ஹாலிவுட்டின் புதிய வில்லன்கள்

“இன்டர்நேஷ்னல்” திரை விமரிசனம்உலகளாவிய சந்தையைக்குறிவைத்து இயங்கும் ஹாலிவுட்டிலும் கோடம்பாக்கத்தைப்போல ஃபர்முலா கதைகள் தான் புதிய மொந்தைகளில் வெளியிடப்படும். கம்யூனிஸ்டுகள், இஸ்லாமியர்கள் – அரேபியர்கள், வேற்றுக்கிரக ஜீவராசிகள் போன்றவர்கள் தான் அலுப்பூட்டும் விதத்தில் திரும்பத்திரும்ப விலான்களாக வருவதைப் பார்த்திருப்போம்.

என்னதான் வெண்திரையில் புனைகதைகளைக் கட்டியமைத்தாலும் வாழ்க்கை என்ற பெரிய உண்மை ஒன்று இருக்கிறதே! முதலாளித்துவ பொருளாதாரம், இந்த உலக மக்களைக் காக்கும் அருகதையை இழந்துவருவதை அமெரிக்காவில் தொடங்கி இப்போது கிரீஸ் வரையிலும் 21ஆம் நூற்றாண்டு வெளிச்சம் போட்டு காட்டிவருகிறது. மேற்குலகம் முழுவதிலும் “முதலாளித்துவம் ஒழிக” என்ற முழக்கம் ஐஸ்லாந்து எரிமலை புகைபோல படர்ந்துவருகிறது. இப்படி மக்களின் பட்டுத் தெரிந்துகொண்ட ‘மூடு’ மாறிவரும்போது இன்னும் எத்தனை நாள் பின்லாடனே வில்லன் பாத்திரத்தை ஏற்கமுடியும்? இப்போதைய புதிய வில்லன்கள் யார்?

*************************

கொலம்பியா பிக்சர்ஸ் தயாரிப்பில், டாம் டைக்வெர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம், “இன்டெர்நேஷ்னல்” படத்தின் கதையை சுருக்கமாகப் பார்ப்போம்.

நியூயார்க்கின் அட்டர்னி ஜெனரல் அலுவலகத்தைச் சேர்ந்த ‘எல்லா’ என்ற பெண் உலக அளவில் பயங்கரவாதிகளுக்கு பணம் வருகிற வழி வகைகளை ஆய்வு செய்கிறாள். அவளுக்கு இன்டர்போலைச் சேர்ந்த ஏஜன்ட் சேலிஞ்சர் உதவுகிறான். இவர்களுடைய கூட்டு முயற்சியில் ஒரு ஜெர்மன் வங்கியின் நடவடிக்கைகள் சந்தேகத்திற்குரியவையாகத் தெரிகின்றன. ஐ.பி.பி.சி என்ற அந்த உலக வங்கி உலகில் ஐந்தாவது பெரிய வங்கி. பெர்லினை தலைமையிடமாகக் கொண்டு செயல் படுகிறது. அதன் நடவடிக்கைகளை மேலும் புலனாய்வு செய்கிறார்கள்.

இத்தாலியைச் சேர்ந்த கால்வினி என்ற இராணுவத் தளவாட நிறுவனத்திடமிருந்து 200 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஏவுகணைகளை வாங்குவதற்கு அந்த வங்கி முயல்கிறது. ஒரு வங்கி ஆயுதங்களை வாங்கவேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி எழுகிறது. அதைக் கண்டுபிடிக்க வங்கியைச் சேர்ந்த உயரதிகாரி ஒருவரை ரகசியமாகத் தொடர்புகொண்டு முயல்கிறார்கள். இந்த வேலையில் ஈடுபடும் சேலிஞ்சரின் நண்பன் தாமஸ் ஷூமர் திடீரென்று இறந்துபோகிறான். ஆரம்பத்தில் அது மாரடைப்பு எனக் கூறப்பட்டாலும், அது ஒரு கொலை என்பதை சேலிஞ்சர் பின்னர் கண்டுபிடிக்கிறான்.

இதனால் ஆத்திரம் கொண்ட எல்லாவும், சேலிஞ்சரும் வங்கியின் இரகசிய நடவடிக்கைகளை கண்டுபிடிக்க சங்கற்பம் செய்கிறார்கள். இதற்கிடையில் வங்கிக் கெதிரானவர்கள் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார்கள். கால்வினி நிறுவனத்தின் அதிபர் கால்வினி இத்தாலியின் அடுத்த பிரதமராக வரவேண்டியவர், தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் கொல்லப்படுகிறார். அதற்கு சற்று நேரம் முன்புதான் கால்வினியை எல்லாவும் சேலிஞ்சரும் சந்திக்கிறார்கள்.

கால்வினி நிறுவனத்துடன் ஏவுகணைகள் வாங்குவதாக வங்கி மேற்கொண்ட ஒப்பந்தம் முறியும் நிலையில் இருக்கிறது. ஒப்பந்தத்திற்கு ஆதரவாக வேலை செய்யும் வங்கி உயரதிகாரியும் கொல்லப்படுகிறார். இந்தப் பின்னணியில்தான் கால்வினியை இருவரும் சந்தித்து பல கேள்விகளை கேட்கின்றார்கள். வங்கி ஆயுதக் கொள்முதலுக்கான பின்னணி அப்போதுதான் அவர்களுக்கு தெரிய வருகிறது.

சீனாவில் இருந்து மலிவான விலையில் சிறுரக ஆயுதங்களை கொள்முதல் செய்யும் அந்த வங்கி அவற்றை சிறு நாடுகளுக்கு விற்பனை செய்கிறது. பல போராளிக்குழுக்களுக்கும் இலவசமாய் கொடுக்கிறது. இதில் என்னதான் ஆதாயம்? ஆயுதங்களைக் கொடுத்த கையோடு அந்த நாட்டின் நிதிச் சந்தையை கட்டுப்படுத்தும் அதிகாரத்தை வங்கி கைமாறாக பெற்றுக்கொள்கிறது. கடன் சந்தையைக் கைப்பற்றினால் கிட்டத்தட்ட அந்த நாட்டின் எல்லாவறையும் கட்டுப்படுத்துவது போலத்தான் என கால்வினி கூறுகிறான்.

கால்வினி நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஈடேற முயன்ற வங்கியின் உயரதிகாரி ஒருவர், அவரும் கால்வினியின் நண்பர் என்பதோடு மர்மமான முறையில் கொல்லப்படுவதையும் சேலிஞ்சர் சுட்டிக்காட்டுகிறான். கால்வினி நிறுவனத்துடன் ஒப்பந்தம் முறிந்தால் வங்கி மிகப்பெரிய நெருக்கடியை சந்திக்கும் என்பது யாருக்கும் தெரியாது. சேலின்சரும், எல்லாவும் கால்வினியுடன் உரையாடிவிட்டு வெளியே காத்திருக்கிறார்கள். அப்போதுதான் சதுக்கம் ஒன்றில் பேசத்துவங்கும் கால்வினி தூரக்குறி துப்பாக்கிக்காரன் ஒருவனால் சுட்டுக் கொல்லப்படுகிறான்.

இத்தாலிய போலீசும் அரசும் இந்தக் கொலையை ‘ரெட்பிரிகேடு’ எனும் புரட்சிப்படை செய்திருப்பதாக கூறுகிறர்கள். சேலிஞ்சர் மட்டும் ‘இது வங்கி செய்த கொலை’ என பலமாக நம்புகிறான். அதற்கான ஆதாரங்களைத் திரட்டுகிறான். சுட்டவன் ஒரு தொழில்முறை துப்பாக்கிக் காரன் என்பதையும் அவனது ஒரு கால் ஊனம் என்பதனால், இரும்பு ஷோ பயன்படுத்துவதையும் கண்டுபிடிக்கிறான். இவந்தான் வங்கி சம்பந்தப்பட்ட பல மர்மமான கொலைகளை செய்திருப்பான் என்றும் ஊகிக்கிறான். அவனது தடயங்கலைப் பிந்தொடர்ந்து அந்தக் கொலைகாரன் நியூயார்க்கில் வசிப்பதையும் கண்டுபிடிக்கிறான்.

இந்தக் கொலையாளிக்கு வங்கியின் உயரதிகாரியும், முன்னாள் கிழக்கு ஜெர்மனியின் கர்னலாக பணியாற்றியவருமான பெரியவர் ஒருவர்தான், கொல்லப்படவேண்டியவர்கள் பற்றிய விபரங்களைக் கொடுக்கிறார். அவர் வங்கியின் தலைவரான ஸ்கார்சனின் உள்வட்டத்தில் உள்ளவர். அவரும், நியூயார்க் கொலைகாரனும் சந்திக்கும்போது அவர்களைப் பிடிக்க சேலிஞ்சர் முயல்கிறான். அந்தக் கொலைகாரன் உயிருடன் பிடிபடுவதை வங்கி ஏற்பாடுசெய்திருந்த இன்னொரு கும்பல் தடுக்கிறது. பின்னர் அந்த வாடகைக் கொலைகாரனும் கொல்லப்படுகிறான். பெரியவர் மட்டும் பிடிபடுகிறார்.

பெரியவரை வைத்து வங்கியின் தலைவர் ஸ்கார்சனை சட்டத்தின் முன் நிருத்தலாம் என்று திட்டமிட்டு அவரிடம் சேலிஞ்சர் உதவி கேட்கிறான். பெரியவரோ சட்டப்படி வங்கியை தண்டிக்க முடியாது என்றும், அமைப்பு முறைக்கு வெளியே சென்றுதான் தண்டிக்க முடியும் என்று ஆலோசனை கூறுகிறார். அதுவும் பெரிய இழப்புகளை கொண்டுவருமென்றும் எச்சரிக்கிறார்.

இடையில், கொல்லப்பட்ட கால்வினியின் மகன்கள் தனது தந்தையின் மரணத்திற்கு வங்கிதான் காரணமென்று சேலிஞ்சர் மூலம் அறிந்து ஏவுகணைகள் விற்கும் ஒப்பந்தத்தை முறிக்கிறார்கள். இந்த ஏவுகணைகளை வாங்கி சிரியாவுக்கும் ஈரானுக்கும் விற்கவில்லை என்றால் வங்கி திவாலாகிவிடும் என்ற சிக்கல் வருகிறது.

வங்கித்தலைவன் ஸ்கார்சன் தலைமையில் ஆலோசனை நடக்கிறது. அதன்படி கால்வினி நிறுவனத்திற்கு போட்டியாக இருக்கும் டுருக்கி நிறுவனம் ஒன்றை அணுகிப் பார்ப்பதென்று அவர்கள் முடிவு செய்கிறார்கள். அந்த துருக்கி நிறுவனம் இசுரேலை முக்கியமான வாடிக்கையாளராக வைத்து இயங்கும் நிறுவனமாகும். வங்கி வாங்க இருக்கும் ஏவுகணைகளை வீழ்த்தும் வல்லமை கொண்ட ஆயுதங்களை அவர்கள் ஏற்கனவே இசுரேலுக்கு விற்பனை செய்திருக்கிறார்கள். இந்தத் தகவல் வெளியே தெரிந்தால் ஈரானும் சிரியாவும் வங்கி மூலம் வாங்க விரும்பும் ஏவுகணைக்கான ஆர்டரை இரத்து செய்துவிடும். அவ்வாறு நடந்தாலும் வங்கி திவாலாவது உறுதி என்பதால் இஸ்ரேல் விசயத்தை ஈரானுக்கும் சிரியாவுக்கும் தெரியாமல் மறைத்து வியாபாரத்தை முடிக்கத் திட்டம் தீட்டுகிறார்கள்.

அந்த துருக்கி நிறுவனத்துடன் பேச்சு அடத்த ஸ்கார்சன் செல்கிறான். இந்த தகவலை பெரியவர் சேலிஞ்சருக்கு தெரிவிக்கிறார். அவனும் பிந்தொடர்கிறான். துருக்கியில் ஸ்கார்சனும், துருக்கி நிறுவனத் தலைவனும் பேசுகிறார்கள். ஏவுகணைகள் விற்பதற்கு துருக்கி நிறுவனம் சம்மதிக்கிறது. அந்த ஏவுகணைகளை வீழ்த்தும் தொழில்நுட்பத்தை இசுரேலுக்கு விற்பனை செய்திருக்கும் விசயத்தை ரகசியமாக வைத்திருக்குமாறு ஸ்கார்சன் கோருகிறான். இறுதியில் பணம் செலுத்தும் நடைமுறைகளெல்லாம் உறுதி செய்யப்படுகிறது.

இந்தப் பேச்சுவார்த்தையை பெரியவர் மூலமாக இரகசியமாக பதிவு செய்யும் சேலிஞ்சர் கடைசியில் முக்கியமான தருணத்தில் சிக்னல் கிடைக்காமல் திணருகிறான். அது இல்லாமல் அவனால் சட்டத்தின் முன் வங்கியை குற்றவாளியாக நிறுத்தமுடியாது. எரிச்சலில் இருக்கும் சேலிஞ்சர், பேசிவிட்டு வரும் ஸ்கார்சனை பிந்தொடருகிறான். வங்கித்தலைவனை கொல்ல யத்தனிக்கும் போது பின்னால் வரும் ஒரு இத்தாலிக்காரன் ஸ்கார்சனை சுட்டுக் கொல்கிறான். அவன் கால்வினியின் மகன்களால் அனுப்பப்பட்டவன்.

ஐ.பி.பி.சி வங்கியின் தலைவர் ஸ்கார்சன் துருக்கியில் சுட்டுக்கொல்லப்பட்டார் என்ற பத்திரிக்கைச் செய்தியுடன் படம் முடிகிறது.


***********************


வில்லன் பாத்திரத்தை கோர கற்பனைகளோடு உருவாக்கப்பட்ட ஒரு தனி நபருக்கு கொடுக்காமல் ஒரு வங்கியை வில்லனாக சித்தரிக்கிறது இந்தப் படம். அது பிரதிநிதித்துவப்படுத்தும் மேற்கத்திய ஏகாதிபத்திய நாடுகளின் அரசமைப்பையும் கொஞ்சமாவது தோலுறிக்கிறது.

வங்கியின் தலைவன் ஸ்கார்சனுடன் நமீபியாவின் போராளிக்குழுத் தலைவர் உரையாடும் காட்சி ஒன்று வருகிறது. ஸ்கார்சன் அந்தக் கருப்புக் கமாண்டருக்கு தேவையான ஆயுதங்கள், தொழில்நுட்ப சேவை, போரில் வெல்ல ஆலோசனைகள் எல்லாம் அளிப்பதாகக் கூறுவான். கமாண்டரோ தமது இயக்கத்திடம் பணம் எதுவுமில்லை என்று பரிதாபமாகக் கூறுவார். அதனால் பரவாயில்லை. அடுத்த சில மாதங்களில் ஆட்சியைக் கைப்பற்றி அரசாங்கம் அமைக்கும்போது நாட்டின் நிதிச்சந்தையை தங்கள் வங்கியிடம் விட்டுவிட்டால் போதும் என்று ஸ்கார்சன் தேர்ந்த ராஜதந்திரி போலக் கேட்ப்பான்.

போராளிக் குழுக்கள் கிடக்கட்டும், சட்டபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவை, ஜனநாயக அரசமைப்புக் கொண்டவை என்று கூறப்படும் நாடுகளுக்கு இடையிலான ஆயுத பேரங்களும் விற்பனைகளும் இன்றளவும் இரகசியங்களாகத்தான் இருந்துவருகின்றன. இதற்கான தரகுவேலையை பல முக்கியமான நிறுவனங்கல் செய்துவருகின்றன. நமது நாட்டின் போபர்ஸ், ஜெர்மன் நீர்மூழ்கிக் கப்பல் போன்ற சிலவற்றில் ஊழல் வெளிச்சத்திற்கு மட்டும் வந்திருக்கிறது. ஆனால் குவட்டரோச்சியை பிடிக்கவோ தண்டிக்கவோ முடியவில்லை.

உலகின் பல பகுதிகளில் நடக்கும் போர்களுக்கும், உள்நாட்டுப் போர்களுக்கும் ஆயுதங்கள் தடையின்றிக் கிடைக்கின்றன. முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகள், கிழக்கு ஐரொப்பிய நாடுகளிலிருந்துதான் ஆயுதங்கள் விற்பனையாகின்றன என்று மேலை நாடுகள் கூப்பாடு போட்டாலும், அந்த வியாபாரங்களையெல்லாம் மேற்கத்திய கணவான்களும், அந்த நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டு வங்கிகளும்தான் முடித்துக் கொடுக்கின்றன. இதில் ஐ.நா உட்பட யாரும் தலையிடுவதில்லை. ஏகாதிபத்தியங்களின் ஆசியோடு நடக்கும் இத்தகைய சூதாட்டத்தில் சட்டபூர்வமான பரிவர்த்தனைகளும் சாட்ட விரோதத் தொழில்களும் பின்னிப் பிணைந்து கிடக்கின்றன.

ஆர்கனைஸ்டு கிரைம் எனப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட கிரிமினல் வேலைகளுக்கு பணம் எப்படிக் கிடைக்கிறது என்பதை அமெரிக்காவின் அரசுத்துறை ஒன்று ஆய்வு செய்யும் போது ஒரு வங்கி இப்படி திமிங்கலமாக சிக்குவதாக இப்படத்தின் கதை கூறுகிறது. முதலீட்டு வங்கிகள், முதலீடு வங்கிகள், முதலீடுகளுக்கு தரச்சான்று தரும் பிரபல நிறுவனங்கள், காப்பீடு நிறுவனங்கள் ஆகியவை எல்லாம் போர்ஜரி, பொய்க்கணக்கு உள்ளிட்ட எத்தகைய பஞ்சமா பாதகத்தையும் செய்யத் துணிந்தவை என்பது சமீபத்திய அமெரிக்க சப்-பிரைம் நெருக்கடியினை ஒட்டிஉலகத்துக்கே தெரிய வந்தது. கொள்ளை லாபத்துக்காக எத்தகைய கிரிமினல் வேலைகளைச் செய்வதற்கும் அவர்கள் தயங்குவதில்லை. மேலும், சொந்த நாட்டு மக்களின் எதிர்கால வருமானத்தையே மொத்தமாக சுருட்டுபவர்கள் ஏதோ ஒரு ஏழை நாட்டின் எதிர்காலத்தை பேரம் பேசுவதில் ஆச்சரியப்பட ஏதும் இல்லை.

மொத்த முதலாளித்துவ அமைப்பே நாறிவரும் போது ஒரு வங்கியை மட்டும் வில்லனாக காட்ட முடியாது என்பதையும் திரைப்படம் மறைமுகமாக ஒத்துக்கொள்கிறது. இன்டர்போலின் மேலதிகாரி சேலிஞ்சருக்கு அவ்வப்போது கடிவாளம் போடுகிறார். இன்டர்போல் எனப்படும் சர்வதேச போலீசு வெறும் ஒற்றுத்தகவல்களை தேவையான நிறுவனங்கலோடு பரிமாறிக்கொள்ளும் வரதான் அதிகாரம், மற்றப்படி அதற்கு சட்டரீதியான நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் இல்லை என்பதை கூறுகிறார். கூடவே இன்டர்போலின் விவகாரங்கள் கூட வங்கிக்குத் தெரியும் விதத்தைக் கண்டு சேலிஞ்சர் அதிர்ச்சியுறுகிறான். அதேபோல நியூயார்க் அட்டர்னி ஜெனரல் அலுவலகத்தின் மேலிடமும் எல்லாவுக்கு கடுமையான எச்சரிக்கை விடுகிறது.

சேலிஞ்சரின் பிடியில் இருக்கும் வங்கிப் பெரியவரான கர்னல், சட்ட்ப்ப்பூர்வ முறையில் வங்கியை தண்டிக்க முடியாது என்று விளக்குவார். வங்கியை தண்டிப்பதாக இருந்தால் முழு அமைப்பையும் தண்டிக்க வேண்டி வரும். அந்த அமைப்பில் ஈரான், சீனா, ரசியாவின் கிரிமினல் மாஃபியாக்கள், சி.ஐ.ஏ, அமெரிக்க அரசு, இங்கிலாந்து அரசு மட்டுமல்ல ஹிஸ்புல்லாவும் இருக்கிறது. வங்கியின் இரகசிய நடவடிக்கைகளுடன் இவை அனைத்தும் ஊடும் பாவுமாக பின்னியிருக்கின்றன என்பதை விளக்குவார்.

இறுதிக் காட்சியில் கூட தன்னைச் சுடவரும் சேலிஞ்சரிடம் வங்கித்தலைவன் ஸ்கார்சன் அதையே கூறுவான். ஐ.பி.பி.சி போய்விட்டால் இந்த நடவடிக்கைகளைத் தொடர நூற்றுக்கணக்கான வங்கிகள் வரும், எனவே தன்னைக் கொல்வதால் சேலிஞ்சரின் இரத்த வெறிதான் இரத்த வெறிதான் தீரும், நீதி கிடைக்காது என்பான் அவன்.

ஐ.பி.பி.சி எனப்படும் ஒரு வங்கியின் கதையை வைத்துத்தான் இதை புரிந்துகொள்ள வேண்டுமா என்ன? ஈரானுடன் போரிட்ட சதாம் ஹுசைனுக்கு அமெரிக்க இரசாயன ஆயுதங்களை வழங்கக் காரணம் என்ன? தென் அமெரிக்க சர்வாதிகாரிகளுக்கு ஆயுதங்களும், இராணுவ ஒத்துழைப்பும் அளிக்க வேண்டிய அவசியம் என்ன? இந்தியாவிற்கும் பாக்கிற்கும் மாறி மாறி ஆயுதங்களை பல பில்லியன் டாலருக்கு விற்பதன் மர்மம் என்ன? ரசியாவுக்கு எதிராக ஆப்கான் முஜாஹிதீன்களுக்கு கணிசமான ஆயுதங்களை இலவசமாக வழங்கக் காரணம் என்ன? இவையெல்லாம் அரசியல் முடிவுகளா, இராணுவ நடவடிக்கைகளா, அல்லது பொருளாதாரப் பரிவர்த்தனைகளா? என்ன பெயரிட்டு அழைத்தாலும் இவற்றின் உள்ளடக்கம் ஒன்றுதான். “ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலங்கள்” என்ற நூலைப் படிப்பவர்கள் இதனைப் புரிந்து கொள்ளலாம்.

உண்மையில் இத்தகைய இரகசிய ஆயுத விற்பனை, சப்ளைகளை எல்லாம் நடத்துவதில் சி.ஐ.ஏ தான் முன்னோடி. இரகசிய வங்கிக் கணக்குகள், போதைப் பொருள் மற்றும் ஆயுத விற்பனை, உளவு வேலைகள் ஆட்சிக் கவிழ்ப்புகள் ஆகிய அனைத்துக்கும் மூல முதல்வர்கள் மேற்கத்திய ஏகாதிபத்தியங்கள் தான். அமெரிக்கா முதலான ஏகாதிபத்தியங்கள் ஆரம்பித்துவைத்து நடத்தி வருபவை தான்.

சின்னஞ்சிரிய ஆப்பிரிக்க நாடுகள் பலவற்றில் முடிவின்றி உள்நாட்டுப் போர்கள் தொடர்வதற்கும், நாளுக்கு ஒரு ஆட்சிக் கவிழ்ப்பு அரங்கேறுவதற்கும், சினிமா தயாரிப்பு போல ஒரு ஆட்சிக் கவிழ்ப்புகு எவ்வளவு செலவாகும் என்று பட்ஜெட் போட்டு ஆட்சிக்கவிழ்ப்பு நடத்துவதற்கும் ஏகதிபத்திய அரசுகள்தான் காரணம். இந்த அரசுகள் அளிக்கும் பாதுகப்பில் மட்டுமே சர்வதேச வங்கியொன்று இப்படி இயங்க முடியும். இந்த ஊழல் உலக நடவடிக்கைகளை என்னவென்றே தெரியாமல் அமெரிக்க சட்டத்துறை ஆய்வு செய்வதாக இந்தப்படத்தில் சித்தரிக்கப்படுவது ஒரு நகைச்சுவை.

அதனால்தான் என்ன தவறு இருந்தாலும் இறுதியில் அமெரிக்க நீதி வெல்லும் என்ற நியதிப்படி சேலிஞ்சரின் போராட்டம் ஏதோ ஒரு வகையில் வெல்கிறது. படத்தில் வரும் ஆயுதத் தளவாட தயாரிப்பு நிறுவனத்தின் கால்வினி, நியாய அநியாயம் பற்றிப் பேசுவதே கூட முரண்பாடுதான். கால்வினி என்ற ஆயுத வியாபாரி, இத்தாலியின் பிரதமர் பதவியை ஏற்கப்போகிறார் என்பது சாத்தியமாகும் போது ஒரு வங்கி அதிபர் ஏன் ஆயுத வியாபாரம் செய்யக் கூடாது?

கர்னலோடு சேலிஞ்சர் பேசும் போது “முன்னாள் கம்யூனிஸ்டாக இருந்த நீங்கள், இத்தகைய அநீதிக்கு துணை போகலாமா?” என்று கேட்பான். ஒரு ஹாலிவுட் படத்தில் கம்யூனிசத்தை மதிப்புக்குரியதாகக் கூறுவது கூட பெரிய ஆச்சரியம் தான்.

அந்தப் பெரியவர் தன் இளைஞனாக இருந்தபோது சேலிஞ்சர் போல உருப்படியாக வாழ விரும்பியதாகவும் பின்னர் தோற்றுவிட்டதாகவும் கூறுவார். இறுதியில்சேலிஞ்சருக்கு தனது உயிரைப் பணயம் வைத்து உதவ முன்வருவார். ஒரு இன்டர்போல் அதிகாரியின் அட்வைசைக் கேட்டு ஒரு முன்னால் கம்யூனிஸ்டும், இந்நாள் கிரிமினல் வங்கியின் உயரதிகாரியுமான ஒரு மனிதன் திருந்துவதாக சித்தரித்திருப்பது கூட யதார்த்தமில்லைதான். முன்னாளில் கம்யூனிஸ்டுகள் என்ற போர்வையில் இயங்கிவந்த இந்த அதிகார வர்க்க முதலாளீகள் தான் இன்றைக்கு அந்த நாடுகளில் தனியார் முதலாளிகளாக வலம் வருகின்றனர் என்பதே உண்மை.

கள்ளத்தனமான ஆயுத வியாபாரம், அதனை மறைப்பதற்கான கொலைகள் என்பன போன்ற சட்டவிரோதமான கிரிமினல் நடவடிக்கைகளில் இரகசியமாக ஈடுபடும் ஒரு வங்கியின் நடவடிக்கைகள் வாயிலாக வரம்புக்குட்பட்ட அளவில் முதலாளித்துவ அமைப்பு இப்படத்தில் அம்பலப்படுத்தப்பட்டிருக்கிறது. ஹாலிவுட் முதலாளிகள் நம்பி முதல் போடும் அளவுக்கு முதலாளித்துவத்தின் மீது மக்கள் மத்தியில் வெறுப்பு பரவி வருகிறது என்பதை, இத்தகைய திரைக்கதைகளைப் பார்க்கும் போது புரிந்துகொள்ள முடிகிறது.

ஆயினும் தனது கிரிமினல் நடவடிக்கைகளையே சட்டபூர்வமானவையாக மாற்றி அவற்றுக்கு அங்கீகாரமும் பெறும் முயற்சியில் வல்லரசு நாடுகள் ஈடுபட்டிருக்கும் காலகட்டத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஹாலிவுட் இவற்றையெல்லாம் திரைக்கதை ஆக்குமா?

சவப்பெட்டிக்கு சந்தை இருக்கிறது என்றால் முதலாளி வர்க்கம் அந்த வியாபாரத்திலும் ஈடுபடத் தயங்காது என்பதை நாம் அறிவோம். சொந்தச் சவப்பெட்டி என்று புரிந்த பின்னரும் அத்தகைய முயற்சியில் ஹாலிவுட் ஈடுபடுமா என்பதைப் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

புதிய கலாச்சாரம் ஜூலை 2010 இதழிலிருந்து

திரைப்படத்தைக் காண காணொளி பக்கத்திற்குச் செல்லவும்

முந்தைய திரைப்பட மதிப்புரைகள்

மாயன் நாள்காட்டி + நோவாவின் கப்பல் = 2012

உன்னைப்போல் ஒருவன்

தனம்

சுப்பிரமணியபுரம்

பருத்தி வீரன்


One thought on “ஹாலிவுட்டின் புதிய வில்லன்கள்

  1. dear sengodiyin siragukal; vanakkam and thank you for your mail which you sent with criticsm of the villains of hollywood. Your analysis is great.My life is so simple.meditation;walking; son’s study ; meeting the visitors those who are coming to meet me; apart from now I am in net and compu. this much of interest I will not showed to the other language cinemaas.It is beyond my reach.Anyhow I am able to understand what you have want to convey. see ytou later.Kavignar Tanigai.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s