சுதந்திரம் என்றொரு கற்பிதம்


இன்று 64 ஆம் சுதந்திர தினமாம். உள்ளீடற்று சடங்காய் பின்பற்றப்படும் பண்டிகை போல் ஆண்டுதோறும் ஆகஸ்டு 15 வந்துவிட்டால் சுதந்திரமும் நினைவுக்கு வந்துவிடுகிறது. சில நாட்களுக்கு முன்பிருந்தே ஊடகங்கள் கொண்டாட்டங்கள் பற்றியும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றியும் நீட்டி முழக்கி வருகின்றன. சென்னையை மட்டும் 5000 காவலர்கள் பாதுகாக்கப் போகிறார்களாம். கண்காணிப்பு கேமராக்கள் ஆயுதப் படை உள்ளிட்ட கெடுபிடிகளுக்கு மத்தியில் கொண்டாடப்படப்போகும் விழாவின் பெயர் சுதந்திர தின விழா. முரண்தொடைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு இது.

சுதந்திரம் என்றால் என்ன? நம்மை அந்நியன் ஆண்டுகொண்டிருந்தான், இப்போது நம்மை நாமே ஆள்கிறோம் இது தான் சுதந்திரம். விரும்பியவாறு வாழலாம், விரும்பிய தொழில் செய்யலாம், விரும்பிய இடங்களுக்குச் செல்லலாம் என்று அது மேலும் விரிக்கப்படுகிறது. என்றால் நீங்கள் 47 க்கு முன்னர் விரும்பிய இடங்களுக்கு சென்றிருக்க முடியாதா? விரும்பிய தொழிலை செய்திருக்க முடியாதா? விரும்பியபடி வாழ்ந்திருக்க முடியாதா? என்றால் சுதந்திரம் என்பது என்ன பொருளில் ஆளப்படுகிறது. மக்களால் மக்களுக்காக மக்களே செய்யும் ஆட்சி மக்களாட்சி. இப்போது மக்களாட்சி நடை பெறுகிறது, 47க்கு முன்னர் இது நடைபெறவில்லை அதனால் தான் இது சுதந்திரம் என்கிறார்கள். 47க்கு முன்னரும் மக்களால் சுதந்திரமாக வாழ முடியவில்லை ஏனென்றால் மக்களாட்சி அன்று இல்லை. இன்றும் மக்களால் சுதந்திரமாக வாழ முடியவில்லை, இன்றும் மக்களாட்சி இல்லை. பின் எதற்காக 47 ஐ சுதந்திரமாக கொள்ள வேண்டும்?

மக்கள் என்பது யார்? கோடிகளில் குளிக்கும் அம்பானி சகோதரர்களும் ஒரு வேளை உணவுக்கும் வக்கின்றி திக்கற்று நிற்கும் குப்பனும் சுப்பனும், ஒரே தரத்தில் மக்களா? எந்த மக்களால் எந்த மக்களுக்காக எந்த மக்கள் ஆளும் ஆட்சி இது? என்பது தான் இப்போது முன்நிற்கும் மிகப்பெரும் கேள்வி. அன்று ஆங்கிலேயர்கள் நம்மை ஆண்டார்கள், இன்று நாமே நம்மை ஆள்கிறோம் என்பது ஒன்றே சுதந்திரத்தின் பொருளை முழுமைப்படுத்த போதுமானதாகுமா? அன்றைய ஆங்கிலேயனின் ஆட்சியின் செயல்பாடு எந்த விதத்தில் இருந்ததோ அந்த விதத்திலிருந்து சற்றும் மாறாமல், தெளிவாகச் சொன்னால் அந்தவிதத்தின் உச்சத்தில் தான் இன்றைய ஆட்சியின் செயல்பாடும் இருக்கிறது. என்றால் எது அந்நிய ஆட்சி? எது நம்முடைய ஆட்சி?

ஆங்கிலேய ஆட்சியில் ‘இம்’ என்றால் சிறைவாசம் அடக்குமுறை. இப்போது மட்டும் என்ன? தடா, பொடா முதல் எத்தனை அடக்குமுறை கருப்புச் சட்டங்கள்? மரபணு மாற்றுப் பயிர்களுக்கு எதிராக அது தீங்கானது என்று மக்களிடம் சொன்னாலோ, அச்சடித்து நூலாக வெளியிட்டாலோ குற்றம் என சட்டமியற்றியிருக்கிறது இப்போதைய அரசு. இதை நம்முடைய ஆட்சி என்று சொல்லமுடியுமா?

ஆங்கிலேய ஆட்சியில் போராடிய மக்கள் கொல்லப்பட்டார்கள். இப்போது மட்டும் என்ன? தண்டகாரண்யாவில் தங்களின் வாழ் நிலங்களை பாதுகாக்கப் போராடும் பழங்குடியினர் மீது கொலை வெறியை கட்டவிழ்த்து விட்டுள்ளது அரசு. தீவிரவாதிகளுடன் சண்டை என்ற பெயரில் அரசுக்கு எதிராக போராடுபவர்கள் போலி மோதல்களில் கொல்லப்படுகிறார்கள். செல்வாக்குப் பெற்ற தலைவர்கள், அறிவுத்துறையினர் பொய்வழக்குகளில் கைது செய்யப்படுகிறார்கள். இதை நம்முடைய ஆட்சி என்று சொல்லமுடியுமா?

ஆங்கிலேய ஆட்சியில் கலைச் செல்வங்கள் உட்பட அனைத்தையும் தன் நாட்டுக்கு கடத்திச் சென்றனர். எத்தனை அரிசி ரகங்கள், எத்தனை மூலிகை மருத்துவ மரபுச் செல்வங்கள், எல்லாம் காப்புரிமை என்ற பெயரால் களவாடப்பட்டுச் செல்வதற்கு அரசு துணை நிற்கிறது. பாஸ்மதி அரிசியின் காப்புரிமையை திரும்பப்பெற மக்கள் போராடவேண்டியிருந்தது. வேம்புக்கும் ஆலங்குச்சிக்கும் கூட வெளிநாட்டில் காப்புரிமை பெற்றிருக்கிறார்கள். அரசு செய்தது என்ன? இதை நம்முடைய ஆட்சி என்று சொல்லமுடியுமா?

தண்ணீருக்காக மக்கள் காலிக்குடங்களுடன் பல கிலோமீட்டர் கால்கடுக்க நடந்து சொட்டுத்தண்ணீர் கிடைக்காத நேரத்தில் ஆறுகளையும் குளங்களையும் பன்னாட்டுத் தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்த்துக்கொடுக்கும் அரசுகளை, நிலத்தடி நீரை கேள்வி கணக்கின்றி எடுத்துக்கொள்ள அனுமதிக்கும் அரசுகளை நமக்கான அரசு என்று எப்படிச் சொல்வது?

விளைந்த தானியங்களை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யாமல் தனியாரிடம் தள்ளிவிட்டு, கொள்முதல் செய்த தானியங்களை ஏழைகளுக்கு முறையாக விநியோகம் செய்யாமல் புழுக்கச்செய்து எலிகளுக்கு உணவாக்கிவிட்டு, கொல்முதல் செய்யச் சொல்லி போராடும் விவசாயிகளுக்கு நிர்ணயம் செய்த விலையை விட அதிக விலையில் பன்னாட்டு தனியார் நிறுவனங்களிடம் இருந்து உணவு தானியங்களை இறக்குமதி செய்யும் அரசுகளை நமக்கான அரசு என்று எப்படிச் சொல்வது?

மாணவர்களின் கல்விக்கு, சிறு குறுந்தொழில்களுக்கு, விவசாயிகளுக்கு சீராக மின்சாரம் வழங்காமல் மின் பற்றாக்குறை காற்று வீசவில்லை என்று காரணம் கூறி மக்கள் தலையில் மின்வெட்டை சுமத்திவிட்டு பன்னாட்டு நிறுவனங்களுக்கு தங்கு தடையின்றி 24 மணிநேரமும் மின்சாரம் வழங்கிக் கொண்டிருக்கும் அரசுகளை நமக்கான அரசு என்று எப்படிச் சொல்வது?

லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து மாண்டு போனது குறித்து கிஞ்சிற்றும் கவலைப்படாத அரசு அம்பானி சகோதரர்களுக்குள் சொத்துச் சண்டை வந்தபோது அவர்களை சமாதனப்படுத்துவதற்கு கவலைகொண்ட அரசை எப்படி அழைப்பது?

தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவது குறித்து வாய் திறக்க மறுக்கும் அரசு ஆஸ்திரேலியாவில் சில மாணவர்கள் தாக்கப்பட்டதும் ஆஸ்திரேலியப் பிரதமரை அழைத்துப் பேசியதே இந்த அரசை எப்படி அழைப்பது?

விடுதலைப் புலிகளை அழிக்கிறோம் என்ற பெயரில் தமிழர்களை வேட்டையாடி இன அழிப்புக்கு துணை நின்ற அரசு பிஜித்தீவில் இந்திய வம்சாவளி ஆட்சிக் கெதிரான இராணுவப் புரட்சிக்காக கண்ணீர் வடித்ததே இந்த அரசை எப்படி அழைப்பது?


பஞ்சம், பசி, பட்டினிச் சாவு என்றதும் ஆப்பிரிக்க நாடுகள் தான் நினைவில் வரும். அந்த நிலையை ‘நம்ம’ அரசு வெற்றிகரமாக மாற்றியமைத்திருக்கிறது. ஆம், ஆப்பிரிக்க நாடுகளை விட இந்தியாவில் ஏழ்மை அதிகம். பீகார், உத்திரப்பிரதேசம், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், சட்டிஸ்கர், மத்தியப் பிரதேசம், ஒரிஸ்ஸா, ராஜஸ்தான் ஆகிய எட்டு மாநிலங்களில் மட்டும் 42 கோடியே 10 லட்சம் பேர் கொடிய வறுமையில் உழல்கிறார்கள். ஆப்பிரிக்கக் கண்டத்தின் 26 நாடுகளைச் சேர்ந்த ஏழைகளின் மொத்த எண்ணிக்கையை விட இது அதிகம். இதை மறைத்து பல ஆண்டுகளாக மாறாத அளவீடுகளைக் கொண்டு வருமை குறைந்திருப்பதாக பசப்புகிறது அரசு. அதன்படி மாதம் ஒன்றுக்கு ஒருவர் 538 ரூபய் சம்பாதித்தால் அவர் வறுமைக் கோட்டுக்கு மேலே இருப்பதாக கணக்கு கொள்கிறது. மாதம் 500 ரூபாய் சம்பாதித்தால் அவன் ஏழையல்ல என்று கூறும் அரசு நாள் ஒன்றுக்கு முதலாளிகளுக்கு வழங்கும் சலுகை 1369 கோடி ரூபாய். நடப்பு நிதியாண்டில் மட்டும் முதலாளிகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் அரசு அள்ளிக்கொடுத்த சலுகை ரூபாய் 5 லட்சம் கோடி.

நாட்டின் பெரும்பான்மையான மக்களை விலைவாசி உயர்வினாலும், அடக்குமுறைச் சட்டங்களாலும், உரிமை பறிப்பினாலும் நையப் படைத்துவிட்டு, பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகளுக்கு வாரி வழங்கும் வள்ளலாக இருக்கும் அரசு மக்களிடம் மிட்டாய் கொடுத்து இன்று சுதந்திர தினம் என்கிறது.

அன்று அன்னியர்கள் இந்தியாவை காலனியாக வைத்திருந்து சுரண்டினார்கள். இன்றோ அதில் எந்த மாறுதலுமின்றி மறுகாலனியாக்கலுக்கு உட்படுத்தி முன்னிலும் அதிகமாக சுரண்டிக் கொழுக்கிறார்கள். அன்று ஆங்கில ஏகாதிபத்திய அரசை எதிர்த்த அனைவரையும் தீவிரவாதிகள் என்று தண்டித்தது. இன்றும் அரசுக்கு எதிராக போராடுபவர்கள் அனைவரையும் தீவிரவாதிகளாகக் கருதி ஒடுக்க நினைக்கிறது. அந்த அடக்குமுறைகளையும், தண்டனைகளையும், தாக்குதல்களையும் துச்சமெனக் கருதி போராடினார்கள் மக்கள், போராடிய மக்களுக்கு சுதந்திரம் என்ற பெயரில் ஒரு ஆட்சி மாற்றத்தை தந்து ஏமாற்றியது அன்று நடந்தது, ஓட்டுக்கட்சிகள் அதை கொண்டாட்டமாக்கி இன்றும் தங்கள் ஏமாற்றலை தொடர்கிறார்கள். மக்கள் ஏமாளிகளல்ல. அவர்கள் இந்த சுதந்திரத்தின் மீது காறி உமிழ்ந்துவிட்டு தங்கள் போராட்டக் கொடியை நாட்டுவார்கள்.

6 thoughts on “சுதந்திரம் என்றொரு கற்பிதம்

  1. What you expressed is welcomable. Examples and reasons are valid.changes should be taken place in due course.Real fighters are seeking Real Independence. But nowadays Independence is with the topper layer of this country only.It is not reached upto grassroot level as per our Freedom fighters expected.We salute the sacrifice. But fight against the Exploitation. That is also a one among the fundamental rights as per our constitution. so; nobody can tell about us we are against the constitution.

  2. அனைத்து அன்பார்ந்த நெஞ்சங்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்.

  3. சுதந்திரமே இல்லாமல் அடிமைகளை போல் வாழ்ந்த ரஷ்யாவின் மக்களையும் கொடுங்கோலன் ஸ்டாலினின் அடக்குமுறைகளை சிந்திக்கும் போது நம்முடைய பாரத திருநாட்டின் சுதந்திரம் நம்மை புல்லரிக்க வைக்கிறது. அந்த ரஷ்ய வெயிலை சிந்திக்கும் போது தான் நமக்கு இந்திய நிழலின் அருமை புரிகிறது.
    எங்கள் பாரத திரு நாட்டின் அனைத்து மக்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள். .

    By
    kaaral maarx

  4. “”””””””””””””””அந்த ரஷ்ய வெயிலை சிந்திக்கும் போது தான் நமக்கு இந்திய நிழலின் அருமை புரிகிறது.””””””””””””””””””””””””””””
    அட்ரா சக்கைன்னான அட்ரா சக்கை அட்ரா சக்கை அட்ரா சக்கை தலீவரே கொன்னுபுட்டீங்க போங்க.தலைவர் தலைவர்தான் தொண்டன் தொண்டன்தான்.

  5. செங்கொடியின் அறி(!)வியல் ஓட்டைகளின் நடுவே‍‍‍‍‍‍--schoolboy சொல்கிறார்:

    உங்கள மாதிரி ஆளுங்க இறுக்கிரவரைகும் எப்படீங்க இந்த நாடு உருப்படும்

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s