செம்மொழி மாநாட்டின் ஆரவாரத்தில் அடங்கிப் போனது தமிழ்


எங்கும் செம்மொழி, எதிலும் செம்மொழி. மன்னிக்கவும், எங்கும் செம்மொழி மாநாடு, எதிலும் செம்மொழி மாநாடு. அனைத்து வகை ஊடகங்களும் அரசின் கவனிப்பில் (அல்லது கண்காணிப்பில்) திக்குமுக்காடிப் போய் செம்மொழி மாநாடு என்றே தீர்க்கின்றன. திருவிழாக்கூட்டம் போல் கோவை நிறைந்திருக்கிறது. பல்நாட்டு அறிஞர்கள் ஆய்வேடுகள் சாற்றுகிறார்கள். கலைச்சொற்கள் காற்றில் பரவுகின்றன. அக்கால மன்னர்கள் பரிசில் வழங்கியது போல், அறிஞர்கள் பட்டமும் விருதும் பெறுகிறார்கள். மக்கள் அரங்க அமைப்பையும், ஆரவாரத்தையும் கண்டு பேருவகை அடைகிறார்கள். ஆனால் தமிழ்? ஆய்வேடுகள் ஒப்பிக்கப்பட்டு விடுவதால் மட்டும் தமிழ் வளர்ந்துவிடுமா? மாரடைப்பு நோய் நெஞ்சில் களிம்பு தடவுவதால் சரியாகி விடுமா?

ஒரு மொழி வளரவேண்டுமென்றால் அம்மொழி பேசும் மக்கள் சிறப்பாக வாழவேண்டும் என்பது இன்றியமையாததாகும். மக்கள் சிறப்பாக வாழ்வது என்பது அம்மக்கள் கொண்டிருக்கும் அரசியல் விழிப்புணர்வோடும், அதற்கான போர்க்குணத்தோடும் தொடர்புடையது. அரசியல் விழிப்புணர்வு தான் மொழியின் ஆழுமையை மக்களுக்கு உணர்த்தவல்ல கருவி. ஆனால் தமிழை வாழவைக்க மாநாடு நடத்துபவர்களின் நோக்கம் மக்களின் அரசியல் விழிப்புணர்வை முடக்குவதாக இருக்கும்போது, மாநாடும், இனியவை நாற்பதும் தமிழுக்கு என்ன இனிமையை கூட்டிவிட முடியும்?

ஈழத்து மக்கள் அரசியல் ரீதியாக முடமாக்கப் பட்டிருக்கிறார்கள். முதலாளிகளின் வேட்டையை முன்னிருத்தி மக்களின் வாழ்வைப் பறிக்கும் அனைத்தையும் உடனிருந்து செய்து முள்வேலிகளுக்குள் முடக்கிவிட்ட பின் மாநாடு வந்தா அவர்களின் மொழியைக் காக்கும்?

பல்வேறு நாடுகளில் தமிழர்கள் வாழ்ந்துவந்தாலும் இலங்கையிலும் இந்தியாவிலும் தான் தேசிய இனம் என்று குறிப்பிடத்தக்க வகையில் இருக்கிறார்கள். இலங்கையில் மொழி வளர்ச்சி குறித்து பேசும் சூழல் இல்லை. தமிழ் நாட்டிலோ மொழியை வளர்ப்பதற்கான எந்தக் குறிகளும் இல்லை. மழலையர் கல்வி முதல் ஆய்வுக்கல்வி வரை தமிழுக்கு இடமில்லை. தமிழ் மொழியில் கற்றால் வேலை வாய்ப்புக்கு அது உதவாது என்ற நிலை ஒரு பக்கம் என்றால்; மறுபக்கம் கல்வி கற்கும் வாய்ப்பே மக்களுக்கு மறுக்கப்படுகிறது. கல்வித்துறையை அரசு கைகழுவி நாட்களாயிற்று. தனியார் பள்ளிகள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே அரசு பள்ளிகள் கவனிப்பாரற்று விடப்படுகின்றன. கிராமப்புற பள்ளிகள் போதிய சேர்க்கையில்லை என்பதால் மூடப்படுகின்றன. ஆனால் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமலும், வேண்டிய வசதிகளை செய்து கொடுக்காமலும் அரசு மாணவர்களை தனியார் பள்ளிகளை நோக்கி விரட்டிவிடுகிறது. தனியார் பள்ளி கல்லூரிகள் கல்வி எனும் பெயரில் மக்களை கொள்ளையடிக்கின்றன. அந்தக் கொள்ளை சட்டரீதியாக ஏற்றுக்கொள்ள சட்டங்கள் செய்கிறது அரசு.

தமிழை வளர்ப்பதற்கு  என்ன சூழல் நிலவுகிறது தமிழ் நாட்டில்? நலத்திட்டங்கள் எனும் பெயரில் செய்யப்படும் அனைத்தும் தமிழர்களை மக்களை கொள்ளையிடுவதையே இறுதி இலக்காக கொண்டுள்ளன. விவசாயிகள் விவசாயத்தை விட்டு துரத்தப்படுவதால் வேறற்று அவர்கள் நகரியச்சூழலில் நடப்படுகிறார்கள். சிறுகடை வியாபாரிகள் உட்பட எந்தத் தொழிலைச் செய்பவர்களாக இருந்தாலும் அவர்கள் தொழிலைவிட்டு விரட்டப்படும் சூழலை அரசு திட்டமிட்டு செய்துவருகிறது. மக்களை நசுக்கிவிட்டு மாநாடு நடத்தினால் மொழி வளர்ந்துவிடுமா?


எந்தக்காலத்தில் மன்னர்கள் தமிழை காத்தனர்? அவர்கள் செய்ததெல்லாம் தம்மைப் பாராட்டி முதுகு சொறிந்து விடுபவர்களுக்கு உழைப்பவர்களின் சொத்தை பரிசாக கொடுத்தது தான். அன்றைய முடி சூடிய மன்னர்களும் உழைக்கும் மக்களை வாழவைக்கவில்லை, குடியரசு அரிதாரம் பூசிய இன்றைய மன்னர்களும் உழைக்கும் மக்களை வாழவைக்கப் போவதில்லை. பின் யாருக்காக மொழி? மக்கள் பசியால் பீடிக்கப்பட்டு தூர தேசங்களுக்கு கால்நடையாய் சென்றுகொண்டிருக்கையில் போர்ப் பரணி பாடிய கவிதைகளாலா தமிழ் வாழ்ந்தது? இன்று கருணாநிதியை பாராட்டித் தொடங்கும் ஆய்வறிக்கைகளாலா தமிழ் வாழ்ந்துவிடப் போகிறது? அன்றும் இன்றும் தமிழை வாழவைத்துக்கொண்டிருப்பவர்கள் உழைக்கும் மக்கள். பேச்சு வழக்கில் முட்டும் சொற்களை அடக்கி நீட்டிக்குறைத்துப் பேசியவன் உழைக்கும் தமிழன். அதை அழபெடையாய் குறிப்பெடுத்தவன் கவிஞன். உருவாக்கிய உழைக்கும் மக்களை நசுக்கிவிட்டு குறிப்பெடுத்த கவிஞர்களுக்கு பாராட்டா? இன்று கணிணிப் பயன்பாட்டில் தமிழ் ஐந்தாம் இடத்தில் இருக்கிறதாம், பெருமைப் படுகிறார்கள். ஆனால் இதை சாதித்துக் காட்டியவர்கள் இலங்கைத் தமிழர்கள். தாம் செல்லும் இடங்களுக்கெல்லாம் தமிழை சுமந்து சென்றவர்கள். அரசுகள் ஒரு முயற்சியும் செய்யாதபோதே எழுத்துறுக்களை வடிவமைத்தவர்கள், அதை ஒருங்குறியாக்க முயற்சித்தவர்கள். அவர்களை இனப்படுகொலை செய்துவிட்டு மாநாடுகள் நடத்துவதாலா தமிழ் வளரும்?

இதுபோன்ற மாநாடுகள் மூலம் எப்படி தமிழ் வளர்க்கிறார்கள்? பழந்தமிழ் நூல்களை பரவச் செய்வதாக கூறிக்கொண்டு தம்மை துதி பாடுபவர்களுக்கு பதவிகள் கொடுத்து மொழிபெயர்ப்பு என்ற பெயரில் தமிழைப் பெயர்த்தெடுப்பார்கள். சில ஆண்டுகளுக்கு முன்னால் தமிழக அரசு மொழிபெயர்த்த நூல்களில் பிழைகள் மலிந்துள்ளன என்று திரும்பப் பெறப்பட்டது. கடந்தமுறை இவர்கள் ஆட்சியில் இருந்தபோது கலைச்சொல்லாக்கம் என்ற பெயரில் துறை ஒன்று உருவாக்கப்பட்டது ஆனால் பதவிக்காலம் முடியும் வரை ஒருமுறை கூட அது கூட்டப்படவே இல்லை. நடப்பு பிரச்சனைகளிலிருந்து மக்களை திசைதிருப்ப மாநாட்டுத் திருவிழா நடத்தி, தமிழ் விழாதிருக்க ஒரு விழா; ஒல்காப்புகழ் தொல்காப்பியம் என்றெல்லாம் பகட்டாய் மொழிந்து நான்கு நாள் கூத்தை முடித்துவிட்டு பதவிச்சண்டையில் சாணக்கியம் காட்டத் திரும்பி விடுவார்கள். வீணாக்கப்பட்ட மக்கள் பணத்தையா தமிழ் வளர்ச்சி என்பது?

பள்ளிகளில் தமிழை துரத்திவிட்டு தமிழை வாழவைத்துவிட முடியுமா? தாய் மொழியில் கற்பது கவைக்குதவாது எனும் நச்சை மக்களிடம் விதைத்துவிட்டு தமிழை அறுவடை செய்துவிட முடியுமா? புதிய தொழில் நுட்பங்களை தமிழுக்கு இறக்குமதி செய்யாமல் பழங்கதைகளை ஏற்றுமதி செய்வதால் தமிழ் செலவாணியாகிவிடுமா? மக்கள் வாழ்வை அறுத்துவிட்டு தமிழை பிழைக்கவைத்து விடமுடியுமா?

அன்று தொடங்கி இன்றுவரை தமிழை வாழவைத்துக்கொண்டிருப்பவர்கள் மக்கள். தாங்கள் சந்தித்துவரும் சுரண்டல்களை எதிர்கொள்ளும் போராட்ட வடிவில் தொடர்ந்து அவர்கள் தமிழை வளர்ப்பார்கள். பள்ளிகளிலும் இன்னும் எல்லாத் துறைகளிலும் தனியார்களை நுழைத்தவர்களை விரட்டியடிக்கும் போராட்டத்தினூடாக அவர்கள் தமிழையும் காப்பார்கள்.

5 thoughts on “செம்மொழி மாநாட்டின் ஆரவாரத்தில் அடங்கிப் போனது தமிழ்

 1. கலைஞரிலே இருக்கும் காழ்ப்பிலே இப்படி எல்லாம் உலறாதீர்கள். வாசித்து பாருங்கள் செம்மொழி மகாநடு வெற்றியை.நீங்கள் ஊலை இடுவதாலே மட்டும் கலைஞரின் வெற்றியை தடுக்கமுடியாது. அறிஞர்களும் டாக்டர்களும் அவரின் பக்கமே
  http://muelangovan.blogspot.com/

 2. மக்கள் வாழாமல் மொழி வாழாது என மடையர்களுக்குச் சொல்லி என்ன பயன்@

  சொம்பு தூக்கிகளுக்கு கலைஞர் போதும்!..

  உண்மையில் தமிழுக்கா நடந்தது மாநாடு தாத்தாவுக்கல்லவா நடந்தது@

  – ஜெகதீஸ்வரன்!
  http://sagotharan.wordpress.com

 3. தமிழுக்கு மாநாடு தமிழனுக்கு சுடுகாடு !!!

  இடுகையைப் படிக்க இங்கே வாருங்கள் சொம்பு தூக்கும் தமிழர்களே@

  http://sagotharan.wordpress.com/2010/06/25/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%a9%e0%af%81%e0%ae%95/

  தமிழன் வாழாமல் தமிழை வாழவைக்க எப்படி முடியும்!….

  – ஜெகதீஸ்வரன்!
  http://sagotharan.wordpress.com

 4. அரசியல் வேறு; மொழி வேறு ;
  அது தெரியாமல் பலர் மாநாட்டு மேடையை கலங்க படுத்திவிட்டார்கள்.
  பரவாயில்லை; அறியாதவர்கள்..
  கோவை மக்களாகிய எங்களை தமிழ் சுவாசிக்க வைத்ததற்கு மாநாட்டிற்கு நன்றி நவில்கிறேன்.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s