தீவுத்திடல் மாநாடு: தவறான திசை நோக்கி

உணர்ச்சிகளைத் தூண்டும் வாசகங்களுடன், ஒரு மிகப்பிரமாண்டமான ஒரு மாநாட்டை (15 லட்சம் பேர் (…?…) கலந்துகொள்ளவிருக்கிறார்களாம்) தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் எனும் அமைப்பு சென்னை தீவுத்திடலில் ஜூலை நாலாம் தேதி நடத்தவிருப்பதாகவும் அதில் கலந்துகொள்ளுமாறும் உரிமையுடன்(!) அழைக்கும் குழும மின்னஞ்சல்கள் வந்துகொண்டிருக்கின்றன. முஸ்லீம்களுக்கு பத்து விழுக்காடு இடஒதுக்கீடு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் வழங்கக் கோரி நடப்படவிருக்கும் மாநாடு என்பதாக அனுப்பப்பட்ட விளம்பரங்கள் கூறுகின்றன. வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்று ராமதாஸ் மீண்டும் குரலெழுப்பி வருவதன் நோக்கம் என்ன என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். பாட்டாளி மக்கள் கட்சியிலிருப்பவர்களே அது வன்னியர்களின் முன்னேற்றத்திற்கு என்று நம்ப மாட்டார்கள். ஆனால் இப்படி ஒரு இடஒதுக்கீடு போராட்டத்தினால் முஸ்லீம் சமுதாயம் முன்னேற்றம் அடைந்து விடும் அல்லது முன்னேறுவதற்கு உதவிகரமாய் இருக்கும் என நம்பவைக்கப்படும் இந்த மாநாடு குறித்து அதாவது இட ஒதுக்கீடு குறித்து சில தெளிதல்கள்.

இந்தியாவைப் பொருத்தவரை இஸ்லாமியர்கள் சிறுபான்மையினர் என்பது மட்டுமல்லாது அனைத்துத் துறைகளிலும் ஒடுக்கப்பட்டு வருகிறார்கள் என்பது மறுக்கவியலாத உண்மை. மட்டுமல்லாது அவர்கள் மீது பயங்கரவாத முத்திரை வெற்றிகரமாக குத்தப்பட்டுவருகிறது. அரசு எந்திரம் முழுமையும் பார்ப்பனீயத்திற்கு, சங்பரிவார செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு பயிற்றுவிக்கப் பட்டிருக்கிறது. அதேநேரம் சங்பரிவாரங்களின் செயல்திட்டங்களை ஊக்கப்படுத்தும் விதமாகவே தெளிவாகச் சொன்னால் முஸ்லீம்கள் எந்தத்திசையில் பயணித்தால் தங்களுக்கு நல்லது என சங் பரிவாரங்கள் எண்ணுகின்றனவோ அதே பாட்டையில் இஸ்லாமிய இயக்கங்கள் பயணிக்கின்றன என்பதும் மறுக்கவியலாத உண்மையாகிவருகிறது.

அறுதியான அரசியல் வெற்றி எனும் குறிக்கோளுடன் தனது செயல்திட்டத்தை வகுத்துக்கொண்டிருக்கும் சங்கப் பரிவாரங்கள் அதற்கான நடைமுறையாக ஒரு பொது எதிரியை சுட்டிக்காட்டுவதன் மூலமே இந்து எனும் ஒற்றுமையை ஏற்படுத்த முயல்கிறது. இன்றைக்கு அந்த பொது எதிரியாக இஸ்லாம் இருக்கிறது. இஸ்லாம் எனும் மதத்தை முஸ்லீம்களிடையே பலங்குன்றச்செய்யவேண்டும் என்பது அதன் நோக்கமாக இருந்திருந்தால் அது கைக்கொண்டிருக்கும் அரசு எந்திரத்தைக் கொண்டு வெகு சுலபமாக அதை செய்திருக்க முடியும். இஸ்லாத்தின் ஏதாவது ஒரு பிரிவினருக்கு சலுகைகள் கொடுத்து வேறு பிரிவினரை புறக்கணித்திருந்தால் எந்தச் சிரமமுமில்லாமலேயே முஸ்லீம்களுக்குள் இஸ்லாமிய ஐக்கியத்தை சிதறடித்திருக்கமுடியும். ஆனால் கோட்சே தன் கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்திக்கொண்டது தொடங்கி இன்று எந்தப் பேதமுமில்லாமல் விசாரணைக்கைதியாக முடக்கி வைத்திருப்பது ஈறாக மிகக் கவனமாக அதை தவிர்த்திருக்கிறார்கள். 47க்கு முன்னிருந்த இந்தியாவில் முஸ்லீம்களின் பெரும்பான்மையை திட்டமிட்டு தனி நாடாக பிரித்துவிட்டு, பின்னர் முஸ்லீம்களை ஓரணியில் திரள வைத்திருக்கிறார்கள். ஏனென்றால் அடிமையாய் தீண்டத்தகாதவனாய் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் ஒடுக்கிவைத்திருக்கும் மக்களை முஸ்லீம்களின் ஒற்றுமையை காட்டித்தான் இந்து எனும் பட்டிக்குள் அடைக்க முடியும். அதற்கு முஸ்லீம்கள் ஒற்றுமையாய் ஓரணியில் நிற்க வேண்டியது இன்றியமையாததாக இருக்கிறது.

இடஒதுக்கீடு என்பது ஒரு இடைக்கால ஆறுதலாக இருக்கலாமேயன்றி அது ஒரு தீர்வாக அமையாது. எந்த நோக்கத்திற்காக இடஒதுக்கீடு ஏற்படுத்தப்பட்டதோ அந்த நோக்கம் இதுவரையில் எட்டப்படவில்லை. ஒடுக்கப்பட்ட மக்களை முன்னேற்றப்பாதையில் அழைத்துச்செல்ல வேண்டும் எனும் திசையில் வந்த இடஒதுக்கீட்டால் ஒடுக்கப்பட்டவர்களல்ல பிற்படுத்தப்பட்டவர்கள் எனும் பெயரால் ஒடுக்கியவர்களே பலனடந்தார்கள். இடஒதுக்கீட்டின் பலனால் ஒடுக்கப்பட்டவர்கள் முன்னேறிவிடவில்லை. மாறாக பலனடைந்த வெகுசிலரும் ஒடுக்குபவர்களாக பரிணாமமடைந்தார்கள். அதேநேரம் ஒடுக்கப்பட்டவர்கள் ஆங்காங்கே பெற்றிருக்கும் எழுச்சி இடஒதுக்கீட்டின் விளைவல்ல, அரசியல் விழிப்புணர்வினால் ஏற்பட்ட எழுச்சி. அரசியல் அறியாமையைக் களையாமல், விழிப்புணர்வு பெறாமல் இடஒதுக்கீட்டினால் ஏழை உழைக்கும் வர்க்க முஸ்லீம்கள் எந்தப் பலனையும் அடைந்துவிட முடியாது.

பத்து விழுக்காடு இடஒதுக்கீடு வேண்டும் என்று இந்த மாநாட்டின் மூலம் மைய அரசிடம் கோரிக்கை விடுக்கிறார்கள். இந்த மைய அரசு தொடக்கம் முதலே இஸ்லாமியர்களை திட்டமிட்டே புறக்கணித்து வந்துள்ளது என்பதை, குண்டுவெடிப்பு உட்பட பல்வேறு வேளைகளில் குயுக்தியுடன் செயல்பட்டு முஸ்லீம்களை சிக்கவைத்தார்கள் என்பதை, நாடெங்கும் விசாரணைக் கைதிகளாக முஸ்லீம்களை எந்தவித உரிமையும் கிடைக்கவிடாமல் வதைத்தார்கள் என்பதை வீரியத்துடன் பேசிவருகிறார்கள். அதாவது எந்த மைய அரசு முஸ்லீம்களை புறக்கணிக்கிறது என்பதை உணர்ந்திருக்கிறார்களோ, எந்த அரசு எந்திரத்தின் மனோ நிலை முஸ்லீகளுக்கு விரோதமாக இருக்கிறது என எண்ணுகிறார்களோ அந்த மைய அரசு (எந்தக் கட்சி அரசாக இருந்தாலும்) பத்து விழுக்காடு இடஒதுக்கீடு தந்துவிட்டால் முஸ்லீம்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் முன்னேறி விடுவார்கள் அல்லது முன்னேறுவதற்கு வாய்ப்பாக அமையும் என்று எந்த அடிப்படையில் எண்ணுகிறார்கள்? முஸ்லீம்களை சமூக ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் ஒடுக்குவதை திட்டமாக கொண்டு செயல்படும் அரசு எந்திரம் பத்து விழுக்காடல்ல ஐம்பது விழுக்காடு தந்தாலும் அதனால் பலன் ஒன்றும் விளையாது.

முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு கிடைத்துவிட்டாலும் கூட ஒடுக்கப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீட்டில் என்ன நிகழ்ந்ததோ அதுவே முஸ்லீம்களுக்கும் ஏற்படும் என்பதில் ஐயம் ஒன்றுமில்லை. இஸ்லாத்தில் ஜாதி இல்லை என்று சத்தமாக மேடையேற்றினாலும், குரான் ஹதீஸில் (ஒருவேளை) இல்லை என்று எடுத்துக்காட்ட முடிந்தாலும், இந்தியாவில் முஸ்லீம்களுக்குள் ஜாதி இருக்கிறது என்பது தெளிவு. பிற்படுத்தப்பட்டோர் எனும் அடையாளத்துடன் அடக்குமுறைச் சாதியினரே ஒடுக்கப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீட்டின் பலனை அறுவடை செய்ததுபோல் முஸ்லீம்களிலும் அடைவார்களே தவிர பக்கிரிஷாக்கள், நாவிதர்கள் போன்றோருக்கு இடஒதுக்கீட்டின் பலன்கள் கிடைக்காது. ஏனென்றால் ஜாதிகள் இருக்கிறது என்பதை ஒருக்காலும் அவர்களால் ஏற்றுக்கொள்ளமுடியாது. காயம் இருக்கிறது என்பதை ஒத்துக்கொண்டாலல்லவா மருந்திடுவது குறித்து சிந்திக்கமுடியும். காயம் என்ற ஒன்று இல்லை என குரானை தடவிப்பார்த்துச் சொல்லும்போது அதை குணமாக்குவது குறித்து எப்படி யோசிப்பது?

இன்றைய நிலையில் இஸ்லாமிய சமூகத்திடம் இருக்கும் கல்விக்கூடங்கள் எத்தனை? ஒரு முஸ்லீமுக்கு பணம் இல்லாமல் கல்லூரியில் இடம் வாங்க முடியுமா? அடிமையாய் வேலைவாங்க முடியும் என்பதால் அடித்தட்டு முஸ்லீமாகப் பார்த்து தன் நிறுவனத்தில் வேலைக்கு ஆளெடுக்கும் ஒரு முஸ்லீம் முதலாளி தொழிலாளர்கள் முஸ்லீம் என்பதால் சலுகை எதுவும் கொடுத்துவிடுவானா? பின் யாருக்கு பலனளிப்பதற்காக இடஒதுக்கீடு?

ஓட்டுப்பொருக்கி அரசியல் நடத்துபவர்கள் தேர்தல் காலங்களில் கூட்டம் கூட்டி பலம் காட்டுவதைப்போல 15 லட்சம்பேர் என்று முன்கூட்டியே கணக்கிட்டு இடஒதுக்கீடு கேட்கும் இந்தப் போராட்டம் எந்த அடிப்படையில் நிற்கிறது? தமிழகத்தில் கடந்த ஒராண்டில் அரசில் வேலை பெற்றவர்கள் எத்தனை பேர்? பத்தாயிரம் கூட இருக்காது என்கிறது ஒரு நாளிதழ் செய்தி. பத்தாயிரம் கூட இல்லாத வேலைவாய்ப்பில் பத்து விழுக்காடு ஒதுக்கீட்டுக்கா 15 லட்சம் பேர் திரண்டு போராடப் போகிறீர்கள்? கல்வி, மருத்துவம், பொதுத்துறை, உணவு வழங்கல், பொதுவிநியோகம், உள்கட்டுமானம் உள்ளிட்ட அனைத்து துறைகளையும் அரசு தனியாரிடம் கைமாற்றிக்கொண்டிருக்கிறதே அதை கண்டு கொள்ளாமல் அரசிடம் இடஒதுக்கீடு கேட்டுப்போராடுவது, கோமணமே பறிபோய்க் கொண்டிருக்கையில் அதில் ஒரு நூல் பச்சை நூலாக இருக்கவேண்டும் எனக்கோரிப் போராடுவது போலில்லையா? தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு வேண்டும் என்று போராடினால் கூட அதில் பொருளிருப்பதாக கொள்ளமுடியும். அரசு எல்லா வேலைவாய்ப்புகளையும் தனியாரிடம் மடைமாற்றிக்கொண்டிருக்கும் வேளையில்  இடஒதுக்கீடு கேட்டுப் போராட்டமா?

போராட்டம் என்பது மகிழ்ச்சி அது தனக்கு மட்டும் என குறுக்கிக் கொள்வது கடைந்தெடுத்த சுயநலம். எல்லோருக்குமாக போராடுவோம். ஒரு ஜாதியினர் தங்களுக்கான உரிமை என்று போராடினால் அது ஜாதிக் கட்சி. ஒரு மதத்தினர் தனக்கான உரிமை என்றாலும் அதன் பொருள் மாறுவதில்லை. வர்க்கக் கோடு வெகு அழுத்தமானது, மதம் எனும் அழிப்பானால் அதை அழித்துவிட முடியாது. நாடே மறு காலனியாதிக்கத்திற்கு உள்ளாகிக் கொண்டிருக்கிறது. அதன் விளைவுகளிலிருந்து முஸ்லீம் மட்டும் தப்பித்துவிட இயலுமா? தனியார்மய, தாராளமய, உலகமய கொள்கைகளால் அனைத்து மக்களும் தங்கள் வாழ்வாதாரங்களிலிருந்து விரட்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். முஸ்லீம்கள் மட்டும் விடப்பட்டுவிடுவார்களா? ஏகாதிபத்திய மூலதனக் குவிப்பால் எட்டமுடியாத உயரத்தில் விலைவாசிகள் ஏறிக்கொண்டிருக்கின்றன. முஸ்லீம்களுக்கு மட்டும் அது எட்டிவிடுமா? எனவே, கல்வியில் எங்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்றல்ல கல்வி ஒரு அடிப்படை உரிமை அதை அனைவருக்கும் உயர்கல்வி வரை இலவசமாக வழங்கு என்று போராடுவோம். வேலைவாய்ப்பில் எங்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்றல்ல, வேலை வாய்ப்பு என்பது அனைவருக்குமான வாழ்வாதார உரிமை, அதை அனைவருக்கும் வழங்குவது அரசின் கடமை என்று போராடுவோம். அரசு என்பது முதலாளிகளின் கருவியாக இருக்கிறது, அதை பாட்டாளிகளுடையதாய் மாற்றுவோம். அதற்கான போராட்டங்களுடன் உங்களை இணைத்துக்கொள்ளுங்கள். அது தான் காலத்தின் தேவையாக இருக்கிறது.

16 thoughts on “தீவுத்திடல் மாநாடு: தவறான திசை நோக்கி

  1. ‘பலனடைந்த வெகுசிலரும் ஒடுக்குபவர்களாக பரிணாமமடைந்தார்கள்’ உண்மை. பதிவுக்கு நன்றி

  2. //இன்றைய நிலையில் இஸ்லாமிய சமூகத்திடம் இருக்கும் கல்விக்கூடங்கள் எத்தனை? ஒரு முஸ்லீமுக்கு பணம் இல்லாமல் கல்லூரியில் இடம் வாங்க முடியுமா? அடிமையாய் வேலைவாங்க முடியும் என்பதால் அடித்தட்டு முஸ்லீமாகப் பார்த்து தன் நிறுவனத்தில் வேலைக்கு ஆளெடுக்கும் ஒரு முஸ்லீம் முதலாளி தொழிலாளர்கள் முஸ்லீம் என்பதால் சலுகை எதுவும் கொடுத்துவிடுவானா? பின் யாருக்கு பலனளிப்பதற்காக இடஒதுக்கீடு?//

    அருமையான கருத்து,

    இட ஒதுக்கீடு இப்போது செல்லாக்காசு, அந்த செல்லாக்காசுக்கு போட்டியிடுகின்றன சதிசங்கங்களும் ,மதக்கட்சிகளும்…. அர்சுப்பள்ளிக்கூடங்கள் அழிக்கப்பட்டுவிட்டன, கல்லூரிகளில் லட்சங்கள் என்பது சாதாரணமாகிவிட்டது. படித்தவர்க்கு வேலை இல்லை. இதை கேள்வி கேட்க ஏன் இவர்கள் வருவதில்லை. ஏனெனில் இவர்கள் தான் கல்விக்கட்டண கொள்ளையை நடத்துகிறார்கள்.

    கல்விகளில் தனியார்மயத்தை ஒழிப்பதற்கு முதலில் பிஜே அவர்கள் கிரசண்ட் கலிவி நிறுவனங்களை பொதுவாக்க போராடுவாரா???. எல்லாம் உழைக்கும் மக்களை உறிஞ்சும் மோசடிபேர்வழிகள். கீழ்சாதி திப்புசுல்தானின் ஆட்சியை ஒழிக்க மேல்சாதி நவாபும், மீர்சாதிக்கும் மேற்கொண்ட முயற்சிகள் பற்றியும் படித்ததாக ஞாபகம்

    கலகம்

  3. இந்தியாவில் மாநில அளவில் பல மாநிலங்களில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு இருந்தது. தமிழ்நாட்டில் இல்லாமல் இருந்தது. தொடர்ச்சியான இது போன்ற போராட்டங்களின் மூலமே இப்போது 3.5 சதவீதம் இடஒதுக்கீடு கிடைத்துள்ளது. அரசில் எல்லா துறையிலும் இதற்கு முன் முஸ்லிம்களின் பங்களிப்பு 2 சதவீதத்திற்கும் குறைவே.. இனி வருங்காலங்களில் இந்த இடஒதுக்கீடு அளவைக் கூட்டவும் போராட்டங்களும் மாநாடுகளும் நடத்தப்படும்.

    மற்ற சமூக மக்களுக்கும், இஸ்லாமிய சமூகத்திற்கும் ஒரு வித்தியாசம் உண்டு. பல காலமாக அரசியல் விழிப்புணர்ச்சி என்பதே இல்லாமல் இருந்தது. இது போன்ற தொடர்ச்சியான போராட்டங்கள், மாநாடுகள் மூலம் அரசியல் பார்வையில் மிகப்பெரிய மாற்றம் கிடைத்துள்ளது.

    இதை இன்னும் அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டு செல்லவேண்டும், இதன் எழுச்சியை இந்தியா முழுவதும் கடத்த வேண்டும் என்பதே இம்மாநாட்டின் நோக்கம்.

  4. Dear Mr. Sengodi,

    This gathering will help our people to come up………………………………………

  5. \\\\\\வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்று ராமதாஸ் மீண்டும் குரலெழுப்பி வருவதன் நோக்கம் என்ன என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். பாட்டாளி மக்கள் கட்சியிலிருப்பவர்களே அது வன்னியர்களின் முன்னேற்றத்திற்கு என்று நம்ப மாட்டார்கள். \\\\\\
    இராமதாசின் பாட்டாளி மக்கள் கட்சியை போல் ஓட்டுபொறுக்கி அரசியல் கட்சியல்ல தமிழ் நாடு தவ்ஹீது ஜமாஅத். இவர்கள் நடத்தும் எந்த போராட்டமும் மக்களை காட்டி மக்களுக்காக பேரம் பேசுகின்ற போராட்டமாகத்தான் இருக்கும். இவர்கள் தங்களுக்காக எம் எல் ஏ, எம் பி பதவிகளை அரசியல் கட்சிகளிடம் கேட்பதற்காக போராட்டம் நடத்தவில்லை.

    \\\\\\\இஸ்லாத்தில் ஜாதி இல்லை என்று சத்தமாக மேடையேற்றினாலும், குரான் ஹதீஸில் (ஒருவேளை) இல்லை என்று எடுத்துக்காட்ட முடிந்தாலும், இந்தியாவில் முஸ்லீம்களுக்குள் ஜாதி இருக்கிறது என்பது தெளிவு. பிற்படுத்தப்பட்டோர் எனும் அடையாளத்துடன் அடக்குமுறைச் சாதியினரே ஒடுக்கப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீட்டின் பலனை அறுவடை செய்ததுபோல் முஸ்லீம்களிலும் அடைவார்களே தவிர பக்கிரிஷாக்கள், நாவிதர்கள் போன்றோருக்கு இடஒதுக்கீட்டின் பலன்கள் கிடைக்காது. ஏனென்றால் ஜாதிகள் இருக்கிறது என்பதை ஒருக்காலும் அவர்களால் ஏற்றுக்கொள்ளமுடியாது. காயம் இருக்கிறது என்பதை ஒத்துக்கொண்டாலல்லவா மருந்திடுவது குறித்து சிந்திக்கமுடியும். காயம் என்ற ஒன்று இல்லை என குரானை தடவிப்பார்த்துச் சொல்லும்போது அதை குணமாக்குவது குறித்து எப்படி யோசிப்பது?\\\\\

    குரான் ஹதீஸில் எது இல்லையோ அது இஸ்லாத்தில் இல்லை என்று தான் கூற வேண்டும். ஏற்கனவே ஜாதி என்னும் புண்ணோடு வந்த சகோதரர்கள் குரான் என்னும் மருந்தை தடவி பார்க்காததால் ஒருவேளை ஒரு சிலருக்கு இது வரை நோய் குணமடையாமல் இருக்கலாம். மருந்தை உபயோகிக்காத நோயோயாளிக்கு நோய் குணமாகவில்லை என்பதற்காக மருந்தை குறை கூறுவது செங்கொடியின் அறிவின்மையை தான் காட்டுகிறது. குரான் என்னும் மருந்தின் மகிமையை தான் நாங்கள் உலகுக்கு கூறிகொண்டிருக்கிறோம். அதன் மகிமையை பாராட்டுவதற்குரிய மனம் உங்களுக்கு இல்லை என்றாலும் குறைந்த பட்சம் தூற்றாமலாவது இருக்கலாமே. எதோ எழுதவேண்டும் என்று எழுதாமல் ஆழமாக சிந்தித்து எழுதினால் நீங்களும் பிரபலம் அடையமுடியும்.

    இப்படிக்கு ,

    தென்றல்.

  6. ஐயா நண்பரே (உங்கள் பெயர் எதுவாயிருந்தாலும் எனக்கு அவசியமில்லை)

    இந்தக்கட்டுரையின் மைய நோக்கமான இடஒதுக்கீடு குறித்த கேள்விகளுக்கு உங்கள் பதிலென்ன?

    மருந்தின் குறைபாடு என்ன என்பது இங்கு உட்படுத்தப்படாதது. மற்றப்படி நோயாளிகள் கோடிக்கணக்கானோர். மருந்து இருக்கிறது என்பதே நோய் இல்லை என்பதற்கான குறியீடல்ல. வேதத்தை புரட்டிப்பார்த்துவிட்டு நோய் இல்லை என்று சொல்லாதீர்கள் என்கிறேன். நோய் மக்களிடம் இருக்கிறது. அதற்குப்பிறகு தான் மருந்து சரியானதா இல்லையா என்பது.

    பிரபலம்…..? அதெப்படி இதுபோன்ற சிந்தனைச் செக்குகளைவிட்டு வெளியேறவே முடியாதா உங்களால்.

    செங்கொடி

  7. அன்புள்ள தென்றல்,
    சாதி என்பது இஸ்லாத்தில் இல்லை என்பது போல ஏன் பொய்களை எழுதுகிறீர்கள்? சாதி இல்லை என்றால் ஏன் இன்னமும் நபிகள் நாயகம்(ஸல்) காலத்திலிருந்த அன்சாரி, குரேய்ஷி ஆகியோர் இன்னும் தங்கள் ஜாதிப்பெயர்களுடன் இருக்கிறார்கள்? தெளிவு படுத்த முடியுமா? பாகிஸ்தானில் இருக்கும் மக்கள் இன்னமும் ஜாதிபெயர்களை வைத்துகொண்டிருப்பதை வைத்து இந்துக்களின் பழக்கம் ஒட்டிகொண்டிருக்கிறது என்று வாதிடுகிறார்கள். ஆனால் இன்னமும் ஏன் அரபியாவிலும் ஈராக்கிலும் துருக்கியிலும் தங்களது ஜாதிப்பெயர்களை முஸ்லீம்கள் வைத்துகொண்டிருக்கிறார்கள். அந்த ஜாதிக்குள்ளேயே தங்கள் பெண்களை திருமணம் செய்து தருகிறார்கள். வேறு ஜாதியில் திருமணம் செய்யும் பெண்களை கௌரவக்கொலைகள் செய்கிறார்கள்? இஸ்லாத்தில் ஜாதி இல்லை என்பது இங்கே திராவிட இயக்கத்துக்கு உகந்ததாக காட்டிக்கொள்ள தமிழ்நாட்டு முஸ்லீம் தலைவர்கள் செய்யும் பிரச்சாரம். அது உண்மை அல்ல.

  8. முஸ்லிம்கள் என்னும் ஆடு நனையும் போது செங்கொடி என்னும் ஓநாய் அழுகிறதாம். செங்கொடிக்கு சங்பர்வாரே தேவலாம்.

  9. அன்பு நண்பர் முகமது கனி இராவுத்தர் அவர்களே,
    நீங்கள் இட்ட உங்கள் புனைபெயரின் பின்னால் தொக்கி கொண்டிருக்கும் இராவுத்தரின் அர்த்தம் உங்களுக்கு ஒருவேளை தெரியாமல் இருக்கலாம். அதாவது அந்த காலத்தில் அரசர்களுக்கு போர்ககுதிரைகளை பயிற்றுவிக்கும் பயிற்சியாளர்களுக்கு பெயர்தான் இராவுத்தர். அதையே பிற்காலத்தில் பெருமையாக ! விபரம் புரியாமல் இன்றும் பெயருக்கு பின்னால் சேர்த்து கொண்டிருக்கிறார்கள் சில இடங்களில்.
    சாதி என்பது என்பது என்ன தெரியுமா சகோதரரே ? ஒருவன் நினைத்தாலும் அளிக்க முடியாதது. பிறப்பிலேயே அவனோடு ஒட்டிகொண்டது. அவன் வேத புத்தகங்களால் ஊக்குவிக்கபடுவது.
    இஸ்லாத்தில் சில சாதி பிரிவுகள் இருப்பதாக கூறியிருக்கும் நீங்கள் அதன் பெயரை குறிப்பிடவில்லை. இருந்தாலும் எதை அடிப்படையாக வைத்து நீங்கள் கூறுகிறீர்கள் என்பதை என்னால் உணர முடிகிறது. முதலில் உங்களை பேன்ற மனிதர்கள் இஸ்லாத்தில் சாதி உண்டு என்று கூறுவதன் காரணம் . அது இஸ்லாத்தில் இருக்க கூடாது என்ற ஆதங்கத்தினால் அல்ல. அப்படி உண்மையிலே இருந்து இஸ்லாமியர்கள் பிரிந்தால் நல்லது என்று நினைக்கும் உங்கள் வேட்கையினால். சில வேளை இராம கோபாலன் கூட ஏன் மோடி கூட இஸ்லாத்திற்காக வக்காலத்து வாங்குவான் . அது ஆடு நனைகிறதே என்பதற்காக ஓநாய் அழுவதைபோல் தான் என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் நன்றாக உணர்திருக்கிறான். அதனால் வாழைபழத்தில் ஊசி வைத்து கொடுக்கின்ற செங்கொடியின் கட்டுரைகளும் , உங்களை பேன்ற பினாமிகளின் மறுமொழிகளும் இஸ்லாமியர்களை நீங்கள் தரம் குறைத்து காண்பிப்பதற்கான முயற்சிதானே ஒழிய வேறில்லை.
    அடுத்து விசயத்திற்கு வருவோம். இஸ்லாத்தில் நீங்கள் கூறும் சாதி என்பதெல்லாம் கொள்கை அடிப்படையிலான புரிதல்களில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள். வேறுபட்ட கருத்துகளை உடைய ஒவ்வொரும் தாங்கள் தான் குரானின் கருத்துகளை உண்மையிலே பின்பற்றுபவர்கள் என்று இஸ்லாத்திற்கு உரிமை கொண்டாடுபவர்கள். ஷியா, சன்னி எதுவாக இருந்தாலும் அப்படிதான். எந்த நிமிடத்திலும் அவர்கள் எதிலிருந்து எதற்கும் மாற முடியும். யாரும் யாரை விட உயர்ந்தவர் என்று ஒருபோதும் கூறுவதில்லை. நாங்கள் புரிந்து கொண்டது தான் சரி என்று விளங்கி வைத்திருக்கிறார்கள் அவ்வளவு தான் ஆனால் ஒருவன் ஒரு சாதியில் இருந்து மற்றொரு சாதிக்கு எப்போதும் மாற முடியாது. அது அவன் பிறப்பிலே ஒட்டிகொள்வது. கருத்து வேறுபாடுகள் சொந்த சகோதரர்களுக்குள்ளால் வருவதில்லையா ? அதற்காக அவர்களை இரண்டு சாதி என்றா நாம் கூறுகிறோம்.? அதுபோல் தான் இஸ்லாத்தில் பிரிவுகள் என்பது கொள்கை புரிதலின் உள்ள வேறுபாடுகள் தான். அது நிமிடத்தில் மாறிவிடும் புரிந்து கொண்டால். ஆனால் சாதி என்பது மாறவே மாறாது. அதுபோல் இஸ்லாத்திலும் இருக்க வேண்டும் என்று நீங்களும் செங்கொடியும் விரும்பினாலும் எங்கள் அடிப்படை அதற்க்கு இடம் கொடுக்க வில்லையே.? என்ன செய்வதற்கு ?

    இப்படிக்கு ,

    தென்றல்

  10. அன்பு நண்பரே ,
    அன்சாரி ,குறைஷி என்பதெல்லாம் சாதி இல்லை சகோதரரே . அது முகமது நபியின் காலத்திற்கு முந்தைய காலத்திலேயே அடையாளம் காண்பதற்காக அழைக்கப்பட்ட மக்களின் குலபெயர்கள். அவர்கள் யாரும் இஸ்லாம் வந்த பின்னால் தங்கள் குலபெயர்களை வைத்து சண்டையிடுவதும் இல்லை . உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று கூறுவதும் இல்லை. இருவரும் மாறி மாறி திருமணமும் செய்து கொண்டார்கள். முகமது நபியின் காலத்திற்கு பின்னால் நடந்த போர்களெல்லாம் இஸ்லாமியர்களுக்கும் அதன் எதிரிகளுக்கும் தான் . அதில் இரண்டு பக்கமும் இரண்டு குலத்தை சார்ந்தவர்களும் இருந்தார்கள். அங்கே சாதி,குலம் என்பது அறவே மறக்கடிக்கப்பட்டுவிட்டது.

    இப்படிக்கு ,
    தென்றல்

  11. பொதுவாக சவுதி அரேபியா, துருக்கி, ஈராக் போன்ற நாடுகளில் பெண்கள் கீழ்ஜாதியினரை திருமணம் செய்தாலோ காதலித்தாலோ கொல்லப்படுவர்கள். இதற்கு பெயர் ஹானர் கில்லிங். அல்லது கௌரவக்கொலை. இதற்கு இந்த நாடுகளில் தண்டனை கிடையாது. ஜாதி கௌரவத்தை, குடும்ப கௌரவத்தை காப்பாற்ற பெண்களை கொலை செய்வது அனுமதிக்கப்பட்டது. ஆனால், ஒரு ஆண் கீழ்ஜாதி பெண்ணை திருமணம் செய்யலாம். அது இந்த நாடுகளில் அனுமதிக்கப்பட்டது. இதுவே இஸ்லாமிய ஜாதிமுறை. இதனால், இந்தியாவிலும் ஒரு முஸ்லீம் ஆண் இந்து அல்லது கிறிஸ்துவ பெண்ணை திருமணம் செய்து மதம் மாற்றுவது அனுமதிக்கப்பட்டது. ஆனால் ஒரு முஸ்லிம் பெண் இந்து ஆணை திருமணம் செய்வது ஹராமானது. அப்படி பெண் காதலித்தால் அவ்ளை கொல்லலாம் என்று இஸ்லாமிய சட்டம் சொல்கிறது. ஆகையால் சவுதி அரேபியா, துருக்கி போன்ற இஸ்லாமிய நாடுகளில் பெண்கள் வெளி ஜாதியில் திருமணம் செய்துதரப்பட மாட்டார்கள். அப்படி காதலித்தால் அவர்கள் கொலை செய்யப்படுவார்கள். துருக்கியில் மட்டும் சுமார் 200 பெண்கள் இப்படி ஜாதி கௌரவத்துக்காக சென்ற வருடம் கொலை செய்யப்பட்டுள்ளார்கள் என்று செய்தி தெரிவிக்கிறது. ஒவ்வொரு வருடமும் 200க்கும் மேற்பட்ட பெண்கள் இவ்வாறு கொல்லப்படுகிறார்கள்.
    http://www.islam-watch.org/index.php?option=com_content&view=article&id=344%3Agirl-buried-alive-in-turkey-honor-killing-is-about-islam&catid=45%3Aali-sina&Itemid=58
    http://newsinfo.inquirer.net/breakingnews/world/view/20081204-176125/Hundreds-of-honor-killings-in-Turkey

    ஆனால், சவுதி அரேபியாவில் ஒரு வினோதமான செய்தி 2004இல் வெளிவந்தது. இங்கு மன்சூர் அல்-திமானி என்ற கீழ்ஜாதி ஆணுக்கு பாத்திமா என்ற மேல்ஜாதி பெண் திருமணம் செய்விக்கப்பட்டார். திருமணமாகி குழந்தை பெற்ற பிறகுதான் பெண்ணின் குடும்பத்தினருக்கு அந்த கணவன் உண்மையிலேயே கீழ்ஜாதியை சேர்ந்தவர் என்று தெரியவந்தது. அதனால் அந்த பெண்ணின் குடும்பத்தினர் கோர்ட்டை அணுகி அந்த திருமணத்தை ரத்து செய்யவேண்டும் என்று கோரினர். அதனால், அந்த திருமணத்தை சவுதி அரேபிய ஷரியா நீதிபதி ரத்து செய்தார். உடனே அந்த பெண் அழுது தான் கணவனுடன் தான் வாழப்போகிறேன் என்று கிளம்பியவுடன், திருமண உறவு இல்லாமல் அந்த பெண் ஒரு ஆணுடன் வாழ்வதை தடுக்க, அந்த பெண்ணை சிறையில் போட்டார்கள். அந்த பெண் சிறையில் இருக்கிறாள்.
    மேல் முறையிட்டு நீதிமன்றத்துக்கு வழக்கு சென்றது. அந்த மேல் முறையீட்டு நீதிமன்றத்திலும் அந்த பெண்ணுக்கு செய்து வைத்த கட்டாய விவாகரத்து சரியானதே என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.
    இதோ அரபுநியூஸ் செய்தி
    http://archive.arabnews.com/?page=1&section=0&article=91520&d=29&m=1&y=2007

    ஆகவே, இஸ்லாமில் ஜாதி இல்லை என்பது படு கேவலமான் பொய். இந்தியாவை விட புழுத்து நாறும் ஜாதி மூறை கொண்டவை இஸ்லாமிய நாடுகள். முஸ்லீம் நாடுகளை விட இந்தியாவில் சுதந்திரம் இருப்பதால், இந்தியாவில் பிரச்னைகள் வெளியே வருகின்றன. இஸ்லாமிய நாடுகளில் இஸ்லாமிய ஷரியா சட்டத்தை எதிர்த்து இந்தியாவில் கூட பேசமாட்டார்கள். அதனால் இந்த பிரச்னைகளை பற்றிய ஒரு அறிவும் இந்தியாவில் இருக்கும் முஸ்லீம்களுக்கும் கிடையாது. இந்துக்களுக்கும் கிடையாது.

    வட இந்தியாவில் இன்னமும் அஹ்மது பட்டேல், முகம்மது சாமார் என்றுதான் தங்கள் ஜாதிப்பெயருடன் முஸ்லீம்கள் பெயர் வைத்துகொள்கிறார்கள். ஈராக்கில் இருக்கும் ஜாதிப்பெயர்களை இங்கே பார்க்கலாம்.
    http://en.wikipedia.org/wiki/Arab_tribes_in_Iraq
    ஒவ்வொரு ஜாதிக்கும் ஒரு ஜாதித்தலைவர் வேறு உண்டு. இந்த ஜாதித்தலைவர் என்ன சொல்கிறாரோ அதனைத்தான் அந்த ஜாதியில் உள்ள அனைவரும் பின்பற்றுகிறார்கள். பின்பற்ற வேண்டும். இதிலும் மேல்ஜாதி கீழ்ஜாதி எல்லாம் உண்டு. அதில் மேல்ஜாதி பெண்ணை கீழ்ஜாதி ஆள் திருமணம் செய்யலாகாது. அதுமட்டுமல்ல, காதலிப்பதாக தெரிந்தாலே மேல்ஜாதி பெண்ணின் சகோதரர்களாலும் ஜாதி ஆட்களாலும் கொல்லப்படுவார். இது கௌரவக்கொலை என்று தண்டனை வழங்கப்படாது.

    The Quran (4:34) says men are in charge of women. The same verse says “good women are the obedient, guarding in secret that which Allah hath guarded.”

    In Islam women are the namoos (ناموس) of their male relatives. Namoos can be roughly translated as honor, but with a sexual connotation. The namoos of a Muslim hinges on protecting his female kin from prying eyes. If a woman displays her beauty or talks to a stranger man, the namoos of all her male relatives is injured. The only way to redeem an injured namoos is to wash the stain with blood.

  12. இஸ்லாத்தில் ஜாதி உண்டு என்பதை குர்‍ஆன், மற்றும் ஹதிஸ் கொண்டே நிறுவ வேண்டும். ஒரு குடும்ப ஆட்சி முறையை இஸ்லாம் ஆதரிக்கவில்லை ஆனால் சௌதியில் இது தான் நடைமுறை. அதற்காக சவூதி கடைபிடிப்பதெல்லாம் இஸ்லாம் ஆகிவிடாது. அதை விட்டு சகட்டு மேனிக்கு செய்திகளை ஆதாரமாக காட்டி ஜம்பம் செய்ய வேண்டாம்.

  13. செங்கொடி,
    உங்கள் வாதக்கட்டுரையை முழுமையாக ஏற்கவோ, மறுக்கவோ இயலவில்லை.

    இஸ்லாம் சாதி பேதங்கள் இல்லாத ஒரு மார்க்கம். ஆனால், முஸ்லிம்கள் (பொதுவாக, பொருளாதாரப் பாகுபாட்டின் அடிப்படையில்) தமக்கிடையே பேதங்கள் பாராட்டுவதுண்டு.

    ஆனால், ஓர் ஆச்சரியமாக, எடுத்தல் கொடுத்தலில் (சம்பந்தம் செய்வதில்) பேதமில்லாததால், நாளடைவில் கீழோர் மேலோராவதும், மேலோர் கீழோராவதும் நடைபெற்றே வருகிறது.

    ஆக, முஸ்லிம்களிடையே பாகுபாடுகள் என்பது பொருளாதாரம் சார்ந்ததாகவே இருக்கிறது. (உதாரணமாக, நாவிதர் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவர் படித்து கல்வி கற்று, கல்லூரிப் பேராசிரியரானார். அதன்பின் அவர் குடும்பத்தில் சம்ப்ந்தம் செய்ய எல்லா குடும்பத்தினரும் முன்வருதல் உண்டு).

    பேரணி, மாநாடு, அரசியல் என்று நீங்கள் கூறுவதில் சற்று உடன்படத்தான் வேண்டும். “மார்க்கத்தைச் சொல்வதற்காக” என்று இயக்கத்தை ஆரம்பிக்கிற பீஜேக்கள் எதிர்தரப்பு முஸ்லிம் இயக்கத்தை விட கூட்டம் காண்பிக்க வேண்டும் என்று அரசியல்சார்ந்து ‘ஆசை’ப்படுவதன் விளைவே இந்த மாநாடுகள். என்னத்த் சொல்ல!!

  14. பாரபட்சம் காட்டப்படும் போது அதை சுட்டிக்காட்டி நமது உரிமைகளை பெற்றிட பேரணி நடத்துவதும் மார்க்கம் தான். மார்க்கம் என்பது வெறும் வணக்க வழிபாட்டோடு முடிந்து விட்டது என்று நினைப்பதே ஒரு அறியாமை தான். மேலும் மக்கள் கூட்டத்தை காட்டி ஆட்சியாளர்களிடம் நமது உரிமைகளை மீட்டு எடுப்பது உங்களுக்கு கசப்பாக இருக்கிறதா?

    இடஒதுக்கீடு வீண் வேலை என்றால் மிஸ்ராவும்,சச்சாரும் ஏன் அதனை பரிந்துரை செய்ய வேண்டும்?. இடஒதுக்கீடு தேவையில்லை என்றால் இந்த ஒடுக்கப்பட்ட சமூகத்தை முன்னேற்ற என்ன தான் தீர்வு சொல்லப்போகிறார் செங்கொடி. பொத்தாம் பொதுவாக குற்றம் சாட்டாமல் அதற்கு மாற்றையும் குறிப்பிடலாம்.

  15. நண்பர் கருப்புக்கொடி

    மீண்டும் ஒருமுறை படித்துப்பார்த்துக்கொள்ளுங்கள், மாற்றும் சொல்லப்பட்டிருக்கிறது என்பதை உணர்வீர்கள். இந்தியாவில் இதுவரை ஆயிரக்கணக்கான கமிசன்கள் எதற்காக அமைக்கப்பட்டனவோ அதற்காகவே, சச்சாரும் மிஸ்ராவும் அதற்கு மேல் அவர்களுக்கோ, அவர்களின் பரிந்துரைகளுக்கோ முக்கியமில்லை. கட்டுரையில் நான் குறிப்பிட்டிருக்கும் விமர்சனங்களுக்கு உங்களுடைய பதில் என்ன? ஆதரவா? எதிர்ப்பா? என்ற நிலையிலேயே நின்றுவிடாமல் சரியா? தப்பா? எனும் நிலைக்கு ஏறி வாருங்கள்.

    \\பாரபட்சம் காட்டப்படும் போது அதை சுட்டிக்காட்டி நமது உரிமைகளை பெற்றிட பேரணி நடத்துவதும் மார்க்கம் தான்// என்று குறிப்பிட்டுள்ளீர்கள். இடஒதுக்கீட்டைவிட பல மடங்கு சக்திவாய்ந்த பாரபட்சம் வர்க்கமாகப் பிரித்து உலகை வதைத்துக் கொண்டிருப்பதை எதிர்த்து மார்க்கம் தொழிற்படாத மர்மம் என்ன?

    செங்கொடி

  16. தென்றல் இவ்வாறு புளுகினார்
    //. அதில் இரண்டு பக்கமும் இரண்டு குலத்தை சார்ந்தவர்களும் இருந்தார்கள். அங்கே சாதி,குலம் என்பது அறவே மறக்கடிக்கப்பட்டுவிட்டது. //
    அதற்காகத்தான் இன்னமும் அரேபியாவில் இருக்கும் சாதிப்பிரிவினையையும் கீழ்ஜாதி மேல்ஜாதி பிரச்னையையும் கீழ்ஜாதியை திருமணம் செய்த மேல்ஜாதி பெண்ணுக்கு ஷரியா நீதிமன்றம் கட்டாயவிவாகரத்து கொடுத்ததையும் காட்டினேன். மறக்கடிக்கப்பட்டது என்று புளுகினாரே தென்றல். அவர் எங்கே?

    ஒருவேளை அவர்தான் கருப்புக்கொடி என்று பெயர்மாற்றிகொண்டு எழுதுகிறாரோ என்னவோ? அவருக்கும் பதில் தருகிறேன். இது ஷரியா சட்டம். இது கஃபா எனப்படும். காபா அல்ல. கஃபா. Kafa’ah இதன் படி மேல்ஜாதி பெண்கள் கீழ்ஜாதி ஆணை திருமணம் செய்வது தடுக்கப்படுகிறது. அரபி பெண் அரபி அல்லாத ஆணை திருமணம் செய்வ்து தடுக்கப்படுகிறது. ஆனால், அரபி ஆண் கீழ்ஜாதி பெண்ணையோ அல்லது அரபி அல்லாத பெண்ணையோ திருமணம் செய்யலாம். அது war booty. அடிமைகளாக பலரை வைத்துகொள்ளலாம். அடிமைப்பெண்களை பாலுறவுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம். இதுவெல்லாம் இஸ்லாமிய ஷரியா படி சரியானது.

    ‘… And Kafaa’at in lineage. Thus the Quraysh are suitable matches for one another as are the (other) Arabs suitable matches for one another.’

    The ruling relevant to non-Arabs is as follows: ‘An Ajmi (non-Arab) cannot be a match for a woman of Arab descent, no matter that he be an Aalim (religious scholar) or even a Sultan (ruling authority). This is the correct view.)

    Rasulullah (sallahu alayhi wa sallam) said: “A woman is married for four: her wealth, her lineage, her beauty and her religion, so choose one that is religious, and you will prosper.”

    An Arab is someone who can show his lineage goes back to the Arab tribes at the time of the Prophet (sallahu alayhi wa salam) Thus, someone who speaks Arabic, lives among other “Arabs”, and is Arab “culturally/ethnically” isn’t necessarily an Arab for the purpose of kafa’ah.

    http://timesofindia.indiatimes.com/home/sunday-toi/special-report/Divorced-from-the-will-of-God/articleshow/5783067.cms

    On the question of parity between husband and wife, Section 117 (3) of the AIMPLB compendium differentiates between Muslims of Arab and non-Arab origin. It provides that “regard shall be had in respect of descent among the Arabs especially Quraysh and those non-Arab families who have preserved their descent. People in the rest of the non-Arab world are mutually equal”. What a travesty of Islamic egalitarianism and equality.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s