(சீன) சோவியத் இயக்கம் ௧

ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம் பகுதி: ௧௧

வெகுவாக பிரச்சனைக்குறியதாக இருந்த 1927 ஆம் ஆண்டின் வசந்த காலத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து மா சே துங் அவர்களுடன் ஒரு கலந்துரையாடலை நான் நிகழ்த்தினேன். இது பற்றி இங்கு குறிப்பிடுவதற்கு போதுமான விடயம் என்று நான் இதைக் கருதினேன். இது அவரது சுயசரிதையின் பகுதி அல்ல. ஆனால் அவர் இது பற்றி ஒரு தனிப்பட்ட மனிதனின் பிரதிபலிப்பாக இதை எனக்கு சொன்னபோது, ஒவ்வொரு சீனக் கம்யூனிஸ்டின் வாழ்க்கையிலும் இது ஒரு திருப்புமுனை அனுபவம் என்பதை என்னால் ஊகிக்க முடிந்தது.

1927ல் கம்யூனிஸ்ட் கட்சியின் தோல்விக்கும், வுகான் கூட்டரசாங்கம் தோற்கடிக்கப்பட்டமைக்கும், நாங்கிங் சர்வாதிகாரத்தின் வெற்றிக்கும் யார் பொறுப்பாளி என்று மாவோ கருதுகிறார், என்று நான் அவரிடம் கேட்டேன். சென் ரு சியூ மீதுதான் கூடுதலான பிழையை மாவோ சுமத்தினார். அவரது ஊசலாட்டமான சந்தர்ப்பவாதம் கட்சியின் தீர்க்கமான தலைமைத்துவத்தை  இல்லாதொழித்தது. மேலதிகமான சமரச முயற்சிகள் பேரழிவை ஏற்படுத்தும் என்ற ஒரு சூழ்நிலையில் கட்சியின் நேரடியான சொந்த மார்க்கத்தையும் இல்லாமலாக்கியது.

சென்னுக்கு அடுத்தபடியாக இந்தத்தோல்விக்கு பொறுப்பாளியாக மாவோ கருதிய மற்றொரு மனிதர், மிக்ஹெயில் மார்க்கொவிச் பொறொடின் என்ற தலைமை ரஷ்ய ஆலோசகர் ஆவார். சோவியத் நாட்டின் அரசியற் தலமைக்குழுவுக்கு இவர் நேரடியான பொறுப்பாளி ஆவார். 1926 ல் தீவிரமான காணி மீள் விநியோகத்தை ஆதரித்த இவர், 1927ல் தனது நெறி பிறழ்தலுக்கு எதுவித யதார்த்தபூர்வமான காரணத்தையும் காட்டாமல் கடுமையான அந்தச் செயல்முறை வரைவை எதிர்த்ததன் மூலம், அவர் தனது செயல்பாட்டை முழுமையாக மாற்றிக்கொண்டிருந்தார். சென் ரு சியூ வுக்கு சிறிது வலதுசாரித் தோற்றத்தில் பொறொடின் இருந்தார் என்றும் இந்த பூர்ஷுவாவை திருப்திப்படுத்த தன்னால் முடிந்தது அனைத்தையும் செய்ய அவர் தயாராகவும் இருந்தார் என்றும் மாவோ கூறினார். தொழிலாளர்களிடமிருந்து ஆயுதங்களை களையுமாறு கூறுவதற்குக் கூட அவர் தயாராக இருந்தார். இறுதியாக இந்த உத்தரவையும் அவர் வழங்கவே செய்தார். கம்யூனிஸ்ட் அகிலத்தின் சென், பொறொடின் ஆகிய இருவருக்கும் சிறிது இடது சாரியாக இந்தியப் பிரதிநிதியான எம். என். ராய் நின்றார். ஆம அவர் வெறுமனே அசையாது நின்றார். அவரால் பேசமுடியும். அவர் அதிகமாகவே பேசினார். விடயத்தை நிறைவேற்றுவதற்கான வழிமுறை ஒன்றையும் வழங்காமலேயே பேசினார். இலக்கு நோக்கிய பாதையிலே ராய் ஒரு முட்டாளாக இருந்தார். பொறொடின் ஒரு பெரும் பிழை செய்தவராக இருந்தார். தான் செய்வதை உணராமலேயே சென் ஒரு காட்டிக்கொடுப்பவராகச் செயல்பட்டார்.

சென் உண்மையிலேயே தொழிலாளர்களைக் கண்டு பயப்பட்டார். விசேடமாக ஆயுதம் தரித்த விவசாயிகளைக் கண்டு அஞ்சினார். ஆயுத எழுச்சியின் யதார்த்தம் அவரை எதிர்கொண்ட போது அவர் முழுமையாக தன் உணர்வுகளை இழந்தார். என்ன நடக்கிறது என்பதை அவரால் தொடர்ந்து விளங்கிக்கொள்ள முடியவில்லை என்பதோடு அவரது குட்டி பூர்ஷுவா உணர்வுகள் அவரைக் காட்டிக்கொடுத்து பயத்தையும் தோல்விமனப்பான்மையையும் அவர் மீது திணித்தன.

சென் அப்போது சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் முழுமையான சர்வாதிகாரியாக இருந்ததோடு, முக்கியமான முடிவுகளை மத்தியக்குழுவுடன் ஆலோசனை கலக்காமல், தானே எடுத்தார், இவ்வாறு மாவோ உறுதிப்படுத்தினார். கம்யூனிஸ்ட் அகிலத்தின் கட்டளையைக் கூட கட்சியின் ஏனைய தலைவர்களுக்கு அவர் காட்டவில்லை. அல்லது அதுபற்றி எங்களுடன் கலந்தாலோசிக்க்கக் கூட இல்லை. இறுதியில் கோமிண்டாங்குடன் எங்கள் உறவை முறித்துக்கொள்ளும்படி நிர்ப்பந்தித்தது ராய் அவர்கள் தான். கம்யூனிஸ்ட் அகிலம் பொறொடினுக்கு ஒரு செய்தி அனுப்பியிருந்தது. அதன்படி நிலப்பிரபுகளின் காணிகளை ஒரு வரையறுக்கப்பட்ட அளவில் பறிமுதல் செய்யத்தொடங்கும் படி கூறப்பட்டிருந்தது. இதன் பிறதி ஒன்றை கையகப்படுத்திய ராய் உடனடியாக உடனடியாக வாங் சிங் வெய்யிடம் அதைக் காட்டினார். வுகானில் அப்போதிருந்த இடதுசாரி கோமிண்டாங் அரசுக்கு வாங் சிங் வெய் தலைவராக இருந்தார். இந்தத் திடீர் மாற்றத்தின் பெறுபேறு அனைவரும் அறிந்த ஒன்றே ஊகான் ஆட்சியாளர்களால் கம்யூனிஸ்டுகள், யுத்தப் பிரபுக்களின் ஆதரவை இழந்ததால் ஆட்சியும் செயலிழந்தது. இந்த யுத்தப் பிரபுக்கள் தற்போது ஷி யாங் கேய் சேக்குடன் சமரசம் செய்துகொள்வதன் மூலம் தங்களுக்கு பாதுகாப்பை தேடிக்கொண்டிருந்தனர். பொறொடினும் ஏனைய கம்யூனிஸ்ட் அகிலப் பிரதிநிதிகளும் ரஷ்யாவுக்குத் தப்பியோடினர்.

ரஷ்யாவில் எதிர்ப்பு முறியடிக்கப்படுவதையும், ட்ராஸ்கியின் நிரந்தரப் புரட்சி செல்வாக்கிழக்கப்படுவதையும், ஸ்டாலின் நாட்டின் சோசலிசத்தை சிரத்தையோடு கட்டமைக்கப் புறப்பட்டதையும் இந்தக் கம்யூனிஸ்ட் அகிலப் பிரதிநிதிகள் கண்ணுற்றார்கள்.

கோமிண்டாங்குடன் உறவு முறிவதற்கு முன்பு, தொழிலாளர், விவசாயிகளிடையே கம்யூனிஸ்ட் ராணுவங்களை உருவாக்கி, காணிப் பறிமுதல் விடயத்தில் மேலும் தீவிரமான கொள்கையைக் கம்யூனிஸ்ட் கட்சி செயல்படுத்தியிருந்தாலும் கூட 1927ஆம் ஆண்டில் எதிர்ப்புரட்சியை தோற்கடித்திருக்க முடியுமென்று மாவோ நினைக்கவில்லை. ஆனால் (சீன)சோவியத் அரசுகள், தென்பகுதியில் பாரிய தொடக்கம் ஒன்றைக் கண்டிருக்கும். அவ்வாறு அமைக்கப்பட்டிருக்கக் கூடிய களப் பிரதேசங்கலிருந்து அதன் பின்பு அவை ஒருபோதும் அழிக்கப்பட்டிருக்க முடியாது.

மாவோ தனது வரலாற்றை கூறிக்கொண்டிருக்கும் வேளையில் தற்போது சோவியத்களின் தொடக்கம் பற்றிய விசயத்திற்கு வந்துவிட்டார். புரட்சியின் பேரழிவுச் சிதைவில் இருந்து உருவாகிய இந்த சோவியத்துகள், தோல்வியிலிருந்து வெற்றியை கட்டமைக்கப் போராடின. அவர் தொடர்ந்தார்,

1927 ஆகஸ்ட் 27ஆம் திகதி ஹோ லுங், யேரிங் ஆகியோர் தலைமையிலும், சூடேயின் ஆதரவுடனும் 20ஆவது ராணுவம், வரலாற்றுப் புகழ்மிக்க நான்சாங் எழுச்சியை தலைமைதாங்கியது. சீனச் செங்சேனையாக உருவெடுக்கப்போகும் ஒரு ராணுவத்திற்கு இதன் மூலம் அடிக்கல் நாட்டப்பட்டது. ஒரு வாரத்திற்குப் பின்பு ஆகஸ்ட் 7ஆம் திகதி கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு, ஒரு விசேடக் கூட்டத்தில் சென் ரூ சியூவை செயலாளர் பதவியிலிருந்து அகற்றியது. 1924ல் காண்டானில் இடம்பெற்ற கட்சியின் மூன்றாவது மாநாட்டில் இருந்து நான் கட்சியின் அரசியல் தலமைக்குழுவில் உறுப்பினராக இருந்துவந்தேன். இந்தப் பதவியிறக்கும் முடிவில் நான் தீவிரமாகப் பங்கேற்றேன். இக்கூட்டத்தில் கலந்துகொண்ட ஏனைய பத்து உறுப்பினர்களில்  கீழ்கண்டோரும் இருந்தனர். த்சை ஹோ சென், பெங் பாய், சாங் குவோ ராவோ, சூ சியூ பாய் ஆகியோரே அவர்களாவர். (இக்கூட்டத்தில் சென் ரூ சியூ அவருடைய வலதுசாரிப் போக்குக்காக குற்றம் சாட்டப்பட்டு, பதவி நீக்கப்பட்டு அரசியற்தலைமைக்குழுவிலிருந்தும் அகற்றப்பட்டார். சூ சியூ பாய் பொதுச் செயலாளராக தெரிவு செய்யப்பட்டார்) கட்சியால் இங்கு ஒரு புதிய வழிமுறை ஏற்றுக்கொள்ளப்பட்டு கோமிண்டாங்குடனான ஒத்துழைப்பு பற்றிய விடயம் தற்போது முற்றாக கைவிடப்பட்டது. கோமிண்டாங் தற்போது கேடுகெட்டமுறையில் ஏகாதிபத்தியத்தின் கருவியாகிவிட்டதாலும், ஜனநாயகப் புரட்சிக்கான பொருப்பை அதனால் நிறைவேற்ற முடியாதென்பதாலும் இந்த முடிவு மேற்கொள்லப்பட்டது. ஆட்சி அதிகாரத்திற்கான நீண்ட வெளிப்படையான போராட்டம் தற்போது ஆரம்பமாகியது.

‘இலையுதிர்கால அறுவடையின் எழுச்சி’ என்று பிற்காலத்தில் புகழ்பெற்ற  ஒரு இயக்கத்தை மேற்கொள்வதற்காக நான் ஷாங் ஷாவுக்கு அனுப்பப்பட்டேன். அங்கு என்னுடைய செயல்முறை வரைவு ஐந்து அம்சங்களைச் செயல் படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.

௧) மாகாணக் கட்சிக் கிளையின் தொடர்பை கோமிண்டாங்கிலிருந்து முற்றாக அகற்றுவது.

௨) ஒரு விவசாயி தொழிலாளி புரட்சிகர ராணுவத்தை உருவாக்குவது.

௩) சிறிய, நடுத்தர, பெரிய நிலப்பிரபுக்களிடமிருந்து சொத்துப் பரிமுதல்

௪) கோமிண்டாங்கின் தொடர்பின்றி சுதந்திரமான கம்யூனிஸ்ட் அதிகாரத்தை ஹூனானில் அமைத்தல்.

௫) சோவியத்துகளை அமைத்தல்.

மேலே குறிப்பிட்ட ஐந்தாவது அம்சம் கம்யூனிஸ்ட் அகிலத்தால் எதிர்க்கப்பட்டது. நீண்ட காலத்திற்குப் பின்பு கூட இந்த விடயத்தை அது ஒரு நடைமுறைக்கப்பாற்ப்பட்ட சுலோகமாகத்தான் கருதியது.


செப்டம்பர் அளவில் ஒரு பரந்த அடிப்படையிலான ஒரு எழுச்சியை ஒழுங்கு செய்வதில் நாங்கள் ஏற்கனவே வெற்றி பெற்றிருந்தோம். விவசாயி தொழிலாளி ராணுவத்தின் முதலாவது படைப்பிரிவுகள் அமைக்கப்பட்டுவிட்டன. படைவீரர்கள் மூன்று பிரதான மூலகங்களிலிருந்து பெறப்பட்டன. விவசாயிகள், ஹன்யாங் சுரங்கத் தொழிலாளர்கள், கோமிண்டாங்கில் கிளர்ச்சி செய்யும் துருப்புகள் ஆகியவையே அந்த மூலகங்கள். புரட்சியின் ஆரம்பகால ராணுவப்படை, விவசாயிகள் தொழிலாளர்கள் ராணுவத்தின் முதலாவது டிவிசன் என்று அழைக்கப்பட்டது. முதலாவது ரெஜிமென்ட், ஹன்யாங் (பிங் ஷான்) சுரங்கத் தொழிலாளர்களிடையே இருந்து உருவாக்கப்பட்டது. (சுரங்கத் தொழிலாளர்கள் மாவோ, லியூ ஷா சி, சென் யுள் ஆகியோரால் ஸ்தாபிக்கப்பட்டது. விவசாயிகள், சோவியத்துகள், மக்கள் குழுக்கள் ஆகியவற்றை அமைப்பதில் ஆகியவற்றை அமைப்பதில் மத்தியக் குழுவின் கட்டுப்பாட்டுக்கு அப்பால் மாவோ தன்னிச்சையாகவே செயல்பட்டார். இதற்காக மாவோ கடுமையாக கண்டிக்கப்பட்டார். 1927 நவம்பரில் வலதுசாரிப் போக்கிற்காக மாவோ அரசியற் தலைமைக்குழுவிலிருந்து அகற்றப்பட்டார். 1928 ஜூன் மாதத்தில் அவர் மீண்டும் சேர்த்துக்கொள்ளப்பட்டார்) பிங் சியாங், லியூ யாங்லி லிங் ஹூனானில் உள்ள மேலும் இரண்டு சி யென் பகுதியிலிருந்த விவசாயிகள் காவற்படையிலிருந்து இரண்டாவது ராணுவப்படை அமைக்கப்பட்டது. ஹூனான் மாகாணச் செயற்குழுவின் அனுமதியோடு இந்த ராணூவம் அமைக்கப்பட்டது. ஆனால் ஹூனான் குழுவின் பொதுப்படையான திட்டமும், எங்கள் ராணூவமும் கட்சியின் மத்தியக்குழுவால் எதிர்க்கபட்டது. கட்சியின் மத்தியக்குழு தீவிர எதிர்ப்புக்கு பதிலாக பொறுத்திருந்து பார்க்கும் கொள்கையை கைக்கொண்டிருந்தாற்போல் தோன்றியது.

நான் ராணுவத்தை உருவாக்கிக்கொண்டிருந்தபோது  ஹன் யாங் சுரங்கத்தொழிலாளர்களுக்கும் விவசாயிகளின் காவற்படையினருக்கும் (அவர்கள் வாழும் இடங்களுகிடையே) சென்று வந்தேன். கோமிண்டாங்குக்காக வேலை செய்வோரால் (மின்ருவான்) நான் கைது செய்யப்பட்டேன். கோமிண்டாங் பயங்கரவாதம் அப்போது மிக மோசமாய் இருந்தது. சந்தேகிக்கப்பட்ட பல கம்யூனிடுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த மின்ருவான்களின் தலமையகத்திற்கு என்னை அழைத்துச்செல்லுமாறு கட்டளையிடப்பட்டது. அங்கு நான் சுட்டுக்கொல்லப்படுவதாக எடுத்துச் செல்லப்பட இருந்தேன். ஒரு தோழரிடமிருந்து பல பத்து டாலர் பணத்தாள்களை கடனாக வாங்கி பாதுகாவலர்களுக்கு கையூட்டு வழங்கிதப்பித்துக்கொள்ள நான் முயன்றேன். சாதாரண துருப்புகள் கூலிக்காக படையில் சேர்ந்தவர்கள் நான் கொல்லப்படுவதை பார்ப்பதில் விசேட அக்கரை எதூம் இல்லாத அவர்கள் என்னை விடுதலை செய்ய ஒப்புக்கொண்டார்கள். சப்பால்ட்டான் பதவியிலிருந்த அந்தப் பொறுப்பதிகாரி இதற்கு அனுமதி மறுத்துவிட்டான். ஆகவே தப்பிச்செல்ல முயற்சிக்க நான் முடிவு செய்தேன். இந்த மின்ருவான் தலமையகத்திற்கு 200 யான் தூரம் செல்லும் வரை அவ்வாறு தப்பிச்செல்வதற்கு எனக்கு சந்தர்ப்பம் ஏதும் கிடைக்கவில்லை.

ஒர் நீர்த்தடாகம் இருந்த இடத்திற்கு உயரமான பகுதியை நான் அடைந்தேன். அதைச்சுற்றி உயரமான புல் வளர்ந்திருந்தது. சூரியன் மறையும் வரை அங்கேயே ஒளிந்திருந்தேன். துருப்புகள் என்னைத் தேடி வந்தனர். அத்தோடு என்னைத் தேடுமாறு சில விவசாயிகளையும் தூண்டினர். பல தடவைகள் அவர்கள் எனக்கு அருகில் வந்தனர். ஓரிரு தடவைகள் அவர்கள் நான் தொடக்கூடிய அளவுக்கு எனக்கருகே வந்தனர். நான் மீளக் கைது செய்யப்படுவேன் என்று 5 அல்லது 6 தடவைகளுக்கு மேல் நம்பிக்கையிழந்து விட்ட போதிலும் எப்படியோ நான் அவர்களின் பார்வையிலிருந்து தப்பிவிட்டேன். இறுதியில் மாலைப் பொழுதான போது அவர்கள் தேடுதலைக் கைவிட்டனர். உடனடியாக மலைகளுக்கூடாக இரவோடிரவாக நான் என் பயணத்தை தொடர்ந்தேன். எனது கால்களில் சப்பாத்துகள் இருக்கவில்லை. அதனால் எனது கால்களில் கடுமையான உராய்வுகல் ஏற்பட்டன. வீதியில் நான் ஒரு விவசாயியை சந்தித்தேன் அவர் என்னுடன் நட்புறவாகி எனக்கு புகலிடம் அளித்து பின்பு அடுத்த மாவட்டத்திற்கு செல்ல எனக்கு வழியையும் காட்டினார். என்னிடம் ஏழு டாலர் பணம் இருந்தது. இந்தப்பணத்தை சப்பாத்துகள், ஒரு குடை, உணவு ஆகியவற்றை வாங்குவதற்கு பயன்படுத்தினேன். இறுதியாக நான் பாதுகாப்பாக விவசாயிகள் காவற்படையினரை சென்றடைந்தபோது என்னிடம் 2 செப்புக்காசுகள் மட்டுமே மிகுதியாக இருந்தன.

புதிய ராணுவ டிவிசன் உருவாக்கப்பட்டதும் நான் போர்முனைக் குழுவின் கட்சித்தலைவராக ஆனேன். ஊகானில் ஒரு படைக்கொத்தளத்தின் கமாண்டராக இருந்த யு ஷா ரூ முதலாவது ராணுவத்தின் கமாண்டரானார். இருப்பினும் யு பெரும்பாலும் தனது படைவீரர்களின் போக்கின்படியே தனது நிலைப்பாட்டை மேற்கொள்ள அவர் நிப்பந்திக்கப்பட்டார். சிறிது காலத்திற்குப் பின்பு அவர் படையை கைவிட்டு கோமிண்டாங்கில் சேர்ந்துகொண்டார். தற்போது இவர் நான்கிங்கில் சியாங் காய் ஷேக்குக்காக வேலை செய்கிறார்.

விவசாயிகள் எழுச்சிக்கு தலமை தாங்கிய அந்தச் சிறிய ராணுவம் ஹூனானின் ஊடாக தெற்கு நோக்கி நகர்ந்தது. அந்தப்படை ஆயிரக்கணக்கான கோமிண்டாங் துருப்புகள் ஊடாக ஊடறுத்துச்செல்ல வேண்டியிருந்தது. அந்தப்பாதையில் பல சமர்களை மேற்கொள்ள வேண்டியும் இருந்தது. இந்தச்சண்டையில் பல பினடைவுகளும் ஏற்பட்டன. இந்தப் படையினரிடையே ஒழுக்கக் கட்டுப்பாடு மிக மோசமாக இருந்தது. அத்தோடு அரசியற் பயிற்சி நெறி வெகுவாக தாழ்ந்த மட்டத்தில் இருந்தது. படையினரிடையே தடுமாற்ற மனப்பான்மையுள்ள அதிகாரிகளும் போர் வீரர்களும் இருந்தனர். படையை விட்டு விலகியோடும் பல படைவீரர்களும் அவர்களிடையே இருந்தனர். யூ சா ரூ படையை விட்டு ஓடியதும், நிங்ரூவுக்கு ராணுவம் சென்ற போது அது மீளமைப்புச் செய்யப்பட்டது. மிகுந்திருந்த ஒரு ரெஜிமென்டின் துருப்புகளுக்கு சென் ஹாவோ கமாண்டர் ஆக்கப்பட்டர். அவரும் பிற்காலத்தில் இயக்கத்தை காட்டிக்கொடுப்பவராக மாறினார். ஆனால் முதலாவது குழுவில் இருந்த பெரும்பாலானோர் இறுதிவரைக்கும் விசுவாசமாக இருந்தனர். அவர்கள் தற்போதும் செஞ்சேனையில் தொடர்ந்து இருக்கிறார்கள். முதலாவது ராணுவப்பிரிவின் அரசியல் கமிசாரான லோ இயங்கும் யாங் லி சான் ஆகியோர் ஆகியோர் அவர்களில் அடங்குவர். இந்தச் சிறிய படை இறுதியாக சிங்காங் ஷான் மலைப்பிரதேசத்திற்கு ஏறியபோது இந்தப்படையில் 1000 பேர் மட்டுமே இருந்தனர்.

கட்சியின் இலையுதிர் கால அறுவடை எழுச்சித்திட்டம் கட்சியின் மத்திய குழுவால் அங்கீகரிக்கப்பட்டமையாலும் முதலாவது ராணுவம் மிகக் கடுமையான இழப்புகளைச் சந்தித்திருந்தாமையாலும்  இந்த நடவடிக்கைகளைப் பற்றிய நகரவாசிகளின் போக்கு காரணமாகவும் இந்த எழுச்சி தோல்வியிலேயே முடிவடையும் போலத்தோன்றியது. மத்தியக்குழு தற்போது நிச்சயமாக என்னைக் கடுமையாகக் கண்டித்தது. (மாவோ மத்தியக் குழுவால் மூன்று தடவை கடுமையாக கண்டிக்கப்பட்டர். அத்தோடு மூன்று தடவை கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்) நான் கட்சியின் அரசியற் தலைமைக்குழுவில் இருந்து வெளியேற்றப்பட்டேன். அத்தோடு கட்சியின் (பொது) போர்முனைக் குழுவிலிருந்தும் நீக்கப்பட்டேன். ஹூனான் மாகாணக் குழுவும் எங்களைத் தாக்கியது. அது எங்களை ‘துப்பாக்கி இயக்கம்’ என்றும் அழைத்தது. இருப்பினும், சிங் காங் ஷானில் நாங்கள் எங்கள் ராணுவத்தை தொடர்ந்து வைத்திருந்தோம். நாங்கள் தான் சரியான வழியை பின்பற்றுகிறோம் என்பதில் உறுதியாக இருந்தோம். பின்பு இடம்பெற்ற நிகழ்ச்சிகள் எங்களுடைய வழி சரியானதே என்பதை நிரூபித்திருக்கின்றன. புதிதாக படையில் சேர்வோர் படையில் இணைக்கப்பட்டனர். இந்த டிவிசன் மீண்டும் முழுமையான படைவீர எண்ணிக்கையை கொண்டிருந்தது. அந்த டிவிசனின் கமாண்டராக நான் பொறுப்பேற்றேன்.

1927 ஆம் ஆண்டு மாரிக்காலத்திலிருந்து 1928 இலையுதிர் காலம் வரை முதலாவது டிவிசன், சிங்காங் சானிலுள்ள தளத்தை தன் கைவசம் கொண்டிருந்தது. 1927ம் ஆண்டு நவம்பரில் ஹூனான் எல்லையில் த்சாலினில் (சாலிங்) முதலாவது சோவியத் நிறுவப்பட்டது. அத்தோடு முதலாவது சோவியத் அரசும் தேர்ந்தெடுக்கப்பட்டது. அதன் தலைவர் ரு சுங் பின் ஆவார்.

இதனையடுத்து நாங்கள் ஒரு ஜனநாயகத் திட்டத்தை முன்வைத்தோம். இது ஒரு மெதுவான ஆனால் தொடர்ச்சியான அபிவிருத்தியை கொண்டிருந்தது. இது எங்கள் கட்சியிலிருந்த தீவிரவாதிகளின் குற்றச்சாடுகளை, சிங் சாங் சான் பிரிவின் மீது கொண்டுவந்தது. அவர்கள் நிலப்பிரபுக்களின் மனோதிடத்தை குலைப்பதற்காக திடீர்த்தாக்குதல், தீவைப்பு, நிலப்பிரபுக்களைக் கொல்லுதல் ஆகிய பயங்கரவாத நடைமுறைகளை  நடைமுறைப்படுத்துமாறு கூறினார். முதலாவது ராணுவத்தின் போர்முனைக்குழு இத்தகைய தந்திரோபாயங்களை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. இதன் விளைவாக இவர்கள் தீவிரவாதிகளால் சீர்திருத்தவாதிகள் எர்ன்று பட்டம் சூட்டப்பட்டனர். மேலும் தீவிரமான ஒரு கொள்கையை நடைமுறைப்படுத்தாமைக்காக இவர்களால் நான் கடுமையாகச் சாடப்பட்டேன்.


இந் நூலின் முந்திய பகுதிகள்

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s