சில வாரங்களுக்கு முன்பிருந்தே கன்னட எதியூரப்பா கோவில் கோவிலாக சுற்றிவரத்தொடங்கினார். பாஜக பக்தர்களிடம் கேட்டால், அக்டோபர் மாதம் வந்தாலே அது எதியூரப்பாவைப் பிடித்து ஆட்டும் என்று கடந்த நிகழ்வுகளை அள்ளி வீசுகிறார்கள். 2007 அக்டோபரில் மஜத கட்சி ஆட்சி மாற்றத்திற்கு சம்மதிக்காததால் ஆட்சியை இழந்தார். 2008 அக்டோபரில் த்லைமையிலிருந்து அவரை நீக்கவேண்டும் என்று பிரச்சனை கிளம்பியது. 2009 அக்டோபரில் ரெட்டி சகோதரர்களிடம் சிக்கிக்கொண்டு கண்ணீர்விட்டு கதறும் நிலைக்குப் போனார். 2010 அக்டோபரில் அப்படி ஒரு நிலை வந்துவிடக்கூடாது என்றுதான் கோவில் கோவிலாக ஏறி இறங்கினார் என்கிறார்கள். ஆனாலும் அந்தக் கோவில்களில் இருந்த தெய்வங்கள் எனும் மூடநம்பிக்கையைவிட அவர்களின் சென்டிமென்ட் எனும் மூட நம்பிக்கை ஆற்றல்மிகுந்தது போலும் இந்த அக்டோபரும் எதியூரப்பாவை சுற்றிச் சுழற்றி விட்டது. ஆண்டின் எல்லா நாளும் சூறாவளியில் சிக்கிச் சுழன்று சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கும் மக்கள் இந்த ‘ஆண்டுக்கொருமுறை’ சென்டிமென்டைப் பேசி தங்களைத்தாங்களே மழுங்கடித்துக்கொள்வது என்ன நியாயம்?
இந்திய ஜனநாயகம் சிறப்பானது என இன்னும் நம்பிக்கொண்டிருப்போர் கடந்த சில நாட்களில் கன்னடத்தில் நடந்த கூத்துகளுக்கு என்ன விதமான சரிக்கட்டல்களைச் செப்பலாம் என சிந்தித்துக்கொண்டிருக்கிறார்கள். பாராளுமன்ற, சட்டமன்ற நடைமுறை ஒரு பன்றித்தொழுவம் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் செயல்பாடுகள் எந்தவிதத்தில் தேர்ந்தெடுத்த மக்களை பிரதிநிதிப்படுத்தின என்பதை அந்த நம்பிக்கையாளர்கள் கூற முன்வருவார்களா?
பாரளுமன்ற, சட்டமன்றங்களுக்கு போட்டியிடுவது மக்கள் பிரச்சனைகளுக்காக குரல்கொடுப்பதற்காகத்தான், மக்களுக்கு சேவை செய்யத்தான் என்று யாராவது நம்பமுடியுமா?
கன்னட பாஜகவுக்கு பெரும்பான்மை வேண்டி முட்டுக்கொடுத்த அந்த ஆறு சுயேட்சைகளும் மக்களுக்கு சேவை செய்யத்தான் ஆதரவளித்தார்கள் என்று யாராவது நம்பமுடியுமா?
இன்று அரசுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த அந்த பாஜக எதிர்உறுப்பினர்கள் மக்களுக்காகத்தான் ஆட்சியில் நீடித்தார்கள் அல்லது மக்கள் பிரச்சனைக்காகத்தான் அரசுக்கு தங்கள் ஆதரவை விலக்கிக்கொண்டார்கள் என்று யாராவது நம்பமுடியுமா?
அன்று எதியூரப்பாவை நிலைகுலையவைத்த ரெட்டி சகோதரர்கள் மக்களுக்காக அதைச் செய்தார்களா அல்லது இன்று அதிருப்தி எம்.எல்.ஏக்களை சென்னைக்கு தனி விமானத்தில் பறந்துவந்து சந்தித்து பேரம் பேசினார்களே அது மக்களுக்காகவா? அப்படி யாராவது நம்பமுடியுமா?
பெங்களூரில் கோவித்துக்கொண்டு சென்னையில் சேவிக்க வந்த அதிருப்தி எம்.எல்.ஏக்களில் இரண்டு பேர் ரெட்டி சகோதரர்களின் பூசைக்குப் பிறகு நாங்கள் அரசை ஆதரிக்கிறோம் என்று அங்கப்பிரதட்சனம் செய்தார்களே அது மக்கள் நலனை வேண்டித்தான் என்று யாராவது நம்பமுடியுமா?
எல்லாம் முடிந்து மறு நம்பிக்கைஓட்டெடுப்புக்கு தயாரான அந்த நாளில் மதச்சார்பற்ற ஜனதாதள எம்.எல்.ஏ ஒருவர் திடீரென எங்கிருக்கிறார் என்றே தெரியாமல் காணாமல் போனாரே அது மக்களுக்காகவா? அல்லது உடம்புக்கு முடியவில்லை என்றாலும் தள்ளுவண்டியில் வந்து ஓட்டளித்துப்போனாரே ஒரு பாஜக எம்.எல்.ஏ அது மக்களுக்காகவா? அப்படி யாராவது நம்பமுடியுமா?
காலை ஆறுமணிக்கே அதிருப்தி எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்த சபாநாயகர் மக்கள் குறித்து சிந்திப்பவரா? வாய்ப்பு கிடைக்கிறது என்றதும் தன்னுடைய வீட்டிலேயே மந்திராலோசனை நடத்திய காங்கிரஸ் கட்சித்தலைவர் மக்கள் நலன் குறித்து சிந்திப்பவரா? தகுதி நீக்கம் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் போதே மறு வாக்களிப்புக்கு உத்தரவிட்ட ஆளுனர் மக்கள் குறித்து சிந்திப்பவரா? இல்லை இன்று சிரித்தமுகத்துடன் இரட்டை விரலைக்காட்டிக்கொண்டு ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என்று சொல்கிறாரே அவர் மக்கள் குறித்து சிந்திப்பவரா?
பெங்களூரில் நடந்ததை நெருக்கடி என்கிறார்கள். இந்த நெருக்கடி வந்து போகாத மாநிலம் என்று ஏதாவது மிச்சம் இருக்கிறதா? இல்லை பாராளுமன்றம் தான் இது போன்ற நெருக்கடிகளைச் சந்திக்கவில்லையா?
மதநம்பிக்கை கொண்டவர்கள் கூட ஏதாவது ஒருவிதத்தில் தம்முடைய பிரச்சனைகளுக்கு கடவுளிடமிருந்து தீர்வு கிடைக்கும் என நம்புகிறார்கள். ஆனால் மக்களுக்கு இந்த ஓட்டுப் பொறுக்கிகள் மக்கள் நலனுக்காகத்தான் செயல்படுகிறார்கள் என்பதில் கொஞ்சமும் நம்பிக்கையில்லை. ஆனாலும் இது ஜனநாயகம் என்பதில் நம்பிக்கை மிச்சமிருக்கிறதே அதை அவர்களிடமிருந்து விலக்குவது எப்படி என்பதே இன்று முக்கியத்துவமும், செயலூக்கமும் மிகுந்த கேள்வியாக இருக்கிறது.
சர்வாதிகார ஜால்ராக்கள், கொஞ்சமும் வெட்கமில்லாம் ஜனநாயகத்தை பத்தி பேசலாமமா. சீனாக்கு போயி, நோபல் அமைதி பரிசை பெற்ற லீயூ சியாபோவ் மற்றும் அவரது மனைவியையும் விடுதலை பண்ணுங்க.
அய்யா ஜனநாயகன்,
நாறுதுய்யா கழுவிட்டு வான்னு சொன்னா, பக்கத்து ஊர்க்காரன் பேப்பர்ல தொடச்சுகிறானே அதை முதல்ல கேளுன்னு சொன்னா என்ன பன்றது?