தோலர் எண்ணெய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்! !!! – அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா


உங்களுக்கெல்லாம் எண்ணெய்த்தோலரைத் தெரியுமோ தெரியாதோ, அது எனக்குத்தெரியாது ஆனால் அவரைப்பற்றி பேசாமலோ, அவரைப்பார்க்காமலோ யாரும் இருக்க முடியாது, ஏன் அவர் வரலைன்னா அன்னைக்கு குழம்பு ஆகாதுன்னா பார்த்துக்குங்களேன் இந்தக்கிராமத்தில். அது என்ன எண்ணைத்தோலர்ன்னு கேக்குறீங்களா? நீங்களெல்லாம்  எண்ணை எங்க போய் வாங்குவீங்க? கடையிலதானே, அங்க போய் கோல்டு வின்னர், உஷா சன் பிளவர்ன்னு கேட்டு வாங்குவீங்க, ஆனா 100 மி.லி கேட்டா கிடைக்குமா? ஆனா எங்க எண்ணெய்த் தோலர்  எங்க வீட்டுக்கே வந்து எண்ணெய் கொடுப்பார். 100 மிலி கேட்டாலும் 50 மிலி கேட்டாலும் கொஞ்சமும் சுணங்காம கொடுப்பாரு தோலர்.

அவர் எண்ணை விற்கும் போது வாசலில் வந்து அழைக்கிற அழகே தனி ” ஏனுங் கந்தசாமி கவுண்டர் தோலர் , எண்ணெய் வேணுங்களா” என்பார். செத்துக்கொண்டிருக்கும் கொங்குத்தமிழை எண்ணையோடு விற்றுக்கொண்டிருப்பார். ஊருல முக்காவாசிபேருக்கு அவரு ஏன் எல்லாரையும் தோலர்ன்னு கூப்பிடுகிறார் என்ற விசயம் தெரியாது. அவர் தான் சீபீஎம் கட்சியோட வட்டச்செயலாளர்.

பக்கத்து ஊரு சீபீஎம் வட்டச்செயலாளர், கட்ட பஞ்சாயத்துன்னு ரெண்டு டிராக்டர், 4 அடுக்கு மாடி வீடு கட்டிவிட்டார். ஆனால் எண்ணெய்த்தோலரோ இருந்த ஓட்டுவீட்டையும் அடகுக்கு வச்சிருக்கார். தோலரோட மனைவி திட்டுவாங்க “ஏய்யா உனக்கு பொழைக்கவே தெரியாதா? 3 பொட்டைங்க வயசுக்கு வந்து நிக்குது, முனுசாமியப்பாரு அவனுந்தான் உன்ர கட்சியில இருக்கான்  அவன் வூடென்ன? பங்களா என்ன? பொண்ணை 100 பவுன் போட்டு கட்டி கொடுத்திருக்கான், பயனுக்கு ஆட்டோ லூம் வச்சு கொடுத்திருக்கான், நீ என்ர வூட்லர்ந்து கொண்டுவந்ததையெல்லாம் தின்னுப்போட்ட”

மனைவியின் சொல் தோலரைச்சுடும், ஆனால் அவரால் ஏதும் பேச முடியாது ” என்ன செய்தோம் வீட்டுக்கு? முனுசாமி இத்தனைக்கும்  நான் கூட்டிட்டு வந்த பையன், அவன் இப்ப மாசம் ஆனா லச்சலச்சமா சம்பாதிக்குறான். நாம ஒண்ணைத்தியும் புடுங்கலீயே. மூணு பொட்டைங்க வயசுக்கு வந்து நிக்குதுங்க, என்ன செய்யறது?  பறயனா இருந்திருந்தா பரவால. அதுவும் வெள்ளாளக்கவுண்டான பொறாந்தாச்சு.  கவுரவத்தோட வாழணுமே ! தலைக்கு 30 பவுனுக்கு கொறயாம கேப்பானுங்க பரதேசிங்க” தன்னைத்தானே நொந்து கொள்வார். ஆனாலும் அவருக்கு ஒரே நிம்மதி சீபீஎம் -ன் வட்டச்செயலாளர் என்ற பொறுப்பு மட்டுமே. கண்டிப்பாய் புரட்சியை செய்யக்கூடிய கட்சியில் இருப்பதால் மன நிறைவு.

அவர் இளவட்டமா இருந்த காலத்துல ஊருல அவர் பார்க்காத போராட்டமில்லை, ஒட்டாத போஸ்டரில்லை. அவருக்கு இப்போது 50 வயசாயிடுச்சு, போன கமிட்டி கூட்டத்திலேயே “என்னால முடியல, என்னை வுடுங்க ” என்று சொல்லிவிட்டார். ஆனால் கமிட்டி ஏற்றுக்கொள்ளவில்லை. அவருக்கு இரண்டு மகன்கள் ஒருவன் தனியரசு கட்சியிலும் மற்றொருவன் பெஸ்ட் ராமசாமி கட்சியிலும் இருக்கிறார்கள். இவர் கண்ணெதிரிலே பசங்க ரெண்டு பேரும் தண்ணியடித்துக்கொண்டு சண்டைபோடுவார்கள். போன முறை நம்ம எண்ணெய்த்தோலர் மாரியம்மனுக்கு 3 கிடா வெட்டுனப்பகூட ரெண்டு பேருக்கும் பயங்கர சண்டை.

அவர் அப்பப்ப வெளியூர்களுக்கு செல்வார், அப்போது சிலர் பேருந்துகளில் பிரச்சாரம் செய்வார்கள், சீபீஎம் கட்சியை விமர்சிப்பார்கள். இவர் புத்தகத்தை வாங்க மாட்டார், மனதில் நினைத்துக்கொள்வார் நான் எப்புடி எல்லாம் சவுண்டு விட்டவன் தெரியுமா? . நம்ம குப்புசாமி மகன் விஜி இவரிடம் கேள்வி கேட்டான் “பாராளுமன்றம் பன்றித்தொழுவம்னு லெனின் சொல்லியிருக்காரு, லெனின் பேரை சொல்லிகிட்டு பன்னிகூட   ஆடிகிட்டு இருக்கீங்களா?” இவர் புன்னகையை மட்டுமே உதிர்ப்பார்,.  இவர் என்ன சால்ஜாப்பு சொன்னாலும் விஜி ஏற்பதில்லை, என்னபண்றது ? தினமும் அவன் வீட்டை தாண்டி போகவேண்டியதிருக்கே. அவன் எப்போது தூங்குவானென்று காத்திருந்து பின்னர் செல்வார், அவன் வீட்டுக்கு வந்தால் கூட தன் மனைவியை அனுப்பி இல்லை என சொல்லச்சொல்லுவார்.

இப்படியே ஓடிக்கொண்டிருந்தது காலம், ஆண்டவன் இதுக்கும் ஒரு காலத்தை கொண்டு வந்துவிட்டான். ஆம் நாளைக்கு விலைவாசி உயர்வைக் கண்டித்து பீடிஓ ஆபீஸ் முன்னாடி ஆர்ப்பாட்டம். ஊரில் நம்ம எண்ணெய்த்தோலர் நோட்டீஸ் கொடுத்துக்கொண்டிருக்க, கெரகம் பிடிச்ச விஜி வந்து விட்டான். தோலர் எஸ்கேப் ஆக நினைக்கும் போது வசமாக பிடித்துக்கொண்டான் விஜி. பத்துபேர் முன்பு “சிறுதாவூர் பிரச்சினையில செயாவுக்கு எதிர்ப்புன்னு சொல்லுறீங்க, ஆனா போயஸ் கார்டனில குப்பை பொறுக்கிகிட்டு இருக்கீங்க, கோவிந்த சாமியை இப்ப கட்சி விரோத செயலில ஈடுபட்டதா சொல்லுறீங்க, என்ன கட்சிவிரோதம் ? மக்களுக்கு சொல்லுறதுக்கு என்ன தயக்கம்? எதும் தயக்கம்ன்னா பொறுக்கி தின்னுறதத்தவிர வேற என்ன இருக்கும்? அப்ப இருந்து இப்ப வரைக்கும் கருணா, எம்ஜிஆர், விஜயகாந்துன்னு போய்கிட்டே இருக்கீங்க” என்று மானத்தை வாங்கிவிட்டான். எண்ணெய்த்தோலருக்கு ஒரே அவமானம், இவனை சரிகட்ட ஒரே வழி நாளைக்கு ஆர்ப்பாட்டத்திற்கு வருகிற மாவட்ட செயலாளரிடம் கொண்டு போவதுதான் என்ற முடிவுக்கு வந்தார்.

“அந்தக் காலத்துல நாங்க கேட்கிற கேள்விக்கு “டாண் டாண்” னு பதில் சொல்லுவாரு அந்தத் தோலர். அவருகிட்ட எந்த நக்சலைட்டும் நிக்க முடியாது. ஒருமுறை நம்ம ஊருல ஒரு நக்சலைட் பதுங்கியிருந்தப்ப இவருதான் போலீசுக்கு தகவல் சொன்னாரு, ஏன்னா இடதுதீவிரவாதத்தை எந்த வகையில் வந்தாலும் ஏத்துக்கவே மாட்டோம்ன்னு சொல்லுவார். எங்களுக்கு அரசியல் வகுப்பு எவ்வளவு பவ்யமா பய பக்தியோட எடுப்பார் தெரியுமா? காலையிலேயே இராமாயண சொற்பொழிவோட துவங்கி அப்புறம் வர்க்கம், முதலாளி அப்படி போகும், கம்யூனிச கருத்துக்கள் ராமாயணத்துலேயும், மகாபாரதத்திலேயும் இருக்கறதா ஒரு தலைவர் சொன்னாராம், அவரு பேரு கூட மறந்துபோச்சு. அப்ப வாரத்துக்கு ஒரு வகுப்புன்னு இருந்தது பின்னாடி மாசத்துக்கு ஒண்ணுன்னு ஆச்சு அப்புறம் இப்ப வருசத்துக்கு ஒண்ணுன்னு ஆகி இப்ப நடக்குறதே இல்லை.

இதப்பத்தி மாசெ தோலர் கிட்ட கேட்ட போது அவர்  “இப்ப மக்கள் எல்லாம் ஆட்டு மந்தைகளாகிவிட்டார்கள், அறிவு இல்லை தோலர், யாரை ஓட்டுப்போட்டு தெரிவு செய்யணும்னு தெரியாத முட்டாள்கள்கிட்ட நாம் புரட்சி வேலை செய்ய வேண்டி இருக்கு, ஒருத்தணும் கட்சியில சேருவதில்லை.” விசனத்தோடு சொன்னார். கண்டிப்பாக விஜிக்கு ஆப்பு வச்சுடலாம் என்ற படி  அவன் மூஞ்சியில என்ன வழியும் ? எண்ணை,
அவன் மூஞ்சியில என்ன வழியும் ? எண்ணை, அவன் மூஞ்சியில என்ன வழியும் ? எண்ணை, ஒரு கட்டத்தில் தன்னையறியாமல் புரட்சியின் வேகத்தில் கத்தி விட்டார். அவன் மூஞ்சியில என்னா வழியும் ? எண்ணை. பயங்கரமாய் சிரித்தார். அது நடுநிசியைத் தாண்டிய இரவு நேரம்,

இவரின் சிரிப்பு அருகில் உறங்கிக்கொண்டிருந்த மனைவியை எழுப்பி விட்டது. அவரோ “அய்யயோ இந்த பாழாப்போனவனுக்கு பயித்தியம் புடிச்சுடுச்சு, அந்த பாழாப்போன என்னை பெத்த நாய் கேட்டாளா? எத்தனையோ பேரு என்னை கேட்டாகளே கூடப்பொறந்தவனுக்குத்தான்னு என்ன கட்டி வச்சாளே” என்று அலறத்தொடங்க, எண்ணெய்த்தோலர் புரட்சிக்காக திட்டுக்களை வாங்கிக்கொண்டு தூங்கினார்.

காலையில் ரொம்ப நாள் கழித்து ஆஞ்சனேயர் கோயிலுக்கு போய் ஒரு பூஜையை முடிக்கும் போது மனதில் நினைத்துக்கொண்டார் “இந்த கிரகம் பிடிச்சவனை நீ தான் மாத்தணும்”.  காரியம் கைகூடினால் 1008 ராமஜெயம் எழுதிபோடுவதாகவும் வேண்டிக்கொண்டார். இப்ப விஜி பார்த்தால் என்ன சொல்லலாம்? என்ற யோசனையில் பீடிஓ அலுவலகம் முன்னே சென்றார். கூட்டம் 40 பேர் வந்திருந்தார்கள் மாசெ டாடா சுமோவில் வந்தவுடன் ஆர்ப்பாட்டம் தொடங்கியது. எல்லோருக்கும் தன் சொந்தப்பணத்தை எடுத்து டீ குடிக்க கொடுத்தார். எண்ணெய்த்தோலர் விஜியின் காதைக்கடித்தார்இது கட்சி வாங்கி கொடுத்த வண்டி, அங்க, இங்கன்னு போவோணுமில்ல

மாசெ தோலர் கிளம்ப தயாரான போது எண்ணெய்த்தோலர் விஜியை அவருக்கு அறிமுகம் செய்து விட்டு அமைதியானார். விஜி பல கேள்விகளை கொட்டினான். சிரித்தபடியே ” நேரமில்லை, இருந்தாலும் பதில் சொல்லுறேன்” என்ற படி ஆரம்பித்தார். “தம்பி, ரொம்ப டென்ஷனா இருக்கீங்க, மாவோயிஸ்டுங்க நக்சலைட்டுங்க எல்லாம், பாட்டாளிவர்க்க கட்சியான சிபிஎம் மீது அவதூறு கிளப்பறாங்க அதுக்கு பிஜேபி, முதலாளித்துவ பத்திரிக்கைகள் எல்லாம் கூட்டு, நம்ம பாரதத்துக்கு ஏத்தமாதிரி மண்ணுக்கேத்த புரட்சின்னு நம்ம பார்ட்டி சரியான வழியில தான் போவுது, புரட்சி  நடந்தா உழைக்கும் மக்கள் பயன்பெறுவாங்கன்னு எல்லாம் சேர்ந்து சதி பண்றானுங்க.

உங்க முதல் கேள்வி லால்கர் பத்தியது, அதாவது மேற்கு வங்காளத்துல நடக்குற எந்த உண்மையான செய்தியும் இங்க வர்ரதில்ல, அங்க மக்கள் சிபிஎம் பார்ட்டியை நேசிக்குறாங்க, பூஜிக்குறாங்க அதனாலதான் இத்தன வருசமா கட்சி இருக்கு, மாவோயிஸ்டுகளுக்கும் மம்தாவுக்கும் தொடர்பு, மாவோயிஸ்டுகளுக்கும் அத்வானிக்கும் தொடர்பு, எங்க கிட்ட ஆதாரம் இருக்கு. இந்தியா என்கிற பாரத பூமி இப்ப முதலாளித்துவ நாடு, அதுக்காக முதலாளிங்களோட கூட்டு சேர்ந்துதான ஆகணும்”

“ரெண்டாவது கேள்வி கேரளாவில், கர்னாடகத்தில, ஆந்திராவுல இனவெறியோட கம்யூனிஸ்டுகள் நடந்துக்குறாங்கன்னு… குறிப்பாக பாலாறு, பெரியாறு, காவிரி ஆறு பிரச்சினைகள்ல தமிழகத்துக்கு தோரோகம் பண்றாங்க ஒண்ணு புரிஞ்சுக்கோங்க ஒவ்வொரு பகுதிக்கேத்த மாதிரிதான் புரட்சி செய்யணும், மொத்தமா மத்தியிலேர்ந்து முடிவு எடுக்க முடியாது அது ஜனநாயகம் கிடையாது, யாரு யாருக்கு எது சரியோ அங்கங்க அப்படி நடந்துக்குவாங்க இதுல என்ன தப்பு?””

“மூணாவது கேள்வி, கோவிந்தசாமி பத்தி அது கட்சி ரகசியம், அதுக்கு மேல சொல்லக்கூடாது. அடுத்து நாடாளுமன்ற அரசியல் பத்தி, நாங்க எப்பவுமே தேர்தல் கூட்டணி தான் வச்சுக்குறோம், இதை புரட்சிக்கான கூட்டணின்னு சொன்னோமாஎன்ன? நீங்க நினைச்சுகிட்ட நானா பொறுப்பு? இன்னைக்கு மக்களோட பிரச்சினைகளை அரசியல் அரங்குல சொல்லுறதுக்கு யார் இருக்கா கம்யூனிஸ்டுகளைத்தவிர? கம்யூனிஸ்டு பாரம்பரியத்தை புரிஞ்சுக்கோங்க நடிகரா இருந்த எம்ஜிஆரை புரட்சித்தலைவர் ஆக்கியது யார்ன்னு தெரியுமா நம்ம தோலர் கல்யாண்குமார்தான், ஏன் புரட்சிதலைவிகூட எங்களால தான் ரெண்டாவதுமுறை ஆட்சி  செஞ்சாங்க. இதுவரைக்கும் வந்த ஒவ்வொரு முதல்வரின் நாற்காலியையும் அலங்கரித்தது மார்க்சிஸ்டு கட்சிகளின் ரத்த அணுக்கள் தான்,  இது கட்டுக்கோப்பான கட்சி, வட மாவட்டங்கள்ல அப்ப வன்னியர் சங்கம் ஆரம்பிச்சப்ப எல்லா கட்சியில இருந்தும் ஆளுங்க பிரிஞ்சாங்க ஆனா மாக்ஸிஸ்டுல ம்ம்ம்ம்ம்ம்ஹும்” ஒரு புரட்சிக்கான அலை அடித்து ஓய்ந்தது போலிருந்தது.

மேற்கொண்டு விஜி சொல்ல வாயெடுத்தான். எனக்கு நேரமாயிடுச்சு கிளம்புறேன் என்று சுமோவுக்குள் பாய்ந்தார் மாசெ தோலர். விஜி எண்ணெய்த்தோலரிடம் பேச முற்பட்ட போது ” எதுவும் எங்கிட்ட கேக்கேதே” என்றபடி நகர்ந்தார். விஜி   ” உங்க மாசெ சொல்லுறத கேட்டால் உங்களுக்கு சிரிப்பு வரலை?,  நான் என்ன சொன்னாலும் நீங்க கேக்க மாட்டீங்க, நடிகரை புரட்சி தலைவரா மாற்றியது கல்யாண்குமார் இல்லை அது கல்யாண சுந்தரம், பேச்சு போக்கில நடிகர் பேரை சொல்லிட்டாரு போல” என்றான். எண்ணெய்த்தோலரின் மூஞ்சியில் டன் கணக்கில் எண்ணை வழிந்தது. என்ன வழிஞ்சது மூஞ்சியில ? என்ன வழிஞ்சது மூஞ்சியில? எண்ணை. அதுவரை அவர் விற்ற எண்ணை எல்லாம் அவர் முகத்தில் வழிந்து கொண்டிருந்தது.

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா

பின்னுரை

கலகத்திற்கு எப்போதும் முன்னுரை தேவையே, காரணம் கலகம் என்பது ஒரு வர்க்கத்திற்கோ, இனத்திற்கோ சொந்தமானதல்ல. ஆனால் இந்தக்கலகம் பாட்டாளைவர்க்கத்திற்கென கலகத்தை படைக்க விரும்புகிறது. மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளுக்கு தீர்வாக கலகம் தேவைப்படும் சூழலில் சமூகமோ அக்கலகத்தை அகிம்சையான அமைதிகளால் கொன்று கொண்டிருக்கிறது. காலம் எப்போதும் இப்படியே இராது, காலம் வருமென்பதற்காக நாமும் காத்திருக்க முடியாது காலச்சக்கரத்தை நமக்காய் சுற்றுவோம். முதலாளிகளின் தேவைக்காக சுற்றப்பட்ட சக்கரம் நமக்காக சுற்றப்படவேண்டும். கூன் வளைந்த நமது முதுகுகள் நிமிரும் போது முதலாளிகள் பாசிசவாதிகள் வீழ்ந்து கிடப்பார்கள்.

என்னடா! ஒன்றும் தேராத கதைக்கு இந்த உலைகையே மாற்ற சொல்லுவது சிலருக்கு வியப்பாய் தோன்றலாம். நான் நேர்த்தியான எழுத்தாளன் அல்ல, அழகாய் கவிதைகளை எடுத்தியம்பும் கவிஞனும் அல்ல, நாவிலே பாலிடாயில் கலந்த தேனை ஓடவிடும் பேச்சாளனும் அல்ல. ஒரு சாதாரணமான மனிதன் அவ்வளவுதான். ஆயிரம் பரிசுகள் பெற்ற கவிதையாகட்டும், பல்லாயிரம் வன்ணங்களை கொண்ட ஓவியமாகட்டும் அவை மக்களுக்காக படைக்கப்படாவிட்டால் அவை வெறும் குப்பைகளே, மாறாக போபாலில் பாதிக்கப்பட்ட குழந்தையின் கால்களைப்போன்ற ஒட்டி வெட்டப்பட்ட நறுக்கப்பட்டவை சில எழுத்துக்கள் ஆயினும், உழைக்கும் மக்களுக்காக கிறுக்கப்பட்ட கோடுகளாயினும் சரி அவை அம்மக்களுக்காக இருப்பின் அவையே உயர்ந்தவையே, இதனால் நான் வறட்டுவாதியாகக்கூட பரிகாசிக்கப்படலாம். பிழைக்கத்தெரியாத நபர், முட்டாள் எனவும் எனவும் கேலிக்குள்ளாகலாம்.

உழைக்கும் மக்களுக்காக போரிடும் ஒரு புரட்சிகர இயக்கத்தின் ஆதரவாளனென்பதில் உள்ள பெருமை, அதை யாரும் என்னிடமிருந்து தட்டிவிட முடியாது. என்னுடைய எழுத்துக்கள் / படைப்புக்கள் யாவும் எனக்கு சொந்தமல்ல, அது இச்சமூகத்தின் பிரதிபலிப்பே. இச்சமூகத்தின் குழந்தையாகிய எனக்கு இந்த சமூகத்தை விடுவிக்க வேண்டிய வேண்டியதன் முக்கிய வேலை இருக்கிறது. அதை விட உங்களுக்கு முக்கிய வேலை இருக்கிறதா என்ன?

அறிமுகம்

இந்த சிறுகதையை எழுதியது தோழர் கலகம். போலிகம்யூனிஸ்டுகளை கிழித்து தோரணமாய் தொங்கவிடுவதில் கதை, கவிதை உரை நடை என அனைத்து வடிவங்களையும் பயன்படுத்தி கூர்மையான விமர்சனங்களை கலகம் எனும் வலைத்தளத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். வாழ்வின் யதார்த்தமான நிகழ்வுகளை சிவந்த கண்ணோட்டத்தில் வழங்கிய பதிவுகள் சிறப்பானவை.

வலைத்தள முகவரி: http://kalagam.wordpress.com/

2 thoughts on “தோலர் எண்ணெய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்! !!! – அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா

  1. நல்லா இருக்குங்க. வெள்ளாளகவுண்டர்கள் நெருங்கிய சொந்தத்தில் திருமணம் பண்ணிக்கமாட்டாங்கனு கேள்விபட்டுருக்கேன்.ஆனா இங்க மாமாவயே கல்யாணம் பண்ணிருக்கறதா இருக்கே.

  2. பறயனா இருந்திருந்தா பரவால. அதுவும் வெள்ளாளக்கவுண்டான பொறாந்தாச்சு. கவுரவத்தோட வாழணுமே !

    என்ன இது? நீ்ங்கெல்லாம் கம்யூனிசம் பத்தி எழுத தகுதி இல்லை என்பது என் கருத்து. யாரையும் புண்படுத்தக்கூடாது.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s