இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 2

ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்? பகுதி – 2


ஸ்டாலின் ஏன் மறுக்கப்பட்டார்? ஏன் தூற்றப்பட்டார்? இன்னும் ஏன் தூற்றப்படுகின்றார்?

ரஷ்ய‌ ஆய்வுமையம் 2003ம் ஆண்டு லெனின் பற்றி ஆய்வு ஒன்றைச் செய்தது. அதன்போது,  65 சதவீதமான மக்கள் லெனின் அடிப்படை நோக்கத்தை அங்கிகரித்ததுடன்,  அவை சரியானவை என்று எற்றுக்கொண்டதை 17.4.2003 பாரிஸ் லிபரேசன் பத்திரிகை தன் செய்தியாக வெளியிட்டு இருந்தது.  5.3.2003 லிபரேசன் பத்திரிகை ருசியாவில் 42 சதவீதமானோர் ஸ்டாலினை ஏற்று ஆதாரிக்கின்றனர் என்ற செய்தியை வெளியிட்டது. மீதமுள்ள‌வர்களில் 36 சதவீதம் பேர் ஸ்டாலின் நன்மையே கூடுதலாக செய்தார் என்பதை அங்கிகரித்து ஆதாரவாக இருப்பதை வெளியிட்டபடியே தான், அவரைத் தூற்றியது. அதே பத்திரிகை 1937-1938 இல் 40 ஆயிரம் பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக புதிய புள்ளிவிபரத்தையும் வெளியிட்டது.

மறுபுறம் லெனின், ஸ்டாலின் பற்றிய சரியான மதிப்பீடுகள், உலகளவில் உருவாகின்றது. மார்க்சியமே உலகை மாற்றும் ஒரே தத்துவமாக, தலைநிமிர்ந்து வருகின்றது. இதை தகர்க்க ஸ்டாலின் மரணமடைந்து  50 வது ஆண்டில் உலகெங்கும் மீண்டும் பெரியளவில் அரசியலற்ற வெற்று அவதூறுகள் மீளவும் உயிர்ப்பிக்கப்பட்டன. ஸ்டாலின் மீதான அரசியல் ரீதியான மதிப்பும், மக்களிடையே செயல்பூர்வமாக நடைமுறை ரீதியாக அதிகாரித்து வரும் பாட்டாளிவர்க்க செல்வாக்கையும் கொச்சைப் படுத்துவதே, மூலதனத்தக்கு அவதூறு நிபந்தனையாகி விட்டது. பாட்டாளி வர்க்கதின் வர்க்க கண்ணோட்டத்தைக் கொச்சைப்படுத்தவே, ஸ்டாலின் மீதான அவதூறுகளை முன்வைக்கின்றன. மூலதனத்தின் நெம்புகோலாக செயற்படும் வலது இடது சுதந்திர செய்தி அமைப்புகள்,  பலபக்க அவதூறுகளை 2003 ல் வெளியிட்டன. ஏகாதிபத்திய மூலதனத்தின் ஆதாரவுடன், கடந்தகால ஆவணங்களை எல்லாம் தூசிதட்டி எடுத்ததனர். ஆய்வுகள் என்ற பெயரில், அரசியலற்ற அவதூறுகளை நூலாக்கி டாக்டர் பட்டம் பெறுகின்றனர். இந்த நூல்களை மேயும் ட்ராட்ஸ்க்சியம் முதல் ஏகாதிபத்தியம் வரை, புல்லரிக்கும் மர்மக் கதைகளை உருவாக்கி உலாவ விடுகின்றனர்.  அதேநேரம் கடந்த 80 வருடமாக ஸ்டாலின் மீது இவர்கள் கட்டியமைத்த பொய்களும், அதை மெருகூட்டிய ஆதாரங்களும் உண்மையற்று போகின்றது. இதை செய்தியாக்கி, ஆய்வாக்கிய எவரும் நேர்மையாக சுயவிமர்சனம் செய்வதில்லை. அன்று அப்பட்டமாக ஆதாரம் என்ற பெயரில் கட்டமைத்த தரவுகள் அனைத்தும், விதிவிலக்கின்றி இன்று பொய்யாகியுள்ளது. இப்படி ஆய்வுகள் என்ற பெயரில் எழுதியவர்கள் பலர், ஏகாதிபத்திய உளவாளிகளாகவும், அவர்களிடம் கையூட்டுப் பெற்று இருந்ததும் கூட இன்று அம்பலமாகியுள்ளது. அவர்கள் வழங்கிய தகவல்கள் அனைத்தும் பொய்யானவை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இப்படி தகவல்களை வழங்கியவர்களுக்கும், ஏகாதிபத்தியத்துக்கும் இடையிலான தொடர்புகள்கூட இன்று ஆதாரபூர்வமாக அம்பலமாகியுள்ளது.

இதை ஆதாரமாக கொண்டு பிழைப்பு நடத்திய ட்ராட்ஸ்க்கியத்தின் 80 வருட அரசியல் கந்தலாகி நிர்வணமாகின்ற நிலையிலும், எந்த சுயவிமர்சனத்தையும் செய்யவில்லை. மாறாக அரசியலற்ற அவதுறை அரசியலாக கொண்டே, இன்றும் பிழைக்கின்றனர். வர்க்க எதிரிகளை ஸ்டாலின் முன்நிறுத்தி, அவர்களை சாதுவான பசுவாககாட்டியே வந்தனர். அரசியல் ரீதியான விவாதம், விமர்சனம் எதுவுமற்ற வகையில், பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டத்தை சிதைக்க நெம்புகோல்களை நிமிர்த்த முனைகின்றனர்.

ஸ்டாலின் அவதூறுகளை கட்டமைக்கும் ஒவ்வொருவனின் அரசியல் என்ன? சமகால நிகழ்வுகளில் அவர்களின் அரசியல் நிலை என்ன? அதில் அவர்களின் பாத்திரம் என்ன? என்று நெருங்கி ஆராயும் அனைவருக்கும், ஏகாதிபத்தியத்தின் அரசியல் கபடங்கள் இருப்பது அப்பட்டமாக தெரியவரும்.

ட்ராட்ஸ்கியத்தின் அவதூறுகள் அரசியலற்ற செப்புபிடு வித்தையாக அரங்கேறுகின்றது. கடந்தகாலத்தில் அவதூறுகள் மறுக்கும் எந்த விவாதத்துக்கும் சரி, அவர்களின் அரசியல் நிலைப்பாடுகள் மீதான விவாத்துக்கும் சரி, அவர்கள் பதில் அளிப்பதில்லை. தம்மையும் தமது சந்தர்ப்பவாத நிலைப்பட்டையும் மூடிமறைத்த படி, ஒருதலைப்பட்சமாக அவதுறை மட்டும் பொறுக்கி எடுத்து பக்கங்களை நிரப்புகின்றனர். இந்த வகையில் ட்ராட்ஸ்க்கியவாதிகளின் இந்த நிலைப்பாடு, அப்பட்டமாகவே ஏகாதிபத்தியத்துக்கு நேரடியாக சேவை செய்கின்றது. விவாதத்தை மறுத்தும், அவதூற்றை ஆதாரமாக கொள்கின்ற போக்கை லெனின் அம்பலப்படுத்தும்போது, கொள்கைரீதியான பிரச்சனையில் எதிராளியினுடைய ஒருவாதத்திற்கும் பதில் சொல்லாமல் அவன்மீது  இரக்கம் காட்டுவதாகச் சொல்வது விவாதிப்பதாகப் பொருளாகாது. மாறாக அவதூறு செய்யமுயல்வது ஆகும். இப்படி உண்மை நிர்வாணமாகி விடும்போது, கடந்தகால சொந்த நிலைப்பாடுகள்கூட கேள்விக்குள்ளாகின்றது. இதை மூடிமறைக்க விவாதம் மற்றும் எதிர்வாதத்தை முன்வைப்பது அவசியமற்றதாக்கின்றது. முன்பைவிட அவதூற்றுக்கு புதுமெருகூட்டி, வானத்தையே வில்லாக வளைக்க முனைகின்றர். “அவதூறின் அரசியல் முக்கியத்துவம்” என்ற கட்டுரையில் லெனின் அரசியல் அவதூறு பலசமயங்களில் சித்தாந்த ஒட்டாண்டித்தனத்தையும், நிர்க்கதியையும், வெறித்தனத்தையும், அவதூறு கூறுபவனின் எரிச்சலூட்டும் பேடித்தனத்தையும் மூடிமறைத்து விடுகின்றது” என்றார். தொழிலாளர் வர்க்கத்தின் பெயரில் வர்க்கப் போராட்டத்தையும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தையும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் பின்பாக தொடரும் வர்க்கப் போராட்டத்தையும் மறுக்கும் ட்ராட்ஸ்க்கியத்தின் மூடிமறைத்த அவதூற்றை நாம் இனம் காண வேண்டியுள்ளது.

மார்க்சியத்தின் பல்வேறு அடிப்படைகளை தகர்க்க நினைக்கும் ஏகாதிபத்திய நோக்கத்துக்கு முண்டு கொடுக்கும் கருத்துகள் பல வெளியாகின்றன. அதில் ஒரு பகுதியாக ஸ்டாலினை தூற்றும் தனிமனித வசைபாடல்கள் அரங்கேற்றப்படுகின்றன. இதைப்போன்று ட்ராட்ஸ்கியத்தின் நான்காம் அகில சர்வதேச இணைய தளத்தில் வசைபாடலை வெளியிடுகின்றன. இந்த அவதூறுக்கான மூலநூல்கள் எப்போதும் ஒன்றாகவே இருக்கின்றது என்பது விதிவிலக்கல்ல. இவர்களுக்கு மட்டுமல்ல ஸ்டாலின் தூற்றும் வகையில், மேற்கத்திய வலது இடது பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் வெளியிட்ட பலபக்கச் செய்திகள் சார்ந்த அவதூறுகளுக்குமான மூலநூல்களும், ஒன்றாக இருப்பது தற்செயலானவை அல்ல. கடந்த பத்து வருடமாக முன்னைய சோவியத் ஆவணங்களை எல்லாம் புரட்டிப் பார்த்து பல தொடாச்சியான அவாதூறு கட்டுரைகள் எழுதப்பட்டன,  எழுதப்படுகின்றன. இவற்றில் இருந்தே, இன்று அவதூற்றை தொகுத்து தூற்றுகின்றனர். அண்மைக் காலத்தில், முன்பு போல் கொல்லப்பட்டவர் எண்ணிக்கை பற்றிய கற்பனைத் தரவுகளை முன்வைக்க முடிவதில்லை. முன்னைய கற்பனையான புள்ளிவிபரங்கள் முன்வைத்து செய்த அவதூற்றையும்,  அரசியல் பிழைப்பையும், முழுப்பூசனிக்காயை சோற்றுக்குள் அமுக்குவது போல் அழுக்கிவிட முயலுகின்றனர். ட்ராட்ஸ்கிய பத்திரிகைகள் முதல் ஏகாதிபத்தியம் வரை முன்னர் தாம் கூறிய புள்ளிவிபரக் கற்பனைகளைப் பற்றி, வாய் திறப்பதில்லை. ஏகாதிபத்தியம் எதைஎதையெல்லாம் சொன்னதோ, அதை அப்படியே மீள வாந்தியெடுத்த ஸ்டாலின் எதிர்ப்புவாதிகள், ஏகாதிபத்திய தத்துவார்த்த கோட்பாட்டுக்கு இவைசவாக இருந்ததையும், இருப்பதையும் நாம் காண முடிகின்றது.

புரட்சிக்கு பிந்திய சமுதாயத்தில் வர்க்கப் போராட்டம் நடத்தப்படுவதை எதிர்க்கும் டிராஸ்கிஸ்டுகள், பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் என்பதையே எற்றுக் கொள்வதில்லை. லெனின் கூறகின்றார் முன்னொக்கிச் செல்வது, அதாவது கம்யூனிசத்தை நோக்கிச் செல்வது பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தின் வழியேதான் முடியும், அதைத்தவிர வேறு வழியில்லை” என்றார்.  ஆனால் டிராட்ஸ்கிகள் ஜனநாயகத்தை அதன் முரணற்றவகையில் பகுத்து ஆராயத்தவறி, அதை ஆதாரமாக கொண்டே தூற்றுகின்றனர். ஜனநாயகத்தை கொச்சை வடிவில் திரித்து தூற்றும்போது சோசலிசப் புரட்சிக்கு முன்நிபந்தனையான அரசியல், பொருளாதார அடிப்படைகளும் ஜனநாயக உணர்வுகளும் மனிதச் சிந்தனைப் பரப்புக்களும் விரிவடைந்திராத மூர்க்கத்தனமான விவசாயச முகக்குணங்களில் தான் ஸ்டாலினிசம் உதித்தெழுந்தது. ஜனநாயகப் புரட்சியைக் கண்டறியாத தேசமாய் ரஷ்யா இருந்தது” என்று ட்ராட்ஸ்கியம் வாசைபாடும் போது, ஜனநாயகம் பற்றி முதலாளித்துவ சிந்தனை எல்லைக்குள் நின்றே கூச்சலிடுபவர்களாக இருக்கின்றனர். சோவியத்தில் ஜனநாயக புரட்சி நடைபெறவில்லை என்று, லெனினையே மறுத்துத் திரிக்கின்றனர். ஜனநாயக புரட்சி நடைபெறாத நாடுகளில் சோசலிச புரட்சி நடைபெற முடியாது என்று கூறுவதன் மூலம், எதைத்தான் எமக்கு போதிக்க முனைகின்றனர். வர்க்கப் போராட்டத்தை கைவிடுங்கள் என்பதை தவிர‌, வேறு ஒன்றையும் அல்ல. ஆழ்ந்து நோக்கினால் ஸ்டாரலின் பற்றிய அவதூறுகள், வர்க்கப் போராட்டம் முதல் ஜனநாயகம் பற்றிய அரசியலில், ஏகாதிபத்தியத்துக்கும் ட்ராட்ஸ்கியத்துக்கும் எந்த வேறுபாடு அடிப்படைக் கோட்பாட்டின் மேல் இருப்பதில்லை. அப்படி ஒரு வேறுபாடு இருப்பதாக விளக்க முடியாதவர்களாகவே ட்ராட்ஸ்கிய அவதூறுகள் கட்டமைக்கப்படுகின்றன. ட்ராட்ஸ்கிய அவதூறுகள் எந்தளவுக்கு உள்ளதோ, அந்தளவுக்கு குருச்சேவ் அன்று ஸ்டாலினை தூற்றினான். குருச்சேவ் ஸ்டாலினை ஏன் மறுத்தான் என்பதும், எந்த அரசியலை கைவிட்டான் என்பதை நாம் ஆராய்வதன் மூலமே, ட்ராட்ஸ்கியத்துடன் அக்கபக்கமாகவே குருச்சேவ் செயல்பட்டான் என்பதை எதார்த்ததில் துல்லியமாக காணமுடியும்.

1956 இல் டிராட்ஸ்கியவாதிகளின் நான்காம் அகிலம் விடுத்த அறிக்கையில் குருச்சேவ்வின் அவதூறுக்கு கொள்கை ரீதியாக நன்றி தெரிவித்தனர். மேல் இருந்து ஆட்சியைக் கைப்பற்றி முதலாளித்துவத்தை மீட்ட இந்தச் சதியை (என்ன சதி என்பதை ஆதாரமாக கீழே பார்ப்போம்)  நியாப்படுத்தி “இதற்காக நாம் 25 வருடங்களாக காத்திருந்தோம். எனவே, நாம் இப்போது உள்ளே புகுந்திட வேண்டும். மிகுந்த ஆற்றலுடன் செயல்பட வேண்டும்” என்றனர். குருச்சேவ் எதைச் செய்தரோ அதைச் செய்ய  25 வருடமாக முயன்று தோற்றதை ஒப்புக்கொண்டது டிராட்ஸ்கியம். ஒரு முதலாளித்துவ மீட்சியை வரவேற்றதுடன் அதில் பங்கு கொள்ளவும் முயன்றனர்.  1956 இல் 20 வது காங்கிரசில் குருச்சேவ் ஸ்டாலினுக்கு எதிராக கட்டமைத்து அவதூறுகளை, இரகசிய சுற்று அறிக்கையாக வெளியிட்டு தூற்றியபோது, டிராட்ஸ்கியவாதிகள் இப்படிப் போற்றினர். ஸ்டாலினின் அடிப்படையான வர்க்க கண்ணோட்டம் சார்ந்த மிச்சசொச்ச வர்க்க அடிப்படைகளையும் துடைத்தெறிய, உள்ளே புகுந்து ஆற்றலுடன் அழித்துவிட அறைகூவல் விடுத்தனர். வர்க்க அடிப்படைகளை அழித்தொழிப்பை நியாப்படுத்தி 1961 இல் நான்காம் அகிலம் விடுத்த அறிக்கையில் “குருச்சேவின் நடவடிக்கைகளில், பழைமைவாதிகளுக்கு எதிரான ஸ்டாலினிய அழிப்புப் போராட்டத்துக்கு நாம் விமர்சனத்துடனான ஆதரவை வழங்கவேண்டும்” என்றனர். இப்படி கொள்கை வகுத்து குருச்சேவை தாங்கிபிடித்து உதவியதன் மூலம், பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தை குழி தோண்டி புதைக்க உதவினர். இதைத்தான் டிராட்ஸ்கியவாதிகள் அன்றுமுதல் இன்றுவரை செய்தனர், செய்து வருகின்றனர்.

1963 இல் ட்ராட்ஸ்கிய வாதிகளின் நான்காம் அகிலம் விடுத்த அறிக்கையில் ரசிய கம்யூனிஸ்ட் கட்சியின் 20 வது காங்கிரசிலும், 22 வது காங்கிரஸ்சிலும் உருவாகியுள்ள நிலமை, தொழிலாளர் அரசு நடக்கும் நாடுகளிலே கூட நமது இயக்கம் மறுமலர்ச்சி அடைவதற்கு மிகவும் சாதகமானதாகும்” என்று கூறி பாட்டாளி வர்க்கத்தின்அ டிப்படையான கோட்பாடுகளை சிதைப்பதில் கரம் குவித்தனர். இவர்கள் குருச்சேவ்வின் மார்க்சிய விரோத நிலைகளை ஆதாரித்துடன், அதற்கு துணையாக செயல்படவும் அறைகூவல் விடுத்தனர்.  1961 இல் 22 வது காங்கிரஸ் முடிவை வரவேற்ற ட்ராட்ஸ்கிஸ்டுகளின் நான்காம் அகிலம்,  புதிய மத்திய குழுவுக்கு ஒரு கடித்தை எழுதியது. அதில் 1937 இல் ஸ்டாலினால் கொல்லபட்டவருக்கு நினைவுச் சின்னம் எழுப்பபடும் என்று 1937 இல் ட்ராட்ஸ்கி கூறியதை சுட்டிக் காட்டியதுடன் இன்று இந்த தீர்க்கதரிசனம் உண்மையாகியிருக்கிறது. உங்களது பேராயத்தின் முன்பு கட்சியின் முதல் செயலாளர் அந்த நினைவுச் சின்னத்தை நிறுவுவதாக உறுதியளித்துள்ளார்” என்று கூறியதுடன்,  நினைவுச் சின்னத்தின் மீது ட்ராட்ஸ்கியின் பெயர் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டும்” என சுட்டிக்காட்டினர். அத்துடன் குருச்சேவைப் பாரட்டியதுடன் ட்ராட்ஸ்கியிசத்துக்கு கதவு திறந்துவிட்டுள்ளது” என்று கூறினர்.  அத்துடன் ட்ராட்ஸ்கியத்தையும் அதன் நிறுவனமான நான்காம் அகிலத்தையும் முன்னெடுத்துச் செல்வதற்கும் மாபெரும் உதவியைச் செய்திருக்கிறது” என்று பிரகடனம் செய்தனர். ஸ்டாலின் மரணத்தின்பின் குருச்சேவ் நடத்திய முதலாளித்துவ மீட்சியை ட்ராட்ஸ்கிகள் ஆதாரித்து வரவேற்றதை நாம் இங்கு காண்கின்றோம். குருச்வேவின் நோக்கமும், ட்ராட்ஸ்கியின் நோக்கமும் அக்கபக்கமாக இணைந்து வந்ததையும், ஒரே புள்ளியில் சந்தித்தையே இவை காட்டுகின்றன. ஸ்டாலினிய மார்க்சிய அரசியல் நிலைப்பாடுகள் சார்ந்த பலரை, குருச்சேவ் தலைமையிலான முதலாளித்துவ மீட்சியாளர்கள் உலகஅளவில் படுகொலை செய்தும்,  ஆயிரக்கணக்கில் சிறையில் அடைத்த நிலையில் தான், ஸ்டாலின் மீதான தாக்குதலை நடத்தமுடிந்தது. மார்க்சியத்துக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்ட எதிர்புரட்சியாளர்களை சிறைகளில் இருந்து விடுவித்தும், புனர்வாழ்வும் கொடுக்கப்பட்டது. புனர்வாழ்வு கொடுக்கப்பட்ட எதிர்புரட்சியாளர்கள் அரசின் முன்னணி அதிகாரத்துக்கும், கட்சியின் தலைமைக்கு கொண்டு வரப்பட்டனர். ஸ்டாலினின் மீதான தாக்குதல் தனிநபர் ரீதியாகவும்,  அரசியல் ரீதியாகவும் விரிந்த அளவில் தொடுக்கப்பட்டது.

குருச்சேவ் ஸ்டாலினை தனிநபர் ரீதியாக அவதூற்றைப் பொழிந்த போது எல்லையற்ற வகையில் விரிந்து காணப்பட்டது. குருச்சேவ் ஸ்டாலினை “சூதாடி”, “முட்டாள்”, ”கொலைகாரன்”, “மடையன்”, “பயங்கர இவான் போன்ற ஒரு கொடுங்கோலன்”, “ஒருகுற்றவாளி”, “கொள்ளைக்காரன்” என்று பலவாக தாக்கினான். “ரசிய வரலாற்றிலேயே மிகப் பெரிய சாவாதிகாரி” என்றான். மேலும் குருச்சேவ் தனது தாக்குதலை ஸ்டாலினுக்கு எதிராக 20 வது காங்கிரஸ்சில் நடத்தியபோது “குரோதமனோபாவம் கொண்டவன்” என்றான். “இரக்கமின்றிஆணவமாகச் செயல்பட்டவர்” என்றான். “அடக்குமுறைபயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டவர் என்றான்” “தேசத்தையும் விவசாயத்தையும் திரைப்படங்களின் மூலம் மட்டும் அறிந்தவர்” என்றான்.  “ஒரு கோளத்தின் மீது நின்று யுத்த நடவடிக்கைகளைத் திட்டமிட்டார்”  என்றான் “ஸ்டாலின் தலைமை ரசிய சமூக வளர்ச்சிப் பாதையில் பெரும் தடைக்கல்லாக மாறி விட்டது”  என்றான். குருச்சேவ் இதுபோன்ற அவதூறுகளை தொடாச்சியாக பொழிந்தான். டிராட்ஸ்கியம் இது போன்றவற்றையே தன் வராலற்றில் தொடாச்சியாக இடைவிடமால் செய்துவந்தது. அண்ணன் தம்பியாக இதில் ஒன்றுபட்டு நின்று, தனிமனித தாக்குதலை நடத்திய நிலையில், கொள்கைரீதியாக இவர்கள் தமக்கு இடையில் உடன்பட்டனர்.

இதை இன்றும் ஆதாரித்து நிற்பதுடன், டிராட்ஸ்கியத்தின் தலைசிறந்த வாரிசாக குருச்சேவை போற்றவும் தயங்கவில்லை. டிராட்ஸ்கிஸ்ட்டுகள் கூறுகின்றனர் 1954 இல் குருசேவின் வேண்டுகோளின்படி அமைக்கப்பட்ட விசாரணைக்குழு கம்யூனிஸ்டுகள் மற்றும் குற்றச் சாட்டப்பட்டவர்கள் அனைவரையும் சகல குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்தது” என்பதை எடுத்துக்காட்டி, ஸ்டாலினின் மீதான குற்றம் நிரூபனமாக இருப்பதாக தம்பட்டமடிக்கின்றனர். குருச்சேவ் திட்டமிட்டு மார்க்சிய நிலைப்பாட்டைக் கொண்டோரை படுகொலை செய்த நிகழ்வும், மார்க்சியத்தின் எதிரிகளை விடுவித்ததும் கம்யூனிசத்தின் வெற்றி என்கின்றனர். இதை நியாப்படுத்தும் வகையில் “1956 ல் ஸ்டாலின் கால அநீதிகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு போலி ஆவணங்கள் அடிப்படையில் அரசியல் பழிவாங்கலாக விசராணை மற்றும் வழக்குகள் நடைபெற்றதாய் அறிக்கை சமர்ப்பித்தது” என்று கூறியதை எடுத்துக்காட்டி, ஸ்டாலின் அவதூறுகளை கட்டமைக்கின்றனர். போலி ஆவணம் மூலம் விசாரணை என்பதும், அதை முதன்மை படுத்திக்காட்டி டிராட்ஸ்கியம் பிழைக்க முனைகின்றது. இந்த பிழைப்புவாத கூத்தடிப்பு ஒருபுறம் நிகழ, அன்று ஒரு சதி கட்டமைக்கப்பட்டதை ட்ராட்ஸ்கியம் சொந்த முரண்பாட்டுடன் பெருமையாக முன்வைக்கின்றது. அதையும் கட்டுரையின் தொடர்ச்சியில் விரிவாக ஆராய்வோம்.

குருச்சேவ் அரசியல் என்ன என்ற அடிப்படை உள்ளடகத்தில் இருந்து, இதை பகுத்தாய்வதை மறுப்பதே டிராட்ஸ்கியமாக உள்ளது. கோட்பாட்டு ரீதியாக என்ன அரசியலை முதலாளித்துவ மீட்பின் போது, குருச்சேவ் கையாண்டான் என்பதையும் கட்டுரை தொடர்ச்சியில் விரிவாக பார்ப்போம். அரசியல் ரீதியாக மார்க்சியத்தை மறுத்த குருச்சேவ் முதலாளித்துவத்தை நிலை நாட்ட களையெடுப்புகளை நடத்தினான். இவற்றை வானுயரப் போற்றும் டிராட்ஸ்கிகள் “ஸ்டாலினின் நிழலான பெரிஜா 23.12.1953 இல் சோவியத் உயர் நீதிமன்றத்தால் மரணதண்டனை விதிக்கப்பட்டு 5 மார்ச் 1954 இல் சுட்டுக்கொல்லப்பட்டான். பல ஆயிரம் நேர்மையான கம்யூனிஸ்டுகளை கொன்றமை, பிரிட்டிஸ் உளவுத்துறைக்கு வேலை செய்தமை ஆகிய குற்றச்சாட்டக்களின்படி ‘சோவியத் மக்களின் எதிரி’ என்று பிரகடனப் படுத்தப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டது. இதன் மூலம் நேர்மையான கம்யூனிஸ்ட்டுகளை தொடர்ந்து குருச்சேவ் பாதுகாத்தான் என்கின்றனர். மேலும் ஸ்டாலினை தூற்றவும் மார்க்சியத்தை வேரோடு பிடுங்கவும் “…பல்கேரிய, செக்கோஸ்லாவாக்கிய, ஹ‌ங்கேரி களையெடுப்புகளில் பங்கு கொண்ட ஸ்டானிச கொலையாளிகளான அபகுமெவ், லீசற்சோவ், மக்காரோவ், பெஜல்கின் ஆகியோரும் கைதாகி விசாரணையின் பின்பு சுட்டுக் கொல்லப்பட்டனர். ஸ்டாலினிசத்தை சோசலிசம் என்று நம்ப விரும்புகிறவர்கள் இவர்களையே பாட்டாளி வர்க்கத்தின் தலைவர்கள் என்றுநம்பலாம்” இப்படிக் கூறுவதன் மூலம், உண்மையில் டிராட்ஸ்கிகள் சவால் விடுகின்றனர். குருச்சேவின் முதலாளித்துவ மீட்சியை அப்பட்டமாகவே மறுக்கின்றனர். குருச்சேவின் வாலை பிடித்து தொங்கி ஊளையிடவும் கூடத் தயங்கவில்லை. ‘கம்யூனிஸ்டான’ குருச்சேவ் தான், பாட்டாளி வர்க்கத்தின் எதிரிகளை கொன்றதாக இன்றும் கூறுகின்றனர். இந்த நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்ளும் போது, இங்கு இவர்கள் புரட்சிக்கு பிந்திய சமுதாயத்தில், தமது வாக்கநலன் சார்ந்து முதலாளித்துவ மீட்சிக்கானவன் முறையை எதிர்க்கவில்லை. ‘மனிதாபிமானம்,  ஜனநாயகம், ஜனநாயக மத்தியத்துவம்’ என்பதெல்லாம் ஸ்டாலினை எதிர்ப்பதற்கான டிராட்ஸ்கியத்தின் வெற்று ஆயுதங்கள் என்பதை, இதன் மூலம் நாம் தெரிந்து கொள்ள முடியும். ஸ்டாலின் போன்றவர்கள் அன்றே கொல்லப்பட்டு டிராட்ஸ்கி போன்ற ‘கம்யூனிஸ்ட்டுகள்’ ஆட்சிக்கு வந்திருக்க வேண்டும் என்பதே இதன் சராம்சமாகும். குருசேவ்வின் வருகையின் பின்பான ஸ்டாலினிச அதிகார வாழ்வின் தளர்வு தொழிலாளர்களின் கிளர்ச்சிகளை வெளிப்படையாக உருவாக்கின” என்று டிராட்ஸ்கியம் கூறி குருச்சேவை ஆதாரிக்கும் போது, அரசியல் ரீதியாகவும் ஒன்றபட்டே அன்றும் சரி இன்றும் சரி நிற்கின்றனர்.  இவற்றை நாம் விரிவாகப் பார்ப்போம்

இந்நூலின் முந்தைய பகுதி

1. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 1

 

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

நிலவை உடைத்து ஒட்டிய அல்லா

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே பகுதி ௨௫

இந்த வரைகலை படம் தான் 54:1 வசனத்திற்கு ஆதாரமாம்.

நிலா பூமியின் ஒரே துணைக்கோள். சராசரியாக‌ 3,84,403 கிமீ தூரத்தில் நீள்வட்டப்பாதையில் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு பூமியையும் சுற்றிவருகிறது. புவியின் ஈர்ப்பு விசையில் ஆறில் ஒரு பங்கே கொண்டிருந்தாலும், நிலவின் தாக்கம் பூமியில் குறிப்பிடத்தகுந்த அளவு செயல்படுகிறது. வானவியல் ஆய்வுகளில் மனிதர்களின் முன்னேற்றம் பிரபஞ்சத்துடன் ஒப்பிடுகையில் குறைவு என்றாலும், மனித வரலாற்றுடன் ஒப்பிடுகையில் மீப்பெரும் சாதனைகள் வானவியலில் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. விண்கற்களின் மோதல்கள் தொடங்கி நெபுலாக்கள், புழுத்துளைகள் ஈறாக வானவியல் மாற்றங்களை நுணுக்கமாக கவனித்துக்கொண்டிருக்கிறான். ஒரு கோளோ, விண்மீனோ, விண்கற்களோ உடைந்துபோய் மீண்டும் ஒட்டிக்கொன்டு பழைய நிலையிலேயே செயல்படமுடியும் என்பதற்கான எந்தவித வாய்ப்பும் வானவியலில் இல்லை. ஆனால் குரானில் அப்படியான ஒரு நிகழ்ச்சி குறிப்பிடப்பட்டிருக்கிறது.

“நேரம் நெருங்கி விட்டது சந்திரனும் பிளந்துவிட்டது” “எனினும் அவர்கள் ஓர் அத்தாட்சியைப் பார்த்தால் புறக்கணித்துவிடுகிறார்கள். இது வழமையாக நடைபெறும் சூனியம்தான் என்றும் கூறுகிறார்கள்” குரான் 54:1,2. இந்த குரான் வசனத்தின் விளக்கமாக சில ஹதீஸ்களும் இருக்கின்றன. “நாங்கள் நபி அவர்களுடன் மினாவில் இருந்தபோது சந்திரன் பிளவுபட்டது உடனே நபி அவர்கள் நீங்கள் சாட்சியாக இருங்கள் என்று கூறினார்கள். இரண்டு துண்டுகளில் ஒன்று (ஹீரா) மலையின் திசையில் சென்றது” புஹாரி 3869.

அதாவது, அன்றைய அரபு மக்கள் முகம்மதுவிடம், நீர் இறைவனின் தூதர்தாம் என்பதற்கும், இறைவன் தான் உம்மிடம் வேதவசனங்களைத் தருகிறான் என்பதற்கும் என்ன அத்தாட்சி? என்று கேட்க அதற்கு முகம்மது, ஆம் நான் இறைவனின் தூதன் தாம் என்று நிலவைப்பிளந்து அதை அத்தாட்சியாக காண்பிக்கிறார். ஆனால் மனிதனால் செய்யமுடியாத மிகப்பெரிய அதிசய நிகழ்வான இதைக் கண்டு அன்றைய அரபு மக்களில் யாரும் இஸ்லாத்திற்கு மாறவில்லை என்பது ஆச்சரியம் தான். பிளந்த அந்த நிலவு என்ன ஆனது? எவ்வளவு நேரம் இரண்டு துண்டுகளாக இருந்தது? எப்போது மீண்டும் ஒன்றாக இணைந்தது என்பதுகுறித்து குரானிலோ, ஹதீஸ்களிலோ எந்த விளக்கமும் இல்லை. அதே நேரம் பூமிக்கு இரண்டு நிலவுகள் இருந்து ஒன்று அழிந்துபோய் இன்னொன்று மட்டும் மிச்சமிருப்பதாக யாரும் கூறிவிட முடியாது என்பதால், உடைந்த அந்த நிலவே ஒட்டிக்கொண்டு இப்போதும் தொடர்ந்து பூமியை சுற்றிக்கொண்டிருக்கிறது என்று நம்புவோமாக‌.

1400 ஆண்டுகளுக்கு முன்னுள்ள அந்த உலகில் குரான், ஹதீஸுக்கு வெளியே, இப்படி ஒரு நிகழ்வு நடந்ததற்கான எந்த ஒரு பதிவும் இல்லை. கிபி ஐந்து ஆறாம் நூற்றாண்டுகளில் நிகழ்ந்த எத்தனையோ நிகழ்வுகள் வரலாற்றில் இடம்பெற்றிருக்க, ஆக மிகப்பெரும் அதிசய நிகழ்வான இந்த நிலவு இரண்டான செய்தி உலகின் வேறெந்தப் பகுதியிலும் காணப்பட்டதாக தகவல் இல்லை. ஏன் அன்றைய அரேபியாவின் வேறு ஊர்களில் கூட இதை யாரும் கண்டதாக சாட்சியில்லை. இப்படியிருக்க நிலவு பிளந்ததை எந்த அடிப்படையில் ஏற்பது? இப்போது தந்திர விற்பன்னர்கள் தொடர்வண்டியை மறைப்பது, தாஜ்மஹாலை மறைப்பது என்று வித்தை செய்து காட்டுகிறார்களே அதுபோல முகம்மதுவும் தன்னிடம் கேள்விகேட்டு நச்சரித்துக் கொண்டிருந்தவர்களுக்கு மட்டும் வித்தை காட்டி விட்டாரா? அப்படியும் எடுத்துக்கொள்ள முடியாது. ஏனென்றால் அந்த குரான் வசனம் நேரடியாக மிகத் தெளிவாகவே இருக்கிறது “சந்திரனும் பிளந்துவிட்டது” என்று. தவிரவும் நிலவு உடைந்தது மறுமை நாளுக்கான அத்தாட்சி என்றும் சில ஹதீஸ்கள் கூறுகின்றன. மறுமை நாள் என்பது உலகில் மக்கள் வாழ்ந்தது போதும் என இறைவன் முடிவு செய்து உலகை அழிக்கும் நாள் என்பது ஐதீகம். அந்த மறுமை நாளுக்கான அத்தாட்சிகள் என்று சில நிகழ்வுகள் சொல்லப்பட்டிருக்கின்றன. அதில் இந்த நிலவு உடைந்ததும் ஒன்று. அந்த அத்தாட்சிகள் நிகழ நிகழ மறுமை நாள் நெருங்கி வந்துகொண்டிருக்கிறது என்பது பொருள். இதைத்தான் அந்த வசனம் குறிப்பிடுகிறது, “நேரம் நெருங்கிவிட்டது சந்திரனும் பிளந்து விட்டது” ஆக நிலவு உடைந்தது கட்டுக்கதையோ, கண்கட்டு வித்தையோ அல்ல உண்மையான நிகழ்வு இஸ்லாமியர்களைப் பொருத்தவரையில்.

நிலவு எப்படித் தோன்றியது என்பது குறித்து பல யூகங்கள் இருந்தாலும், 4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் செவ்வாய் அளவுள்ள ஒரு கோள் பூமியை தாக்கியதால் சிதைந்து பிரிந்துபோனது தான் நிலவாக பூமியை சுற்றுகிறது எனும் சேய்க்கொள்கைதான் ஓரள‌வுக்கு ஏற்கப்பட்டிருக்கிறது. இப்படி பூமியை சிதைத்து நிலவைப் பிரித்த அந்த மோதல்தான், புவியில் உயிரினங்கள் ஏற்படுவதற்கான சாதகமான சூழலை தொடங்கிவைத்தது என்றும் கணிக்கப்பட்டிருக்கிறது. இன்றும் ஆண்டுக்கு தோராயமாக 3.8 செமீ தூரம் பூமியை விட்டு நிலவு விலகிக் கொண்டிருக்கிறது. அன்றிலிருந்து புவியை உயிரினங்கல் வாழ்வதற்க்குத் தோதாக நகர்த்திக்கொண்டு வருவதில் நிலவு குறிப்பிடத்தகுந்த பங்காற்றி வருகிறது. நிலவின் தாக்கங்கள் என்று முதன்மையானதாக இரண்டைக் குறிப்பிடலாம். ஒன்று, பூமியின் பருவ மாறுதலுக்கு காரணமான பூமி தன் அச்சில் 23 பாகையளவு சாய்ந்திருப்பதை நிலைப்படுத்துவது. இரண்டு, கடல் நீரின் ஏற்ற வற்றங்களை கட்டுப்படுத்துவதன் மூலம் உயிர்சுழற்சிக்கு உதவுவது.

முக்கியமான இந்த இரண்டு தாக்கங்களை பூமியில் நிகழ்த்திக்கொண்டிருக்கும் நிலவு, திடீரென ஒரு நாள் உடைந்துபோனது என்றால் அதன் தாக்கம் பூமியின் பருவகால நிலைகளில் தகுந்த மாறுதல்களை ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் அது போன்ற எந்த மாறுதல்களும் பூமியில் ஏற்படவில்லை என்பதே உண்மை. இந்த நிகழ்வை முகம்மது நிகழ்த்திக்காட்டியது மக்கா எனும் ஊரில் அதாவது செங்கடலுக்கு அருகிலுள்ள ஒரு ஊர். கடலின் ஏற்றவற்றங்களைக் கட்டுக்குள் வைத்துருக்கும் நிலவு உடைந்தபோது செங்கடலில் ஏதாவது மாற்ற‌ங்கள் நிகழ்ந்திருக்க வேண்டுமல்லவா? அந்த மாற்றங்கள் அருகிலிருந்த மக்கவும் எட்டியிருக்க வேண்டுமல்லவா? அது ஹதீஸ்களில் பதியப்பட்டிருக்க வேண்டுமல்லவா? (நிலவு உடைந்ததற்கான ஆதாரமாகவேனும்) அப்படி ஏதேனும் ஹதீஸ் இருக்கிறதா? என்றால் நிலவு உடைந்தது என்பதை எப்படி ஏற்பது?

நிலவின் ஈர்ப்பு விசை மிகமிகக் குறைவு. தனக்கான வளிமண்டலங்களைக்கூட ஈர்த்து தக்கவைத்துக்கொள்ள முடியாத அளவுக்கு நிலவின் ஈர்ப்புவிசை பலவீனமானது. அதனால்தான் அங்கு காற்று இல்லை. காற்றைக்கூட ஈர்த்துவைத்துக்கொள்ள முடியாத நிலவு உடைந்து அதன் இரண்டு துண்டுகளும் மலையின் இருபக்கம் தெரியும் அளவுக்கு பிரிந்துவிட்ட பிறகு தமக்குள் எப்படி ஒன்றை ஒன்று ஈர்த்துக்கொண்டன?

குரானில் அனேக இடங்களில் மனிதர்கள் குரானை சிந்தித்துப்பார்க்க வேண்டாமா? என்று கூவுகிறது. இஸ்லாமியர்கள் இந்த வசனத்தை சந்திரனை உடைத்ததை எப்படி சிந்திக்கிறார்கள்? எப்படி புரிந்து கொள்கிறார்கள்? ஒரு கதை கூறப்படுவதுண்டு, வானில் கடவுள் தெரிகிறார் என்று ஒருவன் கூற மற்றவர்கள் தெரியவில்லையே எனக்கேட்க, வாழ்நாளில் பொய்யே கூறாதவர்களுக்கு மட்டும்தான் கடவுள் காட்சி தருவார் என்று அவன் கூறவும், மற்ற எல்லோரும் ஆமாம் தெரிகிறார் என்று கன்னத்தில் போட்டுக்கொண்டார்களாம். அப்படித்தான் அந்த ஹதீஸ்களைக் கூறியவர்கள் நிலவு உடைந்ததைக் கண்டார்களோ. எது எப்படியோ! முகம்மது தன் சொந்தக் கற்பனைகளை மெய்ப்படுத்திக்கொள்ளத்தான் அல்லாவையும் வேதத்தையும் பயன்படுத்திக்கொண்டார் என்பதைத்தான் இது மெய்ப்பிக்கிறது.

இத்தொடரின் முந்தைய பகுதிகள்

24. ஆதிமனிதன் மொழியறிந்தவனா? அல்லாவின் பதில் என்ன?

23. கால வெளியில் சிக்கிக்கொண்ட அல்லா

22. குரானின் காலப்பிழைகள்

21. குரான் குறிப்பிடும் நட்சத்திரங்கள்: மனிதப் பார்வையா? இறைப் பார்வையா?

20. மக்காவின் பாதுகாப்பு: குரானின் அறிவிப்புகள் உண்மையா?

19. சூரத்துல் கஹ்புக்கும் புத்தருக்கும் என்ன தொடர்பு?

18. நூஹின் கப்பல் நிறைய புராணப் புழுகுகள்

17. பிர் அவ்னின் உடல் எனும் கட்டுக்கதை

16. கருவறை குறித்த அல்லாவின் கதையாடல்கள்

15. விந்து குறித்த குரானின் விந்தைகள்

14. பாலும் தேனும் அல்லாவின் வேதத்தின் பாடுகள்

13. கோள்களும் அதன் விசையும் அல்லாவின் தேற்றங்கள்

12. விண்வெளி குறித்த அல்லாவின் பண்வெளிகள்.

11. குரானின் மலையியல் மயக்கங்கள்

10. கடல்கள் பற்றிய அல்லாவின் புனைகதைகள்

9. பூமி உருண்டை என யார் சொன்னது, அல்லாவா? மனிதனா?

8. பிரபஞ்சமும் அதை கட்டுப்பட அழைத்த குரானும்

7. குரான் கூறுவது அறிவியலாகுமா?

6. ஹதீஸ்களும் அதன் பிரச்சனைகளும்.

5. குரானின் பாதுகாப்பில் விழுந்த கேள்விக்குறிகள்.

4. மெய்யாகவே குரான் பாதுகாக்கப்பட்டது தானா?

3. குரானின் சவாலுக்கு பதில்

2. அல்லாவின் ஆற்றலிலுள்ள இடர்பாடுகள்

1. இஸ்லாம். பிறப்பும் இருப்பும்: ஓர் எளிய அறிமுகம்

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே….

அமெரிக்கா ஆஸ்திரேலியா செல்பவர்கள் மட்டும்தான் இந்தியர்களா?

சில மாதங்களுக்கு முன்னால் இந்தியாவின் ஒட்டுமொத்த ஊடகங்களும் ஆஸ்திரேலியாவை நோக்கி திரும்பியிருந்தன. சில மாணவர்கள் தாக்கப்பட்டதை அனைத்து ஊடகங்களும் திறமையாக மொழிபெயர்த்து இந்தியாவின் பொது வேதனையாக மக்களை உணரச் செய்திருந்தன. அமெரிக்க இந்தியர்களின் வரதட்சனைக் கொடுமைகளும், கண்ணீரும் கூட இந்தியாவில் உழலும் மக்களின் இதயத்தில் ஊடுறுவி நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. ஆனால் இதுபோன்றே எதிர்வினைகளையும் ஆதரவையும் கோரும் வேறுசில செய்திகளோ எவ்வித கேள்விகளையும் நம்முள் எழுப்பாது கடந்துவிடுகின்றன. ஊடகங்கள் இவற்றை முதன்மைப்படுத்துவதில்லை, ஒரு மூலைச் செய்தியாக கடந்துவிடுகின்றன. தம் உளக்கிடக்கையோடு மோதும் பரிசீலனையை கோருவதால் மக்களும் கூட இதுபோன்ற செய்திகளின் கணபரிமாணங்களை நிறுத்துப்பார்க்க விரும்புவதில்லை.

“லிபியாவில் கொத்தடிமைகளாகத் தவிக்கும் 80 தமிழர்கள்” இது நேற்று வந்த செய்தி. நேற்றோ இன்றோ மட்டுமல்ல இதுபோன்ற செய்திகள் அடிக்கடி வந்து யாருடைய கவனத்தையும் ஈர்க்காமல் கரைந்து போய்விடுகின்றன. இதிலிருந்து தப்பி வந்த இளையான்குடியைச் சேர்ந்த ஒருவர் இதை விவரிக்கிறார், “மதுரையில் வில்லியம்ஸ் டிராவல்ஸ் என்ற நிறுவனம் உள்ளது. அது லிபியாவில் தங்கும் வசதியுடன் அதிக சம்பளம் கிடைக்கும் வேலை வாங்கித் தருவதாக விளம்பரம் செய்தது. இதை நம்பி அந்த வேலையை எப்படியாவது வாங்கிட வேண்டுமென்று அந்த நிறுவனத்திற்கு ரூ. 1 லட்சம் கொடுத்தேன். அவர்களும் சொன்னபடி என்னை லிபியாவுக்கு அனுப்பி வைத்தார்கள். அவர்கள் சொன்னது எல்லாம் பொய் என்று அங்கு சென்ற பிறகு தான் தெரிந்தது. எனக்கு தோட்ட வேலை கொடுத்தனர். இவ்வளவு பணம் கொடுத்து வந்துவிட்டோம் என்ன செய்வது என்று நான் அந்த வேலையைச் செய்தேன். அதிக சம்பளம் என்று சொன்னார்கள் அல்லவா. ஆனால் அங்கு இது நாள் வரை சம்பளமே கொடுக்கவில்லை. என்னைப் போன்று ஏமாந்த சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை , விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த தமிழர்கள் 80 பேர் உள்ளனர். நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சம்பளத்தைக் கேட்டதற்கு எங்களை கட்டிடத்தில் வைத்து பூட்டி வைத்தனர். அங்கிருந்து ஒரு வகையாக தப்பித்து இளையான்குடியில் இருக்கும் என் உறவினர்கள் உதவியால் இந்தியாவுக்கு வந்தேன். அங்கு ஆதரவின்றி அவதிப்படும் தமிழர்களை மீட்கும்படி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்திருக்கிறேன். அவரும் உடனடியாக நடவடிக்கை  எடுப்பதாகக் கூறினார்” மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்குமாறு குறிப்பு எழுதி முன்நக‌ர்த்தலாம் அல்லது தன்னுடைய பணியில்(!) மூழ்கி மறந்துபோகலாம். நடவடிக்கை கோரிய தப்பிவந்த அந்த இளைஞரேகூட காலத்தின் சக்கரங்களுக்கிடையில் தன்னுடைய கோரிக்கையை நினைவுபடுத்த இயலாமல் போகலாம். ஆனால் புதிது புதிதாய் ஆயிரக்கணக்கான இளஞர்கள் இதுபோன்ற செய்திகளை உருவாக்க மஞ்சள் பையில் பணத்துடன் உள்ளடங்கிய கிராமங்களிலிருந்து புறப்பட்டு வந்துகொண்டே இருக்கின்றனர்.

நாட்டில் ஆகப் பெரும்பான்மையான மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கிக்கொண்டிருந்த விவசாயத்தையும், விவசாயம் சார்ந்த தொழில்களையும் உலகமயமாக்கலின் விளைவாக அரசு புற‌க்கணிக்கத் தொடங்கிய 80களின் பிற்பகுதிக்குப் பிறகு, இனியும் விவசாயம் வாழ்க்கையை நடத்த போதுமானதாக இருக்கப்போவதில்லை என்பது விவசாயிகளுக்குப் புரியத் தொடங்கியது. நிலங்களில் விளைவிப்பது கடினமாகியது, விளைவித்தாலும் அதற்குறிய விலைகிடைப்பது அதனிலும் கடினமாகியது. நிலம் வைத்திருந்தவர்கள் வந்த விலைக்கு விற்றுவிட்டு மாற்றுத்தொழிலில் முடங்கினார்கள், விவசாயக் கூலிகளோ முதலில் தொழில் நகரங்களுக்கும், பின்னர் வெளிநாடுகளுக்கும் நவீன கொத்தடிமைகளாய் தங்களை மாற்றிக்கொண்டனர். வெளிநாடுகளில் என்னவிதமான சிக்கலில் மாட்டிக்கொண்டாலும் தங்களை எதிர்த்து எந்த நடவடிக்கையும் எடுப்பதற்கு வாங்கிவந்த பெரும்கடன் அவர்களுக்கு தடையாக இருக்கும் என்பதை அறிந்துகொண்ட தரகர்கள், தெரிந்தே, துணிந்தே போலியான விசாக்களிலும், பொய்யான வாக்குறுதிகளிலும் அனுப்பிவைத்துப் பணம் கறந்துவிடுகின்றனர்.

வெளிநாடு செல்லுமுன் விசாரித்துக்கொள்ளவேண்டாமா? பணத்தைக் கட்டுமுன் உரிமம் பெற்ற முகவர்தானா? முறையான ஆவணங்கள் தானா? என்பதை சரிபார்த்துக்கொள்ள வேண்டாமா? அளவுக்கு விஞ்சிய பேராசையினால்தான் ஏமாந்துபோகிறார்கள் என்றெல்லாம் கண்டுபிடிப்புகளை நிகழ்த்துபவர்கள் அவர்களின் நடப்புச் சூழலை கருத்தில் கொள்வதில்லை. அடுத்த நாளை எப்படிக் கடப்பது எனும் சுழலில் சிக்கியிருப்பவர்களின் சஞ்சலங்கள் எதிர்காலம் குறித்த அச்சமில்லாமல் இருப்பவர்களுக்குப் புரிவதில்லை. கடன் சுமை, கடமைகள் என தத்தளிப்பவர்கள் பொய்யாக என்றாலும் சிறு நம்பிக்கை காட்டினாலும் பற்றிக் கொண்டுவிடுகிறார்கள். இதில் அவர்களுக்கும் பொறுப்பு இருக்கிறது என்றாலும், சீர்தூக்கிப் பார்க்கவியலா நிலையில் அவர்களைத் தள்ளியிருக்கும் அரசு தான், அவர்களின் நிலைக்கு அவர்களைவிட பெரிய குற்றவாளி.

வேலையில்லாத் திண்டாட்டம் என்பது எந்த ஒரு அரசுக்கும் பெரும் கவலையளிக்ககூடிய, மிகுங்கவனம் தேவைப்படக்கூடிய ஒன்று. வேலையில்லா நிலையை அரசுதான் தன் செயல்பாடுகளின் மூலம் ஏற்படுத்துகிறது என்பது ஒருபுறமிருந்தாலும், அந்த வேலையில்லாத் திண்டாட்டத்தை ஓரளவுக்கேனும் சமாளிக்கக்கூடிய வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை அரசு தானே செய்யலாம் அல்லது முறைப்படுத்தலாம். நாட்டின் பெரும்பான்மை மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளிலேயே தயங்காமல் தனியார்மயத்தைப் புகுத்துவதில் ஈடுபடும் அரசு இதுபோன்றவற்றைச் செய்யும் என்று பொய்யாகவேனும் நம்பமுடியுமா?


மக்களின் வாழ்வாதாரங்களை குலைப்பதன்மூலம் அவர்களை வறுமையில் தள்ளுவதும் அரசு, அவர்களின் வறுமைக்காப்பு நடவடிக்கைகளை முறைப்படுத்தி அவர்கள் ஏமாந்துபோவதற்கான வழிமுறைகளை அடைக்காமலிருப்பதும் அரசு, அதன்பிறகும் மீட்பு நடவடிக்கைகளில் அலட்சியம் காட்டுவதும் அரசு. எல்லாமுனைகளிலும் உழைக்கும் மக்களை வதைக்கும் அரசை விட்டுவிட்டு; ‘எதைத்தின்றால் பித்தம் தெளியும்’ எனும் நிலையிலிருக்கும் தனிப்பட்ட மனிதனை அவன் கவனமாக இல்லாததால் நேர்ந்தது இது எனக்குற்றம் சுமத்துவது எந்த விதத்தில் சரியாகும்?

சௌதி அரேபியாவின் ஜித்தா நகரின் ஷரஃபியா பாலத்தின் அடியில் சம்பளமின்றி ஊர் திரும்ப வழியுமின்றி மாதக்கணக்காக சில இந்தியர்கள் பரிதவித்துக்கிடந்தார்கள். எந்தத் தூதரக அதிகாரிகளும் அவர்களைக் கண்டுகொள்ளவில்லை. அண்மையில் சௌதி வந்த மன்மோகன் சிங் அனேக மனமகிழ் மன்றங்களில் மணிக்கணக்கில் உரை நிகழ்த்தினார். ஆனால் மறந்தும் கூட சௌதியில் வதைபடும் தொழிலாளர்கள் நிலை குறித்து ஒரு வார்த்தையும் பேசினாரில்லை. ஆஸ்திரேலிய தாக்குதலுக்கு பிரதமர் தொடங்கி வெளியுறவு அமைச்சர்வரை கண்டனம் தெரிவிக்கின்றனர். அமெரிக்காவில் கைதாகும் குற்றவாளிகளுக்குக் கூட அரசின் சார்பில் பரிந்துபேச ஆளிருக்கிறது. மேற்குலகில் வாழும் சில ஆயிரம் இந்தியர்கள் தேர்தலில் வாக்களிப்பதற்கு என்ன செய்யலாம் என யோசிக்கும் அரசு (வாக்களிப்பதால் பலன் ஒன்றுமில்லை என்றாலும்) வளைகுடாவில் இருக்கும் லட்சக்கணக்கானோர் குறித்து சிந்திப்பதில்லை.

ஏனென்றால் அரசு என்பது எல்லோருக்குமானது அல்ல. எல்லோருக்கும் சமமானது எனும் பாவனையில் இயங்கும் பக்கச்சார்பானது. பணக்காரர்களுக்கான அரசாங்கம் இது என்பதை அது மறைவின்றி வெளிப்படையாகவே காட்டிக்கொண்டிருக்கிறது. பணக்கார வர்க்கத்தினருக்கு அரசு யாருக்கானது என்பதில் சற்றும் சந்தேகமில்லை. பாட்டாளி வர்க்கத்தினருக்குத்தான் அரசு என்பது பொதுவானது எனும் மாயை இன்னும் மிச்சமிருக்கிறது. வாருங்கள், பொய்த்திரைகளை விலக்கி உண்மைகளின் வெளிச்சத்தைக் காண்போம்.

இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம்

நண்பர்களே, தோழர்களே,
தோழர் மாவோவின் வாழ்வை சுருக்கமாக, தெளிவாக எடுத்துக்காட்டிய “ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம்” எனும் நூல் இங்கு தொடராக வெளியிடப்பட்டது. அத‌னைத் தொடர்ந்து, தோழர் இரயாகரனின் “இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம்” எனும் நூல் இங்கு தொடராக வெளியிடப்படவிருக்கிறது. இது இன்னும் நூலாக வெளிவரவில்லை என்றாலும் தோழரின் சிறப்பு அனுமதியின் பேரில் இங்கு வெளியிடப்படுகிறது.
முத‌லாளித்துவத்தை ஆராதிப்பவர்கள், நடப்புலக வாழ்வின் போக்கிலேயே அதன் சொகுசுகளை அனுபவித்துச் செல்வதுதான் வாழ்க்கை என்பவர்கள், மதவாதிகள், கம்யூனிச எதிர்ப்பாளர்கள் என அனைவரும் ஸ்டாலின் எனும் புள்ளியிலிருந்துதான் தங்களின் கம்யூனிச வெறுப்பைத் தொடங்குகிறார்கள். அந்த அளவுக்கு தோழர் ஸ்டாலின் குறித்த அவதூறுகள் எல்லா வடிவங்களிலும் நிறைக்கப்பட்டிருக்கின்றன. இந்த அவதூறுகளை விலக்கி உண்மைகளை கண்டுணர்ந்து கொள்வது கடினமானதாக தோற்றமளித்தாலும், மிகவும் அவசியமானதாகும். இந்த அவதூறுகளை அடித்துத்துவைத்து சுத்தம் செய்வது அந்த அவதூறுகள் வீழ்படிவுகளாக எஞ்சியிருக்கும் வரையில் ஒவ்வொரு தோழருக்கும் கடமையாகும்.
அந்த வகையில் இரயாகரனின் இந்த நூல் தோழர் ஸ்டாலின் மீதான அவதூறுகளை மிகத்துல்லியமான முறையில் புள்ளிவிபரங்கள், தரவுகளுடன் ஆதாரபூர்வமாக உடைத்து உண்மையைக் காட்டுகிறது. மட்டுமல்லாது சோவியத் யூனியனின் மீதான புரட்டல்வாதங்களையும் அவை என்ன நோக்கத்திற்காக கட்டியமைக்கப்பட்டு பரப்பப்பட்டது என்பதையும் தெளிவுபடுத்துகிறது.
தோழர்கள் இதை விரிவாக எடுத்துச்செல்லவேண்டும் என்பது என்னுடைய ஆவல்.
தோழமையுடன்
செங்கொடி
*****************************************************************************************
ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 1

தூற்றுவதலோ, திரிப்பதலோ, திருத்துவதலோ வர்க்கப் போராட்டங்கள் நின்றுவிடுவதில்லை

வரலாற்றின் உண்மைகளைக் கண்டுகொள்ளமறுப்பது, அதைத்திரிப்பது, மார்க்சியத்தை மறுப்பதில் போய்முடிகின்றது. மனிதகுலம்அடிமைப்படுத்தப்பட்டு, தன் விடுதலைக்கான குரல்களையே இழந்துநிற்கின்றது. இதைத்தான் இன்று ஜனநாயகம் என்கின்றனர். மனிதனை அடிமைப்படுத்துவதையும், அவர்கள் அடிமையாக இருத்தலும்தான், மனிதன் ஜனநாயக உரிமையாக காட்டப்படுக்கிறது.

இதற்கு எதிரான போராட்டத்தை மார்க்சியம் நெறிப்படுத்துகின்றது. மார்க்ஸ் “சாரம்சத்தில்விமர்சனக்கண்கொண்டுபார்ப்பவைபுரட்சிகரமானவை” என்றார். இந்தநிலையில் மார்க்சியம் மீதான அவதூறுகள், சேறடிப்புகளை சமுதாயத்தின் மாற்றாககாட்டமுற்படுகின்றனர்.

இப்படி கட்டமைக்கும் அரசியல் தளத்தில்தான் உலகமயமாதல் என்றும் இல்லாத மனித அவலத்தை உலகமயமாக்கிவருகின்றது. இதை எதிர்த்த போராட்டத்தையும், சமுதாயத்தை மாற்றுவது பற்றிய எந்தவிதமான அக்கறையுமற்ற மாற்றையே, சமூகமற்றத்தின் ஒரு போக்காக பூச்சூட்டுகின்றனர். இந்த வகையில் மார்க்சியத்தைதிரித்தல், சேறடித்தல், மறுத்தல், இன்று முற்போக்காக காட்டப்படுகின்றது.

உலகமயமாதலை எதிர்த்து, உலகத்தை மாற்றி அமைக்ககோரும் ஒரேயொரு போராட்ட மார்க்கமான மார்க்சியத்தை எதிர்த்துநிற்கின்றனர். மார்க்சியத்தைகோணல்படுத்தி, தம்மை ஒரு “முற்போக்கு” அணியாககாட்ட முனைகின்றனர். இதன்மூலம் உலகமயமாக்கல் விரிவாக்கும் போக்குகளை உயர்த்திப்பாதுகாக்கின்றனர்.

இந்த “முற்போக்கு”கள், உலகமயமாக்கலுக்கு எற்ப தேசங்களை மறுக்கின்றனர். தேசங்கள் சார்ந்த மேற்கட்டுமான வடிவங்களுக்கும், உலகமயமாதல் திணிக்கும் மேற்கட்டமானத்துக்குமாக முரண்பாட்டில், தேசிய வடிவத்துக்கு எதிரானதையே முற்போக்கானதாக காட்டுகின்றனர். அடிக்கட்டுமானத்தை பூசிமொழுகி, மேற்கட்டுமானத்தில் நடக்கும் மற்றங்களை புரட்சிகரமானதாககாட்டி, மார்க்சியத்துக்கு எதிரான ஒரு மாற்றாக அதை முன்தள்ளுகின்றனர்.

மார்க்சிய உண்மைகள் மீது அவதூறு செய்வதே இவர்களின் அரசியல் அடிப்படையாகும். மார்க்சியம் மீதான அவதூற்றை, பெரும்பாலும் ஸ்டாலின் மீதான அவதூறில் இருந்து தொடங்குகின்றனர். ஸ்டாலின் 1936-37 களில் நடத்திய உள்நாட்டு களையெடுப்பை அடிப்படையாகவும், தனிமனித உரிமை என்ற உள்ளடகத்தை அடிப்படையாகவும் கொண்டு, அனைத்தையும் மறுக்கின்றனர். ஸ்டாலின் காலத்தில் என்ன நடந்தது என்ற அடிப்படை ஆய்வு எதுவுமின்றி, ஏகாதிபத்தியம் எதை எல்லாம் அவதூறாக கட்டமைத்ததோ, அதை ஆதாரமாக கொண்டே தூற்றுவது ஒரு அரசியல் வடிவமாக தொடருகின்றது.

இதை நுட்பமாக பார்த்தால் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை தூக்கியெறிய முயன்று தோற்றுப் போனவர்களைச் சார்ந்து நிற்கின்றனர். இவர்கள் யார் என்றால், சோவியத்தின் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை கவிழ்க்கும் சதிகளில் தோற்றுப்போன நிலையில் தண்டனைக்குள்ளனவர்கள். இந்த சதியாளர்கள் அக்காலத்தில் என்னசெய்தார்கள்?, எப்படி ஆட்சியை கவிழ்க்க முனைந்தார்கள்?, என்ற எந்த அடிப்படை உண்மையையும் ஸ்டாலினை தூற்றுவதற்காக கண்டுகொள்வதில்லை. இதன் மீதான நேர்மையான ஆய்வை, ஸ்டாலினை தூற்றுவோர் முன்னெடுப்பதில்லை. சதியாளர்கள் என்ன அரசியலை முன்வைத்தனர் என்பதைக் கண்டுகொள்வதில்லை. அதற்காக அவர்கள் என்ன வடிவங்களில் போராடினர்கள் என்பதைபற்றி அக்கறைப்படுவதில்லை. மார்க்சியத்துக்கு எதிராக பிரச்சாரம் செய்வோரும், மார்க்சியத்துக்கு திருத்தம் சொல்லி மார்க்சியத்ததை தூற்றுவோர், இவற்றை திரும்பிக்கூட பார்ப்பதில்லை. மாறாக மார்க்சியத்ததை தூற்றுவதே அவர்களின் மையக் குறிக்கோளாக உள்ளது.

அன்று சோவியத் மக்கள் எப்படி வாழ்ந்தனர். அடிப்படை தேவைகளான உணவு, இருப்பிடம், உடை போன்ற விடையங்கள் மீதான அரசின்கொள்கை என்ன? எதுவும் இவர்களுக்கு அவசியமற்றதாகவே உள்ளது. ஸ்டாலினை மறுத்து முதலாளித்துவமீட்சி நடந்தபின்பு, அங்கு இருந்த சமூகவடிவங்களை அழித்து முதலாளித்துவ அமைப்பு உருவானபின்பு, அந்த மக்களின் வாழ்வுக்கு என்னநடந்தது என்ற அடிப்படை விடையத்தைக்கூடக் கண்டுகொள்வதில்லை. தூற்றுவதற்கு மட்டும் இவர்கள் புலம்பவதும், அதைக்கொண்டு பிழைப்பதும் தொடர்கின்றது. ஒட்டுமொத்த சமுதாயத்தின் நலன் என்பதைவிடவும், சிலரின் நலன்களில் தொங்குபவர்களாக இவர்கள் இருக்கின்றனர்.

இதில் மற்றொரு விடையம் இவர்களின் வாதங்கள் மறுப்புக்கு உள்ளாகும்போது, பதிலற்றுகிடப்பதும், தூற்றுவதை தொடர்வதுமே பிழைப்பாகிவிடுகின்றது. கடுமையான முத்திரைகுத்தல் ஊடாக சம்பந்தமில்லாத வகையில் அவதூறுகளை கட்டமைப்பதும், ஒரு நடைமுறையாகிவிடுகின்றது. மார்க்சியத்தை உயர்த்தும் எல்லாப் பொதுவானதளத்திலும் இது நிகழ்கின்றது. இந்த போராட்டத்தில் கடுமையான தூற்றுதலை எதிர்கொள்ளவேண்டிய நிலையில் நாம் உள்ளோம். இந்த நிலையில் தனிமைப்படுத்தல், இருட்டடிப்பு போன்ற பல்வேறு புறநிலையான நிலைமையில், எதிர்நிச்சல் என்பதும் பல்துறை சார்ந்து கடுமையாகிவிடுகின்றது. மார்க்ஸ் கூறியதுபோல் “கண்டனத்துக்குரிய சமுதாயத்தின் ஏறுவரிசையில் ஓர் உயர்ந்த இடத்தைப் பிடிக்கிறவன்தான்” உலகத்தின் உண்மைகளையும், சமுதாயத்தை மாற்றி அமைக்கும் ஒரு சிறந்தபணியை செய்யமுடிகின்றது. சமுதாயத்தின் சுற்றி வளைப்பிலான வலைப்பின்னல் கொண்ட கண்டனங்களை எதிர்கொண்ட நிலையில், இந்த சமுதாயத்தை தலைகீழாக்க ஒரு புரட்சிக்கரமான அறைகூவலை விடும்போது, கடுமையான நெருக்கடிகள் நேரடியாக முகத்துக்கு முன்னாலும், உளவியல் ரீதியாகவும் அச்சறுத்துகின்றது. எதார்த்தம் மீதான விமர்சனம் கடுமையான அச்சுறுத்தலை விடுகின்றது. விமர்சனம் செய்யமறுக்கும் போது, அந்த சமூகத்தின் முதுகில் குத்திவிடுவது நிகழ்கின்றது.

எழுதுவதை நிறுத்தக்கோரும் வேண்டுகோள்கள் அடிக்கடி தொடர்ச்சியாகவிடப்படுகின்றன. உனது உயிர் பறிக்கப்படும் எனமிரட்டியும், மறுபுறத்தில் அன்பாகவும் விடப்படுகின்றது. இந்த மிரட்டலை நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்ச்சியாக நாள்தோறும் சந்திக்காமல், நாம் உயிர்வாழ்ந்து விடவில்லை. இது ஒருபுறம் நிகழ அதற்கு உறுதுணையாக அக்கம்பக்கமாக கடுமையான அவதூறுகள் அன்றாடம் புனையப்படுகின்றது. அவை எமது காதுகளுக்கு வந்தடையச் செய்கின்றனர்.

ஆத்திரமூட்டும் அவதூறை வெவ்வேறு நபர்களுடன் தொடர்படுத்தி, வன்முறை ஒன்றை புனையவும், அதில் குளிர்காயும் முயற்சிகளையும் செய்கின்றனர். அவதூறுகளுக்கு கைகால் பொருத்தி, வாயில் வந்தமாதிரி புனைகின்றனர். நீ தாக்கப்படுவாய் என்ற மிரட்டல்கள் சொல்லியனுப்பபடுகின்றது. ஜனநாயகவிரோத செயல்கள் மீதான எமது விமர்சனங்கள் கூர்மையாக அம்பலப்படுத்தும்போது, இந்த அவதூறுகள் அவர்களின் அரசியலாகி விடுகின்றது.

இவர்கள் கடந்த காலத்தில் வெவ்வேறு இயக்கங்களில் இருந்தபோது, ஜனநாயகத்தை அடிப்படையாக கொண்டு விமர்சித்தவர்களை அவதூறுகள் மூலம் அழித்தொழித்தவர்கள். அதற்கு வக்காலத்து வாங்கி உறுதுணையாக நின்றவர்கள். இன்று அவதூறுடன் கூடிய மிரட்டல்கள் அனைத்தும், அனைத்து தரப்பினரிடமிருந்தும் தொடர்ந்து வருகின்றது. அவர்கள் தமக்கு இடையில் இதுபற்றி ஒன்றுகூடி கதைக்கவும், வம்பளக்கவும் படுகின்றது. இது அனைத்து மட்டத்திலும், அனைத்து தரப்பிலும் இருந்து விடப்படுகின்றது.

சமுதாயத்தின் பொதுப்போக்கில் இருந்து அதை விமர்சித்து, அதற்கு முரணாக தனிமைப்பட்ட நிலையில் போராடும் போது, எதிர்கொள்ளும் பல்வேறு நெருக்கடிகள் கடந்தே எம்மால் எழுத முடிகின்றது.

இந்த எதார்த்தம் ஒருபுறம் எம்மை போராடத்துண்டுகின்றது. இந்த நிலையில் ஸ்டாலின் விடையம் மீதான பரஸ்பரம் அனைத்து தொடர்புவிதிகளையும் அடிப்படையாககொண்டு, ஸ்டாலினை பார்க்க முனைகின்றேன். சோசலிச அரசுகள் உருவான போது பழைய சமுதாயத்தின் எதிர்ப்பு மிகக் கடுமையானதாக மாறிவிடுகின்றது. மீண்டும் பழைய சமுதாயத்தை நோக்கிச் செல்ல, அந்த சமுதாயத்தில் நிலவிய உயர்ந்த வாய்ப்பையும் வசதியையும் பெற்ற பிரிவு தொடர்ந்து போராடத் தொடங்குகின்றது. இது சோசலிச சமூகத்தில் மட்டுமல்ல, எல்லாப் புரட்சிகளிலும் இது பொருந்தும். இது சோசலிச சமுகத்தில் மிககடுமையானதாக மாறிவிடுகின்றது. மற்றைய எல்லா சமூக முரண்பாடுகளையும்விட, பாட்டாளி வர்க்க சமுதாயத்தில் முரண்பாடு கூர்மையான வடிவில் வெடிக்கின்றது. இதை கையாள்வதில் பாட்டாளி வர்க்க ஜனநாயகத்தையும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை அதன் மேல் கையாளுகின்றது. எந்த சமுதாயத்தையும் விட, பரந்துபட்ட மக்களின் நலன்களை பாதுகாப்பதில் உயர்ந்தபட்ச நிலையைப் பேணுகின்றது. இதை யாரும் நிராகாரித்துவிட முடியாது. இதன்போது தவறுகள் முன் அனுபவமின்மையில் எற்படுவது நிகழ்கின்றது. லெனின் கூறியது போல் “விசயத்தின் சாராம்சத்தை எடுத்துக் கொண்டோமானால், ஒரு புதிய உற்பத்திமுறை, தொடர்ந்து பின்னடைவுகளையும், தவறுகளையும், தோல்விகளையும் சந்திக்காமல் உடனே வேர்பிடித்து நிலைபெற்றதாக வரலாறு உண்டா?” என்றார். நாம் புதிய அனுபவமற்ற விடையங்களில் முன்னேறும்போது, அதில் தவறுகளை இனம் காணும்போது, அதை களைந்து முன்னேறுவதே பாட்டாளிவர்க்கத்தின் இயங்கியலாகும்.

இந்த வகையில் ஸ்டாலின் காலசரிகளையும், தவறுகளை ஒரு மார்க்சிய ஆய்வாக எடுத்துரைக்க முனைகின்றேன். எதிர்தரப்பின் நிலைப்பாட்டை, அவர்கள் அக்காலத்தில் என்னசெய்தார்கள், அதை அவர்கள் இன்று எப்படி நியாப்படுத்துகின்றனர் என்ற அடிப்படையான ஆதாரங்களுடன், இந்த விடையத்தை ஆராய முனைகின்றேன். குருச்சேவ் ஸ்டாலினை மறுத்தபோது, உண்மையில் எதை மறுத்தான் என்பதை ஆதாரபூர்வமாக முன்வைக்க வேண்டியிருகின்றது. ஸ்டாலின் எதை பாதுகாக்க முனைந்தார் என்பதை, இதன் அடிப்படை உள்ளடகத்தின் மீது எடுத்துரைக்க வேண்டியிருகின்றது. குருச்சேவ் என்னசெய்தான், டிட்டோ என்ன செய்தான் என்ற அடிப்படை உண்மைகூட தெரிந்துகொள்ள முனையாதநிலையில், ஸ்டாலின் தூற்றப்படுகின்றார். இதை எடுத்துக்காட்டவும், பாட்டாளிவர்க்கத்தின் சரியான அடிப்படைகளை உயர்த்தி பாதுகாக்கவும், ஆதாரபூர்வமாக விமர்சனத்தை உள்ளடக்கி தர்க்கரீதியாக நாம் போராட வேண்டியிருகின்றது.

ஸ்டாலின் மீதான குற்றச்சாட்டை அடிப்படையாககொண்டு எழுப்பும் அவதூறுகளும், கடந்த கால புள்ளிவிபரங்கள் அனைத்தும் தவறனவை என்பதை இக்கட்டுரை ஆதாரபூர்வமாக தகர்க்கின்றது. இன்று ஏகாதிபத்தியங்களின் பொய்யும் புரட்டுடன் கூடிய, புதியதொரு புள்ளிவிபரத்தை வெளியிட்டுள்ளனர். இக்கட்டுரையில் அது முழுமையாக உள்ளடங்கியுள்ளது. இது முன்னைய புள்ளிவிபரங்களின் கற்பனையான கண்டுபிடிப்புகளையும், இதன் அத்திவாரத்துடன் தகர்த்து விடுகின்றது. ஸ்டாலினால் கொல்லப்பட்டவர்கள் என்று முன்னைய அவதூறுகளின் எண்ணிக்கையை விட, இன்று 100 மடங்கு குறைவாகவே அண்மையில் ஏகாதிபத்தியங்கள் தொகுத்து வெளியிட்டதை இக்கட்டுரை மூலம் அம்பலத்துக்கு கொண்டுவர முனைகின்றேன். இன்றைய ஏகாதிபத்திய புள்ளிவிபரங்கள் 1920 முதல் 1950 வரையிலான காலத்தை முழுமையாக கொண்டு வெளிவந்துள்ளது. உளவாளிகள், சமூகவிரோதிகள், பாசிட்டுகள், கொலைகாரர்கள் எனமொத்தமாக 1921 முதல் 1953 முடிய 7,99,473 பேர் மட்டுமே கொல்லப்பட்டதாக ஏகாதிபத்திய புள்ளிவிபரம் இன்று அறிவிக்கின்றது.

கடந்தகால பொய்கள் புரட்டுகள்கூட இன்று அம்பலமாகிவரும் நிலையில், மார்க்சியத்தின் சரியான ஆய்வுரைகளை ஆதாரபூர்வமாக தர முனைகின்றது. அத்துடன் இதை ஆளமாகவும், விரிவாகவும் புரிந்து கொள்ள மாபெரும் விவாதம், இரு முக்கியமுடிவுகள், மாபெரும்சதி, மார்க்ஸ் முதல் மாசேதுங் வரை, இயங்கியல்பிரச்சனைபற்றி, லெனினிசத்தின் அடிப்படை அம்சங்கள் போன்ற நூல்களை படிப்பதை கோருகின்றது

காஷ்மீரில் கல்லெறிந்தால் தில்லியில் விழுமா?


கடந்த சில மாதங்களாக ‘காஷ்மீரில் வன்முறை’ ‘வன்முறைச் சம்பவங்களில் 17 பேர் உயிரிழப்பு’ என்று செய்தி ஊடகங்கள் தொடர்ந்து குறிப்பிட்டு வருகின்றன. இராணுவத்தை எதிர்த்து காஷ்மீரிகள் கல்லெறியும் காணொளிகள் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு அதை பயங்கரவாதச் செயல் போல் சித்தரிக்கின்றன. யார் வன்முறையாளர்கள்? யார் எதிர்கொள்பவர்கள்? என்பதற்கு தேசியம் எனும் சொல்லே அளவுகோலாக பயன்படுத்தப்படுகிறது. ஆனால் காஷ்மீரில் எறியப்படும் கற்கள் இவர்களின் தேசியக் கேடயத்தையும் துளைத்துக்கொண்டு செல்லும் வீரியத்தை நாளுக்கு நாள் பெற்றுவருகிறது.

காஷ்மீர் விவகரத்தில் மூன்றாவது நாட்டின் தலையீட்டை அனுமதிக்க முடியாது. காஷ்மீர் இந்தியாவுக்கு சொந்தமானது, இந்தியாவுக்கு சொந்தமானதை பாகிஸ்தானும் சீனாவும் அபகரித்து வைத்துக்கொண்டுள்ளன. இந்தியாவை துண்டாட நினைக்கும் சக்திகள் இப்படித்தான் தேசியப்பார்வைக்காரர்களின் கோணம் இருக்கிறது. ஆனால் உண்மை இதற்கு மாறாக இருக்கிறது. காஷ்மீர் இந்தியா, பாகிஸ்தான், சீனா எனும் மூன்று நாடுகளிலும் பிரிக்கப்பட்டுக் கிடக்கிறது. இதில் பெரும்பகுதி நிலத்தை வைத்திருக்கும் இந்தியா ஏனையவை தனக்கே சொந்தம் என்று கருதுகிறது. காஷ்மீர் இந்தியாவுக்கு சொந்தமா? பாகிஸ்தானுக்கா? என்பதைவிட காஷ்மீரிகளுக்கு சொந்தம் என்பதை யாரும் உணரத் தயாராக இல்லை. காஷ்மீரிகளை ஒதுக்கிவிட்டு இந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீர் பற்றி பேச்சுவார்த்தை நடத்துகின்றன.

1947ல் காஷ்மீர் இந்தியாவுடன் இணையும்போது, காஷ்மீரிகளிடம் வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்பதை இந்தியாவும் ஏற்றுக்கொண்டது. ஆனால் இன்றுவரை அந்த வாக்கெடுப்பு நடத்தப்படவே இல்லை. மாறாக தொடர்ந்து தேர்தல் என்ற பெயரில் முறைகேடுகளின் மூலம் தில்லியின் பொம்மைகள் அதிகாரத்தில் அமர்த்தப்பட்டனர். 1987ல் காங்கிரசுடன் கூட்டு வைத்திருந்த தேசிய மாநாட்டுக்கட்சி தேர்தலில் வெல்ல வேண்டும் என்பதற்காக வெல்லும் நிலையிலிருந்த, காஷ்மீரின் பல அமைப்புகள் இணைந்த எம்யூஎப் எனும் கூட்டணி ஓரிரு இடங்களையே வென்றதாக அறிவிக்கப்பட்டது. இதுதான் காஷ்மீர் பிரச்சனையை ஊதிவிட்டு ஆயுதப் போராட்டமாக உருவெடுக்க வழி செய்தது. கிடைத்த வாய்ப்பை நழுவவிடாமல் பாகிஸ்தானும் களத்தில் குதித்தது. காஷ்மீர் மக்களின் உணர்வுகளையும், வாக்கெடுப்பு நடத்தப்படும் என தான் அளித்த வாக்குறுதியையும் காற்றில் பறக்கவிட்ட இந்தியா இந்தப் போராட்டங்களைப் பயன்படுத்தி காஷ்மீரில் இராணுவத்தைக் குவித்தது.

இந்திய இராணுவம் காஷ்மீரில் செய்தது, செய்துகொண்டிருப்பது என்ன? தீவிரவாதிகளிடமிருந்து மக்களைக் காப்பதற்காக இராணுவம் போராடிக்கொண்டிருப்பதாக அப்பாவித்தனமாக நம்பிக்கொண்டிருப்பவர்கள் இந்தப் புள்ளிவிபரங்களை கொஞ்சம் உற்று நோக்கலாம். காஷ்மீரின் போலீஸ்படையைத் தவிர்த்து இராணுவத்தினர் மட்டும் 5 லட்சம் பேர் காஷ்மீரில் நிலை கொண்டிருக்கிறார்கள், அதாவது இருபது காஷ்மீரிகளுக்கு ஒரு இராணுவச் சிப்பாய் எனும் அள‌வில் இராணுவம் அங்கு குவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 70000க்கும் அதிகமான காஷ்மீரிகள் இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்டுள்ளனர். விசாரணை என்ற பெயரில் இழுத்துச் செல்லப்பட்டவர்களில் 8000 பேர் எந்தவித அடையாளமும் இன்றி ‘காணாமல்’ போய்விட்டனர். அண்மையில் ஷோபியானைச் சேர்ந்த இரண்டு இளம் பெண்கள் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு ஆற்றில் வீசி எறியப்பட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம், இதுபோல் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கைக்கு கணக்கொன்றுமில்லை. இப்படி ஆயுதங்களின் முனையில் தங்களின் வாழ்வைச் சிதைத்த இராணுவத்திற்கு எதிராக போராடாமல், காஷ்மீரிகள் சினிமா பார்த்துக்கொண்டிருக்க வேண்டும் என இந்திய அரசு எதிர்பார்க்கிறதா?

தொன்னூறுகளின் தொடக்கத்தில் காஷ்மீரில் நடைபெற்ற ஆயுதப் போராட்டத்தின் போது இந்தியாவின் குரல் உலக‌ அரங்கில் எடுபட்டது. காரணம், அரசை எதிர்த்துபோராடுபவர்கள் பயங்கர‌வாதிகள் எனும் உலகின், இந்தியாவின் கருத்துக்கு வலுசேர்ப்பது போல் குண்டுவெடிப்புகள் காட்டப்பட்டன. ஆனால் கடந்த‌ சில மாதங்களாக நடைபெற்றுவரும் கல்லெறியும் போராட்டம், உலக அரங்கில் போராளிகளை பயங்கரவாதிகளாக காட்டமுடியாமல் திணறுகிறது இந்திய அரசு, அதேநேரம் இப்போராட்டங்களை முடிவுக்குக் கொண்டுவரவேண்டிய கட்டாயத்திலும் இருக்கிறது. ஏனென்றால் இந்த கல்லெறி போராட்டம் நீண்டால், பலகாலமாக இந்தியா நடத்திவரும் ‘வெளியிலிருந்து வரும் தீவிரவாதத்திற்கு காஷ்மீர் இலக்காகிறது’ எனும் நாடகத்தை இனிமேலும் ஓட்டமுடியாமல் போகும். ஆகவே தான் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்தேனும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்தாகவேண்டும் எனும் மனோநிலைக்கு இந்தியா இறங்கி வந்திருக்கிறது.


முதல்கட்டமாக ஆயுதப்படையின் சிறப்பு அதிகாரங்களை குறிப்பிட்ட சில பகுதிகளில் விலக்குவது குறித்து அரசு ஆலோசிப்பதாக செய்திகள் வந்திருக்கின்றன. அப்படியே விலக்கிக்கொள்வது என்று முடிவெடுத்து அறிவித்தாலும்கூட நடைமுறையில் அதை செயல்படுத்துவார்கள் என்பதற்கு எந்த உறுதியும் இல்லை. அதற்குள்ளாகவே எதிர்க்கட்சிகளும், காவி வானரங்களும் குதிக்கத்தொடங்கிவிட்டன. முதல்வரை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்பது தொடங்கி, இராணுவத்தின் அதிகாரத்தைக் குறைத்தால் அது நாட்டுக்கே அச்சுறுத்தலாகிவிடும் என்பதுவரை அவைகளின் கூச்சல்கள். இது உகந்த நேரமல்ல என்றால் கல்லெறி போராட்டத்திற்கு முன்பு சிலகாலம் காஷ்மீர் விடுதலைப் போராட்டத்தில் சற்று மந்தநிலை காணப்பட்டதே, அப்போது இராணுவத்தின் வரம்பற்ற அதிகாரத்தை குறைப்பது குறித்து பேசாமல் மௌனம் காத்தது ஏன்?

காஷ்மீர் பிரச்சனை என்பது ஆளும்கட்சிகளுக்கு (எந்தக் கட்சியாக இருந்தாலும்) இந்திய தரகு, பன்னாட்டு முதலாளிகளின் லாபத்திற்கான‌ பிராந்திய ஆதிக்கத்திற்காக ஆயுதங்களை வாங்கிக் குவிப்பதை நியாயப்படுத்த உதவும் ஒரு கருவி. எதிர்க்கட்சிகளுக்கு (எந்தக் கட்சியாக இருந்தாலும்) அடுத்த ஆட்சிக்காக ஓட்டுப் பொறுக்கவும், பிழைப்புவாத அரசியல் நடத்தவுமான கருவி. ஆளும்கட்சி, எதிர்க்கட்சி இரண்டுக்கும் பலன் தரக்கூடிய காஷ்மீர் பிரச்சனையை தீர்ப்பதற்கு இந்த காரியவாதிகள் முன்வருவார்கள் என எதிர்பார்க்க முடியுமா?

துப்பாக்கி ரவைகளுக்கு எதிராக கல்லெறியும் போராட்டம் இந்திய இராணுவத்தின் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்திக்கொண்டிருக்கிறது. காந்’தீய’வழியில் இது அகிம்சை போராட்டமல்ல, வெடிகுண்டு என அலறிக்கொண்டே காஷ்மீரிகளின் வாழ்வை இரக்கமின்றித் தகர்க்க இது பயங்கரவாதமுமல்ல. அவர்கள் எறியும் கல் யாரையும் கொல்வதில்லை, ஆனாலும் அதிபயங்கர ஆயுதம் தரித்திருப்போரை கிலியடையச் செய்திருக்கிறது. தொடரவேண்டும், காஷ்மீரில் எறியப்படும் அந்தக் கல் தில்லியின் கதவுகளை நொறுக்கவேண்டும். அவர்களின் உரிமை வெல்லப்படும் வரை அந்தக் கற்களின் உந்துவிசை ஓயாது, ஓய்ந்துவிடவும் கூடாது.

தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தம்: யாரை எதிர்த்து யார்?


நாடு மறுகாலனியாக்கத்தில் மூழ்கிக்கொண்டிருக்கிறது. இதை நேரடியாக மறுக்கும் முதலாளித்துவவாதிகளைத் தவிர ஏனைய அனைவரும் இதை ஒப்புக்கொள்வார்கள். மறுகாலனியாக்கம் எனும் சொல்லில் பேதம் கொண்டிருப்போரும் அதன் உள்ளார்ந்த சாரத்தில் பேதமேதும் கொண்டிருக்க மாட்டார்கள். நாட்டின் அனைத்துத் துறைகளும் தனியார்மயப் படுத்தப்பட்டிருக்கின்றன, படுத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இதன் விளைவுகள் அனைத்துத் தரப்பு மக்களின் முதுகுகளிலும் அடையாளமாய் பதிந்திருக்கிறது. மக்கள் தன்னெழுச்சியாக போராட்டங்களை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். போராட்டச் செய்திகள் என்றாலே கசந்து காததூரம் போகும் செய்தி ஊடகங்களிலும் தவிர்க்கவே முடியாமல் தினசரி ஏதேனும் போராட்டச் செய்திகள் இடம்பெற்றுவிடுகின்றன. மக்கள் போராடிக்கொண்டிருக்கும்போது ஓட்டுக்கட்சிகளால் தங்கள் சொகுசுகளைத் தொடரமுடியாதே, அதனால் அவைகளும் போராட்டங்களை அறிவிக்கவேண்டிய கட்டாயம் நேரிடுகிறது.

மொட்டையடித்து நூதனப்போராட்டம், வயிற்றிலடிக்கும் போராட்டம், பட்டை நாமமடிக்கும் போராட்டம், அரை நிர்வாணப் போராட்டம், பட்டினிப் போராட்டம், உண்ணும் போராட்டம் என்று பலவிதமான ‘புரட்சிகர’ போராட்டங்களை அறிவித்து மக்களின் போராட்ட உணர்வுகளையும், அவர்களின் போராட்டத்திற்கான உள்ளீட்டையும் மிகக்கவனமாய் நீர்த்துப்போகச் செய்துவிடுவார்கள். இந்த இலக்கணங்களிலிருந்து சற்றும் வழுவாமல் நடத்தப்பட்டதுதான் கடந்த 07/09/2010 அன்று நடத்தப்பட்ட வேலை நிறுத்தப் போராட்டம்.

நாடு தழுவிய இந்தப் போராட்டத்திற்கான காரணங்களாக விலைவாசி உயர்வு, தொழிலாளர் நல சட்டங்கள் புறக்கணிப்பு, லாபம் தரக்கூடிய பொதுத்துறை நிறுவனங்களில் அன்னிய முதலீடு, ஆட்குறைப்பு, தாற்காலிக கதவடைப்பு, முறைசாரா தொழிலாளர் பாதுகாப்பு போன்றவற்றை அதை நடத்தியவர்கள் பட்டியலிட்டிருக்கிறார்கள். இந்தக் கோரிக்கைகளில் நியாயமில்லை என்றோ தேவையற்றது என்றோ கூறிவிட முடியுமா? நிச்சயம் முடியாது. பின் என்ன பிரச்சனை இப்போராட்டம் நடத்தியதில்? இப்போராட்டம் யாரை எதிர்த்து யார் நடத்தியது.

ஆளும் கட்சியை எதிர்த்து எதிர்க்கட்சி போராட்டம் நடத்தலாம், அரசை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தலாம். ஆனால், ஆளும் கட்சியும் எதிர்க்கட்சிகளும் இணைந்து ஒரு போராட்டத்தை நடத்தினால் அதை எப்படிப் புரிந்து கொள்வது? காங்கிரஸின் ஐஎன்டியூசி, பாரதிய ஜனதாவின் பிஎம்எஸ், மார்க்சிஸ்டின் சிஐடியூ, வலதுதின் ஏஐடியூசி உள்ளிட்ட 8 தொழிற்சங்கங்கள் இணைந்து இந்தப் போராட்டத்தை நடத்தியிருக்கின்றன. இதில் இடதுகள் ஆளும் மேற்கு வங்கம், கேரளா, திரிபுரா தவிர ஏனைய இடங்களில் இயல்பு வாழ்க்கைக்கு எந்தப் பாதிப்பும் இல்லையென ஊடகங்கள் (மகிழ்ச்சியுடன்) தெரிவித்திருக்கின்றன.

இந்தப் போராட்டத்தின் மையச்சரடாக இருப்பது தனியார்மய எதிர்ப்பு. இந்த தனியார்மய எதிர்ப்பில் தனித்தனியே போராட்டம் நடத்தும் கட்சிகளின் நிலை என்ன? அமெரிக்க அடிவருடித்தனத்தின் எல்லையை நோக்கி விரையும் மன்மோகன் சிங் தலைமையில் காங்கிரஸ் அரசு தனியார்மயத்தை எதிர்க்கிறதா? தனியார்மயத்திற்கென்றே தனி அமைச்சகம் கண்ட பாஜக தனியார்மயத்தை எதிர்க்கிறதா? கம்யூனிஸ்டுகள் என்று தங்களை வெட்கமில்லாமல் அழைத்துக்கொள்ளும் இடதுவலதுகளின் நந்திகிராம்களின் கதை என்ன? இவர்கள் தனியார்மயத்தை எதிர்க்கிறார்களா? தங்களின் ஆட்சியில் தனியார்மயத்தை முழுமைப்படுத்துவதற்கு தங்கள் செயல்களை அர்ப்பணித்துவிட்டு இப்போது ஒன்றுகூடி நாங்கள் தனியார்மயத்தை எதிர்த்து வேலை நிறுத்தம் செய்கிறோம் என்பது யாரை ஏமாற்றுவதற்கு?

விலைவாசி உயர்வு. அண்மையில் எண்ணெய் நிறுவனங்கள் நட்டத்தில் இயங்குகின்றன, மானியம் கொடுத்தே நிதி வற்றிவிட்டது என்று அண்டப்புழுகுகளை அவித்துவிட்டு எண்ணெய் விலையில் இருந்த அரசின் கட்டுப்பாடுகளை நீக்கி நிறுவனங்களின் கைகளில் தள்ளிவிட்டது காங்கிரஸ் அரசு. எண்ணெய் விலை உயர்வு அனைத்து பொருள்களிலும் எதிரொலிக்கும் என்பது என்ன யாருக்கும் தெரியாத ரகசியமா? விலை உயர்வின் அச்சாணி ஊக வணிகத்தில் இருக்கிறது. ஊகவணிகத்திலிருந்து இந்தப் பொருளுக்கு விலக்களியுங்கள், அந்தப் பொருளுக்கு விலக்களியுங்கள் என்று கூக்குரலிடும் எந்தக் கட்சியும் ஊகவணிகத்தை தடைசெய்யுங்கள் கூற நாவு எழ மறுக்கிறது.

இவர்கள் ஒன்று கூடி நாங்கள் விலைவாசி உயர்வை எதிர்த்து வேலை நிறுத்தம் செய்கிறோம் என்பது யாரை ஏமாற்றுவதற்கு?

தொழிலாளர் உரிமைகளை பறிப்பது தொடங்கி, அடக்குமுறைச் சட்டங்கள் இயற்றுவதுவரை இந்த ஓட்டுக்கட்சிகள் அனைத்திற்கும் இடையே வித்தியாசங்களைக் கண்டுபிடிக்க இயலுமா? பெயர்களில் இருக்கும் வித்தியாசத்தைத் தவிர. எதை அவர்கள் செய்துகொண்டிருக்கிறார்களோ அதை எதிர்த்து போராட்டம் நடத்துத்தும் அளவுக்கு அவர்களைத் தள்ளியது எது? மக்கள் தங்க‌ளை வாழ்வை பாதித்து அரிக்கும் தனியார்மய, தாராளமய, உலகமய சூக்குமங்களை முழுமையாக உணர்ந்துகொண்டார்கள் என்று கூறமுடியாது என்றாலும், அவற்றின் வலியால் திரண்டெழுந்து போராட்டங்களின் முனைக்கு அணிதிரளத் தொடங்கியுள்ளார்கள். முதலாளிய கோரங்களை எதிர்த்து இப்போது கூக்குரலிடாவிட்டால் மக்களிடமிருந்து தனிமைப்பட்டுபோவோம் என்பதைத்தவிர இவர்களின் பொருளற்ற இந்தப் போராட்டத்திற்கு வேறென்ன காரணம் இருந்துவிட முடியும்?

உள்ளொன்று வைத்து புறத்தில் வேறொன்றாய் கள்ளத்தனமாய் செயல்படும் இந்த ஓட்டுக்கட்சிகளின் அயோக்கியத்தனங்களை மக்கள் உணர்ந்துகொள்ள‌ வேண்டும். உணர்ந்து புரட்சிகர இயங்களின் பின்னே அணிதிரண்டு சமரசமற்ற உலுக்கியெடுக்கும் போராட்டங்களினாலேயே மக்கள் தங்கள் உரிமைகளையும், வாய்ப்புகளையும் மீட்டெடுக்கமுடியும்.

மாசேதுங்குடன் சில செவ்விகள்

ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம் பகுதி: ௧௫

நூலின் இடஒதுக்கீடு வரையறை காரணமாக 1936 ஆம் ஆண்டில் மாசேதுங்குடனான் எனது செவ்வியின் மூலப்பிரதிகள் “சீனாவின் மீது செந்தாரகை”யில் முழுமையாக இடம்பெறவில்லை. கீழே இடம்பெறும் பகுதிகள் தற்போதைய காலகட்டத்தில் கருத்தைக் கவர்வனவாக அமையலாம்.

பாவ் அன் 1936 ஜூலை 23

கம்யூனிஸ்ட் அகிலம், சீனா, வெளி மங்கோலியா பற்றி

ஸ்னோ: நடைமுறைச் சாத்தியத்தில் சீனப்புரட்சி வெற்றிபெரும் பட்சத்தில், சோவியத் சீனாவுக்கும் சோவியத் ரஷ்யாவுக்கும் இடையிலான பொருளாதார அரசியல் நட்புணர்வு மூன்றாவது அகிலம் அல்லதுஇதுபோன்ற ஒரு அமைப்பின் கட்டுக்கோப்பினுள் பேணப்படுமா? அல்லது பெரும்பாலும் ஒருவகையான அரசுகளுக்கிடையிலான உண்மையான இணைப்பு ஒன்று ஏற்படுமா? மாஸ்கோவிலுள்ள தற்போதைய அரசுடன் வெளி மங்கோலியா கொண்டிருக்கும் உறவுடன் ஒப்பிடக்கூடியதாக சீன சோவியத் அரசின் உறவு அமையுமா?

மாவோ: இது வெறுமனே ஒரு தெளிவற்ற தற்காலிக கேள்வியென்றே நான் ஊகிக்கிறேன். நான் உங்களுக்கு கூறியது போன்று, செஞ்சேனை தற்போது அதிகாரத் தலைமையை கைப்பற்ற முயன்றுகொண்டிருக்கவில்லை. மாறாக ஜப்பானிய ஏகாதிபத்தியத்துக்கு எதிராக ஒரு ஐக்கிய சீனாவை உருவாக்க முயன்றுகொண்டிருக்கிறது.

உலகிலுள்ள அனைத்துப் புரட்சிகர மக்களின் நன்மைக்காக உலகப் பாட்டாளி மக்களின் முன்னணித் தலைமை, அதன் கூட்டு அனுபவத்தை ஒருங்கு சேர்க்கும் பணியையே மூன்றாம் அகிலம் செய்துவருகிறது. இது ஒரு நிர்வாக ஸ்தாபனம் அல்ல. ஆலோசனைத் தகைமையைவிட அதனிடம் வேறு அரசியல் அதிகாரம் எதுவும் இல்லை. கட்டமைப்பில் இது இரண்டாம் அகிலத்தைவிட அதிகம் மாறுபட்டதல்ல. ஆனால் ஒரு நாட்டின் அதன் அமைச்சரவை சோஷல் டெமோகிரட்ஸ் கட்சியினரால் அமைக்கப்படும் போது, எப்படி அங்கு இரண்டாம் அகிலம் தான் சர்வாதிகாரம் செலுத்துகிறது என்று சொல்லப்படமாட்டார்களோ, அதே போன்று கம்யூனிஸ்ட் கட்சி உள்ள நாடுகளில் மூன்றாவது அகிலம் சர்வாதிகாரம் செலுத்துகிறது என்று சொல்வதும் முட்டாள் தனமானது ஆகும்.

சோவியத் நாடுகளின் ஒன்றியத்தில் (யு.எஸ்.எஸ்.ஆர்) கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரத்தில் உள்ளது. இருப்பினும் அங்குகூட மூன்றாவது அகிலம் ஆட்சி செலுத்தவில்லை என்பதோடு அந்த நாட்டு மக்கள் மீது அது எதுவித நேரடி அரசியல் அதிகாரத்தையும் கொண்டிருக்கவில்லை. இதேபோன்று, கம்யூனிஸ்ட் அகிலத்தின் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு உறுப்பினராக இருந்த போதிலும் சோவியத் சீனா, மாஸ்கோவினாலோ கம்யூனிஸ்ட் அகிலத்தினாலோ ஆளப்படுகிறது என்று கூறுவதிலும் எதுவித பொருளும் இல்லை. விடுதலை பெற்ற சீனாவை அடைவதற்காக நாம் சண்டை பிடிப்பது அதை மாஸ்கோவிடம் கையளிப்பதற்காக அல்ல.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியே சீனாவிலுள்ள ஒரே ஒரு கட்சியாகும். அது வெற்றி பெற்றதும் முழு நாட்டுக்காகவும் குரல் எழுப்ப வேண்டும். அது ரஷ்ய மக்களுக்காக குரல் எழுப்ப முடியாது அல்லது மூன்றாவது அகிலத்தின் சார்பில் நாட்டை ஆளவும் முடியாது. ஆனால் சீன வெகுஜனங்களின் நலனுக்காகவே ஆட்சி செய்ய முடியும். சீன வெகு ஜனங்களின் நலன்கள், ரஷ்ய வெகுஜனங்களின் நலன்களோடு ஒத்துப்போகும் விடயங்களில் மட்டும்தான் ‘மாஸ்கோவின் விருப்பத்திற்கு கீழ்படிவதாக’ அதைக் கூற முடியும். ரஷ்யாவிலுள்ள அவர்களது ஜனநாயக அதிகாரத்தைப் பெற்ற பின்பு சமூக ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் அடிமைத்தளையை அறுத்த பின்புதான் இந்த பொதுவான நலன்களின் அடிப்படை பரந்த அளவில் விரிவாக்கப் பட முடியும்.

பல நாடுகளில் சோவியத் அரசுகள் நிறுவப்பட்ட பின்பு ஒரு சோவியத் சர்வதேச ஒன்றியம் பற்றிய பிரச்சனை எழும். இந்தப்பிரச்சனை எவ்வாறு தீர்க்கப்படப் போகிறது என்பது சுவராஸ்யமாக இருக்கும். அதற்கான சூத்திர விதிமுறையை இப்போது என்னால் கூற முடியாது. இது முன்பதாகவே தீர்க்கப்படக் கூடிய அல்லது தீர்த்துவைக்கப் படவேண்டிய பிரச்சனை அல்ல. இன்றைய உலகின் பல்வேறு நாடுகலுக்கும் மக்களுக்குமிடையே அதிகரித்துவரும் நெருங்கிய பொருளாதார கலாச்சாரத் தொடர்புகள் காரணமாக, அத்தகையதொரு ஐக்கியம் சுயமான அடிப்படையில் ஏற்படக் கூடியதாயின் வெகுவாக விரும்பத்தக்கதாகும்.

இருப்பினும் தெளிவான முறையில் கூறுவதானால் ‘சுயமான அடிப்படை’ என்ற அம்சம் மிக முக்கியமான ஒரு அம்சமாகும். இத்தகைய ஒரு உலக ஐக்கியம், அந்தந்த நாட்டின் மக்களுடைய விருப்பத்திற்கு இசைவானதாகவும், அதனுடைய சுயாதிபத்தியம் உறுதியாக இருக்கக்கூடிய நிலையில் இந்த ஐக்கியத்தினுள் அவை நுழையவும் வெளியேறவும் கூடியதாக இருந்தால் மட்டுமே வெற்றிகரமாக அமைய முடியும். நிச்சயமாக ‘மாஸ்கோ’வின் கட்டளை அதிகாரத்தின் கீழ் இது அவ்வறு அமைய முடியாது. எந்த ஒரு கம்யூனிஸ்டும் இவ்வாறுதவிர வேறெந்த வகையிலும் சிந்திக்கவில்லை. மாஸ்கோவிடம் ‘உலக மேலாதிக்க’ சிந்தனை இருப்பதாகக் கூறும் மாயை பாஸிஸவாதிகளினதும் எதிர்ப் புரட்சியாளர்களினதும் ஒரு கண்டுபிடிப்பாகும்.

வெளி மங்கோலியாவுக்கும் சோவியத் யூனியனுக்குமிடையே உள்ள உறவு முன்பும் தற்போதும் முழுமையான சமத்துவக் கொள்கை அடிப்படையிலேயே எப்போதும் இருந்துவருகிறது. சீனாவின் மக்கள் புரட்சி வெற்றி பெற்றதும் வெளி மங்கோலியா தனது சுய விருப்பத்தின் பேரில் சீன சம்மேளனத்தின் ஒரு பகுதியாக தானாகவே ஆகிவிடும். இதைப்போலவே முகம்மதியர்களும், திபேத்திய மக்களும் சீன சம்மேளனத்துடன் இணைந்து சுயாட்சியுடைய குடியரசுகளாக அமைந்துவிடும். கோமிண்டாங் ஆட்சியினரால் மேற்கொள்ளப்படும் தேசிய சிறுபான்மையினத்தவர் மீதான சரிசமமற்ற நடைமுறைக்கு சீனர்களின் திட்டத்தில் எதுஇத இடமும் இருக்காது. அத்தோடு எந்த ஜனநாயகக் குடியரசின் திட்டத்தினுள் இதற்கு இடமளிக்கப்படமாட்டார்.

திறவுகோலாக சீனா

ஸ்னோ: சீனாவின் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்ட, ஏனைய ஆசிய நாடுகளிலும் அரைவாசி காலனித்துவ நாடுகளான கொரியா, இந்தோசீனா, பிலிப்பைன்ஸ், இந்தியா ஆகியவற்றிலும் விரைவாக புரட்சி ஏற்படும் என்று நீங்கள் நம்புகிறீர்களா? சீனா தற்போது உலகப் புரட்சிக்கான ‘திறவுகோல்’ என்று நீங்கள் கருதுகிறீர்களா?

மாவோ: உலக நிலைமையில் சீனப்புரட்சி ஒரு முக்கியமான காரணிதான். சீனப்புரட்சி முழுமையான அதிகாரத்தைப் பெற்றதும் பல காலனித்துவ நாடுகளின் வெகுஜனங்கள் சீனாவின் உதாரணத்தைப் ப்9இன்பற்றுவாஅர்கள். இதே போன்ற தங்களின் சொந்த வெற்றியையும் அவர்கள் பெறுவார்கள். ஆனால் அதிகாரத்தைக் கைப்பற்றுவது எங்களின் உடனடியான இலக்கு அல்ல என்பதை நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். நாங்கள் உள்நாட்டு யுத்தத்தை நிறுத்த விரும்புகிறோம். கோமிண்டாங்குடனும், ஏனைய கட்சிகளுடனும் இணைந்து ஒரு மக்கள் ஜனநாயக அரசை நிறுவ விரும்புகிறோம். அத்துடன் ஜப்பானுக்கெதிராக நாங்கள் சுதந்திரப் போராட்டத்தை நடத்த விரும்புகிறோம்.

காணிப் பங்கீடு பற்றி

பால் ஆன் 1936 ஜூலை 19

ஸ்னோ: ஜப்பானிய ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டத்தின் பின்பு புரட்சியின் தலையாய உள்நாட்டுக் கடமை எது?

மாவோ: பூர்ஷ்வா ஜனநாயக குணாம்சத்தைக்கொண்ட சீனப்புரட்சி காணிப்பிரச்சனையை மீளச் சரிசெய்தல்  (காணிச் சீர்திருத்தம்) என்ற கடமையையே முதலாவது கடமையாகக் கொண்டுள்ளது. சீனாவில் இன்று காணிப்பங்கீடு நிலமை பற்றிய விபரங்களைப் பார்க்கும் போது கிராமிய காணிச் சீர்திருத்தத்தின் அவசர அவசியத்தைப்பற்றி ஓரளவு விளங்கிக் கொள்லலாம். தேசியப் புரட்சியின் போது கோமிண்டாங்கின் விவசாயிகள் குழுவின் செயலாளராக நான் இருந்தேன். 21 மாகாணங்களிலும் புள்ளிவிபர மதிப்பீட்டுக்கு பொறுப்பாளனாகவும் நான் இருந்தேன்.

எங்களுடைய ஆய்வு ஆச்சரியப்படத்தக்கதாகத்தான் சரிசமனற்ற நிலைமையை எடுத்துக்காட்டியது. கிராமிய மக்கட் தொகையில் 70 விழுக்காட்டினர் ஏழை விவசாயிகளாகவும், குத்தகைக்கு கமம் செய்பவர்களாகவும், மீள்குத்தகைக்கு கமம் செய்பவர்களாகவும், விவசாயத்தொழிலாளர்களாகவும் உள்ளனர். ஏறத்தாள 20 விழுக்காட்டினர் தங்கள் சொந்த நிலத்தில் தாங்களே உழுது பயன்படுத்தும் நடுத்தர விவசாயிகளாகவும் உள்ளனர். கொள்ளை வட்டி வாங்குவோரும், நிலப்பிரபுக்களும் மக்கட்தொகையில் 10 விழுக்காட்டினராவர். இந்தக்கூட்டத்தில் பணக்கார விவசாயிகளும், இராணுவவாதிகளும், வரிசேகரிப்போர் போன்ற ஊரைக் கொள்ளையடிப்போரும் அடங்குவர்.

பணக்கார விவசாயிகள், நிலப்பிரபுக்கள், கொள்ளை வட்டி வாங்குவோரை உள்ளடக்கிய 10 விழுக்காடு மக்கட்தொகையினர் விவசாய காணிகளில் 70 விழுக்காடு காணிகளை தம்வசம் சொந்தமாக வைத்துள்ள‌னர். 12லிருந்து 15விழுக்காடு காணிகளில் மத்தியதர விவசாயிகள் வசமுள்ளன. மக்கட்தொகையில் 70 விழுக்காட்டினராகிய ஏழை விவசாயிகள், குத்தகை ,மீள்குத்தகை விவசாயிகள், விவசாயத்தொழிலாளர்கள் வசம் 10முதல் 15விழுக்காடு விவசாயக் காணிகளே உள்ளன. ஏகாதிபத்தியவாதிகள் மேலே குறிப்பிட்ட 10 விழுக்காட்டினரான நிலப்பிரபுக்கள், கொள்ளை லாபமடிப்போர் ஆகிய இரண்டு அடக்குமுறையாளர்களாலேயே பிரதானமாக சீனப் புரட்சி உருவாகியது. ஆகவே ஜனநாயகம் காணிச்சீர்திருத்தம், ஏகாதிபத்தியத்துக்கு எதிரானபோர் ஆகிய எங்களுடைய புதிய கோரிக்கைகளில் நாம் (நாட்டின்) மக்கட்தொகையில் 10 விழுக்காட்டுக்கும் குறைவானவர்களாலேயே எதிர்க்கப்படுகிறோம், என்று நாம் கூறிக்கொள்ள முடியும். உண்மையில் இவர்களின் எண்ணிக்கை 10விழுக்காடு மட்டுமே இருக்கும். ஏனென்றால், “கம்யூனிஸ்ட் எதிர்ப்பு ஒப்பந்தம்” எனும் கூட்டுத்திட்டத்தின் கீழ் தங்கள் சொந்த மக்களையே அடிமைப்படுத்துவதற்க்காக ஜப்பானுடன் இணைய இந்த எண்ணிக்கைக்கு கூடுதலான சீனர்கள் காட்டிக் கொடுப்பவர்களாக மாறமாட்டார்கள்.

ஸ்னோ: ஐக்கிய முன்னணியின் நலனைக் கருத்தில் கொண்டு சோவியத் நடைமுறைத் திட்டத்திலுள்ள ஏனைய விடயங்களை ஒத்திவைத்திருப்பதுபோல காணிமீள் பங்கீட்டையும் தாமதப்படுத்துவது சாத்தியப்படாதா?

மாவோ: நிலப்பிரபுக்களின் பெருந்தோட்டங்களைப் பறிமுதல் செய்யாது, விவசாய சமூகத்தின் பிரதான ஜனநாயக கோரிக்கைகளும் நிறைவேற்றாது தேசிய விடுதலைக்கான வெற்றிகரமான புரட்சிகரப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு ஒரு பரந்துபட்ட வெகுஜன அடிப்படைக் கட்டமைப்பை உருவாக்குவது இயலாத காரியம். தேசியக் குறிக்கோளுக்கான விவசாயிகளின் ஆதரவை வென்றெடுப்பதற்கு காணிப்பிரச்சனை மீதான அவர்களது கோரிக்கையை நிறைவேற்றுவது அத்தியாவசியமானதாகும்.

கல்வி லத்தீன் எழுத்தினாலான சீன மொழி

ஸ்னோ: எழுத்தறிவின்மை பற்றிய கொள்கை சம்பந்தமாக ஒரு சுருக்கமான அறிக்கை தருவீர்களா?

மாவோ: எழுத்தறிவின்மைப் பிரச்சனையைப் பொருத்தவரை வெகுஜனங்களின் பொருளாதார கலாச்சாரத் தராதரத்தை உயர்த்த உண்மையிலேயே விரும்பும் ஒரு மக்கள் அரசுக்கு இது ஒரு கடினமான கடமையல்ல. கியார்சியில் எழுத்தறிவின்மையை அகற்றுவதற்கான எங்கள் சங்கம் கல்வி ஆணையாளரின் தலைமையில் ஆச்சரியப்படத்தக்க வெற்றிகளைப் பெற்றுள்ளது. இது ஒவ்வொரு கிராமத்திலும் இளம் மாணவர்கள் இளம் கம்யூனிஸ்டுகள் கொண்ட குழுக்களை அமைத்து அந்தக் கிராமத்திலுள்ள ஒவ்வொருவருக்கும் எழுதவும் வாசிக்கவும் கற்றுக்கொடுத்துள்ளது. இந்த வெகுஜனக் கல்வி நிலையங்கள் நூற்றுக்கணக்கில் விவசாயிகளால் நிறுவப்பட்டு உற்சாகம் மிக்க கம்யூனிஸ்ட் இளைஞர்களால் கல்வி போதிக்கப்படுகிறது. அந்த இளைஞர்கள் எவ்வித வருவாயும் இன்றி இலவசமாக அந்தப் பணியை மனமுவந்து செய்கின்றனர். மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்குப் பின் கியான்சி சோவியத் மாகாணத்திலுள்ள விவசாயிகள் சாதாரண நூல்களையும், சொற்பொழிவுகளையும், செய்தித்தாள்களையும் பிரசுரங்களையும் படிக்கமுடியும்.

இது பற்றிய புளிவிபரங்கள் ‘நெடும்பயணத்தின் போது’ தொலைந்துவிட்டன. ஆனால் இரண்டாவது அனைத்து சோவியத் காங்கிரசின் முன்பாக சமர்ப்பிக்கப்பட்ட எனது அறிக்கையில் கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் பற்றிய முழு விபரங்களும் உள்ளன. மக்கள் வெகுஜனக் கல்வி இயக்கம் சோவியத்துகளால் பேணப்பட்ட முறைமையான பாடசாலைகள் ஆகிய இரு பகுதிகளிலும் ஏற்பட்ட முன்னேற்றம் இந்த அறிக்கையில் அடங்கியுள்ளது.

ஷென்ஷி, கான்சு அகிய இடங்களிலும் எழுத்தறிவின்மையை அகற்றுவதற்கான ஒரு சங்கம் நிறுவப்பட்டுள்ளது. இந்த மாகாணங்களின் கலாச்சாரத் தராதரம் முன்பு கியங்சியை விட வெகுகுறைவாக இருந்தது. அத்தோடு கல்வித்துறையின் பெரும்பணிகள் இங்கு இன்னும் எங்களை எதிர்நோக்கியுள்ள எழுத்தறிவின்மையை ஒழித்துக்கட்டுவதை விரைவுபடுத்துமுகமாக, இங்கு நாங்கள் சின் வெத் த்சு(லத்தீன் எழுத்துகளிலான சீன மொழி)யைய்ப் பறிசோதித்துக்கொண்டிருக்கிறோம். தற்போது இந்த முறை எங்கள் கட்சிப் பாடசாலை, கம்யூனிஸ்ட் இராணுவப் பாடசாலை, செஞ்சேனை ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகின்றன. ‘ளுட்சைனா டெய்லி நியூஸ்’ நாளிதழின் விசேடபகுதி ஒன்றிலும் இது பயன்படுகின்றது. எழுத்தறிவின்மையை அகற்றுவதில் லத்தீன் எழுத்துக்களின் பயன்பாடு ஒரு நல்ல கருவியாக உதவுகின்றது. சீன எழுத்துக்கள் கற்றுக்கொள்வதற்கு மிகவும் சிரமமான எழுத்துக்கள் ஆதலால் ஆரம்ப நிலை எழுத்துக்கள் அல்லது இலகுவான போதனை கொண்ட ஒரு சிறந்த நடைமுறையின் மூலமாக கூட ஒரு உண்மையான விளை திறன் மிக்க சொல்வளத்தை மக்களிடம் ஏற்படுத்த முடியவில்லை. தற்போதோ அல்லது பிற்காலத்திலோ வெகு ஜனங்களின் முழுமையான பங்களிப்புச் செய்யக்கூடிய ஒரு சமூக கலாச்சாரத்தை உருவாக்க வேண்டுமானால் நாங்கள் முழுமையாக சீன எழுத்துக்களைக் கைவிட வேண்டியதிருக்கும் என்று நம்புகின்றோம். நாங்கள் இப்போது லத்தின் எழுத்துக்களைப் பரவலாகப் பயன்படுத்துகின்றோம். இதைஒ நாங்கள் தொடர்ந்து மூன்று வருடங்கல் கடைப்பிடிப்போமானால் எழுத்தறிவின்மைப் பிரச்சனை பெருமளவுக்கு அகற்றப்பட்டுவிடும்.

கீழே வருபவை 1939 ஆம் ஆண்டு செவ்வியில் கூறப்பட்டவற்றிலிருந்து எழுதப்பட்ட பகுதிகள். இவை சீனாவுக்கு வெளியே ஒருபோதும் பிரசுரிக்கப்படவில்லை.

நாங்கள் ஒருபோதும் ‘சீர்திருத்தவாதிகள்’ அல்லர்

ஸ்னோ: சீனக் கம்யூனிஸ்ட் கட்சி வர்க்கப்போராட்டத்தை வலியுறுத்தும் தனது பிரச்சாரத்தைக் கைவிட்டுவிட்டது. சோவியத்துகளையும் கைவிட்டுவிட்டது. கோமிண்டாங் கட்சியினதும், கோமிண்டாங் அரசினதும் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொண்டுவிட்டது. சான் மின் சுஐ (டாக்டர் சுன் யாட் சென்னின் மக்கள் பற்றிய 3 கொள்கைகள்)ஐ ஏற்றுக்கொண்டுவிட்டது. முதலாளித்துவ வாதிகளதும் நிலப்பிரபுக்களினதும் சொத்துக்களைப் பறிமுதல் செய்வதை நிறுத்திவிட்டது. கோமிண்டாங் பகுதிகளில் ஸ்தாபனப் பணிகளையும், பிரச்சார வேலைகளையும் (வெளிப்படையாகச் செய்வதை) நிறுத்திவிட்டது. சீனக் கம்யூனிஸ்டுகள் தற்போது புரட்சியாளர்கள் அல்ல, வெறுமனே சீர்திருத்தவாதிகள், நடைமுறைகளிலும் லட்சியங்களிலும் அவர்கள் பூர்ஷ்வாக்கள்தான் என்று பெரும்பாலான மக்கள் தற்போது கருதுகின்றார்கள். இது பற்றி உங்கள் கருத்து என்ன?

மாவோ: நாங்கள் எப்போதுமே சமூகப் புரட்சியாளர்கள் தான். நாங்கள் ஒருபோதும் சீர்திருத்தவாதிகல் அல்லர். சீனப்புரட்சியின் கோட்பாட்டில் இரண்டு பிரதான இலக்குகள் உள்ளன. முதலாவது இலக்கு ஒரு தேசிய ஜனநாயகப் புரட்சிக்கான பணிகளை நிறைவேறுவதையும் ஒரு அம்சமாகக் கொண்டுள்ளது. இரண்டாவது சமூகப் புரட்சி, இரண்டாவது அம்சம் கட்டாயம் சாதிக்கப்படவேண்டும், முழுமையாகச் சாதிக்கப்படவேண்டும். தற்போது புரட்சி தனது இலக்குகளில் தேசிய ஜனநாயக் அம்சங்களைக் கொண்டுள்ளது. ஆனால் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குப் பின்பு அது சமூகப் புரட்சியாக மாற்றப்படும். சினப் புரட்சிக் கோட்பாட்டின் சமூகப் புரட்சிகர அம்சம் தற்போதுள்ள‌ ‘உருவாவது’ என்ற நிலையிலிருந்து ‘நிலைபெறுவது’ என்ற நிலைக்கு மாற்றமடையும். தற்போதைய கட்டத்தில் எங்களது பணிகள் தோல்வியில் முடிவடைந்தால் சமூகப் புரட்சிக்கான விரைவான வாய்ப்புகள் இல்லாது போய்விடும்.

முறியடிப்புத் தாக்குதலுக்கான தயார் நிலை

ஸ்னோ: ‘நீண்ட கால இழுத்தடிப்புப் போர்’ என்ற உங்களுடைய கோட்பட்டின் படி தற்போதைய சீனர்களின் எதிர்ப்பு நிலை எந்தக்கட்டத்தில் உள்ளது, இந்தக்கட்டம் முட்டுக்கட்டை நிலையை அடைந்துவிட்டதா?

மாவோ: ஆம். போர் ஒரு முட்டுக்கட்டை நிலையில்தான் உள்ளது. ஆனால் இதில் சில தகைமைகள் உள்ளன. புதிய சர்வதேச முறைசூழ்நிலையின் கீழ் ஜப்பானியரின் நிலமை வெகு சிரமமானதாக ஆகிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், அதேவேளை சீனா அவர்களுடன் சமாதானத்தைக் கோரமாட்டாது என்ற நிலைமையில், போர் ஒரு முட்டுக்கட்டை நிலையில் தான் உள்ளது. (எங்களைப் பொருத்தவரை) இதன் பொருள் முறியடிப்புத்தாக்குதலுக்கு தயாராக வேண்டும் என்பதேயாகும்.

நாஜி சோவியத் ஒப்பந்தம் பற்றி

ஸ்னோ: சோவியத் ஜெர்மன் ஒப்பந்தம் கைச்சாத்தானது பற்றிய உங்கள் கருத்துக்களைப் படித்தேன். ஐரோபிய யுத்தத்தினுள் சோவியத் ஒன்றியம் இழுக்கப்படுவதற்கான சாத்தியக்கூறு இல்லை என நீங்கள் கருதுகிறாற்போலத் தெரிகிறது. நாஜி ஜெர்மன் வெற்றியை நெருங்குவதைப் போலத் தோன்றினாலும்கூட, தான் தாக்கப்படாதவரை சோவியத் ஒன்றியம் தொடர்ந்து நடுநிலை வகிக்கும் என்று நீங்கள் கருதுகிறீர்களா?

மாவோ: சோவியத் ஒன்றியம் இந்த யுத்தத்தில் பங்கேற்காது ஏனென்றால் இரு பகுதியினருமே ஏகாதிபத்தியவாதிகள் இது வெறுமனே கொள்ளையர்களின் யுத்தம். இரு பகுதியிலும் நியாயம் நீதி இல்லை. இரு பகுதியினரும் வலுச் சம்நிலையைத் தங்கள் பக்கம் பெற்றுக்கொள்ளப் போராடுகின்றனர். இரு பகுதியினருமே பிழையானவர்கள். இத்தகைய யுத்தத்தில் சோவியத் ஒன்றியம் ஈடுப‌டாது. அது நடுநிலையே வகிக்கும். தற்போதைய ஐரோப்பிய யுத்தத்தின் முடிவை பொருத்தவரை வெற்றிபெற்ற வல்லரசால் (அது ஜெர்மனியாக இருந்தாலும் சரி, இங்கிலாந்தாக இருந்தாலும் சரி) தனக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் பற்றிப் பயப்படமாட்டாது. எப்போதாவது சோவியத் ஒன்றியம் தாக்கப்பட்டால் அதற்கும் பல்வேறு நாடுகளின் ஆதரவு இருக்கும். அத்தோடு காலனித்துவ அரைக்காலனித்துவ நாடுகளின் தேசிய சிறுபான்மை மக்களின் ஆதரவு கிடைக்கும்.

போலந்துப் பிரச்சனை பற்றி

மாவோ: போலந்து மீதான நாஜிப் படையெடுப்பு சோவியத் ஒன்றியத்திற்கு ஒரு பிரச்சனையை ஏற்படுத்தியது. நாஜி அடக்குமுறைக்கு முழுப்போலந்து மக்களையும் இறையாக விடுவதா அல்லது கிழக்கு போலந்தில் உள்ள தேசிய சிறுபான்மையினரை விடுவிப்பதா என்பதே அந்தப் பிரச்சனை. இரண்டாவது நடைமுறையை சோவியத் ஒன்றியம் தேர்ந்தெடுத்தது.

கிழக்குப் போலந்தில் 80 லட்சம் பைலோ ரஷ்யர்கள், 30 லட்சம் உக்ரேனியர்கள் வாழும் பாரிய பிரதேசம் உள்ளது. இந்தப் பிராந்தியம் பிரெஸ்ட் விட்டோங்ஸ்க் ஒப்பந்தத்தின் அடிப்படையில் சோவியத் சோசலிசக் குடியரசுகளிலிருந்து வலிந்து பிடுங்கியெடுக்கப்பட்டது. அத்தோடு இது பிற்போக்குவாத போலந்து அரசின் மேலாதிக்கத்தில் கீழ் வந்துள்ளது. இன்று பலகீனமாகவோ, இணைய நாடாகவோ இல்லாத சோவியத் ஒன்றியம் தனது சொந்தப் பிராந்தியத்தை மீள எடுத்துக்கொண்டு அவர்களை சுதந்திரம் பெற வைத்துள்ளது.

தனது சக தலைவர்களை மாவோ புகழ்கிறார்

பாவோ அன் 1936 ஜூலை 25

‘நெடும் பயணம்’ பற்றிய தனது விவரக் குறிப்புகளுக்கு ஒருவகை முடிவுரையாக இந்தப் பயணத்தின் வெற்றிகரமான நிறைவேற்றத்திற்கு கட்சியின் சரியான தலைமைத்துவம் தான் காரணம் என்று மாவோ கூறுகின்றார். அத்தோடு 18 தோழர்களை தனியாகப் பெயர் குறிப்பிட்டுக் காட்டுகிறார். இந்த விடயம் அவரது பிரதான விவரக் குறிப்புக்கு சிறிது வரலாற்றுத்தொடர்புடைய அக்கறைக்குறிய விடயமாக இருப்பதால் அதை இங்கு தருகிறேன். இந்தப்பெயர்களை மாவோ எந்த வரிசையில் தந்தார் என்பது முக்கியம் அல்ல. ஆனால் அந்தப்பட்டியலில் இடம்பெற்றவர்களை எதிர்த்து மாவோ சமீபத்தில் போராடினார் என்பதும், அதே போன்று மீண்டும் போராடுவார் என்பதும் அத்துடன் அவர்கள் பெயர் இப்பட்டியலில் இருந்து அகற்றப்படும் என்ற உண்மைதான் கருத்திற் கொள்ள வேண்டிய விடயமாகும்.

மாவோ: கட்சியின் தோற்கடிக்கப்படமுடியாத த்ன்மைக்கான மற்றொரு காரணம் மனித வளங்களின் புரட்சிகர கட்சி ஊளியர்களின் சாதாரணமான திறமை, தைரியம், விசுவாசம் ஆகியவை ஆகும். தோழர்கள் சூடே, வாங்மிங் லோ பு, சூ என் லாய், போகு, வாங் சியா சியாங், பெங் ரே ஹி வாய, லோ மான், டெங்பா சியாங் யிங், சு ஹாய் துங், சென் யுன், லின் பியாவ், சாங் குவோ ராவ், சியா கே அத்தோடு புரட்சிக்காக உயிரை அளித்த மேலும் பல தோழர்கள் ஆகியோர் இதில் அடங்குவர். இவர்கள் அனைவரும் ஒரு லட்சியத்திற்காக பணிபுரிந்து செஞ்சேனையையும், சோவியத் இயக்கத்தையும் உருவாக்கி உள்ள‌னர். இவர்களுக்கும் இனி வர இருப்பவர்களும் எங்களை இறுதி வெற்றிக்கு அழைத்துச் செல்வார்கள்.

வரலாற்று ஏடுகளில் எழுதப்பட்ட சீன நாட்டின் 3000 ஆண்டு வரலாற்றில் மாவோவின் சாதனைகளின் தொகுப்பு பெரும்பாலும் ஒரு தனித்துவம் கொண்டதாகும். ஏனையோர் விவசாயிகளின் முதுகில் சவாரி செய்து பதவிக்கு வந்துவிட்டு அவர்களை சகதியில் கைகழுவிச் சென்றிருக்கின்றனர். மாவோ அவர்களை நிரந்தரமாக தலை நிமிர்ந்து நிற்கவைக்க முனைந்தார். அவர் ஒரு சிந்தனைவாதி, போர்வீரர், அரசியல்வாதி, கோட்பாட்டாளர், கவிஞர், வித்வ கர்வம் உள்ளவர். மனித குலத்தின் நான்கில் ஒரு பங்கினரை, ஏழ்மையில் உழன்ற அந்த விவசாயிகளை ஒரு பலம்மிக்க நவீன இராணுவமாக்கி நீண்டகாலமாக பிளவுபட்டுக்கிடந்த ஒரு சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய ஒரு இயக்கத்திற்கு த்லமை தாங்கியவர். மாவோ செல்லுபடியாகக்கூடிய சீனத்தேவைகளுக்கும் அபிலாஷைகளுக்கும் ஏற்றதாக ஒரு சிந்தனைப்போக்கை உருவாக்கி வழங்கியவர். பல லட்சக் கணக்கானோருக்கு விஞ்ஞான தொழில்நுட்பப் பயிற்சியையும், வெகுஜனங்களுக்கு எழுத்தறிவையும் கொண்டுவந்தவர். நவீனமான பொருளாதாரத்திற்கு அத்திவாரமிட்டவர். உலகத்தை ஆட்டக்கூடிய அணுசக்தியை சீனர்களின் கைகளுக்கு கொண்டுவந்தவர். சீனாவின் சுய கௌரவத்தை மீட்டுத்தந்தவர். உலகத்தின் மிக ஏழ்மையான மிக ஒடுக்கப்பட்ட மக்களை புரட்சி செய்யத் துணியவைக்குமளவுக்கு சுய நம்பிக்கையை ஏற்படுத்தியவர். அவரது வெற்றிகரமான வழிமுறையை மாற்ற முயன்றவர்களுக்கு விட்டுக்கொடுக்க மாவோ மறுத்ததில் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றுமில்லை.

1970 டிசம்பரில் மாவோவுடன் பீக்கிங்கிலுள்ள அவர் வீட்டில் இந்த நூலாசிரியருடன் 5 மணித்தியாலங்கள் உரையாடினார். மாவோ நல்ல உடல் நிலையில் அப்போது இருந்தார். ஆனால் புரட்சியின் பெறுபேறுகள் பற்றி அவர் தற்போதும் திருப்தியடைந்தவராகக் காணப்படவில்லை.

இந் நூலின் முந்திய பகுதிகள்

பதிப்புரை

முகவுரை

மாவோவின் குழந்தைப் பருவம் ௧

மாவோவின் குழந்தைப் பருவம் ௨

ஷாங் ஷா வில் வாழ்ந்த நாட்கள் ௧

ஷாங் ஷா வில் வாழ்ந்த நாட்கள் ௨

புரட்சிக்கு முன்னோடி ௧

புரட்சிக்கு முன்னோடி ௨

தேசியவாத காலகட்டம் ௧

தேசியவாத காலகட்டம்

(சீன) சோவியத் இயக்கம் ௨

செஞ்சேனையின் வளர்ச்சி ௧

செஞ்சேனையின் வளர்ச்சி ௨

தமிழ்மணம், இண்ட்லியில் வாக்களிக்க‌

இந்நூலின் மின்னூல் பதிப்பு நூலகத்தில் இடம்பெற்றுள்ளது

%d bloggers like this: