நீதித்துறையை ஆள்கிறது இந்து மனசாட்சி!

மும்பை தாக்குதலில் ஈடுபட்ட கசாப்புக்கு தூக்குத்தண்டனை விதித்த நீதிமன்றம், மும்பைக் கலவரத்தை நடத்திய பால் தாக்கரேயை கண்டிக்க தயங்குவது ஏன்?

அஜ்மல் கசாபுக்கு தூக்குத்தண்டனை – நாடாளுமன்றத் தாக்குதல் நாடகத்தில் தூக்குத்தண்டனை விதிக்கப்பெற்ற அப்சல் குருவையும் உடனே தூக்கில் போடச்சொல்லி ஆர்ப்பாட்டம். பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சதித்திட்டம் தீட்டிய குற்றத்திலிருந்து அத்வானி, ஜோஷி முதலான சங்கப் பரிவரத் தலைவர்கள் அலகாபாத் உயர்நீதி மன்றத்தில் விடுவிப்பு – தன்னுடைய தங்கையை காதல் மணம் செய்த ஈழவ சாதி இளைஞனையும் அவரது குடும்பத்தினரையும் வெட்டிக்கொன்ற தீபக் என்ற பார்ப்பன ஜாதிவெறியனுக்கு உச்சநீதி மன்றத்தில் தூக்குத்தண்டனை ரத்து. இத்தீர்ப்புகளுக்கிடையில் இழையோடும் ஒற்றுமை, இந்நாட்டின் நீதித்துறை, அரசு, அரசியல் கட்சிகள், ஊடகங்கள் பொதுக்கருத்து ஆகியவையனைத்தையும் ஆளுகின்ற பொது உழவியலை, பளிச்சென்று காட்டுகிறது.

மும்பைத்தாக்குதல் வழக்கில், கசாப்புக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டிருப்பது ஆச்சரியத்துக்குறியதல்ல. “தானே முன்வந்து முஜாஹிதீன் படையில் இணைந்து பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டது, சதித்திட்டம் தீட்டியது, இந்தியாவுக்கு எதிராக போர் தொடுத்தது, அப்பாவிகளை கொலை செய்தது ஆகிய குற்றங்களை கசாப் இழைத்திருப்பதாகவும், அவன் திருந்துவதற்கு வாய்ப்பே இல்லை என்பதால், தூக்குத்தண்டனை விதிப்பதாகவும்” அத்தீர்ப்பு கூறுகிறது

அஜ்மல் கசாப் செய்த கொலைகளுக்கும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கும் மறுக்கமுடியாத வீடியோ ஆதாரங்கள் இருப்பதைப்போலவே, கசாப் போன்ற கருவிகள் உருவாக காரணமாக இருக்கும் புறவயமான அரசியல் சூழ்நிலைகளுக்கும் மறுக்கமுடியாத ஆதாரங்கள் இருக்கத்தான் செய்கின்றன. 80 களில் பாகிஸ்தானில் அமெரிக்கா உருவாக்கிய இசுலாமிய தீவிரவாதம், அதே காலகட்டத்தில் இந்தியாவில் தலைவிரித்தாடிய பார்ப்பன பாசிசம், இந்திய அரசு காஷ்மீரில் நடத்தும் இராணுவ ஒடுக்குமுறை, தன்னுடைய சொந்த நோக்கங்களுக்காக இளைஞ்சர்களை இசுலாமிய தீவிரவாதத்துக்கு ஆட்படுத்தி இந்தியாவின் மீது ஏவிவிடும் பாகிஸ்தான் உளவுத்துறையின் நடவடிக்கைகள் – என்ற இந்திய அரசியல் பின்புலத்தில் அகப்பட்டுக்கொண்ட பாகிஸ்தானின் ஏதோ ஒரு குக்கிராமத்தைச்சேர்ந்த இளைஞன் அஜ்மல் கசாப். அவன் இசுலாமிய தீவிரவாதத்தின் கையில் அகப்பட்ட இன்னொரு கருவி.

இந்தியா - பாகிஸ்தன் இடையே நடக்கும் போட்டி அரசியலின் பின்புலத்தில் அகப்பட்டுக்கொண்ட அஜ்மல் கஸாப்


எந்தக்குற்றங்களுக்காக கசாப்பை தூக்குமேடைக்கு அனுப்பவேண்டும் என்று நீதிமன்றம் கூறுகிறதோ, அந்தக்குற்றத்தின் மூலவர்களான, அந்தக் குற்றத்தின் மூலவர்களான பாகிஸ்தான் ஆளும் வர்க்கத்துடன் பிரதமர் மன்மோகன் சிங்கும், தாஜ் பாலஸ் மீதான தாக்குதலைக்கண்டு இரத்தக்கண்ணீர்வடித்த இந்தியத் தரகு முதலாளிகளும் கை குலுக்கிக் கொண்டிருக்கிறார்கள். பாகிஸ்தானையும் உள்ளடக்கிய தெற்காசிய சுதந்திர வர்த்தக வலையம் தான் இந்திய ஆளும் வர்க்கங்களின் கனவு என்பதால், பாகிஸ்தான் அரசு மனம் திருந்திவிடும் என்று மன்மோகன் சிங் நம்புகிறார். கசாப் மனம் திருந்த வாய்ப்பே இல்லையென்று மரணதண்டனை விதிக்கிறது நீதிமன்றம்.

கசாபுக்கு தூக்கு என்று தீர்ப்பு வந்தவுடனேயே “அப்சல் குருவையும் உடனே தூக்கிலிடு” என்று பாரதீய ஜனதா ஆர்ப்பாட்டம் செய்யத்தொடங்கியது. இந்து தேசவெறிப் பொதுக்கருத்தை அரவணைத்துக்கொள்வதற்காக, உடனே அதை வழிமொழிந்தார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திக் விஜய் சிங். மன்மோகன் சிங்கோ ‘சட்டம் தன் கடமையைச் செய்யும்’ என்று வழுக்கினார். அப்சல் குரு வழக்கில் சட்டம் தன் கடமையை எப்படிச் செய்தது?

ஆகஸ்டு 2005 இல் அப்சல் குருவின் மேல் முறையீட்டை விசாரித்த உச்சநீதி மன்றம், போலீசு சமர்ப்பித்த அப்சல் குருவின் ஒப்புதல் வாக்குமூலத்தை ஒரு சாட்சியமாகவே ஏற்கமுடியாது என்பதையும், குற்றவாளிக்கு எதிராக வேறு சாட்சியங்கள் எதுவும் இல்லை என்பதையும் ஒப்புக்கொண்டது. எனினும் “மரணதண்டனை விதிக்கப்பட்டால்தான் சமூகத்தின் கூட்டு மனசாட்சி திருப்தி அடையும்” என்று கூறி அப்சல் குருவின் தூக்கு தண்டனையை உறுதி செய்தது.

எந்த வாக்குமூலத்தை டெல்லி உயர்நீதி மன்றமும், உச்சநீதி மன்றமும் நிராகரித்தனவோ, (பாகிஸ்தானின் தூண்டுதலின் பேரில் தான் நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் தொடுத்தோம் என்று அப்சல் குரு ஒப்புக்கொண்டதாக போலீசு தாக்கல் செய்த வாக்குமூலம்) அதையே அசைக்கமுடியாத ஆதாரமாகக் காட்டி, 5 இலட்சம் துருப்புகளை எல்லையில் கொண்டு போய் நிருத்தி, டிசம்பர் 2001 ல் பாகிஸ்தானுக்கு எதிரான போர் ஆயத்தங்களைச் செய்தது பாரதிய ஜனதா அரசு. நாடாளு மன்றத்தின் மீதான தாக்குதல் என்ற பெயரில் சங்கப்பரிவாரம் நடத்திய இந்தக் கபட நாடகத்தில், நாடாளுமன்றத்துக்கு காவல் நின்ற பாதுகாப்புப் படையினர் பலர் கொல்லப்பட்டது மட்டுமன்றி, உறைபனிக் குளிரில் நோக்கமின்றி நிருத்தப்பட்ட பல இராணுவச் சிப்பாய்கள் மன அழுத்தத்தால் தற்கொலையும் செய்துகொண்டனர். நூறு கோடி மக்களை ஏமாற்றி, துணைக்கண்டத்தையே ஒரு அணு ஆயுதப் போரின் விளிம்பில் கொண்டுவந்து நிறுத்திய ‘நாடாளுமன்றத் தாக்குதல்’ என்ற மோசடி நாடகத்தை அம்பலப்படுத்துவதற்கு காங்கிரசு முதல் போலி கம்யூனிஸ்டுகள் வரையிலான ஓட்டுக்கட்சிகள் யாரும் இன்றுவரை தயாராக இல்லை. இதனை அம்பலப்படுத்தக்கூடிய ஒரே நேரடி சாட்சியை ஒழித்துக்கட்டுவதற்க்காக, “அப்சல் குருவை உடனே தூக்கிலிட வேண்டும்” என்று இந்து தேசத்தின் ‘மனசாட்சி’யின் பெயரால் மிரட்டுகிறது, பாரதிய ஜனதா.

தேசத்தின் இந்து மனசாட்சியை திருப்திப்படுத்துவதற்காக உச்சநீதி மன்றத்தால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட அப்சல் குரு

பாபர் மசூதியை இடிப்பதற்கு சதித்திட்டம் தீட்டியதாகத் தொடுக்கப்பட்ட வழக்கிலிருந்து அத்வானி, ஜோஷி, வினய் கட்யார் போன்ற சதிகாரர்கள் அனைவரையும் விடுவித்து, 2003 இல் பைசாபாத் அமர்வு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தற்போது ஆமோதித்திருக்கிறது அலகாபாத் உயர்நீதி மன்றம். 1992 முதலே மசூதி இடிப்பு தொடர்பான வழக்குகள் திட்டமிட்டே ஒரு நீதிமன்றத்திலிருந்து இன்னொரு நீதிமன்றத்துக்குப் பந்தாடப்பட்டன. வழக்கை விசாரிக்கும் புலனாய்வுத்துறைகள் மாற்றப்பட்டன. அத்வானி வகையறாவைத் தப்பவைக்கும் நோக்கத்துடன், தொழில்நுட்பத்தவறுகள் திட்டமிட்டே இழைக்கப்பட்டன.

இந்த 17 ஆண்டுகளில் டில்லியிலும் உ.பி.யிலும் ஆட்சியில் இருந்த பா.ஜ.க, காங், ஐ. முன்னணி, முலாயம், மாயாவதி ஆகிய அனைவரும் அத்வானி உள்ளிட்ட சங்கப் பரிவாரத் தலைவர்களை விடுவிப்பதற்கு உதவியிருக்கின்றனர். இவை அனைத்தின் இறுதி விளைவு தான் தற்போதைய தீர்ப்பு.

பாபர் மசூதி இடிப்பு என்பது, மும்பை தாஜ் பாலஸ் மீதான தாக்குதலைப்போல இரகசியச் சதித்திட்டம் தீட்டி, திடீரென்று நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல. வரலாற்றுப் புரட்டுகளையும் பொய்களையும் அடிப்படையகக்கொண்டு, பார்ப்பன பாசிசக் கும்பல் நாடு முழுவதும் திட்டமிட்டே அரங்கேற்றிய ஒரு அரசியல் சதியின் இறுதிக் காட்சிதான் பாபர் மசூதி இடிப்பு. அது இறுதிக் காட்சியும் அல்ல என்பதை அதனைத் தொடர்ந்து வந்த மும்பை, குஜராத் படுகஒலைகள் நிரூபித்தன. ரைஷ்டாக் தீவைப்பில் தொடங்கி, ஆக்கிரமிப்புகள் யூதப் படுகொலைகள் போன்ற பல சதிகளுக்கும் குற்றங்களுக்கும் அடிப்படையாக இருந்தது ஹிட்லரின் நாஜிசம். அந்த அடிப்படையை விட்டுவிட்டு, யூதப் படுகொலையை மட்டும் சதித்திட்டமாக யாரும் சித்தரிப்பதில்லை. ஆனால் இந்து தேசியம் எனும் பாசிச கிரிமினல் அரசியலைச் சட்டபூர்வமானதாக அங்கீகரித்துக்கொண்டு, மசூதி இடிப்பை மட்டும் தனியொரு சதித்திட்டமாகக் காட்டும் பித்தலாட்டம்தான் அயோத்தி வழக்கு என்ற பெயரில் நடத்தப்பட்டு வருகிறது. ஓட்டுக்கட்சிகள், ஊடகங்கள், அதிகார வர்க்கம், நீதித்துறை போன்ற இந்திய ஜனநாயகத்தின் எல்லாத் தூண்களாலும் முட்டுக்கொடுத்து நிறுத்தப்பட்டிருக்கும் இந்தப் பித்தலாட்டம், அதன் தர்க்க ரீதியான முடிவை எட்டியிருக்கிறது.

1983 வரை உள்ளூரிலேயே விலை போகாமலிருந்த ஒரு பிரச்சனையைத் ‘தேசிய’ப் பிரச்சனையாக்கி, ரதயாத்திரை நடத்தி நாடு முழுவதையும் ரத்தக் களரியாக்கி, பின்னர் 1992 ல் மசூதி இடிப்பை முன்னின்று நடத்திய அத்வானி உள்ளிட்ட படுகொலை நாயகர்கள் சதி வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு விட்டனர். இந்து மதவெறியின் காலாட்படையாகச் செயல்பட்ட ஊர்பேர் தெரியாத சில ‘அஜ்மல் கசாப்கள்’ தான், மசூதி இடிப்புக்கு சதித்திட்டம் தீட்டிய குற்றவாளிகளாக தற்போது வழக்கில் எஞ்சியிருக்கின்றனர். மசூதி இடிப்பில், அத்வானி உள்ளிட்ட தலைவர்களின் நேரடிப் பாத்திரம் பற்றியும், உயர்நீதி மன்றம் மற்றும் உச்சநீதி மன்றத்தின் மறைமுகப் பாத்திரம் பற்றியும் சென்ற ஆண்டு வெளியிடப்பட்ட லிபரான் கமிசன் அறிக்கை ஆதாரங்களுடன் விவரித்த போதிலும், அத்வானியின் பாதுகாப்பு அதிகாரியாகச் செயல்பட்ட அஞ்சு குபதா சாட்சியமளித்த போதிலும், காங்கிரசு அரசு அசைந்து கொடுக்கவில்லை. அலகாபாத் உயர்நீதி மன்றத்தின் தற்போதைய தீர்ப்பின் மீதும் மேற்கூறிய உண்மைகள் எந்தவித செல்வாக்கையும் செலுத்தவில்லை. ஏனென்றால், இந்திய ஜனநாயகத்தை தாங்கி நிற்கும் இந்த ‘பேலூர் தூண்களுக்கு’ அடியில் கண்ணுக்கு புலப்படாத ஒரு இடைவெளி இருகிறது. அதனுள் ஒரு காகிதத்தைப் போல் நுழைந்து வெளியே வருகிறது இந்து மனச் சாட்சி.

பாபர் மசூதி இடிப்புக்கும், அதற்கு முன்பும் பின்பும் நடந்த ரத்தக் களரிக்கும் தளபதியாகச் செயல்பட்ட அத்வானியை நீதிமன்றத்தின் இந்து மனசாட்சி விடுதலை செய்துவிட்டது


தன்னுடைய தங்கையை காதல் மணம் செய்த ஈழவ சாதி இளைஞன் பிரபு, அவனது தந்தை மற்றும் வீட்டிலிருந்த இரு குழந்தைகளை வெட்டிக் கொலை செய்த தீபக் என்ற பார்ப்பன சாதி வெறியனுக்கு விதிக்கப்பட்டிருந்த தூக்கு தண்டனையை ரத்து செய்த உச்சநீதி மன்றம் (டிசம்பர் 2009), “தவறாக இருந்த போதிலும், இயல்பான சாதி உணவுக்குத்தான் தீபக் பலியாகியிருக்கிறான் எனும் போது, அவனைத் தூக்கிலிடுவது நியாயம் ஆகாது. சாதி மத மறுப்புத் திருமணம் போன்ற சமூகப் பிரச்சனைகள் தொடர்பான குற்றங்கள் இழைக்கப்படும் போது, அவை எவ்வளவுதான் நியாயமற்றவையாக இருந்த போதிலும், குற்றவாளீயின் உளவியலைக் கணக்கில் கொள்ள வேண்டியதிருக்கிறது” என்று கூறியிருக்கிறது.

சாட்சியங்களே இல்லாதபோதும் அப்சல் குருவின் மரணதண்டனையை நியாயப்படுத்த, பாதிக்கப்பட்ட தேசத்தின் மனோநிலையை மனோநிலையை துணைக்கழைத்த உச்சநீதி மன்றம், பார்ப்பன சாதி வெறியனை காப்பாற்ற விழையும் போது குற்றவாளியின் மனோநிலையைப் பரிசீலிக்கச் சொல்கிறது. இதே அளவுகோலின்படி அஜ்மல் கசாப்பின் உளவியலைப் பரிசீலித்தால், குஜராத் முஸ்லீகள் வேட்டையாடப்படுவதைக் கண்டுஇசுலாமிய தீவிரவாதத்துக்கு பலியான அந்த இளைஞனின் தூக்குத் தண்டனையும் ரத்து செய்ய வேண்டியிருக்கும். எனினும் நீதிமன்றம் அப்படிச் சிந்திக்கவில்லை. சிந்திப்பதில்லை.

வெவ்வேறு வழக்குகள்… வெவேறு நீதிமன்றங்கள்… ஆனாலும் அவற்றின் தீர்ப்புகளை ஆழ்கின்ற உளவியல், ஆதிக்கசாதி இந்து மனத்திலிருந்தே பிறக்கிறது. இந்திய அரசியல் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம்…. எல்லாம் இருக்கத்தான் செய்கின்றன – காகிதத்தில்.

இந்திய நீதித்துறையின் இதயத்தை இந்து மனசாட்சி தான் வழி நடத்துகிறது.

புதிய ஜனநாயகம் ஜூன் 2010 இதழிலிருந்து

2 thoughts on “நீதித்துறையை ஆள்கிறது இந்து மனசாட்சி!

  1. ஆனாலும் இதைத்தான் ஜனநாயகம் என்கின்றனர். இதைக் காப்பாற்றத்தான் விவாதமும் செய்கின்றனர்.

  2. செங்கொடி ஒரு ரகசிய முஸ்லிமா?

    இதோ செங்கொடியின் முஸ்லிம் ரத்தம் அஜ்மல் கசாப்புக்கும், அப்சல் குருவுக்கும், பாபரி பள்ளிக்கும் ஒரு சேர கொதிக்கிறது. இஸ்லாத்தை எதிர்ப்பது போல் நடித்து, நல்லா காபிர்களுக்கு பாய் அல்வா கொடுக்கிறார்.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s