பூவரசியை சபிப்பதற்கு முன்னால் நாம் பதில் சொல்லவேண்டிய கேள்விகள் சில இருக்கின்றன நண்பர்களே

இந்த வார தமிழக அதிர்ச்சி சிறுவன் ஆதித்யாவின் கொலை. சாதாரணமாக ஒரு கொலைக்கு தமிழ்நாடு இவ்வளவு தூரம் முக்கியத்துவம் தருவதில்லை, இந்த முறை நமது அதிகப்படியான கோபத்துக்குக் காரணம் கொலை செய்தவர் ஒரு பெண் என்பதால்தான். தனது காதலரின் நான்கு வயது மகனை கழுத்தை நெரித்துக் கொன்று பிறகு சூட்கேசில் வைத்து பஸ் ஒன்றில் வைத்துவிட்டு தப்பிவந்தது அவரது குற்றம். கேள்விப்பட்ட மக்களும் செய்தி வாசித்தவர்களும் கொதித்துப்போய் விவாதிக்கிறார்கள். மக்களின் சிந்தனையை தீர்மானிக்கிற ஊடகங்களும் பூவரசி மீது வசைமாரி பொழிகின்றன. கொலைகாரி, ராட்சசி, கள்ளக்காதலி, கீப் ஆகியன அச்சு ஊடகங்கள் பூவரசியை குறிப்பிடப் பயன்படுத்திய வார்த்தைகளில் சில.

நான் விவாதிக்க விரும்புவது பூவரசி செய்த குற்றம் பற்றியல்ல. ஏனெனில் இதுவரை ஒரு குழந்தையின் கொலைக்காக நாம் இத்தனைதூரம் உணர்ச்சிவயப்பட்டதில்லை என்பதால் குற்றத்தைத் தாண்டி வேறொரு காரணி நம்மை இவ்விடயத்தில் கோபம்கொள்ளவைக்கிறது என்பது தெளிவு. தன் பிள்ளைகளைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொள்ளும் பெற்றோர் பற்றிய செய்திகள் ஏறத்தாழ நாம் தினசரி வாசிப்பவை. பணத்துக்காக குழந்தையைக் கடத்தி கொலைசெய்த சம்பவங்களும் நாமக்கு அவ்வப்போது வாசிக்கக்கிடைப்பவை. தனக்குப் பிறந்ததுதானா என்ற சந்தேகத்திலும் ஜோசியக்காரன் சொன்னதாலும்கூட சொந்தப் பிள்ளையை கொன்ற தந்தைகள் கதையும் நமக்கு புதிதல்ல. எவ்வளவுதான் ஞாபகங்களைக் கசக்கிப் பார்த்தாலும் பூவரசி மீது நமக்கு உண்டான கடுங்கோபம் மற்ற சம்பவங்களின்போது வந்த மாதிரி தெரியவில்லை. ஏன்?

காரணம் மனிதாபிமானமோ அல்லது ஒழுக்கமான வாழ்வின்மீது நமக்குள்ள பிடிப்போ இல்லை, சமூகத்தின் சகல திசைகளிலும் வேரோடியிருக்கும் ஆணாதிக்க சிந்தனையால்தான் நாம் பூவரசியை விசாரணைக்கு முன்னாலேயே வெறுக்கிறோம். அவர் மனநிலை சரியில்லாதவரா அல்லது அவரது காதலர் ஜெயக்குமாரால் மோசமாக ஏமாற்றப்பட்டவரா என்றெல்லாம் நாம் பரிசீலிக்கத் தயாரில்லை (ஒரு தகவல்: மனநிலை பாதிக்கப்பட்டு தன் சொந்தக்குழந்தையைக் கொன்ற தாய்மார்கள் இருந்திருக்கிறார்கள், தமிழ்நாட்டில்கூட ஒரு பெண் தன் கைக்குழந்தையை அரிவாள்மனையில் வெட்டிக் கொன்றிருக்கிறார்). ஏமாற்றப்பட்ட ஒரு கள்ளக்காதலி காதலனின் குழந்தையைக் கொல்வதா என்ற எண்ணம்தான் நம்மை செலுத்துவதாகத் தோண்றுகிறது.

பூவரசி, ஒரு வறிய குடும்பத்தில் பிறந்து முதுகலை பட்டப்படிப்பு வரை படித்திருக்கிறார், சிறந்த மாணவி எனும் தகுதியுடன். வேலைக்கு வந்த வங்கியில் ஜெயக்குமாரை சந்தித்து காதல்வயப்பட்டிருக்கிறார். பத்திரிக்கைகள் பிரயோகிக்கும் கள்ளக்காதலி என்ற சொல்லே நியாயமற்றது. ஏனெனில் ஜெயக்குமார் தனக்குத் திருமணமான விசயத்தையே பூவரசியிடம் மறைத்திருக்கிறார். அவரது உடல் இச்சைகளுக்கு  பயன்படுத்தப்பட்டு இருமுறை கருக்கலைப்பு செய்துகொண்டிருக்கிறார் பூவரசி. இதன்பிறகும் அவர் ஜெயக்குமாரிடம் வைத்த கோரிக்கை தன்னைத் திருமணம் செய்துகொள்ளச் சொன்னதுதான்.  ஒரு பெண்ணின் சாதாரண கோரிக்கை நிராகரிக்கப்படும்போது அதுக்கு நானென்ன பண்ணுறது என்று சுலபமாக கடந்து போகும் நாம் அவர்கள் அசாதாரண காரியம் ஏதேனும் செய்துவிட்டால் பாய்ந்து பிறாண்ட மட்டும் மறப்பதில்லை.

சித்தீ என்று தலைப்பிட்டு இதுபற்றிய செய்தியை பிரசுரித்திருக்கும் குமுதம் ரிப்போர்ட்டர் பூவரசி பற்றிய இரண்டு தகவல்களைத் தந்திருக்கிறது.

” பார்ப்பதற்கு சுமார்தான். இருந்தாலும் தன் வசீகரப்பேச்சால் அனைவரையும் கவர்ந்துவிடுவார். ஜெயக்குமாரையும் தன் வசீகர வலையில் வீழ்த்தினார் பூவரசி.”

“பூவரசிக்கு ஏற்கனவே ஒரு காதல் இருந்திருக்கிறது. 2002 ல் ஒரு வாலிபர் தன்னை காதலித்து (உடலுறவுக்குப் பிறகு) ஏமாற்றிவிட்டதாக போலீசில் புகார் கொடுத்திருக்கிறார்.”

இவ்விரு செய்திகளின் வாயிலாக குமுதம் சொல்ல வருவது என்ன? ஏற்கனவே இருந்த காதல் வாயிலாக அவரது ஒழுக்கம் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. அவர் பேசி மயக்குவார் என்று சொல்வதன் மூலம் மனைவிக்குத் தெரியாமல் பூவரசியுடன் உறவு வைத்திருந்த ஜெயக்குமார் சுலபமாக அப்பாவியாக மாற்றப்பட்டுவிட்டார். இதே குமுதம் பிரகாஷ்ராஜின் புதிய காதல் பற்றிக் குறிப்பிடும் போது ” அவரது ஒரே மகன் இறந்த துக்கத்தில் இருந்தபோது அவருக்கு ஆறுதலாக இருந்த போனி வர்மாவிடம் காதல் கொண்டார்” என்கிறது. கவனியுங்கள் அப்போது லலிதகுமாரி பிரகாஷ்ராஜின் மனைவியாகத்தான் இருந்தார். பிரகாஷ்ராஜுக்கு இரண்டாவது காதல் வந்தால் அது ஆறுதல் தேடி வருவது. பூவரசிக்கு வந்தால் அது ஆண்களை மயக்கும் சுபாவமா ? படிக்கையிலேயே உங்களுக்கு காறித்துப்பத் தோண்றவில்லை? பூவரசியின் முதல் காதல் பிரச்சனையில் போலீசும் அவரது சுற்றமும் நியாயமாகவும் அனுதாபத்துடனும் நடந்து கொண்டிருந்தால் அவருக்கு இரண்டாவது காதல் வருவதற்கான சாத்தியமே இல்லாது போயிருக்கும். ஏன் இது இந்த மானங்கெட்ட குமுதத்துக்கும் அதன் கருத்துடன் ஒத்துப் போவோருக்கும் தோண்றுவதில்லை? (குறிப்பு : ஒரு ஒப்பீட்டுக்காவே பிரகாஷ்ராஜின் விவகாரம் குறிப்பிடப்பட்டிருக்கிறது, நான் விமர்சிக்க விரும்பியது குமுதத்தைத்தானேயன்றி பிரகாஷ்ராஜை அல்ல)

சூழ்நிலையால் குற்றம் செய்பவர்கள் மீது வெறுப்பை உமிழத்தயாராக இருக்கும் நாம் தன் தனிப்பட்ட தேவைகளுக்காக சூழலையே குற்றத்திற்குத் தக்கதாக மாற்றும் நபர்களை ஏன் கண்டுகொள்வதில்லை? ஈழத்துப் படுகொலைகளுக்குப் பின்னால் சோனியாவின் பழிவெறியும் தனிப்பட்ட தேவைகளும் இல்லையா? அவர் அன்னை சோனியா என்று அழைக்கப்படும்போது அதை சாதாரணமாக எடுத்துக்கொள்கிறோம் ஆனால் பூவரசியை மட்டும் நீ ஒரு பெண்ணா என்று கேட்கிறோம். அநியாயமில்லையா இது?

காதலன் வீட்டு வாசலில் காதலி உண்ணாவிரதம் என்ற செய்திகளைப் படித்தபோது என்ன செய்தீர்கள்? காதல் தோல்வியில் பெண் தற்கொலை என்ற செய்தி கேட்கையில் என்ன செய்தீர்கள்? உங்கள் பணியிடத்தில் யாரேனும் அவுசாரியென பட்டம் கட்டப்பட்டிருந்த தருணத்தில் (இது ஒன்றுக்கு மேற்பட்ட காதல்களில் தோல்வியடைந்த பெண்களுக்குத் தரப்படுவது) நீங்கள் யார் பக்கம் நின்றீர்கள்? காதலித்த பெண்னை ஏமாற்றிவிட்டு நான் எதையும் இழந்துவிடவில்லை என்று என்று இருபொருள்பட சொன்ன இளைஞனுடனான பழக்கத்தை நான் சொரணையில்லாமல் தொடர்ந்திருக்கிறேன். நீங்கள் என் நிலையில் இருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்? பிள்ளைகளுடன் உள்ள மனைவியை இழந்தவருக்கு ‘குழந்தை இல்லாத விதவை அல்லது விவாகரத்தான’ மணமகள் தேவை எனும் விளம்பரம் உங்கள் மனதை எப்போதேனும் உறுத்தியிருக்கிறதா? இந்தக் கேள்விகளுக்கு நியாயமாக பதில் தேடினால் நாம் எந்த அளவுக்கு பெண்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கிறேம் என்பது புரியும்.

சம்பாதிக்கும் பெண்ணாக தேடிவிட்டு அவர் எதிர்த்துப் பேசினால் சம்பாதிக்கிற திமிர் என்று  என்று அடையாளமிடும் சமூகத்தில் வாழ்கிறோம். காதலித்து கர்பமாக்கி ஏமாற்றிய புகார்களில் ஆணின் பெற்றோர்கள் பெரும்பாலானவர்கள் வழக்கை ‘செட்டில்’ செய்யவே முயற்சிக்கிறார்கள். மனைவியை அடிப்பது தவறில்லை என்றும் திருமணம் செய்துகொள்வதாக ஆசைகாட்டி உடலுறவு கொள்வது கற்பழிப்பாகாது என்றும் நீதிமன்றங்களே தீர்ப்பளிக்கும் தேசமிது. பதிவிரதா தர்மம் நம் நாட்டில் வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் தவறாமல் போதிக்கப்படுகிறது. காதலனுடன் திருமணத்துக்கு முன்னால் உடலுறவு வைத்திருந்த பெண்கள் இங்கு முற்றிலுமாக நண்பர்களாலும் வீட்டாராலும் புறக்கணிக்கப்படுவதை நான் பல சந்தர்பங்களில் பார்த்திருக்கிறேன். இப்படிப்பட்ட புறக்கணிப்பே இப்படிப்பட்ட பெண்களை (அயோக்கியன் என்றாலும்) அந்தக் காதலனின் காலிலேயே விழ வைக்கிறது. அவனும் நிராகரிக்கின்ற வேளை வரும்போது இவர்கள் முற்றிலும் நிலைகுலைந்து போகிறார்கள். தனித்து விடப்படுவதால் முதல் முட்டாள்தனத்தை சரிசெய்ய இன்னொரு முட்டாள்தனத்தை செய்கிறார்கள்.

ஆதித்யாவை கொலை செய்வதற்கு முன்பிருந்த பூவரசியின் நிலைக்கு ஒப்பானவர்கள் நம்மைச் சுற்றியும் நிறைய இருக்கிறார்கள். அவர்களின் எல்லோரும் புலம்புகிறார்கள், அழுகிறார்கள், காவல் நிலையத்தில் புகார் தருகிறார்கள் மீறிப்போனால் தற்கொலை செய்துகொள்கிறார்கள். அவர்களில் பூவரசி மட்டும் காதலனின் மகனை கொலை செய்யும் அளவுக்கு போயிருக்கிறார். நேர்மையாக சொல்வதானால் அவரது குற்றத்தில் நம் எல்லோருக்கும் பங்கிருக்கிறது. இந்த வழக்கிலும் பாருங்கள் இப்போதும்கூட ‘என் கணவர் நல்லவர்’ என்கிறார் ஜெயக்குமாரின் மனைவி, பூவரசியின் தரப்பில் ஒருவர்கூட அவரைக்காண வரவில்லை. ஆணுக்கும் பெண்ணுக்கும் இருவேறு ஒழுக்கவிதிகளையும் நியாயங்களையும் நாம் வைத்திருக்கிறோம் என்பது இவ்வழக்கு விவாதிக்கப்படும் விதத்தில் அப்பட்டமாகத் தெரிகிறது.

பூவரசி தண்டிக்கப்படுவார் என்பதில் நாம் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை, அவரும்கூட தன்னை தண்டியுங்கள் என்றுதான் சிறையில் மன்றாடிக்கொண்டிருக்கிறார். ஆகவே இந்தத் தருணத்தில்  இன்னொரு பூவரசி உருவாகாமல் தடுப்பதற்கு நாம் ஏதேனும் செய்திருக்கிறோமா என்பது நாம் நம்மிடம் கேட்டாக வேண்டிய கேள்வி. சீக்கிரம்.. இன்னொரு ஆதித்யா கொல்லப்படும் நாள்வரை நாம் காத்திருக்கலாகாது.

அறிமுகம்


இந்த இடுகையை தந்தது தோழர் வில்லவன். அரசியல் சமூகம் சார்ந்த தனது சிந்தனைகளை வில்லவன் எனும் பெயரில் வலைதளத்தில் தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்.

வலைதள முகவரி: http://villavan.wordpress.com/

மின்னஞ்சல் முகவரி: villavan.r@gmail.com

4 thoughts on “பூவரசியை சபிப்பதற்கு முன்னால் நாம் பதில் சொல்லவேண்டிய கேள்விகள் சில இருக்கின்றன நண்பர்களே

  1. இந்த சமூகம் சில கட்டுப்பாடுகளை, வகுத்து உள்ளது! சமூகம் என்பது தனி மனிதர்களைக் கொண்ட ஒரு கூட்டமைப்பு! தனி மனித ஒழுக்கம் பேணப்பட்டால் மட்டுமே, சமூகம் சுத்தமாக இருக்கும்! பூவரசியின் தற்போதைய நிலை, பரிதாபத்திற்குரியது என்றாலும்,இந்நிலைக்குக் காரணம்,அவரின் சமூகம் சாரா ஒழுக்கநிலை!

    ஆண்களில் ராமன் எவருமில்லை, எனும் வைரமுத்தின் கூற்றின் படி, ஜெயக்குமார்களை நொந்து பூவரசிகளுக்கு பயன் இல்லை! வெற்று வார்த்தைகளை நம்பி, கெட்டுப்போகக்கூடாது!

    பூவரசி, தண்டித்திருக்க வேண்டியது, தன் காதலனை! அவனின் ஒன்றும் அறியா மகவை அல்ல! பழி உணர்ச்சியால் குழந்தையை கொன்றுவிட்டார்! ஆனால், காதலனை தண்டிக்காதற்கு, அவன் மேல் தொடரும் கண்மூடிக் காதலேக் காரணம்! அந்த வகையில் பூவரசி, குற்றம் புரிந்தவரே! அவரின் குற்றத்திற்கு பூவரசியே காரணமின்றி, இச்சமூகம் காரணம் அல்ல!

  2. நீங்கள் சொல்வது மிகச்சரி தோழர்… அப்புறம் ஒரு சந்தேகம்…. ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட இளைஞர்கள காதலித்து எல்லாரையும் ஏமாற்றும் பெண்களைப்பற்றி உங்கள் கருத்தென்ன?

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s