இராணுவச்செலவு அதிகரிப்பு: நாட்டு மக்களைப் பாதுகாக்கவா?

இந்தியாவின் வெறிபிடித்த ஆயுதக்குவிப்பின் பின்னே, அதன் பிராந்திய மேலாதிக்க நோக்கங்கள் மறைந்துள்ளன.

அமெரிக்காவின் அடியாள் வேலைக்கு பிராந்திய மேலாதிக்க வல்லரசான இந்திய அரசு உருவாக்கியுள்ள அதிநவீன போர்க்கப்பல் ஐ.என்.எஸ். ஷிவாலிக்

நிதியமைச்சர் அண்மையில் சமர்ப்பித்த பட்ஜெட்டில், இந்திய ராணுவத்திற்காக ஒதுக்கப்படும் தொகை ரூ.1,47,344 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டை ஒப்பிடும்போது, இது 8.13 சதவீதம் அதிகம். “பாதுகாப்பான எல்லைகள், பதுகாப்பான வாழ்க்கை என்பதுதான் வளர்ச்சியை துரிதப்படுத்தும். எனவே தான் இராணுவச்செலவு அதிகரிக்கப்பட்டுள்ளது” என்று இப்பூதாகரச் செலவை நியாயப்படுத்துகிறார், நிதியமைச்சர்.

அனைத்து தெற்காசிய நாடுகளின் இராணுவச்செலவுகளை விட, பல மடங்கு அதிகமாக இந்திய அரசு தனது இராணுவத்திற்கு வாரியிறைக்கிறது. ஏற்கனவே 2009 ஆம் ஆண்டில் இந்தியாவின் இராணுவச்செலவு 28.2 சதவீதம் அதிகரிக்கப்பட்டது. இப்போது மேலும் அதிகரிப்பு. இதே வேகத்தில் போனால் இன்னும் பத்தாண்டுகளில் இந்தியாவின் இராணுவச் செலவுகள் ரூ.10,00,000 கோடியாக அதிகரிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர்.

ஆயுத விற்பனையை நோக்கமாகக் கொண்டு பயணம் அமைக்கப்படவில்லை என்று அமெரிக்க இராணூவ அதிகாரிகள் தெரிவித்த போதிலும், அண்மையில் அமெரிக்க அரசுச்செயலாளரான ராபர்ட் கேட்ஸ் டெல்லிக்கு வந்து சென்ற பிறகு, இந்தியா தனது இராணுவச்செலவுகளைப் பலமடங்கு உயர்த்தத் தீர்மானித்துள்ளது. அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3% ஆக இராணுவச் செலவுகள் உயர்த்தப்பட்டுள்ளன.

இன்று பெருமளவு ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா மாறியுள்ளது. துப்பாக்கிகள், குண்டுகள், ஏவுகணைகள், ராடார் சாதனங்கள் என இந்தியா இராணுவ ரீதியில் தொடர்ந்து தன்னை வலுப்படுத்திக்கொண்டே வந்துள்ளது. அளவிலும் ஆற்றலிலும் ஆக்கிரமிப்புப் போருக்கான தயார் நிலையில் இந்திய இராணுவம் வலுவான நிலையில் கட்டியமைக்கப்பட்டுள்ளது.

இப்படி கோடிகோடியாகக் கொட்டி இந்திய அரசு ஆயுதங்களை வாங்கிக் குவிப்பதன் காரணம் என்ன? யாருடைய தாக்குதலிலிருந்து யாரைப் பாதுகாக்க இவ்வளவு செலவிடப்படுகிறது?

குறிப்பாக, அமெரிக்காவின் இரட்டை கோபுரங்கள் தகர்க்கப்பட்டபின், அமெரிக்காவின் பயங்கரவாதத்துற்கு எதிரான போர் என்ற பெயரிலான ஆக்கிரமிப்பு போர்களை இந்தியா ஆதரித்து நிற்கிறது. அனைத்துலக அரங்கிலும், தெற்காசியப் பிராந்தியத்திலும் ஏற்பட்டுள்ள அரசியல், பொருளாதார, இராணூவ மாற்றங்களத்தொடர்ந்து, அமெரிக்காவுடனான் இந்தியாவின் இராணுவ உறவுகள் வலுப்பட்டதோடு, அமெரிக்காவுடன் இராணுவ ஒப்பந்தம், அணுசக்தி ஒப்பந்தம் ஆகியன அரங்கேறின. மேலும், இந்தியாவை வல்லரசாக்கப் போவதாக அறிவித்ததன் மூலம், அமெரிக்கா தெற்காசியாவில் தனது நம்பகமான அடியாளாக இந்தியாவை அங்கீகரித்தது. அமெரிக்க மேலாதிக்க வல்லரசின் போர்த்தந்திர நோக்கத்திற்கேற்ப, அதன் ஓர் அங்கமாகவே இந்திய துணை வல்லரசின் இராணுவமும் நவீன முறையில் ஆற்றல் மிக்கதாய்க் கட்டியமைக்கப்படுகிறது.

இந்தியத் தரகுப் பெருமுதலாளிகள் நேபாளம், இலங்கை, பூடான், மாலத்தீவு, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், மியான்மர், பாகிஸ்தான் ஆகிய தெற்காசிய நாடுகளில் மேலாதிக்கம் செய்வதில் குறியாக உள்ளனர். இப்பிராந்தியத்தில் போட்டியிடும் இதர நாடுகளை எதிர்கொண்டு பொருளதார ரீதியாக செல்வாக்கு செலுத்துவதோடு மட்டுமன்றி, இராணுவ பலத்தோடு அதனைத் தக்கவைத்துக்கொள்ளவும் விழைகின்றனர்.


இலங்கையில் இராணுவ ரீதியாகத் தலையிட்டு ஈழப்போரை வழிநடத்தியது இந்தியா. ஏற்கனவே மாலத்தீவிலும் வங்கதேசத்திலும் பூடான் மற்றும் ஆப்கானிஸ்தானிலும் இந்தியா தலையிட்டது. நேபாள இராணுவத்தின் மீது தனது மேலாதிக்கத்தையும் கட்டுப்பாட்டையும் திணித்தது. தெற்காசியப் பிராந்தியத்தில் கேள்விமுறையற்ற இந்திய மேலாதிக்கத்தை நிறுவுவதே இவற்றின் நோக்கம்.

வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடல் உள்ளிட்டு, சிங்கப்பூர் அருகிலுள்ள மலாக்கா  நீர்ப்பிரிவினையிலிருந்து ஏடன் வளைகுடா வரை, அதாவது செங்கடல் நுழைவு வரை தனது இயற்கையான சாம்ராஜ்ய எல்லையாக இந்தியா கருதுகிறது. ஏகாதிபத்திய வல்லரசுகளின் ஆசியுடன் இப்பிராந்தியத்தின் போலீசு வேலையை – ரோந்து சுற்றிக் கண்காணிக்கும் வேலையைத் தானாகவே இந்தியக் கடற்படை மேற்கொண்டு வருகிறது. இந்திய வான்படையோ, பாதுகாப்பான வர்த்தகத்தை நிலைநாட்டுவது என்ற பெயரில் சோமாலியாவில் கடற்கொள்ளையர்கள் எனப்படுவோர் மீது தாக்குதலை நடத்தியது.

இந்தத்தரகுப் பெருமுதலாளிகள் தெற்கு மற்றும் தென்கிழக்காசியா மட்டுமன்றி, மத்திய ஆசிய நாடுகள் மற்றும் தெற்கு ஆப்பிரிக்க நாடுகளிலும் முதலீடு செய்துள்ளனர். தென்கிழக்காசிய நாடுகளிலிருந்து இந்தியா வரை  சாலை மற்றும் இரயில் பாதை அமைக்கும் மிகப்பெரிய முதலீட்டுத்திட்டத்தில் இந்தியத் தரகுப் பெருமுதலாளிகள் இறங்க முயற்சித்து வருகின்றனர். பொருளாதார ரீதியாக தென்கிழக்காசியாவில் சீனாவுடன் இந்தியா போட்டியிட வேண்டியுள்ளது. ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தானின் போட்டியை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதற்கேற்ப இந்தியத் தரகுப் பெருமுதலாளிகளின் முதலீடுகளும் கைப்பற்றுதல்களும் எந்த அளவுக்கு அதிகரிக்கின்றதோ, அந்த அளவுக்கு இந்தியாவின் இராணுவ விரிவாக்கமும் அதிகரிக்கின்றது


அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றியம் முதலான ஏகாதிபத்திய வல்லரசுகளும், வளர்ந்துவரும் பொருளாதாரங்களாகச் சித்தரிக்கப்படும் சீனா மற்றும் இந்தியா ஆகியவையும், தெற்கு மற்றும் தென்கிழக்காசியாவில் தமது நலன்களுக்காக கூட்டுச்சேர்வதும் போட்டியிடுவதுமாக உள்ளன. எண்ணெய் வளமிக்க மத்திய ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவை அவை குறிவைத்துள்ளன.

உலக மேலாதிக்க வல்லரசான அமெரிக்காவோ சீனாவைத் தனது போட்டியாளராகக் கருதுகிறது. சீனாவைச் சுற்றிவளைக்கும் தனது உலக மேலதிக்க போர்த்திட்டத்தில் இந்தியாவைத் தனது பங்காளியாக நியமித்துக்கொண்டுள்ளது. இந்தியாவோ சீனா மற்றும் பாகிஸ்தானின் கூட்டை தனது மேலாதிக்க நோக்கங்க்ளுக்கு எதிரானதாகக் கருதுகிறது. இதன்படியே, சீன எதிர்ப்பு தேசியவெறி கிளறிவிடப்பட்டு வருகிறது.

தமது விரிவாக்க மேலாதிக்க நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ளவும் பொருளாதார நலன்களைத் தக்கவைத்துக்கொள்ளவும் இந்தியத் தரகுப் பெருமுதலாளிகள் அமெரிக்காவுடனான் கூட்டணியில் நிற்க விரும்புகின்றனர். தமது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கான ஒரு கருவியாக போர்த்தயாரிப்பு செய்வது, ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான போர்களில் அமெரிக்கத்தரப்பை ஆதரித்து இந்தியாவும் பங்கேற்பது என்ற திட்டத்துடன் தான் இந்தியத் தரகுப் பெருமுதலாளிகள் ஆயுதக்குவிப்பையும் இராணுவத்தை வலுப்படுத்துவதையும் மேற்கொள்கின்றனர். இதையே “வளர்ச்சி” என்றும் “நாட்டின் பாதுகாப்பு” என்றும் ஆட்சியாளர்களும் ஏகாதிபத்திய எடுபிடிகளும் சித்தரிக்கின்றனர்.

இவை மட்டுமன்றி, பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் அமெரிக்க ஆசியுடன் இஸ்ரேலும் இந்தியாவும் வெளிப்படையாகவே கூட்டுச் சேர்ந்துள்ளன. பாகிஸ்தான் மற்றும் சீனாவைக் குறிவைத்து தெற்காசியாவில் இந்தியாவும், ஈரான் மற்றும் சிரியாவைக் குறிவைத்து மேற்காசியாவில் இஸ்ரேலும் ஆயுதக்குவிப்பை நடத்திவருகின்றன.

இவை அனைத்தும் இந்தியாவானது அமெரிக்க ஆசியுடன் தெற்காசியாவில் போர்வெறிபிடித்த மேலாதிக்கத் துணை வல்லரசாக வலுப்பெற்று வருவதை நிரூபித்துக்காட்டுகின்றன. ஐ.நா.மன்றத்தின் மனிதவள மேம்பாட்டுப் பட்டியலில், உலகின் 182 நாடுகளில் 134 ஆவது இடத்தில் இருக்கும் ஏழை நாடான இந்தியா, இந்திய மக்கள் தொகையில் ஏறத்தாழ 31 சதவீதம் பேர் ஒரு நாளைக்கு ஏறத்தாழ 50 ரூபாய்க்கும் குறைவான தொகையையே கூலியையே பெறும் நிலையிலுள்ள நாடான இந்தியா, தெற்காசிய வல்லரசாவதை “வளர்ச்சி” என்றும் “நாட்டின் பாதுகாப்பு என்றும்” முதலாளித்துவ எடுபிடிகள் துதிபாடுகின்றனர். ஆனால் இந்த “வளர்ச்சியானது” உள்நாட்டில் மக்கள் திறள் இயக்கங்களை ஒடுக்கி மூலவளங்களை ஏகபோக முதலாளிகள் சூறையாடுவதற்கான வளர்ச்சி! தெற்காசியாவிலுள்ள நாடுகளுக்கும் மக்களுக்கும் புரட்சிகர இயக்கங்களுக்கும் எதிரான் அச்சுறுத்தும் வளர்ச்சி!

புதிய ஜனநாயகம் மே 2010 இதழிலிருந்து

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s