பத்தாவது நாளாக தொடர்ந்துகொண்டிருக்கிறது வழக்குறைஞர்களின் பட்டினிப் போராட்டம். நீதிமன்றங்களில் வழக்கு மொழியாகவும், அலுவல் மொழியாகவும் தமிழையும் அங்கீகரிக்கவேண்டும் எனும் கோரிக்கையுடன் மதுரையில் தொடங்கிய இந்த பட்டினிப் போர் சென்னை, புதுவை, கோவை, புதுக்கோட்டை என விரிவடைந்து கொண்டிருக்கிறது. பல்வேறு அமைப்புகளும், மக்களும் ஆதரவளித்து வருகிறார்கள். தமிழ் மொழி பேசும் மக்கள் வாழும் மாநிலத்தில் தமிழ் மொழியையும் வழக்கு மொழியாக செயல்படுத்துங்கள் என போராடும் நிலை என்பது முரண்பாடான ஒன்றாய் தோன்றலாம், ஆனால் இந்த முரண்பாடு மொழியோடு மட்டும் முடிந்துவிடுவதன்று. மக்கள் வாழ்நிலைகள் இற்றுப்போய் ஒவ்வொரு நாளையும் கடுஞ்சிரமமின்றி கழிக்கமுடியாது எனும் அளவுக்கு தள்ளிவிட்டுவிட்டு மொத்த அரசு இயந்திரமும் செம்மொழி மாநாட்டுக்காக பாடுபட்டுக்கொண்டிருக்கும் முரண்பாட்டைப் போல் ஏராளம்.
உலகத் தமிழ் செம்மொழி மாநாடு சிறப்புறத் தொடங்கவிருக்கும் வேளையில் இதென்ன தொல்லை என்பதாகத்தான் இதை அரசு பார்க்கிறது. அதனால் தான் இந்தக் கோரிக்கைக்காக அரசு ஏற்கனவே செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்பது போல் பட்டியல் அறிக்கையும், தூண்டி விடுகிறார்கள் என்று லாவணிக் கச்சேரியும் செய்துவருகிறார் கருணாநிதி. அழகிரியை அனுப்பி அடக்கிவைக்கச் சொல்கிறார். ஆனால் பழரசம் கொடுத்து புகைப்படம் எடுத்துக்கொள்வதற்கு அவர்கள் கழகக் கண்மணிகள் அல்லவே. மறுபுறம் தனி ஈழம் அமைத்துத்தருவேன் என்றதைப் போலவே நான் ஆட்சிக்கு வந்தால் தமிழை வழக்கு மொழியாக்குவேன் என்கிறார் ஜெயலலிதா. 67க்குப் பிறகு தொடர்ச்சியாக ஆண்டுவரும் இரு கட்சிகளும் இதற்காக செய்ததென்ன? தமிழ் எனும் தீக்குச்சியால் உரசினால் ஓட்டுப்பொறுக்க முடியும் என்றால் அனல் பறக்கும் வசனங்களுடன் வீதிக்கு வருவார்கள். ஓட்டு அறுவடை செய்யமுடியாத இடத்தில் உழுவது எதற்கு? வாரிசுகளுக்கு பதவி என்றால் சக்கர நாற்காலியில் தன்னையே பொட்டலமாக கட்டிக்கொண்டு தில்லிக்கு பறக்க முடியும். மேலவைக்கு அனுமதி என்றால் நான்கே நாட்களில் நாடாளுமன்றத்தை வளைக்க முடியும். என்றாலும், அரசியல் சாணக்கியர் கடிதம் எழுதி காரியம் முடிப்பார், காத்திருங்கள்.
மக்கள் என்ன நினைக்கிறார்கள் இப்போராட்டம் குறித்து? பருப்பு விற்கும் விலையில் நீதிமன்றங்களில் ஆங்கிலத்தில் வாதாடினால் என்ன? தமிழில் வாதாடினால் என்ன? வாழ்க்கையை கடக்கவேண்டி ஓடும் வேகத்தில் நீதிமன்ற மொழியில் நிதானிக்க முடியாது. எந்தப் போராட்டம் என்றாலும் விலகி நிற்கும் மக்களுக்கு இது ஒரு வாய்ப்பாடாகவே பயன்பட்டுக்கொண்டிருக்கிறது. தன் முன்னால் நிகழும் ஒன்றின் சரி தப்பு என்ன என்பதைவிட தனக்கு என்ன சாதகம் பாதகம் என்னும் அளவீடுகளுக்கே பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். போராடுவது பிழைக்கத் தெரியாதவனின் வேலை என்பது அவர்கள் வாழ்வியலின் வீழ்படிவு. ஆனால் ஒவ்வொருவரும் போராடும் அவசியத்திலிருக்கிறார்கள். பருப்பு விலையின் பின்னாலிருக்கும் அரசியலுக்கும், நீதிமன்றங்களின் வழக்கு மொழியின் பின்னாலிருக்கும் அரசியலுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை. விலைவாசிகள் ஏன் உயர்கின்றன? எனும் கேள்விக்கான பதிலிலிருக்கும் நுண்மையான செயல்பாடுகள் மக்களுக்கு எளிதில் விளங்கி விடுவதில்லை. காரணம் சாமானியனுக்கு கல்வி எதற்கு என்பது போல் நிர்வாகவியல் விவகாரங்கள் எல்லோருக்கும் எளிதாய் இருக்கவேண்டிய அவசியமில்லை. சமூகத்தின் பெரும்பாலான பிரிவினர் உணவைப்பற்றி மட்டுமே சிந்தித்தால் போதுமானது அதற்கு மேல் ஒன்றும் அவர்களுக்கு தேவையில்லை என்று அவர்களை சுரண்டும் கூட்டம் தீர்மானித்து வைத்திருப்பதைப் போல; சாமானிய மக்களின் வழக்கு விவகாரங்கள் அவர்களுக்கு எளிதில் புரியும் மொழியில் இருந்தால் வழக்கின் நியாய அநியாயங்கள் எளிதில் பிடிபடுவதாக இருந்தால் நீதிமன்றங்களின் மாட்சிமை இங்கு கேள்விக்கு உள்ளாக்கப்படுமல்லவா? அதனால் தான் வட்டார மொழிகளில் வழக்காடுவது தேவையில்லை என தீர்மானிக்கப் பட்டிருக்கிறது. கோடிக்கணக்கான மக்கள் பேசும் மொழியை வட்டார மொழி என விளிக்கும் திமிர் வேறு எங்கிருந்து வந்திருக்கும்?
சிலர் நினைக்கிறார்கள், செம்மொழி மாநாடு நடக்கவிருக்கும் இந்நேரத்தில் உண்ணாவிரதம் இருப்பது அரசியலல்லவா? என்று. ஆம் அரசியல் தான். தமிழுக்கு செம்மொழித்தகுதி வாங்கித்தந்து விட்டேன், மாநாடு நடத்துகிறேன் என்று சினிமாவுக்கு பாட்டெழுதுபவர்களைக் கொண்டு பாராட்டிப் பாடிக் கொள்வதற்கு, தமிழை அரியணையில் வீற்றிருக்கச் செய்வதாக தன்னை எழுதிக்கொள்வதற்கு அரசு இயந்திரத்தையும் பல கோடிகளையும் கொட்டிக்கொண்டிருக்கும் இந்த நேரம் தானே வீட்டிற்குள்ளே வரமுடியாமல் தமிழ் வீதியில் நிருத்தப்பட்டிருக்கிறது என்பதை அம்பலப்படுத்த சரியான நேரம். அரசு அலுவலகங்களில் தமிழர்களை வதைக்கும் திட்டங்களை தீட்டிக்கொண்டு முகப்பில் தமிழ் வாழ்க என்று மின்னொளிப் பலகை வைப்பதையும்; மக்களின் வாழ்வை சீரழிக்கும் அத்தனை பெருமுதலாளிகளையும் அழைத்து அவர்களின் லாபத்திற்கு எல்லா சலுகைகளையும் உத்திரவாதங்களையும் செய்து கொடுத்துவிட்டு வெளிநாட்டு தமிழறிஞர்களை அழைத்து கலைச்சொற்களையும் ஆய்வறிக்கைகளையும் பேசிவிட்டால் தமிழ் வளர்ந்துவிடும் என்பதையும், கன்னத்தில் அறைவதுபோல் அம்பலப்படுத்திக்காட்டும் தமிழில் வழக்காடும் உரிமை வேண்டும் எனும் இப்போராட்டம் மிகச்சரியான தருணத்தில் தான் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இன்னும் சிலர் ஆங்கிலத்தில் இருக்கும் சட்டங்களை, தமிழுக்கு மாற்றுவது என்ன அவ்வளவு சுலபமான காரியமா? பல மொழிகள் இருக்கும் நாட்டில் பொது மொழியில் வழக்காடுவது தானே சரியாக இருக்கும்? தமிழ் தெரியாத நீதிபதிகளிடம் தமிழில் எப்படி வழக்காட முடியும்? என்றெல்லாம் சிந்திக்கிறார்கள். தமிழ் கலைச்சொற்கள் இல்லாத மொழியோ கலைச்சொற்கள் உருவாக இடமில்லாத வேர்ச்சொற்களற்ற மொழியோ அல்ல. கணிணியில் எந்த இந்திய மொழியும் எட்டமுடியாத அளவில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது தமிழ் என்பதை கண்டுகொண்டிருக்கிறோம். முகம் தெரியாத பலர் இதில் தங்கள் பங்களிப்புகளை செய்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் சட்டத்துறைக்கு மட்டும் எப்படி தமிழ் அன்னியமாகிவிடமுடியும்? இன்னும், மாவட்ட அளவிலான நீதிமன்றங்களில் தமிழ் வழக்கு மொழியாக இருந்துகொண்டிருக்கிறது. பொது மொழி என்பதும் ஏற்கமுடியாத ஒன்றுதான். வட மாநிலங்களில் இந்தி வழக்கு மொழியாக இருக்கிறது அங்கு பொது மொழி பிரச்சனை எழவில்லையே. இந்திக்கு பொது மொழி அவசியமில்லை தமிழுக்கு அவசியம் என்பது ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் எனும் ஆர்.எஸ்.எஸ் கொள்கையின் திருந்திய வடிவம். அதை ஏற்பதற்கில்லை. வழக்குகளோடு தொடர்புடைய மக்கள் என்ன மொழி பேசுகிறார்களோ அந்த மொழியில் வழக்குகளை நடத்துவதுதான் சரியாக இருக்கும். வழக்காளிகளுக்காகத்தான் வழக்கே தவிர நீதிபதிகளுக்காக வழக்கல்ல. அந்தந்த மாநில நீதிபதிகளை நியமிக்கலாம். இந்தி தெரியாத நீதிபதிகள் இந்தி பேசும் மாநிலங்களில் நியமிக்கப்பட்டால், நீதிபதிக்கு இந்தி தெரியாது அதனால் இந்தியில் வழக்காடக் கூடாது என்பது எவ்வளவு அபத்தமோ அதுபோன்றது தான் நீதிபதிக்கு தமிழ் தெரியாது என்பதற்காக தமிழில் வழக்காடக் கூடாது என்பதும்.
தமிழில் வழக்காடிவிட்டால் எல்லாருக்கும் சம நீதி கிடைத்துவிடும் என்றோ, மற்ற எல்லாப் பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் என்றோ யாரும் நினைத்துவிடமுடியாது. குறைந்த பட்சம் வழக்கு நடக்கும் லட்சணம் மக்களுக்கு தெரியும். எந்த அடிப்படையில் லட்சக்கணக்கான வழக்குகள் தேங்கிக்கிடக்கின்றன என்பது வெளிப்படையாகும். எல்லாவற்றுக்கும் மேலாக சொந்த மொழியில் வழக்கு நடத்துவது என்பது அடிப்படை உரிமைகளில் ஒன்று. ஆகவே இது உரிமைக்கான போராட்டம்.
தற்போது இரவோடு இரவாக போராடும் வழக்குறைஞர்களை கைது செய்து அப்புறப்படுத்திவிட்டு போராட்டத்தை நசுக்கிவிட அரசு முனைகிறது. அரசின் நோக்கமும், எண்ணமும் தமிழ் வழக்கு மொழி என்பதுதான் என்று அறிக்கைவிடும் அரசுதான் அதே கோரிக்கைக்காக போராடுபவர்களின் போராட்டத்தை நசுக்க முனைகிறது. எந்தப்போராட்டமானாலும் அதை நீர்த்துப் போகச் செய்வது அல்லது நீக்கிவிடுவது என்பது தான் அரசின் செயல்முறை. ஏனென்றால் அரசு என்பதன் உள்ளீடு அரசு பிச்சையிடும் உரிமைகளை மக்கள் பொருக்கிக் கொள்ள வேண்டும் என்பது தானேயன்றி உரிமைக்களுக்காக மக்கள் போராடக்கூடாது. போராட்டம் விரிவடைகிறது, போராட்டத்திற்காக சாலை மறியல், இரயில் மறியல் நடந்திருக்கிறது.
போலியாய் தமிழை முன்னிறுத்தும் பிழைப்புவாதிகளை புறக்கணித்து மக்கள் இப்போராட்டத்தை ஆதரிக்க வேண்டும். ஆதரிப்பதன் மூலம் இதை ஒரு தொடக்கமாக மாற்றிக்காட்டவேண்டிய அவசியத் தேவை மக்களுக்கு இருக்கிறது.
தி மு காவில் தமிழர்களே கிடையாதா
Please do not send these kind of messages/kacchadas again
Thank you
மிகவும் தேவையான அரசியல் போரட்டம். அனைத்திலும் தமிழ் என்பதே எம் கோரிக்கை!