போன்றதொரு வேதனையில் நான் சிக்கியிருந்ததன் காரணியை நினைத்தால், இன்றளவிலும் எனக்கு அது புதிராகத்தான் தெரிகிறது. தமிழில் உள்ள எல்லாப் பாடங்களும் எனக்கு சுலமாக இருக்க ஆங்கிலம் மட்டும் எனக்கு சிரமமாய் போனதெப்படி? அல்லது ஆங்கிலத்தின் மீது வெறுப்போ, பயமோ கொள்ளுமளவுக்கு ஆரம்ப வயதுகளில் என்னில் ஏதேனும் பாதிப்பு நேர்ந்திருக்குமா? அப்படி ஒன்றும் நிகழ்ததாய் நினைவில்லை. இன்றும் ஆங்கிலம் என்றால் மனதளவில் ஒரு ஒதுக்கம் வந்துவிடுகிறது.

மதிப்பெண் பட்டியல் வந்தபோது 372 மதிப்பெண்கள் பெற்று நான் பள்ளியிலேயே ஐந்தாவது ஆளாக தேர்ச்சிபெற்றிருந்தேன். ஆங்கிலம் தவிர்த்த ஏனைய பாடங்களில் 80க்கு மேலும் ஆங்கிலத்தில் 40ம் பெற்றிருந்தேன். ஆங்கிலத்தில் 40 மதிப்பெண்கள் எப்படி கிடைத்தது என்ற கேள்வியை ஒதுக்கிவைத்துவிட்டு அடுத்தடுத்த வேலைகள் நடந்தேறின. நெல்லை சங்கர் நகர், கோவில்பட்டி நாலாட்டின் புதூர், கீழக்கரை ஆகிய மூன்று பாலிடெக்னிக்களுக்கு விண்ணப்பங்கள் அனுப்பியதில் கீழக்கரையிலிருந்து மட்டும் அழைப்பு வந்தது. புதிய ஊர், புதிய சூழல் புதிய நண்பர்கள் உவகையாய்த்தான் இருந்தன. பாடங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் இருக்கும் என்பதுதான் இடியாய் இறங்கியது தலையில்.

நானா ஆங்கிலமா ஒரு கை பார்த்துவிடுவது என்ற முடிவோடுதான் கிளம்பினேன். ஆனால் ஆங்கிலம் என்னை பதம் பார்த்தது. தமிழில் சந்தேகம் கேட்டால் ஆசிரியர்கள் ஆங்கிலத்தில் கேள் என்றார்கள். வேறு வழியின்றி தமிழ் நோட்ஸ்கள் வாங்கினேன். மூன்று மாதத்திற்குப் பிறகு நடந்த முதல் டெஸ்ட்டில் தமிழில் எழுதினேன். ஆனால் ஆங்கிலப்பாடத்தை எப்படி தமிழில் எழுதுவது? முடிந்தவரை எழுதினேன். முடியாத இடத்தில் திரைப்பட பாடலை எழுதிவைத்தேன். என்னுடைய தாள்களை திருத்தாமல் கொண்டு வந்து வகுப்பில் அனைவரின் முன்னிலையிலும் கிழித்து என் முகத்தில் வீசி எரிந்தார், அவமானத்தில் எறிந்து போனேன் நான். படிப்பை தொடர விருப்பமில்லை என்பதை ஒரு வழியாய் வீட்டில் சொன்னேன், உம்மா அழுதது. உறவினர்கள் சுற்றம் என அனைத்தும் எனக்கு அறிவுரை கூறினார்கள். யாருமே உனக்கு என்ன பிரச்சனை என்று கேட்கவில்லை. முதல் வருட முடிவில் மொத்தம் பத்து பாடங்களில் செய்முறைத்தேர்வையும், பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி தவிர மற்ற அனைத்திலும் தவறினேன். மற்ற பிரிவுகளைவிட சுலபமாக இருக்கும் என்பதால் சிவில் கேட்டிருந்தேன். ஆனால் எலக்ட்ரிகல் தந்தார்கள். மூன்றாவது செமஸ்டரிலும் தோல்விகள் தொடர்ந்தன. அரியர்கள் கூடின. நான்காவது ஐந்தாவது செமஸ்டர்களிலும் தோல்விகள் தொடர்ந்தன.  யாரிடமும் ஆலோசனை கேட்காமல் இனி படிப்பதில்லை எனும் முடிவோடு ஊர் திரும்பினேன். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளுக்கு பிறகு எது நடக்கக்கூடாது என்று பயந்தேனோ, அதை வேறு வழியின்றி எதிர்கொண்டேன். யாரிடமும் பேசவில்லை. நான்கு வருடம் கழித்து ஊர் வந்த வாப்பா வந்ததும் “என் மூஞ்சியில காரித் துப்பிட்டியடா” என்றது.

பாடங்கள் தமிழில் இருந்திருந்தால் நான் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றிருப்பேன் என்று என்னால் உறுதியாகச் சொல்லமுடியும். ஆங்கிலம் ஏன் கைவரவில்லை என்று எனக்கு இன்றும் விடை கிடைக்கவில்லை. ஆனால் ஆங்கிலத்தில் படிப்பது தான் அறிவா? ஒரு மொழிக்கும் அறிவுக்கும் தொடர்பிருக்க முடியுமா? ஆங்கிலம் என்பது காலனியாதிக்கத்தின் மிச்சம் எனும் தெளிவு இன்று இருக்கிறது. ஒரு மொழி எனும் அடிப்படையில் தாய் மொழிக்கும் நாம் கற்கும் பிற மொழிகளுக்கும் வித்தியாசம் இருக்கிறது. தாய் மொழி என்பது அடிப்படை, அதைக்கொண்டுதான் நாம் பிற மொழிகளை கற்க முடியும். ஆனால் ஆங்கிலக்கல்வி என்பது தாய்மொழியின் இடத்தை நெட்டித்தள்ளிவிட்டு அந்த இடத்தில் ஆங்கிலத்தை அமரவைக்கும் முயற்சியாக இருக்கிறது. உடலியல் ரீதியிலேயே இது தவறானதாகும். ஒருவன் தாய்மொழியின் மூலம் தான் சிந்திக்க முடியும். தாய்மொழியை விட பிறிதொரு மொழி சரளமாகவும் அதிகமாகவும் தெரிந்தாலும் கூட சிந்திப்பது எனும் செயல் தாய் மொழியில் தான் நடக்கும். ஏனென்றால் ஒருவனின் தாய் மொழி மூளையின் ஒரு இடத்திலும் அவன் அறியும் பிற மொழிகள் எத்தனையானாலும் அவை வேறொரு இடத்திலும் தான் பதிவாகின்றன. தாய் மொழி (அதாவது ஒரு குழந்தை முதன் முதலில் கற்கும் மொழி) பதியும் இடத்தில்தான் அடிப்படையான செயல்கள், நீச்சல், சைக்கிள் போன்றவற்றை ஓட்டுவது போன்றவை பதிகின்றன. எவ்வளவு காலம் நீங்கள் அதைச்செய்யாமல் இருந்தாலும் அவை உங்களுக்கு மறப்பதில்லை. எனவே தாய் மொழியும் கற்கும் மொழிகளும் வேறானவை.

நாம் கற்கும் கல்வி பயன்படத்தக்க முறையில் இருக்கிறதா என்றால் கேள்விக்குறிதான். டையோடுகளையும் வால்வுகளையும் படித்து வெளிவந்தால் உலகம் ட்ரான்ஸ்மீட்டரில் சுறுங்கிக்கொண்டிருக்கிறது. பாஸ்கல் படிக்கையில் உலகம் விண்டோஸுக்குள் நுழைந்துவிட்டது. இன்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் புராஜக்ட் ஒர்க்காக டிஸ்டில்ட் வாட்டர் தரும் கருவியை செய்துகொண்டிருக்கிறார்கள் என்று செவியுற்றேன். புதிதாக எதையாவது செய்து பார்க்க ஆசைப்படும் மாணவர்களை கூட ஹெச் ஓ டி க்கள் அனுமதிப்பதில்லை. எந்தத்துறையில் பயின்றார்களோ அதே துறையில் வேலையில் சேர்பவர்கள் கூட சரளமாக வேலையை துவங்கமுடியாதபடி படிப்புக்கும் நடப்புக்கும் வித்தியாசம் இருக்கிறது. இப்படி மாற்றப்படாத பழங்கதைகளை வைத்துக்கொண்டுதான் கல்வி என்பது கைவிளக்கு என்று விளம்பிக்கொண்டிருக்கிறோம். அறிவும், புத்திசாலித்தனமும், சமயோசிதமும் கல்வியனால் வாய்க்கப்பெறுபவையல்ல. கல்வி என்பதைப் பற்றி எப்படி வேண்டுமானாலும் நாம் புரிந்துவைத்திருக்கலாம். ஆனால் கல்வி என்பதன் உள்ளார்த்தம் அரசியலோடு தொடர்புடையது.

வேலைக்குச் செல்ல உதவும் கருவிதான் கல்வி என்றால்; நாம் பெறும் இயந்திரங்களை இயக்கும் அறிவுதான் கல்வி என்றால்; ஒரு நிறுவனத்தை நடத்திச்செல்லும் நிர்வாகவியல் தான் கல்வி என்றால் அதன் கடைப்பயன் நமக்கல்ல. அது ஒரு நிறுவனத்தை சொந்தமாக கொண்டிருக்கும், இயந்திரங்களை சொந்தமாக கொண்டிருக்கும் முதலாளிக்குத்தான் அந்தக்கடைப்பயன் செல்கிறது. வேலை செய்வதற்குத்தான் நமக்கு கூலி தரப்படுகிறது எனும் போது, வேலைக்கான நுட்பத்தை நமக்கு நிறுவனத்தை நடத்தும் முதலாளியல்லவா தரவேண்டும். வேலை செய்வதற்கான திறனை நாமே வளர்த்துக்கொள்ள வேண்டுமென்றால் அனைவருக்கும் வேலைக்கான உத்திரவாதம் தரப்படவேண்டுமல்லவா? ஆக கல்வி என்பது ஒரு முதலாளி தனக்கு தேவையான திறனை மக்களை அவர்களின் சொந்தச் செலவில் பெறச்செய்வது தான். இதை எப்படி நாம் அறிவாக கொள்ளமுடியும்?

கல்வி ஒரு செல்வம் எனவே அதை திருடும் செயலைப்போன்ற காப்பியடித்தல் குற்றம் எனப்படுகிறது. படிப்பதற்கும் காப்பியடிப்பதற்கும் வித்தியாசம் ஒன்றுமில்லை. நடப்பு உலகோடு பொருத்தமானதாக இல்லை என்பது ஒருபுறமிருக்க, தொடக்கத்தில் நாம் கற்கும் அடிப்படைக்கல்வி யாருக்கும் பின்னர் பயன் தருவது இல்லை. துறை சார்ந்து கற்கும் கல்விதான் பயன்படத்தக்கதாய் இருக்கிறது எனும் போது மனப்பாடம் செய்யும் பயிற்சியாகத்தான் தேர்வு முறைகள் பயனளிக்கின்றன. தேர்வுக்குப் பின் மறந்து விடும் மனப்பாடத்தை தான் தேர்வுகள் சோதிக்கின்றன. நூலில் இருக்கும் பாடத்தை ஒருவன் மனதில் இருத்திக்கொண்டு எழுதுகிறானா இல்லை தாளில் இருத்திக்கொண்டு எழுதுகிறானா என்று பார்ப்பது தான் தேர்வா? இரண்டும் வெவ்வேறு ஊடகங்கள் என்பதை தவிர என்ன வித்தியாசம்? மனதில் எழுதிக்கொண்டுவந்து எழுதினால் அது நல்லமுறை, அதையே தாளில் எழுதிக்கொண்டுவந்து எழுதினால் குற்றம் என்பது பொருத்தமாக இல்லையே. அதைவிட பார்த்து எழுதுவதை ஊக்குவிக்கலாம். தற்போது தேர்வுகளில் இரண்டரை மணி நேரம் கொடுக்கப்படுகிறது. இதை நேரத்தைகுறைத்து பார்த்து எழுத அனுமதித்தால் குற்றம் என்பதான காப்பியடிப்பது ஒழியும், பறக்கும் படை போன்ற கண்காணிப்புகள் தேவைப்படாது. அதே நேரம் மாணவர்கள் படித்துத்தான் தீரவேண்டும் ஏனென்றால் நேரம் குறைவாக இருப்பதால் எந்தக்கேள்வி எந்தப்பாடத்தோடு தொடர்புடையது? அது நூலின் எந்தப்பக்கத்தில் இருக்கும் என்பனபோன்ற விபரங்களை படிக்கவில்லை என்றால் அறிந்து கொள்வதற்கு நேரமெடுக்கும் என்பதால் முழுமையாக எழுத முடியாமல் போகும், வேகமாக எழுதும் நிர்ப்பந்தம் இருப்பதால் கையெழுத்திற்கென்று மதிப்பெண்களை ஒதுக்கலாம். ஆக பாராமல் எழுதும் தற்போதைய தேர்வு முறையை விட, பார்த்து எழுதும் தேர்வுமுறை சிறந்த பயனை அளிக்கும் என கருதுகிறேன். இது என்னுடைய கருத்து, உங்களுடைய கருத்தைக்கூறுவதன் மூலம் இதை வளர்த்தெடுத்துச் செல்லலாம்.

7 thoughts on “ஒரு மாணவனின் தோல்வி

 1. தோழர் செங்கொடி,

  தாய்மொழியில் படிக்க முடியாதபடி தனது பள்ளி வாழ்க்கையைத் தொலைக்க நேரிட்ட அனுபவம் மிகவும் பயங்கரமானது. அந்த வலியை படிப்பவர் மனதிலும் ஏற்படுத்தியிருக்கிறீர்கள். நன்றி

 2. //பாஸ்கல் படிக்கையில் உலகம் விண்டடீஸுக்குள் நுழைந்துவிட்டது. இன்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் புராஜக்ட் ஒர்க்காக டிஸ்டில்ட் வாட்டர் தரும் கருவியை செய்துகொண்டிருக்கிறார்கள் என்று செவியுற்றேன்//

  பத்தாண்டுகளுக்கு முன் நாங்கள் ப்ராஜக்ட் ஒர்க்காக 10 Band equalizer செய்தோம். அப்போதே அது பத்து வருடங்களுக்கும் முந்தைய
  தொழில்நுட்பம் என்று நினைக்கிறேன். அதையும் கூட தானே செய்யாமல் ப்ராஜக்ட் ஒர்க்கை காசு கொடுத்து வெளியில் தான் செய்து
  வாங்கினோம். ரெக்கார்டு நோட்டும் கூட ஐந்தாண்டுகளுக்கு முன் இதே ப்ராஜக்ட்டை செய்த சீனியர் மானவர்களின் ரெகார்டு நோட்டை
  காப்பி அடித்தது தான். நாங்கள் மட்டுமல்ல எங்கள் செட்டில் எல்லோரும் இது போல் தொத்தை ப்ராஜக்ட்டு தான் செய்திருந்தார்கள்.

  //வேலைக்குச் செல்ல உதவும் கருவிதான் கல்வி என்றால்; நாம் பெறும் இயந்திரங்களை இயக்கும் அறிவுதான் கல்வி என்றால்; ஒரு நிறுவனத்தை நடத்திச்செல்லும் நிர்வாகவியல் தான் கல்வி என்றால் அதன் கடைப்பயன் நமக்கல்ல. அது ஒரு நிறுவனத்தை சொந்தமாக கொண்டிருக்கும், இயந்திரங்களை சொந்தமாக கொண்டிருக்கும் முதலாளிக்குத்தான் அந்தக்கடைப்பயன் செல்கிறது//

  மிக அருமையான விளக்கம்..!

 3. //அதே நேரம் மாணவர்கள் படித்துத்தான் தீரவேண்டும் ஏனென்றால் நேரம் குறைவாக இருப்பதால் எந்தக்கேள்வி எந்தப்பாடத்தோடு தொடர்புடையது? அது நூலின் எந்தப்பக்கத்தில் இருக்கும் என்பனபோன்ற விபரங்களை படிக்கவில்லை என்றால் அறிந்து கொள்வதற்கு நேரமெடுக்கும் என்பதால் முழுமையாக எழுத முடியாமல் போகும், வேகமாக எழுதும் நிர்ப்பந்தம் இருப்பதால் கையெழுத்திற்கென்று மதிப்பெண்களை ஒதுக்கலாம். ஆக பாராமல் எழுதும் தற்போதைய தேர்வு முறையை விட, பார்த்து எழுதும் தேர்வுமுறை சிறந்த பயனை அளிக்கும் என கருதுகிறேன். இது என்னுடைய கருத்து, உங்களுடைய கருத்தைக்கூறுவதன் மூலம் இதை வளர்த்தெடுத்துச் செல்லலாம்.//

  மிகச் சரி. நானும் இதை ஆதரிக்கிறேன்

 4. ///படுத்துக்கொண்டேன். கண்களிலிருந்து நான் தடுக்க நினைத்தும் முடியாமல் வழிந்தது கண்ணீர். யாரும் கண்டு கொள்ளக்கூடாதே என்று கைக்குட்டையால் முகத்தை மூடிக்கொண்டு பாய்க்குச்சிகள் கன்னத்தில் பதியுமளவிற்கு ஒடுங்கிக்கொண்டேன். “ஏல, உங்கும்மா அங்க எல்லாருக்கும் முட்டாய் கொடுத்திட்டிருக்கு நீ என்னல இங்க வந்து படுத்துக்கெடக்கே” என்று ஒரு குரல்// இதை படித்த போது கண்கள் கலங்கிவிட்டன அழுது விட்டேன் ஏன் இவ்வளவு உணர்ச்சிவசப்பட்ட ஆளாக இருக்கிறாய் என்று என்னை நானே திட்டிகொண்டேன் அருமையான ஆழமான பதிவு

 5. ஏறத்தாழ உங்கள் கதைதான் என்னுடையதும் …12 ம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்று பின் ,தனியார் பொறியியல் கல்லூரியில் சேர்ந்தேன் . முதல் செமஸ்டர் கொஞ்சம் கஷ்டப்பட்டு பின் தேறினேன்..
  தமிழ் மீது தீராக் காதல் கொண்ட நான் , என் தந்தை கட்டாய படுத்தியதால் கணினி மென்பொருள் பொறியாளன் ஆனேன் . [காரணம் , ? நீங்கள் எழுதிய அதே கதைதான் .. “எதிர்காலம் கடலில் தத்தளிப்பது என்றால் கல்வி ஒரு மரப்பலகையை தரும் என்பதுதான் பொதுவான நம்பிக்கையாக இருக்கிறது. “.. ]

  உங்கள் கருத்துகள் அனைத்தையும் வழிமொழிகிறேன், ஒன்றை தவிர.. “மனதில் எழுதிக்கொண்டுவந்து எழுதினால் அது நல்லமுறை, அதையே தாளில் எழுதிக்கொண்டுவந்து எழுதினால் குற்றம் என்பது பொருத்தமாக இல்லையே. அதைவிட பார்த்து எழுதுவதை ஊக்குவிக்கலாம். ”

  இந்த முறைக்கு எதுக்கு பள்ளி? இந்த முறைக்கு மாற்றாக , செய்முறை கல்வியை செயல்படுத்த வேண்டுமே தவிர, பார்த்து எழுதுவதை ஊக்குவிப்பது மோசமான யோசனை ,!!!

 6. தோழர் செங்கொடி,
  அருமையான பதிவு. என்னுடைய வாழ்வின் பள்ளி அனுபவங்கள் கூட உங்களோடு சில ஒத்துப்போகின்றன. நானும் கலகம் ஆரம்பித்ததிலிருந்து எனது பள்ளி அனுபவங்களை எழுத நினைத்து வருகின்றேன் . ஆனால் முடியவில்லை. எனது பள்ளி அனுபவங்களின் வகுப்புக்கள் கிட்டதட்ட த்ரில்லிங்காக துயரமாக இருக்கும். என் வாழ்வில் பள்ளியை மறக்க முடியாததாக மாற்றிய அந்த வாத்தியாரை சில கேள்விகள் கேட்டுவிட்டுதான் பதிவெழுத வேண்டுமென நினைத்திருந்தேன். அவர் ரிட்டையர்டு ஆகி எஸ்கேப்பாகிவிட்டார். உங்கள் பதிவு மிகச்சிறப்பு

  தோழமையுடன்
  கலகம்

 7. மிக அருமையான ஆழமான கட்டுரை.சில இடங்கள் கண்களில் நீரை வருவித்தன.பாழாய் போன நம் கல்வி முறையின் மேல் கோபமாய் வந்தது.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s