நாடு மறுகாலனியாக்கத்தில் மூழ்கிக்கொண்டிருக்கிறது. இதை நேரடியாக மறுக்கும் முதலாளித்துவவாதிகளைத் தவிர ஏனைய அனைவரும் இதை ஒப்புக்கொள்வார்கள். மறுகாலனியாக்கம் எனும் சொல்லில் பேதம் கொண்டிருப்போரும் அதன் உள்ளார்ந்த சாரத்தில் பேதமேதும் கொண்டிருக்க மாட்டார்கள். நாட்டின் அனைத்துத் துறைகளும் தனியார்மயப் படுத்தப்பட்டிருக்கின்றன, படுத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இதன் விளைவுகள் அனைத்துத் தரப்பு மக்களின் முதுகுகளிலும் அடையாளமாய் பதிந்திருக்கிறது. மக்கள் தன்னெழுச்சியாக போராட்டங்களை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். போராட்டச் செய்திகள் என்றாலே கசந்து காததூரம் போகும் செய்தி ஊடகங்களிலும் தவிர்க்கவே முடியாமல் தினசரி ஏதேனும் போராட்டச் செய்திகள் இடம்பெற்றுவிடுகின்றன. மக்கள் போராடிக்கொண்டிருக்கும்போது ஓட்டுக்கட்சிகளால் தங்கள் சொகுசுகளைத் தொடரமுடியாதே, அதனால் அவைகளும் போராட்டங்களை அறிவிக்கவேண்டிய கட்டாயம் நேரிடுகிறது.
மொட்டையடித்து நூதனப்போராட்டம், வயிற்றிலடிக்கும் போராட்டம், பட்டை நாமமடிக்கும் போராட்டம், அரை நிர்வாணப் போராட்டம், பட்டினிப் போராட்டம், உண்ணும் போராட்டம் என்று பலவிதமான ‘புரட்சிகர’ போராட்டங்களை அறிவித்து மக்களின் போராட்ட உணர்வுகளையும், அவர்களின் போராட்டத்திற்கான உள்ளீட்டையும் மிகக்கவனமாய் நீர்த்துப்போகச் செய்துவிடுவார்கள். இந்த இலக்கணங்களிலிருந்து சற்றும் வழுவாமல் நடத்தப்பட்டதுதான் கடந்த 07/09/2010 அன்று நடத்தப்பட்ட வேலை நிறுத்தப் போராட்டம்.
நாடு தழுவிய இந்தப் போராட்டத்திற்கான காரணங்களாக விலைவாசி உயர்வு, தொழிலாளர் நல சட்டங்கள் புறக்கணிப்பு, லாபம் தரக்கூடிய பொதுத்துறை நிறுவனங்களில் அன்னிய முதலீடு, ஆட்குறைப்பு, தாற்காலிக கதவடைப்பு, முறைசாரா தொழிலாளர் பாதுகாப்பு போன்றவற்றை அதை நடத்தியவர்கள் பட்டியலிட்டிருக்கிறார்கள். இந்தக் கோரிக்கைகளில் நியாயமில்லை என்றோ தேவையற்றது என்றோ கூறிவிட முடியுமா? நிச்சயம் முடியாது. பின் என்ன பிரச்சனை இப்போராட்டம் நடத்தியதில்? இப்போராட்டம் யாரை எதிர்த்து யார் நடத்தியது.
ஆளும் கட்சியை எதிர்த்து எதிர்க்கட்சி போராட்டம் நடத்தலாம், அரசை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தலாம். ஆனால், ஆளும் கட்சியும் எதிர்க்கட்சிகளும் இணைந்து ஒரு போராட்டத்தை நடத்தினால் அதை எப்படிப் புரிந்து கொள்வது? காங்கிரஸின் ஐஎன்டியூசி, பாரதிய ஜனதாவின் பிஎம்எஸ், மார்க்சிஸ்டின் சிஐடியூ, வலதுதின் ஏஐடியூசி உள்ளிட்ட 8 தொழிற்சங்கங்கள் இணைந்து இந்தப் போராட்டத்தை நடத்தியிருக்கின்றன. இதில் இடதுகள் ஆளும் மேற்கு வங்கம், கேரளா, திரிபுரா தவிர ஏனைய இடங்களில் இயல்பு வாழ்க்கைக்கு எந்தப் பாதிப்பும் இல்லையென ஊடகங்கள் (மகிழ்ச்சியுடன்) தெரிவித்திருக்கின்றன.
இந்தப் போராட்டத்தின் மையச்சரடாக இருப்பது தனியார்மய எதிர்ப்பு. இந்த தனியார்மய எதிர்ப்பில் தனித்தனியே போராட்டம் நடத்தும் கட்சிகளின் நிலை என்ன? அமெரிக்க அடிவருடித்தனத்தின் எல்லையை நோக்கி விரையும் மன்மோகன் சிங் தலைமையில் காங்கிரஸ் அரசு தனியார்மயத்தை எதிர்க்கிறதா? தனியார்மயத்திற்கென்றே தனி அமைச்சகம் கண்ட பாஜக தனியார்மயத்தை எதிர்க்கிறதா? கம்யூனிஸ்டுகள் என்று தங்களை வெட்கமில்லாமல் அழைத்துக்கொள்ளும் இடதுவலதுகளின் நந்திகிராம்களின் கதை என்ன? இவர்கள் தனியார்மயத்தை எதிர்க்கிறார்களா? தங்களின் ஆட்சியில் தனியார்மயத்தை முழுமைப்படுத்துவதற்கு தங்கள் செயல்களை அர்ப்பணித்துவிட்டு இப்போது ஒன்றுகூடி நாங்கள் தனியார்மயத்தை எதிர்த்து வேலை நிறுத்தம் செய்கிறோம் என்பது யாரை ஏமாற்றுவதற்கு?
விலைவாசி உயர்வு. அண்மையில் எண்ணெய் நிறுவனங்கள் நட்டத்தில் இயங்குகின்றன, மானியம் கொடுத்தே நிதி வற்றிவிட்டது என்று அண்டப்புழுகுகளை அவித்துவிட்டு எண்ணெய் விலையில் இருந்த அரசின் கட்டுப்பாடுகளை நீக்கி நிறுவனங்களின் கைகளில் தள்ளிவிட்டது காங்கிரஸ் அரசு. எண்ணெய் விலை உயர்வு அனைத்து பொருள்களிலும் எதிரொலிக்கும் என்பது என்ன யாருக்கும் தெரியாத ரகசியமா? விலை உயர்வின் அச்சாணி ஊக வணிகத்தில் இருக்கிறது. ஊகவணிகத்திலிருந்து இந்தப் பொருளுக்கு விலக்களியுங்கள், அந்தப் பொருளுக்கு விலக்களியுங்கள் என்று கூக்குரலிடும் எந்தக் கட்சியும் ஊகவணிகத்தை தடைசெய்யுங்கள் கூற நாவு எழ மறுக்கிறது.
இவர்கள் ஒன்று கூடி நாங்கள் விலைவாசி உயர்வை எதிர்த்து வேலை நிறுத்தம் செய்கிறோம் என்பது யாரை ஏமாற்றுவதற்கு?
தொழிலாளர் உரிமைகளை பறிப்பது தொடங்கி, அடக்குமுறைச் சட்டங்கள் இயற்றுவதுவரை இந்த ஓட்டுக்கட்சிகள் அனைத்திற்கும் இடையே வித்தியாசங்களைக் கண்டுபிடிக்க இயலுமா? பெயர்களில் இருக்கும் வித்தியாசத்தைத் தவிர. எதை அவர்கள் செய்துகொண்டிருக்கிறார்களோ அதை எதிர்த்து போராட்டம் நடத்துத்தும் அளவுக்கு அவர்களைத் தள்ளியது எது? மக்கள் தங்களை வாழ்வை பாதித்து அரிக்கும் தனியார்மய, தாராளமய, உலகமய சூக்குமங்களை முழுமையாக உணர்ந்துகொண்டார்கள் என்று கூறமுடியாது என்றாலும், அவற்றின் வலியால் திரண்டெழுந்து போராட்டங்களின் முனைக்கு அணிதிரளத் தொடங்கியுள்ளார்கள். முதலாளிய கோரங்களை எதிர்த்து இப்போது கூக்குரலிடாவிட்டால் மக்களிடமிருந்து தனிமைப்பட்டுபோவோம் என்பதைத்தவிர இவர்களின் பொருளற்ற இந்தப் போராட்டத்திற்கு வேறென்ன காரணம் இருந்துவிட முடியும்?
உள்ளொன்று வைத்து புறத்தில் வேறொன்றாய் கள்ளத்தனமாய் செயல்படும் இந்த ஓட்டுக்கட்சிகளின் அயோக்கியத்தனங்களை மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். உணர்ந்து புரட்சிகர இயங்களின் பின்னே அணிதிரண்டு சமரசமற்ற உலுக்கியெடுக்கும் போராட்டங்களினாலேயே மக்கள் தங்கள் உரிமைகளையும், வாய்ப்புகளையும் மீட்டெடுக்கமுடியும்.
It is giving correct picture of the politics and struggles.kaviganar.Thanigai.