மீண்டும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு: மக்களை வயிற்றிலடித்து தாளமாய் ரசிக்கும் கொடூரம்

இந்த ஆண்டில் மூன்றாவது முறையாக பெட்ரோல் டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. இதற்கு வழக்கம் போல சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்துவிட்டது, பெட்ரோலிய நிறுவனங்களின் இழப்பு அதிகரிக்கிறது, நட்டம் என்று காரணங்கள் கூறப்படுகின்றன. இதிலும், தவிர்க்கவியலாத நிலையில் சிறிதளவே உயர்த்தியிருப்பதாகவும், பெட்ரோல் பயன் படுத்துவோர் இதைத் தாங்கும் அளவுக்கு சக்தி படைத்தவர்கள் என்றும் சமாதானம் வேறு. அப்படி என்ன தவிர்க்கவியலாத நிலை அரசுக்கு? கடந்த சில ஆண்டுகளாகவே பன்னாட்டளவில் கச்சா எண்ணெயின் விலை ஏறியும் இறங்கியும் ஊசலாடிக்கொண்டு தான் இருக்கிறது. கச்சா எண்ணெய் விலை குறையும் போது விலையை குறைக்கமுடியாது ஏண்ணெய் நிறுவனங்கள் ஏற்கனவே நிறைய நட்டமடைந்திருக்கின்றன என்று கூறினார்கள். இப்போது கச்சா எண்ணெயின் விலை அப்படி ஒன்றும் திடீரென்று அதிகரித்து விடவும் இல்லை. ஆனாலும் பெட்ரோலியப் பொருட்களின் விலை படிப்படியாக உயர்த்தப்பட்டுக்கொண்டே இருக்கிறது.

கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு 17 லிருந்து 30 டாலருக்குள் ஆறுமாத காலம் நீடித்திருந்தது, அது 50 டாலரை எட்டியதிலிருந்து விலை உயர்த்தப்படவேண்டும் என்று கூப்பாடு போடத்துவங்கினார்கள் இன்றைக்கு 80 டாலராக வருவதற்குள் இரண்டு முறை விலை உயர்த்தப்பட்டுவிட்டது. ஆனால் பீப்பாய்க்கு 140 டாலர் விற்றபோது என்ன விலையில் விற்கப்பட்டதோ அதே விலையில் தான் 80 டாலரில் இருக்கும் இன்றும் விற்கப்படுகிறது எனும் போது, இப்போது விலையை உயர்த்த வேண்டிய அவசியமென்ன?

எப்போதெல்லாம் எரிபொருள் விலை உயர்த்தப்படுகிறதோ அப்போதெல்லாம் எண்ணெய் நிறுவனங்கள் நட்டத்தை சந்திக்கின்றன என்பதே பல்லவியாய் திரும்பத்திரும்ப பாடப்படுகிறது. ஆனால் அது உண்மையல்ல. வருவாய் இழப்பு என்பதைத்தான் நட்டம் என்று மக்களை ஏமாற்றுகிறார்கள். ஆனால் உண்மையில் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் லாபத்திலேயே இருக்கின்றன. கடந்த 2009 – 2010 நிதியாண்டில் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் 10,200 கோடியும்; பாரத் பெட்ரோலியம் 1,500 கோடியும்; ஹெச்.பி.சி.எல் 1,300 கோடியும்; ஓ.என்.ஜி.சி 16,700 கோடியும்; கைல் 3,140 கோடியும் லாபமாக ஈட்டியுள்ளன. இந்த நிலையில் பெட்ரோலிய நிறுவனங்கள் நட்டத்தை சந்திப்பதால் விலை உயர்வு என்பது யாரை ஏமாற்ற?

சர்வதேச அளவில் தற்போது கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு 77 டாலராக விற்கிறது. இதன்படி ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் சற்றேறக்குறைய 34 ரூபாய் வருகிறது. இந்தக் கச்சா எண்ணெயிலிருந்துதான் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. கச்சா எண்ணெயைப் பொருத்தவரை கழிவு என்பதே கிடையாது. பாரபின் மெழுகு போன்ற அனைத்துப் பொருட்களும் பிரித்தெடுத்தபின் எஞ்சியிருப்பது சாலை போட பயன்படுத்தும் தாராகிறது. 34 ரூபாய் கச்சா எண்ணெயிலிருந்து பல பொருட்களைத் தயாரித்தும், பெட்ரோல் விலை ரூபாய் 55 வரை விற்றும் பெட்ரோலிய நிறுவனங்கள் நட்டத்தை சந்திக்கின்றன என்பது எப்படி?

எண்ணெய் நிறுவனங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதற்கும், பெட்ரோல் டீசல் விலை இந்த அளவு உயர்வாய் விற்கப்படுவதற்கும் சர்வதேச அளவில் விலை ஏறுவதும் இறங்குவதும் காரணமல்ல. அது மத்திய மாநில அரசுகள் விதிக்கும் வரிகளில் நிலை கொண்டிருக்கிறது. தற்போது விற்கப்படும் பெட்ரோல் டீசல் விலையில் 51.25 விழுக்காடு வரிகள் தாம், அதாவது நாம் பெட்ரோலுக்கு கொடுக்கும் விலையில் பாதிக்கும் சற்று அதிகமாக வரியாகத்தான் கொடுக்குறோமேயன்றி பெட்ரோலுக்கான விலையாகவல்ல. மத்திய மாநில அரசுகள் வரியைக் குறைத்துக்கொண்டாலே விலை உயர்வுக்கு அவசியமில்லாமல் போகும். ஆனால் அரசுகள் தங்கள் செய்யும் ஊதாரித்தனமான செலவுகளையும், முதலாளிகளுக்கு கொடுக்கும் சலுகைகளையும் சமாளிப்பதற்கு பெட்ரோல் டீசல் மீது விதிக்கும் வரிகளையே பெரிதும் சார்ந்திருக்கின்றன. இப்படி கோடிகோடியாக வரி என்ற பெயரில் கொள்ளையடிக்கும் அரசுகள், அதில் கொஞ்சம் மானியமாக தந்துவிட்டு அதனால் தான் நட்டம் என நாடகமாடுகின்றன.


மத்தியில் எந்தக் கட்சி ஆட்சியமைத்தாலும், பெட்ரோலியப்பொருட்களுக்கு மானியம் தந்து மக்களைக் காப்பதுபோல் ஒரு பொய்த் தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. பெட்ரோலியப் பொருட்களிலிருந்து வரியாக அரசு பெறும் தொகையோடு ஒப்பிட்டால் மானியம் என்பது ஒன்றுமில்லை என்பது ஒருபுறமிருக்க, இந்த அரசுகள் பன்னாட்டு நிறுவனங்களுக்கு, முதலாளிகளுக்கு வழங்கும் சலுகைகளை வெளிப்படையாக சொல்வதில்லை. கடந்த நிதிநிலை அறிக்கையில் முதலாளித்துவ நிறுவனங்களுக்கு கம்பனி வரி உள்ளிட்ட நேரடி வரிவிதிப்புகளில் அளித்திருக்கும் சலுகை மட்டும் 80,000 கோடியாகும். இது தவிர கலால் வரி, சுங்கவரி போன்ற வரிவிதிப்புகளிலிருந்து அளிக்கப்பட்டுள்ள சலுகை மொத்தம் 4,19,786 கோடியாகும். அதாவது ஒரு ஆண்டில் மொத்தம் 5 லட்சம் கோடியை முதலாளிகளுக்கு மானியமாக அள்ளிக்கொடுத்துவிட்டு, பெட்ரோலியப் பொருட்களுக்கு மானியம் கொடுப்பதால் அந்நிறுவனங்கள் நட்டமடைகின்றன என்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் அல்லவா?

இதுவரை பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தியதற்கும் இப்போது உயர்த்தியிருப்பதற்கும் இடையில் ஒரு வித்தியாசம் இருக்கிறது. இந்த முறை பெட்ரோல் டீசல் விலையை மட்டும் உயர்த்தவில்லை, கிரிட் பாரிக் பரிந்துரைகளை ஏற்று விலை நிர்ணயத்தில் அரசின் கட்டுப்பாடுகளை நீக்கியிருக்கிறது. அதாவது,  இதுவரை எரிபொருட்களின் விலையை அரசு தான் தீர்மானித்து வந்தது. பெட்ரோல் டீசல் விலையை உயர்த்துவது என்று தீர்மானித்துவிட்டு, ஒப்புக்கு அமைச்சரவை கூடி விவாதிக்கும். தேர்தல் காலம் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்பதைப் பொருத்து விலையை தீர்மானிக்கும். இப்போது அதிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு பெட்ரோல் டீசல் விலைகளை பெட்ரோலிய நிறுவனங்களே தீர்மானிக்கும் என்று அறிவித்திருக்கிறது. இதன்படி 15 நாட்களுக்கு ஒரு முறை சர்வதேச விலை நிலவரங்களுக்கு ஏற்ப பெட்ரோலிய நிறுவனங்களே விலையை அறிவிக்கும். பெட்ரோலிய நிறுவனங்களின் வருவாய் இழப்பை சரிக்கட்ட கிரிட் பாரிக் பரிந்துரையை அமல்படுத்துவது அவசியம் என்று கூறப்பட்டாலும் உண்மை அதுவல்ல.

இந்தியாவின் மொத்த எரிபொருள் தேவையில் 74 விழுக்காடு வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி  செய்யப்படுகிறது. மீதமுள்ள 26 விழுக்காடு இந்தியாவிலேயே கிடைக்கிறது. இந்தியாவில் கிடைக்கும் 26 விழுக்காடு எரிபொருளை அரசு துரப்பணம் செய்யவில்லை, மாறாக ரிலையன்ஸ், எஸ்ஸார் போன்ற தனியார் நிறுவனங்களே செய்கின்றன. இந்த தனியார் நிறுவனங்கள் அண்மையில் நாடெங்கும் பெட்ரோல் டீசல் விற்பனையை தொடங்கி விலை கட்டுபடியாகவில்லை என்று மூடிவிட்டன. இந்த தனியார் நிறுவனங்களுக்கு பெட்ரோல் விலையை அரசே தீர்மனிப்பது பிடிக்கவில்லை. அதனால் அவை விற்பனை நிலையங்களை மூடிவிட்டு அரசுக்கு நெருக்குதல் கொடுத்தன. இதை ஏற்றுத்தான் தற்போது விலையை பெட்ரோல் நிறுவனங்களே தீர்மானித்துக்கொள்ளட்டும் என அரசு நழுவியிருக்கிறது.

பெட்ரோல் டீசல் விலை என்பது எரிபொருளை மட்டும் குறிக்கும் விலையல்ல. பெட்ரோல் விலையில் ஒரு காசு உயர்ந்தாலும் அது அனைத்துப் பொருட்களின் விலையிலும் எதிரொலிக்கும். பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு என்பது, நாட்டின் அனைத்துப் பொருட்களின் விலை உயர்வுக்கும் காரணியாக அமையும் ஒன்றாகும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றை தனியார்களின் தீர்மானத்திற்கு விட்டிருப்பது ஒன்றே அரசு மக்கள் மீது எந்த அளவுக்கு அக்கரையை கொண்டிருக்கிறது என்பதை விளக்குவதற்குப் போதுமானதாகும். வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்க்கு அரசு ஏகப்பட்ட வரிகளை விதித்து பெட்ரோல் இந்த விலையில் விற்கிறது. ஆனால் உள்நாட்டில் எடுக்கப்படும் கச்சா எண்ணெய்க்கும் தனியார் நிறுவனங்கள் இதே விலையில் தான் விற்று மக்களை மொட்டையடிக்கின்றன. இந்த தனியார் நிறுவனங்களின் கைகளுக்குள் விலையும் வந்துவிட்டதால், இனி எந்த அளவுக்கு அவை மக்களை கொள்ளையடிக்கும் என்பதற்கும் இது ஒன்றே போதுமானதாகும்.

மத்திய இந்தியாவின் காடுகளில் கனிம வளம் கொட்டிக்கிடப்பதால், பன்னாட்டு நிறுவங்களும் தரகு முதலாளிகளும் அவைகளை எடுத்து கொழுக்க வேண்டும் என்பதற்காக ஆண்டாண்டு காலமாக அங்கு வாழ்ந்துவரும் பழங்குடி மக்களை விரட்டியடிப்பதற்கும், கொல்வதற்கும் துணிந்திருக்கிறது அரசு. அதேபோல்தான், பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வினாலும் அதன் வழியாக ஏற்படும் விலைவாசி உயர்வினாலும் நூறுகோடி மக்கள் பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை, சில தனியார் நிறுவனங்கள் மட்டும் வருமான இழப்பை அடைந்துவிடக் கூடாது என்பதில் அரசு மிகக் கவனமாய் இருக்கிறது. அதாவது ஓட்டு வாங்கவேண்டும் என்பது போன்ற திரை மறைப்புகளையெல்லாம் கடந்து வெளிப்படையாகவே அரசு என்பதன் வர்க்கத்தன்மையை காட்டிவிட்டது. இனி மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டியது தான் மீதமிருக்கிறது.

5 thoughts on “மீண்டும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு: மக்களை வயிற்றிலடித்து தாளமாய் ரசிக்கும் கொடூரம்

  1. ரகுபதி ராகவ ராஜாராம்… தேசத் தந்தை காந்திக்கு நாமம் போடுவோம்.

  2. தமிழ்மணம் விருதினை வென்றதற்கு வாழ்த்துகள் தோழர்.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s