ஆரியவதியும் சில ஆணிகளும்


நடப்பு வாரத்தில் மிகவும் அதிர்ச்சியடைய வைத்த நிகழ்வாக ஆரியவதி உலகெங்கும் பேசப்பட்டாள். சௌதியில் பணிபுரியச் செல்லும் பெண்களுக்கு நேரும் கொடுமைகளும், கொடூரங்களும் மனித உரிமை மீறல்களாக உலக அரங்கில் தொடர்ந்து எழுப்பபட்டே வந்திருக்கிறது. அடித்தல் உதைத்தல் காம இச்சைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளுதல் போன்றவைகளிடையே உடலில் ஆணியை அடித்து ஏற்றுதல் என்பது மக்களிடையே ஒரு கொந்தளிப்பான மனோநிலையை ஏற்படுத்தியிருக்கிறது. பாத்திரம் கீழே விழுந்து உடைந்துவிடுதல் போன்ற சின்னச்சின்ன தவறுகளுக்கான தண்டனையாக ஆணிகள் உடலில் ஏற்றப்பட்டிருக்கின்றன என்பதை அறியும் போது அந்த சௌதியினர் (ஐந்து குழந்தைகளுக்கு பெற்றோர்) மனித உருவில் மிருகமாக உலவியிருக்கின்றனர் என்பதை உணரமுடிகிறது.

சௌதி அரசு முதலில் இதை மறுத்தது. அவர் உடலில் ஆணிகளும் ஊசிகளும் இருந்திருந்தால் விமானநிலையத்தில் மெட்டல் டிடெக்டரில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் எனும் வாதத்தை வைத்தது. ஆனால் ஆரியவதி மெட்டல் டிடெக்டர் சப்தமெழுப்பியதாகவும் அதைக்கேட்டு யாரும் விசாரிக்கவோ கண்டுகொள்ளவோ இல்லை என்று பிபிசிக்கு அளித்த செவியில் குறிப்பிட்டிருக்கிறார். கொழும்பில் சௌதி தூதரகத்திற்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டபின் அந்த‌ சௌதி தம்பதியர் கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வந்திருகின்றன. ஆனாலும் மேல்விபரங்கள் எதுவும் இல்லை. 31/08/2010 அரப் நியூஸ் நாளிதழ், “பணிப்பெண்ணின் உடலில் ஆணி அடித்தது உண்மையாயின் அவர்கள் தண்டிக்கப்படவேண்டியவர்களே, அதேநேரம் அந்தப் பெண் பொருளாதார பலன் கிடைக்கும் எனும் எண்ணத்தில் தானாகவே இதைச் செய்திருந்தால் அந்தப் பெண்ணும் தண்டனைக்கு உரியவளே” என்றும், “உலகில் வாழும் எவருக்கும் சவுதிகள் தாழ்ந்தவர்களும் அல்ல, உயர்ந்தவர்களும் அல்ல. துரதிஷ்டமாக நிகழும் இதுபோன்ற சம்பவங்கள் சௌதியின் நற்பெயருக்கு கள‌ங்கம் ஏற்படுத்துவதாக இருப்பதால் விரைந்து இவ்வழ‌க்கை முடிக்கவேண்டும்” என்று தனது தலையங்கத்தில் சௌதி அரசுக்கு அறிவுரை கூறியிருக்கிறது.

ஆரியவதிக்கு நிகழ்ந்த கொடுமைக்கு எதிராக நமது குரலை பதிவு செய்யும் இந்நேரத்தில் இன்னொன்றையும் பதிவு செய்வது தேவையாக இருக்கிறது. ஆரியவதி விவகாரத்தை சிங்கள் ஊடகங்கள் ஒரு அரசியல் வடிவமாக முன்னெடுக்கின்றன. சௌதி தூதரகத்திடம் தனது கண்டனங்களை பதிவு செய்வது, இலங்கைப் பெண்கள் சௌதிக்கு வேலைக்காக செல்வதை தடை செய்யவிருப்பதாக செய்தி பரப்புவது என்று இலங்கை அரசுடன் இணைந்து உலக அரங்கில் முந்தள்ளுவதன் மூலம் இலங்கையில் இன்றளவும் நிகழ்ந்துவரும் தமிழர்களுக்கு எதிரான கொடுமைகளையும் வதைகளையும் மறைக்க முயல்கிறது. ஒரு ஆரியவதியல்ல பல்லாயிரம் ஆரியவதிகள் இலங்கையின் இனவழிப்பினால் நடைப்பிணங்களாக உலவவிடப்பட்டுள்ள‌னர். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விதவைகள் இருப்பதாக இலங்கை அரசின் புள்ளிவிபரங்களே தெரிவிக்கின்றன. வயதான பெற்றோர்கள் மகன்களை முட்கம்பி வேலிகளுக்குள் தேடிக்கொண்டிருக்கின்றனர். தமிழர்கள் நிலங்கள் சிங்களவர்களால் அரசின் ஆசியுடன் அபகரிக்கப்படுகின்றன. புத்தர் பொதுத் தெய்வமாக முன்னிருத்தப்படுகிறார். இவைகளையெல்லாம் பேசமறுக்கும் எவருக்கும் ஆரியவதியைப் பற்றி பேசும் தகுதியில்லை அல்லவா?


ஆரியவதியின் ஆணிகள் அத்துடன் முடிந்துவிடுபவையா? ஆரியவதிகளின் உடலுக்குள் சமூகம் அடித்து இறக்கியிருக்கும் ஆணிகளை என்ன செய்வது? இன்னும் கூட சௌதியில் ஆயிரக்கணக்கான‌ பெண்கள் உறங்கக் கூட நேரமின்றி நித்தமும் வேலை எனும் ஆணியால் அடிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு என்ன சிகிச்சை செய்து ஆணிகளை நீக்குவது?

இருவரும் வேலை செய்தால்தான் இக்காலத்தில் குடும்பத்தை ஓட்டமுடியும் என்று பெண்களை வேலைக்கு அனுப்பிவிட்டு வீட்டு வேலைகளையும் அவளைமட்டுமே சுமக்கவைப்பது அவள்மீது அடிக்கப்பட்ட ஆணியல்லவா?

தான் விரும்பியவனை மணந்தாள் என்பதற்காக குடும்பத்தோடு கொலை செய்துவிட்டு பணத்தை இறைத்து சாதிய இயல்பு என்று தீர்ப்பு வாங்குவது அவள்மீது அடிக்கப்பட்ட ஆணியல்லவா?

பெற்ற மகளையே கூலிப்படை வைத்து கொலை செய்துவிட்டு  நடத்தை கெட்டவள் என்று கூசாமல் கூறுவது அவள்மீது அடிக்கப்பட்ட ஆணியல்லவா?

திருமணம் செய்துகொள்கிறேன் என ஏமாற்றி பூவரசிகளை வெளித்தள்ளிவிட்டு என் கணவர் நல்லவர் என்பது அவள்மீது அடிக்கப்பட்ட ஆணியல்லவா?

உலகெங்கும் பெண்களுக்கு சுதந்திரம் இருப்பதாக கூறிக்கொண்டே அவர்களை பாலியல் பண்டமாக நுகர பயன்படுத்தும், அதையே அவர்களது சுதந்திரமாக கற்பித்து வைத்திருக்கும் ஆணியை எப்படி பிடுங்கி எறிவது?

இன்னும் பணிபுரியும் இடங்களில், வாழும் வீடுகளில், பொதுவெளிகளில் என்று எல்லா இடங்களிலும் எல்லா விதங்களிலும் பெண்கள் மீது ஆணிகள் இறக்கப்பட்டிருக்கின்றன. இறக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இவைகளை எதைக்கொண்டு அகற்றுவது?

சமூகத்தின் மீது அழுத்தமாக, ஆழமாக அறையப்பட்டிருக்கும் ஆணாதிக்கம், முதலாளியம் எனும் ஆணிகள் அகற்றப்படும்போது மட்டுமே ஏனைய ஆணிகள் இற்று வீழும். வெறுமனே ஆரியவதிகளின் கதைகளை பேசிவிட்டு கலைந்துவிடுவதில் அல்ல, பெண் என்பதன் பொருளை அதன் முழுமையான பொருளில் புரிந்து கொள்ள முயல்வதும், களத்தில் செயல்படுத்துவதுமே அதற்கான தொடக்கம்.

%d bloggers like this: