போலி மோதல் கொலைகள் மற்றும் குஜராத், மோடி


மீண்டும் குஜராத் போலி மோதல் கொலைகள் இந்திய ஊடகங்களில் வலம் வருகிறது. ஒரு அலையைப் போல் சில நாட்கள் பேசப்படுவதும், அடங்கிவிடுவதும் பின் வேறொரு நாளில் மீண்டும் எழுவதும் என இதன் ஏற்றவற்றங்களினால் பெறப்படவேண்டிய உண்மை ஆழ்கடலில் மூழ்கிப் போயுள்ளது. தேர்தல் லாபத்திற்காக நடத்தப்பட்ட கொலைகள் என்று காங்கிரசும், நாட்டில் ஆயிரக்கணக்கில் போலி மோதல் கொலைகள் நடந்திருக்கும் போது குஜராத்தை மட்டும் கேள்வி எழுப்புவது ஏன்? என்று பாஜக வும் மெய்யான அதன் கிடக்கையை பேசுபொருளாக்குவதில் இருந்து போலி மோதல் கொலைகளை தள்ளிவைக்கின்றன.

மோடிக்கு அடுத்த இடத்திலிருக்கும் அமித் ஷா கைது செய்யப்பட்டிருப்பதும், மைய புலனாய்வுக் குழுவின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதும் சோராபுதீன் விவகாரத்தில் நீதி வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகளை செய்வதைப்போல் தோற்றம் காட்டினாலும், மெய்யாகவே அமித் ஷா உள்ளிட்ட அனைவரும் தண்டிக்கப் பட்டாலும் கூட (அப்படி நடக்கப் போவதில்லை என்றாலும்) அது ஒரு கொலை நிகழ்ச்சி அதற்கான தண்டனை என்பதைத் தாண்டி எதையும் வெளிப்படுத்தப் போவதில்லை.

போலி மோதல் கொலைகள் ஆத்திரத்தினாலோ, பகைமை உணர்ச்சியினாலோ நடைபெறுவதில்லை. அது திட்டமிட்டு அரசியல் நோக்கங்களுக்காகவே நடத்தப்படுகின்றன. குஜராத்தில் நிகழ்ந்த போலி மோதல் கொலைகளுக்கு மோடியை கொல்ல செய்யப்பட்ட சதி முறியடிக்கப்பட்டதாகவே ஒவ்வொரு முறையும் காரணம் கூறப்பட்டிருக்கிறது. தேர்தல் பிரச்சார நேரத்தில் இந்த போலி மோதல் கொலைக்கான காரணங்கள் மக்களிடம் உரங்களாக தெளிக்கப்பட்டு ஓட்டுக்களாக அறுவடை செய்யப்பட்டிருக்கின்றன. எனில் கொலைக்கான தண்டனை என்பது மட்டும் நீதியாக இருக்கமுடியுமா?

இந்த சோராபுதீன் விவகாரத்தில் கூட 2005 நவம்பர் 26ல் சோராபுதீன் சுட்டுக் கொல்லப்பட்டதும், சோராபுதீன் லஷ்கர் இ தொய்யிபா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி, மோடியை கொல்லும் நோக்கத்தில் வந்தவன் என்று காவல் துறை அதிகாரிகள் அறிவித்ததைத் தொடர்ந்து சாட்சிகளை சுட்டுக்கொன்றதிலிருந்து இன்று வரை காவல் துறையும் அரசு எந்திரமும் அவர்கள் சொன்ன பொய்யான காரணத்தை மெய்ப்படுத்துவதற்காக செயல்பட்டு வந்திருக்கின்றனர். இவைகளை கொலைக்கான தண்டனை என்பதோடு முடித்துக் கொண்டுவிடலாமா?


குஜராத் மட்டுமல்ல காஷ்மீர் தொடங்கி வடகிழக்கு மாநிலங்கள் ஈறாக சில நாட்களுக்கு முன்னர் கொல்லப்பட்ட தோழர் ஆசாத் கொலை உட்பட தினந்தோறும் போலி மோதல் கொலைகள் நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றன. அரசை எதிர்ப்பவர்கள் தொடங்கி அரசின் பொய்ப் பிரச்சாரத்திற்கு பயன்படும் என்றால் எவரும் இந்த போலி மோதல் கொலைகளிலிருந்து தப்பித்துவிடமுடியாது. பதக்கங்களை குத்திக்கொள்வதற்காக கொல்வதிலிருந்து தொடங்கி, மாவோயிஸ்டுகளுடன் பேச்சு வார்த்தை நடத்தத் தயார் என்று கூறிக்கொண்டே அதற்கான முனைப்புகளைச் செய்த தோழர் ஆசாத் சுட்டுக்கொல்லப்பட்டதுவரை அரசின் விருப்பத்திற்காக, அரசின் ஆசைகளை நிறைவேற்றுவதற்காகவே தினந்தோறும் கொலைகள் நடத்தப்படுகின்றன. எனும்போது எங்காவது ஒரு பிரச்சனையில் மாட்டிக்கொள்ள நேரும் போது ஒரு கொலை அதற்கான தண்டனை எனும் அளவில் இந்த போலி மோதல் கொலைகள் தீர்க்கப்பட்டால், இது என்ன வகைத் தீர்வு?

அரசின் விருப்பிற்காக அதை நிறைவேற்றுவதற்காக செய்யப்படும் கொலைகள் பொய்யான காரணங்களினால் தான் மக்கள் மத்தியில் பரப்பப்படுகிறது, அல்லது மோதல் கொலைகளின் மெய்யான காரணங்களை மக்களிடம் வெளிப்படையாக சொல்ல முடிவதில்லை என்பது; அரசு என்பது மக்களின் தேவைகளுக்காக, மக்களை நிர்வகிப்பதற்காக இருக்கவில்லை எனும் உண்மை அவர்களாலேயே வெளிப்படுத்தப்படும் இடமாகும். மோடி மக்களுக்கான அரசாக செயல்பட்டிருக்க முடியாது என்பதால் தானே சோராபுதீனைக் கொன்று மோடியை கொல்லவந்ததாக காட்டி ஓட்டு வாங்கவேண்டிய தேவை ஏற்படுகிறது. காவல் துறையும், ராணுவமும் மக்களை காப்பதற்குத்தான் என்றால் அப்பாவி பொதுமக்களைக் கொன்று தீவிரவாதியாக சித்தரித்து பதக்கம் வாங்க வேண்டிய அவசியம் ஏன் எழுந்தது? அரசு மாவோயிஸ்டுகளுடன் பேச்சு வார்த்தை நடத்தத் தயார் என்றால் தோழர் ஆசாத்தை கொல்லும் தேவை எப்படி ஏற்பட்டிருக்க முடியும்?

அரசின் திட்டங்கள், செயல்பாடுகள், நோக்கங்கள் என எதுவும் மக்களுக்கானதாக இருப்பதில்லை. அவை தரகு, பன்னாட்டு முதலாளிகளுக்காகவே இருக்கின்றன, அவர்களுக்காகவே இயங்குகின்றன. அவர்களின் தேவையை நிறைவேற்றுவதற்காகவே ஒவ்வொரு திட்டமும் தீட்டப்படுகிறது. இவைகளை புள்ளிவிபரங்கள், தரவுகள் ஊடாக நிரூபிக்கமுடியும். விலைவாசி உயர்வு முதல் மக்களை பாதிக்கும் அனைத்துப் பிரச்சனைகளும் எங்கிருந்து உருவம் கொள்கின்றன என்பதை அரசுகளின் செயல்பாட்டு திட்டங்களின் மூலமே மறுக்கவியலாத வகையில் வெளிப்படுத்த முடியும். என்றாலும் இவைகளை வேறொரு கோணத்திலிருந்து, வேறொரு தளத்திலிருந்து வெளிப்படுத்துபவைகள் தாம் போலி மோதல் கொலைகள்.

தோழர் ஆசாத்

போலி மோதல் கொலைகளில் உள்ளாடும் இந்த அரசியல் பின்னணியை விளக்காமல், போலி மோதல் கொலைகள் ஏன் நடக்கின்றன என்பதை வெளிப்படையாக விவாதிக்காமல்; இவைகளை பேசுபொருளாக்குவதை கவனமாக தவிர்த்துவிட்டு வெகுசில நிகழ்வுகளில் விசாரிப்பதனாலோ, தண்டனை வழங்கிவிடுவதாலோ போலி மோதல் கொலைகளை தடுத்துவிட முடியாது. முதலாளிகளுக்கான அரசை தக்கவைத்துக் கொண்டு போலி மோதல் கொலைகளை தடுத்துவிட முடியும் என நினைக்கவும் முடியாது. ஏனென்றால் வெளிப்படையான ஜனநாயகம் என்பது இதில் சாத்தியமில்லை. பாட்டாளிகளுக்கான அரசு ஏற்படும் போது மட்டுமே, பாட்டாளிகளின் சர்வாதிகாரம் நிருவப்படும் போது மட்டுமே இவைகளைத் தீர்க்க முடியும்.

தொடர்புடைய கட்டுரைகள்

மோடி விசாரணை: நீதி வென்றுவிட்டதா?

குஜராத் அமைச்சரின் தலைமறைவு: நீதிக்கு இன்னும் தூரமிருக்கிறது

பூவரசியை சபிப்பதற்கு முன்னால் நாம் பதில் சொல்லவேண்டிய கேள்விகள் சில இருக்கின்றன நண்பர்களே

இந்த வார தமிழக அதிர்ச்சி சிறுவன் ஆதித்யாவின் கொலை. சாதாரணமாக ஒரு கொலைக்கு தமிழ்நாடு இவ்வளவு தூரம் முக்கியத்துவம் தருவதில்லை, இந்த முறை நமது அதிகப்படியான கோபத்துக்குக் காரணம் கொலை செய்தவர் ஒரு பெண் என்பதால்தான். தனது காதலரின் நான்கு வயது மகனை கழுத்தை நெரித்துக் கொன்று பிறகு சூட்கேசில் வைத்து பஸ் ஒன்றில் வைத்துவிட்டு தப்பிவந்தது அவரது குற்றம். கேள்விப்பட்ட மக்களும் செய்தி வாசித்தவர்களும் கொதித்துப்போய் விவாதிக்கிறார்கள். மக்களின் சிந்தனையை தீர்மானிக்கிற ஊடகங்களும் பூவரசி மீது வசைமாரி பொழிகின்றன. கொலைகாரி, ராட்சசி, கள்ளக்காதலி, கீப் ஆகியன அச்சு ஊடகங்கள் பூவரசியை குறிப்பிடப் பயன்படுத்திய வார்த்தைகளில் சில.

நான் விவாதிக்க விரும்புவது பூவரசி செய்த குற்றம் பற்றியல்ல. ஏனெனில் இதுவரை ஒரு குழந்தையின் கொலைக்காக நாம் இத்தனைதூரம் உணர்ச்சிவயப்பட்டதில்லை என்பதால் குற்றத்தைத் தாண்டி வேறொரு காரணி நம்மை இவ்விடயத்தில் கோபம்கொள்ளவைக்கிறது என்பது தெளிவு. தன் பிள்ளைகளைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொள்ளும் பெற்றோர் பற்றிய செய்திகள் ஏறத்தாழ நாம் தினசரி வாசிப்பவை. பணத்துக்காக குழந்தையைக் கடத்தி கொலைசெய்த சம்பவங்களும் நாமக்கு அவ்வப்போது வாசிக்கக்கிடைப்பவை. தனக்குப் பிறந்ததுதானா என்ற சந்தேகத்திலும் ஜோசியக்காரன் சொன்னதாலும்கூட சொந்தப் பிள்ளையை கொன்ற தந்தைகள் கதையும் நமக்கு புதிதல்ல. எவ்வளவுதான் ஞாபகங்களைக் கசக்கிப் பார்த்தாலும் பூவரசி மீது நமக்கு உண்டான கடுங்கோபம் மற்ற சம்பவங்களின்போது வந்த மாதிரி தெரியவில்லை. ஏன்?

காரணம் மனிதாபிமானமோ அல்லது ஒழுக்கமான வாழ்வின்மீது நமக்குள்ள பிடிப்போ இல்லை, சமூகத்தின் சகல திசைகளிலும் வேரோடியிருக்கும் ஆணாதிக்க சிந்தனையால்தான் நாம் பூவரசியை விசாரணைக்கு முன்னாலேயே வெறுக்கிறோம். அவர் மனநிலை சரியில்லாதவரா அல்லது அவரது காதலர் ஜெயக்குமாரால் மோசமாக ஏமாற்றப்பட்டவரா என்றெல்லாம் நாம் பரிசீலிக்கத் தயாரில்லை (ஒரு தகவல்: மனநிலை பாதிக்கப்பட்டு தன் சொந்தக்குழந்தையைக் கொன்ற தாய்மார்கள் இருந்திருக்கிறார்கள், தமிழ்நாட்டில்கூட ஒரு பெண் தன் கைக்குழந்தையை அரிவாள்மனையில் வெட்டிக் கொன்றிருக்கிறார்). ஏமாற்றப்பட்ட ஒரு கள்ளக்காதலி காதலனின் குழந்தையைக் கொல்வதா என்ற எண்ணம்தான் நம்மை செலுத்துவதாகத் தோண்றுகிறது.

பூவரசி, ஒரு வறிய குடும்பத்தில் பிறந்து முதுகலை பட்டப்படிப்பு வரை படித்திருக்கிறார், சிறந்த மாணவி எனும் தகுதியுடன். வேலைக்கு வந்த வங்கியில் ஜெயக்குமாரை சந்தித்து காதல்வயப்பட்டிருக்கிறார். பத்திரிக்கைகள் பிரயோகிக்கும் கள்ளக்காதலி என்ற சொல்லே நியாயமற்றது. ஏனெனில் ஜெயக்குமார் தனக்குத் திருமணமான விசயத்தையே பூவரசியிடம் மறைத்திருக்கிறார். அவரது உடல் இச்சைகளுக்கு  பயன்படுத்தப்பட்டு இருமுறை கருக்கலைப்பு செய்துகொண்டிருக்கிறார் பூவரசி. இதன்பிறகும் அவர் ஜெயக்குமாரிடம் வைத்த கோரிக்கை தன்னைத் திருமணம் செய்துகொள்ளச் சொன்னதுதான்.  ஒரு பெண்ணின் சாதாரண கோரிக்கை நிராகரிக்கப்படும்போது அதுக்கு நானென்ன பண்ணுறது என்று சுலபமாக கடந்து போகும் நாம் அவர்கள் அசாதாரண காரியம் ஏதேனும் செய்துவிட்டால் பாய்ந்து பிறாண்ட மட்டும் மறப்பதில்லை.

சித்தீ என்று தலைப்பிட்டு இதுபற்றிய செய்தியை பிரசுரித்திருக்கும் குமுதம் ரிப்போர்ட்டர் பூவரசி பற்றிய இரண்டு தகவல்களைத் தந்திருக்கிறது.

” பார்ப்பதற்கு சுமார்தான். இருந்தாலும் தன் வசீகரப்பேச்சால் அனைவரையும் கவர்ந்துவிடுவார். ஜெயக்குமாரையும் தன் வசீகர வலையில் வீழ்த்தினார் பூவரசி.”

“பூவரசிக்கு ஏற்கனவே ஒரு காதல் இருந்திருக்கிறது. 2002 ல் ஒரு வாலிபர் தன்னை காதலித்து (உடலுறவுக்குப் பிறகு) ஏமாற்றிவிட்டதாக போலீசில் புகார் கொடுத்திருக்கிறார்.”

இவ்விரு செய்திகளின் வாயிலாக குமுதம் சொல்ல வருவது என்ன? ஏற்கனவே இருந்த காதல் வாயிலாக அவரது ஒழுக்கம் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. அவர் பேசி மயக்குவார் என்று சொல்வதன் மூலம் மனைவிக்குத் தெரியாமல் பூவரசியுடன் உறவு வைத்திருந்த ஜெயக்குமார் சுலபமாக அப்பாவியாக மாற்றப்பட்டுவிட்டார். இதே குமுதம் பிரகாஷ்ராஜின் புதிய காதல் பற்றிக் குறிப்பிடும் போது ” அவரது ஒரே மகன் இறந்த துக்கத்தில் இருந்தபோது அவருக்கு ஆறுதலாக இருந்த போனி வர்மாவிடம் காதல் கொண்டார்” என்கிறது. கவனியுங்கள் அப்போது லலிதகுமாரி பிரகாஷ்ராஜின் மனைவியாகத்தான் இருந்தார். பிரகாஷ்ராஜுக்கு இரண்டாவது காதல் வந்தால் அது ஆறுதல் தேடி வருவது. பூவரசிக்கு வந்தால் அது ஆண்களை மயக்கும் சுபாவமா ? படிக்கையிலேயே உங்களுக்கு காறித்துப்பத் தோண்றவில்லை? பூவரசியின் முதல் காதல் பிரச்சனையில் போலீசும் அவரது சுற்றமும் நியாயமாகவும் அனுதாபத்துடனும் நடந்து கொண்டிருந்தால் அவருக்கு இரண்டாவது காதல் வருவதற்கான சாத்தியமே இல்லாது போயிருக்கும். ஏன் இது இந்த மானங்கெட்ட குமுதத்துக்கும் அதன் கருத்துடன் ஒத்துப் போவோருக்கும் தோண்றுவதில்லை? (குறிப்பு : ஒரு ஒப்பீட்டுக்காவே பிரகாஷ்ராஜின் விவகாரம் குறிப்பிடப்பட்டிருக்கிறது, நான் விமர்சிக்க விரும்பியது குமுதத்தைத்தானேயன்றி பிரகாஷ்ராஜை அல்ல)

சூழ்நிலையால் குற்றம் செய்பவர்கள் மீது வெறுப்பை உமிழத்தயாராக இருக்கும் நாம் தன் தனிப்பட்ட தேவைகளுக்காக சூழலையே குற்றத்திற்குத் தக்கதாக மாற்றும் நபர்களை ஏன் கண்டுகொள்வதில்லை? ஈழத்துப் படுகொலைகளுக்குப் பின்னால் சோனியாவின் பழிவெறியும் தனிப்பட்ட தேவைகளும் இல்லையா? அவர் அன்னை சோனியா என்று அழைக்கப்படும்போது அதை சாதாரணமாக எடுத்துக்கொள்கிறோம் ஆனால் பூவரசியை மட்டும் நீ ஒரு பெண்ணா என்று கேட்கிறோம். அநியாயமில்லையா இது?

காதலன் வீட்டு வாசலில் காதலி உண்ணாவிரதம் என்ற செய்திகளைப் படித்தபோது என்ன செய்தீர்கள்? காதல் தோல்வியில் பெண் தற்கொலை என்ற செய்தி கேட்கையில் என்ன செய்தீர்கள்? உங்கள் பணியிடத்தில் யாரேனும் அவுசாரியென பட்டம் கட்டப்பட்டிருந்த தருணத்தில் (இது ஒன்றுக்கு மேற்பட்ட காதல்களில் தோல்வியடைந்த பெண்களுக்குத் தரப்படுவது) நீங்கள் யார் பக்கம் நின்றீர்கள்? காதலித்த பெண்னை ஏமாற்றிவிட்டு நான் எதையும் இழந்துவிடவில்லை என்று என்று இருபொருள்பட சொன்ன இளைஞனுடனான பழக்கத்தை நான் சொரணையில்லாமல் தொடர்ந்திருக்கிறேன். நீங்கள் என் நிலையில் இருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்? பிள்ளைகளுடன் உள்ள மனைவியை இழந்தவருக்கு ‘குழந்தை இல்லாத விதவை அல்லது விவாகரத்தான’ மணமகள் தேவை எனும் விளம்பரம் உங்கள் மனதை எப்போதேனும் உறுத்தியிருக்கிறதா? இந்தக் கேள்விகளுக்கு நியாயமாக பதில் தேடினால் நாம் எந்த அளவுக்கு பெண்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கிறேம் என்பது புரியும்.

சம்பாதிக்கும் பெண்ணாக தேடிவிட்டு அவர் எதிர்த்துப் பேசினால் சம்பாதிக்கிற திமிர் என்று  என்று அடையாளமிடும் சமூகத்தில் வாழ்கிறோம். காதலித்து கர்பமாக்கி ஏமாற்றிய புகார்களில் ஆணின் பெற்றோர்கள் பெரும்பாலானவர்கள் வழக்கை ‘செட்டில்’ செய்யவே முயற்சிக்கிறார்கள். மனைவியை அடிப்பது தவறில்லை என்றும் திருமணம் செய்துகொள்வதாக ஆசைகாட்டி உடலுறவு கொள்வது கற்பழிப்பாகாது என்றும் நீதிமன்றங்களே தீர்ப்பளிக்கும் தேசமிது. பதிவிரதா தர்மம் நம் நாட்டில் வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் தவறாமல் போதிக்கப்படுகிறது. காதலனுடன் திருமணத்துக்கு முன்னால் உடலுறவு வைத்திருந்த பெண்கள் இங்கு முற்றிலுமாக நண்பர்களாலும் வீட்டாராலும் புறக்கணிக்கப்படுவதை நான் பல சந்தர்பங்களில் பார்த்திருக்கிறேன். இப்படிப்பட்ட புறக்கணிப்பே இப்படிப்பட்ட பெண்களை (அயோக்கியன் என்றாலும்) அந்தக் காதலனின் காலிலேயே விழ வைக்கிறது. அவனும் நிராகரிக்கின்ற வேளை வரும்போது இவர்கள் முற்றிலும் நிலைகுலைந்து போகிறார்கள். தனித்து விடப்படுவதால் முதல் முட்டாள்தனத்தை சரிசெய்ய இன்னொரு முட்டாள்தனத்தை செய்கிறார்கள்.

ஆதித்யாவை கொலை செய்வதற்கு முன்பிருந்த பூவரசியின் நிலைக்கு ஒப்பானவர்கள் நம்மைச் சுற்றியும் நிறைய இருக்கிறார்கள். அவர்களின் எல்லோரும் புலம்புகிறார்கள், அழுகிறார்கள், காவல் நிலையத்தில் புகார் தருகிறார்கள் மீறிப்போனால் தற்கொலை செய்துகொள்கிறார்கள். அவர்களில் பூவரசி மட்டும் காதலனின் மகனை கொலை செய்யும் அளவுக்கு போயிருக்கிறார். நேர்மையாக சொல்வதானால் அவரது குற்றத்தில் நம் எல்லோருக்கும் பங்கிருக்கிறது. இந்த வழக்கிலும் பாருங்கள் இப்போதும்கூட ‘என் கணவர் நல்லவர்’ என்கிறார் ஜெயக்குமாரின் மனைவி, பூவரசியின் தரப்பில் ஒருவர்கூட அவரைக்காண வரவில்லை. ஆணுக்கும் பெண்ணுக்கும் இருவேறு ஒழுக்கவிதிகளையும் நியாயங்களையும் நாம் வைத்திருக்கிறோம் என்பது இவ்வழக்கு விவாதிக்கப்படும் விதத்தில் அப்பட்டமாகத் தெரிகிறது.

பூவரசி தண்டிக்கப்படுவார் என்பதில் நாம் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை, அவரும்கூட தன்னை தண்டியுங்கள் என்றுதான் சிறையில் மன்றாடிக்கொண்டிருக்கிறார். ஆகவே இந்தத் தருணத்தில்  இன்னொரு பூவரசி உருவாகாமல் தடுப்பதற்கு நாம் ஏதேனும் செய்திருக்கிறோமா என்பது நாம் நம்மிடம் கேட்டாக வேண்டிய கேள்வி. சீக்கிரம்.. இன்னொரு ஆதித்யா கொல்லப்படும் நாள்வரை நாம் காத்திருக்கலாகாது.

அறிமுகம்


இந்த இடுகையை தந்தது தோழர் வில்லவன். அரசியல் சமூகம் சார்ந்த தனது சிந்தனைகளை வில்லவன் எனும் பெயரில் வலைதளத்தில் தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்.

வலைதள முகவரி: http://villavan.wordpress.com/

மின்னஞ்சல் முகவரி: villavan.r@gmail.com

ஊழலை வெளிக்காட்டியவர்கள் வேட்டையாடப் படுகிறார்கள்தி.மு.க ஆட்சியின் நிறைவுக்காலம். பல்வேறு இலவசத் திட்டங்களால் மக்களைக் கவர்ந்திருக்கிறார்கள், ஆட்சியின் மீது பெரிய அளவில் மக்கள் எதிர்ப்பு என்று ஒன்றுமில்லை, விலை வாசி உயர்வு, மின்சாரத்தட்டுப்பாடு ஆகியவை மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தாலும் டிசம்பரில் தேர்தலை நடத்தத் திட்டமிடுவதால் அப்போது மின் தட்டுப்பாடு ஒரு பிரச்சனையாக இருக்காது என்றும், விலைவாசி உயர்வு பிரச்சனையை பணபலம் சமாளிக்கும் என்றும், காங்கிரசுடன் கூட்டணி, பாமக சேரும் எனும் நம்பிக்கை இவற்றோடு அதிமுக விலிருந்து தொடர்ந்து தாவல்கள் நடைபெறுவது என்று எல்லாவற்றையும் கூட்டிக்கழித்து அடுத்தமுறையும் திமுக அணியே மீண்டும் வெல்லும் என அதன் அடிவருடிகள் தங்களின் கணக்கை விதைத்துக்கொண்டிருக்க; ஆட்சிப் பொறுப்பிலிருப்பவர்களோ கலங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நிகழ்வுகள் காட்டுகின்றன.

அண்மையில் பொதுப்பணித்துறையை கையில் வைத்திருந்த அமைச்சர் துரைமுருகன் அதிலிருந்து நீக்கப்பட்டார். அப்போது கேரளாவுடனான முல்லைப் பெரியாறு சிக்கலை சரியாகக் கையாளவில்லை என்பது காரணமாகக் கூறப்பட்டது. ஆனால் அதன் மெய்யான பின்னணிகள் இப்போது அம்பலமாகியிருக்கின்றன. வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் வழியாக வழங்கப்பட்ட வீட்டு மனைகளில் நடைபெற்ற முறைகேடுகள் இப்போது வெடித்துப் பரவி வருகிறது.

கடந்த 2008 ஆம் ஆண்டில் தலைமைச் செயலாளர் திரிபாதியும், லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக இருந்த உபாத்யாயாவும், அமைச்சர் பூங்கோதையும் பேசிய தொலைபேசி பேச்சுக்கள் ஊடகங்களில் வெளிவந்தன. அரசின் ரகசியச் செயல்பாடுகள் வெளிவந்த அதில் வெளியே கசியவிட்டதாக கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் வெளிவந்த லஞ்ச ஒழிப்புத் துறையில் சிறப்பு உதவியாளராக இருந்த சங்கர் எனும் அதிகாரி, அரசின் ஊழல்களை முறைகேடுகளை சவுக்கு எனும் பெயரில் அம்பலப்படுத்தி வருகிறார். (இவர் நடத்திவரும் இணைய தளங்கள் சவுக்கு படைப்புகள், தமிழக மக்கள் உரிமைக் கழகம், இலக்கு) சில நாட்களுக்கு முன்னர் இவர் காவல்துறை உயர் அதிகாரிகளான ஜாபர் சேட், சங்கர் ஜீவால், நக்கீரன் இதழின் துணை ஆசிரியரான காமராஜ் ஆகியோருக்கு வீட்டு மனைகளை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முறைகேடாகவழங்கியது தொடர்பான ஆதாரங்களை வெளியிட்டார். இதைக் கண்டு அதிர்ந்துபோன அதிகாரவர்க்கம், சாலையில் சென்ற ஒருவரை தாக்கி வழிப்பறி செய்ததாக பிணையில் வெளிவரமுடியாத சட்டப் பிரிவுகளில் கடந்த புதன் கிழமை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது.

இது மட்டுமல்ல, மதுரை ரெங்கசாமி புரத்தில் அரசுக்குச் சொந்தமான நிலத்தில் விதிமுறைகளை மீறி கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு வருவதை அம்பலப்படுத்திய தினபூமி நாளிதழின் ஆசிரியர் மணிமாறனையும் கைது செய்து சிறையில் அடைத்துளனர்.

இது புதியது என்றோ, அதிசயமானது என்றோ கருதிவிடமுடியாது. அதிகாரவர்க்கமும் அரசும் என்றும் மக்கள் நல நோக்கில் எதையும் செய்ததில்லை, செய்வதில்லை. செயல்படுத்தப்படும் ஒவ்வொரு திட்டத்திலும், அரசுகளின் ஒவ்வொரு அசைவிலும் முதலாளித்துவ வர்க்கத்தின் நலனே பிரதானமாய் அடங்கியிருக்கும். அதையே சுற்றி வளைத்து மக்களுக்கான திட்டங்களாய் பசப்புவார்கள். அவை மறுக்கவியலாமல் ஆதாரங்களாய் வெளிப்படும் போது எந்த வெட்கமுமின்றி எந்த வரம்புக்கும் சென்று அடக்கி ஒடுக்க முனைவார்கள். இதற்கான அண்மை எடுத்துக்காட்டாகத்தான் பதிவர் சவுக்கு சங்கரும் தினபூமி மணிமாறனும். பத்திரிக்கையாளர்களைக் கைது செய்வது முன்பே நடந்துவரும் ஒன்றுதான். ஆனால் வலைத்தளத்தில் எழுதியதற்காக கைது செய்யப்படும் முதல் ஆளாக சவுக்கு சங்கர் இருக்கக் கூடும்.
அரசு எந்திரத்தின் கோரமுகம் எனும் வகையில் மக்களிடம் எடுத்துச் செல்லும் அதேவேளை சக பதிவர் எனும் முறையிலும் சவுக்கு சங்கர் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை அனைத்து தமிழ் பதிவர்களும் மக்களிடம் எடுத்துச் செல்லவேண்டும்.


இது குறித்து விரிவாக அறிந்துகொள்ள


பதிவர் “சவுக்கு” சங்கர் கைது !

ஒரு மகிழ்ச்சி…. ஒரு சோகம்…..

ஜாபர் சேட்

சங்கர் ஜீவால்

நக்கீரன் காமராஜ்

செஞ்சேனையின் வளர்ச்சி ௧

ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம் பகுதி: ௧௩


தனது வாழ்க்கை வரலாறு என்ற பகுப்பாய்விலிருந்து மாசேதுங் வெளியேறி, ஒரு பாரிய இயக்கத்தில், தமது கடமை என்ற ஓரளவு தெளிவுற்ற, இயல்பான விருப்புடைய மாற்றத்துனுள் மாசேதுங் மாற்றமுற்றார். மேலதிகமான கடமையில் அவர் இருந்த போதிலும் அவரை ஒரு தனித்துவமான மனிதர் என்ற அடிப்படையில் எங்களால் உணரமுடியவில்லை. அவரது வரலாற்று விளக்கம் தற்போது “நான்” என்ற அடிப்படையில் அல்லாது “நாங்கள்” என்ற அடிப்படையிலேயே இருந்தது. அந்த “நாங்கள்” என்ற திஓற்ற வெளிப்பாடு செஞ்சேனையையே குறித்தது. இது தற்போது ஒரு தனிப்பட்ட மனிதனின் வாழ்க்கை அனுபவம் என்ற இலக்கின் தாக்கமாக இருக்கவில்லை. வரலாற்றின் தொகுபொருள் என்ற கூட்டிணைந்த மானிட விதியின் ஒரு பார்வையாளன் தொகுத்து வழங்கிய இலக்கு நோக்கிய வரலாற்றுப் பதிவாகவே இருந்தது.

அவரது வாழ்க்கை வரலாறு அதன் இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்த போது அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி நான் அவரிடம் விசாரிப்பது மேலும் மேலும் அத்தியாவசியமாகியது. அந்த நேரத்தில் என்ன பதவி வகித்தார், அல்லது அந்த சூழ்நிலைகள் பற்றிய அவரது கருத்து என்னவாக இருந்தது? இந்த வரலாற்று விளக்கத்தின் இறுதி அத்தியாயத்தில், எனது கேள்விகள் பொதுவாக அவரைப்பற்றிய சில குறிப்புகளை வெளிப்படுத்தவே செய்தன.

படிப்படியாக, வெகுஜனங்களூடான செஞ்சேனையின் பணி முன்னேற்றமடைந்தது, ஒழுக்கக் கட்டுப்பாடு வலுவடைந்தது. நிறுவனக் கட்டமைப்பில் ஒரு புதிய தொழில்நுட்பம் அபிவிருத்தியடைந்தது. புரட்சிக்கு ஆதரவு வழங்க அனைத்து இடங்களிலும் உள்ள விவசாயிகள் தொண்டர்களாக சேரத்தொடங்கினர். சிங் காங் சன் காலத்திலிருந்தே தங்கள் போராளிகள் மீது செஞ்சேனை மூன்று சாதாரணச் சட்டங்களைக் கொண்டிருந்தது. அவைகளாவன, கட்டளைக்கு உடனடியாக கீழ்ப்படிதல், ஏழை விவசாயிகளிடமிருந்து எந்தவிதமான பொருளையும் பறிமுதல் செய்யக்கூடாது, நிலப்பிரபுகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டவைகளை, அவற்றை விநியோகம் செய்வதற்காக அரசாங்கத்திடம் உடனடியாக, நேரடியாக ஒப்படைத்தல். 1928 ஆம் ஆண்டு மாநாட்டுக்குப் (மாவோ பிங் மாநாடு) பின்பு விவசாயிகளின் ஆதரவைப் பெறுவதற்காகப் தீவிர அழுத்தமுள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலே குறிப்பிட்டுள்ள மூன்று சட்டங்களுடன் மேலும் எட்டு விதிகள் சேர்த்துக்கொள்ளப்பட்டன.

௧) ஒரு வீட்டை விட்டு வெளியேறும்போது அதன் கதவுகளை மீளவும் அங்கேயே வைத்துவிடுங்கள் (இந்த விதி வெளிப்படையாகத் தோற்றமளிக்குமளவுக்கு ஒரு சாதாரண விடயமல்ல; ஒரு சீன வீட்டின் மரக்கதவுகளை இலகுவாக கழற்றி எடுக்கப்படக் கூடியவை. அவை பெரும்பாலும் இரவு வேளிஅகளில் கழற்றப்பட்டு மர அடிப்பாளங்களுக்கு மேல் வைக்கப்பட்டு தற்காலிக படுக்கைகளாக பயன்படுத்தப்பட்டன)

௨) படுத்திருந்த வைக்கோல் பாயை சுற்றிமடித்து திரும்பவும் உரிமையாளர்களிடம் கையளியுங்கள்.

௩) மக்களிடம் கவுரவமாகவும், அடக்கமாகவும் நடந்துகொள்ளுங்கள். உங்களால் முடிந்த நேரத்தில் அவர்களுக்கு உதவி செய்யுங்கள்.

௪) கடனாக வாங்கிய அனைத்துப் பொருட்களையும் மீள அளியுங்கள்.

௫) சேதமடைந்த பொருட்களுக்குப் பதிலாக மாற்றீடு செய்யுங்கள்.

௬) விவசாயிகளுடனான அனைத்து கொடுக்கல் வாங்கல்களிலும் நேர்மையைக் கடைப்பிடியுங்கள்.

௭) கொள்முதல் செய்யப்பட்ட அனைத்துப் பொருட்களுக்கும் விலையைப் பணமாகச் செலுத்துங்கள்.

௮) சுகாதாரத்தைப் பேணுங்கள், பொதுமக்களின் வீடுகளிலிருந்து ஒரு பாதுகாப்பான தூரத்தில் மலக்கூடங்களைக் கட்டுங்கள்.

இதில் கடைசி இரண்டு விதிகள் லின் பியாவினால் சேர்த்துக்கொள்ளப்பட்டன. இந்த எட்டு விதிகளும் மேலும் மேலும் வெற்றிகரமாக நடைமுறைப் படுத்தப்பட்டன. இது தற்போதும் கூட ஒரு செஞ்சேனை வீரனின் விதியாக உள்லது. இது மனப்பாடம் செய்யப்பட்டு அடிக்கடி சொல்லப்படுகிறது (இவை செஞ்சேனைப் பாடல்களாக ஒவ்வொரு நாளும் பாடப்படுகின்றன) மற்றும் மூன்று கடமைகள், அதன் ஆரம்ப நோக்கங்களாக செஞ்சேனைக்கு பயிற்றப்பட்டன. முதலாவதாக, உயிர் போகும்வரை எதிரியை எதிர்த்துப் போராடுவது. இரண்டாவதாக, வெகுஜனங்களை ஆயுதமயப் படுத்துவது. மூன்றாவதாக, போராட்டத்துக்கு ஆதரவு வழங்க பணத்தைச் சேகரிப்பது.

1929 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் லீ வென் லுங், லீ ஷாங் த்தூ ஆகியோரின் தலைமையிலான போராளீகள்; மூன்றாவது செஞ்சேனையாக மீள் ஒழுங்குபடுத்தப்பட்டனர். இது வாங்குங் லூவால் தலமை தாங்கப்பட்டது. சென் யீ இதன் அரசியல் கமிசராக இருந்தார். இதே காலகட்டத்தில் சூ பெய் ரேயின் மின் துவானில் ஒரு பகுதி படைக்கலம் செய்து  செஞ்சேனையுடன் சேர்ந்து கொண்டது. லோ பிங் ஹிய் என்ற கோமிண்டாங் கமாண்டரால் இவர்கள் கம்யூனிஸ்ட் முகாமுக்கு அழைத்து வரப்பட்டார். அவர் கோமிண்டாங்குடன் மனம் வெறுத்து செஞ்சேனையில் சேரவிரும்பினார். இவர் தற்போது இரண்டாவது முன்னணி இராணுவத்தின் 32ஆவது செஞ்சேனைப் பிரிவுக்கு கமாண்டராக உள்ளார். பியூ கியென் போராளிகளிலிருந்தும் முறைமை செம்படைத் துருப்புகளிலிருந்தும் 20ஆவது செஞ்சேனை உருவாக்கப்பட்டது. இதற்கு வூ தங் ஹாவ் கமாண்டர், ரான் சென் லின் அரசியல் கமிசார். பின்பு ஒரு சமரில் வூ கொல்லப்பட அவரிடத்துக்கு லோ பிங் ஹிய் நியமிக்கப்பட்டார்.

இந்த நேரத்தில்தான் முதலாவது இராணுவப் பிரிவு ஒழுங்குபடுத்தப்பட்டது. இதற்கு சூடே கமாண்டராக நியமணம் பெற்றார். நான் அரசியல் கம்சாராக நியமிக்கப் பட்டேன். இந்த இராணுவப் பிரிவில் பியாவினால் தலமை தாங்கப்பட்ட 3ஆவது 4ஆவது இராணுவங்களும் லோ பிங் ஹிய்யின் தலைமையிலான 12ஆவது இராணுவமும் அடங்கும். கட்சித் தலமை ஒரு முன்னணிக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கு நான் தலைவனாக இருந்தேன். முதலாவது இராணுவப் பிரிவில் ஏற்கனவே 10000 வீரர்களுக்கு மேல் இருந்தார்கள். அப்போது இந்த இராணுவப்பிரிவு 10 டிவிசன்களாக பிரிக்கப்பட்டிருந்தது. இந்தப் பிரதான படையை விட பல உள்ளூர் மற்றும் தனிப்பட்ட ரெஜிமென்ட்களும் இருந்தன. அதோடு செங்காவலர்கள், போராளிகள் ஆகியோரும் இருந்தனர்.


செஞ்சேனையில் தந்திரோபாயங்கள், அந்த இயக்கத்தின் அரசியல் அடிப்படைகளைவிட அதன் வெற்றிகரமான இராணுவ அபிவிருத்தியையும் விளக்குவதாக இருந்தன. சிங் காங் சானில் 4 சுலோகங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. செஞ்சேனையின் வளர்ச்சிப் பயணத்திற்கு ஊன்றுகோலாக அமைந்த போராளிகள் யுத்த முறைகளை விளக்குபவை இந்த சுலோகங்கள் அமைந்திருந்தன.

௧) எதிரி முன்னேறும் போது நாங்கள் பின்வாங்குவோம்.

௨) எதிரி தனது முன்னேற்றத்தை நிறுத்தி அங்கு முகாமிடுகிறபோது அவனுக்கு தொல்லை கொடுக்கிறோம்.

௩) எதிரி ஒரு சமரைத் தடுத்துக்கொள்ள முயன்றால் நாம் அவன் மீது தாக்குதலை மேற்கொள்ளுகிறோம்.

௪) எதிரி பின்வாங்கத் தொடங்கினால் நாம் அவனைப் பிந்தொடர்கின்றோம்.

இந்த சுலோகங்கள் ஆரம்பத்தில் பல அனுபவம் வாய்ந்த இராணுவத்தினரால் எதிர்ப்புக்குள்ளானது. இவற்றில் முன்மொளியப்பட்டுள்ள தந்திரோபாய முறைஅளை இவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் பல அனுபவங்களை இந்தத் தந்திரோபாயங்களிருந்து பொதுவாக செஞ்சேனை மாறுபடும் போதெல்லாம் அது தோல்வியையே தழுவியது. எங்கள் படைகள் சிறியவை; எங்களுடைய படையைப் போல் 10 முதல் 20 முறை எதிரிகளின் படை எண்ணிக்கையில் அதிகமாக இருந்தது. எங்களுடைய மூலவளங்களும், தளவாடங்களும் வெகு குறைவானதாக இருந்தன. படி நகர்தல், கொரில்லா யுத்தமுறை ஆகியவற்றை திறமையுடன் இணைக்கும் தந்திரோபாயத்தின் மூலம்தான் கோமிண்டாங்குக்கு எதிரான எங்கள் போராட்டத்தில் வெற்றி பெறுவதில் நாங்கள் நம்பிக்கை வைக்கமுடியும். ஏனென்றால் அவர்கள் பெருமளவு அடர்வனமுள்ள, மேலாதிக்கமுள்ள தளங்களிலிருந்து கொண்டு எங்களுடன் மோதினார்கள்.

செஞ்சேனையின் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தனிப்பட்ட கந்திரோபாயமாக முன்பு இருந்ததும், தற்போது இருப்பதுமான தந்திரோபாயம் தான் ஒரு தாக்குதலில் அதன் பிரதான படைகளை ஒருங்குவித்துத் தாக்குவதும் பின்பு விரைவாக அப்படைகளை பிரித்து வேறு வேறாக்கிவிடுவதுமாகும். இது ஒரு நிலையினின்று நகராமல் போரிடும் போர்முறையைத் தவிர்த்துக்கொள்ல வேண்டும் என்பதை எடுத்துக்காட்டியது. அத்தோடு எதிரியின் இயங்கு படைகளை அவர்கள் நகர்வில் இருக்கும்போதே எதிர்கொள்ள அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படவேண்டும் என்றும், அவர்களை அதன் மூலம் அழிக்கவேண்டும் என்றும் வற்புறுத்துகிறது. இந்த தந்திரோபாயத்தின் அடிப்படையில் தான் செஞ்சேனையின் நகர் திறனும், விரைவான, வலிமையான சிறு தாக்குதல் நடைமுறையும் அபிவிருத்தி செய்யப்பட்டன.

பொதுப்படையான, சோவியத் அரசும் பிராந்தியங்களை விரிவாக்குவதில் செஞ்சேனை ஒரு அலை போன்ற ஆளுமையான அபிவிருத்தியையே ஆதரித்தது. கைப்பற்றப்பட்ட பிராந்தியங்களை உறுதிப்படுத்தாமல் ‘குதித்தல்’ ‘பாய்தல்’ வகையிலான அபிவிருத்தியை அது ஆதரிக்கவில்லை. ஏற்கனவே இந்தக் கொள்கை நடைமுறைச் சாத்தியமான தொன்றாகும். இது பல வருடங்கலாக இராணுவ அரசியல் அனுபவங்களின் கூட்டிணைப்பில் மூலம் வளர்ச்சியடைந்த விடயமாகும். இந்த தந்திரோபாயங்கள் லி லி சான் அவர்களால் கடுமையாக கண்டிக்கப்பட்டது. அவர் அனைத்து ஆயுதங்களும் செஞ்சேனையின் கைகளில் குவிக்கப்பட வேண்டுமென்றும், அனைத்து போராளிகுழுக்களையும் செஞ்சேனையில் உள்ளீடு செய்துகொள்ள வேண்டுமென்றும் முன்மொழிந்தார். கைப்பற்றப்பட்ட இடங்களை உறுதிப்படுத்திக்கொள்வதைவிட தாக்குதல்களையே விரும்பி நின்றார். பின்புலத்தை பாதுகாத்துக்கொள்ளாமல் முன்னேறுவதையே ஆதரித்தார். கிளர்ச்சிகளையும் தீவிரவாதத்தையும் இணைத்ததொரு பெரிய நகரங்களின் மீதான கிளர்ச்சியூட்டும் தாக்குதல்களை அவர் ஆதரித்தார். லி லி சானின் செயல்முறைப் போக்குகளே அப்போது கட்சியில் மேலாதிக்கத்தைக் கொண்டிருந்தன. சோவியத் அரசுப் பகுதிகளுக்கு வெளியேதான் இந்த ஆதிக்கம் – ஒரு குறிப்பிட்ட அளவுக்கு, செஞ்சேனையில் இந்தச் செயல்முறைப் போக்கு ஏற்றுக்கொள்வதைத் தூண்டுமளவுக்கு போதுமான செல்வாக்கை அது கொண்டிருந்தது. இது செஞ்சேனையின் தளத் தலைமைப் பீடத்தின் தீர்ப்புக்கு மாறாக இருந்தது. இதன் ஒரு விளைவு சாங்சா மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகும். மற்றது நான் சாங் நோக்கி மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றப் படை நகர்வாகும். ஆனால் இந்தத் துணிகரச் செயல்களின் போது போராளிக்குழுக்களை படை நடவடிக்கைகளில் ஈடுபடாமற் செய்வதற்கும் பின்புலங்களின் பாதுகாப்பைத் தளர்த்துவதற்கும் செஞ்சேனை மறுத்துவிட்டது.

இந் நூலின் முந்திய பகுதிகள்

பதிப்புரை

முகவுரை

மாவோவின் குழந்தைப் பருவம் ௧

மாவோவின் குழந்தைப் பருவம் ௨

ஷாங் ஷா வில் வாழ்ந்த நாட்கள் ௧

ஷாங் ஷா வில் வாழ்ந்த நாட்கள் ௨

புரட்சிக்கு முன்னோடி ௧

புரட்சிக்கு முன்னோடி ௨

தேசியவாத காலகட்டம் ௧

தேசியவாத காலகட்டம்

(சீன) சோவியத் இயக்கம் ௨

கொச்சை படுத்தப் பட்ட ராவணன்


வழக்கமாக பீஃப் சாப்பிடும் பாய் கடையில் நல்ல சுவையான மாட்டு வறுவலை நண்பர்களோடு சாப்பிட்டு கொண்டிருந்தேன். அப்போது பெரியார் தி.க. தோழர் ஒருவர் “ஏனுங் ராவணன் படம் பாத்திங்ளா படம் “நமக்கு’ ஆதரவாக இருக்கிறது ,மணிரத்தனம் பரவாலிங் நல்ல ஆளாட்டந்தான் தெரியுதுங்” என்றார். ராவணன் என்ற டைட்டிலை வைத்து அதுவும் மணிரத்னம் எடுத்து இருக்கிறார் என்றால் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று ஒரு ஐடியா இருந்தது. ஏனென்றால் மணிரத்னம் ரோஜா படத்திலேயே தான் யார் என்பதை காட்டியவர் அடுத்தடுத்து வந்த பம்பாய் உட்பட அவரது  படங்களும் அவர் யாருடைய பிரதிநிதி என்பதை நிருபித்தன. ஆனால் வேலைப்பளு அதிகமாக இருப்பதால் இராவணனை பார்ப்பது தடைபட்டுக் கொண்டே இருந்தது. ஒரு வழியாய் மணிரத்ணத்தின் ராவணனை பார்த்தேன்.
******************

திருடனாக இருந்த வால்மீகி எழுதிய இராமாயணத்தை காலத்திற்கேற்றார் போல் புதுசு பண்ணி  வெளியிட்டிருக்கிறார் மணிரத்னம். சரி அன்று திருடனாயிருந்த வால்மீகி ஏன் இரமாயணம் எழுதினான்? என்று தெரியவேண்டுமென்றால் நமக்கு புஷ்யமித்திர சுங்கன் என்கிற பார்ப்பன அரசனை பற்றி தெரியவேண்டும். அதேபோல் மணிரத்னம் ஏன் இரமாயணத்தை புதியதாக ராவணன் என்று ஏன் வெளியிட வேண்டுமென்றால் நாம் புஷ்யமித்திரனின் வாரிசுகளை இனங்காண வேண்டும். சரி படத்திற்குள் கொஞ்சம் போய் பார்ப்போம்.

வீரா என்ற பெயரில் ராவணனனையும். தேவ் என்ற பெயரில் இராமனையும். ராகிணியாக சீத்தா தேவியையும் புதுசு பண்ணியிருக்கிறார்கள். மற்றபடி கார்த்திக்கை குரங்காகவும் வையாபுரி ஐயரை அலியாகவும் காட்டியிருக்கிறார்கள். அது தேவையில்லாத் மேட்டராக இருப்பதால் அவர்களை விட்டு விட்டு கதைக்கு தொடருவோம்.  ராவணன் ஒரு பழங்குடி இனத்தை சேர்ந்தவன் போலிசால் தேடப்படும் குற்றவாளி அவன் அரசுக்கெதிரான காரியங்களில் ஈடுபடுவதாக கூறுகிறார்கள்

ராவணன் ஏன் கலகம் செய்கிறான்?


ராவணன் குழுவாக இயங்குவது போல காட்டியிருக்கிறார்கள். சரி அவன் எதற்காக குழுவாக இயங்குகிறான்? அந்த குழுவின் நோக்கம் என்ன? அது போராட்டக் குழுவா? அல்லது கூலிப்படையா? என்று கேள்விகள் கேட்டால் அதற்கான பதில் அங்கு இல்லை. மொத்தத்துல ராவணன் அரசுக்கு எதிரானவன் என்று குழப்புகிறார் மணி. குழப்புபவர் குழம்பி போயிருப்பதாக கருத்க்கூடாது  அவர் தெளிவாகத்தான் இருக்கிறார் நம்மதான் தெளிவாக குழப்புகிறார். ராமாயணத்தில் கூட ராவணன் இலங்கையை ஆண்ட அரசன் என்ற செய்திகள் இருக்கும் ஆனால் ராவணனில் அப்படி விவரங்களை காணமுடியவில்லை ஏன்? இராமயணத்தை நவீன படுத்திய மணி ராவணனன் எதற்காக போராடுகிறான் என்பதை நவீன படுத்தாமல் பொத்தாம் பொதுவாக அரசாங்கத்துக்கெதிராக செயல்படுவான் அவ்ளவுதான் என்றளவோடு முடித்துக்கொண்டது ஏன்?

ஒரு ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்கள் இருக்கும் கானகப் பகுதியை காட்டுகிறார்கள் அரசின் வளர்ச்சி திட்டங்களான கல்வி உட்பட் பிற வசதிகள் இல்லாத இடத்தில் ராவணன் அரக்கெதிராக கலகம் செய்கிறான் என்றால் அது வாழ்வாதார பிரச்சனயைல்லவா?  அல்லது விடுதலைப்போர் அல்லவா? அப்படி காட்டினால் என்னாகும் படம் பார்ப்பவர்களுக்கு இந்திய அரசின் காட்டுவேட்டையல்லவா நினைவு வரும் அப்படி காட்டாமல் இருக்க ராவணன் ஒரு காட்டான், பழங்குடியினத்தை சார்ந்தவன் அவன் தேவையில்லாமல் பிரச்சனைகளை வலிய செய்து கொண்டிருந்ததால் அரசு ராமனை (அதுவும் என் கவுன்டர் ஸ்பெலிஸ்ட்) அனுப்புகிறது. அவனுடைய பணி கிளர்ச்சியை ஒடுக்குவது  மட்டுமே அதன் கண்ணியான ராவணனை ஒழிக்க முயல்கிறான், அதன் ஒருகட்டமாக ராவணனின் தங்கை சூர்ப்பநகை திருமணத்திற்கு சென்று என்கவுன்டர் செய்ய முயலுகிறான் குண்டு ராவணனின் தொண்டையில்பட்டு தப்பிக்கிறான். இதற்கிடையே சூர்ப்பநகையை கடத்தி செல்லும்போலிசு (இங்கு ராமன் எஸ்கேப்) பாலியல் வன்முறையை ஏவி கொடுமைபடுத்துகிறது. பிறகு சூர்ப்பநகை கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொள்கிறார்.

இதன் மூலம் மணி சொல்லுவது என்ன?  ராவணனின் வீண் வம்பு சண்டையால்தான் அவன் குடும்பத்துக்கும் பிரச்சனை, போலிசு சூர்ப்பநகையை மட்டும் கடத்தி செல்வதாக காட்டுவதே கேப்மாரித்தனம்.  போலிசு இருக்கும் பெண்களையயல்லாம் கடத்தி கொண்டு பாலியல் வன்புணர்ச்சி செய்து சித்திரவதை செய்வது என்பது  வீரப்பன் பிரச்சனை உட்பட நாம் பார்க்கும் உண்மை. இதை மறைத்து  ஒரு தனிப்பட்ட குடும்பத்திற்கும் போலிசுக்கும் இடையேயான பிரச்சனையாக காட்டி உண்மையை மறைக்கிறார் மணி, அரசுக்கும் பழங்குடியின மக்களுக்கும் இடையேயானவை தனிப்பட்ட பிரச்சனையாக என்றும் இருந்ததில்லை, அது அடிப்படையில் மக்களின் விடுதலை போராட்டமாகவே இருந்திருக்கிறது இதை குடும்ப பிரச்சனையாக சுருக்கி தான் யாருடைய பிரதிநிதி என்பதை காட்டியிருக்கிறார்.

நல்லவனுக்குள் கெட்டவன், கெட்டவனுக்குள் நல்லவன்.


எஸ்.பியாக வரும் ராமன் நல்லவன் கடவுளை போன்றவன் என்று சீத்தா காட்டில் புகழ்கிறாள் அப்படி பட்ட நல்லவன் ஏன் ராவணனை கொலை செய்கிறான் என்றால் அவன் சூழல் அப்படி என்பதை அவனுடைய பதவி, அரசின் பிரதிநிதி என்பதை தெளிவாக விளக்கும் மணி. சூர்ப்பநகையை கடத்தி செல்லும்போது ராமனை எஸ்கேப் ஆக்கிவிடுகிறார். முப்பது போலீசு குண்டர்கள் சூர்ப்பநகையை வன்புணர்ச்சி செய்யும்போது குழுவின் பொறுப்பாளனான ராமன் எங்கே என்றால் அவன் அப்போது மணிரத்தினத்தின் குடுமியில் மறைந்து கொள்கிறான். ராமனை எஸ்கேப் ஆக்கியதன் மூலம் ராமனின் புனிதன்மையையும் கடைநிலை போலிசு மட்டும்தான் பாலியல் வன்புணர்ச்சி செய்வான் அதிகாரிங்க எல்லாம் ரொம்ப டீசண்டு என்கிற கடைந்தெடுத்த பொய்யையும் பாதுகாக்கிறார். ராமன் நல்லவன் அவன் தன் கடமையை செய்கிறான் அவன் நல்லவனுக்குள் கெட்டவன்

ராவணன் ஏன் கிளர்ச்சியாளனாக இருக்கிறான்? அதற்கான அவனுடைய சூழ்நிலை என்ன? என்பதை காட்டாமல் ராவணன் பழங்குடியினத்தை சேர்ந்தவன், அவன் சாதி இயல்பே அப்படித்தான் என்று தனது பார்ப்பன குருரத்தை காட்டுகிறார் மணி. குரங்காக வரும் கார்த்திக்குடன் ராமன் பழங்குடியின மக்களிடம் ராவணன் எப்படி பட்டவன் என்று கேட்கும்போது  “நல்லவன்தான் ஆனா தேவையில்லாம வம்புக்கு போகும்” குடி கூத்தியானு எல்லா பழக்கமும் இருக்கு”  “சிரிக்க சிரிக்க பேசும்’ என்று  பலரும் சொல்லுவது போல்காட்டியிருக்கிறார்கள்.  ராவணன் கெட்டவனுக்குள் நல்லவன்

தூது செல்லும் குரங்கு கார்த்திக் ராவணனிடம் நான் அவிங்க (ராமன்)ஆளுதான் ஆனா என்  ஓட்டு உனக்குத்தான் ஏனா உனக்காக எவ்வளவு பேரு இருக்காங்க பாரு என்கிறான்.
இப்படி காட்சி வைத்திருக்கும் மணி, நெல்லிக்காயும், வெங்காயமும் தின்று வாழும் மக்கள் ஏன் ராவணனுக்காக உயிரையும் கொடுக்க தயாரயிருக்கிறார்கள்?  “சிரிக்க சிரிக்க பேசும்’
ராவணனின் குணத்திற்காகத்தான் உயிரையும் கொடுக்க தயாரயிருக்கிறார்கள் என்று நாம் சொன்னால் குச்சி ஐஸ் திங்கற பாப்பா கூட வேலைய பார்டா என்று சொல்லிவிடும்.


சீத்தா தேவியும், கொச்சை படுத்தபடும் பழங்குடியின தலைவனும்


சீதையை ரொம்ப நல்லவளாக காட்டியிருக்கிறார் மணி . வீரமான மேட்டுகுடி பெண்ணாககாட்டி தனது வர்க்க பாசத்தை கழிந்து வைத்திருக்கிறார் மணி. ஜெயமுண்டு பயமில்லை மனமே என்று மேட்டு குடி சீதை பாடும்போது நமக்கு வரும் சிரிப்பை அட்க்க முடியவில்லை.  பஃப்பில் திரிவதும் அரை குறை ஆடைகளோடு ஆணாதிக்கத்தின் பெண் பிரதிநிதிகளாய் வரும் இவர்களின்  வீரத்தை பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம். மேட்டுகுடி பெண்ணாக ஃபுல் மேக்அப்பில் வரும் சீதையை பார்த்து ராவணன் மனம் சஞ்சலப்படுகிறான்

இங்கயே இருந்திரு என்று சீதையிடம் கேட்கிறான் ஆனால் கை கூட படாமல் பார்த்துக் கொள்ளும் ராவணன் சீதையிடம் பொறாமையாக இருக்கிறது என்று கூறுகிறான் இறுதிக்காட்சியில் சீதை சொக்க தங்கம் என பிதற்றுகிறான் வாடுகிறான் . சொக்க தங்கம் என எதை வைத்து ராவணன் முடிவு செய்கிறான் அவளது குணநலன்களை வைத்தா என்று பார்த்தால் அப்படியும் காட்சிகள் இல்லை. சீதையின் முகத்தை ரசிப்பது போன்ற காட்சிகள் இருக்கின்றன. அதாவது ஒரு மேட்டுக்குடி பெண்ணின் அழகில் மயங்கிவிடுகிறான் ராவணன்.

அந்த அழகும் இளமையும் அவனை கலங்கடிக்க வைக்கிறது, அதற்காக தனது தங்கையின் மரணத்திற்கு காரணமான ராமனையும் மன்னித்து விடுகிறான் பிறகு சீதையை பார்த்து கொண்டே மகிழ்ச்சியாக  நாயை போல் ராமனால் சுட்டு இறக்கிறான்.  ஆனால் சீதையோ ராவணனை பார்த்து சஞ்சலபடவுமில்லை மயங்கவுமில்லை  அவனுள் நல்லவனை பார்க்கிறாள் அவனுக்காக இரக்கம் கொள்கிறாள். இதன் மூலம் மேட்டுக்குடி நாட்டிய பேரொளியை ஒழுக்கமானவளாகவும் , நியாயமான குணங்களை உடையவளாகவும் காட்டியிருக்கிறார் மணி ஆனால் ராவணன் மனதுக்குள் சீதையை நினைக்கும் அலைஞ்சானாக காட்டி ஒடுக்கபட்டவன் மேல் மேட்டுகுடி சீதைகள் இரக்கம் காட்டினால் ஒடுக்கப்பட்ட ராவணன்கள் மேய பார்ப்பார்கள் என அக்கிரகாரத்துக்கு மணி அடிக்கிறார் ரத்னம்.

அன்று ராமயணத்தில் தமிழர்களை குரங்காகவும். காட்டுமிராண்டிகளாகவும் காட்டி மகிழ்ச்சியடைந்தன பார்ப்பன கும்பல்

இன்று ஒடுக்கப்பட்ட ராவணனையும் அவனை சார்ந்தவர்களையும் காட்டுமிராண்டிகளாக காட்டியிருக்கிறது மணிரத்னம் பார்ப்பன கும்பல்.

இந்திய அரசின் காட்டு வேட்டை நடக்கும் சமயத்தில வந்திருக்கும் இப்படத்தில் மணிரத்னம் சொல்லுவது ‘அரசாங்கத்துகிட்ட வெச்சுக்காதீங்க போட்டு தள்ளிருவாங்க உங்களாள ஒண்ணும் பண்ண முடியாதுலே’ என்று பத்து தலை கொண்ட ராவணனை “எடுத்திருக்கிறார்.

உள்ளங்கை நெல்லிக்கனி

படத்தை பார்க்கும் நோக்கர்க்கு இப்படம் எப்படிப்பட்ட அலைகளை ஏற்படுத்தும்?

போலீசு மேல் கோபமும்,பழங்குடியின போராளிகள் மீது ஆதரவும் ஆர்வமும் ஏற்படுகின்றதா என்றால் அதுதான் இல்லை ! ராவணன் கதையில் சீதை ஏன் நாயகியாக இருக்க வேண்டும்? பொதுவாக கதையின் நாயகனாக தன்னை உணருவது அதனூடாக நாயகனின் கோபத்தையும், ஆசைகளையும் உணருவது பெரும்பான்மையான படம் பார்ப்பவர்களின் உணர்வு. இப்படம் அப்படி நாயகனாக நோக்கரை உணரவைக்கவில்லை. ஏனென்றால் கதையின்நாயகி வில்லனின் மனைவி. கதையின்நாயகி நாயகனுக்கு ஜோடியில்லை. எனவே நோக்கர்களுக்கு நாயகனின் உணர்வு வருவதில்லை. மாறாக அது அழகு சீதையின் ஜோடியும் வில்லனுமான ராமனாக தன்னை உணர செய்கிறது. (இல்லையயன்றால் எட்டி நின்று பார்க்க வைக்கிறது) இதன் மூலம் ராமனின் பீத்தல் பெருமையை பாதுகாத்த மணி, ராவணனை தீண்டத்தகாதவனாக காட்டி பழம்பார்ப்பன பெருமையை பாதுகாக்கிறார். ஆயிரம், ஆயிரம் ஆண்டுகளாய் நடக்கும் ஆரியபார்ப்பன யுத்தத்தில், இது போன்ற எத்தனை மணிரத்னங்களை மனித சமுதாயம் கண்டிருக்கும் , அது சரி ஒரு வகையில் மணிரத்னம் இந்த கால வால்மீகி என்றால் வால்மீகி அந்த கால மணிரத்னம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி அல்லவா !.சரி இப்போது புஷ்யமித்ர சுங்கனின் வாரிசுகள் யாரென்று புரிந்து கொண்டீர்கள் அல்லவா?

அறிமுகம்

இந்த திரைப்பட மதிப்புரையை எழுதியது தோழர் விடுதலை. விடுதலை எனும் பெயரில் ஒரு வலைத்தளம் நடத்திவருகிறார். அதில் அரசியல் விழிப்புணர்வுக்கான கருத்து படங்களை, ஆசான்களின் படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

வலைத்தள முகவரி: http://vitudhalai.wordpress.com/

மின்னஞ்சல் முகவரி: vitudhalai@gmail.com


தமிழக மீனவர்களை கொல்லச்சொல்வது இந்திய அரசுதான்.


கடந்த ஏழாம்தேதி இரவு கோடியக்கரைக்கு தென்கிழக்கே கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த மீனவர் செல்லப்பன் என்பவர், இலங்கை கடற்படையினரால் அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார். கடந்த காலங்களில் நாநூறுக்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டிருக்கின்றனர். படகுகளை சேதம் செய்வதும், வலைகளை அறுத்தெறிவதும், மீனவர்களை துன்புறுத்துவதும் கொல்வதும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. கருணாநிதி 3 லட்சம் கொடுத்தர், கண்டனக் கூட்டம் நடத்தினார், கடிதம் எழுதினார். வைகோ 25 ஆயிரம் கொடுத்தார். ஜெயலலிதா பதவி விலகச் சொன்னார். நாளிதழ்கள் இரண்டு நாள் எழுதின. அவ்வளவுதான் இனி அடுத்த கொலையோ, தாக்குதலோ நடக்கும் வரை மௌனம். இதுதான் வழக்கமாக நடந்து வருகிறது. சில வேளைகளில் மீனவர்கள் போராட்டம் நடத்துகிறார்கள், கடலுக்கு போகாமல் வேலை நிறுத்தம் செய்கிறார்கள். அரசுகளின் பாராமுகத்தால் வேறுவழியின்றி மீண்டும் கடலுக்கு திரும்புகிறார்கள். ஒரு நாட்டின் கடல் எல்லையைத் தாண்டி இன்னொரு நாட்டின் கடல் எல்லைக்குள் சென்று மீன்பிடிப்பது உலகம் முழுவதிலும் இருந்துவரும் ஒரு செயல் தான். இதற்காக எந்த நாடும் இன்னொரு நாட்டு மீனவர்களை துன்புறுத்துவதில்லை, படகுகளை, உடைமைகளை சேதப்படுத்துவதில்லை, கொல்வதில்லை. எந்த  நாடும் சொந்த நாட்டு மீனவர்கள் அன்னியக் கடற்படையால் கொல்லப்படுவதைக் கண்டு அமைதி காப்பதில்லை. ஆனால் இங்கு மட்டும் அது நடந்து கொண்டிருக்கிறது ஏன்?

இலங்கை கடற்படையில் இந்த அத்து மீறல்கள் நிகழும்போதெல்லாம், மைய, மாநில அரசுகளிடம் ஆயத்தமாக ஒரு பதிலிருக்கும், “மீனவர்கள் எல்லை தாண்டினார்கள்” பாகிஸ்தான் மீனவர்கள் குஜராத்வரை வருவதில்லையா? வங்கதேச மீனவர்கள் இந்திய எல்லைக்குள் பிடிபடவில்லையா? இந்திய மீனவர்கள் பாகிஸ்தானின் சிறைகளில் இல்லையா? ஏன் கொல்ல வேண்டும்? இந்தக் கேள்வியை எழுப்பாமல், அதற்கான பதிலைத் தேடாமல் தமிழகத்தில் சிங்களவர்களை நடமாட விடமாட்டோம் என்பதும், ஐ.நா சபை தமிழக மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என்பதும் தமிழனுக்கென்று ஒரு தாயகம் இல்லாததுதான் காரணம் என்பதும் பிரச்சனையை திசை திருப்பி நீர்த்துப்போகச் செய்வதற்கே உதவும்.

இலங்கைக் கடற்படை தமிழக மீனவர்களை ஏன் கொல்லவேண்டும்? அதைக்கண்டு இந்தியா ஏன் முறுவல் பூக்கவேண்டும்? ஏனென்றால் இந்தியா மீனவர்களை கடல்புறத்திலிருந்து அப்புறப் படுத்த முயல்கிறது. அதனால்தான் இலங்கையை எதிர்த்து ஒரு வார்த்தை கூடப் பேசாமல் உதவிகளைச் செய்துகொண்டிருக்கிறது. தெளிவாய்ச் சொன்னால் இந்திய போட்டுக்கொடுத்த திட்டத்தின்படியே இலங்கை செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. மீனவர்களை விரட்டும் இலங்கையின் செயல் ஒரு முனைதான். இதன் மற்ற முனைகளையும் தெரிந்து கொண்டால்தான் இதன் முழு பரிமாணமும் விளங்கும் அத்தோடு இந்திய அரசின் கோரமுகமும் தெரியும்.

அண்மையில் இந்தியா மின்பிடி ஒழுங்குமுறை மசோதா என்றொரு மசோதாவைக் கொண்டுவந்தது. வெளியிலிருந்து இந்தியாவுக்குள் பயங்கரவாதிகள் கடல்வழியாக ஊடுருவி விடாமலிருப்பதற்காக என்று காரணமும் சொல்லப்பட்டது. ஆனால் அதன் சட்டவிதிகளைப் பார்த்தாலே புரிந்து போகும், அது பயங்கரவாதிகளை தடுப்பதற்காக அல்ல மீனவர்களை துரத்திவிட்டு அந்த இடத்தில் பயங்கரவாதிகளை கொண்டுவந்து நிறைப்பதற்காக என்பது.

மீன்பிடி கலங்கள் அனைத்தும், அது கட்டுமரமா, விசைப்படகா என்ற வேறுபாடின்றி அரசிடம் பணம் கட்டி அனுமதி பெற்றிருக்கவேண்டும், குறிப்பிட்ட கால இடை வெளியில் அதை தவறாமல் புதுப்பிக்கவும் வேண்டும். மீன்பிடிகலம் எதுவாக இருந்தாலும் அதன் நீளம் 12 மீட்டருக்கு அதிகம் இருக்கக்கூடாது. இருந்தால் தண்டமும், தண்டனையும் உண்டு. மீனவர்கள் என்று எங்கு என்னவகை மீன்பிடிக்கிறார்கள் என்பதை பதிவு செய்யவேண்டும். என்ன காரணத்திற்காக மீன்பிடிக்கிறார்கள் வயிற்றுப் பாட்டிற்கா, வணிகத்திற்காகவா, ஆய்வுக்காகவா என்று தெரிவித்திருக்க வேண்டும். 12 கடல் மைல்களைத்தாண்டி ஆழ்கடல் பகுதிக்குச் செல்லக்கூடாது. சென்றால் 9 லட்ச ரூபாய் அபராதம் மூன்று மாதம் சிறைத்தண்டனை. மீன்பிடி கலத்தினுள் பத்தாயிரம் ரூபாய் மதிப்பிற்கு அதிகமாக மீன்களை வைத்திருக்கக் கூடாது. எந்த வகை மீனைப் பிடிக்கவேண்டும், எந்த வகையை பிடிக்கக் கூடாது என வரையறை செய்யவும், மீன்பிடிப்பை ரத்து செய்யவும் அனுமதி மறுக்கவும் அரசுக்கு அதிகாரமும் உண்டு. இதை என்நேரமும் சோதனை செய்யலாம், சோதனை செய்வதை தடுப்பவர்களுக்கு பத்து லட்சம் அபராதம், மீன்பிடிகலம் பறிமுதல் செய்யப்படுவதுடன் அதில் இருக்கும் தொழிலாளர்கள் அனைவருக்கும் 25 ஆயிரம் வீதம் வசூலிக்கப்படும். பறிமுதல் செய்யப்பட்ட கலத்தை மீட்கவேண்டுமானால் கலத்தின் மொத்த மதிப்பில் பாதியை பிணைத்தொகையாக செலுத்தவேண்டும். இது அனைத்திற்கும் மேலாக  தவறாக நடவடிக்கை எடுக்கப்பட்டாலோ, தவறாக பறிமுதல் செய்யப்பட்டாலோ அதிகாரிகள் மீது நட்ட ஈடு கோரவோ, வழக்குதொடுக்கவோ முடியாது. இவைகள் ‘மீன்பிடி ஒழுங்குமுறை மசோதாவின்’ சில அம்சங்கள்.

இந்த மசோதா சொல்லும் சட்டங்களும் விதிமுறைகளும் வெளிப்படையாகவே அறிவிக்கின்றன, மீனவர்கள் கடலுக்குள் செல்லக்கூடாது என்று. கரையோரப் பகுதிகளில் மீன்வளம் குறைவதால், ஆழ்கடலுக்குள் செல்லவேண்டிய கட்டாய நிலையிலிருக்கிறார்கள் மீனவர்கள். கடலுக்குள் சென்று இரண்டு நாளோ மூன்று நாளோ தங்கியிருந்து மீன்பிடித்துத் திரும்பினால்தான் படகு உரிமையாளர்களுக்கு அளந்ததுபோக மீனவர்களுக்கும் கொஞ்சம் மிஞ்சும். இப்படி ஒருமுறை கடலுக்குள் சென்று வர மானிய விலையில் டீசல் தந்தும் ஒன்றரை லட்சம்வரை செலவாகிறது. ஆனால் மசோதா சொல்கிறது ரூபாய் பத்தாயிரத்துக்கு அதிகமாக மீன்கள் இருக்கக் கூடாது என்று. பத்தாயிரம் ரூபாய்க்கு அதிகமாக மீன் இருப்பதற்கும் பயங்கரவாதிகள் கடல்வழியாக ஊடுறுவதற்கும் என்ன தொடர்பு?

விசைப்படகோ, கட்டுமரமோ 12 மீட்டருக்கு அதிகமான நீளத்தில் இருக்கக் கூடாது என்கிறது சட்டம். நாள் கணக்கில் கடலுக்குள் இருப்பதென்றால், கடலுக்குள் செல்லும் தொழிலாளிகளுக்கான உணவு முதல் பிடிக்கும் மீன்களை வைத்திருப்பதற்கான இடம், அது கெட்டுப்போகாமலிருப்பதற்கான பனிக்கட்டிகள் வரை வைத்திருப்பதற்கு இடம் வேண்டும். இது எதைப் பற்றியும் கவலைப் படாமல் 12 மீட்டருக்குள் இருந்தாக வேண்டும் என்பது எந்த விதத்தில் பயங்கரவாதிகள் ஊடுறுவதை ஒடுக்கும்?

பத்தாயிரத்துக்கு அதிகமாக மீன் இருந்தாலோ, 12 மீட்டருக்கு அதிகமான நீளமிருந்தாலோ லட்சக்கணக்கில் அபராதம் விதித்து படகையும் பறிமுதல் செய்வது மீனவர்களை ஒடுக்குமா? இல்லை பயங்கரவாதிகளை தடுக்குமா? இந்தச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்தாலோ, படகை பறிமுதல் செய்தாலோ, மீனவர்களை கைது செய்தாலோ அது தவறாக ஆதாரமற்றதாக இருந்தாலும் யாரும் கேள்விகேட்கமுடியாதபடி இந்தச்சட்டம் அதிகாரிகளை பாதுகாப்பது ஏன்?

கடற்புற மேலாண்மைத் திட்டம் என்று இன்னொரு சட்டமும் நடைமுறைப் படுத்தபடுகிறது. சில ஆண்டுகளுக்கும் முன்னர் ஓங்கலை (சுனாமி) வந்த சுருட்டிய பின்னர் மீனவர்களை பாதுகாக்கிறோம் என்று காரணம் கூறி இந்தத்திட்டம் கொண்டுவரப்பட்டது. அதன் படி கடற்கரையிலிருந்து அரைகிலோமீட்டர் தூரத்திற்குள் மீனவர்கள் குடிசை போடக்கூடாது என்று அடித்து விரட்டப்பட்டனர். கட்டிக்கொடுத்த சுனாமி குடியிருப்புகள் சில மாதங்களிலேயே பல்லிளித்துவிட்டன. ஆனால் மீனவர்களை விரட்டிவிட்டு கட்டப்பட்ட நட்சத்திர விடுதிகளும் பொழுதுபோக்கு மையங்களும் பளபளக்கின்றன. ஏன் சுனாமி குடிசைகளை மட்டும்தான் சுக்கலாக்குவேன் என்று சபதம் செய்துவிட்டு வருகிறதா? நட்சத்திர விடுதிகள் சுனாமியை தாங்கி நிற்கும் என்றால் கடலையே வாழ்க்கையாய் கொண்டிருக்கும் மீனவர்களை அதுபோன்ற விடுதிகளில் குடியேறலாமே கடலோரங்களிலிருந்து மீனவர்களை அப்புறப்படுத்திவிட்டு பணக்காரர்களும் முதலாளிகளும் சொகுசாய் பொழுதுபோக்குவதற்கு மீனவர்களை அசிங்கம் என அப்புறப்படுத்துகிறது அந்தத் திட்டம். இந்தியாவின் புரதத்தேவையில் பாதியை நிறைவேற்றும் மீனவர்கள் அசிங்கம் என்றால் அழகு என்பது எது?


மறுபக்கம் அதே சுனாமியை காரணம் காட்டி சுய உதவிக் குழுக்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் கடலோரப்பகுதிகளில் களமிறக்கி விடப்பட்டுள்ளன. ரொட்டி தயாரிப்பு, கைவினைப் பொருட்கள், மெழுகுவர்த்தி, செங்கல் தயாரிப்பு என்று மீனவர்களுக்கு மாற்றுத்தொழில்களை அவை கற்றுக்கொடுக்கின்றன. ஒருபக்கம் சட்டம் போட்டு மீன்பிடிக்கப் போகாதே என்று தடுக்கிறது, இன்னொரு பக்கம் கடன் கொடுத்து ஆசை காட்டி கஷ்டப்பட்டு ஏன் மீன்பிடிக்கவேண்டும் சுலபமான வேறு தொழில்களைப் பார்க்கலாமே என மடை மாற்றுகிறது.

மீன்பிடிப்பதிலிருந்து மீனவர்களை அப்புறப்படுத்தி விட வேண்டும் என்று அரசு ஏன் துடிக்கவேண்டும்?  1990களின் தொடக்கத்தில் நரசிம்மராவ் அரசு ‘மீன்வளக் கொள்கை’ என்று ஒரு கொள்கையை கொண்டுவந்தது. அதன்படி பன்னாட்டு முதலாளிகள் இந்தியக் கடல் பகுதிகளில் மீன்பிடித்துக்கொள்ள அனுமதியளிக்கப்பட்டது. அவர்கள் மிகப்பெரிய இயந்திரங்களுடன் கூடிய கப்பல்களின் மூலம் கடலை அரித்துக்கொண்டிருக்கிறார்கள். விளைந்த மீன் குஞ்சு என்ற பேதமில்லாமல் முட்டைகளைக் கூட விட்டுவைக்காமல் உருஞ்சி எடுக்கிறார்கள். தேவையான ரகங்களைப் பிரித்தெடுத்துவிட்டு இறந்தவைகள் எஞ்சியவைகளை கழிவுகளாய் கடலுக்குள் தள்ளிவிடுகிறார்கள். சலித்தெடுத்த மீன்களை பதப்படுத்தி டப்பாக்களில் அடைத்து ஏற்றுமதி செய்கிறார்கள். இவைகள் நாகரீக உணவுகளாய் “ஃபிரஷ்” கடைகளில் அலங்கரிக்கப்பட்டு அமர்ந்திருக்கின்றன. இதுபோன்ற ஏற்றுமதியில் இந்தியாவும் ஈடுபடவேண்டுமென்றால் மீன்பிடித்தலை ஒழுங்குபடுத்தும் ஆணையம் இருக்கவேண்டும் என்று ஐரோப்பிய நாடுகள் நிர்பந்திக்கின்றன. அதனால் தான் ஒழுங்கு படுத்தல் என்ற பெயரில் நாட்டில் மீன்பிடி தொழிலை பாரம்பரியமாகச் செய்துவரும் பல லட்சம் மீனவர்களை கடலை விட்டு அப்புறப் படுத்தி சில முதலாளிகளை மிகப்பெரிய கப்பல்களில் மீன்பிடிக்க ஏற்பாடு செய்கிறது. பல லட்சம் மீனவர்களின் வாழ்வாதாரத்தைவிட சில முதலாளிகளின் லாபம்தானே அரசுக்கு முக்கியம்.

இதனால்தான் அரசு ஒரு முனையில் சட்டம் போட்டு மிரட்டுகிறது, இன்னொரு முனையில் தன்னார்வ குழுக்கள் மூலம் கடன் கொடுத்து கெஞ்சி விரட்டுகிறது, இதே காரணத்திற்காகத்தான் வேறொரு முனையில் இலங்கை கடற்படையை விட்டு கொல்லச்சொல்லி அச்சுறுத்துகிறது. இப்படி எல்லா முனைகளிலும் வாழ வழியற்று துரத்தப்படுவது மீனவர்கள் மட்டுமல்ல. அனைத்துப் பிரிவு மக்களுமே தங்கள் வாழ்வாதாரங்களிலிருந்து விரட்டப்படுகிறார்கள். அவர்கள் இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை என்பதை தங்கள் சொந்த அனுபவங்களின் மூலம் புரிந்திருக்கிறார்கள். ஒன்றிணைந்து போராடுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை உணர்வது மட்டுமே மிச்சமிருக்கிறது.

தொடர்புடைய கட்டுரைகள்

மீனவர்கள் வலையில் சிக்காத கச்சத்தீவு

மீனவர்களே உங்கள் போராட்டம் எதை நோக்கி?

ஹாலிவுட்டின் புதிய வில்லன்கள்

“இன்டர்நேஷ்னல்” திரை விமரிசனம்உலகளாவிய சந்தையைக்குறிவைத்து இயங்கும் ஹாலிவுட்டிலும் கோடம்பாக்கத்தைப்போல ஃபர்முலா கதைகள் தான் புதிய மொந்தைகளில் வெளியிடப்படும். கம்யூனிஸ்டுகள், இஸ்லாமியர்கள் – அரேபியர்கள், வேற்றுக்கிரக ஜீவராசிகள் போன்றவர்கள் தான் அலுப்பூட்டும் விதத்தில் திரும்பத்திரும்ப விலான்களாக வருவதைப் பார்த்திருப்போம்.

என்னதான் வெண்திரையில் புனைகதைகளைக் கட்டியமைத்தாலும் வாழ்க்கை என்ற பெரிய உண்மை ஒன்று இருக்கிறதே! முதலாளித்துவ பொருளாதாரம், இந்த உலக மக்களைக் காக்கும் அருகதையை இழந்துவருவதை அமெரிக்காவில் தொடங்கி இப்போது கிரீஸ் வரையிலும் 21ஆம் நூற்றாண்டு வெளிச்சம் போட்டு காட்டிவருகிறது. மேற்குலகம் முழுவதிலும் “முதலாளித்துவம் ஒழிக” என்ற முழக்கம் ஐஸ்லாந்து எரிமலை புகைபோல படர்ந்துவருகிறது. இப்படி மக்களின் பட்டுத் தெரிந்துகொண்ட ‘மூடு’ மாறிவரும்போது இன்னும் எத்தனை நாள் பின்லாடனே வில்லன் பாத்திரத்தை ஏற்கமுடியும்? இப்போதைய புதிய வில்லன்கள் யார்?

*************************

கொலம்பியா பிக்சர்ஸ் தயாரிப்பில், டாம் டைக்வெர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம், “இன்டெர்நேஷ்னல்” படத்தின் கதையை சுருக்கமாகப் பார்ப்போம்.

நியூயார்க்கின் அட்டர்னி ஜெனரல் அலுவலகத்தைச் சேர்ந்த ‘எல்லா’ என்ற பெண் உலக அளவில் பயங்கரவாதிகளுக்கு பணம் வருகிற வழி வகைகளை ஆய்வு செய்கிறாள். அவளுக்கு இன்டர்போலைச் சேர்ந்த ஏஜன்ட் சேலிஞ்சர் உதவுகிறான். இவர்களுடைய கூட்டு முயற்சியில் ஒரு ஜெர்மன் வங்கியின் நடவடிக்கைகள் சந்தேகத்திற்குரியவையாகத் தெரிகின்றன. ஐ.பி.பி.சி என்ற அந்த உலக வங்கி உலகில் ஐந்தாவது பெரிய வங்கி. பெர்லினை தலைமையிடமாகக் கொண்டு செயல் படுகிறது. அதன் நடவடிக்கைகளை மேலும் புலனாய்வு செய்கிறார்கள்.

இத்தாலியைச் சேர்ந்த கால்வினி என்ற இராணுவத் தளவாட நிறுவனத்திடமிருந்து 200 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஏவுகணைகளை வாங்குவதற்கு அந்த வங்கி முயல்கிறது. ஒரு வங்கி ஆயுதங்களை வாங்கவேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி எழுகிறது. அதைக் கண்டுபிடிக்க வங்கியைச் சேர்ந்த உயரதிகாரி ஒருவரை ரகசியமாகத் தொடர்புகொண்டு முயல்கிறார்கள். இந்த வேலையில் ஈடுபடும் சேலிஞ்சரின் நண்பன் தாமஸ் ஷூமர் திடீரென்று இறந்துபோகிறான். ஆரம்பத்தில் அது மாரடைப்பு எனக் கூறப்பட்டாலும், அது ஒரு கொலை என்பதை சேலிஞ்சர் பின்னர் கண்டுபிடிக்கிறான்.

இதனால் ஆத்திரம் கொண்ட எல்லாவும், சேலிஞ்சரும் வங்கியின் இரகசிய நடவடிக்கைகளை கண்டுபிடிக்க சங்கற்பம் செய்கிறார்கள். இதற்கிடையில் வங்கிக் கெதிரானவர்கள் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார்கள். கால்வினி நிறுவனத்தின் அதிபர் கால்வினி இத்தாலியின் அடுத்த பிரதமராக வரவேண்டியவர், தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் கொல்லப்படுகிறார். அதற்கு சற்று நேரம் முன்புதான் கால்வினியை எல்லாவும் சேலிஞ்சரும் சந்திக்கிறார்கள்.

கால்வினி நிறுவனத்துடன் ஏவுகணைகள் வாங்குவதாக வங்கி மேற்கொண்ட ஒப்பந்தம் முறியும் நிலையில் இருக்கிறது. ஒப்பந்தத்திற்கு ஆதரவாக வேலை செய்யும் வங்கி உயரதிகாரியும் கொல்லப்படுகிறார். இந்தப் பின்னணியில்தான் கால்வினியை இருவரும் சந்தித்து பல கேள்விகளை கேட்கின்றார்கள். வங்கி ஆயுதக் கொள்முதலுக்கான பின்னணி அப்போதுதான் அவர்களுக்கு தெரிய வருகிறது.

சீனாவில் இருந்து மலிவான விலையில் சிறுரக ஆயுதங்களை கொள்முதல் செய்யும் அந்த வங்கி அவற்றை சிறு நாடுகளுக்கு விற்பனை செய்கிறது. பல போராளிக்குழுக்களுக்கும் இலவசமாய் கொடுக்கிறது. இதில் என்னதான் ஆதாயம்? ஆயுதங்களைக் கொடுத்த கையோடு அந்த நாட்டின் நிதிச் சந்தையை கட்டுப்படுத்தும் அதிகாரத்தை வங்கி கைமாறாக பெற்றுக்கொள்கிறது. கடன் சந்தையைக் கைப்பற்றினால் கிட்டத்தட்ட அந்த நாட்டின் எல்லாவறையும் கட்டுப்படுத்துவது போலத்தான் என கால்வினி கூறுகிறான்.

கால்வினி நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஈடேற முயன்ற வங்கியின் உயரதிகாரி ஒருவர், அவரும் கால்வினியின் நண்பர் என்பதோடு மர்மமான முறையில் கொல்லப்படுவதையும் சேலிஞ்சர் சுட்டிக்காட்டுகிறான். கால்வினி நிறுவனத்துடன் ஒப்பந்தம் முறிந்தால் வங்கி மிகப்பெரிய நெருக்கடியை சந்திக்கும் என்பது யாருக்கும் தெரியாது. சேலின்சரும், எல்லாவும் கால்வினியுடன் உரையாடிவிட்டு வெளியே காத்திருக்கிறார்கள். அப்போதுதான் சதுக்கம் ஒன்றில் பேசத்துவங்கும் கால்வினி தூரக்குறி துப்பாக்கிக்காரன் ஒருவனால் சுட்டுக் கொல்லப்படுகிறான்.

இத்தாலிய போலீசும் அரசும் இந்தக் கொலையை ‘ரெட்பிரிகேடு’ எனும் புரட்சிப்படை செய்திருப்பதாக கூறுகிறர்கள். சேலிஞ்சர் மட்டும் ‘இது வங்கி செய்த கொலை’ என பலமாக நம்புகிறான். அதற்கான ஆதாரங்களைத் திரட்டுகிறான். சுட்டவன் ஒரு தொழில்முறை துப்பாக்கிக் காரன் என்பதையும் அவனது ஒரு கால் ஊனம் என்பதனால், இரும்பு ஷோ பயன்படுத்துவதையும் கண்டுபிடிக்கிறான். இவந்தான் வங்கி சம்பந்தப்பட்ட பல மர்மமான கொலைகளை செய்திருப்பான் என்றும் ஊகிக்கிறான். அவனது தடயங்கலைப் பிந்தொடர்ந்து அந்தக் கொலைகாரன் நியூயார்க்கில் வசிப்பதையும் கண்டுபிடிக்கிறான்.

இந்தக் கொலையாளிக்கு வங்கியின் உயரதிகாரியும், முன்னாள் கிழக்கு ஜெர்மனியின் கர்னலாக பணியாற்றியவருமான பெரியவர் ஒருவர்தான், கொல்லப்படவேண்டியவர்கள் பற்றிய விபரங்களைக் கொடுக்கிறார். அவர் வங்கியின் தலைவரான ஸ்கார்சனின் உள்வட்டத்தில் உள்ளவர். அவரும், நியூயார்க் கொலைகாரனும் சந்திக்கும்போது அவர்களைப் பிடிக்க சேலிஞ்சர் முயல்கிறான். அந்தக் கொலைகாரன் உயிருடன் பிடிபடுவதை வங்கி ஏற்பாடுசெய்திருந்த இன்னொரு கும்பல் தடுக்கிறது. பின்னர் அந்த வாடகைக் கொலைகாரனும் கொல்லப்படுகிறான். பெரியவர் மட்டும் பிடிபடுகிறார்.

பெரியவரை வைத்து வங்கியின் தலைவர் ஸ்கார்சனை சட்டத்தின் முன் நிருத்தலாம் என்று திட்டமிட்டு அவரிடம் சேலிஞ்சர் உதவி கேட்கிறான். பெரியவரோ சட்டப்படி வங்கியை தண்டிக்க முடியாது என்றும், அமைப்பு முறைக்கு வெளியே சென்றுதான் தண்டிக்க முடியும் என்று ஆலோசனை கூறுகிறார். அதுவும் பெரிய இழப்புகளை கொண்டுவருமென்றும் எச்சரிக்கிறார்.

இடையில், கொல்லப்பட்ட கால்வினியின் மகன்கள் தனது தந்தையின் மரணத்திற்கு வங்கிதான் காரணமென்று சேலிஞ்சர் மூலம் அறிந்து ஏவுகணைகள் விற்கும் ஒப்பந்தத்தை முறிக்கிறார்கள். இந்த ஏவுகணைகளை வாங்கி சிரியாவுக்கும் ஈரானுக்கும் விற்கவில்லை என்றால் வங்கி திவாலாகிவிடும் என்ற சிக்கல் வருகிறது.

வங்கித்தலைவன் ஸ்கார்சன் தலைமையில் ஆலோசனை நடக்கிறது. அதன்படி கால்வினி நிறுவனத்திற்கு போட்டியாக இருக்கும் டுருக்கி நிறுவனம் ஒன்றை அணுகிப் பார்ப்பதென்று அவர்கள் முடிவு செய்கிறார்கள். அந்த துருக்கி நிறுவனம் இசுரேலை முக்கியமான வாடிக்கையாளராக வைத்து இயங்கும் நிறுவனமாகும். வங்கி வாங்க இருக்கும் ஏவுகணைகளை வீழ்த்தும் வல்லமை கொண்ட ஆயுதங்களை அவர்கள் ஏற்கனவே இசுரேலுக்கு விற்பனை செய்திருக்கிறார்கள். இந்தத் தகவல் வெளியே தெரிந்தால் ஈரானும் சிரியாவும் வங்கி மூலம் வாங்க விரும்பும் ஏவுகணைக்கான ஆர்டரை இரத்து செய்துவிடும். அவ்வாறு நடந்தாலும் வங்கி திவாலாவது உறுதி என்பதால் இஸ்ரேல் விசயத்தை ஈரானுக்கும் சிரியாவுக்கும் தெரியாமல் மறைத்து வியாபாரத்தை முடிக்கத் திட்டம் தீட்டுகிறார்கள்.

அந்த துருக்கி நிறுவனத்துடன் பேச்சு அடத்த ஸ்கார்சன் செல்கிறான். இந்த தகவலை பெரியவர் சேலிஞ்சருக்கு தெரிவிக்கிறார். அவனும் பிந்தொடர்கிறான். துருக்கியில் ஸ்கார்சனும், துருக்கி நிறுவனத் தலைவனும் பேசுகிறார்கள். ஏவுகணைகள் விற்பதற்கு துருக்கி நிறுவனம் சம்மதிக்கிறது. அந்த ஏவுகணைகளை வீழ்த்தும் தொழில்நுட்பத்தை இசுரேலுக்கு விற்பனை செய்திருக்கும் விசயத்தை ரகசியமாக வைத்திருக்குமாறு ஸ்கார்சன் கோருகிறான். இறுதியில் பணம் செலுத்தும் நடைமுறைகளெல்லாம் உறுதி செய்யப்படுகிறது.

இந்தப் பேச்சுவார்த்தையை பெரியவர் மூலமாக இரகசியமாக பதிவு செய்யும் சேலிஞ்சர் கடைசியில் முக்கியமான தருணத்தில் சிக்னல் கிடைக்காமல் திணருகிறான். அது இல்லாமல் அவனால் சட்டத்தின் முன் வங்கியை குற்றவாளியாக நிறுத்தமுடியாது. எரிச்சலில் இருக்கும் சேலிஞ்சர், பேசிவிட்டு வரும் ஸ்கார்சனை பிந்தொடருகிறான். வங்கித்தலைவனை கொல்ல யத்தனிக்கும் போது பின்னால் வரும் ஒரு இத்தாலிக்காரன் ஸ்கார்சனை சுட்டுக் கொல்கிறான். அவன் கால்வினியின் மகன்களால் அனுப்பப்பட்டவன்.

ஐ.பி.பி.சி வங்கியின் தலைவர் ஸ்கார்சன் துருக்கியில் சுட்டுக்கொல்லப்பட்டார் என்ற பத்திரிக்கைச் செய்தியுடன் படம் முடிகிறது.


***********************


வில்லன் பாத்திரத்தை கோர கற்பனைகளோடு உருவாக்கப்பட்ட ஒரு தனி நபருக்கு கொடுக்காமல் ஒரு வங்கியை வில்லனாக சித்தரிக்கிறது இந்தப் படம். அது பிரதிநிதித்துவப்படுத்தும் மேற்கத்திய ஏகாதிபத்திய நாடுகளின் அரசமைப்பையும் கொஞ்சமாவது தோலுறிக்கிறது.

வங்கியின் தலைவன் ஸ்கார்சனுடன் நமீபியாவின் போராளிக்குழுத் தலைவர் உரையாடும் காட்சி ஒன்று வருகிறது. ஸ்கார்சன் அந்தக் கருப்புக் கமாண்டருக்கு தேவையான ஆயுதங்கள், தொழில்நுட்ப சேவை, போரில் வெல்ல ஆலோசனைகள் எல்லாம் அளிப்பதாகக் கூறுவான். கமாண்டரோ தமது இயக்கத்திடம் பணம் எதுவுமில்லை என்று பரிதாபமாகக் கூறுவார். அதனால் பரவாயில்லை. அடுத்த சில மாதங்களில் ஆட்சியைக் கைப்பற்றி அரசாங்கம் அமைக்கும்போது நாட்டின் நிதிச்சந்தையை தங்கள் வங்கியிடம் விட்டுவிட்டால் போதும் என்று ஸ்கார்சன் தேர்ந்த ராஜதந்திரி போலக் கேட்ப்பான்.

போராளிக் குழுக்கள் கிடக்கட்டும், சட்டபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவை, ஜனநாயக அரசமைப்புக் கொண்டவை என்று கூறப்படும் நாடுகளுக்கு இடையிலான ஆயுத பேரங்களும் விற்பனைகளும் இன்றளவும் இரகசியங்களாகத்தான் இருந்துவருகின்றன. இதற்கான தரகுவேலையை பல முக்கியமான நிறுவனங்கல் செய்துவருகின்றன. நமது நாட்டின் போபர்ஸ், ஜெர்மன் நீர்மூழ்கிக் கப்பல் போன்ற சிலவற்றில் ஊழல் வெளிச்சத்திற்கு மட்டும் வந்திருக்கிறது. ஆனால் குவட்டரோச்சியை பிடிக்கவோ தண்டிக்கவோ முடியவில்லை.

உலகின் பல பகுதிகளில் நடக்கும் போர்களுக்கும், உள்நாட்டுப் போர்களுக்கும் ஆயுதங்கள் தடையின்றிக் கிடைக்கின்றன. முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகள், கிழக்கு ஐரொப்பிய நாடுகளிலிருந்துதான் ஆயுதங்கள் விற்பனையாகின்றன என்று மேலை நாடுகள் கூப்பாடு போட்டாலும், அந்த வியாபாரங்களையெல்லாம் மேற்கத்திய கணவான்களும், அந்த நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டு வங்கிகளும்தான் முடித்துக் கொடுக்கின்றன. இதில் ஐ.நா உட்பட யாரும் தலையிடுவதில்லை. ஏகாதிபத்தியங்களின் ஆசியோடு நடக்கும் இத்தகைய சூதாட்டத்தில் சட்டபூர்வமான பரிவர்த்தனைகளும் சாட்ட விரோதத் தொழில்களும் பின்னிப் பிணைந்து கிடக்கின்றன.

ஆர்கனைஸ்டு கிரைம் எனப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட கிரிமினல் வேலைகளுக்கு பணம் எப்படிக் கிடைக்கிறது என்பதை அமெரிக்காவின் அரசுத்துறை ஒன்று ஆய்வு செய்யும் போது ஒரு வங்கி இப்படி திமிங்கலமாக சிக்குவதாக இப்படத்தின் கதை கூறுகிறது. முதலீட்டு வங்கிகள், முதலீடு வங்கிகள், முதலீடுகளுக்கு தரச்சான்று தரும் பிரபல நிறுவனங்கள், காப்பீடு நிறுவனங்கள் ஆகியவை எல்லாம் போர்ஜரி, பொய்க்கணக்கு உள்ளிட்ட எத்தகைய பஞ்சமா பாதகத்தையும் செய்யத் துணிந்தவை என்பது சமீபத்திய அமெரிக்க சப்-பிரைம் நெருக்கடியினை ஒட்டிஉலகத்துக்கே தெரிய வந்தது. கொள்ளை லாபத்துக்காக எத்தகைய கிரிமினல் வேலைகளைச் செய்வதற்கும் அவர்கள் தயங்குவதில்லை. மேலும், சொந்த நாட்டு மக்களின் எதிர்கால வருமானத்தையே மொத்தமாக சுருட்டுபவர்கள் ஏதோ ஒரு ஏழை நாட்டின் எதிர்காலத்தை பேரம் பேசுவதில் ஆச்சரியப்பட ஏதும் இல்லை.

மொத்த முதலாளித்துவ அமைப்பே நாறிவரும் போது ஒரு வங்கியை மட்டும் வில்லனாக காட்ட முடியாது என்பதையும் திரைப்படம் மறைமுகமாக ஒத்துக்கொள்கிறது. இன்டர்போலின் மேலதிகாரி சேலிஞ்சருக்கு அவ்வப்போது கடிவாளம் போடுகிறார். இன்டர்போல் எனப்படும் சர்வதேச போலீசு வெறும் ஒற்றுத்தகவல்களை தேவையான நிறுவனங்கலோடு பரிமாறிக்கொள்ளும் வரதான் அதிகாரம், மற்றப்படி அதற்கு சட்டரீதியான நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் இல்லை என்பதை கூறுகிறார். கூடவே இன்டர்போலின் விவகாரங்கள் கூட வங்கிக்குத் தெரியும் விதத்தைக் கண்டு சேலிஞ்சர் அதிர்ச்சியுறுகிறான். அதேபோல நியூயார்க் அட்டர்னி ஜெனரல் அலுவலகத்தின் மேலிடமும் எல்லாவுக்கு கடுமையான எச்சரிக்கை விடுகிறது.

சேலிஞ்சரின் பிடியில் இருக்கும் வங்கிப் பெரியவரான கர்னல், சட்ட்ப்ப்பூர்வ முறையில் வங்கியை தண்டிக்க முடியாது என்று விளக்குவார். வங்கியை தண்டிப்பதாக இருந்தால் முழு அமைப்பையும் தண்டிக்க வேண்டி வரும். அந்த அமைப்பில் ஈரான், சீனா, ரசியாவின் கிரிமினல் மாஃபியாக்கள், சி.ஐ.ஏ, அமெரிக்க அரசு, இங்கிலாந்து அரசு மட்டுமல்ல ஹிஸ்புல்லாவும் இருக்கிறது. வங்கியின் இரகசிய நடவடிக்கைகளுடன் இவை அனைத்தும் ஊடும் பாவுமாக பின்னியிருக்கின்றன என்பதை விளக்குவார்.

இறுதிக் காட்சியில் கூட தன்னைச் சுடவரும் சேலிஞ்சரிடம் வங்கித்தலைவன் ஸ்கார்சன் அதையே கூறுவான். ஐ.பி.பி.சி போய்விட்டால் இந்த நடவடிக்கைகளைத் தொடர நூற்றுக்கணக்கான வங்கிகள் வரும், எனவே தன்னைக் கொல்வதால் சேலிஞ்சரின் இரத்த வெறிதான் இரத்த வெறிதான் தீரும், நீதி கிடைக்காது என்பான் அவன்.

ஐ.பி.பி.சி எனப்படும் ஒரு வங்கியின் கதையை வைத்துத்தான் இதை புரிந்துகொள்ள வேண்டுமா என்ன? ஈரானுடன் போரிட்ட சதாம் ஹுசைனுக்கு அமெரிக்க இரசாயன ஆயுதங்களை வழங்கக் காரணம் என்ன? தென் அமெரிக்க சர்வாதிகாரிகளுக்கு ஆயுதங்களும், இராணுவ ஒத்துழைப்பும் அளிக்க வேண்டிய அவசியம் என்ன? இந்தியாவிற்கும் பாக்கிற்கும் மாறி மாறி ஆயுதங்களை பல பில்லியன் டாலருக்கு விற்பதன் மர்மம் என்ன? ரசியாவுக்கு எதிராக ஆப்கான் முஜாஹிதீன்களுக்கு கணிசமான ஆயுதங்களை இலவசமாக வழங்கக் காரணம் என்ன? இவையெல்லாம் அரசியல் முடிவுகளா, இராணுவ நடவடிக்கைகளா, அல்லது பொருளாதாரப் பரிவர்த்தனைகளா? என்ன பெயரிட்டு அழைத்தாலும் இவற்றின் உள்ளடக்கம் ஒன்றுதான். “ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலங்கள்” என்ற நூலைப் படிப்பவர்கள் இதனைப் புரிந்து கொள்ளலாம்.

உண்மையில் இத்தகைய இரகசிய ஆயுத விற்பனை, சப்ளைகளை எல்லாம் நடத்துவதில் சி.ஐ.ஏ தான் முன்னோடி. இரகசிய வங்கிக் கணக்குகள், போதைப் பொருள் மற்றும் ஆயுத விற்பனை, உளவு வேலைகள் ஆட்சிக் கவிழ்ப்புகள் ஆகிய அனைத்துக்கும் மூல முதல்வர்கள் மேற்கத்திய ஏகாதிபத்தியங்கள் தான். அமெரிக்கா முதலான ஏகாதிபத்தியங்கள் ஆரம்பித்துவைத்து நடத்தி வருபவை தான்.

சின்னஞ்சிரிய ஆப்பிரிக்க நாடுகள் பலவற்றில் முடிவின்றி உள்நாட்டுப் போர்கள் தொடர்வதற்கும், நாளுக்கு ஒரு ஆட்சிக் கவிழ்ப்பு அரங்கேறுவதற்கும், சினிமா தயாரிப்பு போல ஒரு ஆட்சிக் கவிழ்ப்புகு எவ்வளவு செலவாகும் என்று பட்ஜெட் போட்டு ஆட்சிக்கவிழ்ப்பு நடத்துவதற்கும் ஏகதிபத்திய அரசுகள்தான் காரணம். இந்த அரசுகள் அளிக்கும் பாதுகப்பில் மட்டுமே சர்வதேச வங்கியொன்று இப்படி இயங்க முடியும். இந்த ஊழல் உலக நடவடிக்கைகளை என்னவென்றே தெரியாமல் அமெரிக்க சட்டத்துறை ஆய்வு செய்வதாக இந்தப்படத்தில் சித்தரிக்கப்படுவது ஒரு நகைச்சுவை.

அதனால்தான் என்ன தவறு இருந்தாலும் இறுதியில் அமெரிக்க நீதி வெல்லும் என்ற நியதிப்படி சேலிஞ்சரின் போராட்டம் ஏதோ ஒரு வகையில் வெல்கிறது. படத்தில் வரும் ஆயுதத் தளவாட தயாரிப்பு நிறுவனத்தின் கால்வினி, நியாய அநியாயம் பற்றிப் பேசுவதே கூட முரண்பாடுதான். கால்வினி என்ற ஆயுத வியாபாரி, இத்தாலியின் பிரதமர் பதவியை ஏற்கப்போகிறார் என்பது சாத்தியமாகும் போது ஒரு வங்கி அதிபர் ஏன் ஆயுத வியாபாரம் செய்யக் கூடாது?

கர்னலோடு சேலிஞ்சர் பேசும் போது “முன்னாள் கம்யூனிஸ்டாக இருந்த நீங்கள், இத்தகைய அநீதிக்கு துணை போகலாமா?” என்று கேட்பான். ஒரு ஹாலிவுட் படத்தில் கம்யூனிசத்தை மதிப்புக்குரியதாகக் கூறுவது கூட பெரிய ஆச்சரியம் தான்.

அந்தப் பெரியவர் தன் இளைஞனாக இருந்தபோது சேலிஞ்சர் போல உருப்படியாக வாழ விரும்பியதாகவும் பின்னர் தோற்றுவிட்டதாகவும் கூறுவார். இறுதியில்சேலிஞ்சருக்கு தனது உயிரைப் பணயம் வைத்து உதவ முன்வருவார். ஒரு இன்டர்போல் அதிகாரியின் அட்வைசைக் கேட்டு ஒரு முன்னால் கம்யூனிஸ்டும், இந்நாள் கிரிமினல் வங்கியின் உயரதிகாரியுமான ஒரு மனிதன் திருந்துவதாக சித்தரித்திருப்பது கூட யதார்த்தமில்லைதான். முன்னாளில் கம்யூனிஸ்டுகள் என்ற போர்வையில் இயங்கிவந்த இந்த அதிகார வர்க்க முதலாளீகள் தான் இன்றைக்கு அந்த நாடுகளில் தனியார் முதலாளிகளாக வலம் வருகின்றனர் என்பதே உண்மை.

கள்ளத்தனமான ஆயுத வியாபாரம், அதனை மறைப்பதற்கான கொலைகள் என்பன போன்ற சட்டவிரோதமான கிரிமினல் நடவடிக்கைகளில் இரகசியமாக ஈடுபடும் ஒரு வங்கியின் நடவடிக்கைகள் வாயிலாக வரம்புக்குட்பட்ட அளவில் முதலாளித்துவ அமைப்பு இப்படத்தில் அம்பலப்படுத்தப்பட்டிருக்கிறது. ஹாலிவுட் முதலாளிகள் நம்பி முதல் போடும் அளவுக்கு முதலாளித்துவத்தின் மீது மக்கள் மத்தியில் வெறுப்பு பரவி வருகிறது என்பதை, இத்தகைய திரைக்கதைகளைப் பார்க்கும் போது புரிந்துகொள்ள முடிகிறது.

ஆயினும் தனது கிரிமினல் நடவடிக்கைகளையே சட்டபூர்வமானவையாக மாற்றி அவற்றுக்கு அங்கீகாரமும் பெறும் முயற்சியில் வல்லரசு நாடுகள் ஈடுபட்டிருக்கும் காலகட்டத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஹாலிவுட் இவற்றையெல்லாம் திரைக்கதை ஆக்குமா?

சவப்பெட்டிக்கு சந்தை இருக்கிறது என்றால் முதலாளி வர்க்கம் அந்த வியாபாரத்திலும் ஈடுபடத் தயங்காது என்பதை நாம் அறிவோம். சொந்தச் சவப்பெட்டி என்று புரிந்த பின்னரும் அத்தகைய முயற்சியில் ஹாலிவுட் ஈடுபடுமா என்பதைப் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

புதிய கலாச்சாரம் ஜூலை 2010 இதழிலிருந்து

திரைப்படத்தைக் காண காணொளி பக்கத்திற்குச் செல்லவும்

முந்தைய திரைப்பட மதிப்புரைகள்

மாயன் நாள்காட்டி + நோவாவின் கப்பல் = 2012

உன்னைப்போல் ஒருவன்

தனம்

சுப்பிரமணியபுரம்

பருத்தி வீரன்


%d bloggers like this: